[பாகம் 5] வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி

சுவாமி சித்பவானந்தர் உடனான வாழ்க்கை அனுபவங்கள் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் ஐந்தாவது பாகம்.
முந்தைய பகுதிகள்:

வாழ்ந்து காட்டிய மகான்

விவேகானந்தரை பயில்வான் சுவாமி என்பார்கள். ஆனால் நம் பெரிய சுவாமிஜியை மிலிட்ரி சுவாமிஜி என்பார்கள். ஏன்? ராணுவத்தில் உண்டான கட்டுப்பாட்டை அவர் கடைப்பிடித்து வந்தார். ராணுவ வீரனிடம் எத்தகைய உடல்பலம், மனபலம், காலம் தவறாது கர்மம் ஆற்றும் பண்பு, கீழ்ப்படிதல், எதையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், அச்சமே என்னவென்று தெரியாது வளர்தல், எதையும் ஆராய்ந்து செய்தல் முதலிய பண்புகளை மாணவர்கள் தங்கள் பருவத்தில் கற்றுக் கொள்ள அவர் ஆர்வம் காட்டினார். தியானப் பயிற்சி, கடவுள் வழிபாடு முதலியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். கடமை எதிலும் உயர்வு தாழ்வு காட்டுதல் கூடாது என்பது சுவாமிஜியின் கருத்து. நம்முடைய வேலையை நாமே செய்யவேண்டும் என்பதை தாமே வாழ்ந்து காட்டியவர். திருப்பராய்த்துறை பள்ளியில் படித்த மாணவன் என்றாலே அவனிடம் தனி முத்திரை உண்டு. நன்னடத்தை, ஹிந்து உணர்வு ததும்புவது ஆகியவை இம்மாணவர்களிடம் காணலாம்.

சுவாமிஜியின் அறையில் ஒவ்வொரு பொருளும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்திலேயே வைக்கப்பட்டிருக்கும். எக்காரணத்தை கொண்டும் பொருளின் இடம் மாறாது. வெளிச்சம் இல்லாவிட்டாலும சுலபமாக பொருளை யார் வேண்டுமானாலும் எடுத்து வந்து விடலாம்.தன் கையே தனக்கு உதவி என்பது போல அவரது கக்கூஸ், வாஷ்பேஸின் ஆகியவற்றை தானே சுத்தம் செய்வார். வரவேற்பறை, படுக்கையறை ஆகியவற்றை சுத்தம் செய்தல் முதலியவற்றை அவரே சுத்தம் செய்வார். தனது சிஷ்யர்களையோ, பணியாட்களையோ இவற்றை செய்ய அனுமதிக்கமாட்டார். கடிகாரத்தின் பாகங்களை அவர் நன்கு அறிவார். சிறிய குறைபாடுகளை அவரே சரிசெய்து விடுவார். நீச்சல் குளத்தில் மாணவர்களை மிதக்கச் செய்ய மிட்டாய் அடைத்து வரும் பெரிய தகர டப்பாக்களை பயன்படுத்துவார். 16எம்எம் புரொஜக்டர் பழுதானால் தானே சரிசெய்து விடுவார். கண்டிப்பானவர் ஆனால் கருணையுள்ளவர்.

துறவிகளின் வாழ்க்கை முறையைக் காணுகிற ஒவ்வொரு மாணவனும் உயர்ந்த லட்சியத்தை அடைய சுவாமிஜி அவர்கள் அமைத்த குருகுல முறை நன்கு செயல்படுகிறது. இது போன்ற தபோவன அமைப்பு நாடு முழுவதும் பரவினால் தான் இன்றைய இளைஞர்களிடம் நல்லொழுக்கமும், தேச பக்தியும், லட்சிய உணர்வும் மேலோங்கும்.

மேலும் சில நினைவலைகள்

நான் வட இந்தியாவில் பல இடங்களிலும் நம்முடைய சுவாமிஜியின் ஸ்ரீமத் பகவத்கீதை மற்றும் சில ஆங்கில நூல்களை படித்து வருவதைப் பார்த்தேன். சுவாமிஜியை நேரில் பார்க்காது, அவருடைய நூல்களைப் படித்து விட்டு வெளி நாட்டிலிருந்தும், இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பலர் கடிதத் தொடர்பு வைத்தும், இயன்றவர்கள் தரிசித்தும்
சென்றுள்ளார்கள். அண்மையில் Bhavan’s Journal என்ற பம்பாயிலிருந்து வெளியான பத்திரிக்கையில் நம் சுவாமிஜியைப் பற்றி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அமரர்.திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய கட்டுரையைப் படித்துப் பலர் இந்த மகானை தரிசிக்காது போய்விட்டதே! இது நாள் வரை இப்படி ஒரு மகான் தமிழ்நாட்டில் இருந்தது தெரியாது போய் விட்டதே! என்று தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதை எண்ணி வருந்தி கடிதம் எழுதி உள்ளார்கள். தேசத் தொண்டு செய்வதற்காக தன் வாழ்வை அர்ப்பணம் பண்ண விரும்பும் ஒருவனுக்கு சுவாமிஜியின் அருள்வாக்கே சான்று.

50 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவனுக்கு 500 ரூபாய் சம்பளம் கிடைத்தால் அவன் 50 ரூபாய் வரக்கூடிய வேலையைத் துறப்பது ஒன்றும் சிரமமில்லை. அதேபோன்று பிறர்க்கு அடிமையாக இருந்து சம்பளம் பெற்று வருகிற இன்பத்தை விட தெய்வத்திற்காகத் துறவு பூண்டோ, தேச சேவைக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கின்றவன் சுயநலத்தை துறந்து பேரின்பத்தைப் பெறுகிறான்.

மேல்நாட்டவர் சிலர் ஒரு குழுவாக வந்து இந்தியாவை சுற்றிப்பார்த்துவிட்டு இறுதியாக சுவாமி சித்பவானந்தரை தபோவனத்தில் சந்தித்து உரையாடி மகிழ்ந்து இறுதியில் உங்கள் சந்திப்பு இல்லை என்றால் இந்தியாவின் பெருமையை நாங்கள் அறிந்திருக்க முடியாது என்று சொன்னார்களாம். அவர்கள் சுவாமியை பார்த்து “ஐயா! கிறிஸ்துவ மதத்தை பற்றி
தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு சுவாமிஜி, கிறிஸ்துவம் என்பதும் ஒரு மதமே, ஆனால் புத்தமத தத்துவங்கள் இந்து மத தத்துவத்தில் கலந்து புத்தமதம் இந்தியாவில் மறைந்து விட்டது. அதே போல நடக்காமல் இருந்தால் சரி என்று கூறினார்.

அச்சமென்பதே அறியாதவர்

ஒருமுறை வைகுண்ட ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டிய நேரத்தில் சமையல் ஸ்டோரில் திண்பண்டங்களை திருடித் தின்ற மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கினார். அவர்களில் ஒரு பையன் அறநிலைய அமைச்சருக்கு மைத்துனன். அறநிலைய அமைச்சர் வந்து அவனை சேர்த்துக் கொள்ள சொல்லி சாமியை மிரட்டினார். அவனை சேர்த்து கொள்ளவில்லையயன்றால் பள்ளியை இழுத்து மூடிவிடுவேன் என்று மிரட்டினார். அதற்கு சுவாமி : “நான் வெகுகாலமாக அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்; சரி மூடிடுங்கோ!” என்று சொன்னார். வந்தவர் ஏதும் பேசாமல் திரும்பி போய் விட்டார். அவரது அஞ்சா நெஞ்சம், துணிவு ஆகியவை நமக்கு என்றும் வழிகாட்டும்.

சம்ஸ்க்ருதமே நமது தேசிய மொழி ஆக்கப்படவேண்டும் என்று சுவாமி சித்பவானந்த வலியுறுத்தி வந்தார். உண்மையில் 1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்த அன்றைய தினமே தலைவர்கள் இவ்வாறு அறிவித்திருக்க வேண்டும். சுவாமிஜி தமது பள்ளிகளில் சம்ஸ்க்ருதத்தை பயிலுவதை கட்டாயமாக்கினார். தமிழக அரசு சம்ஸ்க்ருதத்தையும், ஹிந்தியையும் எதிர்த்து வந்த போதிலும் சுவாமிஜி உறுதியுடன் செயல்பட்டு வந்தார்.

1000 சித்பவானந்தர்கள் வந்தாலும் தமிழ் மண்ணில் சம்ஸ்க்ருதத்தை வளர்த்து விட முடியாது என்று ஈவெரா கர்ஜித்தார். சுவாமிகளின் துறவு சீடர்களில் ஒருவர் சமஸ்கிருதத்தையும் வேதத்தையும் பரப்புவதற்காகவே சுவாமிகள் பெயரிலேயே ஆஸிரமம் அமைத்து தம்மை
அர்ப்பணித்து கொண்டிருக்கிறார்.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்று 1956ம் வருடம் திருப்பராய்த்துறையில் சுவாமிஜியால் துவங்கப்பட்டது. மாணவ மணிகளை உருவாக்கும் ஆசிரியர்களின் பயற்சியில் சுவாமிகள் தனி அக்கரை காட்டினார். கண்டிப்பும், கடும் உழைப்பும் அங்கு வலியுறுத்தப்பட்டது. ஒழுக்கமும் உயரிய தத்துவமும் கூட அங்கு போதிக்கப்பட்டன. தினசரி சாப்பிடுவதற்குமுன் பிரம்மா அர்ப்பணம் என்ற பிரார்த்தனைப் பாடலை சொல்லி இறைவனை வழிபடும் முறையும் இருந்து வந்தது. இது பிடிக்காத மாணவர்கள் சொல்லமாட்டோம் என்று எதிர்வாதம் செய்தனர். சுவாமிஜி எடுத்த கொள்கையில் உறுதியாக நிற்பவர், இன்று இதை சொல்ல மறுப்பவர்கள் நாளை எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்குவார்கள் என்று கூறிய சுவாமிஜி, அப்படி ஒரு பயிற்சி கல்லூரி தேவையில்லை என்று நினைத்தார் போலும். அந்த வருடத்துடன் அப்பயிற்சிக்
கல்லூரியை மூடி விட்டார். விடுதியில் தங்கியிருந்த மாணவர்களின் பெட்டிகளும், படுக்கைகளும் வெளியே பறந்தன.

சமயோஜித புத்தி

ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி கார் வந்து கொண்டிருந்தது காரில் சுவாமிஜியும் மற்றும் சில அன்பர்களும் இருந்தார்கள். காரின் பிரேக் பழுதடைந்து ஒரு பெரிய விபத்து நேர இருந்தது. இறைவன் அருளால் அனைவரும் அதில் உயிர் தப்பினர். அந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு பின்பு ஒரு அன்பர் சுவாமிஜியைக் கேட்டார். அப்போது காரில் இருந்தவர்கள் அனைவரையும் பிரார்த்தனை செய் என்று சொன்னீர்களாமே? என்றார். சுவாமிஜி சொன்னார், “பிரார்த்தனை செய் என்று சொல்லவில்லை. டிரைவரை மரத்தில் மோது” என்றேன். அனைவரும் திடுக்கிட்டு “என்ன சுவாமிஜி அப்படியா சொன்னீர்கள்?” என்றனர். “ஆமாம், பிரேக் பழுதடைந்து விட்டது. காரை எப்படியாவது நிறுத்தவில்லையயனில் பள்ளத்தில் உருண்டு அனைவரும் சாகவேண்டியதுதான். ஆதனால் டிரைவரை மரத்தில் மோதி வண்டியை நிறுத்திவிடு என்றேன். டிரைவரும் அதுபோல் செய்யவே எல்லோரும் உயிர்தப்பினோம். அப்போது வேண்டியது சமயோஜித புத்தியே தவிர பிரார்த்தனை அல்ல”. என்றார் சுவாமிஜி.

கர்மயோகி

30 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமிகள் திருவண்ணாமலை ஈசானியமுனிவர் மடத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தி முடித்து விட்டு திருப்பராய்த்துறை மடத்திற்கு திரும்பி வர விழுப்புரம் நிலையத்தில் வண்டிஏறி வரும்பொழுது புயல் மழையால் புகைவண்டி லால்குடிக்கு மேல் செல்லவில்லை. சாலை போக்குவரத்தில் பல மரங்கள் விழுந்து பஸ்களும் போகவில்லை. கடமை உணர்வுமிக்க சுவாமிகள் 30 கி.மீ.யிலுள்ள திருப்பராய்த்துறைக்கு நடந்தே சென்று தன் வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். அப்படிப்பட்ட கடமைவீரர் கர்மயோகி வாழ்வு நமக்கு ஒரு எடுத்துக்காட்டு.

த்யானாத் கர்ம பலத்தியாக. தியாகாச் சாந்திர் அனந்தரம் என்பது கீதா வாக்கியம், தியானத்தைக் காட்டிலும் கர்ம பலத்தியாகம் உயர்ந்தது. தியாகத்தினின்று விரைவில் சாந்தி வருகிறது. திருவேடகம் கல்லூரியின் கட்டிடப் பணிகள நடந்து கொண்டிருந்தன. ரயில் நிலையத்தில் இறங்கிய சாமி வயல் வரப்பு வழியாக கட்டிட வேலைகள் நடக்கும் இடத்திற்கு வந்தார். அப்படி அவர் வரும்பொழுது சுவாமி முக்தானந்தர் என்பவர் கட்டிடவேலைகள பார்த்துக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் சுவாமிஜிக்கு கோபம் வந்துவிட்டது. காரணம் அவர் கையில் குடையில்லாமல் கொளுத்தும் வெயிலில் நின்று கொண்டிருந்தது தான். பெரிய சுவாமி அவரை அழைத்து கோபத்துடன்,”குடை பிடித்துக்கொண்டு வேலை பார்ப்பதாகயிருந்தால் இங்கு நிற்கலாம்; இல்லாவிட்டால் நீ வேலை பார்க்க வேண்டாம்” என்று கூறிவிட்டு அலுவலகத்திற்கு வந்து விட்டார். கலங்கிய மனத்துடன், பயத்துடன் அலுவகத்துக்குள் நுழைந்த முக்தானந்த சுவாமிக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அவரது உபயோகத்திற்காக புதிய குடை ஒன்று பெரிய சுவாமிஜியின் அருகில் அவரை வரவேற்றது.

செல்வத்தை கையாளுவதில் நேர்மை, சேவையில் தூய்மை…

சுவாமிகளிடம் ஒரு பெரிய செல்வந்தர் வந்தார். ஒரு பெரும்தொகையை சுவாமியின் நற்காரியங்களுக்கு நன்கொடையாக அளிக்க விரும்புவதாக தெரிவித்தார். சுவாமியிடமிருந்து பளிச்சென்று பதில் வந்தது. “நான் ரசீது தருவதை பெற்றுக்கொண்டு உங்கள் செக் மூலமாக எவ்வளவு பணம் தந்தாலும் பெற்றுக் கொள்கிறோம்” என்றார். வந்தவர் திரும்பி விட்டார். அவர் கொடுக்க வந்தது அனைத்தும் கருப்புப்பணம்.

இராமேஸ்வரத்தில் ஒரு தபோவனம் துவங்க வேண்டும் என்று சுவாமி நினைத்தார். அதற்காக நிலம் வாங்க இருவர் சென்றனர். நிலத்தில் விலை மிக அதிகமாகவே இருந்தது. ஆகையால் சென்றவர்கள் திரும்பி விட்டார்கள். சுவாமிஜி, இன்னும் “அதற்கான காலம் வரவில்லை போலும் பொறுத்திருப்போம்”, என்று கூறி விட்டார். ஒரு சில நாட்கள் சென்றன.

இராமேஸ்வரத்திலிருந்து ஓர் அன்பர் சுவாமிஜியை பார்க்க வந்தார். வந்தவர் சுவாமிஜியிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு ஒரு வேண்டுகோளையும் விடுத்தார். அவருக்கு சொந்தமான ஒரு பெரிய சத்திரத்தை சுவாமிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். “இராயர்சத்திரம்” என்று இராமேஸ்வரத்தில் புகழ் பெற்ற சத்திரம் சுவாமிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆன்மீகப் பணிகளும் அங்கு தொடங்கப் பெற்றன. சில லட்சம் செலவழித்து புதுப்பிக்கப்பட்ட அச்சத்திரம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அப்பணியும் அங்கு விடாமல் நடைபெற்று வருகிறது. இராமேஸ்வரம் வரும் யாத்திரிகர்களுக்கு அன்னதானமும் அங்கு நடைபெறுகிறது!

சுவாமிஜியின் சிந்தனைகள்

ஸ்ரீமத் சுவாமிஜி அவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண, விவேகானந்தர் பரம்பரையைச் சேர்ந்த துறவியர் கூட்டத்தில் உருவானார்கள். அதே நேரத்தில் தமிழகத்தில் தோன்றிய சமயப் பெரியோர்களிடத்தும் மகான்களிடத்தும் கொஞ்சமும் குறையாத பக்தி வைத்திருந்தார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணரையும் விவேகானந்தரையும் சாரதா தேவியையும் போற்றித் துதித்து வழிபட்டு வந்ததற்கிடையில் தமிழகத்தில் தோன்றிய சைவ சமயக்குரவர் நால்வரையும், ஸ்ரீதாயுமன சுவாமிகளையும் போற்றித்துதித்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

தான் நேரில் சந்தித்த பகவான் ஸ்ரீரமணரையும், ஸ்ரீநாராயண குருவையும் போற்றி வணங்கி பின்பற்றுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் ஸ்ரீராமகிருஷ்ணருக்குச் சமமாகவே இவ்வனைவரையும் கருதி வந்தார்கள்.

இல்வாழ்க்கைக்கும் பிரம்மச்சரியம் முற்றிலும் வேண்டப்படுகிறது. விரும்பியவாறு சிற்றின்பத்தில் முழ்கி கிடப்பதற்காக இல்வாழ்க்கை ஏற்பட்டது அல்ல. அது புனிதம் மிக்கது. குழந்தைகளை ஈன்றெடுத்து உலகுக்கு அளிப்பதே இல்லறத்தின் முடிவான நோக்கமாகும். இரண்டொரு பிள்ளைகளை பெற்ற பிறகு கணவனும் மனைவியும் சகோதர சகோதரிகளை போன்று வாழ வேண்டும் என்று இராமகிருஷ்ணர் அடிக்கடி உபதேசிப்பது உண்டு. பூரண பிரம்மச்சரியத்திற்கு மரணம் ஒரு ஆபரணம் போன்றது. அவன் வாழ்விலும் மகிமை உண்டு, சாவிலும் மகிமை உண்டு.

ஒரு அமைப்பின் நிறுவனர் இறந்து விட்டால் அடுத்தது யார்? என்ற வாக்குவாதம் ஆரம்பமாகி அது அடிதடியில் சென்று முடியும். ஆனால் சுவாமிஜி தனது நிர்வாகத்தை தனக்கு பின்னால் யார் பார்த்துக்கொள்வார்கள் என்று கேட்டபொழுது “ஈஸ்வரன் பார்த்துக்கொள்வார்” என்று சொல்லிவிட்டார். அவரது எண்ணம் போலவே அவர் விட்டு சென்ற பணிகள் நன்கு நடைபெறுகின்றன.

நாம் செய்ய வேண்டுவது என்ன?

பிறருக்காக வாழ்வதுதான் வாழ்க்கை. தமக்காக வாழ்பவர்களெல்லாம் இருந்தும் இறந்து போனமாதிரி தான் என்கிறார் விவேகானந்தர். இந்தக் கொள்கைகளை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம் அதற்காக மகிழ்ந்தும் இருப்போம். ஆனால் அதை வாழ்க்கையில் நடைமுறைபடுத்தியவர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள். சொல்லியபடி செய் என்பதில் மிகவும் கண்டிப்பாய் இருந்தவர் அவர். சுவாமிஜி அவர்கள் சமுதாயத்தொண்டு செய்து கொண்டு, இந்நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேற வேண்டுமானால் அதற்குத்தக, நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும் என்று செயல்பட்டார்.

இங்குள்ளவர்களை மனிதர்களாக்க அவர் பல வழிகளில் முயற்சி செய்தார். அதற்காக குருகுலம் ஆரம்பித்தார். பள்ளிகளை அமைத்தார். கல்லூரிகளைத் துவங்கினார். அந்தர்யோகங்களை நடத்தினார். எல்லா வழிகளிலும், எவ்விதத்திலும் இந்த நாட்டில் நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். நம்முடைய வேலை என்ன? இன்று சுவாமிஜியைப் பாராட்டிப் பேசியதுடன் நம் வேலை முடிந்து விடவில்லை. அவருக்கு பாராட்டு வேண்டாம்; புகழ் வேண்டாம். அவர் என்னென்ன ஆசை வைத்துக் கொண்டிருந்தாரோ அதை நிறைவேற்ற வேண்டும். இந்த நாட்டில் நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும். அதற்காக நாமெல்லாம் ஆத்ம சோதனை செய்து கொண்டு இப்போது யோசிக்க வேண்டும்.

நாம் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறோமா அல்லது அவர் சொன்னதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். இப்போது சித்பவானந்த சுவாமி ஒரு உடலில் இல்லை. எல்லா இடத்திலும் நிறைந்து நிற்கிறார். எங்கும் நிறைந்த விட்ட அவர் என் மூலம் வேலை செய்ய முடியும் என்று எண்ணி நாம் பணியாற்றுவோம். அதற்கு இறைவனின் அருளும் சுவாமியின் ஆசீர்வாதமும் நமக்கு என்றும் உண்டு எத்தனையோ வழிகளில் ஹிந்து சமுதாயத்திற்கு-வழிகாட்டியாய்-காவலனாய்-கல்வித்துறையில் புரட்சி செய்த கர்மவீரனாய் வாழ்ந்த திருப்பராய்த்துறை தவமுனிவர் இன்று நம்மிடையே இல்லை. அவரது பூத உடல்தான் இல்லை; அவர் இருக்கின்றார். அவர் எழுதிச்சென்ற நூல்களில் அவர் ஏற்படுத்திய ஸ்தாபனங்களில் அவர் வாழ்கின்றார். ஏன்? அவரது அருட்பார்வை விழுந்த அத்தனைபேரிடத்திலும் அவர் வசிக்கின்றார்.

அவரது நினைவு-அவரின் வாழ்வு-அனைவருக்கும் வழிகாட்டி, அவரது குறிக்கோளை நிறைவேற்றும் நமது பணி நாம் அவருக்குச் செய்யும் இதயபூர்வமன அஞ்சலி.
நோயினால் பாதிக்கப்பட்ட கடைசி காலத்தில் கூட தமது வருத்தத்தை, கஷ்டத்தை சுவாமிஜி யாரிடமும் வெளிப்படுத்தியது கிடையாது. ரமண மகரிஷியைப்போல தனது வருத்தத்தை, நோயை வெளிக்காட்டாமல் எல்லாருக்கும் அருள் பாலித்தே வந்தார். வெறுப்பை களையுங்கள்; அன்பை வளர்த்து வாருங்கள்; ஆனந்தமாக இருங்கள் என்று நோய் வாய் பட்ட கடைசி நேரத்தில் கூட ஆசீர்வதித்தார்.

சூரிய அஸ்தமனம்

16.11.1985 மாலை 8.20 மணிக்கு சுவாமிஜி மகா சமாதி அடைந்த செய்தியறிந்து இயற்கை வருந்தியது. சுவாமிஜியின் திருமேனி பூமாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தது. சுவாமிஜியின் முகம் தேஜஸோடு விளங்கியது. எப்போது வந்தீர்கள்? உட்காருங்கள்! சாப்பிட்டீங்களா? என்று கேட்பது போல இருந்தது. ஒரு புறம் வேதபாராயணம், ஒருபுறம் பஜனை, ஒருபுறம் நாமாவளி, ஒருபுறம் சுவாமிஜி எழுதிய நூல்களிலிருந்து கருத்துக்கள் வாசிப்பு-இப்படி நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. மதியம் 1.00 மணிக்கு மேல் பக்தர்கள் கூட்டமும், மாலைகளும் குவிய ஆரம்பித்தன. புஷ்பரதத்தில் சுவாமிஜி துயில் கொள்வதுபோல இருந்தது. அனைவருடைய முகங்களும் சோகத்தால் வாடியிருந்தன. கண்கள் கண்ணீரை சிந்தின.

17-11-85 அன்று நித்தியானந்த சுவாமிகள்,  “சுவாமிஜியின் திருமேனியை துறவிகள் இப்போது தூக்கிச்செல்ல போகிறோம். அன்பர்களும் தாய்மார்களும் அவரவர் இடங்களிலேயே அமர்ந்திருக்க வேண்டும். தலைமையாசிரியர் சொல்கிறபடி அதை பின்பற்ற வேண்டும். சுவாமிஜி காட்டிய ஒழுக்கம், கட்டுப்பாடு இவைகளை நீங்கள் கடைபிடித்து வருவதுதான் இங்கு நீங்கள் செய்யும் வழிபாடாகும்” என்று தன் குரல் தழுதழுக்க கண்கள் நீர் மல்கக் கூறியது எல்லோருடைய உள்ளங்களையும் நெகிழ வைத்து, கண்களில் நீர் மல்கச் செய்தது.

விவேகானந்த வித்யாவனத்திற்கு அடுத்து காவிரிக் கரைக்கு சுவாமிஜியின் திருமேனியை துறவிகளும், அன்பர்களும் கொண்டு சென்றார்கள். மாலை 4.00 மணிக்கு சுவாமிஜியின் துறவற சிஷ்யர்கள் சிதைக்கு தீ மூட்டினர். 18.11.85 காலை 6.00 மணிக்கு தபோவனத்திலிருந்து நாம ஜெபம் சொல்லிக்கொண்டு காவேரிக்கரைக்கு சுவாமிகளும், அன்பர்களும், தாய்மார்களும் சென்று தகனம் செய்யப்பட்ட இடத்தில் சுற்றிலும் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தனர்.

அதன்பின் நித்யானந்தர், “சுவாமி வடிவத்தை கலைத்து விட்டாலும் அம்மூர்த்தி எங்கும் செல்லவில்லை. நம் எல்லோருடைய உள்ளத்திலும் நிறைந்து இருக்கிறார். அவர் புகட்டிய நெறிகளை கடைப்பிடிப்பதே நாம் அவருக்கு செய்யும் கைமாறாகும்”. இவ்வாறு கூறி சுவாமிஜியின் அஸ்தியை எடுத்து குடங்களில் நிரப்பினார்கள். மீதியிருந்த அஸ்தியும்
காவிரியில் கரைக்கப்பட்டது. அவரது தபோவனம் அருமையான துறவிகளின் பாரம்பரியத்தை தாங்கி நிற்கிறது.

தாயினும் கனிந்த உள்ளம்
தளர்விலா தீரவீரம்
தீயினைப்போன்ற தூய்மை
தென்றலைப் போன்ற தண்மை
மாயையும் அஞ்சும் ஞானம்

என்ற சுவாமி விவேகானந்தரை வருணிப்பார்கள். இந்த வர்ணிப்பு இவருக்கும் மிக பொருத்தம். அவர் மறையவில்லை; நமது நெஞ்சங்களில் குடிகொண்டு விளங்குகிறார். அந்த அருள்ஜோதியை நமக்கு வழிகாட்ட பயன்படுத்துவோமாக!

(தொடரும்)

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும்  rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

2 Replies to “[பாகம் 5] வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி”

  1. சுவாமீஜி தமிழ்நாட்டு விவேகானந்தர் ஆவார்.சுவாமிஜி யின் வழிகாட்டுதலுடன் நாமும் வாழ்வோம்.

  2. மிகுந்த நன்றி
    நமஸ்கரிக்கிறேன்.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *