[பாகம் 6] சித்பவானந்தரின் குணநலன்கள்

சுவாமி சித்பவானந்தர் உடனான வாழ்க்கை அனுபவங்கள் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் ஐந்தாவது பாகம்.
முந்தைய பகுதிகள்:

அஹிம்சை

அஹிம்சை என்றால் பிறருக்குத் தீங்கிழையாமை, பிறரைத் துன்புறுத்தாமை, புண்படுத்தாமை எனப் பொருள்படும். அஹிம்சை என்பது பிறருக்கு மனதாலோ, சொல்லாலோ, உடலாலோ தீங்கிழைக்காமல் இருப்பதாகும். பிறர் நம்மை துன்புறுத்துவதை நாம் விரும்புவதில்லை. பிறர் நமக்கு எதைச் செய்யக்கூடாதென்று நாம் விரும்புகிறோமோ அதை நாமும் பிறருக்கு செய்யக்கூடாது என்று மத நூல்களும் கூறுகின்றன. ஒருசெயல் நேரடியாக காணும்போது துன்பம் போல் தோன்றினாலும் அது உண்மையில் அவருக்கு நன்மையைச் செய்யும் என்றால் அது இம்சையாகாது. டாக்டர் செய்யும் அறுவை சிகிச்சை அப்படிப்பட்டது. தாவர உணவை மட்டுமே உண்ணுதல் என்பது அகிம்சையின் வெளிப்பாடாகும். உலகில் உள்ள நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் சைவ உணவை உண்பவர்கள் அதிகமாக உள்ளனர். எல்லா உயிரினங்களும் மற்ற உயிரினங்களை சார்ந்துதான் வாழ்கின்றன. எலிக்கு திண்டாட்டமானது பூனைக்கு கொண்டாட்டமாகிறது; மானுக்கு திண்டாட்டமானது புலிக்கு கொண்டாட்டமாகிறது அப்படியென்றால் மனிதன் மட்டும் ஏன் இறைச்சியை சாப்பிடக் கூடாது?. தன்னை பற்றிய சுயஉணர்வு கொண்ட மனிதன் தனக்கு என்னவேண்டுமென்று அறிந்து தன் விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தவனாவான். நம் உயிரை காப்பாற்றிக் கொள்ள என்ன தேவையோ அதை நாம் சாப்பிட்டால் போதும். பிற உயிரினங்களுக்கு உணவாவதை நாம் விரும்புவோமா? அதை போல பிற உயிரினங்களை நமக்கு உணவாக்கலாமா? பெரும்பாலான தாவரங்கள் நமக்கு காய்களையும், கனிகளையும் வழங்குகிறது. இதனால் அவை இறப்பதில்லை. கீரையை வேரோடு பிடுங்கி விடுகிறோமே என்ற வாதம் சரியான வாதமாகாது. திருவள்ளுவர், தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் ‡ தன் உடலை பெருக்கும் பொருட்டு மற்றொரு விலங்கை கொன்று உண்பவன் எவ்வாறு இறைவனுடைய அருளை பெற முடியும்? பிறர் கொன்று விற்பதை தானே நான் வாங்குகிறேன். யாரும் புலால் உண்ணாவிட்டால் விற்பவர்கள் எப்படி பிழைப்பார்கள்? என்ற வாதம் பொருளற்றது. வாங்கி தின்பவர் இல்லையயன்றால் விற்பவரும் விற்கமாட்டார். நரகம் கூட பிணத்தை உள்ளே அனுமதிப்பதில்லை. ஆனால் நாம் பிணத்தை தின்ன வாயை திறக்கிறோம் ஆக நம் உடல் ஒரு சவக்கிடங்கு ஆகும். அநாவசியமாக ஒரு மரத்தையும் வெட்டக்கூடாது. அப்படி வெட்ட நேர்ந்தால் அந்த இடத்தில் 10 மரங்களை நடவேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. செயலாலோ பேச்சாலோ பிறரை புண்படுத்தாமல், மாமிசம் உண்ணாமல் இருப்பது அஹிம்சையாகும்.

ஆசை அறுமின்! ஆசை அறுமின்!! ஆசை அறுமின்!!!

2. நமக்கு சொந்தமென்று நினைப்பதை ஆராய்ந்து பார்த்தால் எதுவுமே நமக்கு சொந்தமில்லை என்பது புரியவரும். நிலமோ, வீடோ, அறிவோ, மக்களோ, பொருட்களோ, நம்முடைய உடலோ, மனமோ எதுவும் நமக்கு சொந்தமில்லை. நம்மிடம் சிறிது காலத்திற்கு இவைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உங்கள் வீடு ஒரு நிலத்தில் இருக்கிறது. அந்த நிலத்தை நீங்கள் படைத்தீர்களா? நீங்கள் கட்டிய வீட்டை கட்ட பயன்படுத்தப்பட்ட செங்கல், மணல், இரும்பு, தண்ணீர், மரம், சுண்ணாம்பு, சிமெண்ட் இப்படி அனைத்தையும் உங்களால் படைக்கப்பட்டதா? தச்சர்கள், கொத்தனார்கள், மேஸ்திரி, பிளம்பர், எலக்ட்ரிசியன் இப்படி எத்தனை பேருடைய உழைப்பு உங்கள் வீட்டினுள் இருக்கிறது. உங்கள் வீட்டை கட்டுவதற்குரிய மூலப்பொருட்கள் ஏற்கனவே ஆண்டவன் படைப்பில் இருந்தன. அவற்றை சேர்த்து நம் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி தற்காலிகமாக நம் வசத்தில் இருக்கும் இந்த வீட்டை கட்டியிருக்கிறோம். உங்களுடைய தாயார் நான்தான் பெற்றேன். ஆதலால் உன்னுடைய உடல் எனக்கு சொந்தம் என்கிறார். உங்களுடைய தந்தையார் நானின்றி உனக்கு இந்த உடல் ஏது? என்கிறார். உங்களுடைய மனைவி திருமண சடங்குகளால் நான் உங்களில் பாதி என்கிறார். உங்கள் குழந்தை உங்களுடைய உடல் எங்களுக்கு உழைப்பதற்கு கடமைப்பட்டுள்ளது என்கிறது. ஆக இந்த உடலில் குடியிருந்து இதை பாதுகாத்து வைத்திருப்பது உங்களிடம் உள்ள தற்காலிக உடமை. நீங்கள் இதை என்னுடைய உடல் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனாலும் இதற்கு சொந்தக்காரர் நீங்கள் இல்லை. வீடோ, பணமோ, பொருளோ, குடும்பமோ இதற்கு நான்தான் எஜமான் என்று நினைத்தால் உங்களுக்கு மனஅழுத்தம் உண்டாகிறது. ஏனெனில் அப்பொழுது மனம் உள்ளதை உள்ளவாறு காண்பதில்லை. சொந்தக்காரன் என்ற கண்ணாடியை போட்டுக்கொண்டு பார்க்கிறீர்கள் மாறாக, நான் இதற்கு பாதுகாவலன் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று உணர்ந்தால் உள்ளதை உள்ளவாறு உணர்ந்தவர்கள் ஆவோம். அதிக ஆசை வைக்காமல் இருக்கவேண்டும். நமக்கு எவற்றுடன் உள்ள உறவும் நிலையானதல்ல என்பதை புரிந்து கொண்டால் நாம் எதற்கும் சொந்தக்காராகமாட்டோம். அப்பொழுது பற்று தானாக விலகிவிடும். அந்த மனநிலை நமக்கு வேண்டும்.சுவாமி எதிலும் ஒட்டாமல் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தார்.

சமநிலையில் இருத்தல்

3. நமக்கு பிடித்தவை கிடைத்துவிட்டது என்பதால் நாம் தலை கால் தெரியாமல் குதிக்கக் கூடாது. நமக்கு பிடிக்காதது கிடைத்து விட்டால் இடி விழுந்தது போல் சோர்ந்து விடக்கூடாது. ஒரு விபத்து நடந்துவிட்டால் நம் மனதை நடுநிலையில் வைத்து நாம் என்னசெய்யவேண்டுமென்று தீர்மானம் செய்யவேண்டும். ஒரு முறை ஊட்டியிலிருந்து சுவாமிஜி வரும்போது கார் ப்ரேக் டவுனாகி விட்டது. டிரைவர் கலங்கினார். உடன் வந்தவர்கள் பயப்பட்டார்கள்.சுவாமிஜி டிரைவரை ஒரு தட்டு தட்டி ஒரு மரத்தின் மீது மோதச் சொன்னார். அனைவரும் உயிர் தப்பினர். ஆக, இனி செய்யவேண்டுவது என்ன என்பதை ஆலோசித்து செயல்பட வேண்டும். நமக்கு பிடித்தது நடக்கும்போது சந்தோ­ப்படுதலும் நமக்கு பிடிக்காதது நடக்கும்போது பாதாளத்தில் விழுந்தது போல் துயர்வுறுவதும் தேவையா? விருப்பமோ இல்லையோ, வெற்றியோ தோல்வியோ, நல்லதோ, கெட்டதோ, வசதியானதோ, வசதியற்றதோ எதுவானாலும் சரி மனம் எப்பொழுதும் சமநிலையில் இருக்கவேண்டும்,
சூழ்நிலைகளை எதிர்கொண்டு செயல்படுபவனே நன்கு செயல் ஆற்ற முடியும். இதுதான் பலம். ஒவ்வொரு சூழ்நிலையிலும் பதற்றமில்லாமல் கவனித்து செயல்படுபவனே பலம் படைத்தவன். மனோபலமே உண்மையான பலம் ஆகும். சூழ்நிலைகளை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் கோழைகள். வெறுப்புகளின் பூச்சில்லாமல் உண்மைகளாக பார்க்க கற்றுக்கொண்டால் நம் மனம் சமநிலையை அடைகிறது; அமைதியை அடைகிறது. அன்றாட வாழ்வியல் நிகழ்ச்சிகளுக்கு அதை அப்படியே உள்ளவாறு ஏற்றுக்கொள்ளும் மனநிலை வேண்டும். உணர்ச்சி வசப்படாமல், பதற்றம் அடையாமல் இருத்தல் சிறப்பு இதன்படிதான் திருப்பராய்த்துறை சித்பவானந்தர் வாழ்ந்தார்.

பொறுமை

4. நமக்கு சில வி­யங்கள் பிடித்திருக்கலாம். பிறரை இவ்வாறுதான் நடக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்போம்.அவர்கள் அதன்படி நடக்காவிட்டால் நமக்கு கோபம் வருகிறது. இதுபோல எதிர்பார்ப்புகளை விட்டுவிட்டு மனிதர்களை அவரவர்கள் உள்ளபடி நாம் ஏற்றுக்கொண்டு அவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும். இதை பொறுமை என்றும் கூறலாம்; சகிப்புத்தன்மை என்றும் சொல்லலாம். ஒரு மனிதருடைய எல்லா குணங்களும் நமக்கு பிடித்தமாதிரி அமைவதில்லை. எல்லா மனிதர்களுமே நமக்கு பிடித்த, பிடிக்காத குணங்கள் உள்ளவர்களாகத் தான் இருப்பார்கள். இதேபோல, பிறரும் நம்மிடம் உள்ள சில குணங்களை விரும்பலாம். சில குணங்களை வெறுக்கலாம். ஆதலால், பிறருக்கு நாம் முற்றிலும் விரும்பத்தக்கவராக இருக்கமுடியாது. மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நம்மால் மாறுவது என்பது சாத்தியமில்லை. அதுபோன்று, நாம் எதிர்பார்ப்பது போல மற்றவர்களும் மாறுவதும் சாத்தியமில்லை. இதுதான் எதார்த்தம். சில மனிதர்களை நம்மால் மாற்றமுடியாது. ஆகவே அவர்களை புரிந்துகொண்டு விட்டு கொடுத்து இணங்கி போதல் அவசியம். வெயில் அதிகமாகும் போது அதன் உஷ்ணம் நமக்கு பிடிப்பதில்லை. அதற்காக, சூரியன் தான் பிரகாசிப்பதை நிறுத்திவிடுமா? தேனீ நம்மை கொட்டிவிடுகிறது. அதற்காக தேனீயை வெறுப்பது சரியா? நமக்காக மற்றவர்கள் எல்லாரும் மாற வேண்டும் என்ற கருத்து சரியான கருத்தாகாது. நாம் ஒவ்வொரு எண்ணத்தையும் செயலையும் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். சகிப்புத்தன்மை என்ற பண்பை நம் எண்ணம், சொல், செயல் இவற்றில் வளர்த்து கொள்ள வேண்டும். ஒரு சாதுவுக்கு அஹிம்சையும், பொறுமையும் அழகான குணங்கள். ஒருவருக்கு ஞானம் இருக்கலாம்; இல்லாமல் போகலாம். ஆனால் எவர் ஒருவர் மனதாலோ வாக்காலோ, செயலாலோ எவரையும் துன்புறுத்துவதுதில்லையோ எவர் ஒருவர் மற்றவர்களை நல்லவராகவே கெட்டவராகவோ அவர்கள் உள்ளபடி அப்படியே ஏற்றுக்கொள்கிறோர்களோ, எவர் எது செய்தாலும் மன்னித்து பொறுமையுடன் இருக்கிறாரோ அவரே சாது! பொறுமை, சகித்தல், விட்டுக்கொடுத்தல், தயை இவையனைத்தும் சகிப்புத்தன்மையில் அடங்கிவிடுகிறது. சந்நியாசி ஒருவன் மன்னிப்பதற்கு தயங்கவே கூடாது. என்பதை உணர வேண்டும். எம்.ஜி.ஆர் காலதாமதமாக வந்ததை சுவாமிஜி சுட்டிக்காட்டினார். அவர் வருத்தம் தெரிவித்த அடுத்த விநாடியே சிரித்து ஏற்றுக்கொண்டார் நமது சித்பவானந்தர். இந்த சகிப்புத்தன்மை இருந்ததால் தான் தபோவனம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்தது.

நேர்மை

5. எண்ணம், சொல், செயல் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பதற்கு நேர்மை என்று பெயர். நாம் எண்ணுவது ஒன்று; சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்று இருந்தால் அது நேர்கோடாகாது. சத்தியத்தை கடைப்பிடித்தல் என்று இதைக்கொள்ளலாம். ஆனால் நேர்மை என்பது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் சொல்லுக்கும் அனைத்துக்குமே பொருந்தும். சொல்வதுபோல் செய்யவேண்டும். நினைப்பதுபோல் செயல்படவேண்டும். ஆகவே நேர்மை என்பது மிகவும் வேண்டற்பாலதாகிறது. இத்தகுதியை முழுதும் பெற்றிருந்த மாமனிதர் சித்பவானந்தர்.

தைரியம்

6. தன்னுடைய தர்மத்தைச் செய்வதில் விடா முயற்சியுடன் ஈடுபடுதல் தைரியமாகும். தைரியம் என்பது ஆத்ம ஞானத்தை அடைவதற்கு வேண்டிய மனஉறுதியையும், விடா முயற்சியையும் குறிக்கும். தன்னைப் பற்றிய ஞானத்தை அடைய வேண்டும் என்ற உறுதி கொண்டபின் அதற்கான சாதனங்களில் உறுதியான ஈடுபாடும் வேண்டும். அந்த ஞானத்தை வேண்டி இந்தப் பண்புகளை வளர்த்துக் கொள்வது, பாடம் கேட்பது, அதைப்புரிந்து கொள்வதற்கு வேண்டிய மொழியைக் கற்பது முதலிய சாதனங்களில் விடா முயற்சியுடன் ஈடுபட வேண்டும். ஆத்ம ஞானம் என்பது மற்ற ஞானங்களைப் போல் சிறிது சிறிதாகப் பெற்றுக் கொள்ளப்படும் ஞானம் அல்ல. இது பூர்ணமான வஸ்துவைப் பற்றிய அறிவு என்பதால் இதுவும் பூர்ண அறிவு. அதாவது இந்த அறிவில் மற்ற அனைத்து அறிவுகளும் அடங்கியுள்ளன. இந்த குறிக்கோளில் அனைத்து குறிக்கோள்களும் அடங்கியுள்ளன. ஆதலால், இதற்கான ஈடுபாடு, அர்ப்பணம், முயற்சி இவைகளும் பூரணமாகவும். உறுதியாகவும் இருக்க வேண்டும். மருத்துவமனையில் இருக்கும்போது மருத்துவர்கள் இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு வாரிசு எதுவும் நியமிக்கிறீர்களா? என்று கேட்டபோது, சுவாமி, ஈஸ்வரன் பார்த்துக் கொள்வார் என்று அமைதியாக பதிலளித்தது மருத்துவர்களை வியப்படையச் செய்தது. தன் இறுதிக்காலம் வரை சுவாமிஜி தைரியத்தை கைவிடவேயில்லை.

வைராக்கியம்
7. வைராக்கியம் என்றால் பற்றின்மை, புலன் வி­யங்களை தேடிச் செல்லாமை. நம்முடைய மன விகாரங்களை, விருப்பு, வெறுப்பின்றி அவற்றுக்கும் நமக்கும் உள்ள சம்மந்தத்தை ஆலோசித்து காண்பதுதான் வைராக்கியமாகும். பசிக்காக சாப்பிடுவது காமம் அல்ல. நாவின் ருசிக்காக சாப்பிடுவது காமமாகும். உடலை மூட ஆடை உடுப்பது காமமல்ல ; அதை விதவிதமாக அணியவேண்டுமென்பது காமம். நாம் எத்தனை பொருட்களை சேர்த்தாலும்; எத்தனை இன்பங்களை அனுபவித்தாலும் எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் நம்முடைய பாதுகாப்பற்ற உணர்வைஇன்னும் வேண்டுவேண்டுமென்ற ஏக்கத்தை அது நீக்கப்போவதில்லை. பொருட்கள் மீது நம் சொந்த மதிப்பீடுகளை ஏற்றிவைக்காமல் அவற்றை அவைகளாகவே பார்ப்பதுதான் பாரபட்சமின்றி பார்த்தலாகும்; இதுதான் வைராக்கியம். ஆத்மஞானம் அடைவதற்கு இது மிகவும் அவசியமான பண்பு. வைராக்கியம் என்பது ஓர் அறிவு பூர்வமான மனநிலை அன்றி பல்லைக் கடித்துக்கொண்டு ஆசைகளை அடக்குவது அல்ல.ஒரு பொருளை நாம் விரும்பும்போது அதை ஏன் விரும்புகிறோம்; அதனால் நமக்கு என்ன பயன், அது நீடித்த பலனை கொடுக்குமா என்றெல்லாம் விசாரம் செய்கிறோம். அப்பொழுது பொருட்கள் உள்ளவாறு தோற்றமளிக்கின்றன. அதனால் நாம் பல சிக்கல்களிலிருந்து விடுபடுகிறோம். வீடு நம்மை பிடித்துக்கொண்டு இருப்பதாக சொல்கிறோம். அதற்குரிய கைப்பிடியை அதனிடம் கொடுத்தது நாம் தானே. இதைப்புரிந்து கொள்ளும்போது பந்தம், பாசம், பற்று அனைத்தும் விலகி விடுகிறது. தன்னுடைய துறவிலும், ஈடுபட்ட கடமைகளிலும் இந்த வைராக்கியம் என்ற பண்பை சுவாமி சித்பவானந்தர் கடைபிடித்தார்.

தலைமைப்பண்பு

8. எவனொருவனை மற்ற மனிதர்கள் தன்வழிகாட்டியாக ஏற்கிறார்களோ அவன்தான் தலைவன். அவன் மற்றவர்களை வழிநடத்திச் செல்லக்கூடிய சக்தியை படைத்தவனாக இருக்கிறான். பாராட்டுதலையும், கைதட்டலையும் எதிர்பார்க்காமல் ஒவ்வொரு நாளும் 20 மணிநேரம் வேலைசெய்யும் தலைவனின் கீழ் பணியாற்றுபவர்கள் சோம்பேறிகளாக இருந்ததாக சரித்திரம் இல்லை. நாம் அந்த விதத்தில் பாக்கியவான்கள். குறிப்பிட்ட செயல்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளை சீராக செய்து முடிக்கும் தலைவராக சுவாமிஜி இருந்ததால் அவரை சார்ந்தவர்களும் அவரவர் பணிகளை அவர்களாகவே செய்து முடித்து விடுவதை நாம் கண்கூடாக காணலாம். சமையல், கழிவறை சுத்தம் என்று எதைச் செய்தாலும் சுவாமி திருப்தியாக செய்தார்.மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பே இல்லாமல் இருந்தார். ஜனங்களை நிர்வகிப்பதில் ஒருவன் தன்னை ஒவ்வொரு நிலையிலும் உயர்த்தி கொண்டால் எந்தச் சூழ்நிலையிலும் ஒருவனுடைய மதிப்பு பணியாட்களிடம் தானே உயரும். கெளரவத்தை மக்களிடம் கேட்டு பெறமுடியாது. ஜனங்களை நிர்வாகம் செய்பவன் ஜனங்களிடத்தில் தனக்குள் மரியாதையை தன் அதிகாரத்தின் மூலம் பெற முயற்சிக்காமல் அந்த மரியாதைக்கு தானே பாத்திரமாக இருக்கும்படி நடந்துகொள்ளவேண்டும். ஒருவருக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகள் போன்றவை ஓரளவுக்குத்தான் பயன்தரும். அன்புடனும் சேவை மனப்பான்மையுடனும் ஒருவனை பணிசெய்ய தூண்டுவது எது? அவன் நலனில் நாம் கொள்ளும் அக்கறைதான். திருப்பராய்த்துறையில் ஆசிரியர்கள் சிரமப்பட்டபோது அவர்களுக்கு வருடத்திற்கு வேண்டிய “நெல்”(லை) அளந்து கொடுத்த அன்புக்கு சொந்தக்காரர் அவர். நம் சமுதாயம் தர்மத்தையே அடிப்படையாக கொண்டது. அதிகாரத்தையோ, உரிமையையோ அடிப்படையாக கொண்டது அல்ல. கடமையை செய்வதில் உயர்வு தாழ்வு என்பது கடுகளவும் கிடையாது. உயர்வு தாழ்வு என்ற உணர்வின்றி அவரவர் செயல்களை அவரவர் செய்ய வேண்டும். ஒவ்வொரு வேலையும் மற்ற எந்தவொரு வேலையையும் போன்று புனிதமானதே. கடமை உணர்ச்சியுடன் அரசர்களால் ஆளப்பட்ட ஜனங்களும் தங்களுக்கு அரசினால் இடப்பட்ட கட்டளைகளை தங்களுடைய கடமையாக கருதி மனநிறைவுடன் செயல்பட்டனர். இதனால் அரசனும் மனநிறைவுடன் செயல்பட்டான். ஜனங்களும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.நமக்கு பணிசெய்பவர்கள்கூட நம்மை விட தாழ்ந்தவர்கள் அல்ல என்பதை நாம் உணர வேண்டும். இந்த மனிதாபிமானம் இருந்தால்தான் நம்மிடம் பணியாற்றும் பணியாட்களுடன் நாம் உண்மையான தொடர்பை கொள்ள முடியும். பணியாளர்களை ஆளும் திறன் என்பது ஒருவனுக்கு தன்னைத்தானே ஆளும் திறத்தை அடிப்படையாக கொண்டது.கோபப்படுவதால் எதையும் சாதித்துவிடமுடியாது. முரட்டுபிடிவாதமும் கோபமும் ஒருவரிடம் இருந்தால் அவர் நிர்வாக வேலைக்கு பொருத்தமற்றவர். கோபப்படுபவர் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் சக்தியை இழப்பதால் மற்றவர்களை கட்டுப்படுத்தமுடியாமல் போகிறது. அவரால் வார்த்தைகளை கூட அடக்கி ஆளமுடியாது. நம் கோபம் செயக்கு மட்டுமே; சம்பந்தப்பட்ட மனிதரைத் தாக்கக்கூடாது. இவ்வாறு நிர்வாகம் செய்யவேண்டும் என்று சுவாமிஜி விளக்குவார்கள். ஆக, கொல்லாமை. ஆசையின்மை, ஒழுக்கம், சகிப்புத்தன்மை, நேர்மை, தைரியம், வைராக்கியம், தலைமைப்பண்பு ஆகிய நவநற்பண்புகள்தான் சின்னுவை சித்பவானந்தர் ஆக்கியது என்றால் அது மிகையாகாது.

(தொடரும்)

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும்  rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

5 Replies to “[பாகம் 6] சித்பவானந்தரின் குணநலன்கள்”

  1. விவேகானந்தரின் வாழையடி வாழையாக வந்த மரபில் தனி அத்யாயம் கண்டவர் சுவாமி சித்பவானந்தர்.
    அவரது நினைவு ஆன்மிக அன்பர்களுக்கு என்றும் உற்சாகமூட்டும் அமுதம்.

    -பாரதி அன்பன்

  2. திரு சோமு அய்யா அவர்களுக்கு நன்றி.

    சுவாமி சித்பவானந்தர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மிகவும் நேசித்தவர். ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்களை ‘நீங்கள் பாக்கியவான்கள்’ என்று ஆசீர்வதித்து மகிழ்ந்தவர். அது குறித்தும் கட்டுரையாளர் எழுத வேண்டும்.

    சிதபாவனந்தரது ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் தமிழகத்தில் தீண்டாமையை ஒழிப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளது. அவரைப் பற்றிய பதிவுகள் ஊக்கம் அளிப்பனவாக உள்ளன. இதையும் கட்டுரையாளர் பதிவு செய்வது அவசியம்.

  3. மகான் சித்பவானந்தரின் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் சிறந்த வழிகாட்டி. குறிப்பாக இந்தியர்களுக்கு. தபோவன விடுதியில் கழிப்பிடத் தொட்டித் தூய்மை செய்வதில் அவர் நடந்துகொண்ட விதம், தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வின் மிகச் சிறந்த அத்தியாயம் அல்லவா?

    ஸ்ரீ ராம கிருஷ்ணக் கல்வி நிறுவனங்களில் பயிலும் எல்லாக் குழந்தைகளுக்கும், ஜாதி வேறுபாடின்றி, இறைவன் திருவுருவைப் பூஜிக்கும் முறை கற்றுத் தரப்படுகிறது. இதை அனைவரும் வரவேற்பார்கள். ஆனால், கழிவறைத் தூய்மை என்கிற பணியை எல்லாக் குழந்தைகளும் செய்துகொள்ளப் பழக்கப்படுத்தப் பட்டால், சில பெற்றோர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது.

    செய்யும் சேவையில் அர்ச்சனை, அசுத்தத்தை தூய்மை செய்வது… என்று எல்லாமே மேலான சேவைகளே என்னும் உயர்ந்த, உண்மை அறிவைத் தன வாழ்க்கை மூலமே புகட்டிய இந்த மகானின் வாழ்க்கைச் சம்பவங்கள், பொது நிகழ்சிகளிலும் ஊடகங்களிலும் வெளிப்படுத்தப் பட வேண்டும். கட்டுரையாளருக்குக் கோடானு கோடி நன்றிகள். இவர் தனது கட்டுரைத் தொடரின் ஆறாவது பகுதியில் “தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சி தரும் செய்தி. இன்னும் இன்னும் ஸ்வாமிகளைப் பற்றிய நல்ல தகவல்களை நேர்த்தியாகத் தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.

  4. கட்டுரைகள் எல்லாம் அத்வைத சித்தந்தமாக உள்ளது. மற்ற சித்தாந்தங்கள் காணப்படவில்லை. இவைகள் ஹிந்து மதத்தை சார்ந்தது இல்லையா?

  5. மேலே குறிப்பிட்ட ஆண்டாள் அவர்களின் கருத்து சரியாக புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்டுள்ளது. இந்த தளத்தில் வலது கைப்பக்கம் உள்ள இன்டெக்ஸ் (index )ஐப் பார்த்தாலே தெரியும். சைவம் பற்றி 49-ம் , வைணவம் பற்றி 47-ம் எண்ணிக்கையில் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. இந்து மதம் என்பது காணாபத்யம்,(விநாயகர்) ,கௌமாரம் ( முருகன்), சாக்தம் ( அம்மன் ), சௌரம் ( சூரியன்) ஆகியவை பற்றியும் நிறைய எழுத வேண்டும். சைவத்தையும், வைணவத்தையும் மட்டும் எழுதிக்கொண்டிருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் சார்வாஹத்தினைப் பற்றியும் எழுதவேண்டும். ஏனெனில் சார்வாகம் என்பதும் இந்து மதத்தின் ஒரு பகுதியே. உண்மை இப்படி இருக்க, இந்த குறுகிய கண்ணோட்டங்களை விட்டு உண்மையை ஆராய்க. சுவாமி சித்பவானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் வழி வந்தவர். எனவே அவரைப் பற்றிய கட்டுரையில் அத்வைதம் பற்றி எழுதுவது இயல்பானதே ஆகும். அத்வைத சாரம் என்பது ராமகிருஷ்ண பரமஹம்சரின் வழியை சேர்ந்ததே. மேலும் தாங்களும் உங்களுக்கு பிடித்த பிரிவுகளைப் பற்றி தெரிந்ததை தொகுத்து , எழுதுக. அனைவரும் படித்து மகிழத் தயாராக இருக்கிறோம். நமது வலைத்தளத்தில் குறுகிய கண்ணோட்டங்கள் வேண்டாம். குறுகிய கண்ணோட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *