பாலகிருஷ்ணனும் பசித்த துறவியும்

ந்தக் கோபிகைகள் பாலகிருஷ்ணனுடைய அழகான சொரூபத்தையும், லீலைகளையும் பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள். அதை அந்தத் துறவிக் கேட்டார். அது வரையில் அவர் பிரம்மத் தியானத்தில் லயித்திருந்தார்.

அவருடைய மனம், திடீரென்று, கோவிந்தனைக் காண வேண்டுமென்று ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டது. நாராயணருடைய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவர் மனம் அகஸ்மாத்தாக கிருஷ்ணரைச் சந்திக்கத் துடித்தது.அவருடைய அனுமதிக்குக் காத்திருக்காமலேயே, கால்கள் யஸோதா ராணியின் மாளிகையை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டன.

யஸோதாம்மா மாளிகைக்கு முன்புறம் துறவி வந்தடைந்தார்.துறவிகளுக்கு அங்கு எப்போதுமே அமோக வரவேற்புத் தான்.மேலும் அந்தத் துறவி பிரசித்தமானவர், அவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். நந்தகோபரும், யஸோதாம்மாவும் ஓடி வந்து அவருடைய பாதங்களில் தடாலென்று விழுந்தார்கள். விழுந்து நமஸ்காரம் செய்தார்கள்.

‘நீங்கள் வந்திருப்பது எங்கள் பாக்கியம். எங்களுடைய அதிர்ஷ்ட நட்சத்திரம் மிளிர ஆரம்பித்து விட்டது. வாருங்கள், வாருங்கள். ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களுடைய தரிசனம் கிடைத்திருக்கிறது. எங்கே போயிருந்தீர்கள்? வெகு காலமாகி விட்டது’.

‘நந்தகோபரே, உங்களுக்கு நான் என்ன சொல்வது? நான் வீடு-வாசல், சொந்த-பந்தம் எல்லாவற்றையும் துறந்து விட்டேன். நான் இப்போது ஊருக்கு, வீட்டுக்குப் போவதில்லை. எங்காவது போவதென்றால், உங்கள் மாளிகைக்கு மட்டும் தான் வருகிறேன். எல்லாவற்றையும் துறந்து, காட்டில் வசித்துக் கொண்டிருக்கிறேன். இன்று எதிர்பாராத விதமாக, உங்கள் வீட்டில் ஒரு பாலகன் பிறந்து வந்திருக்கிறான் என்று கேள்விப் பட்டேன். என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை. என் கால்கள் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தி விட்டன. உங்கள் பாலகனைத் தரிசிக்க வந்திருக்கிறேன்’.

தன் புதல்வனைக் காண வந்திருக்கிறார் என்று அறிந்ததும், யசோதாம்மா பரபரப்பாக ஓடிப் போய், ‘எங்கே இருக்கிறான் என் மகன்?’ என்று தேடலானார்கள். போய்ப் பார்த்தால், பாலகிருஷ்ணன் தன் சகாக்களோடு குதூகலமாக, கோகுலத்தின் புழுதியில் உருண்டு, புரண்டு விளையாடிக் கொண்டிருந்தார். யஸோதாம்மா கிருஷ்ணனை வாரி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு மாளிகைக்கு அழைத்து வந்தார்கள். மாளிகையில் இருத்தி, பாலகனின் உடையில் படிந்திருந்த மண்துகள்களைத் தட்டி விட்டார்கள். சிரசில் இருந்த மண்துகள்களையும் தலை வாரி எடுத்து விட்டு, சுருண்டு முன்னால் ஸ்டைலாக விழுந்திருந்த கேசங்களை இழுத்துப் பின்னால் கட்டினார்கள். முந்தானைத் தலைப்பால் அவருடைய முகத்தைத் துடைத்தார்கள். பிறகு கிருஷ்ணனை அந்தத் துறவியின் முன்னால் கொண்டு வந்து அவருடைய பாதங்களில் கிடத்தினார்கள். கிருஷ்ணனும் பவ்யமாக நமஸ்காரம் செய்துக் கொண்டே துறவியின் பாதங்களை இறுக்கத் தழுவிக் கொண்டார். ஏன்? கிருஷ்ணனுக்குத் துறவிகளின் மேல் அதீதப் பிரியம். அட்டாச்மென்ட் அதிகம். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

எப்போது அந்தத் துறவி கிருஷ்ணனின் அழகைக் கண்டாரோ, அப்போது அவர் வழிபட்டுக் கொண்டிருந்த தெய்வத்தையே மறந்து விட்டார். அப்படி ஒரு தெய்வம் இருந்ததாக ஞாபகமே இல்லை. திரும்பக் காட்டிற்குப் போக வேண்டும் என்பதையும் மறந்து விட்டார். வைத்த கண் வாங்காமல், மெய்மறந்து, நீலமேனி சியாமள வண்ணனின் அழகைப் பருகிக் கொண்டிருந்தார்.

யசோதாம்மா சொன்னார்கள், ‘துறவியாரே, இன்று துவாதசி. நீங்கள் துவாதசிப் பூஜையை எங்கள் இல்லத்திலேயே அனுஷ்டிக்க வேண்டும். உங்களைக் கைக்கூப்பிப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்’.

துறவி சொன்னார், ‘இல்லையம்மா, இல்லை. நான் இப்போது ஆகாரம் உட்கொள்ளுவதை நிறுத்தி விட்டேன். என்னால் உங்கள் இல்லத்தில் உண்ண முடியாது. என்னை மன்னிக்க வேண்டும். வெறும் பழங்களை மட்டுமே புசிக்கிறேன்’

‘எங்கள் இல்லத்திற்கு வந்தவரை ஆகாரம் எதுவும் சாப்பிட வைக்காமல் அனுப்ப என்னால் இயலாது, சுவாமி. எதுவாக இருந்தாலும் சரி’. யசோதாம்மா திட்டவட்டமாகச் சொல்லி விட்டார்கள்.

யசோதாம்மாவின் பிடிவாதத்திற்கு முன்னால் துறவியின் பேச்சு எடுபடவில்லை. அவர் சரியென்று ஒத்துக் கொண்டார்.

துறவி அவருடைய உணவை அவரே சமைத்துச் சாப்பிடுபவராதலால், சட்டென்று யசோதாம்மா குளித்து முடித்து, சுத்தமான வஸ்திரமணிந்து, சுத்தமான பாத்திரம்-பண்டங்களை எடுத்து வைத்தார்கள். புதிதாக அடுப்பு ஒன்றையும் கோசாலையில் (மாட்டுத் தொழுவத்தில்) அக்கறையாக அமைத்துக் கொடுத்தார்கள். பவித்ரமான கறந்த பாலையும் கொண்டு வந்துக் கொடுத்தார்கள். அரிசி, சர்க்கரை, இத்யாதிகளை வழங்கி விட்டு சொன்னார்கள், ‘துறவியாரே, உங்களுக்கு வேண்டிய அன்னத்தைத் தயார் செய்யுங்கள். நீங்களும் உண்ணுங்கள். நாங்கள் எங்களுடையப் பிறவிப் பயனை அடைந்து விடுவோம்’.

துறவி பகவானுக்காக அன்னத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். பகவானுக்கு நைவேத்யம் செய்து விட்டு, பிறகு அவர் பிரசாதத்தை உட்கொள்ளுவார். யசோதாம்மா மேலும் அந்தத் துறவிக்கு வழங்க வேண்டியதான பொருள்களைத் திரட்டுவதில் முனைந்து விட்டார்கள். மற்ற துறவிகளுக்கு வழங்கியதை விட இவருக்கு அதிக தானங்கள்; வெகு காலமாக பழக்கப் பட்டவர் என்பதால்.

துறவி இன்று ஸ்ரீமன் நாராயணனுக்காக வேண்டி பால்பாயாசம் செய்திருந்தார். அதை முதலில் ஆறச் செய்தார். பால்பாயாசம் ஆறின பிறகு, அதை முன்னால் வைத்து மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தார்.‘உங்களுடைய வஸ்துவை உங்களுக்கே அர்ப்பிக்கிறேன். வாருங்கள், வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று பகவானைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

அந்த சமயம், கிருஷ்ணன் பிரவேசம் செய்து, அவருக்கு எதிரில் வந்து அமர்ந்து கொண்டார். துருதுருவென்றிருந்த கோவிந்தன் அமர்ந்து, யதேச்சையாக நைவேத்யத்தை உண்ண ஆரம்பித்தார். நீலமேக வண்ணன் வெள்ளை வெளேரென்றிருந்த பால்பாயாசத்தை உண்ணலானார். என்ன ஒரு கான்ட்ராஸ்ட்! கோமளமான வாயைச் சுற்றிலும் பாயாசம். வாயால் சாப்பிட்டதைக் காட்டிலும், முகத்தில் அதிகம் திட்டு, திட்டாகத் தெரிந்தது.

துறவி ஜபம் முடிந்து, நைவேத்யம் முடிந்தது என்று நினைத்துக் கண்ணைத் திறந்தால், எதிரே என்ன கண்டார்?

நைவேத்யத்தை உண்ணும் கிருஷ்ணன். அதுவும் எப்படி? வாய் வரைக்கும் வந்துக் கொண்டிருந்த, பாயாஸம் நிரம்பிய வலது கை, பாதியிலேயே நின்றிருந்தது.
துறவி பாலகிருஷ்ணனைக் கண்டார். பாயாஸம் முகத்தில் ஒட்டி இருந்ததோடில்லாமல், மேனியிலும், உடையிலும் சிந்தி இருந்தது. இந்தக் காணக் கிடைக்காத அழகிய கோலத்தை ரசிப்பதா, இல்லை, இன்னும் எடுத்துக் கொள் என்று சொல்வதா, என்கிற பிரக்ஞ்ஜை இல்லாமல் அவர் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தார். இவ்வளவு அழகான காட்சியை தன் வாழ் நாளில் கண்டதே இல்லை.

துறவி கண் திறந்து விட்டதைப் பார்த்ததும், கிருஷ்ணர் சட்டென்று, எழுந்து அங்கிருந்து நகர ஆரம்பித்து விட்டார். அப்புறம் தான் துறவிக்கு உறைக்க ஆரம்பித்தது.
‘விபரீதம் நடந்து விட்டது, யசோதா ராணி. யசோதாம்மா, இங்கே வாருங்கள்’.

இதைக் கேட்டதும், யசோதாம்மா கைக்காரியத்தை விட்டு விட்டு ஓடி வந்தார்கள். கிருஷ்ணன் தான் ஏதோ செய்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே கோசாலையை நோக்கி விரைந்தார்கள். அப்போது தான் கிருஷ்ணன் கோசாலையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். முகத்திலும், உடையிலும் நெய்வேத்யம். யசோதாம்மா ஆடிப் போய் விட்டார்கள். ‘நாராயணா, நாராயணா! நமது இல்லத்திற்கு ஒரு துறவி வந்திருக்கிறார். இந்தக் குழந்தை இப்படி அநியாயம் செய்கிறதே!

‘மன்னித்துக் கொள்ளுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள், சுவாமி. இந்தக் குழந்தை இருக்கிறானே, இளம்பிராயம், விஷமம் அதிகம்’. துறவி சொன்னார், ‘அம்மா, எனக்கு ஆத்திரம் கடுகத்தனையும் இல்லை. நீங்கள் இவ்வளவு ஆவேசப் பட வேண்டாம். அவனை ஒன்றும் சொல்லாதீர்கள். மனத்தாங்கலும் அடையாதீர்கள். கடவுள் விட்ட வழி. தினமும் பழங்களை மட்டுமே புசிக்கும் நான் ஆகாரம் எப்படி சாப்பிடலாயிற்று என்று அந்த பரமாத்மாவே எனக்கு உணர்த்த விரும்புகிறார் என்று தான் எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் சஞ்சலம் அடைய வேண்டாம். சாயங்காலமாகி விட்டது. நான் புறப்படுகிறேன். கொஞ்சம், கொஞ்சமாக இப்படியே நேரம் கழிந்தால், காட்டிற்குள் செல்லும் பாதை கண்ணுக்குப் புலப்படாது’.

யசோதாம்மா அழுது விடுவார்கள் போலிருந்தது.

‘சுவாமி, நீங்கள் இப்படிப் பசியோடு இங்கிருந்து சென்று விடுவீர்களானால், நாங்கள் பிறவிகள் தோறும் அடைந்த புண்ணியங்கள் எல்லாமே விரயமாகி விடும். உங்களைப் போக விட மாட்டேன். இப்படி விபரீதம் விளையும் படி செய்து விடாதீர்கள். போகாதீர்கள். இன்னும் ஒரு தடவை சிரமம் பார்க்காமல் பராயணம் (விரதம் முடிந்து ஆகாரம் உட்கொள்ளும் செயல்) செய்யுங்கள். எல்லாம் சரியாகி விடும். இந்தத் தடவை கிருஷ்ணனை உங்களிடம் அண்டவிட மாட்டேன்’.

யசோதாம்மா திரும்பவும் பழையபடி குளித்து, வஸ்திரம் அணிந்து, துறவிக்கு எல்லாமே புதிதாக ஏற்பாடுகள் செய்துக் கொடுத்தார்கள். கிருஷ்ணனை கவனமாக மடியில் பிடித்து வைத்து உட்கார்ந்துக் கொண்டு விட்டார்கள். ‘எது வரைக்கும் துறவி உணவு அருந்தவில்லையோ, அது வரைக்கும் கிருஷ்ணனை விட மாட்டேன்’ என்று தீர்மானித்து விட்டுக் குழந்தையை அணைத்துக் கொண்டிருந்தார்கள்.

துறவி திரும்பவும் நெய்வேத்யம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இங்கே கிருஷ்ணன் அம்மாவின் மடியில் உட்கார்ந்திருந்து, தூங்கி விட்டதாக பாவ்லா செய்தார். யசோதாம்மா அவர் தூங்கி விட்டதாகவே நினைத்தார்கள். ‘அப்பாடா, தூங்கி விட்டான். அது தான் க்ஷேமம். இந்தத் தடவை துறவி ஆகாரம் உண்டு விடுவார்’ என்று ஆசுவாசம் அடைந்தார்கள்.

காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்தது. சட்டென்று யசோதாம்மாவுக்கும் சற்றே கண் அயர்ந்து விட்டது. அம்மா தூங்கினது தான் தாமதம், கிருஷ்ணன் விருட்டென்று எழுந்து, திரும்பவும் கோசாலையை நெருங்கி விட்டார். அங்கு அப்போது தான் துறவி மூடிய கண்களுடன் நெய்வேத்யம் அளித்துக் கொண்டிருந்தார்.

கண்களைத் திறந்த போது, எதிரில் திரும்பவும் கிருஷ்ணன்.

மடியிலிருந்து கிருஷ்ணன் எழுந்துக் கொண்ட போதே, யஸோதாம்மாவுக்கு முழிப்பு வந்து விட்டது. கிருஷ்ணனைப் பிடிக்க பின்னாலேயே ஓடி வந்தும், தாமதமாகி விட்டது. எது நடக்ககூடாதென்று, அத்தனைக் கவனமாக இருந்தார்களோ அது நடந்தேறி விட்டது. யசோதாம்மா இடிந்து போய் விட்டார்கள்.‘இப்போது துறவி விட மாட்டார். என் குழந்தைக்கு நிச்சயம் ஏதாவது ஆகி விடும். ஓ, நாராயணா, என் குழந்தையை எப்படியாவதுக் காப்பாற்றுங்கள். மறுபடியும் விபரீதம் நடந்து விட்டது’. யசோதாம்மா கோபம் தலைக்கேற, கிருஷ்ணனை வெடுக்கென்று இழுத்தார்கள்.

இழுத்ததுமே, அவர்களுக்கே அழுகை பீறிட்டுக் கொண்டு வந்து விட்டது. துறவியின் கால்களைப் பிடித்துக் கொண்டு, ‘மன்னித்து விடுங்கள், இவன் குழந்தை. பேதமையால் இப்படி செய்து விட்டான். இவனுடையப் பிழையை தயவு செய்துப் பொறுத்தருள வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டே, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்கள்.

அம்மா அழுவதைப் பார்த்துக் கிருஷ்ணனும் பயந்து விட்டார். துறவிக்கு யசோதாம்மா அழுவது கண்ணில் படவில்லை. அவருக்குப் பசியுமில்லை. அவருடைய பார்வை கிருஷ்ணனின் மேல் இருந்தது. அம்மாவின் அழுகையைக் கண்டு, அதனால் உண்டான மிரட்சி கண்களில் தெரிந்தது. அதைக் கண்டு, ‘எங்கே இவன் அழுது விடுவானோ’ என்கிற கவலை அவரைப் பிடித்துக் கொண்டது.

‘பாருங்கள், பாருங்கள். நீங்கள் அழ வேண்டாம். நீங்கள் அழுவதைப் பார்த்து கிருஷ்ணன் கலங்குகிறான்; பயப்படுகிறான்’.

‘சுவாமி, இவனை நான் என்ன செய்வதேன்றே தெரியவில்லை. இவன் மஹா விஷமம். குறும்பு என்றால் அப்படியொரு குறும்பு’.

‘நீங்கள் கோபப் படாதீர்கள், ஆத்திரப் படாதீர்கள். நான் உணவு உண்ணக்கூடாது என்பது தான் கடவுள் சித்தம் என்று எண்ணுகிறேன். அதை நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?’

யசோதாம்மா இப்போது ஓவென்று அரற்றவே ஆரம்பித்து விட்டார்கள். அழுகைச் சத்தம் கேட்டு நந்தகோபரும் ஓடி வந்து, துறவியின் கால்களில் விழுந்து வணங்கினார். ‘மன்னித்துக் கொள்ளுங்கள், சுவாமி., மன்னித்துக் கொள்ளுங்கள். எங்கள் குழந்தை மஹா விஷமம். எத்தனைத் தடவைச் சொன்னாலும் புரிவதில்லை’.

யசோதாம்மாவின் அழுகை நின்றபாடில்லை. யஸோதாம்மா அழுது கொண்டே போனார்கள், கிருஷ்ணன் மிரள மிரளப் பார்த்துக் கொண்டிருந்தார். துறவி அவன் அழுது விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார்.

துறவி யசோதாம்மாவை வினவினார், ‘ இப்போது நான் என்னதான் செய்ய வேண்டுமென்று சொல்கிறீர்கள்? அழாமல் சொல்லுங்கள். சொன்னால் தானே தெரியும்?’

தன்னைச் சுதாரித்துக் கொண்டு யசோதாம்மா சொன்னார்கள், ‘நான் வேண்டுவது வேறொன்றுமில்லை. இன்னும் ஒரு தடவை பிரசாதத்தை தயாரிக்கிற சிரமத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரே ஒரு தடவை. இது தான் கடைசி. என் மீது கருணை காட்டுங்கள். இவ்வளவு தூரம் செய்து விட்டுப் பின்வாங்க வேண்டாம். இந்தத் தடவை குழந்தையைத் தூக்கிக் கொண்டு உபநந்தரின் மாளிகைக்குப் போய் விடுகிறேன். இங்கிருந்தால் தோதுபடாது. இந்த மாளிகையைச் சுற்றி நான்கு வாசல்கள் உள்ளன. ஒரு வாசலுக்கு ஒருத்தர் என்ன இரண்டு பேரைக் காவலுக்கு நியமிக்கிறேன். நந்தகோபரும் அவர்களோடு சேர்ந்து வாசலைக் காப்பார்’.

‘சரி. நீங்கள் எது உசிதமென்று நினைக்கிறீர்களோ அப்படியே ஆகட்டும்’.

திரும்பவும் எல்லாமே ஆரம்பத்திலிருந்து தொடங்கின. யசோதாம்மாவின் குளியல் முடிந்து, நெய்வேத்யம் தயாரிப்பதற்கான உபகரணங்கள், பதார்த்தங்கள் வந்தன. தளராமல் துறவி சமையலைத் துவக்கினார்.

யசோதாம்மா கிருஷ்ணனை உபநந்தரின் மாளிகைக்கு கொண்டு சென்று விட்டார்கள். நந்தகோபர் மற்ற காவலாளிகளோடு காவல் காப்பதற்கு அமர்ந்து விட்டார். யசோதாம்மா முன்னெச்சரிக்கையாக, உள்ளிருந்து கதவை மூடி தாளிட்டுக் கொண்டார்கள்.கிருஷ்ணனை தூங்க வைக்க ஆரம்பித்தார்கள்.

‘தூங்கி விடு, இல்லையானால் -துறவிக்கு ஏதாவது சிரமம் கொடுத்தால்- தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன். கொஞ்சம் யோசித்துப் பார். உன்னுடைய இதயம் ஏன் இப்படி கொடூரமாகி விட்டது? உன்னால் அந்தத் துறவி காலையிலிருந்து மல்லாடிக் கொண்டிருக்கிறார். அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அவருடைய பராயணம் நஷ்டமாகிற மாதிரி ஒன்றும் செய்யாதே. கொஞ்சம் அவருக்குத் தயை காட்டு’.

துறவி சமையலை ஆரம்பித்து, திரும்பவும் பால்பாயாசம் செய்தார்.செய்து விட்டு, ஆற வைத்தார். ஆற வைத்து தங்கப் பாத்திரத்தில் வைத்தார். பிறகு, பகவான் நாராயணரை வழிபட ஆரம்பித்தார்.

‘ஏ, கருணைக் கடலே, வாருங்கள், ஏன் தாமதிக்கிறீர்கள்? இந்த தாசன் உங்களுக்கு நெய்வேத்யம் வழங்க அமர்ந்திருக்கிறேன். அருள் கூர்ந்து வரவேண்டும், வந்து நெய்வேத்யத்தை சுவீகரிக்க வேண்டும்’.

யசோதாம்மா கிருஷ்ணனை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். கதவு மூடி இருந்தது. சட்டென்று அம்மாவின் கைகளை உதறி விட்டு தன்னை விடுவித்துக் கொண்டார். கதவை யார் திறப்பது? தானாகவே திறந்து விட்டது கதவு. கிருஷ்ணன் எடுத்தார் ஓட்டம். கிருஷ்ணன் முன்னால், பின்னாலேயே யசோதாம்மா.

‘யாராவது பிடியுங்கள், யாராவது நிறுத்துங்கள். இல்லாவிட்டால், இவன் திரும்பவும் விபரீதம் செய்வான். துறவி பசியோடு இருந்து விடப் போகிறார்’.

யசோதாம்மாவின் அலறலைக் கேட்டு, நந்தகோபர் கிருஷ்ணனைப் பிடித்துக் கொண்டு விட்டார். நந்தகோபர் கேட்டார், ‘நீ திரும்பவும் போகிறாயா?’ நந்தகோபர் கிருஷ்ணனைப் பிடித்து விட்டதைப் பார்த்த பிறகு, யசோதாம்மாவிற்கு உயிரே வந்தது. ‘அப்பாடா, இந்தத் தடவையாவது துறவி சாப்பிடுவார்’. அருகே வந்து கிருஷ்ணனின் காதைப் பிடித்து, ‘உன் அட்டகாசம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. படித்துப் படித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், புரியவில்லை உனக்கு? ஏனிப்படி பிராணனை வாங்குகிறாய்? அந்தத் துறவியைப் பட்டினி போடுவதென்றே கங்கணம் கட்டி விட்டாயா? வீட்டுக்கு வந்த துறவி பட்டினி கிடந்தால், அந்த வீட்டில், எல்லாமே கெட்டுக் குட்டிச்சுவராகி விடும். நீ என்னடாவென்றால், துறவியை ஆகாரம் உண்ண விட மாட்டேன் என்கிறாய்’.

கிருஷ்ணனுக்குக் கோபம் வந்து விட்டது. (இது என்ன அபாண்டமாக இருக்கிறது? நானா அவரைத் தொந்தரவு செய்கிறேன்? அவர் தான் என்னைத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.)

நந்தகோபர் கிருஷ்ணனைப் பிடித்து நிறுத்தி விட்டோம் என்ற பெருமிதத்தில் இருந்தார்.

ஸ்ரீமன் நாராயணனான கிருஷ்ணர் எங்கு தான் இல்லை? எல்லாவிடத்திலும் இருக்கிறார். அவருடைய ஒரு சொரூபத்தைத் தான் நந்தகோபர் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் கிருஷ்ணனோ அவரே இன்னொரு சொரூபத்தில் துறவியின் அருகில் சாவகாசமாக அமர்ந்து நெய்வேத்யத்தை உண்டுக் கொண்டிருந்தார்.

துறவியோ கண்களை மூடிக் கொண்டு, ‘தங்கக் கிண்ணத்தில் படைத்திருக்கும் நெய்வேத்யத்தை அருந்துங்கள், நாராயணா’ என்று கைகொட்டி, மெய் மறந்துப் பாடிக் கொண்டிருந்தார்.

துறவி கண் விழித்த பிறகு பார்த்தால், திரும்பவும் அதே கிருஷ்ணன் . ‘குழந்தாய் , நீ ஏன் திரும்பத் திரும்ப வந்து விடுகிறாய்? என்ன விஷயம்?’

கிருஷ்ணன் சொன்னார், ‘எந்தத் தெய்வத்தை ஜென்ம, ஜென்மாந்திரங்களாக ஸ்துதி செய்து கொண்டிருந்தீர்களோ, அந்தத் தெய்வம் திரும்பத் திரும்ப பிரதக்ஷ்யமாக வந்து நெய்வேத்யத்தை ஸ்வீகரிப்பதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லையா?’ கிருஷ்ணன் உடனே தன்னுடைய நாராயண சொரூபத்தை அவருக்கு தரிசனம் கொடுத்தார்.

துறவி திக்குமுக்காடிப் போய் விட்டார். சாஷ்டாங்கமாக பகவானுடைய பாதங்களில் விழுந்து வணங்கினார். கிருஷ்ணனின் பாதங்களில் இருந்த திருமண்ணைத் தன் தலையில் தடவிக் கொண்டார்.

கிருஷ்ணன் சொன்னார், ‘நீங்கள் இத்தனை காலமாக என்னை வணங்குகிறீர்கள். இத்தனைக் காலமாக எனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்று உங்கள் மனோரதத்தை பூரணமாக நிறைவேற்றிவிட்டேன். அம்மாவிடம் இதைப் பற்றி மூச்சு விட வேண்டாம். அப்பாவிடமும் ஒன்றும் சொல்ல வேண்டாம்’.

துறவிக்கு ஆனந்தம் கரை புரண்டோடியது. பிரசாதத்தை எடுத்தார். உண்டார். தன சிகையில் தடவிக் கொண்டார். தன் அங்கங்கள் முழுவதிலும் தடவிக் கொண்டார். தடவிக் கொண்டு கோசாலை முழுவதையும் சுற்றி, செம்புக்கு நாமத்தைப் போட்டு விட்டு, ‘கோவிந்தா’ என்று நாம் உருளுவதைப் போல, உருண்டார். கதவைத் திறந்து வெளியே வந்த போது, யசோதாம்மா கேட்டார்கள், ‘ பராயணம் முடிந்து விட்டதா? ஆகார சாந்தி ஆகி விட்டதா? நான் கிருஷ்ணனை உள்ளே வர விடவே இல்லை. இதோ பாருங்கள் அவனைப் பிடித்து வைத்திருக்கிறேன்’.

‘அம்மா, ஒரு ஏகாதசி விரதம் மட்டும் முடியவில்லை. எத்தனையோ ஜென்மங்களாக இருந்த விரதம் முடிந்து பராயணம் செய்த மாதிரி இருக்கிறது. எத்தனை, எத்தனை ஜென்மாந்திரங்களாக நான் ஏகாதசி விரதம் இருந்து வந்தேனோ, அதனால் தான் இன்று இப்படியோரு பராயணம் முடிந்தது. யாருடைய வாழ்க்கையில் இந்த மாதிரி பராயணம் முடிகிறதோ, அவருடைய ஏகாதசி விரதம் வெற்றியடைந்து விடும். நான் பிறவிக் கடலைத் தாண்டி விட்டேன். அம்மா, உன்னுடைய குழந்தை இருக்கிறானே, விஷமம் செய்பவனேயானாலும் மிக நல்லவன். மிகவும் பிரியத்திற்குரிவன்’. முதலில் இப்படித் தான் சொல்ல வாயெடுத்தார், ‘உன் பிள்ளை சாதாரணமானவனில்லை. உன் பிள்ளை பரப் பிரம்மம்’.

கிருஷ்ணன் கண்ணைக் காட்டி மிரட்டியதும், ‘இல்லை, இல்லை, உன் பிள்ளை மிக நல்லவன். மிகவும் பிரியத்திற்க்குரிவன்’ என்று சொல்லிச் சமாளித்தார். யசோதாம்மா நினைத்தார்கள், ‘துறவிக்கு என்னவாயிற்று? கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நன்றாகத் தானே இருந்தார்? பிரசாதத்தைத் தலையிலும், உடம்பிலும் பூசி மொழுகிக் கொண்டிருக்கிறாரே?’

நந்தகோபர் சொன்னார், ‘உனக்குப் புரியாது. துறவிக்கு காலையிலிருந்தே பசி. சாயங்காலமாகி விட்டது. இப்போது கிடைத்தது என்று மேலிருந்து கீழ் வரைச் சாப்பிட்டு விட்டார்.

தன் பக்தர்களின் மனோரதத்தை பூர்த்தி செய்ய நம் கோவிந்தன் என்ன வேண்டுமானாலும் செய்வார்.
கோகுலத்தில் எல்லோருடைய மனோரதத்தைப் பூர்த்தி செய்த அந்த கிருஷ்ணன் நம்முடைய மனோரதத்தைப் பூர்த்தி செய்ய மாட்டாரா என்ன? அவருக்கு நம்மிடம் என்ன விரோதமா? அவர்கள் எவ்வளவு பிரியமாக நெய்வேத்யம் செய்தார்களோ, அதே பிரியத்துடன் நாமும் செய்வோமே.

17 Replies to “பாலகிருஷ்ணனும் பசித்த துறவியும்”

 1. ///கிருஷ்ணனுக்குக் கோபம் வந்து விட்டது. (இது என்ன அபாண்டமாக இருக்கிறது? நானா அவரைத் தொந்தரவு செய்கிறேன்? அவர் தான் என்னைத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்..///

  Cute. பொழுது இன்று அழகாக விடிந்தது.

 2. ஒரு நல்ல அழகான நிகழ்வு வெகு நேர்த்தியாக புனையப்பட்டு உள்ளது. கண்ணனைக் காண்பது எத்துணைச் சுலபம்! என்ன தவம் செய்தனை யசோதா, அம்மா என்று உன்னை அழைக்க.
  மயிலாடுதுறையான்.

 3. //சுருண்டு முன்னால் ஸ்டைலாக விழுந்திருந்த கேசங்களை //
  //துறவிகளின் மேல் அதீதப் பிரியம். அட்டாச்மென்ட் அதிகம். //
  //என்ன ஒரு கான்ட்ராஸ்ட்! //

  பேசும்போதுதான் ஆங்கிலத்தைத் தவிர்க்க முடியவில்லை என்றால் கட்டுரை எழுதும்போது கூடவா?

 4. It is not ‘pArAyaNam’ but ‘pAraNam’, which means ‘eating and drinking after a fast’. Further, in the beginning YashodA asks the sage to observe his ‘dvAdashI’ fast, but at the end the sage says it is ‘ekAdashI’ fast. I too think that English words should be avoided. But for these hitches, a good story.

 5. @Chandru,
  எனக்கு கூட ஏதுவோ வித்தியாசமாகப்பட்டது இந்த பதிவில் , ஆனால் என்ன வென்று தெரியவில்லை. உங்களின் பின்னூட்டத்தைப்பார்த்தபின் தான் புரிந்தது :).

 6. @Saidevo,ஏகாதசியன்று முழு நாள் உபவாசம் இருந்து துவாதசி அன்று காலை பூஜை முடித்துப் பின் உணவு எடுத்துக் கொள்ளுவதுதான் வழக்கம். எனவே துவாதசி பூஜை/ ஏகாதசி விரதம் முடிப்பது இரண்டும் ஒன்றுதான். அதில் தவறில்லை. ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டிய மற்றொரு விஷயம் சரியே. பாராயணம் இல்லை -பாரணைதான் சரி.

  @விஷ்ணு முராரி, குறை சொல்வதாக எண்ண வேண்டாம். மற்றபடி அருமையான புனைவுதான் இது.

 7. இந்தக் கதையில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை பாராயணம் அல்ல. பராயணம். பராயணம் என்பதை ஒழுகுவது, கடைப்பிடித்தல், பூர்த்தி செய்தல் என்கிற அர்த்தத்தில் எழுதப் பட்டிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

  உதாரணத்திற்கு, கர்த்வ்ய-பராயண் (கடமை தவறாமை), நீதி-பராயண் (நீதிநெறி வழுவாமை).

 8. கண்ணனை பற்றி நினைத்தாலே நினைப்பவர் தம்மையே மறந்திடுவார்! ஆனால் ஒன்று புரிய வில்லை அவன் ஏன் கோபிகைகளிடம் ஆத் மார்தமாக (உடல் சார்ந்து அல்ல ஆத்மாவை சார்ந்துபழகியதை ) இன்றயவர் தவறாக பேசுகின்றார்கள் என்று.

 9. @chandru, சம்ஸ்க்ருதம் வரலாம், ஆங்கிலம் வரக்கூடாதோ! என்னே மொழி அரசியல். அதை விடுங்க சார். ஆராயக் கூடாது, அனுபவிங்க 🙂

 10. மிகவும் அழகாய் வந்திருக்கிறது துறவியின் பாவமும் கிருஷ்ணா லீலையும்,
  அந்த கிருஷ்ண-யோகியை பற்றி எவ்வளவும் முறை வேண்டுமானாலும் படிக்கலாம் 🙂

  நன்றி,

  சஹ்ரிதயன்

 11. மிகவும் அழகான கதை… எங்க பாட்டி காலத்து நினைவுகள் வருகிறது. குழந்தைக்கு சொல்வது போல் … @ சந்துரு….,. இருக்கட்டும் சார்… குழந்தைக்கு சொல்லும்போது தூய தமிழ், சமஸ்கிருதம்,இங்கிலீஷ் இப்படி எல்லாம் பாக்க வேண்டாம். மிகவும் அழகாக சொல்லி இருக்கும் கருத்தை எடுத்துகொள்வோம்….

 12. Good article,makes me feel like watching the god in my heart …..

  keep it up

 13. Power corrupts, absolute power corrupts absolutely.

  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எதற்குக் கோவர்த்தன மலையைத் தன் சுண்டு விரலில் தாங்கிக் கொண்டாரோ, அதற்குக் காரணமாக அமைந்தது, இந்திரனின் பெரும் கோபம். கிருஷ்ணர் கோவர்த்தன மலையரசருக்குப் பூஜை செய்வித்ததை இந்திரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தனக்குப் பாத்தியமான பூஜை, தன்னிடமிருந்துப் பறிக்கப்பட்டு விட்டதாக எண்ணினார். அப்படி இந்திரன் இளக்காரமடைந்து விட்டதால், அவர் பிரிஜ் பூமியின் மீது ஏழு நாட்கள், ஏழு இரவுகள் கடுமையான மழையைக் கொட்ட வைத்தார்.

  ஏழு நாட்கள், ஏழு இரவுகள்.

  பிரிஜ் மண்டலம் முழுவதையும் மழையால் அடித்துக் கொண்டு சென்று விட வேண்டும் என்கிற ஆவேசம் அவருடைய மனதில் இருந்தது. அது என்ன சாதரணமான பூமியா? எங்கு சர்வேஸ்வரர் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய பாலலீலைகளை செய்துக் கொண்டிருந்தாரோ, அந்த பூமி அது. எங்கு சர்வேஸ்வரி ஸ்ரீ ராதாவின் கிருபை, பௌர்ணமி நிலவு போல என்றும் காய்ந்துக் கொண்டிருந்ததோ, அந்த பூமி அது. அப்படிப் பட்ட பூமியை இந்திரன் மழைவெள்ளத்தால் அடித்துக் கொண்டுப் போக எண்ணி விட்டார்.

  இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இந்திரன் கைகளால் அப்படி ஒரு அபச்சாரம் ஏன் நடந்தது? எப்போது பகவான் பெயர், பதவி, அந்தஸ்து, மரியாதை இவைகளைத் தருகிறாரோ, அப்போதே, ஏதோ ஒரு விதத்தில் உயிர்கள் பகவானை மறந்து விடுகின்றன. நீங்களும், நாங்களும் மட்டுமல்ல, இந்திரனும் தான். இந்திரன், பகவான் தேவதைகளின் பாரத்தையும் சேர்த்துத் தீர்க்கத் தான் அவதாரமெடுக்கிறார் என்பதை மறந்து விட்டார். இந்திரனோ தேவதைகளுக்கெல்லாம் ராஜா. அவருடைய மனதிலும், ‘எனக்குப் பூஜையை செய்துக் கொண்டிருந்தவர்கள், அதே பூஜையை எப்படி இன்னொருத்தருக்குச் செய்யலாயிற்று?’ என்கிற பாவனை வந்து விட்டது. தான் இந்திரனாக ஆக்கப்பட்டவரேயொழிய, தானே இந்திரன் அல்ல என்பதை மறந்து விட்டார். மாறிக் கொண்டே இருப்பது இந்திர பதவி. ஒரு கணக்குப் படி, பிரம்மாவின் ஒரு மணிக்கு ஒரு தடவை இந்திரன் மாறிக் கொண்டே இருப்பாராம். பிரம்மாவுக்கு ஒரு மணி நேரம் ஆகி விட்டால் ஒரு இந்திரனின் பதவிச் சீட்டுக் கிழிந்து விடும். இந்திரனுக்கு சிறப்பான இமேஜ் கூட ஒன்றுமில்லை. இந்திரன் என்றால் பெரும்புள்ளி என்பதெல்லாம் கிடையாது. நூறு அஸ்வமேத யாகம் செய்து முடித்து விட்டால், நீங்களும் இந்திரனாகி விடலாம். அதில் சந்தேகமேயில்லை.
  தனவான்கள், பத்து வருஷத்தில் நூறு அஸ்வமேத யாகம் செய்து விட்டால் இந்திரனாகி விடலாம். குறைந்த பட்சம் இந்திரனாவதற்குக் காத்திருப்பவர்களின் க்யூவில் நின்று விடலாம். க்யூவோ பெரிய க்யூ. ராஜா பலி இன்னமும் வைட்டிங் லிஸ்டில் நின்றுக் கொண்டு தான் இருக்கிறார். இப்போதிருக்கும் இந்திரன் போய் விட்டால், அடுத்து, பலி இந்திரனாவார். அங்கும் வேகன்ஸி இல்லை. ஆனால், இந்திரனாவது என்னவோ நிச்சயம்.

  நாம் செய்த சில புண்ணியங்களைக் கூட்டி, இந்திரனாகி விடலாம்; நல்ல காரியங்களைச் செய்து விட்டால் தேவர்களாகி விட முடியும். ஆனால், கோடிக்கணக்கான ஜென்மங்களின் புண்ணியங்களை ஒரு வழியாகச் சேர்த்துத் தான், மனிதன் உருவாக்கப் படுகிறான். தேவர்களாவது ஒன்றும் பிரமாதமில்லை; மனிதனாவது தான் அபூர்வம்.

  ஒரு தடவை சிவபெருமானும், பார்வதிதேவியும் கயிலாய மலையில் அமர்ந்திருந்தார்கள். திடீரென்று ஒரு கொக்குப்பறவைகளின் கூட்டம் மலையைக் கடந்து செல்வதைப் பார்த்து, சிவபெருமான் சிரித்து விட்டார்.

  பார்வதிதேவி கேட்டார்கள், ‘ ஏன் சிரித்தீர்கள் சுவாமி?’

  ‘ஒன்றுமில்லை, விடு, தேவி’.

  ‘எதற்குச் சிரித்தீர்கள் என்று தான் சொல்லுங்களேன்’.

  ‘ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை’.

  ‘பெருமானே, நீங்கள் எனக்குச் சொல்லவில்லை என்றால், வேறு யாருக்குத் தான் சொல்வீர்கள்?’

  யார் மனைவியிடம் எதையும் மறைப்பதில்லையோ அவனே கணவன்.

  பார்வதி தேவி சொன்னார்கள், ‘கொஞ்சமாவது சொல்லுங்களேன்’.

  ‘சரி, அதோ பறந்துக் கொண்டிருக்கிறதே அவை என்ன என்று தெரியுமா?’

  ‘கொக்குகள்’.

  ‘சாதாரணக் கொக்குகள் அல்ல’.

  ‘பிறகு?’

  ‘தேவி, இவை எல்லாக் கொக்குகளுமே எத்தனையோ முறை இந்திரனாகி இருந்திருக்கிறார்கள். இப்போது இவைகளின் பரிதாப நிலைமையைப் பார். இந்திரனாக இருந்தவர்கள் எப்படியாகி ஆகி விட்டார்கள்?’.

  இந்திரனே கொக்காகப் பிறக்க நேரிட்டால், நாம் என்னவாகப் பிறப்போம் என்று எண்ணிப் பாருங்கள்.

  நல்ல காரியங்களைச் செய்தால், தேவர்களாகலாம். உயிர் பிரிவதற்கு முன்னால் எல்லா இச்சைகளையும் தொலைத்து விட்டால், சாக்ஷாத் பரமபிதா பரமாத்மாவிடம் நம்முடைய ஆத்மா ஐக்கியமாகி விடும்.

 14. //Keerthi on December 23, 2011 at 9:17 am//

  நிச்சயம் சமஸ்கிருதத்துக்கும் ஆங்கிலத்துக்கும் ‘ஹிந்துத் தத்துவங்கள்’ என்னும் அடிப்படையில் நிறைய வேற்றுமைகள் உள்ளன.

  தமிழில் ‘நம் தாய் மொழி’ என்கிற முறையில் நாம் தகவல் பரிமாறிக்கொண்டாலும், ‘ஹிந்து’ என்னும் அடிப்படையில் சமஸ்கிருதச் சொற்களை முரணில்லாமல் பயன்படுத்தப்படுவது தவறல்ல/தேவையும் கூட. ஆனால், இந்தக் கருத்துப் பரிமாற்றத்துக்கு ஆங்கிலம் அவசியம் என எனக்குத் தோன்றவில்லை.

  ஹிந்து சமயக் கருத்துக்களைப் பற்றிய வலைத்தளச் செய்திகளில் ‘சமஸ்கிருதம்’ என்பதை ‘மொழி’ என்னும் கண்ணோட்டத்துடன் பார்க்காமல், ‘மந்திரம், புராணம், இதிஹாசம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள சொற்கள்’ எனப் பார்ப்பது நல்லது.

  ஒரு தமிழ் ஹிந்து, பிரார்த்தனைக்குப் பயன்படுத்துகிற/வாழ்க்கையில் சாதாரணமாகப் பயன்படுத்துகிற எத்தனையோ விஷயங்களை சமஸ்கிருத்தத்திலும் காண முடியும். ஆங்கிலத்துக்கும் இவற்றுக்கும் பொதுவாகத் தொடர்பு கிடையாது. வேண்டுமானால் தமிழிலிருந்தும் சமஸ்கிருதத்திலிருந்தும் தகவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பார்கள்.

  ‘பாரணை, பராயணம், பாராயணம்’ என்பவற்றைப் பெயர்ச் சொல்லாகப் பயன்படுத்தியிருப்பது சமஸ்கிருதக் கலப்பன்று. மாறாக, ‘பாரணை’ உள்ளிட்ட பெயர்ச் சொற்களை ஒரு தமிழருக்கு விளக்க ஆங்கிலத்தையோ அல்லது வேறு ஒரு மொழியையோ பயன்படுத்துவது தான் ,மொழிக் கலப்பு.
  //T J Madhavan on December 23, 2011 at 11:37 pm//Power corrupts, absolute power corrupts absolutely.//

  தங்கள் எழுத்து ஆனந்தமளிக்கும் விஷயம். மேற்கண்ட மேற்கோளும் அருமையானதும் பொருத்தமானதும் ஆகும். பணி தொடர்க.

 15. அழகான கட்டுரை. படிக்க படிக்க பால்பாய்சம் சாப்பிட்ட மகிழ்ச்சி. கண்களின் ஓரத்தில் கண்ணீரையும் வர வழைக்கிறது. ஹ்ம்ம்… துறவி உண்மையில் மிகவும் புண்ணியம் செய்தவர் 🙂

  நடுவில் ஒரு சில இடங்களில் ஆங்கிலம் உபயோகித்தது தவறு அல்ல….அதுவும் தவிர ஆங்கிலம் ஆப்பிரகாமிய மொழி அல்ல…. அது பாகன் கள் மொழி. அதையும் திருடிவிட்டார்கள். திருடனுக்கு பிறந்த திருடர்கள்…..

  விஷ்ணு அவர்களுக்கு எனது நன்றி. இது போன்று கட்டுரைகளை அடிக்கடி எழுதுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *