விலக்கப்பட்ட மலர் [சிறுகதை]

ஜன்னல் வழியே மரிய புஷ்பம் வெளியே பார்த்தாள். கடல் முடிவின்றி பரந்து வானுடன் இணைந்தது. அலைகளில் பல்லாயிரம் சூரியன் சிறு துளிகளாக மின்ன, அலைகள் மதியச் சோம்பலுடன் கரை சேருமுன்பே பாறைகளில் மோதி உடைந்து சிற்றலைகளாக கரை தழுவி மீண்டன. கடற்பறவைகள் கரைகளில் ஆங்காங்கே விழுந்து கிடந்த சிதிலமடைந்த மீன் உடல்களைக் கொத்திக் கொண்டு அதிக தூரம் பறக்காமல் அருகிலேயே ஏதாவது உயரமான இடங்களில் அமர்ந்து கொண்டன. அந்த மதிய வேளையையே சோம்பல் ஒரு போர்வையாகத் தழுவியதைப் போல இருந்தது.

அந்தக் கடற்புறக் கிராமத்துச் சுய உதவிக்குழுவின் அறையில் இன்னும் ஒரு சில பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். அறையின் ஒரு ஓரத்தில் மேசையும் இரண்டு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. அதனை ஒட்டிய சுவரில் தேவமாதா வெள்ளை அங்கியின் மேல் நீல சால்வை போர்த்தி விண்ணரசியாகப் பன்னிரண்டு நட்சத்திரங்கள் சூட்டிய மகுடத்துடன் கை கூப்பிக் கண்கள் மேல் செருக அமைதியாக நின்று கொண்டிருந்தார். ஆனால் மரிய புஷ்பத்தின் மனதில் அந்த அமைதி இல்லை. அவளுக்குள் ஓடிய நடுக்கம் இன்னும் தீரவில்லை.

நான்கைந்து பெண்கள் வந்திருந்த போதிலும் ஒரு இறுக்கமான மௌனமே அங்கு நிலவியது. கூடவே ஒரு அச்சம் கலந்த எதிர்பார்ப்பு. எல்லாப் பெண்களும் அவளிடமிருந்து கவனமாகச் சிறிது விலகியே நின்றார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக உறுப்பினர்கள் எல்லோரும் வந்த பிறகு தலைவியும் பொருளாளரும் வந்ததும் ’முட்டக்களம் விண்ணக மாதா சுய உதவிக் குழு’வின் 14 ஆவது மாதாந்திரக் கூட்டம் ஆரம்பித்தது. ஜெரோம் ஆண்ட்ரோஸின் மகள், புனித அந்தோணியார் பள்ளிக் கூட தமிழ் வாத்திச்சி மேரி சுசீலி இறை வணக்கம் பாடினாள். ’ஆண்டவரே எம் புகலே எமக்காக வேண்ட வேண்டும் தேவமாதா உம் குரலே’ பாடல் முடிந்ததும் உறுப்பினர்கள் எல்லோரும் தரையில் அமர்ந்தனர்.

குழுப் பொருளாளர் மரியகலா முந்தைய கணக்கை வாசித்தாள். பிறகு தலைவி ஜெபமேரி எழுந்தாள். இரட்டை சரீரம். மேலோங்கிய கன்னச்சதைகள் உள்ளே தள்ளியதால் ஒடுங்கிய கண்கள். சில நேரம் அவள் கூர்ந்து பார்க்கும் போது அந்த கண்கள் இன்னும் இடுங்கி இரண்டு கறுப்புக் கோடுகளாக மாறிவிடும். குரலில் ஒரு கடுமையான இனிமை இருக்கும். இனிமையின் பின்னாலிருக்கும் அதிகாரத்தை எப்போதும் நினைவுறுத்தும் இனிமை. ‘பிள்ளா நீ என்ன சொன்னான்னு இன்னொருக்க சொல்லு மக்கா’ என்றாளென்றால் நீ சொன்னதை அப்படியே மறந்துவிடு என்று பொருள். ‘ஒண்ணுமில்லக்கா என் புருசங்காரரு அரிஸ்டம் குடிக்கத நிறுத்திட்டாருல்லா அதத்தான் எலிஸிக்காட்ட சொல்லிட்டிருந்தேன். அவிய அத நிறுத்துனா அந்தோணியார் குருசடியில உப்பும் மிளகும் போட்டு கூட மெழுகத்தியும் ஏத்துகதா வேண்டிகிட்டிருந்தம்லா, அதுதான் என்னைக்கினுட்டு…’ என்று சொன்னால் புத்திசாலி, அனுபவப்பட்டவள்.

ஆனால் தவறிப்போய் ‘இல்லக்கா நாந்தான் மொதல்ல கடம் கேட்டேன் ஆனா எனக்குப்பிறம் கேட்ட மோனிசாவுக்குல்லா கொடுத்திருக்கு. அவா கடங்கேக்க அன்னைக்கு மட்டுந்தான் கூட்டத்துக்கு வந்தா ஆனா நான் ஒருநா வராம இருந்திருக்கேனாக்கா இப்படி ஆள்பாத்தா என்னக்கா அர்த்தம்” என்று சொன்னால் ஜெபமேரி கண்கள் இன்னும் இடுங்க இனிமையாக புன்னகைப்பாள். ‘மோளே பொறுமையாருக்கணும் மோளே. விதைக்க ஒரு காலமுண்டென்னு வைச்சால் அறுவடைக்கு ஒரு காலம் உண்டென்னு வேதத்துல சொல்லியிருக்குல்லா’ என்று ஆறுதலாக சொல்லுவாள். அடுத்த கூட்டத்துக்குள் கேள்வி கேட்ட அந்த பெண் சுய உதவிக் குழுவிலிருந்து நீக்கப்பட்டிருப்பாள். காரணம் கனகச்சிதமாக இருக்கும்.   

யார் யாருக்கு கடன் கொடுப்பது என தீர்மானம் வந்திருப்பதை அன்று ஜெபமேரி வாசித்தாள். அந்த லிஸ்டில் பெயர் வர வேறு கனக்‌ஷன்கள் தேவை. எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாரும் கேட்கமாட்டார்கள்.

குழுக் கூட்டத்தில் கேட்க மாட்டார்கள். அருளியக் கூடுதல்களில் கூட யாரும் கேட்கமாட்டார்கள். சுய உதவிக்குழுக் கூட்டம் கலைந்து போகும் போது கூடக் கேட்க மாட்டார்கள். கேட்டால் ’அவர்களுக்கு’ எப்படியோ செய்தி போய்விடும். அடுத்த பங்குப் பிரசங்கத்தில் அதற்கான பதில் வரும். அப்படித்தான் மரிய புஷ்பத்தின் பிரச்சனையும் ஆரம்பித்தது.

ஒருமுறை தெரியாமல் மரிய புஷ்பம் குழுக் கூட்டம் முடிந்து டீ குடிக்கும் போது கேட்டுவிட்டாள்: ‘நாம பிடிக்கிற மீனுலதான் பங்கு வாங்குகாவ, அந்த பங்கெல்லாம் சேத்து வெளிய காலேஜெல்லாம் கட்டுக்காவஆனா இந்த ஊருக்கு வெளிய நம்ம புள்ளைகளுக்கு படிக்க வழிய காணும். நாம எதுக்காக்கும் அப்ப? சுனாமி வந்தா கூட அதுக்கு நம்ம சமுதாய கட்டிடம் அங்கன நாரோவிலு அவருக்க மாளிகை காம்பவுண்டுக்குள்ளல்லா கட்டுறாவ…ஏன் இங்க கட்டக்கூடாதாம்?” இயல்பாகத்தான் கேட்டாள். அதை பெரிதாக எடுத்துக் கொண்டு போய் ஆயர் மாளிகை முன்னால் கேட்டு ஆர்ப்பாட்டமெல்லாம் அவள் பண்ணிவிட மாட்டாள். அன்றைக்கு மாலையிலேயே டிவியில் மெட்டி ஒலி சீரியல் நடக்கும் போதே அதை அவள் மறந்திருப்பாள். ஆனால் அதை ஜெபமேரி கேட்டு விட்டாள். இவளைப் பார்த்துப் புன்னகைத்தும் விட்டாள். அதுதான் பிரச்சனையாகி விட்டது. ஆனால் அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகுதான் தெரிந்தது வத்தி வைக்க வேண்டிய இடத்தில் வத்தி வைத்து விட்டாள் என்று. பங்குப் பூசை நடத்தும் அல்போன்ஸோ பெர்னாண்டஸ்  சொன்னாராம் ”இதையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியலைன்னா பொறவு விசமா வளந்து நிக்கும்.” சர்ச்சில் வேலை செய்யும் கிழவி ரோசம்மாள் தான் ஒட்டுக்கேட்டதைப் பிறகு சொன்னாள்.

அந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குப் போனவள் பங்குத் தந்தை பேச ஆரம்பித்த போது அவளுக்கு முதலில் எல்லா வார பிரசங்கங்களைப் போலவும் தான் இது தோன்றியது,  

கேள்வி கேட்பதில் சிலருக்குச் சுவை உண்டு. அந்தச் சுவையை அளிப்பவன் யார்? வேதாகமம் சொல்கிறது கேள்வியைக் கேட்க வைப்பவன் நமது எதிரியான வலு சர்ப்பம். அதன் பசப்பிலே மயங்கிய ஏவாள் முதல் கேள்வி கேட்டாள். கேள்வி கேட்பவள் பாவி. கேள்வி கேட்கத் தூண்டுவது வலு சர்ப்பமான சாத்தான். பெண் சொன்னதைக் கேட்டுக் கேள்வி கேட்கும் ஆண் வீழ்ச்சிக்குத் தயாராகிவிட்ட ஆத்மா.

பெர்னாண்டஸ் ஒல்லியான இளைஞர். நன்றாக வழித்தெடுத்த முகம். அவர் அருகில் போகும் போதே உயர்தர செண்டின் மணம் அடிக்கும். பிரசங்கம் அருமையாகப் பண்ணுவார். அவர் பிரசங்கம் செய்தால் சிலுவையிலிருந்து ஏசுவே இறங்கி முன்வரிசையில் உட்கார்ந்து விட வருவாராம். ஆனால் ஒழுங்காக உடை இல்லை என்று அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் சிலுவையிலேயே இருந்துவிடுவாராம்.. அவ்வப்போது சீசாப்பிள்ளைகள் மாறிக் கொண்டிருப்பதும் பழைய சீசாப்பிள்ளைகள் அவர்கள் குடும்பங்களால் அவசரம் அவசரமாக வேறு ஊர்களுக்கு மேல்படிப்பு அல்லது வேலை என்று அனுப்பப்படுவதும் குறித்து அரசல் புரசலாக ஒரு வதந்தி அலை ஓய்ந்த பின் கரை மணலில் படர்ந்திருக்கும் மெல்லிய நீர் திரை போல பெர்னாண்டஸைச் சுற்றியிருந்தது. ஆனால் பழைய சீசாப்பிள்ளைகளின் பெற்றோர்களோ அதைக் குறித்தெல்லாம் ஒரு வார்த்தை பேசியது கிடையாது.   

அன்றைக்கு ஏவாள் கேள்வி கேட்டாள் நாம் கீழே விழுந்தோம். இன்றைக்கு? இன்றைக்கும் ஏவாள்கள் சைத்தானால் தூண்டப்பட்டுக் கேள்வி கேட்கிறார்கள். சுனாமி நிதியின் வந்த கட்டிடம் ஏன் கடற்கரைக் கிராமத்தில் கட்டப்படவில்லை என்று கேட்க வலுசர்ப்பம் தூண்டுகிறது. ஆட்டுக்குட்டிகளுக்கு அல்ல ஆயனுக்கே எங்கே புல் விளையும் என்பது தெரியும். ஆயரைப் பின் தொடரும் ஆட்டுக்குட்டிகளுக்கே வளமை உண்டு. அவரைக் கேள்வி கேட்கும் கறுப்பு ஆடுகள் உணவுக்கு வழியின்றி பசியாலேயே செத்துப் போகும். யூதாஸ் என்கிற கறுப்பு ஆடு போல நிராதரவாகத் தொங்கி நாக்குத் தள்ளிச் சாகும்…மனிதனைக் கீழே தள்ளிய எதிரியை உங்களுக்குள் அனுமதிக்காதீர்கள் மக்களே..இதோ நம் தாய். நம் மீட்பின் கனியை அளித்த விண்ணரசி. நம் தேவ மாதாவிடமிருந்து நாம் படிப்போம். ஆண்டவனின் தூதனிடம் மண்டியிட்டு ‘இதோ உம் அடிமை உம் சித்தமே நடக்கட்டும்’ என்று சொன்ன மாதாவின் கீழ்ப்படிதலைப் பாருங்கள். ஆண்டவரிடம் கீழ்ப்படிதல், சபையிடம் கீழ்ப்படிதல், பங்கில் கீழ்ப்படிதல், கணவனுக்கு கீழ்ப்படிதல் இதுதான் நல்ல குடும்பத்தின் அஸ்திவாரம் தேவப்பிள்ளைகளே…கீழ்ப்படிதலாக இருங்கள். பெண்கள் ஆண்களுக்கு கீழ்ப்படிதலாக இருங்கள். உங்கள் விசுவாசத்துக்கு, உங்கள் சபைக்குக் கீழ்படிதலாக இருங்கள். அப்போது மட்டுமே விண்ணரசில் உங்களுக்கு இடம் உண்டு. கேள்வி கேட்பவளுக்கும் கேட்டு கலகம் செய்பவனுக்கும் செய்பவளுக்கும் அய்யோ கேடு.

பூசை முடிவதற்குள் யாருக்காக அன்றையப் பிரசங்கம் நடக்கிறதென்பது குழு உறுப்பினர்கள் எல்லோருக்கும் புரிந்துவிட்டது.

அவள் புருசன் ரோசன் பெர்னாண்டோ மிலிட்டரியிலிருந்து லீவுக்கு வந்திருந்தான். அந்தப் பூசைக்கு அவனும் வந்திருந்தான். அவள் சொல்லித்தான் வந்திருந்தான். ஏற்கனவே மிலிட்டரியில் இருக்கும் அவன் அணு ஆயுத சோதனையை ஆதரித்து ஒரு வாழ்த்து டெலிகிராமை ஊர் பசங்களை சேர்த்துக் கொண்டு பிரதம மந்திரிக்கு அனுப்பியதைச் சபைக் கட்டுப்பாட்டை மீறியதாக சொல்லிக் கண்டித்ததில் அவனுக்கும் பங்கு சபைக்கும் தகராறு உண்டுபிரசங்கம் நீள நீள எல்லாரும் குசுகுசுவென்று திரும்பி மரியபுஷ்பத்தை பார்ப்பதை அவனும் கவனித்தான் 

அன்று வீடு திரும்பிய போது வீட்டில் கனத்த மௌனம் நிலவியது. மாமியார்க்காரிதான் முதலில் அதை உடைத்தாள். ‘சாமியாருவள எதுத்தா அந்த வீடு கொடும்பம் வெளங்குமா… ஆருன்னாலும் வகுந்து மண்ணாக்கிருவாவ… நீ சின்ன புள்ள உனக்கொக்க இந்த ஊரு கட்டுப்பாடு சரியா மனசுலாவல்ல… நான் சொல்லுதேன் கேளு …ஜாண் ரோஸு பய இப்படித்தான் எதுத்து அந்த பாளாப் போற கட்சில போயி சேந்தான்… அந்த கட்சியில என்னைக்கு பெர்ன்னாண்டோவ சேத்தாவ…”

ரோசன் பெர்னாண்டோ இப்போது சுவாரசியமானான். சர்ச்சிலிருந்தே இருண்டு மௌனமாக இருந்த அவன் முகத்தில் முதலில் ஒரு ஈடுபாட்டு வெளிச்சம் வந்தது போல் இருந்தது… “எங்கூட படிச்சானே அவனா? என்ன சொல்லுறீய… அவன் நல்லா படிப்பாம்லா…வம்புதும்பெல்லாம் போவ மாட்டானே…”

கிழவி செருமினாள்.

அந்த அறுதலி மொவந்தான்…இவனா போயில்லா அந்த கட்சில மரிஞ்சான்… அன்னைக்கு முடிவெடுத்தாவ இனி அந்த கட்சியிலயே ஆரும் சேரப்படாது சேந்தா கொடும்பத்தோட விலகி வைக்கதுன்ண்ட்டுஜான் ரோஸுக் கொடும்பம் முந்தி பட்டங்கட்டி கொடும்பமுண்ணுல்லா சொல்லுவாவ…அதோட எட்டு வீட்டு பிள்ளமாரு பொண்டுகள ஏலமெடுத்த கொடும்பமாமுல்லா அது …ஆனா இன்னைக்கே அவிய கொடும்பத்து ஆளுவ அந்த கட்சில சேந்ததுனால ஊருக்குள்ள இருந்தே வெளில போவச்சொல்லிட்டாருல்லா சாமியாரு… இல்ல மக்கா நீ பட்டாளத்துக்கு போறதுக்குள்ள நீயும் பொஞ்சாதியுமா சாமியார பாத்து மாப்பு கேட்டிருங்க மக்கா…செத்தா பொறவு ஆண்டவருக்க நெலத்துல எனக்கு கல்லற கட்ட கூட விடமாட்டாவ”

மாமியாரின் புலம்பலை கேட்ட படி பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு மூலையில் முகம் கவிழ்ந்து உட்கார்ந்திருந்த மரிய புஷ்பத்தின் தோளில் ஒரு கை இறுக பதிர்ந்தது. பழகிய கரம். நிமிர்ந்தாள். ரோசனின் முகம் ஆதரவுடன் தெரிந்தது.   ”வா நாரோலு போலாம்…கொஞ்சம் பேரை பாக்கணும்” அவன் குரலில் உறுதி இருந்தது.

கதவை யாரோ தட்டினார்கள். மேரி சுசூலியின் மகன் பேசில் ‘அம்ம கொடுக்க சொன்னாவ’ என்று ஒரு கடிதத்தை நீட்டினான். மன்னிப்பு கேட்கச்  சொல்லியிருந்தார்கள். திருச்சபையின் ஒழுக்கக் கட்டுப்பாட்டினைக் கேள்வி இனி கேட்க மாட்டேன் என்று உறுதி தரவும் சொல்லியிருந்தார்கள். அடுத்த சுய உதவி குழு கூட்டத்தில்.

இன்று அவள் மன்னிப்பு கடிதத்தை கொடுக்க வேண்டிய நாள். அனைவர் முன்னாலும் அவள் அமைதியாக எழுந்து மடக்கி வைத்திருந்த அந்த நீள தாளை ஜெபமேரியிடம் கொடுத்தாள். புன்முறுவல் கோடாகச் சரிய கண்கள் ஒடுங்க அதை பிரித்த ஜெபமேரியின் புன்முறுவல் உறைந்தது. கோபத்துடன் கண்கள் விரிய எல்லா நைச்சியங்களையும் கைவிட்டு “என்ன கூத்துட்டி இது’ என்றாள்…

கூத்து இல்லக்கா அப்பிளிக்கேசன் …பஞ்சாயத்து பிரசிடெண்ட் தேர்தல் வருதுல்லா நிக்க போறேன்…நான் கொடுத்த அப்ளிக்கெசன் ஃபார்முக்க காப்பி…என் புருசன் இதைத்தான் நீங்க கேட்டதுக்கு உத்தரமா தர சொன்னாவ”

சலசலப்பு அலையடித்து அடங்கியது… எவளோ ஒருத்தி கேட்டாள் “எக்கோவ் என்ன சின்னங்க்கா!”

அறையின் இறுக்கத்திலிருந்து வெளியின் விசாலத்துக்குள் அடி எடுத்து வைத்தபடி மரிய புஷ்பம் சொன்னாள் “பூ தாம்டி தாமர ! ”

12 Replies to “விலக்கப்பட்ட மலர் [சிறுகதை]”

 1. மிகவும் உத்சாஹமாக இருக்கிறது.
  நன்றி.
  நல்ல விஷயம்.
  சொல்ல வரும் சங்கதிகள் துல்லியமாக வர்ணிக்கப்பட்டு விளங்குமாறு வார்த்தைப் பிரயோகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
  படிக்கவும் சிந்தித்து அசை போடவும் பகிர்ந்து கொள்ளவும் வேண்டிய அவசியமான செய்திகள் இவை.
  உண்மையும்கூட.
  இந்த வர்ணனையிலே காட்சியிலே உள்ள யதார்த்தங்களை நேரில் கண்டு உணர்ந்து அனுபவப் பட்டவன் நான்.
  இந்த சம்பவங்களிலே உள்ள உண்மை + சத்தியம் நிச்சயம்.
  இந்த கேடு கெட்ட சிலந்தி வலை சிறிய மன சுய நல விஷமிகளும் நமது நாட்டுப் பிரஜைகளே என்பது மிகவும் வருத்தம் தரும் விஷயம்.
  அவர்களுக்கு வசதி செய்து கொடுத்து விஷம் ஊட்டும் வெளி சக்திகளை அடையாளம் கண்டு கொள்ள உதவும் சங்கதிகள் இன்னமும் விவரமாக வெளிவர வேண்டும்.
  கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
  அதற்கு இறை அருள் உதவட்டும்.
  அப்படியே ஆகுக.
  அப்படியே ஆகுக .
  நன்றி.
  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்.

 2. ஆலந்தூர் மள்ளனின் மற்றொரு அருமையான கதை !!

  அவர் இதுவரை எழுதிய கதைகள் அனைத்தும் உண்மைச் சம்பவங்களே என்பதைக் கவனிக்கிறேன்.

  .
  .

 3. தோழர்.பி.ராமமூர்த்தி எழுதிய ஆரிய மாயையா? திராவிட மாயையா? புத்தகம் எங்கு கிடைக்கும்?தேடி ஓய்ந்து விட்டேன்.கொஞ்சம் உதவுங்க!!

 4. வட்டார வழக்கில் அமைந்திருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தை நெத்தியடியாக சொன்ன விதம் அருமை…பாராட்டுக்கள்….நன்றி திரு.ஆலந்தூர் மள்ளன்………

 5. அருமையா இருந்தது. நன்றி

  “எரியறத புடுங்குனா, புகையிறது தானா அடங்கும்னு”

  பணம் என்ற ஒன்று இல்லாவிட்டால், இவர்கள் அனைவரும் உடைந்த கண்ணாடி போன்று சிதறிவிடுவார்கள். அமெரிக்காவுக்கு ஆப்பு விழும் பொழுது இவர்களுக்கும் இருக்கு பெரிய ஆப்பு.

  இப்பொழுது எல்லாம் ‘ WORLD VISION’ என்ற மத மாற்ற வியாபாரிகள் எல்லா பன்னாட்டு கம்பெனிகளிலும் கடையை விரித்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அது மட்டும் இன்றி எதோ பொருட்களை விற்பனை செய்வது போல் ஆதரவற்ற குழந்தைகளின் புகைப்படங்களை வைத்துவிடுகிறார்கள், இதில் யார் நமக்கு பிடித்து இருக்கிறார்களோ அவர்களுக்கு நாம் உதவி செய்யலாம்.

  இது போதாது என்று மிஷி-நரிகளின் மீடியா கூலிப்படை தலைவன் ராஜ்தீப் (CNN-IBN Editor) போட்டோ வேறு. வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நன்றாக திட்டி விட்டேன்.

  அனாதை என்ற ஒன்றே ஆப்ரகாமிய பேய்கள் இந்தியாவில் வந்த பின்பு தானே ஏற்பட்டது. அதற்கு முன்பு அந்தந்த சமுதாய பெரியோர்கள் அல்லது உறவினர்கள் அல்லவா குழந்தையை வளர்த்தார்கள். கிறித்துவ மிஷினரிகள் இந்தியாவில் வந்த சமுதாயத்தில் பணம் மற்றும் இனம் வெறி என்ற விஷத்தை கலந்த பின்பு தானே அனாதை என்ற ஒரு வர்கமே உருவானது.

  பணம் என்ற ஆவியை சமுதாயத்தில் புகுத்தி சாதி வெறி என்ற விசத்தை சேர்த்து, மக்களை சிறு சிறு குழுக்களாக்கி மதம் மாற்றும் கேவலமான் ஜந்துக்களை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

  எவ்வளவு வேகமாக இவர்களை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துகிறோமோ? அவ்வளவு நல்லது. நான் எனது சாதி மக்களின் மூலம் மத மாற்ற வியாபாரம் மற்றும் ‘LOVE ஜிஹாத்’ போன்ற விசயங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். அது மட்டும் இன்றி சாதி பெய்ரை உபயோகித்து எப்படி மதம் மாற்றுகிறார்கள் என்பதை வீடியோ மூலமும் எங்கள் சாதியினறுக்கு விளக்குகிறேன்.

  சாதி என்பது என்ன?
  வர்ணம் என்றால் என்ன?
  ஒரு காலத்தில் அனைத்து சாதியினறும் எவ்வாறு வாழ்ந்தார்கள்.
  எப்படி சில சாதியினரை SC / ST யாக மாற்றி மதம் மாற்றினார்கள், பிரிட்டிஷ்காரர்கள் எவ்வாறு சாதி வெறியை உருவாக்கினார்கள்
  முதலில் உதவி செய்வது போல் நடித்து பின்னர் எப்படி மிஷினரிகள் பணம் பிடுங்கிறார்கள்.
  உள்ளிட்ட அனைத்தையும் ’power point & video files’ மூலம் விளக்குகிறேன்.

  இது தவிர சின்ன திரையில் எவ்வாறு ஹிந்து பண்பாடு சிதைக்கப்படுகிறது போன்றவற்றையும் விளக்குகிறேன்.ஆண்களை விட பெண்கள் இதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

  இது போன்ற செயல்களை நீங்கள் உங்கள் சாதி மற்றும் நீங்கள் உறுப்பினறாக உள்ள சங்கம் மூலம் செய்தால் நன்றாக இருக்கும்.

 6. நன்றி. மிகவும் அருமை. உண்மையாகவே எல்லா ஊர்களிலும் உள்ள மக்களை சரியான வழியில் செல்ல விடாமல் மடையர்களாகவே வைத்திருப்பதை அறிந்தவர்கள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்துக்களை ஹிந்துக்களாகவே வாழ விட வேண்டி ஹிந்துக்கள் போராட்டம் நடத்த வேண்டும். நன்றி.

 7. /// வெளியின் விசாலத்துக்குள் அடி எடுத்து வைத்தபடி மரிய புஷ்பம் சொன்னாள் “பூ தாம்டி தாமர ! ///

  அட்ரா சக்கை!

 8. அப்படியே கன்னியாகுமரி மாவட்ட கரையோர உரையாடல்களாக, அருமையான உண்மைக்கதை. கிறித்தவ சபைகளில் நடக்கும் மானுடர்களில் பேதம் காண்கின்ற போக்கை கதைகளில் சிறப்பாக ஆலந்தூர் மல்லன் வெளிப்படுத்தி உள்ளார்.

  வாழ்க பாரத தேசம். வளர்க இந்துக்களின் ஒற்றுமை ….

 9. கொஞ்சம் எட்டிப்பிடித்தால் புதுமைபித்தன், தி.ஜா. வரிசையில் வந்துவிட மள்ளனுக்கு வாய்ப்பிருக்கிறது. பிரச்சாரத்தன்மை கதையில் துறுத்திக்கொண்டு நிற்க்கவில்லை. இயல்பான வட்டார வழக்கு, படைப்பிலக்கிய லக்ஷணங்களில் ஒன்றான வாசகனை கதையோடு ஒன்ற வைப்பது இதெல்லாம் இயல்பாக வந்திருக்கிறது.

  வளர்க! வளர்க! மேலும் வளர்க – ஹிந்து தமிழரைப் பற்றிய கருத்தோடு.

 10. மலையாளம் கலக்காத நெல்லை தமிழ் பேசும் குமரித் தமிழ் சரளமாக உபயோகித விதம் அருமை.

  // திருச்சபையின் ஒழுக்கக் கட்டுப்பாட்டினைக் கேள்வி இனி கேட்க மாட்டேன் என்று உறுதி தரவும் சொல்லியிருந்தார்கள். //

  என் நண்பன் வீட்டிலும் இது போல் நடந்தது உண்டு. கிறிஸ்தவர்களாக இருக்கும் அவர்கள் இன்றளவும் ஞானஸ்தானம் பெறவில்லை.அவர்களை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துள்ளனர்…மத மாற்றியது இவர்கள்..ஒதுக்கி வைப்பதும் இவர்கள்.. அவர்கள் ஞானஸ்தானம் பெற்றால் அரசாங்க வேலை போய்விடும் என்ற பயம்…கூழுக்கும் ஆசை பாலுக்கும் ஆசை என்று நினைபவர்கள் இருக்கும் வரை மத மற்றம் தொடரத்தான் செய்யும்.

 11. என்ன செய்ய உலகம் அப்படிதானே போகுது நல்ல கதை , பல பேர் இப்படித்தான் சான்றிதல் ல இந்து என்று இருக்கும் அரசு வேலைக்கும் போவர்கள் ஆனால் வெளியே சொல்வது நான் கிருத்துவ மதம். ஏன்ன இந்தியா ஜனநாயக நாடு அட போங்கப்பா……..

  மீண்டும் வருவேன்

  சின்னவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *