தொடர்ச்சி…
திலீப்: தமிழ் நாடகத்துக்கும் தெருக்கூத்துக்கும் இருக்கிற ஒரு தொடர்பை, நீங்கள் தெருக்கூத்திலிருந்து நாடகம் inspire ஆகணும்ங்கற சிந்தனையை உருவாக்கின மாதிரி . இலங்கையில் அது மாதிரி, தெருக்கூத்து தான் தமிழர்களுடைய ஆதாரமான தியேட்டர் என்று இலங்கையில் நமக்கு முன்னேயே உணர்ந்தார்களா இல்லை நீங்க வந்து இதைப் பத்தி சொல்ல ஆரம்பித்த பிறகு தானா? அது மாதிரி நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
வெ.சா: அப்படி இல்லை. அங்கே இலங்கையிலே வடமோடி, தென்மோடின்னு எல்லாம் பல வடிவங்கள் இருக்கு. வடமோடி என்றால் வடக்கே புழங்குகிற ஒண்ணு, தென் மோடின்னா, தெற்கே புழங்குகிற ஒண்ணுங்கற அர்த்தம் இல்லே. ஒரு வடிவத்துக்கு பேர் வடமோடி. அது தெற்கேயும் இருக்கலாம். தென்மோடி அது வடக்கேயும் இருக்கலாம். எனக்கு இலங்கை தெரியாது. நான் போனதில்லை. அந்த நாடகங்களை நான் பார்த்ததும் இல்லை. மௌனகுரு முதல்லே அவருடைய புத்தகங்களைக் கொடுத்து அனுப்பியிருந்தார். அதைப் படித்து பார்த்திருக்கிறேன். புத்தகங்களைப் படித்து ஒரு நாடகத்தின் வடிவத்தையும் அது கொடுக்கக் கூடிய அனுபவத்தையும் ரசனையையும் நாம் புரிந்து கொள்ள முடியாது. ஏதோ விவரங்கள் தெரியலாம். பின்னாலே மௌனகுரு இரண்டு மூன்று (காஸெட்டுகளை) குறுந்தகடுகளைக் கொடுத்து அனுப்பியிருந்தார்.
அப்புறம் அவர் இங்கே வீட்டுக்கே வந்திருந்தார். ரொம்ப அருமையாக பழகுகிறவர். அவரே என் முன்னாலே வீட்டிலே ஆடியும் காண்பித்தார். எனக்கு மிகவும் மனசுக்கு கஷ்டமாக இருந்தது. அதாவது பாரம்பரிய வடிவம் என்னவோ அதைத் திரும்பச் செய்கிறார். அவர் அந்த வடிவத்தை உயிர்ப்பிக்கிறார் என்பதைத் தவிர அவரது பங்களிப்பு என்று எதுவும் அவர் அதில் சேர்க்கவில்லை என்று தான் எனக்குப் பட்டது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது மனதுக்கு. அதைப் பற்றி நான் எதுவும் எழுதவில்லை. இரண்டு மூன்று தடவைகள் அவர் என்னைச் சென்னையில் சந்தித்து இருக்கிறார். கடிதங்களும் எழுதியிருக்கிறார். காஸெட்ஸ் அனுப்பியிருக்கிறார். நல்ல மனிதர். பண்புள்ள மனிதர். அவரைப் புண்படுத்த எனக்கு மனதில்லை. என்னுடைய உரிமை, சுதந்திரம் இல்லையா? நான் எழுதியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். ஆனால் ஒன்று. அவர் என்னை எழுது என்றும் சொன்னதில்லை. ஏன் எழுதலைன்னு கேட்டதும் இல்லை. அந்த நண்பரை சந்தோஷப்படுத்தத்தான் நானும் விரும்பியிருப்பேன். ஆனால், நான் என்ன மனதில் நினைக்கிறேனோ அதற்கு எதிராக என்னால் எழுத முடியாது.
ராஜேந்திரன்: எதிராக எழுத வேண்டாம். ஆனால் புண்படுவார் என்று நினைத்துக்கொண்டு எழுதாமல் விட்டது சரியாய் இருக்கிறதா? உங்களுக்குத் தெரிந்தவர் என்பதால் அப்படி ஒரு சலுகையா?
வெ.சா. இல்லை. சலுகை ஒன்றுமில்லை. நான் இன்னொரு இடத்தில் கூடச் சொன்னேன். எழுத விரும்பவில்லை. அதற்குக் காரணம், அதை நீங்கள் கேள்வி எழுப்பலாம். என்னால் அதற்குப் பதில் சொல்ல முடியாது. நான் எழுத மாட்டேன். ஏதோ ஒரு மரியாதைன்னு சொல்லுங்க. சுயதர்மம்னும் சொல்லுங்க. ஆனால் ஒருவேளை அவர் ஒரு வீம்பு பிடிச்ச மனுஷனா இருந்திருந்தா, தான் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதாக தலைவீங்கி உலா வருகிற மனுஷனா இருந்தா, ஒரு வேளை எழுதியிருப்பேன். அப்படி இல்லை. அப்படி ஒண்ணும் பெரிய force ஆகிவிட்டோம்னு நினைக்கிற மனிதரும் இல்லை. அப்படியான தோற்றத்தையும் உருவாக்கவில்லை. ராஜநடை போடு உலா வருகிறவர் இல்லை. சாதாரணமாக இருந்தார். பின் எதற்காக அவரைப் போட்டு சாடவேண்டும்.?
ராஜேந்திரன்: அப்படியென்றால், கலை இலக்கிய வளர்ச்சிக்கு இது தடையாக இருக்குமென்று நீங்கள் நினைத்தால், என்ன வென்றாலும் பரவாயில்லை, எழுதிடலாம் என்று நினைப் பீர்கள் இல்லையா?
வெ.சா: அவர் தனக்கு ஒரு பிம்பம் தானே உருவாக்கிக்கொண்டு ஒரு மிதப்பு இருந்தால் அதைத் தாக்கலாம்.
ராஜேந்திரன்: யாரும் ஒரு பிம்பம் உருவாக்கிக் கொள்வதை நீங்கள் விரும்பவில்லை.
வெ.சா: அந்த பிம்பம் தவறானதாக இருந்தால். ஆனால் அப்படி இல்லை. நல்ல பிம்பம் உருவானால் உருவாகட்டுமே… அது நமக்கு சம்மதமாக இருந்தால், அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்தால், அதிலிருந்து நாம் வளர்ந்தால், இருக்கட்டுமே. அதைப் பார்த்து நாம் வளர்ந்தால், நம்மைப் பார்த்து அது வளர்ந்தால், இப்படி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளலில் ஒரு புதிய சிந்தனை, ஒரு புதிய வடிவம், உருவானால் அது நல்லது தானே. அதில்லாது, ஒரு கெடுதல் விளைவைக் கொணர்தலாக இருந்தாலும் …. ஏன், அகிலனைப் பற்றி எவ்வளவோ எழுதியிருக்கோம். அகிலனைப் போல இப்போ எத்தனையோ சோட்டா அகிலன்கள் இருக்காங்க. அவங்களைப் பற்றி யாரும் ஏதும் எழுதுவதில்லை. அவர்களை அலட்சியம் செய்து விடுகிறோம். யாரோ இரண்டு பேர் சேர்ந்து எழுதுகிறார்களாம். சுப்ரஜாவோ சுபாவோ. எழுதிவிட்டுப் போகட்டுமே. அவர்களையெல்லாம் போட்டு யாராவது சம்மட்டியால் அடித்துக்கொண்டிருப்பார்களா?
சிவாஜி கணேசனைப் பற்றி எழுதும்போது நமக்கு சிலது சொல்லணும்போல இருக்கு. மற்றபடி ஏகப்பட்ட பேர்கள் இருக்காங்க. இப்ப உதாரணத்துக்கு சொல்லப் போனா
குரல்: ரஜனி காந்த்?
வெ. சா: ரஜனிகாந்த் பற்றியெல்லாம் பேசவேண்டிய அவசியமே இல்லை….
குரல்: கமலஹாஸன்?
வெ.சா. இல்லை.. டி. ராஜேந்திரன் பையன், சிம்பு என்னும் சிலம்பரசன். ரஜனி காந்த் மாதிரி ஸ்டைல் எல்லாம் செய்யற ஆள் சிவாஜி கணேசன் மாதிரி தன்னை நினைத்துக்கொள்வது வேறே. என்னமோ உலகத்துப் பெண்கள் எல்லாம்… சரி சந்தோஷமாக இருக்கட்டும். அதைப் பத்தி ஒண்ணுமில்லை. ஆனால் சிவாஜி கணேசன் மாதிரி ஒரு பெரும் பிம்பமாக உருவானால் அப்போது எழுத வேண்டி வரும்.
சரி. எழுதி என்ன ஆகப் போகிறது? என்ன செய்துவிடுவாய்? அதைத் தடுத்து விடுவாயா? என்று கேட்டால், இந்த கேள்வி நியாயமான கேள்விதான்., ஒன்றும் செய்துவிட முடியாது என்று தான் சொல்லவேண்டும். ஆனால் எதுவும் சாதித்து விட முடியும் என்று எண்ணி எழுதுவதில்லை. இது சரியில்லை, இது எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் எழுத வேண்டும், எழுதுகிறேன், என்பது தான் பதில். இந்த எழுத்து எதையும் சாதித்து விடும் என்பதனால் அல்ல. இது வரைக்கும் எது எழுதியும், எவ்வளவு எழுதியும் ஒன்றுமே சாதிக்க முடியவில்லை. முடிந்ததில்லை. நான் சொல்கிறேன். என்றால், நான்கு பேர் கேக்கறாங்க. சென்னையில் நாலுபேர். தில்லியில் இரண்டு பேர். மதுரையில், நாகர் கோயிலில், டோரண்டோவில், யாழ்ப்பாணத்தில் ஒன்றிரண்டு. இப்படி இன்னும் ஒன்றிரண்டு ஊர்களில் இன்னும் நாலைஞ்சு தேறலாம். இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?
திலீப்: தியேட்டரைப் பத்தி கடைசியா ஒரு கேள்வி கேட்டு விடுகிறேன். தெருக்கூத்தின் தாக்கம் தமிழ் தியேட்டருக்கு வரவேண்டும் என்று முத்துசாமியை inspire பண்ணினீங்கன்னு அவரே எழுதியிருக்கார். அதில் அவர்களுடைய performance எவ்வளவு தூரம் வெற்றிகரமாக வந்திருக்குன்னு நீங்க கருதுகிறீங்க..
வெ.சா: ஒன்று அந்த தெருக்கூத்து, அந்த பாரம்பரிய வடிவம் எனக்கு பிடித்திருந்தது. அதை நாம் அடையாளம் காண வேண்டும். அதை நம்ம தியேட்டர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். கதகளி மாதிரி அது நம் பாரம்பரிய சொத்து என்ற உணர்வு நமக்கு வரவேண்டும் கதகளியை அவங்க பிரபலம் ஆக்கிய மாதிரி நாம் இதைச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். எங்கிருந்தோ ஒரு சுரேஷ் அவஸ்தி (அந்நாளைய சங்கீத் நாடக் அகாடமி பொறுப்பாளர்) யாரோ இரண்டு பேரை எனக்கு முன்னாலே கொண்டு வந்து நிறுத்துகிறார். அதைப் பத்தி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றுமே இல்லாமல் வெறும் மேடையில் மகாபாரத யுத்தத்தையே நமக்கு முன்னாலே கொண்டு வந்து காண்பிச்சுடறாங்க. அந்த உணர்வை நமக்கு ஏற்படுத்திடறாங்க. இரண்டே இரண்டு பேர். பீட்டர் ப்ரூக் சொன்ன மாதிரி, I need only an empty space and a man standing there on it to create theatre. ஒரு Empty space அப்புறம் அங்கே நிக்க ஒருத்தன் போதும். அது மாதிரி இந்த இரண்டு பேர் பண்ணினது தியேட்டர் என்று சொன்னேன். எழுதினேன். சரி. அதை முத்துசாமி படித்திருக்கிறார். அது வரைக்கும் அது சரி. அதுக்கப்புறம் கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்தை சென்னையிலே பாத்திருக்கார். அவர் ஒரு பெரிய கலைஞர் என்று தெரிகிறது. அது தியேட்டர் அதுவும் சரி. ஆனால் அதை இப்போ இங்கே இன்றைய நாடகம்னு கொண்டுவரணும்னு எங்கே சொல்லியிருக்கேன்? அப்படி நான் சொல்லவே இல்லையே.
திலீப்: இப்போ ஆறுமுகத்தை ஏன் நாம படிக்க வச்சோம்? நீங்க யோசிச்சு பாருங்க. ஆறுமுகம் இப்போ இந்த புத்தகத்திலே (வாதங்கள் விவாதங்கள்) கட்டுரை எழுதியிருக்கார். ஆறுமுகத்தை சங்கரப் பிள்ளையிடம் அனுப்பினோம். ராமானுஜத்தின் கீழே அவர் படிக்க வேண்டும் அவர் கூத்து பரம்பரையிலே வந்தவர் நவீன நாடகத்துக்கும் கூத்துக்கும் இடையே ஒரு தொடர்ச்சி ஏற்படவேண்டும். அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆளைத் தான் நாம் தேர்ந்தெடுக்கணும்னு நினைச்சோம். இது மாதிரியான நடவடிக்கையினாலே, இப்ப வந்து இப்போ இருக்கக்கூடிய theatre performance -லே இந்த fusion (இணைப்பு) ஏதாவது நடந்திருக்கிறது என்று யோசித்திருக் கிறீர்களா?
வெ.சா: இது Fusion –ஆகவே இல்லையே? இப்போ ஆறுமுகம் ஒரு தியேட்டர் பண்ண ஆரம்பித்திருக்கிறார். அங்கு போய் கற்றுக் கொண்டு வந்திருக்கிறார். அங்கே என்ன படித்தார் என்று எனக்குத் தெரியாது. சங்கரப் பிள்ளையை பற்றி எனக்கு ஒண்ணும் அதிகமான அபிப்ராயம் கிடையாது. அங்கு ஒரு நாடகப் பள்ளிக்கூடம் இருக்கிறது. அங்கு போய் படித்திருக்கிறார். அதெல்லாம் சரி. ஆனால் ஆறுமுகம் பண்ணும் நாடகத்துக்கும் இந்த பாரம்பரிய கூத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே. அது எப்படி அதிலேயிருந்து இதைக் கொண்டு வந்து…… இதில் fusion எங்கிருந்து வந்தது?
திலீப்: இல்லை. இதிலிருந்து தான் நாம் inspire ஆகணும்னு ஒரு நிலைமை இருக்கா?
வெ..சா. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.
திலீப்: உங்களுடைய கட்டுரையைப் படித்துவிட்டு அவர் சொல்கிறார் முத்துசாமி என்ன நினைக்கிறார் என்றால், நம்முடைய பாரம்பரிய கலை தெருக்கூத்து…….
வெ.சா: நான் எங்கு சொல்லியிருக்கிறேன்.? நாம் அதிலிருந்து inspiration பெறவேண்டும் என்று? அப்படி அவர் சொன்னால்….? நான் சொல்லவில்லை.
திலீப்: நீங்கள் நேரிடையாக சொல்லாமல் இருந்திருக்கலாம். இன்றைக்கு உங்கள் புத்தகத்தைப் படித்து அவர் புரிந்து கொள்கிறார்.
வெ.சா: இது கஷ்டமய்யா.
திலீப்: இப்ப நீங்க தெருக்கூத்தைப் போய் பார் என்று அவருக்கு சொல்றீங்க.
வெ.சா. நான் தெருக்கூத்தைப் போய் பார் என்று சொல்ல வில்லை. நான் பார்த்த தெருக்கூத்தைப் பற்றி எழுதினேன்
திலீப்: அது தான். அவர் படிச்சுட்டு அதைப் பார்க்கப் போறார். அவர் என்ன சொல்றாருன்னா, இது தான் முக்கியமானது என்கிறார்.
வெ.சா. அப்படிச் சொல்வது அவருடைய உரிமை,, தீர்மானம். அவருடைய தியேட்டர் அது. அதற்கு நான் பொறுப்பு அல்ல.
திலீப்: சரி. பார்வையாளராக நீங்க சொல்லுங்க. அவர் சொன்னது reflect ஆகியிருக்கா?.
வெ.சா: Reflect ஆகியிருக்காங்கறது இல்லை. ஆறுமுகம் அங்கு போய் படித்து விட்டு வந்திருக்கார். ஆனால் அவர் செய்கிற தியேட்டர் அது இல்லை. ஆனால் முத்துசாமி போய் பார்த்துவிட்டு வந்திருக்கார். அதைக் காப்பி பண்ணனும்னு நினைக்கிறார்.. அது தியேட்டரே இல்லை. அது தெருக்கூத்தும் இல்லை. இது ஒரு வகையான கோணங்கி ஆட்டம். காக்காவலிப்பு வந்தவன் கையைக் காலை உதறுகிற மாதிரி உதறாங்க. அதை நான் தியேட்டராக ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
அதிகம் சொல்லக்கூடியது, அவர் தான் பார்த்த தெருக்கூத்திலிருந்து ஒரு புது தியேட்டரை உருவாக்கும் முயற்சி என்று வேணுமானால் சொல்லலாம். ஆனால் நான் அதைப் பார்க்கிற போது எனக்கு convincing ஆக இருக்கணும். நான் அங்கிருந்து எடுத்தேன். இங்கிருந்து எடுத்தேன் என்று சொல்லி பயனில்லை. நான் ஒரு புது மொழியை சிருஷ்டிக்கிறேன் என்று சொல்வதாக இருந்தால், அது எனக்கு புரியாத மொழியானாலும் அது என்னை இருந்த இடத்திலே உட்கார வைக்கணும். இந்த மொழி புதுசா இருக்கு, இது ஏதோ சொல்ல வருது, என்னன்னு நான் புரிந்து கொள்ளணும்னு அது எனக்கு அதன் மேடை பாஷையில் உணர்த்தணும். மேடையில் இருக்கிறவனுடைய அசைவுகள், அவன் பேசுகிறது எனக்கு இது ஒரு மொழி என்று convince செய்வதாக இருக்கணும். அந்த மாதிரி ஒரு புது மொழியை அவர்கள் உண்டாக்கியிருக்கணும். அவ்வாறு செய்யவில்லை. சும்மா தக்கா தையான்னு குதிக்கிறாங்க. எனக்கு வேடிக்கையாக இருக்கு. எதுக்கு இதெல்லாம் செய்யறாங்கன்னு.. நீங்கள் கதகளி பார்த்திருக்கிறீர்கள். அந்த அபிநயமும் முத்திரை களும் நமக்கு பழக்கமே இல்லை. இருந்தாலும் அங்கே போய் உட்கார்ந்தால் அது நம்மைக் கவர்கிறதில்லையா? இதுக்கு என்ன அர்த்தம்?, இது எதற்காக என்று நாம் அதில் கவரப்பட்டி ருக்கும்போதே நம்மைக் கேட்டுக்கொள்கிறோம். எனக்கு இங்கே இவங்க பண்ற கூத்திலே அந்த மாதிரி உணர்வே இல்லை. எரிச்சல் வந்து உடனே அந்த இடத்தை விட்டு ஓடத் தான் தோன்றது.
திலீப்: சரி, ராஜேந்திரன், நீங்கள் வந்து சிற்பங்கள் இன்னும் மற்றதைப் பற்றிக் கேளுங்கள். இந்த நாடகத்தைப் பற்றி இரண்டு கேள்வி. எதற்காக என்றால், நாடகம், தெருக்கூத்து இத்தோடு எல்லாம் , ஆரம்ப காலத்திலிருந்தே இவருடைய உந்துதலில் நிறைய விஷயங்களைச் செய்தார்கள். மற்றபடி பழசப் பற்றி ஏதாவது கேட்கணுமானால் கேளுங்கள்;
வெ. சா. பழசுன்னா எனக்கு எதுவுமே தெரியாது. நான் புலவன் இல்லை.
திலீப்: சாமிநாதன் ஒரு குறிப்பிட்ட எக்கச்சக்கமான விஷயங்களைப் பற்றி சொல்லி இருப்பதினாலே………….
வெ..சா: அதனாலே இந்த ஆளைப் போட்டு நல்லா வாட்டுங்க.
திலீப்: இல்லை சாமிநாதன்…..
வெ.சா: நான் தான் சொல்லீட்டேனே. எனக்கு எது எதெல்லாம் என் கண் முன்னாலே வந்ததோ, அது எனக்குப் பிடித்திருந்தது என்றால், அதை அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவத்தைப் வைத்து சொல்றேன். Not that I know the grammar of it. Or that I have studied them all and I have explained how and why of my writings.. என்னுடைய அனுபவத்தைச் சொல்லி வந்திருக்கிறேன். அப்படித்தான் எல்லாமே எழுதியிருக்கிறேன். அது யாருமே செய்யக்கூடியது தான் என்றும் சொல்லியிருக்கிறேன்.
திலீப்: செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும். ஆனால் செய்யவில்லை. அப்படித்தானே சொல்கிறீர்கள்.
[அளவளாவல் தொடரும்…]
வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.
அருமையான உரையாடல். ஒரு கலை விமர்சகராக வெ.சா அவர்களின் பணி மகத்தானது. அவரது நேரடியான பேச்சும், உண்மையை உறுதிபடக் கூறுவதும் இன்றைக்கு தமிழ் நாட்டில் வழக்கொழிந்து போய்விட்ட பண்புகள்.
அவரைப் போன்ற ஒருவர் இனி தமிழ்ச் சூழலில் உருவாக முடியும் என்று தோன்றவில்லை. வெ.சா அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.