[பாகம் 12] சின்னு சித்பவானந்தர் ஆனார்

சுவாமி சித்பவானந்தர் குறித்த தொடர். முந்தைய பகுதிகள்:

(தொடர்ச்சி…)

1914 முதல் சிறுவன் சின்னுவுக்கு சற்குரு சுவாமிகளின் ஆசி கிடைத்து வந்தது. ஒருநாள் சற்குரு சுவாமிகள் சிறுவன் சின்னுவிடம், “சரீரத்தை தேவாலயமாக வைத்துக்கொள். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் உபதேசங்களைப் படித்து அதன்படி நட!” என்று ஆணையிட்டார். ஸ்ரீராமகிருஷ்ணரை சின்னுவுக்கு அறிமுகம் செய்துவைத்த சற்குரு சுவாமிகளை முதல் ஞானகுருவாக தன் ஆயுள் முழுவதும் உள்ளத்தில் வைத்துப் போற்றி வழிபட்டு வந்தார் சித்பவானந்தர். அதேபோல் இளமையில் பழநி சாது ஸ்வாமிகள், சட்டி சுவாமிகள் போன்ற மகாத்மாக்களிடத்தும் நல்ல தொடர்பு வைத்திருந்தார்.

அக்காலத்தில் இங்கிலாந்து சென்று கல்வி பயில்வதை இந்தியர்கள் கெளரவமாக நினைத்தார்கள். அதேபோல் சின்னுவின் குடும்பத்தினரும் இவரை லண்டன் அனுப்பி ICS (தற்போதைய IAS) தேர்வுக்குப் படிக்கவைக்க விரும்பினர். கப்பல் பயணச்சீட்டுக்கும் பாஸ்போர்ட்டுக்கும் ஏற்பாடு செய்ய சின்னு சென்னைக்குச் சென்றார். ஒரு கடையில் தனக்கு Visiting Card அடிக்க order கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது. ஒரு மனிதன் புத்தகங்களை விற்றுக் கொண்டிருந்தான். அவனிடமிருந்த அந்தக்கால 2 அணா (12 காசு) விலையுள்ள புத்தகம் ஒன்று சின்னுவின் கண்களில் பட்டது. ‘சுவாமி விவேகானந்தரின் சென்னைச் சொற்பொழிவுகள்’ என்பது புத்தகத்தின் பெயர். புத்தகம் வாங்கப்பட்டது. நம் முன் நிற்கும் பணி ன்ற கட்டுரை வாசிக்கப்பட்டது. வந்தது மனமாற்றம். இந்திய நாட்டுக்குச் செய்ய வேண்டிய தொண்டின் அவசியத்தை சின்னு உணர்ந்தார். பாஸ்போர்ட் குப்பைத் தொட்டிக்குச் சென்றது. லண்டன் செல்லாமல் தாய்நாட்டிலேயே கல்லூரிப் படிப்பைத் தொடர முடிவெடுத்தார்.

ஆகவே 1920-இல் Madras Presidency College-இல் F.A வகுப்பில் சேர்ந்தார். பின் அதே கல்லூரியில் B.A தத்துவம் படித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது சென்னை ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று ராமகிருஷ்ணரின் நேர் சீடர் பிரம்மானந்த சுவாமிகளை தினமும் தரிசித்தார். F.A படித்துக் கொண்டிருக்கும் போது 1921-இல் இவரது தாயார் நஞ்சம்மை இறைநிலை எய்தினார். சின்னுவும் அவரது நண்பர் தி.சு.அவினாசிலிங்கமும் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சென்று ஸ்ரீமத் பிரம்மானந்த சுவாமிகள் மற்றும் ஸ்ரீமத் சிவானந்த சுவாமிகளையும் அடிக்கடி தரிசித்து வந்தனர்.

ஒவ்வொரு முறை மடத்துக்குச் செல்லும்போதும் பிரம்மானந்த சுவாமிகளுக்கு பழங்கள் வாங்கிச் செல்வார் மாணவர் சின்னு. அவர் பரவச நிலையில் இருந்ததால் ஏற்றுக்கொண்ட மாதிரி தெரியவில்லை. ஒருநாள் பழம், பூ துவும் எடுத்துச் செல்லாமல் வெறுங்கையுடன் சென்றார். சின்னு பிரம்மானந்தரை வீழ்ந்து வணங்கினார். பிரம்மானந்தர் கேட்டார், “இன்றைக்கு ஏன் பழமோ பூவோ கொண்டு வரவில்லை?”. சின்னு அதிர்ச்சியடைந்தார். ஒவ்வொரு முறையும் சமர்ப்பித்த கனிகளும் புஷ்பங்களும் அங்கீகரிக்கப்பட்டன என்பதைத் தெரிந்து கொண்டார்.

ஒருநாள் சின்னு கல்லூரியிலிருந்து விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது மரத்தின் கீழ் பழைய புத்தகங்கள் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. அங்கு மகேந்திரநாத் குப்தா எழுதிய ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்’ என்ற நூலை 1 ரூபாய் கொடுத்து வாங்கினார். அப்புத்தகத்தின் கருத்துகள் சின்னுவின் மனதில் ஆழப்பதிந்தது. இந்தக் காலகட்டத்தில் சுப்பையா சுவாமிகள் எனும் மகாத்மாவின் தொடர்பு கிடைத்தது. துறவுநெறிக்குப் பாலம் போட்டதுபோல் ஆனது. மயிலை ராமகிருஷ்ண மடத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்துகொண்டு சேவைகள் பல புரியலானார்.

1923-ஆம் ஆண்டு B.A இறுதியாண்டு முடித்தவுடன் சென்னை ராமகிருஷ்ண மடத்து சன்னியாசி அகிலானந்த சுவாமிகளுடன் பூரியில் உள்ள ராமகிருஷ்ண மடத்து விழாவுக்குச் செல்கிறார். அதற்குமுன், தனக்கு சமஸ்கிருதம் படிக்க ஆர்வம் இருப்பதாகவும் கல்கத்தா அருகிலுள்ள பேலூர் மடத்துக்கு சமஸ்கிருதம் படிக்கச் செல்வதாகவும் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். பேலூர் போகவேண்டியவர் பூரிக்கு ஏன் போனார் என்றால் அங்கு வந்திருந்த மகாபுருஷ மகராஜ் சுவாமி சிவானந்தரைப் பார்க்கத்தான். சிவானந்தரைத் தரிசிக்கிறார். ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்தில் தம்மையும் சேர்த்துக் கொள்ளும்படி விருப்பம் தெரிவிக்கிறார். சிவானந்தர் சின்னுவை சீடராக ஏற்றுக் கொள்கிறார். பூரியில் இருந்து பேலூர் மடத்துக்கு அவரே சின்னுவை அழைத்துச் சென்றார்.

பேலூர் மடம் அடைந்த சின்னுவுக்கு சுவாமி சிவானந்தர் பிரம்மச்சரிய தீட்சை செய்துவைத்தார். சின்னுவுக்கு தற்காலிகமாக ‘திரையம்பக சைதன்யர்’ என்ற பெயர் சூட்டப்படுகிறது. கங்கையில் இருந்து பெரிய குடங்களில் நீர் எடுத்து வருதல், காய்கறி நறுக்குதல், விளக்குகளை சுத்தம் செய்து எண்ணெய் ஊற்றுதல், சுற்றுப்புறங்களைக் கூட்டிப் பெருக்குதல், உணவு பரிமாறுதல், தோட்ட வேலை செய்தல், பூஜா பாத்திரங்களைத் துலக்கி வைப்பது போன்ற வேலைகளைத் திறம்படச் செய்தார். அதுமட்டுமல்ல, தம் குருநாதர் சிவானந்தருக்கு விசிறி வீசுதல், கால் அமுக்கி விடுதல் போன்ற பணிகளும் உண்டு.

1924-இல் தம் குருவின் அனுமதியுடன் தென்னாட்டில் யாத்திரை செய்தார். யாத்திரையின் போது தேசபக்தர் வ.வே.சு. ஐயரின் தொடர்பு கிடைத்தது. சேரன்மாதேவியில் உள்ள அவரது பாரத்வாஜ ஆஸ்ரமத்தில் அவரைச் சந்திக்கிறார். அவரிடம் தாம் தவம்செய்ய விருப்பப்படுவதாகக் கூற, அய்யர் பாபநாசத்தில் தவம் செய்யச் சொன்னார். 2 மாதம் பாபநாசத்தில் தவம் செய்கிறார். அப்போது ஒருநாள் வ.வே.சு ஐயர் தம் குழந்தையுடன் அருவி ஸ்நானத்துக்காக அங்கு வருகிறார். திரையம்பக சைதன்யரிடம் தம் விபூதிடப்பா, துளசி மாலை, காவி உடை ஆகியவற்றைக் கொடுத்துவிட்டு கல்யாண தீர்த்தத்தில் குளிக்கும்போது அவர் மகளை நீர் அடித்துக் கொண்டு போயிற்று. மகளைக் காப்பாற்றச் சென்ற அய்யரும் நீரில் மூழ்கி இறைவனைச் சேர்ந்தார்கள். (பிற்காலத்தில் சேரன்மாதேவி ஆஸ்ரமம் சுவாமி சித்பவானந்தரிடம் ஒப்படைக்கப்பட்டது). தவத்தையும் ஸ்தல யாத்திரையையும் முடித்துக்கொண்டு திரையம்பக சைதன்யர் போலூர் மடம் சேர்ந்து தன் குருவிடம் தன் அனுபவங்களைக் கூறி மகிழும் வேளையில், குருநாதர் உடல்நலம் குன்றியிருப்பதை கவனிக்கிறார்.

நீலகிரியில் தங்கி இருப்பது உடலுக்கு நலம் தரும் என்று குருவிடம் கூறி ஒப்புதல் பெறுகிறார். பொள்ளாச்சிக்குத் தகவல் பறக்கிறது. குன்னூரில் உள்ள தங்கள் எஸ்டேட்டில் குருநாதரும் சின்னுவும் தங்குகின்றனர். சின்னுவின் தந்தையாரும் அனைத்துக் குடும்ப உறுபபினர்களும் குன்னூர் சென்று குருநாதரை உபசரிக்கின்றனர். குன்னூர் சீதோஷ்ண நிலை சிவானந்தருக்கு ஒத்துவராததால் ஊட்டியில் ஓர் ஓய்வு இல்லத்தில் தங்க ஏற்பாடாகிறது.

நீலகிரி வாசம், சுவாமிகளின் குருநாதர் சுவாமி சிவானந்தருக்கு மிகவும் பிடித்து விட்டது. உடல் நலமும் நன்கு தேறியது. ஊட்டிக்கு அருகில் ஓர் ஆசிரமம் உருவானால் மெய்யன்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று சுவாமி சிவானந்தர் மனதில் நினைக்கிறார். அப்போது அதே யோசனையோடு சின்னுவும் சிவானந்தரும் நடந்து கொண்டிருந்த போது எதிரே ஒருவர் வந்தார். என் பெயர் திருவேங்கடம். நான் கீழ்க்கோடப்பமந்து என்ற இடத்தில் வசித்து வருகிறேன். காளிதேவி அருளால் சலவைத்தொழில் செய்து வாழ்ந்து வருகிறேன். எங்கள் குலதெய்வம் காளிதேவி. என் கனவில் அவள் தோன்றி கோயிலுக்குப் பக்கத்திலுள்ள எனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை தற்போது ஊட்டிக்கு வந்து தங்கியுள்ள என் குழந்தைகளுக்குக் (சிவானந்தர், சின்னு) கொடுக்க வேண்டும் என்று ஆணையிட்டார். அதன்படி 2 ஏக்கர் நிலத்தை இந்த சுவாமிக்கு ஒப்படைக்கிறேன்” என்றார். பரிசுத்தமான உள்ளத்தில் எழுகின்ற சங்கல்பம் சத்திய சங்கல்பமாகிறது என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்று.

1924-ஆம் ஆண்டு திருவேங்கடம் அளித்த இடத்தில் புதிய ஆஸ்ரம வேலைகள் தொடங்கின. இதைக் கட்டுவற்கு சின்னு என்ற திரையம்பக சைதன்யரின் குடும்பம் பல வகைகளிலும் உதவியாக இருந்தது. 1926-ஆம் ஆண்டு ஸ்ரீமத் சிவானந்த மகராஜ், ஆஸ்ரமத்தைத் திறந்து வைத்தார்கள். 1926-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் தேதி ஆடிப் பெளர்ணமி நன்னாளில் ஸ்ரீமத் சிவானந்த சுவாமிகள் திரையம்பக சைதன்யருக்கு சந்நியாசம் கொடுக்க முடிவு செய்தார். அன்று முழுவதும் திரையம்பக சைதன்யர் (சின்னு) உபவாசம் இருந்தார். சந்நியாச தீட்ஷை பெறுவதற்கு முன்பு பித்ருக்களுக்குப் பிண்டம் போட வேண்டும். (உயிருடன் இருந்தாலும்) பிண்டம் போடும் சடங்கினைச் செய்தார். அதே நேரத்தில் பொள்ளாச்சியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபடியே இவரது தந்தையார் பெரியண்ணன் இறைவனடி சேர்ந்தார். சந்நியாசம் ஏற்றுக்கொள்ளும்முன் பிண்டம் போடுகிற நேரத்தில் தந்தை உண்மையிலேயே உயிரைத் துறந்தது ஓர் அரிய, ஆச்சரியமான மெய்சிலிர்க்க வைக்கும் செயல்! சுவாமி சிவானந்தர் சொன்னார்: “நீங்கள் இருவருமே பாக்கியசாலிகள். உன் தந்தையின் மரணம் சற்றுமுன் நிகழ்ந்திருந்தால் உனக்கு சந்நியாச தீட்சை தருவது 1 வருடம் தள்ளிப் போடப்பட்டிருக்கும். உன் தந்தை உடலைவிடும் போது உன் கையில் பிண்டம் பெற்றுச் சென்றது அவர் செய்த பாக்கியம்” என்றார்.

அதன்பின் சுவாமி சிவானந்தர் திரையம்பக சைதன்யருக்கு சந்நியாச தீட்சை தந்து ‘சுவாமி சித்பவானந்தர்’ என்ற பெயரையும் சூட்டினார்கள். சுவாமி சித்பவானந்தர் சந்நியாசம் பெற்றவுடன் சதாசிவம் பிள்ளை என்பவரின் வீட்டுக்குச் சென்று முதல் பிட்சை ஏற்றார். (இந்த அன்பர் தம் கடைசிக் காலத்தை தபோவனத்திலேயே கழித்து சுவாமிகளின் திருவடியிலேயே தம் உயிரை விட்டவர்) தந்தை காலமான செய்தி வருகிறது. இறைவனை நினைத்து உருகினால் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என வீட்டுக்குக் கடிதம் எழுதிவிட்டு வீட்டிற்கும் தனக்கும் உள்ள உறவுக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்.

ஆக சின்னு சித்பவானந்தர் ஆன நிகழ்வுகள் இத்துடன் முடிய சுவாமிகளின் செயல்திறன்கள் பற்றி மேலும் காண்போம்.

(தொடரும்)

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், அன்புக் குரல், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

4 Replies to “[பாகம் 12] சின்னு சித்பவானந்தர் ஆனார்”

  1. சுவாமி சித்பவானந்தர் குறித்த கட்டுரை அவருடைய மேன்மையை எடுத்துக் காட்டுகிறது. காவி அணிந்தவர் எல்லாம் துறவியர் அல்ல. ஆனால் இளமைப் பருவத்தில், கல்லூரி நாட்களில், மாணவர்கள் உல்லாசமாக இருக்க விரும்பும் காலத்தில், சுவாமி சித்பவானந்தர் கல்கத்தா சென்று அங்கு எல்லா எடுபிடி வேலைகளையும் செய்து, சமையலறையில் காய் கறி நறுக்குவது முதல் துணிகள் தோய்ப்பது முதல் துறவிகளுக்குப் பணிவிடை செய்த நிகழ்சிகளை என்னவென்று சொல்வது. செல்வந்தர் வீட்டுப் பிள்ளை, இளைஞன், கல்லூரி மாணவன், இப்படி தகுதிகள் இருந்தும் அவருடைய இளமை வேறு யாருக்கு வரும்? அவருடைய மேன்மைக்கு ஈடாக சொல்ல வேறு எவரும் உண்டா தெரியவில்லை.

  2. இங்கிலாந்து சென்று IAS படிக்க விரும்பியவரை இந்தியாவின் தலை சிறந்த துறவியாக மாற்றியமைத்தது ஸ்வாமி விவேகானந்தரின் ஒரு சிறு நூல் என்னும் செய்தி இன்று நாடு முழுதும் வாழும் அனைவருக்கும் சொல்லப்பட வேண்டிய அற்புதச் செய்தியாகும்.
    ஊட்டி ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்கு இடம் கிடைத்த செய்தி முன்பு ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் வெளிவந்திருந்தது. ப்ரமிப்புக்குரிய இத்தகைய நிகழ்வுகள் குருதேவரின் அருளால் இ/என்றும் நிகழ்ந்து வருவதை அவரது குழந்தைகள் உணர்வார்கள்.

  3. ஐயா சோமு அவர்களின் கட்டுரை நெஞ்சை நெகிழவைக்கிறது. தொடர்ந்து எழுதி நூலாகவும் வெளியிடுங்கள் துறவுக்கும் தொண்டுக்கும் தூய்மைக்கும் இலக்கணமாக வாழ்ந்த மகான் ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகளைப் பற்றிப்படிக்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
    அன்புடன்
    விபூதிபூஷண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *