ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்

[பெருமிதமிக்க இந்துப் பண்டிகையான ஆயுத பூசையை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தொடர்ந்து இழிவுபடுத்தி வருவது குறித்து விமர்சித்து ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்! என்ற கட்டுரையை தினமணியில் (10-அக்,2011) பால.கௌதமன் எழுதினார்.  இக்கட்டுரை ஆயுதபூசை தமிழர்கள் பண்டை நாள் முதல் கொண்டாடி வரும் பாரம்பரியத் திருவிழாவே  என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறது.

நான்கு நாட்கள் கழித்து அதற்கு எதிர்வினையாக க.நெடுஞ்செழியன் எழுதிய தவறைத் துணைக் கோடல்! என்ற கட்டுரை தினமணியில் (14-அக்,2011) வெளிவந்தது.

அந்தக் கட்டுரையின் தவறுகளை விமர்சித்து, இன்னொரு கட்டுரையை பால.கௌதமன் தினமணிக்கு அனுப்பினார். அந்தக் கட்டுரையில் உள்ள தரவுகள் குறித்து கல்வெட்டு ஆய்வறிஞர் எஸ்.ராமச்சந்திரன் அவர்களுடன் ஆலோசித்த பின்பே அவற்றை கௌதமன் முன்வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் ஆதாரபூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த அந்தக் கட்டுரையை பல வாரங்களாகியும் தினமணி வெளியிட மறுத்து விட்டது. அந்தக் கட்டுரையே இது.]

தவற்றைத் துணைக் கோடல் என்று மறுப்புக் கட்டுரைக்குத் தலைப்பு வைத்திருந்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருப்பேன் ஆனால் தவறைத் துணைக் கோடல் என்று தலைப்பிலேயே இலக்கணப் பிழை ! இக் கட்டுரைக்கு மறுப்பு எழுதும் அளவுக்கு நாற்பது ஆண்டு காலத் திராவிட ஆட்சி வழி வகுத்து விட்டதே என்று எண்ணும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது . கட்டுரையாளர் கருத்துப்படி அரைகுறையாகத் தமிழ் படித்தவன் நான். தவறுகளை தக்க சான்றுகளோடு , சுட்டிக் காட்டியிருந்தால் ஏற்பதில் எந்த தடையும் இல்லை. ஆயுத பூசை என்ற அடிப்படையே தமிழனுக்கு இல்லை என்பதை நிறுவ வேண்டும் என்பதற்காக இலக்கியங்களும் , இலக்கணங்களும் சொல்லும் செய்திகளை மறுதலித்தும், திரித்தும் தவறான விளக்கங்களைச் செய்யுள்களுக்கும் செய்திகளுக்கும் அளித்து எழுதுவது மற்றும் பேசுவது கடந்த 45 ஆண்டு கால திராவிட இயக்கங்களின் மரபு. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, கட்டுரையாளரின் திரிபு வாதம் ஆச்சரியப்படத்தக்கதன்று ! இது போன்ற திரித்துக் கூறுதல் தமிழ் மரபுக்கும் ஆய்வு மனப்பான்மைக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்பதில் ஐயம் இல்லை.

மாணார்ச் சுட்டிய வாள் மங்கலம் – பகைவரைக் குறித்த வாள் வென்றியாற் பசிப்பிணி தீர்த்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் வாண்மங்கலமும்- நச்சினார்க்கினியர் உரை (தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம், பகுதி 1, தமிழ் மண் பதிப்பகம் – பக்கம் – 420).

இந்தப் பாடலில் மாணார் என்ற சொல்லுக்குப் பகைவர் என்று பொருள் கூறும் நச்சினார்க்கினியர் உரையை மறுக்கவில்லை. இந்த பாடலின் மையக் கருத்து, பகைவரை வாளால் வென்று, கொற்றவையின் பேய்ச் சுற்றமும் பிறரும் வாளை வாழ்த்தும் வாள்மங்கலம், அதாவது ஆயுதத்தை வாழ்த்திச் செய்யப்படும் சிறப்புச் சடங்கு . இதைக் கட்டுரையாளரும் ஒப்புக்கொண்டுள்ளார். மங்கலம் என்ற சொல்லுக்கு வழிபாடு குறித்த சுபச் சடங்கு என்ற பொருளும் உண்டு. இதற்கொத்த பொருளில் சிறப்பு என்ற சொல்லை வள்ளுவரும் கையாள்கிறார். சிறப்பொடு பூசனை ...(குறள் 18). சிலப்பதிகாரம் புகார்க் காண்டத்தில் முதல் காதை, மங்கல வாழ்த்துப் பாடல். மங்கலம் என்பதற்க்குச் சிறப்பான தருணம் என்று பொருள் கொண்டால் தான், இந்தத் தலைப்புக்குப் பொருத்தமாக அமையும். கட்டுரையாளர் பொருள் கொள்வதுபோல் மங்கலம் என்பதற்கு வாழ்த்துப் பாடல் என்று பொருள் கொண்டால் வாழ்த்திப் பாடும் வாழ்த்துப் பாட்டு என்று அபத்தமான பொருள் வரும்.

”ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்” என்ற கட்டுரையில் பலவாறாக உரையாசிரியர்கள் பொருள் கொள்கிறார்கள் என்று தான் குறிப்பிடப்படிருந்ததே தவிர, மாணவர் என்று மட்டும் தான் பொருள் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. மாணார் என்பதற்கு மாணவர் என்று பொருள் எடுப்பது தவறு என்று வாதிடும்போது, அதன் காரணத்தை விளக்குவது ஒரு நல்ல ஆய்வுக்கு அழகு. மாணாக்கன் என்ற சொல், மாண் என்ற சொல்லின் அடிப்படையில் தோன்றியது என்பதை யாரும் மறுக்க இயலாது. மாணிப்பருவம் என்பது பிரம்மச்சரியப் பருவத்தை, அதாவது கல்வி கற்கும் பருவத்தைக் குறிக்கிறது (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி – தொகுதி V – பக் .3152). எனவே மாண் என்ற சொல்லுடன் ஆன் என்ற ஆண் பால் விகுதியைச் சேர்த்தால் மாணான் என்று ஆகிறது. ஆன், ஆர் என்ற விகுதிகள் உடன்பாட்டுப் பொருளிலும் வரும் என்பதைத் தமிழ் அறிஞர்கள் ஏற்றுக் கொள்வார்கள். (எ.கா.) நல்லார். மேலும் சங்க இலக்கியமான குறுந்தொகை, மாணாக்கன் என்ற சொல்லைக் கையாண்டுள்ளது.

‘அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்’ (குறுந்தொகை -பா.33).

தொல்காப்பியத்தில் பகை அரசனின் கோட்டை மதிலைக் கைப்பற்றி, அந்த இடத்தில் வாளை நீராட்டுதல் உழிஞைத் திணையில் ‘வென்ற வாளின் மண்’ (பொருளதிகாரம் 68) என்று குறிப்பிடப்படுகிறது. ‘இரு பெரு வேந்தரும் ஒருவர் ஒருவரை வென்றுழி அங்ஙனம் வென்ற வாளினைக் கொற்றவை மேல் நிறுத்தி நீராட்டல் ‘- நச்சினார்க்கினியர் உரை. இந்தப் பாடலில், வாளினைக் கொற்றவையாகப் பாவித்துப், போர்க்களத்திலேயே நீராட்டும் சடங்கு குறிப்பிடப்படுகிறது. அப்படி இருக்க, மாணார்ச் சுட்டிய வாண்மங்கலம் என்பது கொற்றவையுடன் பேய்ச்சுற்றத்தையும் சேர்த்து வாழ்த்திப் பாடுவதால், வென்ற வாளின் மண் என்பதிலிருந்து வேறுபடுகிறது என்கிறார் நச்சினார்க்கினியர்.

இந்த உரை பொருத்தமாகத் தோன்றவில்லை. பகைவனின் கோட்டையைக் கைப்பற்றியவுடன், அந்த இடத்திலேயே வாளில் கொற்றவை இருப்பதாகப் பாவித்து நீராட்டுவது ‘வென்ற வாளின் மண்’. போரில் வெற்றி பெற்ற தருணத்தில் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட நாளிலே போர்க் கலைப் பயிற்சி மாணவர்களால் நடத்தப்படும் வாள் மங்கலம் மாணார்ச் சுட்டிய வாள் மங்கலம் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். வாள் மங்கலம் முடிந்தவுடன் நிகழ்கிற , புதிய மாணவர்களின் போர்ப் பயிற்சித் தொடக்கம், பயிற்சி பெற்ற மாணவர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வீர விளையாட்டுகள், ஆசான்மார்களின் சாகசங்கள் போன்றவற்றைப் பாடுதலும் பாடாண் திணையுடன் தொடர்புடையனவையே. நச்சினார்க்கினியர் சொல்வது போல், இது போர் வெற்றியைக் குறித்ததாக இருந்திருந்தால், இது வாகைத் திணையில் இடம் பெற்றிருக்க வேண்டும். சோழ மன்னன் 3 ஆம் குலோத்துங்கன் மதுரையைக் கைப்பற்றி, மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் இடித்து, ஒரு மண்டபத்தைச் சோழ பாண்டியன் மண்டபம் என்று பெயர் மாற்றி, அதில் வீராபிஷேகமும், விஜயாபிஷேகமும் செய்ததாக 12 ஆம் நூற்றாண்டு மெய்க்கீர்த்தி தெரிவிக்கிறது. இது தான் தொல்காப்பியம் உழிஞைத் திணையில் குறிப்பிடுகின்ற ‘இகல் மதிற் குடுமி கொண்ட மண்ணு மங்கலம் வென்ற வாளின் மண்‘ என்பதுடன் துல்லியமாகப் பொருந்துகிறது.

ஆயுதங்களில் தேவதை குடியிருப்பதாகக் கருதுவது தமிழர் மரபு.சிலப்பதிகாரம் வேட்டுவவரியில், ’வில்லுக்கு முன் கொற்றவை செல்வாள்’ என்ற குறிப்பு உள்ளது. ‘ கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையுங் கொடுமரமுன் செல்லும்போலும் ‘ . 12 ஆம் நூற்றாண்டு விக்கிரம சோழன் உலாவில் ஒட்டக்கூத்தர், ஆயுதங்களில் வெற்றித் திருமகள் குடியிருப்பதாகச் சொல்கிறார்.’ வருங் கொற்ற மார்க்கு மணங்கினுடனே மருங்கிற் றிருவுடைவாள் வாய்ப்ப ‘ .

இப்படி ஆயுதங்களை தெய்வமாக கருதும் மரபு இருக்கும் காரணத்தினால், அவற்றிற்கு விழா எடுப்பதும், அந்த விழாவிலே அவற்றைக் கையாளும் வீரர்களைப் புகழ்ந்து பாடுவதும் மரபு.

தவ(ற்)றைத் துணைக் கோடல் என்ற கட்டுரையில் ‘வாளுடை விழவிற்கு’ வாள் சுற்றும் இடம் என்று பொருளுரைத்தார் கட்டுரையாளர். விழவு என்ற சொல்லுக்கு விழா என்று பொருள். சில இடங்களில் அவா, மிதுனராசி, விளையாட்டு என்று பொருள் படும். (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி தொகுதி VI பக்கம் 3719-3720). எங்கிருந்து வாள் சுற்றும் இடம் என்று கட்டுரையாளர் பொருள் எடுத்தாரோ? தமிழர்களின் உணர்வுபூர்வமான அடையாளங்களை மறுப்பதை நோக்கமாக கொண்டு இலக்கிய வரிகளுக்குப் பொருள் விளக்கம் சொல்வது மோசடி வேலையாகும்.

உ.வே.சா அவர்கள் பதிற்றுப்பத்துப் பாடல்களுக்கான அருஞ்சொல் அகராதியில் வாளுக்குப் பூமாலை, வாளுடை விழவு என்று குறிப்பிட்டுள்ளார். (பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும் , டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக்கம் 286). வாளுடை விழவு குறிப்பிடப்படும் பாடலிலும் கூடக் கடவுள் வாகை என்ற வரிக்கு, வெற்றி மடந்தையாகிய கடவுள் வாழும் வாகை என்று குறிப்பிடும் பழைய உரையை மேற்கோள் காட்டுகிறார் உ.வே.சா.(பதிற்றுப்பத்து மூலமும் பழைய உறையும் , டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக்கம் 173). வெற்றி மடந்தை என்பது பெண் போர் தெய்வத்தை குறிக்கும் சொல். அதற்குரிய நாளிலே எடுக்கப்படும் விழவு, வெற்றித் திருவிழா, வடமொழியில் விஜய தசமி. இந்த உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற, எளிதில் உணரக்கூடிய செய்தியை மறுப்பதற்காக, வாளுடை விழவிற்கு வாள் சுற்றும் இடம் என்று பொருள் சொல்வது, மக்களைத் திசை திருப்பி ஏமாற்றும் திராவிட ஆய்வு நெறியின் வாடிக்கையான உத்தி.

கட்டுரையாளர் குறிப்பிட்டபடியே தொண்டைமான் பற்றிய ஔவையாரின் பாடல் அங்கதப் பாடல் என்றாலும், அஃது ஆயுத பூஜை எனும் பண்பாட்டுச் சடங்கைச் சுட்டிக்காட்டுகிறது. ஔவையார் பாடல் தொண்டைமானுக்குத் தினசரி ஆயுத பூசை தான் என்பதையே அங்கதமாகக் குறிக்கிறது . இந்த உள்ளீட்டைப் புறம்தள்ள வேண்டும் என்று கட்டுரையாளர் வாதிட்டால், நடு கற்களுக்கு மயில் பீலி சூட்டி வழிபட்ட சங்க இலக்கிய மரபுகளையெல்லாம் புறந்தள்ள வேண்டியிருக்கும்.

பெரிய புராணத்தில் நவமி முன்னாள் என்பதற்கு நவமி நன்னாள் , நவமி நாளில் என்று பாட பேதங்கள் உள்ளன எனக் கட்டுரையாளரால் மேற்கோள் காட்டப்பட்ட அறிஞர் சி.கே.சுப்பிரமணிய முதலியார் தெரிவிக்கிறார். இதில் அட்டமியா , நவமியா என்பது முக்கியம் அன்று. மகாநவமித் திருவிழா 5 ஆம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டது என்பதை நிறுவுவதற்க்குதவும் மேற்கோள் அது. கட்டுரையாளரே மகாநவமி என்பது அம்மையாரை நோக்கிக் காக்கப்படும் சைவ நோன்பு என்று மேற்கோள் காட்டிவிட்டார். இதன் மூலம் மகாநவமி தமிழகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது என்பதை அவரே ஒப்புக்கொண்டு விட்டார். இந்த விழா 5-ஆம் நூற்றாண்டில் எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதைப் பெரியபுராண உரையாசிரியர் அறிஞர் சி.கே.சுப்பிரமணிய முதலியார் இவ்வாறு விளக்குகிறார் –

’மா நவமியில் நகரெங்கணும், திருக்கோயில்களெங்கணும், மனைகளெங்கணும், பல வகையானும் அலங்கரித்துத் தேவி கொலுவிருக்கைச் சிறப்புக் கொண்டாடப் பெறுவது மரபு. ஆதலின் கோலம்பெருகு மாநவமி என்றார். கோலம் நவமிவரை நாளுக்குநாட் பெருக உளதாதலின் பெருகும் என்று குறித்தார்.’

அடுத்ததாகத் திருவோண நட்சத்திர குறிப்பு. மாயோன் மேய ஓண நன்னாள் என்ற மதுரைக் காஞ்சியின் குறிப்பை எடுத்து அதைத் திருமாலுடன் சேர்த்து முடிச்சுப்போட்டுள்ளார் மறுப்புக் கட்டுரையாளர். ஆவணி மாதத் திருவோணம், வாமன அவதார தினம். எல்லா ஆண்டும் 12 அல்லது 13 முறை திருவோண நட்சத்திரம் வருகிறது, அதனால் பன்னிரண்டு ஓணத் திருவிழா கொண்டாடுவார்களா ? சிவ பெருமானை ஆதிரையான் என்று குறிக்கிறார்கள். அதை வைத்துக்கொண்டு ‘மாயிருந்திங்கள் மறுநிறை ஆதிரை ‘ என்ற பரிபாடல் வரிகளை மேற்கோள் காட்டித் தை நீராடல் சைவச் சடங்கு என்று சொல்லிவிடுவார்கள் போலும் ! பாவை நோன்பு மார்கழி ஆதிரையில் தொடங்குவதால், ஆண்டாள் சிவ பக்தை என்று கூட இவர்கள் சொல்லக் கூடும். திருமயிலைப் பதிகத்தில் ‘ஐப்பசி ஓண விழா ‘ பற்றித் திருஞான சம்பந்தர் குறிக்கிறார் . ஓணம் என்ற சொல் இடம் பெற்று விட்டதால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருமால் கோயிலாக இருந்துள்ளது . எனவே திருஞான சம்பந்தரின் மயிலைப் பதிகத்தை – அல்லது குறைந்த பட்சம் அக்குறிப்பிட்ட பாடலையாவது திவ்ய பிரபந்தத்தில் சேர்ப்பதுதான் முறையாகும் என்று கூட இத்தகைய ஆய்வாளர்கள் ஆணையிடக் கூடும். சம்பந்தரை ஆழ்வார் என்று கூட சொல்லிவிடுவார்கள் இவர்கள்!

ஏற்கனவே பெரியபுராணம் மகாநவமியை, அம்மையாருக்கு எடுக்கப்படும் சைவத் திருவிழா என்று குறிப்பிட்டுள்ளது. எனவே, திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் கோவில் கல்வெட்டில் இடம் பெறுகிற பிரட்டாதி ஓணம் , சைவ சமயம் சார்ந்த அம்மன் திருவிழாவாகவே , விஜய தசமியாகவே இருந்திருக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கட்டுரையாளரின் கூற்றுப்படி, சோழர் ஆட்சிக் காலத்தில் திருமாலின் திருவிழா சிவாலயத்தில் பிரதான விழாவாக கொண்டாடப்பட்டது ! நம்ப முடிகிறதா ? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது யார் என்று, இந்த கல்வெட்டு விவகாரத்திலேயே நாம் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு செய்திகளில் ஆரிய – திராவிடச் சிக்கல் எங்கே வந்தது ? தமிழனின் அடையாளத்தை மறைப்பதற்காக ஆரிய – திராவிடச் சிக்கலை ஆய்வுத்தளத்தில் புகுத்திய தவ(ற்)றை செய்தவர் , செய்து வருபவர் கருணாநிதி. அந்தத் தவ(ற்)றுக்கு விஷமத்தனமாகத் துணை போவதுதான் மறுப்புக் கட்டுரையாளரின் தவறான செயல்பாடு.

5 Replies to “ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்”

 1. ஆயுத பூசை குறித்து சில விளக்கங்கள்
  எஸ். இராமச்சந்திரன்
  (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)

  14-10-2011 ஆம் தேதிய தினமணியில் க.நெடுஞ்செழியன் எழுதிய ‘தவறைத் துணைக் கோடல்’ என்ற தலைப்பிலான கட்டுரை குறித்து:

  பதிற்றுப்பத்தில் குறிப்பிடும் “வாளுடை விழவு” வாள்மங்கலமாகத்தான் – ஆயுத பூசையாகத்தான் இருக்க வேண்டும். சங்க காலத்தில் போர்க் கடவுளாகப் பெண் தெய்வமே கருதப்பட்டது. அது சில இடங்களில் துர்க்கை அல்லது கொற்றவையாகவும் சில இடங்களில் காளியாகவும் கருதி வழிபடப்பட்டது.

  சிலப்பதிகாரம் வழக்குரை காதையில் (வரி 34 முதல் 40 வரை) கொற்றவையும் காளியும் வெவ்வேறு தெய்வங்களாகக் கூறப்பட்டுள்ளனர். கொற்றவை மறப்போர் தெய்வமாகவும் காளி அறப்போர் தெய்வமாகவும் கருதப்பட்டிருக்க வேண்டும். சிலப்பதிகாரம் வேட்டுவவரி, மறவர்களின் முதன்மையான தெய்வமாகவும் வேட்டை தெய்வமாகவும் கொற்றவையை குறிப்பிடுகிறது.

  பட்டினப்பாலையில் (வரி57-72) “பூதங்காக்கும் புகலருங் கடிநகர்” குறிப்பிடப்படுகிறது. இது காளி கோயில் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். இக்கோயிலுக்கு முன்னர் இருந்த திடலில் பரதவர்கள் களரிப் பயிற்சி மேற்கொண்டனர் என்று பட்டினப்பாலை கூறுகிறது.

  அறப்போர் முறை, போர்ப்பயிற்சி, போன்றவற்றுக்குக் காளியே தெய்வமாதலால், மகாநவமி அல்லது ஆயுத பூசை காளிக்குரிய ஆயுதபூசை விழாவாகவும், அதற்கடுத்த நாள் (தசமி) போர்க்கலைக் கல்வி தொடங்கும் நாளாகவும் கருதப்பட்டிருக்க வேண்டும்.

  காளியுடன் ஆடற்போட்டியில் கலந்துகொண்டு சிவபிரான் வெற்றி பெற்றதாகக் கூறப்படும் கதை அப்பர் தேவாரத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே காளி வழிபாடு கி.பி. 5ஆம் நூற்றாண்டளவிலேயே சிவ வழிபாட்டில் கலந்துவிட்டது. எனவேதான் காளியைக் குலதெய்வமாகக் கொண்ட சோழர்கள், தில்லைக் காளியை வென்று ஆடவல்லான் என்ற தகுதியை அடைந்த தில்லை நடராசரைத் தமது குல தெய்வமாக ஏற்றனர். புகழ்ச்சோழ நாயனார், சிறந்த சிவ பக்தராயினும் காளிக்குரிய மகாநவமி நாளைக் கொண்டாடிய காரணம் இதுவாகவே இருக்க வேண்டும்.

  க. நெடுஞ்செழியன் கூறுவதுபோல் இதில் ஆரிய-திராவிடச் சிக்கல் ஏதும் இல்லை. சங்க காலத்திலேயே போர்க் குடியினர் பலரும் தங்கள் ஆயுதங்களில் தெய்வங்கள் குடியிருப்பதாகக் கொண்டு வழிபட்டனர். அத்தெய்வங்களுள் துர்க்கை – கொற்றவையைவிடக் காளியே மகா நவமிக்குரிய தெய்வமாக இருந்திருக்க வேண்டும்.

  (இக்கடிதத்தையும் தினமணி வெளியிடவில்லை.)

 2. மிகவும் அழகான எடுத்துக்காட்டுகள். தமிழ் தாத்தாவை உங்கள் ஆய்வுக்கு அழைத்தது தமிழனத் தாத்தா என்று சொல்லிக்கொள்ளும் மு. க விற்கும் அவர் விற்கும் திராவிட அடிபொடிகளுக்கும் சவுக்கோடியாகவே உள்ளது. திராவிடத்தை கையில் தூக்குபவர்களுக்கு உண்மை என்றுமே கசக்கத் தான் செய்யும். மனிதம் பார் என்றால் திராவிடம் பார் என்பான். மனிதனாக இரு என்றால் அசுரனாக இரு என்பான். இதுபோன்ற நல்ல கட்டுரையைப் படித்தாலாவது திருந்த முயற்சிக்கட்டும்.

 3. கருணாநிதி ஆட்சியில், நெடுஞ்செழியனுக்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயர் பதவி ஒன்று கொடுக்கப்பட்டது. மேலும், புத்தகக் காட்சியின்போது கருணாநிதியால் தரப்படும் ஒரு லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. அதற்காகவே அவர் வலிந்து ஆயுத பூஜைக்கு எதிராக எழுதியுள்ளார். செஞ்சோற்றுக் கடன் கழிக்க வேறு வழி தெரியவில்லை போலும். பாவம்.

 4. adada.. தமிழை துணைக்கு அழைத்து கொள்வீர்கள், உங்களுக்கு தேவை என்றால். எத்துனை எடுத்து காட்டுகள். வியக்க வைக்கிறீர்கள். ஆனால் பொதுவாக தமிழை துணை கொள்வது இதுதான் முதல் முறை உங்கள் வலை பதிவில்.

 5. அப்படியென்றால் ஆயுத பூசை விழாவை வாள் மங்களம் என்று குறிப்பிடலாமா?ஏனென்றால் நாங்கள் அச்சடித்த சீருடை அணிந்து ஆயுத பூசை விழாவை கொண்டாடுவது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *