நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்

இயற்கைச் சீற்றமான ‘நிலநடுக்கம்’ நமது அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொண்டு படாத பாடு படுகிறது. கூடங்குளத்திலும் முல்லைபெரியாறு அணையிலும் நிலநடுக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி நாட்டின் ஒருமைப்பாட்டையே நிலைகுலையச் செய்திருக்கிறார்கள், நமது அரசியல்வாதிகள்.

முதலில் கூடங்குளத்தை பார்ப்போம். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புக்கு அடிப்படைக் காரணம், ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையம்தான். நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டு இப்போதும் அதன் கதிர்வீச்சு தொடர்கிறது. அதுபோலவே கூடங்குளத்திலும் நடந்துவிடும் என்பதே எதிர்ப்பாளர்களின் வாதம். ஆனால், நிலநடுக்கப் பகுதியில் கூடங்குளம் வரவில்லை என்பது விஞ்ஞானிகளின் விளக்கம். உண்மையில் ஜப்பானின் புகுஷிமாவையும் கூடங்குளத்தையும் ஒப்பிட முடியாது. ‘கூடங்குளம் அணுமின் நிலையம் அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டது; நில அதிர்வு குறைவான பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது; போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதில் எடுக்கப்பட்டுள்ளன’ என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விளக்கியும் கூட, அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.

இந்த அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியில் கத்தோலிக்க கிறிஸ்தவ சபை இருப்பது, கிறிஸ்தவ ஆராய்ச்சியாளரான உதயகுமாருடன் இணைந்து பங்கேற்கும் பாதிரியார்களைக் காண்கையில் உறுதியாகிறது. இவர்களுக்கு உறுதுணையாகக் குரல் எழுப்புபவர்கள் பலரும் தமிழகத்தில் வெகுமக்களால் புறந்தள்ளப்பட்ட தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தவர்களாகவும் புறக்கணிக்கப்பட்ட அரசியல் தலைவர்களாகவும் இருப்பது கூர்ந்த கவனத்துக்குரியது.

நக்சல் ஆதரவாளர்கள், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த இயக்கங்கள், தனித் தமிழ்நாடு கோருபவர்கள், ம.தி.மு.க, போன்ற கட்சிகளே கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான பிரசாரத்தில் முன்நிற்பவர்கள். இவர்களது பிரசாரத்தின் வேர், நிலநடுக்கம் வந்தாலோ சுனாமி வந்தாலோ அணுமின் நிலையம் பாதிக்கப்பட்டு தென் தமிழகம் முழுவதும் சுடுகாடாகிவிடும் என்பதுதான். இதற்கு மாறான கருத்துகளை காது கொடுத்துக் கேட்கவும் எதிர்ப்பாளர்கள் தயாரில்லை. அண்மையில் கோவையில் தொழில் அமைப்புகள் நடத்திய அணுமின் நிலைய ஆதரவுக் கருத்தரங்கில் புகுந்து தகராறு செய்து குழப்பம் ஏற்படுத்தியவர்கள் இவர்களே.

இந்த எதிர்ப்பாளர்களின் முக்கிய நோக்கம், அணுமின் நிலையத்தில் மின்சாரம் தயாரிப்பதை எதிர்ப்பதல்ல; அங்கு அணுஆயுத உற்பத்தி நிகழாமல் தடுப்பதே என்பது அவர்களது பேச்சுகளில் இருந்து தெரிகிறது. அதாவது இந்தியா அணுஆயுத வல்லரசு ஆகிவிடக் கூடாது என்ற- அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின்- ஆசையையே இவர்கள் பிரதிபலிக்கிறார்கள். அதற்கு இவர்கள் பூசும் முலாம்தான், நாட்டு மக்களின் நலன் என்ற கோஷம். நமது மத்திய அரசு, அணுமின் நிலையத்தின் நோக்கங்களை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் மென்று விழுங்குகிறது. இறுதியில் விஞ்ஞானிகளும் அதிகாரிகளுமே களம் கண்டாக வேண்டிய அவசியம் நேரிட்டிருக்கிறது.

இதே ‘நிலநடுக்கம்’ கேரள அரசியல்வாதிகளால் பிராந்திய நலனுக்காக துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அதை எதிர்ப்பவர்களும், இதே குழுவினர் என்பது ஒரு நகைமுரண். 1979-இல் கேரளத்தின் இடுக்கி மாவட்ட கிறிஸ்தவ பாதிரியார்களால் முன்வைக்கப்பட்ட ‘நிலநடுக்கம்’ தொடர்பான பிரசாரம் இன்று தறிகெட்டு நிற்கிறது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்சிமலையில் கட்டப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கத்தால் உடைந்துவிடும்; அதனால் கேரளத்தின் பல மாவட்டங்கள் அழிந்துபோகும் என்பதே, அணை எதிர்ப்பாளர்களின் பிரசாரம். கிறிஸ்தவப் பாதிரியார்கள் பற்றவைத்த சந்தேகத் தீயை ஊதிப் பெரிதாக்கியது மலையாள நாளிதழான மலையாள மனோரமா (இதுவும் கிறிஸ்தவர்கள் நடத்தும் நாளிதழே).

அதன் விளைவாக, அணையின் முழுமையான நீர்த்தேக்க அளவான 152 அடிக்கு மாறாக 132 அடி வரை மட்டுமே நீர் தேக்க வேண்டும் என்ற நிர்பந்த நிலை ஏற்பட்டது. இவ்விஷயத்தில் தமிழக அரசின் நீதிமன்ற முறையீடுகளால், தமிழகத்தின் பக்கமே நியாயம் இருப்பது உறுதியானது. 142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அத்தீர்ப்பு கேரள அரசால் ஏற்கப்படவில்லை. இந்த அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், கேரளப் பகுதிக்குள் இருப்பதால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு கேரள அரசு துணிந்தது. இப்போது பழைய அணையை முற்றிலும் இடித்துவிட்டு புதிய அணை கட்டப்போவதாக கேரளாவில் பிரசாரம் களைகட்டி இருக்கிறது. காரணம்; நிலநடுக்கத்தால் தற்போதுள்ள பழைய அணை தாக்குப் பிடிக்காது என்பதே. அதனை மறைமுகமாக வலியுறுத்தும் வகையில் ‘டேம் 999′ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு, பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது; இவ்விவகாரம் நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கிறது.

உண்மையில், நில நடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணை உடைந்தாலும் கூட, அதன் ஒட்டுமொத்த நீரும் வனப்பகுதி வழியாக இடுக்கி அணைக்கே சென்றுசேரும் என்று கூறுகிறார்கள் தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள். தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் தயாரித்துள்ள 45 நிமிடம் ஓடும் ஆவணப்படத்தில், பெரியாறு அணையின் கட்டமைப்பு, அதன் தற்காப்பு அமைப்புக்கள், அதை அண்மையில் தமிழக அரசு வலுப்படுத்திய விபரங்கள், பூகோள அடிப்படைகள், சரித்திரச் சான்றுகள் இடம் பெற்றுள்ளன. இதை காது கொடுத்துக் கேட்க கேரள அரசோ அங்குள்ள அரசியல்வாதிகளோ தயாரில்லை.

தற்போதைய முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்படுவதோ, அதன் நீர்த்தேக்க அளவு குறைக்கப்படுவதோ, தமிழகத்தின் தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வறட்சியை ஏற்படுத்தும் என்பதால், அப்பகுதியில் மக்களின் பரவலான எதிர்ப்புணர்வு, புதிய வடிவெடுத்திருக்கிறது. கேரளா சென்ற தமிழக ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டது, மக்களின் கோபத்தை அதிகரித்து, தமிழக–கேரளா எல்லைப் பகுதியில் பெரும் பீதியையும் கொந்தளிப்பையும் உருவாக்கி இருக்கிறது.

இந்நிலையில், கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் பலரும் இப்போது தங்கள் ஜாகையை முல்லைப் பெரியாறுக்கு மாற்றிக்கொண்டு முழக்கமிடத் துவங்கி இருக்கிறார்கள். எந்த நிலநடுக்கம் அணுமின் நிலையத்தை சேதப்படுத்திவிடும் என்று முழங்கினார்களோ, அதே நிலநடுக்கத்தால் முல்லைப்பெரியாறு அணை பாதிக்கப்படாது என்று விஞ்ஞானிகளின் கருத்துகளை முன்வைத்து வாதிடுகிறார்கள் தமிழக அரசியல்வாதிகள். பழ.நெடுமாறன், வைகோ போன்றவர்கள் ஒருபடி மேலாகச் சென்று, ‘முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் இந்திய ஒற்றுமையும் உடைக்கப்படும்’ என்று எச்சரிக்கிறார்கள்.

தமிழகத்திலும் கேரளத்திலும் இப்போது சூடாகப் பேசுபவர்களது விளைவறியா பேச்சுகளால் இருபுறமும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கேரள மக்களின் கடைகள் தாக்கப்படுகின்றன; கேரளாவிலோ, தமிழர்களே தாக்கப்படுகிறார்கள். வழக்கம்போல, நமது மாண்புமிகு மத்திய அரசு விளக்கெண்ணெய் விட்டுப் பிடித்த விலாங்குமீன் போல நழுவுகிறது.

கேரளாவில் உள்ள அரசுகள்- காங்கிரஸ் அரசாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் அரசாக இருந்தாலும் தங்கள் பிராந்திய நலனை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. போதாக்குறைக்கு விரைவில் நடைபெற உள்ள பிரவம் சட்டசபை இடைத்தேர்தலின் முடிவே தற்போதைய காங்கிரஸ் அரசின் ஆயுளைத் தீர்மானிப்பதாக இருப்பதால், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் எந்த சாகசமும் செய்ய காங்கிரஸ் முதல்வர் உமன் சாண்டி தயாராக இருக்கிறார்.

அம்மாநில சட்டசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானம், முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதாக அறிவித்திருக்கிறது. இதற்கு எதிராக தமிழக சட்டசபையும் கூட்டப்பட்டு, 142 அடி வரை அணையில் நீர் தேக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. கேரளாவில் நடைபெறும் துஷ்பிரசாரத்தையும் தமிழக சட்டசபை கண்டித்திருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்குமாறும் தமிழக சட்டசபை மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்விஷயத்தில் பிரசாரம் ஏற்கனவே வேண்டியமட்டிலும் செய்யப்பட்டுவிட்டது. அதன் விளைவாக கேரளாவில் உள்ள மக்கள் கொண்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது அவசியம். அதை விடுத்து, தமிழகத்திலுள்ள பிரிவினை இயக்கங்களும் செல்லாக் காசான கட்சிகளும் மலையாளி மக்களுக்கு எதிரான போராட்டமாக இதை வளர்த்தெடுப்பது, பிரச்னையை மேலும் பெரிதாக்கவே உதவும். தமிழகத்தில் நிலநடுக்கத்தை காரணமாகக் காட்டி அணுமின் நிலையத்தை எதிர்ப்பவர்களுக்கு, நிலநடுக்க அச்சத்தால் முல்லைப் பெரியாறு அணையை எதிர்க்கும் கேரள மக்களை விமர்சிக்க எந்தத் தார்மிக உரிமையும் கிடையாது.

இப்போதைய தேவை, தமிழக எல்லை மாவட்டங்களில் அமைதியைத் திரும்பச் செய்வதற்கான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனிவான நடவடிக்கைகளே. அதற்கு இடையூறாக, மக்களைத் தூண்டிவிடும் பிரிவினையாளர்களை அடையாளம் கண்டு எச்சரிப்பதும் அரசின் கடமையே. கேரளாவில் உள்ள கட்சிகளும், தங்கள் சுயநலத்தை விடுத்து செயல்பட வேண்டும். தமிழகத்திலுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாஜக பிரதிநிதிகள் தங்கள் கேரளக் கட்சிகளின் பிரதிநிதிகளை நிர்பந்தித்து இதைச் சாதிக்க வேண்டும். அதை விடுத்து, கேரளாவில் ஒரு நாடகமும் தமிழகத்தில் ஒரு நாடகமும் நிகழ்த்துவது நாட்டிற்கு மட்டுமல்ல, அவர்களுக்கும் நல்லதல்ல. இதை இனிமேலும் வேடிக்கை பார்ப்பது மத்திய அரசுக்குப் பெருமை சேர்க்காது.

சபரிமலைப் பயணத்தைக் குலைக்கச் சதி- முல்லைப்பெரியாறு

அப்பு, இந்த முல்லைப்பெரியாறு பிரச்சினை இருக்கே, அது வெறும் டேம் பிரச்சினைன்னு எல்லாரும் நினைச்சுகிட்டு இருக்காங்க. ஆனா அதோட மையப் பிரச்சினையே வேற… கரெக்டா ஐயப்ப சீசன்லதான் பெரும்பாலும் முல்லைபெரியாறு பிரச்சினையை ஊடகங்கள் அதிகப்படுத்தறாங்கன்னு இந்தப் புள்ளிவிபரம் சொல்லுது… குறிப்பா சபரிமலை ஐயப்பன் கோயில் இருக்கே, அது வாடிகன், மெக்காவையே மிஞ்சும் அளவுக்கு உலகிலேயே அதிக மக்கள் கூடும் அந்நிய மதத்தினருக்கு கண்ணை உறுத்தும் கோயில்…[தொடர்ந்து படிக்க இங்கே சுட்டவும்]

 

 

 

3 Replies to “நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்”

  1. //தமிழகத்தில் நிலநடுக்கத்தை காரணமாகக் காட்டி அணுமின் நிலையத்தை எதிர்ப்பவர்களுக்கு, நிலநடுக்க அச்சத்தால் முல்லைப் பெரியாறு அணையை எதிர்க்கும் கேரள மக்களை விமர்சிக்க எந்தத் தார்மிக உரிமையும் கிடையாது//

    உண்மை- கசக்கிறது. எனினும் இதில் கிறிஸ்தவர்களை இழுக்க வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.

    -ஜான் பீட்டர் கென்னடி

  2. @john… nice.. it is not necessary to bring christians here but what to do the missionaries via the capitalistic and dominant country’s penny and pound makes everything wrong…..!!!!

  3. தமிழக அரசு உறுதியான செயல் புரிய வேண்டும். வீண் வதந்திகளை கிளப்பி மக்களை மயங்கச் செய்பவர்களை ஒடுக்க வேண்டும். தேசத்தின் ஒற்றுமை மிக முக்கியம். தேசத்தின் நலனும் மிக முக்கியம். வாழ்க பாரதம். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *