[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி

சுவாமி சித்பவானந்தர் உடனான வாழ்க்கை அனுபவங்கள் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் ஐந்தாவது பாகம்.
முந்தைய பகுதிகள்:

நம்முடைய சாஸ்திரங்கள் தூய சன்னியாசிகளின் லட்சணங்களை விரிவாக
எடுத்துரைத்துள்ளன. அத்தனை லட்சணங்களை பெற்றும், வாழ்ந்து காட்டியும், நமக்கு
தோன்றாத் துணையாக இருந்தவரும் ஆன சன்னியாசி சுவாமி சித்பவானந்தர் ஆவார். புத்தரின் அன்பும், சங்கரரின் அறிவும், விவேகானந்தரின் ஆற்றலும் என இந்த மூன்றும் சேர்ந்த ஓர் அதிசயக்கலவை சித்பவானந்தர். தர்ம சக்கரம் என்ற பத்திரிக்கை மூலமாக அக்காலத்தில் மக்கள் மனதில் ஆன்மீகத்தைப் பரப்பிய செம்மல் அவர். தாம் வாழ்ந்து காட்டி, தன் மாணவர்களையும் நெறி பிறழாத வாழ்வுக்கு எடுத்துச்சென்ற கலங்கரை விளக்கம் அவர். தன் கையே தனக்குதவி என்ற கொள்கையை தன் வாழ்வின் இறுதி வரை கடைப்பிடித்த பெருமகன்.

அதிகாலையில் எழுதல், தன் படுக்கையை தானே சுருட்டுதல், தன் அறையை தானே சுத்தம் செய்வது, எடுத்த பொருளை அதன் இடத்திலேயே வைப்பது, காலை 4,00 மணிக்கு
ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோவிலை திறப்பது ஆகிய வேலைகளை அவரே செய்வார். எந்த தொழிலும் கேவலமானதல்ல என்பதை வலியுறுத்த வாஷ்பேசின், கழிவறை இவற்றை சுத்தம் செய்ததோடு, செப்டிக் டேங்க்கை கூட அவர் சுத்தப் படுத்துவார்.

தனக்கே விதித்துக் கொண்ட உத்தரவு!

வாரந்தோறும் ஆசிரியர் கூட்டம் தபோவனத்தில் நடப்பது வழக்கம். ஒரு ஆசிரியர்
கூட்டத்தில் நம் சுவாமிஜி ஒரு உத்தரவை பிறப்பித்தார்கள். அது என்னவென்றால், மாடி ஏறும்போது கைப்பிடிச்சுவரை பிடித்துக்கொண்டு நடப்பது சட்டவிரோதம். அப்படியும் மீறி மாணவர்கள் அதைத்தொட்டு நடந்தால் ஒரு ரூபாய் அபராதத்துடன் பத்து தோப்புகரணங்கள் போடவேண்டும்; ஆசிரியர்கள் கைப்பிடிச் சுவரைப் பிடித்து நடந்தால் 10 ரூபாய் அபராதமும், 50 தோப்புக்கரணங்களும் போடவேண்டும் என்று சொல்லி முடித்தார். எல்லா ஆசிரியர்களும் திருதிருவென்று முழித்தார்கள். ஒருவர் எழுந்து நின்று சுவாமிஜியை பார்த்து, நீங்கள் அந்த கைப்பிடிச்சுவரை தொட்டு நடந்தால்?!….. என்று இழுக்க சுவாமிஜி சற்றும் தயங்காமல் நான் கைப்பிடிச்சுவரை தொட்டு நடந்தால் 50ரூபாய் அபராதம் மற்றும் 100 தோப்புக்கரணம் போட வேண்டும் என்று தனக்குத்தானே உத்திரவிட்டார். கூட்டம் முடிந்தது.

அன்றிலிருந்துஆசிரியர்கள் முறைவைத்துக் கொண்டு ஒரு நாளுக்கு ஒருவராக சுவாமிஜியைக் கண்காணித்தோம். இரவு பகலாக தூக்கம் விழித்து இந்த செயலை மேற்கொண்டோம். ஆனால் நாங்கள் வெற்றி பெறவில்லை . எங்கள் கணிப்பு, கண்காணிப்பு எல்லாம் படுதோல்வியடைந்தது. இது ஆசிரியர்களாகிய எங்களுக்கு பலத்த அடி. நாங்கள் சூடுபட்ட பூனைபோல் சுருண்டோம். பெரியவர்களை, மகான்களை சோதிப்பது எவ்வளவு மடமை என்பதை உணர்ந்தோம். நல்ல படிப்பினை எங்களுக்கு. நம் சுவாமிஜி சொல்வதைத்தான் செய்வார்கள்; செய்வதைத்தான் சொல்வார்கள் என்ற நேர்மையை நாங்கள் கண்டோம்.

ஒருமுறை ஆங்கிலப்புத்தகம் ஒன்றிற்கான சுவாமிஜியின் Proof Reading முடிந்தது. அச்சில் ஏற்றுங்கள் என்றார் சுவாமிஜி. ஆனால் அச்சில் ஏற்றவில்லை.ஏன் என்று சுவாமி கேட்டார். அச்சக நிர்வாகி இன்னும் H.M. Proof வரவில்லை என்றார். சுவாமி, நான் பார்த்தால் போதாதா? என்று கேட்க, நிர்வாகி, அந்த சமயத்தில் வந்து சேர்ந்த H.M. Proofஐ காட்டி உங்கள் கண்ணில் படாத சிலவற்றை அவர் திருத்தியுள்ளார் எனக் காண்பித்தார். அதை தவறாக எடுத்துக்கொள்ளாமல் பரந்த மனப்பான்மையுடன், இனி H.M. Proof வந்த பிறகே அச்சில் ஏற்றவேண்டும் என்று ஆணையிட்டார்.

அருளாளரின் குணநலன்கள்

இளமைப்பருவத்தில் ஊரில் சிறு பையன்களுடன் சேர்ந்து விழாக்கள் எடுப்பது,
பூஜைகள் செய்வது, தெய்வச்சிலைகளை சப்பரத்தில் ஏற்றி ஊர்வலம் போவது, பக்தி ஊட்டும் நாடகங்களை நடித்துக்காட்டுவது ஆகிய செயல்களில் இவர் தீவிரமாக இருந்தார். ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொழிப் படி, அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்ற வாக்குப்படி வாழ்ந்தார்.
தபோவனத்தில் தங்கிப் படிக்கும் மாணவ கண்மணிகள் தாய் தந்தையரை பிரிந்து
வந்திருந்தாலும் சுவாமி அவர்களுக்கு தாயாகவும். தந்தையாகவும், உற்ற தோழனாகவும் இருந்து அன்பு காட்டினார். தினமும் மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடி மகிழ்வார் – விளையாடி மகிழ்வார். பெரிய வகுப்பு மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்பு எடுப்பார்.

பூஜைஅறை, சமையலறை, கழிப்பறை மூன்றும் சமஅளவு தூய்மையாக இருக்க வேண்டும் என வற்புறுத்துவார். தம் தேவைக்கு பிறரை சார்ந்திருக்கக்கூடாது என்ற கொள்கையை மாணவர்களிடையே விதைத்தார்.துக்கம் – தூக்கம் இரண்டையும் குறைத்து கொண்டவர் அவர்; யுக்தியை விட பக்திக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்; போதித்தவைகள் அநேகம்; சாதித்தவைகள் அதைவிட அநேகம்; சொல் வாக்கும் உண்டு; செல்வாக்கும் உண்டு; கடலளவு கண்ணியமும், மலையளவு காருண்யமும், உலகளவு கடாட்சமும், பிரபஞ்ச அளவு கருணையும் மிக்க முனிவர். மனப்பக்குவமிக்க மாமுனி இவர். இவர்போல் பிறந்தவரும் இல்லை; இனி பிறப்பவரும் இல்லை. அவருக்கு நிகர் அவரேதான்! அகர வரிசையில் சொல்வதனால் அன்புருவானவர் ஆனந்தம் கொடுப்பவர் – இன்பம் நல்குபவர் – ஈடில்லாத் துறவி – உலகைத் துறந்த உத்தமர் – ஊருக்கு உழைத்தவர் – எதையும் தாங்கும் இதயம் படைத்த பண்பாளர் – ஏற்றமிக்கவர் – ஐம்புலனை அடக்கிய அருளாளர் – ஒளிவு மறைவு இல்லாதவர் – ஓடக்காரன் – ஆம் நம்மைக் கரைசேர்க்கும் ஓடக்காரன் – ஒளடதமாய் வந்து பிணி போக்கும் முனி போன்று பணிவு, கனிவு, துணிவு மிக்க வீரர்.

பள்ளி மாணவர்கள் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். பள்ளியில் ஹாக்கி, கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகள் கோப்பைகளையும், கேடயங்களையும் குவித்தன. எல்லா மாணவர்களுக்கும் காவிரி நதியில் படகு ஓட்டத்தெரியும். அப்படியயாரு பயிற்சி! குதிரை ஏற்றம் பழகிக்கொடுக்க விரும்பினர். அதற்குள் உடல்நலம் குன்றியது. கடைசிவரை குதிரை ஏற்றம் இல்லாமலே போனதுஅக்காலத்தில் ஆல்இந்தியா ரேடியோ திருச்சி, ஞாயிறு தோறும் சிறுவர்களுக்கான மணிமலர் என்ற நிகழ்ச்சியை நடத்தும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பள்ளி மாணவர்கள் பங்கேற்று வந்தனர். வித்யாவன மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற செய்தார் குலபதி. ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு வாய்ப்புகள் வித்யாவன பள்ளிக்கு கிடைத்தது. ஒவ்வொரு முறையும் வித்யாவன மாணவர்கள் நன்கு நடித்து காட்டினார்கள். ரேடியோ நிலையத்தினர் மிகவும் பாராட்டி பேசினார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன் சிற்றுண்டி கொடுப்பார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் வரையில் வானொலியில் இந்த பள்ளி மிக பிரசித்திப் பெற்றிருந்தது.

சுவாமி சித்பவானந்தர் அவர்கள் நெடிய உருவம், காவி வேட்டி, காவி துண்டு,
நெற்றில் சந்தன பொட்டு, கையில் ஒரு குடை, கனத்த பாதணிகள் இவற்றுக்கு சொந்தக்காரர். திருப்பராய்த்துறை வந்தபோது சிவன்கோயில் கோபுரத்தில் தங்கியிருந்தார். அக்காலத்தில் பஸ் வசதியில்லை. திருச்சி மற்றும் வெளியூர் செல்பவர்கள் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள எலமனூர் சென்று இரயில் மூலம் செல்ல வேண்டும். சுவாமிஜி அவர்கள் வெளியூர் சென்று சொற்பொழிவு நிகழ்த்தி விட்டு இரவு இரயில் மூலம் எலமனூர் வந்து நடந்தே திருப்பராய்த்துறைக்கு வருவார். இரவு 8.30 மணிக்கு ஒரு வண்டி, 11.30 மணிக்கு ஒரு வண்டி. பெரும்பாலும் சுவாமி 11.30 மணி வண்டிக்கு தான் வருவார். இரயிலை விட்டு இறங்கியதும் இருளை பற்றி கவலைப்படாமல் நடந்து திருப்பராய்த்துறை சென்று விடுவார். திருப்பராய்த்துறைக்கு இருட்டில் போக பயந்து கொண்டிருக்கும் ஜனங்கள் இதோ சாமியார் வந்து விட்டார்! அவர் பின்னாடியே நாம் சென்று விடலாம் என்று, சுவாமி இரயிலிலிருந்து இறங்கியதும் அவர் பின்னாலேயே நடக்க ஆரம்பித்து விடுவார்கள். சுவாமி யாருடனும் பேசாமலே நடந்து வருவார். மக்கள் பயந்ததற்கு காரணம் சாலையின் ஒருபுறம் காவிரிக்கரைப்படுகை மறுபுறம் மயான பூமிகள், தென்னந்தோப்புகள். சுவாமி இல்லையயன்றால் இவர்கள் விடியும் வரை எலமனூரிலேயே உட்கார்ந்து விடிந்த பிறகுதான் திருப்பராய்த்துறை செல்வார்கள். மக்களுக்கு வழித்துணையாக வந்து அக்காலத்தில் உதவியதை இன்றும் மக்கள் நினைக்கிறார்கள்.

காவிரியில் வெள்ளம்

1977-ஆம் ஆண்டு வெள்ளம் வந்து விட்டது. காவிரி கரை எங்கு எப்போது உடையுமோ என்ற அச்சம். ஜனங்கள் இரவு பகலாக மண்வெட்டி, கடப்பாறையுடனே காணப்பட்டார்கள். எங்கு உடைப்பு இருந்தாலும் அதை அடைக்க தயார் நிலையில் இருந்தார்கள். ஆனால் மணப்பாறை, திண்டுக்கல் (கொடகனாறு), பஞ்சப்பட்டி, அய்யர்மலை ஆகிய ஊர்களிலிருந்து ஏரிகள் உடைந்து திருப்பராய்த்துறை நோக்கி வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. ஆனால் குறுக்கே திருச்சி – ஈரோடு செல்லும் இரயில் பாதை மேடாக இருந்ததால் திருப்பராய்த்துறை ஊருக்குள் தண்ணீர் நுழையவில்லை. அதனால் காவிரியில் உடைப்பு ஏற்படவில்லை. ஆனால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஊர் அனலை என்ற கிராமத்தைச் சுற்றிலும் இடுப் பளவு நீர் . அங்கிருந்து மக்கள் 1 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்பராய்த்துறைக்கு நடந்து வருவதற்குள் தண்ணீர் கழுத்தளவு வந்து விட்டது. குழந்தைகள், ஆடு மாடுகள் இவற்றை இழுத்துக்கொண்டு திருப்பராய்த்துறை சிவன் கோவிலில் தஞ்சம் புகுந்தனர். யாருக்கும் சாப்பாடு இல்லை. மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்பதை அறிந்த சுவாமிஜி மடத்திலிருந்து உணவு சமைத்து கோவிலுக்கு கொண்டு வந்து மூன்று வேளையும் உணவளித்தார். ஜனங்கள் வெள்ளநீர் வடிந்து தம்தம் வீடுகளுக்கு செல்லும்வரை அவர்களது பசிப்பிணியை ஆற்றினார். இவ்வாறு பசிப்பிணி மருத்துவனாக வந்த சுவாமியை மக்கள் சிவன் வந்து சோறு கொடுத்ததாகவே நினைத்து வாழ்த்தி வணங்கினார்கள்.

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாடெங்கிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சுவாமியும் திருப்பராய்த்துறையில் சுதந்திர தினவிழாவை கோலாகலமாக கொண்டாட தீர்மானித்தார். சிவன் கோவில் நூற்றுக்கால் மண்டபம் முழுவதும் நன்கு அலங்கரிக்கப்பட்டும், வித்யாவன பள்ளி வண்ணத்தோரணங்கள் கட்டப்பட்டும்,மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் சுதந்திர தினவிழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி அனைவரையும் மகிழ்வித்தார். ஊரிலுள்ள அனைவருக்கும் மூவர்ண கொடி சட்டையில் குத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து ஊர்மக்கள் அனைவருக்கும் வித்யாவன மாணவர்களால் விருந்து படைக்கப்பட்டது.

பழைய மாணவர் சங்கம்:

மலைகளின் அரசியாம் உதகமண்டலத்திலிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு கல்லையும் முள்ளையும் காலுக்கு மெத்தையாக்கி வழிநெடுக, கால்கடுக்க, நீண்டதூரம் நடந்து வந்த தவச்சீலர் ஸ்ரீமத் சித்பவானந்த சுவாமிகள் அவர்கள், ஓரிடத்தில் தம் நடைக்கு தடை போட்டார். அந்த இடம் சிவனடியார்களால் பாடல் பெற்ற திருத்தலமான திருப்பராய்த்துறை. அழகிய காவிரியின் தென்கரையிலே கோவில் கொண்டிருந்த தாருகாவனேஸ்வரரை வணங்கி அத்திருக்கோயிலில் தங்கினார். இச்சீலமிகுத்துறவிப் பெருமகன் இவ்வூரில் தங்கியதால் உலகிற்கு கிடைத்த காமதேனுதான் ஸ்ரீ விவேகானந்த வித்யாவன குருகுல மாகும். 1942ல் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தை துவக்கிய இவர் 1943ல் இக்குருகுலத்தை துவக்கினார். இக்குருகுலத்தில் பயின்றவர்கள் வெளி உலகிற்கு சென்ற பின்பும் இங்கு பெற்ற பயிற்சியை வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்தனர். அக்காலத்தில் பெயர் பெற்ற சில பள்ளிகள் மட்டும் முன்னாள் மாணவர் சங்கங்களை வைத்திருந்தது. அது போல நாமும் ஆண்டுக்கு ஒருமுறை கூட வேண்டும் என்ற அவா காரணமாக உதித்ததுதான் திருப்பராய்த்துறை முன்னாள் மாணவர் சங்கம். இச்சங்கத்தின் முதல் கூட்டம் 1959 டிசம்பர் 25ந் தேதி கிறிஸ்துமஸ் அன்று நடைபெற்றது. குருகுலத்தில் பெற்ற பயிற்சி இங்கு பயின்ற மாணவர்கள் வாழ்க்கையில் எந்த அளவுக்கு உதவியாக உள்ளது என்பதை காண சுவாமிக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

முன்னாள் மாணவர்கள் வித்யாவன அன்னையின் மடியில் கொஞ்சி, குலவி, பயின்று,
விளையாடி, உண்டு, உறங்கிய நாட்களை மீண்டும் தம் குடும்பத்துடன் இங்கு வந்து ஒருநாள் முழுவதும் அந்த நினைவில் திளைக்க சுவாமிகள் அளித்த பெருவாய்ப்பாகவும்,
வரப்பிரசாதமாகவும் இச்சங்கத்தை மாணவர்கள் கருதினர். இந்த சங்க விழாவை ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடுவது என எண்ணிய சுவாமிகள் கிறிஸ்துமஸ் தினத்தை முடிவு செய்தார். உலகமுழுவதும் பெரும்பாலும் விடுமுறையாக கிறிஸ்துமஸ் அனுசரிக்கப்படுவதால் உலகில் எந்த கோடியில் இருந்தாலும் அழைப்பிதழ் அனுப்பினாலும் அனுப்பா விடினும் நீங்கள் இங்கு வந்துவிட வேண்டும் என்று அருள்பாலித்தார். பசுமை நிறைந்த நினைவுகளை சுமந்து வரும் பாடித் திரிந்த பறவைகள், பழகிக் களித்த தோழர்களை பார்க்க வரும் காட்சியே ஓர் அரிய காட்சி! தம்மிடம் பயிற்சி பெற்ற கண்மணிகள் உலகுக்கு என்ன சமூக சேவை செய்கிறார்கள் என்பதை அவர்கள் வாயிலாகவே கேட்டு மகிழ்வது சுவாமிக்கு பிடிக்கும். இதனால் சமூக சேவை செய்யாதவர்கள் கூட செய்ய ஆரம்பித்தனர். ஏதோ கூடினோம்; கும்மாளம் போட்டோம்;கலைந்தோம் என்று இல்லாமல் சேவை புரியும் பயிற்சி பெற்ற பட்டாளம் இந்த முன்னாள் மாணவர் சங்க பட்டாளம் ஆகும். வெளி உலகிலேயே உள்ள முன்னாள் மாணவர் சங்கங்களுக்கும் திருப்பராய்த்துறை குருகுல பயிற்சி பெற்ற பழைய மாணவர் சங்கத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான். இவர்கள் தாங்கள் வசிக்கும் ஊர்களில் சமுதாய சேவை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் சுவாமி சித்பவானந்தர் சேவா சங்கம் ஆகும். இதுவரை ஈரோடு, மதுரை, சிதம்பரம், கோவை ஆகிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சேவா சங்கங்கள் தற்போது சென்னையிலும் ஒரு கிளையைத் துவக்க உள்ளது.

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனியரசாணை
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில்
நிலைத்திடல் என்றிவையருளாய்
குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தாய்
குலவிடு தனிப்பரம் பொருளே!

– என்ற மகாகவி பாரதியாரின் கூற்று இவருக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது.

(தொடரும்)

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும்  rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

2 Replies to “[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி”

  1. சித்பவானந்தரைப் பற்றிப் படிக்கப் படிக்க மனம் அமைதியடைந்து மகிழ்கிறது. செய்தி ஊடகங்கள் இவர் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கட்டுரைகளாக வெளியிட்டு மக்கள் மனங்களில் உழைப்பு, பக்தி, தூய்மை… என்று எல்லாப் பண்புகளையும் விதைத்து வளர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *