ரமணரின் கீதாசாரம் – 8

ரமண மகரிஷி ஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…
முந்தைய பகுதிகள் பகுதி 1 | பகுதி 2| பகுதி 3| பகுதி 4 | பகுதி 5| பகுதி 6| பகுதி 7

ஆன்ம வித்தையில் சிரத்தை உள்ளவனுக்கு வழிகாட்டுதலும், ஆன்மீகப் பயணமும் உடனே அமையாவிட்டாலும் காலாகாலத்தில் இறைவன் அருளால் தானே அமையக்கூடும் என்று எதிர்பார்த்தோம் அல்லவா? அதையே பகவான் இப்போது உறுதிப்படுத்திச் சொல்வதைப் பார்க்கப் போகிறோம்.

10-10

तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम |
ददामि बुध्दियोगं तं येन मामुपयान्ति ते ||

என்பாலே சித்தம் இருத்தி எப்போதும் உள்
அன்பாலே பத்தி செயும் அன்பருக்கு – என்னை அவர்
சார்வார் எதனால் அச் சற்புத்தி யோகத்தை
ஈவேன் நான் என்னருளால் எண்

பொருள்: வெளி விஷயங்களை விட்டு, என்னிடத்திலேயே மனதை திடமாக நிறுத்தி, சதா சர்வ காலமும் மனப்பூர்வமாக என்னிடம் உள்ளமுருகிய பக்தியுடன் ஈடுபடும் பக்தர்களுக்கு, எந்த யோகத்தினாலே என்னை அவர்கள் அடையக் கூடுமோ, அந்த நல்ல மேன்மையான புத்தி யோகத்தை நான் என்னருளினால் அவர்களுக்குக் கொடுத்திடுவேன் என்று அறிந்து கொள்.

“எல்லோரும் ஆத்மா என்றால், அனைவருக்குமே பகவானின் தரிசனம் கிட்டி அனைவருமே மோக்ஷம் அடைய வேண்டும் அல்லவா?” என்று எவருக்குமே கேட்கத் தோன்றும். உண்மை அதுதான் என்றாலும் அந்த உறுதியான இறுதி நிலையை அடைய ஒவ்வொருவரும் அதற்கு வேண்டியபடி தங்களை தயார் செய்துகொண்டு அந்த முயற்சியில் முழு மனதுடன் ஈடுபடவேண்டும். ஏனென்றால் எப்போதும் உள்ள ஆன்மா ஏதோ காரணத்தால் தன்னை அளவில் குறுக்கிக்கொண்டு பரமாத்மாவாக இல்லாது ஒரு உடலுடன் சம்பந்தப்படுத்திக் கொள்ளும் ஜீவாத்மாவாக ஆகி, தான் செய்யும் செயல்களால் மேலும் பேதங்களைக் கற்பித்துக் கொண்டதால், அந்த முடிச்சுகளை அவிழ்ப்பதும் அதனுடைய பொறுப்பு என்றே ஆகிறது.

தனது உண்மை நிலை பற்றி தனக்கு வெளியில் இருந்து ஒருவன் அறிய வந்தாலும், அந்த ஞானமானது  அறிவார்த்தமாக இருந்து மேலும் அதைப் பற்றி யோசிக்க வைக்குமே அல்லாது தனது அனுபவமாக மாறுவதற்கு அந்த அகங்கார நிலை உடனே இடம் கொடுக்காது. அதற்குத்தான் பகவான் கிருஷ்ணர் சொல்கிறபடி அவரிடம் சித்தம் வைப்பது மட்டும் அல்லாது, அவரிடம் உள்ளன்பும் வேண்டும். அப்படி இல்லையேல் அறிவுக்கு மட்டும் தோன்றுவது, வெறும் அறிவார்த்தமாக இருக்குமே அன்றி அனுபவமாக பரிணமிக்காது. அந்த அகங்காரம் ஒருவனைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்கும் ஆண்டவன் அருள் வேண்டும். முதலில் அது பற்றி வெளியில் இருந்து தெரிய வரும், அப்புறம் சாதகன் மென்மேலும் இடைவிடாது முயற்சி செய்யும் போது, இறைவனுடன் கலக்கும் வழிகள் அவரவர்களுக்கு ஏற்றபடி அவ்வப்போது தெரியவரும். அதுதான் யோகத்தின் பல படிகள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான முதிர்ந்த நிலையில் இருப்பார்கள். அவரவர்களுக்கு எந்த மாதிரியான மார்க்கம் தேவையோ அதை அவர்களுக்குக் காட்டி, அவர்களை அதில் நிலைத்து நிற்கவும் செய்வேன் என்று அனைவருக்கும் கண்ணன் உறுதிமொழி  அளிக்கிறார். தான் செய்வது சரியோ, தனது வழி சரியோ என்று எந்த சாதகனும் ஐயம் கொள்ள வேண்டாம். ஆன்மீக வழியில் ஈடுபடும் எவரும் இறைவன் மேல் முழு மனதுடன் ஈடுபட வேண்டும் என்பதுதான் ஒரே ஒரு முக்கியமான கோட்பாடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சாட்சாத் பரமாத்வாவே கூறும்போது, எவருக்கும் அவர் செல்லும் வழியிலோ, தான் கடைத்தேறுவேனோ என்ற எந்த விதமான சந்தேகமும் வந்தால் சாதகன் இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடையவில்லை என்றே பொருள். அந்த நிலையை எவரும் தவிர்க்கவேண்டும். நீயே எல்லாம் என்று கண்ணனிடம் ஐக்கியமாவதே அனந்னிய பக்தி பாவம்.

10-11

तेषामेवानुकम्पार्थमहमज्ञानजं तम:
नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता ||

அன்னவர் உள்ளத்து அமர்ந்தே அருளதனால்
துன்னும் அறியாமையாம் தொல் இருளை – மின்னும்
அறிவாம் விளக்கால் அறவே இறுதி
யுறச் செய்வேன் யான் என்று உணர்

பொருள்: ஆர்வமும் சிரத்தையுமுள்ள பக்தர்களின் விருத்தியில் நான் இருந்து கொண்டு, அவர்களின் தொன்று தொட்டு இருக்கும் அடர்ந்த அஞ்ஞானமாகிய இருளை என்னுடைய கருணையினால், மிக்க ஒளியுடன் விளங்கும் விவேகமென்னும் ஞான தீபத்தினால் முற்றும் நாசமடையும்படி செய்வேன் என்று உணர்ந்திடுவாய்.

நல்லது ஒன்றை அடைய வேண்டும் என்ற சிரத்தை ஒருவனுக்கு இருந்தாலே, அவனிடம் இறைவன் குடி கொண்டுள்ளான் என்றே பொருள். இல்லையென்றால் அவனுக்கு மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பது கூடத் தோன்றாதிருக்கலாம். ஆதலால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் இறைவன் இருக்கிறான் என்று நம்புபவனுக்கே பிரபஞ்சமும் அதன் இயக்கங்களும் ஒவ்வொன்றாகப் புரிய வரும். அது மட்டுமல்லாது அண்டத்தில் உள்ளதுதான் பிண்டமாகிய நம்முள்ளும் இருக்கிறது என்ற இறுதி உண்மையும் தெரிய வரும். செய்யும் தொழிலே தெய்வம் என்று அப்படி செயல் புரிபவனுக்கு தொன்று தொட்டு விளங்கும் அறியாமை எனும் இருளைப் போக்கி ஞானத்தை நான் வலிய வந்து தந்திடுவேன் என்று பகவான் கிருஷ்ணர் நமக்கு உத்திரவாதம் தருகிறார். அந்த ஞானம் அடைந்தவனுக்கு வேறு எந்தப் பாதையிலும் செல்வதற்குத் தோன்றாது.

gitaatman

“தொன்று தொட்டு இருக்கும் இறைவன்” என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன “தொன்று தொட்டு விளங்கும் அறியாமை” என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? ஆமாம், “என்று நீ, அன்று நான்” என்று ஒரு சிவனடியார் கால அளவைப் பற்றிச் சொல்வாராம். அதாவது, என்று இறைவன் தான் தானாக இல்லாமல் இயற்கையின் பலவடிவினனாகக் காட்சி தந்து அருளினானோ, அன்றிருந்தே அறியாமை எனும் இருளும் “நான்” என்ற வடிவில் தொடங்கி உலவுகிறது என்று அதற்குப் பொருள். அப்படி இறைவனையும் தன்னையும் பிரித்துக் காண்பதினாலேயே நாம் அனைவரும் எண்ணிலாப் பிறவிகள் எடுத்து வருகிறோம். ஆக அனைத்தையும் ஒன்றாகக் காணவேண்டும் என்பதே நமது வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும். அதற்காகவே நமக்கு இறைவனிடமிருந்து தன்னைப் பிரித்து அறியாத அனந்னிய பக்தி வேண்டும்.

எப்படி “இருட்டில் பார்த்த இது பாம்பல்ல, கயிறுதான்” என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அதற்கு வேண்டிய ஒளி தேவைப்படுகிறதோ, அதே போன்று அஞ்ஞானமாகிய இருளில் மூழ்கியுள்ள ஒவ்வொருவருக்கும் ஞானமாகிய ஒளி தேவைப்படுகிறது. அப்படி ஒளி கிடைத்தாலும் பலருக்கு உடனே அது அனுபவமாக மாறாது.

இதை காஞ்சி மகா முனிவர் இப்படிச் சொல்வார். பல வருடங்களாக ஒரு கிணற்றுத் தண்ணீரில் மூழ்கியிருந்த ஒரு பித்தளைச் சொம்பை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தவுடனே அது பளபளவென்று இருக்காது. பாசி படர்ந்து, களிம்பு ஏறி  அதன் நிறமே மாறிப் போயிருக்கும். அதை புளி, சாம்பல் முதலான பொருட்கள் கொண்டு அழுத்தித் தேய்க்கத்  தேய்க்க பளபளப்பு வருவது போல நமது முயற்சியின் வலிமை கொண்டு நம்மை நாம் அறிய வேண்டும் என்பார். இதுதான் சிரத்தை எனப்படுகிறது.

முயற்சி என்பதன் அளவும் ஒவ்வொருவரின் நிலையைப் பொறுத்தது. வேறோர் இடத்தில் கண்ணபிரானே சொல்வதுபோல் நெருப்பைச் சூழ்ந்துள்ள புகையை அகற்ற ஒரு மெல்லிய தென்றல் போதும். ஆனால் ஒரு கண்ணாடியின் மேல் இருக்கும் கறையை அகற்ற ஓர் ஈரத் துணியும், அழுத்தித் துடைத்தலும் வேண்டும். ஒரு தாயின் சூலில் இருக்கும் சிசு வெளி வருவதற்கோ, அதற்கு வேண்டிய முயற்சிகள் தவிர அதற்குண்டான காலம் வரும் வரை காத்திருக்கவும் வேண்டும். இதுதான் இயற்கை நமக்குச் சொல்லித் தரும் பாடம்.

5-16

ज्ञानेन तु तदज्ञानं येषां नाशितमात्मन: |
तेषामादित्यवज्ज्ञानं प्रकाशयति तत्परम् ||

அறிவால் எவர்தம் அகத்து அறியாமை
அறவே அழிந்தது அவர்தம் – அறிவும்
பரிதியைப் போலப் பரத்தை ஒளிரப்
புரிவித்திடும் அப்பொழுது

பொருள்: எவர்களுடைய மனதில் அடர்ந்துள்ள அஞ்ஞானமானது ஆத்ம ஞானத்தினால் அடியோடு நாசமடைகிறதோ, அவர்களுடைய ஞானமானது உலகப் பொருட்களை பிரகாசிக்கச் செய்யும் சூரியனைப்போல பரம்பொருளை பிரகாசிக்கச் செய்திடும்.

ஞானம் என்பது அறிவுதான். ஆனால் இந்த அறிவு மற்ற பொருட்களையோ, சீவராசிகளையோ, வழிமுறைகளையோ அறிவது போல் அல்ல. ஏனெனில் அத்தகைய அறிவுடன் அறியாமையின் கலப்பு என்பதும் இருக்கும். அதாவது ஒன்றை அறிந்தோம் என்றால், அதைப் பற்றி முன்னதாக அறிந்திருக்கவில்லை என்பதும், அது தவிர அதைப் பற்றியே சில அம்சங்கள்தான் அறிவுக்கு எட்டியிருக்கிறது வேறு சில அம்சங்களைப் பற்றி அறியாதிருக்கிறோம் என்பதும் சாத்தியமே. ஆக அது சுத்த அறிவு ஆகாது.

ஞானமோ தன்னைப் பற்றிய ஒரு சுத்த அறிவு. எப்படி சூரியன் எப்போதும் ஒளி கொண்டதாக உள்ளதோ, அதே போன்று ஞானமும் அறியாமையின் கலப்பில்லாத சுத்த அறிவு. ஒளியே இல்லாத சூரியன் என்று ஒன்று இருக்கிறதா? சூரிய ஒளி ஒரு இடத்தில் படராமல் இருக்கலாம். அதற்கு ஏதோ திரை போட்டது போல் மறைக்கிறது என்றுதான் கொள்ளலாமே தவிர, ஒளி இல்லாத சூரியன் என்றா கொள்வார்கள்? அது போல நாம் ஒவ்வொருவருமே ஞானம் எனும் சூரியனையும் மறைக்கும் திரைகள் பலவற்றை உருவாக்கி வைத்திருக்கிறோம். ஒவ்வொரு திரையையும் அறிந்துகொண்டு அவைகளை விலக்க, இறுதியில் சாதகனுக்கு ஞானத்தின் உண்மை நிலை தெரிகிறது. அப்படித் தெரிந்து கொள்ளாத நிலையிலும் சாதகன் ஞானத்தின் உருவாகவே இருக்கிறான், ஆனால் அதை அவன் அறிந்திருக்கவில்லை. இதையேதான் கிருஷ்ணர் அருச்சுனனுக்கு, “நீயும் நானும் அதுவே,  அதை நான் அறிவேன், நீ அறியவில்லை” என்று சொல்வார்.

திரைகளைக் கடந்து சூரியன் வெளியே வரும்போது அது மட்டும் பிரகாசிக்காது, சுற்றியுள்ள அனைத்தையும் பிரகாசிக்கச் செய்வதுபோல, சாதகன் தன் உண்மை நிலையை அறிய வரும்போது அவனது அறிவும் அனைத்துலகையும் உள்ளது உள்ளபடி அறிய முடிகிறது. அது மட்டுமல்லாது அவனைச் சுற்றியுள்ள அனைவரையும் ஆன்மா பற்றி அறிய வைக்கவும் முடிகிறது.

ஒரு முறை ரமணர் இருக்கும் பக்கம் அவருக்கு வெகு அருகில் ஒரு பாம்பு வந்ததாம். அவர் பாம்பைப் பார்த்துக்கொண்டு நிற்க, பாம்பும் அவரைப் பார்த்து படமெடுத்துக் கொண்டு நின்றதாம். வெகு நேரம் சென்ற பின் பாம்பு தன் வழியே போக, அவரும் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த அரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பர் ஒருவர் ரமணருக்கு அந்த சமயத்தில் என்ன மாதிரி உணர்வு இருந்தது என்று அவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்னது: “நான் பாம்பை இன்னொரு மனிதனாகப் பார்த்துக் கொண்டு நின்றேன், பாம்பும் என்னை இன்னொரு பாம்பாகப் பார்த்துகொண்டு நின்றிருந்தது”. ஆக மற்றதைச் சரியாகப் பார்க்கும் அறிவை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

அதனால் ரமணர் சொல்வதுபோல், “அறிவும் அறியாமையும் யார்க்கு என்று அம்முதலாம் தன்னை அறியும் அறிவே அறிவு”. மற்றதெல்லாம் அறிவின்மை கலந்த அறிவே.

music-iconரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.

(தொடரும் …)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *