வெ.சா என்னும் சத்திய தரிசி

வெங்கட் சாமிநாதன்

”சாந்தத்துடன் கூடிய பெரியோர்கள் எந்தப் பிரதிபலனும் பாராமல், வசந்தத்தைப் போல உலக நலனுக்காக உலவுகிறார்கள்” என்று ஒரு சம்ஸ்கிருதப் பாடல் சொல்கிறது.

தமிழ்க் கலை, இலக்கிய உலகில் ஒருவர் 50 வருடங்களுக்கும் மேலாக அதுபோன்று நம்மிடையே உலவிக் கொண்டிருக்கிறார். ஆனால் வருடித் தரும் வசந்தமாகவும், சிலிர்ப்பூட்டும் பனியாகவும் மட்டுமல்ல, பல நேரங்களில் சண்ட மாருதமாகவும், சுட்டெரிக்கும் தணலாகவும், மூழ்கடிக்கும் மழையாகவும் கூட இயங்கித் தான் வாழும் உலகுக்கு நலம் சேர்த்திருக்கிறார்.

தமிழுலகின் கலை,இலக்கிய வளர்ச்சிப் பாதையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை வெங்கட் சாமிநாதனின் விமர்சனங்களே தீர்மானித்துள்ளன என்றால் மிகையில்லை. இதனூடாக, விமர்சனம் என்பதற்கு கறாரான, சமரசமற்ற உயர் மதிப்பீடுகளையும் அவை நிர்ணயித்திருக்கின்றன.

கலையையும், இலக்கியத்தையும் உள்வாங்கி உண்டுசெரித்து ஆற்றலாக மாற்றிக் கொள்ள விமர்சனம் அவசியம். இவ்வகையில் கலை, இலக்கியப் போக்கை ஆற்றுப் படுத்துகிற, அதற்கு வழிகாட்டுகிற நிலையில் இருப்பவன் விமர்சகன். ஆனால் விமர்சனம் என்பது ஆழ்ந்தகன்ற பார்வையும், வீச்சும், அதோடு மட்டுமல்லாமல் விமர்சகனுக்கேயுரிய ஒரு அலாதியான நுண்ணுணர்வும் கோரும் ஒரு செயல்பாடு என்ற பரவலான பிரக்ஞை நமக்கு இருந்திருக்கவில்லை. நவீன இலக்கியம் என்றல்ல, தமிழ் மரபின் பழைய உன்னதங்கள் விஷயத்தில் கூட இதே கதை தான்.

திருக்குறளுக்கும், சங்க இலக்கியங்களுக்கும் நூற்றாண்டுகள் முன்பு எழுதப் பட்டிருக்கும் உரைகளை எல்லாம் புறந்தள்ளி, முழுதாக “பகுத்தறிவு” ரீதியான புதிய உரைகளைக் காண்பது போன்ற அபாயங்கள் நிலவிய சூழல் அது. அப்போதும், வெ.சா துணிவாகவும், நேரிடையாகவும் பேசியிருக்கிறார். இதற்காக எப்பேற்பட்ட பிம்பங்களுடன் மோதவும் அவர் தயங்கியதில்லை. தனது ரசனையே கம்பராமாயணப் பாடல்களின் உண்மைத் தன்மைக்கு உரைகல் என்று முழங்கிய ”ரசிகமணி” டி.கேசி பற்றி வெ.சாவின் மதிப்பீடு குறிப்பிடத் தக்கது –

“இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வதும், தானே சிருஷ்டித்தவற்றை இலக்கியாசிரியரின் தலையில் கட்டுவதும், ஆஹா ஒஹோ என்று கூவுவதும், தனக்குப் பிடிக்காதவற்றை அந்த ஆசிரியரின் படைப்பேயில்லை என்று நீக்குவதும் விமர்சனம் என்றோ, புதிய படைப்பு என்றோ யாரும் சொல்வதற்கில்லை. இவை விமர்சனம் போன்ற ஒரு கனமான தொழிலைக் கேலிக்கிடமாக்குவதாகும். இவற்றில் உண்மை இல்லை”.

தமிழ்ச் சூழலில் நிலவும் ஒட்டுமொத்தமான கலை வறட்சி பற்றி அவர் மீண்டும், மீண்டும் எழுதியது அப்போது அந்தச் சூழலை ஆக்கிரமித்திருந்த அரசியல் சார்புகள் (மார்க்சிய, திராவிட) கலை, இலக்கிய செயல்பாட்டை பிரசார சாதனமாகவும், கொள்கை முழக்க துந்துபியாகவும் மட்டுமே ஆக்கி மலினப் படுத்தியிருந்ததால் தான், எந்தக் காழ்ப்புணர்வினாலும் அல்ல. அவரது நேரடித் தாக்குதல்களும்’ இந்த அரசியல் சித்தாந்தங்கள் மீதானவை அல்ல. ஆனால் அவ்வாறு கற்பிதப் படுத்தப் பட்டு அவர் தொடர்ந்து அதே சூழலில் வசையிலக்கியப் பொருளாகியிருக்கிறார். அதையும் தாண்டி அவை தனிப்பட்ட அவதூறுகளாகவும், வசைகளாகவும் பரிணமித்த போதும், அவர் அம்புப் படுக்கையின் மீது சாய்ந்து அறநெறியைப் போதித்த பீஷ்மரைப் போல அயராது தனக்கு உண்மையென்று பட்டதைச் சொல்லி வந்திருக்கிறார்.

ooooOOOOOoooo

உண்மை, நேர்மை ஆகிய எளிய, ஆனால் அதிமுக்கியமான குணங்களையே மேன்மையான கலையின், இலக்கியத்தின், அதைப் படைப்பவர்களின் அடையாளமாக வெ.சா காண்கிறார். ஒருவகையில் இது இந்தியக் கலைமரபின் சாரமும் கூட. கவிஞன் சத்தியத்தின் ஆழத்தைத் தேடிச் செல்லும் நோக்கு கொண்டவன், சத்திய தரிசி என்று நமது மரபு சொல்கிறது. ”சூரியனும், சந்திரனும் அறியாத உண்மைகளையும் கவி அறிகிறான்” என்கிறது ஒரு பாடல். வேத இலக்கியத்தில் ரிஷி, கவி என்ற இரு சொற்களும் ஒன்றுபோலவே பயன்படுத்தப் படுகின்றன. (ந.பிச்சமூர்த்தியை “ரிக்வேத ரிஷி” என்று வெ.சா குறிப்பிடுவது நினைவு வருகிறது). மேலும், இலக்கியம், இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம் ஆகிய எல்லாக் கலை வடிவங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை என்பதை வலியுறுத்திய அவரது முழுமைப் பார்வையும் நம் மரபில் உள்ள விஷயம் தான். (விஷ்ணு புராணத்தில், ஒரு நாடக நடிகன் கவிதை, தத்துவம், இசை, நடனம் எல்லாம் தெரிந்தவனாக இருக்கவேண்டும் என்று கூறப் படுவது குறித்து வெ.சா ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார்).

சத்திய தரிசி இயல்பாகவே சம தரிசியாகவும் (நடுநிலை நோக்கு கொண்டவராக), பார தரிசியாகவும் (வெளிப்படையானவராக), தீர்க்க தரிசியாகவும் (தொலை நோக்கு கொண்டவராக) இருக்கிறார்.

vesa_and_thija_old_photograph
வெ.சா, தி.ஜானகிராமனுடன்  (நன்றி:  ஹரன்பிரசன்னா)

சொல்வது எளிது. ஆனால் உண்மை எது, பொய்மை எது என்று கண்டறிவது அவ்வளவு எளிதான காரியமா என்ன? கொடிகட்டிப் பறக்கும் நுகர்வுக் கலாசார சூழலில், கலை என்ற பெயரில் முன்வைக்கப் படும் எதுவும் அதன் விற்பனை/நுகர்வு ஒன்றையே காரணம் காட்டி நியாயப் படுத்தப் படுவது நேர்கிறது. இன்னொரு புறம், கலை மேன்மை என்பதற்கு புறவயமான (objective) மதிப்பீடு என்று எதுவும் இல்லை; அதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கலையும், எழுத்தும் சிறப்பாகத் தென்படுகிறது, அதை விமர்சிப்பதற்கு மற்றவர்களுக்கு என்ன உரிமை என்ற ”ஜனநாயக” கேள்வி கூட எழுகிறது. விமர்சனம் என்பதே ஒரு மேட்டிமைவாதம் (elitism) என்ற குற்றச் சாட்டு வைக்கப் படுகிறது. மரபு மீறலுக்கும், மரபு சிதைத்தலுக்கும் இடையிலான மெல்லிய எல்லைக் கோடு பற்றி குழப்படியான கருத்துக்கள் கூறப் படுகின்றன. விமர்சகர்கள், படைப்பாளிகள், ரசிகர்கள், வாசகர்கள் ஆகிய அனைவருமே எதிர்கொள்ளும் கேள்விகள் இவை. இவற்றை நீண்ட விவாதங்களாக, தேடல்களாக, அலசல்களாக விரித்து வெ.சாவின் நூல்கள் பேசுகின்றன என்பதால் அவை மிக முக்கியமானவையாகின்றன.

இதில் புதைந்துள்ள பல சிக்கலான கருத்தாக்கங்களக் கூட குழந்தையைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்வது போல, படிப்படியாக விளக்கிச் செல்வது வெ.சாவின் பாணி. இவ்விதத்தில் ஒரு கலை ஆசானாகவே அவர் திகழ்கிறார் என்று சொல்ல வேண்டும். நித்யாஸ்ரீ மகாதேவன் கர்நாடக சங்கீதத்தையும் பாப் இசையையும் ஒரு சேர ரசிப்பது எப்படி என்ற கேள்வி அவரைக் குடைந்து எடுக்கிறது. இதை ஒரு புதிராக வைத்துக் கொண்டு Sensibility என்ற அடிப்படை நுண்ணுணர்வு வளரும் தன்மையை அவர் விளக்குகிறார் –

“கடந்த ஐம்பது வருட காலமாக நான் எனக்கென, என் இயல்பு ஏற்பதென ஒரு Sensibilityஐ வளர்த்துக் கொண்டிருக்கிறேன். வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை விட அத்தகைய ஒரு Sensibility என்னுள் வளர்வதை நான் சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல வேண்டும்….. எந்த எழுத்திலும், முக்கியமாக கவிதையில் நாம் பேசும் அனுபவங்கள், உபயோகிக்கும் வார்த்தைகள் concrete என்று சொல்லும் குணத்ததாக இருக்க வேண்டும். அது தான் உண்மை அனுபவத்தைச் சொல்லும், அதன் அருகில் நம்மை எடுத்துச் செல்லும் என்று சொல்லப்பட்டு, அது நம் Sensibility ஆக வளர்ந்து வந்துள்ளது. இத்தகைய மாற்றத்தின் காரணமாகத் தான் மரபுக்கவிதை வளர்த்து வந்த சொல்லாட்சியும், யாந்திரிக வெளியாற்றலும் புதுக்கவிதையின் வரவிற்கு வழிவகுத்தன”.

ve-saa-pictureபின்னர் பிகாசோவின் கலைப் பயணத்தில் ஏற்பட்ட துரிதமான பரிணாம மாற்றங்களுக்கு அவரது உடனிருந்த கவிஞர் ஈடுகொடுத்தது எப்படி என்பதை அலசும் அந்தக் கட்டுரை இறுதியில், “புதிய சோதனைகள் புரிந்து கொள்ளப் படாமல் இருக்கலாம். ஆனால் அவை ஒரு தளத்தில் உறவு கொள்கின்றன. Sensibility என்ற தளத்தில்… இந்த புரிதல் என்று முரண்படும் தளமும், கலை உணர்வு என்ற உறவுபடும் தளமும் உடன்படுதல் ஒரு விசித்திரமும், புதிரும் ஆன விஷயம்” என்று முடிகிறது. (”கலை உணர்வுகளும் எதிர்வினைகளும்”).

ஆனால் அது அங்கேயே முடிந்து விடுவதல்ல. இந்தப் புதிரின் மற்ற பரிமாணங்களை வேறு பல இடங்களில் தொடர்ந்து மேன்மேலும் விரித்துச் செல்கிறார் வெ.சா. மரபுக்கும் நவீனத்திற்கும் இடையே, அறிவியலுக்கும் கலைக்கும் இடையே, தொழில்நுட்பச் செயல்பாட்டிற்கும் உள்ளுணர்வு சார்ந்த செயல்பாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளிகள் எப்படி அக உணர்வில் தாக்கம் கொள்கின்றன என்பது பற்றியதாக அது இருக்கிறது. இத்தகைய இருமைகள் இன்னும் நுண்மையான தளத்தில் கூட நிகழலாம் –

“அது அங்கு இருக்கிறதா அல்லது ஒரு பிரமையா? கனவுக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை. யதார்த்தத்தின் பிரஸன்னம் அங்கு உள்ளது தான். அதே சமயம் அது ஒரு வெளியில், நாம் ஒரு வெளியில். இடையில் ஒரு வாயில். கண்ணில் படாத வாயில். நம் வீடுகளிலேயே வாயில் இரண்டு வேறுபட்ட காரியார்த்த இடங்களைப் பிரிக்கிறது. சமையலறைக்கும், கூடத்திற்கும் இடையே. கூட்த்திற்கும், இடைகழிக்கும் இடையே. இடைகழிக்கும் வாசலுக்கும் இடையே. இவ்வாயிலின் ஒருபுறத்தில் நடப்பது மறு புறத்தில் நடப்பது இல்லை. இதை Liminality என்பார்கள். இரு வேறு மனநிலைகளுக்கான இடைவெளி.” (டிஜிட்டல் சித்திரங்கள் – இருவேறு உலகங்களின் சங்கமம்).

ooooOOOOOoooo

போலிப் பாவனைகளையும், உள்ளார்ந்த வெளிப்பாடுகளையும் பிரித்தறியும் நுண்ணுணர்வு வெ.சாவின் எல்லா வகையான நிலைப்பாடுகளிலும் பிரதிபலிக்கிறது. அது ஒருபோதும் தவறுவதில்லை, பிசிறுபடுவதில்லை.

“நாஸ்திகமும், ஆஸ்திகமும் கலைக்கு விரோதமான நிலைப்பாடுகளோ, கருத்தோட்டமோ. மனநிலையோ அல்ல. நாஸ்திகமும் கலை படைக்கும், ஆஸ்திகமும் கலைபடைக்கும். இரண்டும் வெற்றுச் சடங்குகளாகவோ, வாய் உதிர்க்கும் அர்த்தம் இழந்த ஒலிகளாகவோ சீரழிந்துள்ளது நமது இன்றைய சோகம். ஆஸ்திகம் இருக்கும் கோவில்களைப் பராமரிக்க வேண்டுகிறது. ஆனால் அது வெறும் கட்டிடப் பராமரிப்பு. கலையின் பராமரிப்பு அல்ல. இப்படி பூஜை, புனஸ்காரங்களோடு வாழும் கோயில்கள் மேஸ்திரித் தனமான பராமரிப்புகளால், சடங்கார்த்தமான கும்பாபிஷேகங்களால் வாழ்ந்தும், அழிந்தும் வருகின்றன”. (”நேற்றைய பெருமையும், இன்றைய வறுமையும்” ).

ஆனால், வெ.சா சடங்குகளையும், பூஜைகளையும் வெறுப்பவரோ, அல்லது “பாமர” விஷயங்களாகப் பார்க்கும் மேட்டிமைவாதியோ அல்ல. சிற்பிகளும், தச்சர்களும், கொல்லர்களும், தெருக்கூத்துக் கலைஞர்களும் தங்கள் தொழில் நிமித்தமாகச் செய்யும் ஐதிக பூஜைகளையும், எப்படி கலை அவர்கள் அன்றாட வாழ்வின் அங்கமாகவே உள்ளது என்பது பற்றியும் மெய்சிலிர்ப்புடன் அவர் பதிவு செய்திருக்கிறார். கோயில் என்பதை ஒரு பழைய, இறந்த கால நினைவுச் சின்னமாக மட்டுமே பார்க்கும் மேற்கத்திய கலை ஆர்வலனது பார்வை போன்றது அல்ல அவருடையது. கோயில்களை வாழும் கலாசாரத்தின் அங்கமாகவே கண்டு உணர்ந்த ஒருவரது பார்வை. தனது குலதெய்வமான செல்வமாகாளி அம்மன் கோவிலைப் பற்றியும், அது எப்படிப் பல குடும்பங்களையும், தலைமுறைகளையும் இணைக்கும் பாலமாக உள்ளது என்பது பற்றியும் வெ.சா குறிப்பிடுகிறார் (நினைவின் தடத்தில் ..). கோயில் வழிபாடு பற்றிய ஒரு நூலுக்கு முன்னுரையாக, “கோயில் என்னும் அற்புதம்” என்ற கட்டுரையையும் எழுதியிருக்கிறார்.

அரசியல், சமூகம் சார்ந்த அவரது கருத்துக்கள் அனைத்துக்குமே ஒரு context உள்ளது. அதனால் எந்தக் கும்பலிலும் (clique) கூடாரத்திலும் (camp) அடங்காத குரலாக, ஒரு கலை, இலக்கியவாதியின் அறச்சீற்றத்தின் குரலாகவே அவரது குரல் உண்மையுடன் ஒலித்து வந்திருக்கிறது. இயக்கங்களுக்கு எதிரான தனிக் குரலாகவே அது எப்போதும் இருப்பதால், சமயங்களில் அளவு கடந்த ஆவேசத்துடன் இருக்கிறது.

இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் ஒரு உதாரணம். 2006ல் திண்ணை இதழில் ஒரு புத்தக விமர்சனத்தில் வெ.சா எழுதுகிறார் –

”உண்மை 7-ம் நூற்றாண்டு இறைவாக்கிலேயே சொல்லப்பட்டு விட்டது. அதன் பிறகு முற்றுப் புள்ளிதான்” என்று ஒரு குரல் மொராக்கோவிலிருந்து பிலிப்பைன்ஸின் தெற்குப்பகுதி வரை கேட்கப்பட்டால், என்ன செய்வது? இதை ஒப்புக்கொள்ளாதவர் எல்லாம் காஃபிர், அதற்கு அடுத்த நடவடிக்கை ஜெஹாத் தான் என்றால் என்ன செய்வது? இந்த காஃபிர்களை ஒழித்துக் கட்டினால், ஜன்னத்தில் மதுக்குடத்துடன் தேவகன்னிகைகள் சூழ்ந்துவிடுவார்கள் என்று நம்பினால் என்ன செய்வது? … அப்படி இருக்க செக்யூலரிசம் போதிக்கப்படும் ஒரு ஹிந்துவாகத் தற்செயலாகப் பிறந்துவிட்டவன் என்ன செய்வான்? …. முதலில் நீ ஒரு முஸல்மான். மற்ற அடையாளங்கள் எல்லாம் அதற்குப் பின்னர் தான்” என்று ஃபட்வா முல்லாக்களிடமிருந்து பிறந்தால் என் நண்பன், முஸ்லீமானவன் என்ன செய்வான்? ஸெக்யூலரிஸம் ஒரு புறம் அடைக்கப்பட்ட பாதையாகாதே!”

ஆப்கானிஸ்தானில் தாலிபானிய மதவெறியின் காரணமாக பாமியான் புத்தரின் சாந்தப் புன்னகை தகர்க்கப் படுவதைக் குறித்தும், தஸ்லிமா நஸ்ரின் என்ற படைப்பாளி இஸ்லாமிய மதவெறி சக்திகளால் ஒடுக்கப் படுவது குறித்தும் கனத்த இதயத்துடன் வெ.சா எழுதுகிறார். அதே சமயம், சித்திரம் வரைதல் மத அளவில் தடை செய்யப் பட்ட சூழலில் அராபிய, பெர்ஷிய மொழிகளின் எழுத்துக் கலை (calligraphy) மிக நேர்த்தியாக வளர்ந்துள்ளதையும், அந்தக் கலைஞர்கள் குரான் வாசகங்களை, அராபிய மொழி எழுத்துக்களை அழகிய வளைவுகளுடன் தீட்டுவதையும் பதிவு செய்திருக்கிறார். தோப்பில் முகமது மீரான் தனது “ஒரு கடலோர கிராமத்தின் கதை” என்ற முஸ்லிம் சமூகம் பற்றிய சுயவிமரிசனம் அடங்கிய நாவலை எழுதி அது ஒரு முஸ்லிம் பத்திரிகையில் வெளிவந்த போது எந்த வகையான வன்முறையும், எதிர்ப்பும் அந்த சமூகத்திலிருந்து வரவில்லை, இது போன்று தமிழகத்தில் வேறெந்த சாதியிலும் சாத்தியமா என்று சிலாகித்து எழுதுகிறார். அதற்குப் பிறகு மீரான் ஏன் ஒட்டுமொத்தமாக மௌனமாகி விட்டார் என்ற கேள்வியையும் எழுப்பத் தவறவில்லை.

அதே போன்று, அமெரிக்க வல்லரசு ஈராக் மீது நடத்திய அதர்மப் போரின்போது அந்த நாட்டின் ஏராளமான பழம்பெரும் கலை,கலாசாரச் சின்னங்கள் அழிந்து படுவது குறித்து வெ.சா பெரும் கோபமும் கவலையும் கொள்கிறார்.

“அமெரிக்கர்கள் நீண்ட நெடிய சரித்திரம் அற்றவர்கள்; ஒரு நாகரிகம், பண்பாட்டு வரலாறு என்று சொல்லிக் கொள்ளத் தகும் அளவுக்கு ஏதும் அற்றவர்கள்.. ஆக்டபஸ் தன் கால்களைப் பரப்பி, தன் ஆக்கிரமிப்பை நிலைநிறுத்துவது போல, தன் ஆக்கிரமிப்பின் வழியிலேயே தம்முடையது எதையும் – தரமற்றதைக் கூட – நிலைநிறுத்திக் கொள்ளும் குணத்தவர்கள் அமெரிக்கர்கள். எதிலும் அவர்களது பங்களிப்பு பிரம்மாண்டமே. பிரம்மாண்டமே ஒன்றின் பலத்தையும், குணத்தையும் நிரூபிப்பதாக ஸ்தாபித்து விடும் மரபு அவர்களது” (”கலைச் சின்ன்ங்களைத் தகர்க்கும் வெளி”).

என்று எழுதுகிறார். இதே வெ.சா தான் ஒரு காலத்தில் முற்போக்கு முகாம்களால் “அமெரிக்க ஏஜெண்ட்” என்று வசைபாடப் பட்டவர்!

வெங்கட் சாமிநாதன்

வெ.சாவின் எழுத்துக்களை வாசிக்கும் அனுபவம் அசாதாரணமானது. ஒரு சிறிய கட்டுரைக்குள் அரசியல் அங்கதம், சமூக விமர்சனம், வரலாற்றுக் கண்ணோட்டம், மின்னல்களாகத் தெறிக்கும் செறிந்த தகவல்கள், அனுபவங்கள் என்று பரந்து விரிந்து செல்லும் வெளி அது. பல கட்டுரைகள் தன்னளவில் அழகிய புனைகதைகள் அளிக்கும் சுவாரஸ்யத்தை அளிப்பவை. ”காட்டெருமையின் குளம்புகளுக்குள் சிக்கிய குழந்தை”, “ரூபத்திலிருந்து எழும் அரூபம்”, ”யானை மரமாகவே தங்கி விடுவதும், மரத்திலிருந்து யானை உயிர்த்தெழுவதும்” போன்ற சொற்கட்டுகள் படிமங்களாவே நம் மனதில் நிலைத்து விடுபவை.

இந்தக் கல்கி நாவல் யுகத்து ஜாம்பவானை, கணினி யுகத்தில் இணையத்தில் திண்ணை, சிஃபி. போன்ற தளங்கள் வழியாகவே நான் அறிந்து கொண்டேன். பிறகு அவரது நூல்களைத் தேடிச் சென்று வாசித்தேன். வெ.சாவின் படைப்புக்கள் இணையம் மூலம் முற்றிலும் புதிய வாசகர்களைக் கூடத் தன் பக்கம் இழுக்கும் தகைமை கொண்டதாக இருக்கின்றன என்பது வியப்புக்குரிய விஷயம் அல்ல. சத்தியத் தேடல் கொண்ட ஒரு கலை ரசிகனை, இலக்கிய வாசகனை எல்லாக் காலகட்டங்களிலும் அவரது விமர்சனங்களும், பார்வைகளும் ஈர்த்திருக்கின்றன. சொல்லப் போனால், சுண்டி இழுத்திருக்கின்றன.

வெ.சா நம் காலகட்டத்தில் தமிழுக்கு வாய்த்த்து, நமது பாக்கியம், தமிழுலகின் பாக்கியம்.

இந்தக் கட்டுரை 30-ஏப்ரல்-2011 அன்று சென்னையில் வெளியிடப்பட இருக்கும் வெ.சா: விமர்சனங்களும் விவாதங்களும் புத்தகத்தில் இடம் பெறுகிறது. வெளியீட்டு விழா பற்றிய விவரங்கள் இங்கே.

வெ.சா: விமர்சனங்களும் விவாதங்களும் – அரை நூற்றாண்டு எழுத்து இயக்கம்
(கலை, இலக்கிய ஆளுமைகள், ஆர்வலர்கள் எழுதிய 43 கட்டுரைகள்)
தொகுப்பு: பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி

வெளியிடுவோர்:
சந்தியா பதிப்பகம்
பு. எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044-24896979
https://sandhyapublications.com/

பக்கங்கள்: 504
விலை: ரூ. 300

வெ.சா பற்றி தமிழ் விக்கிபீடியா பக்கம் இங்கே.

6 Replies to “வெ.சா என்னும் சத்திய தரிசி”

 1. பொதுவாக எனக்குத் தெரிந்த நிறையபேர், வெ.சா. வயதொத்தவர்கள் தி ஹிண்டு பத்திரிக்கை முழுவதையும் காலையில் படித்து அப்படியே நம்புவது , யதார்த்தமில்லாத பாலச்சந்தர் படம் பார்த்து சிலிர்ப்பது, சங்கீதம் கேட்பது, காபி குடித்து என்று தாங்கள் கிட்டத்தட்ட வீடுபேரே அடைந்துவிட்டதை போல் நினைத்து கனவில் மிதந்து கொண்டு இருப்பார்கள்.

  வெ.சா. மட்டும் வாலிபத்திலேயே இந்தக் கனவில் இருந்து விடுபட்டு புதிய கோணத்துடன் பார்க்க ஆரம்பித்துள்ளார்.. அவர் சென்ற வழி தனி வழி.. அவரும் கண்ணை மூடிக்கொண்டே இருந்திருந்தால் நாமும் பாலச்சந்தரையும், கமலஹாசனையும் வழிபட்டுகொண்டிருக்கும் பாமரத்தனத்திற்கு ஆளாகி இருப்போம்..

  நமக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் அவருக்கு நன்றி.

 2. அன்பு நண்பர்களுக்கு

  வணக்கம்.

  பெரியவர் வெங்கட் சாமிநாதனுக்கு விழா எடுப்பதும் அவர் குறித்து புத்தகம் வெளிவருவதும், தமிழகம் புத்துணர்வு பெற்று வருவதன் அறிகுறியாகவே தெரிகிறது. ஒருபுறம், ஜெயமோகனின் ஆற்றல் மிகுந்த தலைமையில் சத்தமின்றி இலக்கிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதும் கண்கூடாகத் தெரிகிறது. இடதுசாரி பார்வை, திராவிட பார்வைகளிலிருந்து தமிழ் மீண்டு வருவதன் அறிகுறிகள் இவை. ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்ற நண்பர்கள் இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் இருப்பது பெருமை அளிக்கிறது.

  காலமும் சிந்தனையும் மாறிக்கொண்டே இருப்பவை. இதே தமிழகத்தில் சங்க இலக்கிய பிரவாகம் பாய்ந்திருக்கிறது; காவியங்களின் ஆளுமைகளால் மக்கள் தங்களை மறந்திருக்கிறார்கள்; பக்தி இலக்கிய அருவி கொட்டி இருக்கிறது; இலக்கணம் கூட இலக்கிய வடிவிலேயே படைக்கப்பட்ட சிறப்பும் இங்கு நிகழ்ந்திருக்கிறது. நீதிநூல்களும் சிற்றிலக்கியங்களும் சமுதாயத்தை வளப்படுத்தி இருக்கின்றன. இங்கு கூறப்படுபவை அனைத்துமே, காலவெளியில் நிலைபெற்ற பேறுடையவை. அவை நிலைபெறக் காரணம், அவற்றின் உள்ளார்ந்த இலக்கியத் தன்மையும் அவற்றில் இழையூடு பாவாய் அமைந்த சமுதாய உணர்வும் தான்.

  சமுதாயத்திற்கு நன்மை விளைவிப்பதற்காக நிகழ்த்தப்படும் எந்தக் கலையும் இலக்கியமும் காலங்களை வென்று வாழும். ஏனெனில், அவற்றின் பிறப்பில் அறமும் நீதியும் நிலவும். அதனால் தான் நமது முற்கால இலக்கியகர்த்தர்கள் ரிஷிகளாக வணங்கப்படுகிறார்கள். ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்; குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புண்டோ?; நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!’- என்றெல்லாம் நமது முந்தைய படைப்பாளிகள் கர்வம் தெறிக்க முழங்கியதன் பின்னணியில் அவர்களது தன்னல மறுப்பும் சமுதாயம் குறித்த சிந்தனை வீச்சும் இருந்தன. அதே பாவனையின் தொடர்ச்சியாகவே பெரியவர் வெங்கட் சாமிநாதனைக் காண வேண்டும்.

  எந்த ஒரு மொழியும் பல வளர்ச்சிநிலைகளையும் சில தேக்கங்களையும் சந்திப்பது இயற்கை. ஏனெனில் மொழியும் சமுதாயமும் இணை பிரியாதவை. சமுதாய வீழ்ச்சியின்போது மொழியின் சரிவும் தடுக்கப்பட முடியாதாது. ஆயினும், சமுதாயம் மறுமலர்ச்சி அடையும்போது மொழி புத்தெழுச்சி கொள்ளும். கடந்த நூற்றாண்டில் தமிழ் மொழியில் ஏற்பட்ட மாற்றங்களில் சமூக மாற்றங்களும் பின்னிப் பிணைந்துள்ளன. உரைநடை இலக்கியம், புதின இலக்கியம், நாடக இலக்கியம், விமர்சன இலக்கியம், என மொழியின் கலை வடிவங்கள் பல்கிப் பெருகின. மொழிபெயர்ப்பிலும் உலகளாவிய சிந்தனைப் போக்குகளுடன் தமிழ் கைகோர்த்தது. அதே சமயம், சமுதாயத்தின் அரசியல் வீழ்ச்சி இலக்கிய சீரழிவுக்கு வித்திட்டது. அந்தக் கறையைப் போக்கும் தருணம் தற்போது துவங்கிவிட்டது.

  எதையும் சுயநலத்துடன் கூடிய விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகும் மோசமான வழக்கம் தமிழ் இலக்கிய அரங்கில் அரசியல் தலையீட்டால் நிகழ்ந்துள்ளது (இதே போக்கு பிற இந்திய மொழிகளிலும் ஏற்பட்டிருப்பதாகவே கூற முடியும்). இந்த விமர்சன உலகில் நாட்டை கூறுபோடும் சதியாளர்களின் கையூட்டுத் தொடர்புகளும் உண்டு. இத்தகைய நிலையில், ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வார்த்தையில் தெளிவுண்டாகும்’ என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கு ஏற்ப, பாரம்பரியம், நாட்டுநலன், சமுதாய உணர்வுடன் சிறு கலகக் குரல் கேட்டாலும் அதுவே சமுதாயத்தின் குரலாகும். அதிகார பலம், பணபலம், சித்தாந்த பலத்தால் சமுதாயத்தின் தீனமான குரலை அடக்கிவிட முடியாது. வெங்கட் சாமிநாதனுக்கு எடுக்கப்படும் பாராட்டுவிழா, சத்தியத்தின் மனசாட்சிக்கு எடுக்கப்படும் விழா.

  விதைகளை மண்ணில் புதைத்துவைத்து விட்டால், அந்த விதைகளின் பாரம்பரியத்தை அழித்துவிடலாம் என்று கனவு காணும் ஆதிக்கவாதிகள் தான் இப்போதைய இலக்கிய உலகில் முன்னணியில் தெரிகிறார்கள். மண்ணில் விதைகளைப் புதைக்க முடியாது- விதைக்கவே முடியும் என்பது வெங்கட் சாமிநாதன் போன்றவர்களின் இருப்பால்தான் வெளிப்படுகிறது. எந்த சார்பும் அற்றவர் என்பதே வெ.சா.வின் பலம். அவரது அணியில் இளைய தலைமுறை அணிவகுக்கத் துவங்கி இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இப்பணியில் இணைந்துள்ள ‘தமிழ் ஹிந்து’வுக்கு மனமார்ந்த நன்றி.

  -சேக்கிழான்

 3. //ஒருபுறம், ஜெயமோகனின் ஆற்றல் மிகுந்த தலைமையில் சத்தமின்றி இலக்கிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதும் கண்கூடாகத் தெரிகிறது. – சேக்கிழான்//

  ஹா..ஹா..ஹா. சேக்கிழான் அவர்களே. உங்களுடைய நகைச்சுவை உணர்வு மிகவும் கூர்மையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *