இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)

நரேந்திர மோடிக்கு ஓட்டு போடுங்கள்! நான் கனவில் கூட குஜராத் பக்கம் போனதில்லையே என்கிறீர்களா, பிரச்சனை இல்லை, நீங்கள் ஓட்டு போடுவது அமெரிக்காவின் புகழ் பெற்ற டைம் மாகசீன் நடத்தும் 2012ம் ஆண்டுக்கான நூறு சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் தான். இத்துடன் சென்ற வாரம் வெளிவந்த டைம் மாக்சீன் புத்தகத்தின் முன் அட்டையில் மோதி அவர்களின் படத்தை போட்டு Modi means business! என்று தலைப்பிட்டு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோதி அவர்கள் ராஜீவ் காந்திக்கும், ஜவஹர் லால் நேருவுக்கும் இருந்த உலகளாவிய பிராபல்யத்தைப் போல உலகின் பார்வையில் முக்கியமான நபராக முன்னேறி வருகிறார் என்றால் மிகையில்லை.

அமெரிக்காவில் வெளிவரும் பத்திரிக்கைக்கு மோதியைப் பாராட்ட மனது இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள எந்த பத்திரிக்கையும் மோதிக்கு ஆதரவாகவோ, எதிர் பிரச்சாரம் இல்லாமலோ ஒரு எழுத்து கூட இதுவரை எழுதியதில்லை என்பது வெட்கக் கேடு. தொடர்ந்து மோதிக்கு எதிரான பிரச்சாரத்தில் இந்திய பத்திரிகைகள் பெரும் தொண்டு ஆற்றி வருகின்றன. அப்படிப் பட்ட பிரசாரத்துக்கு எதிர்பிரசாரத்தில் இறங்காமல்,மோதி அமைதியாக அவற்றுக்கு தன் செயல்பாட்டினாலேயே உரக்க நன்றாக பதிலளித்து வருகிறார். அண்மையில் அவுட்லுக் பத்திரிக்கையில் மோதியைக் குறுக்கு விசாரணை செய்வது போல இருபத்தி ஐந்து கேள்விகளை வெளியிட்டு இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுத்திருந்தனர். மோதி இவற்றைச் சட்டை செய்யப் போவதில்லை என்றாலும் gujaratriots.com தளத்தில் அருமையாக பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இந்துத்துவர்கள் தம் விமர்சனங்கள், பதிலடிகள் ஆகியவற்றை எடுத்து வைக்கும் போது பத்திரிகை – தொலைகாட்சி ஊடகங்களில் பெரும்பாலும் புறக்கணிப்பு செய்யப் பட்டாலும், இணையம் ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பது கலிகாலத்திலும் ஒரு நல்ல விஷயம் எனலாம்.

அரசியல், பொருளாதாரம் போன்ற விஷயங்களைத் தவிர்த்துப் பார்த்தால், டைம் போன்ற வெளிநாட்டு பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் இந்திய கலாச்சாரத்தைப் பற்றியோ, இந்திய மக்களை, குறிப்பாக இந்துக்களைப் பற்றியோ சரியான புரிதல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அண்மையில் பிபிசி ஹோலி பண்டிகை குறித்து வெளியிட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹோலிப் பண்டிகை ஒரு அருவருக்கத் தக்க (filthy) நிகழ்ச்சி என்று பிபிசி இணைய தளத்தில் செய்தி வந்த போது, பிபிசி கூடவா இன்னுமா இப்படி என்று வியப்பும் ஏமாற்றமும் ஏற்படுகிறது.

அந்த ஏமாற்றத்தை மறக்க வைக்க நல்ல செய்தி ஒன்று. தமிழ் ஹிந்துவில் திரு. சுப்பு அவர்கள் எழுதி “போகப் போகப் தெரியும்…” என்ற தொடராக வெளிவந்து பின்னர் திராவிட மாயை என்ற பெயரில் புத்தகமாகவும் வெளிவந்தது பலருக்கும் தெரிந்ததே. இத்தொடர் புதிய தகவல்களுடன், துக்ளக் பத்திரிகையில் வெளிவரத் துவங்கி உள்ளது. திராவிடக் கட்சிகளை விமர்சிப்பதே தமிழர்களுக்கு விரோதமானது என்ற மாயை நிலவி வந்தது – அல்லது அப்படிப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். சென்ற முறை திமுக ஆட்சி நடந்த விதத்தில் இருந்து மக்கள் விழித்துக் கொண்டு விட்டனர். அதற்கு கருணாநிதிக்கும் நாம் நன்றிக் கடமைப் பட்டுள்ளோம். துக்ளக் போன்ற பிரபலமான பத்திரிகையில் சரியான நேரத்தில் வருகிற அருமையான தொடர். இத்தொடரும் அதன் நோக்கமும் வெற்றி அடைய சுப்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சாதிய எதிர்ப்பு, பெண்ணுக்கு விடுதலை, அனைவருக்கும் சமவாய்ப்பு என்பதெல்லாம் திராவிடக் கட்சிகளின் சாதனை என்று பாடப்புத்தகங்களில் எழுதி நம் பிள்ளைகளின் இளம் வயதிலேயே கட்சிப் பிரச்சாரத்தை பதிய வைக்கிறார்கள். உண்மையில் திராவிடக் கட்சிகள் இல்லாமல் இருந்தாலும் இந்த மாற்றங்கள் வந்திருக்கும். இதைத் தனிக்கட்டுரையாகத் தான் விளக்க வேண்டும் – ஏனெனில் அவ்வளவு பிரச்சார முழக்கங்கள் சிந்தனையை மழுங்க அடித்து விட்டன. உதாரணமாக ஒரு செய்தி: தமிழகத்தில் அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று கருணாநிதி அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் அது வெறும் பிரச்சாரமாகவே போய் விட்டது. தொடர்ந்து வந்த ஜெயலலிதா அரசும், கருணாநிதி நிமிர்த்தியதை எல்லாம் கவிழ்த்து வைக்கும் வேகத்தில் இந்த திட்டத்தை மூடுவிழா செய்து விட்டது. இது தான் திராவிடக் கட்சிகளின் சீர்த்திருத்த லட்சணம்.

இதே சமயத்தில் கேரளாவில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அமைப்பின் கீழ் வரும் சுமார் இரண்டாயிரம் பழமையும் பெருமையும் வாய்ந்த கோவில்களில் பிராமணர் மட்டும் அல்லாது எல்லா சாதிகளில் இருந்தும் அர்ச்சகர்களை நியமிக்கத் துவங்கி உள்ளனர். குணங்கள், ஈடுபாடு, கல்வி, தொழில் ஆகியவற்றாலேயே ஒருவர் பிராமணன் ஆகிறார், பிறப்பால் அல்ல என்கிறார் இந்த தேவஸ்வம் போர்டின் செயலாளர் ஜெயக்குமார். கேரளத்தில் எவ்வளவு அமைதியாக இப்படி ஒன்றை சாதித்திருக்கிறார்கள் என்று வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம் தான். கேரளாவைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இந்த மாற்றம் பரவ வேண்டும். நிச்சயம் இது பரவும்.

இதற்கு ஒரு முக்கிய காரணம் – மொழி. மலையாள மொழியில் சம்ஸ்கிருதத்தின் தாக்கம் மிக அதிகம். எனவே மலையாள மொழியை, அதன் நூல்களைப் படிக்கும் சராசரி மலையாளிகளுக்குக் கூட சம்ஸ்கிருத சொற்களஞ்சியத்தின் சொற்களும் உச்சரிப்பும் பிடிபட்டு விடும். கதகளி, மோகினியாட்டம் போன்ற கலைகள் முழுக்க சம்ஸ்கிருத மயமானவை. அங்கு சம்ஸ்கிருதத்தை யாரும் அன்னியமாக நினைப்பது கிடையாது. ஈழவர்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட நாராயணகுருவே சம்ஸ்கிருத நூல்களை எழுதியிருக்கிறார்.. ஐயன் காளியின் மருமகன் கேசவன் சாஸ்திரி ஒரு மாபெரும் சம்ஸ்கிருத அறிஞர். கேரள கோவில்களில் சர்வ சாதாரணமாக நாயர்கள், ஈழவர்கள் என்று எல்லா சாதியினரும் விஷ்ணு சகஸ்ர நாமம், லலிதா சகஸ்ர நாமம் சொல்வதைக் காணலாம்.

தமிழகத்தில் சம்ஸ்கிருதக் கல்வி தேய்ந்து மறைந்து கொண்டிருக்கிறது. (அண்மையில் கிரியா தமிழ் அகராதியில் சம்ஸ்க்ருதம் பற்றிய குறிப்பில் வழக்கொழிந்து போன மொழி என்பது போல குறிப்பிட்டிருப்பதை காண நேர்ந்தது. இது ஒரு தவறான தகவல் ஆகும் – ஒரு உதாரணம் அண்மையில் தான் உத்தரகண்ட் மாநிலத்தில் சம்ஸ்க்ருதத்தை மாநில மொழியாக அறிவித்தனர்.) தனித்தமிழ் / திராவிட இயக்கங்களும் மக்களிடமிருந்து அந்த மொழியையே அன்னியப் படுத்தி விட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் மாற்றங்களை உருப்படியாகக் கொண்டுவர வலுவான இந்து அமைப்புகளோ, உறுதுணையாக அரசின் திடமான எண்ணமோ இல்லை. தமிழக இந்து இயக்கங்கள் பரவலாக ஆங்காங்கே இருக்கிறார்களே தவிர ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இருப்பதாக தெரியவில்லை. மாறாக கிறிஸ்தவ அமைப்புகளைப் பாருங்கள். Church of South India (CSI) என்கிற தென்னிந்திய கிறிஸ்தவ சர்ச் அமைப்பு ஒரு மாபெரும் நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. ஆங்காங்கே பெரும் பொருட்செலவில் மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் என்று கட்டி வருகிறார்கள். இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது, எப்படி செலவாகிறது, எவ்வளவு லாபம் ஈட்டுகிறார்கள், என்ன விதத்தில் செயல்படுகிறார்கள் என்று யாருக்கும் தெரிய நியாயம் இல்லை. ஒப்பீட்டில் தமிழகத்தில் இந்து இயக்கங்கள் இந்த அளவு பண பலமோ, செல்வாக்கோ இல்லை என்று தான் சொல்லவேண்டும். கொசுறு:

ஒரு சேவை அமைப்பை இப்படி ஆராய்ச்சி செய்யலாமா என்று கேட்பீர்களேயானால் இந்த செய்தியை படியுங்கள். அந்த அமைப்பே தன்னை ஒரு நிறுவனமாக (Company) ஆகத்தான் பதிவு செய்து கொண்டுள்ளது. CSI அமைப்பு ஒரு பதிவு செய்யப் பட்ட நிறுவனமே என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்பளித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை, கணக்கு வழக்குகளில் முறை கேடு செய்து வருவது குறித்த வழக்கில் தான் உயர்நீதி மன்றம் இவ்வாறு தீர்ப்பு கூறி உள்ளது.

இந்தியாவில் தான் சிறுபான்மை அமைப்புகள் என்ற பெயரில் பெருமளவு பண மோசடி, மதமாற்றம், அமைதியைக் குலைத்தல் ஆகியவற்றில் தைரியமாக ஈடுபட முடிகிறது. இதை விசாரித்தால், உடனே இந்து மதம் என்ன வாழ்கிறது? சாதி கொடுமைகள் இந்து மதத்தில் தானே இருக்கின்றன என்பார்கள். இந்த சாதி என்ற ஒன்றை வைத்தே இந்துக்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, தம்மைக் குறித்த எந்த விமர்சனத்தையும் மறுத்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் சாதியத்துக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாகவும் சட்டங்கள் இயற்றுவதும், உரையாடல்களை சமூகத்தில் நிகழ்த்துவதுமாக மாற்றங்களை முன்னெடுப்பது இந்துக்களே. இதை இந்துக்களும் உணரவேண்டும்.

பாகிஸ்தானில் பாருங்கள், அங்கே முஸ்லிம்கள் அனைவரும் ஒரே மதமாக சாதி பிரச்சனை இல்லாமல் ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள் என்று இங்கிருந்து கொண்டு பெரும்பாலார் நினைக்கின்றனர். உண்மையில் அங்கே நிகழ்வதே வேறு. அங்கே முஸ்லிம்களில் ஒரு பிரிவினரான அஹமதியாக்களை, அவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று சிறுபான்மையினர் ஆக்கி விட்டது அந்த நாட்டு அரசு. சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள், இந்துக்கள் ஆகியோர் சொல்ல முடியாத துயரத்தையும் கொடுமையையும் அனுபவித்து வருகிறார்கள்.

பாகிஸ்தானில் எத்தனையோ இன்னல்களை அனுபவித்தும் செத்தாலும் சாவேனே தவிர முஸ்லிமாக மாறமாட்டேன் என்று ஒரு இந்துப் பெண் போராடி வருகிறார். முழுவிவரம் இங்கே.

பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள், முஸ்லிம் மதத்தினுள்ளேயே முஸ்லிம் அல்லாதவர் என்று முத்திரை குத்தப் பட்ட அகமதியாக்கள் ஆகிய இனத்தவர்களின் பெண்களை கடத்திச் சென்று விடுவதும், ஆண்களை கொலை செய்வதும், தொழில் செய்ய விடாமல் தடுப்பதுமாக பல மனித உரிமை மீறல்கள் நடை பெறுவதாக பாகிஸ்தானிய மனித உரிமை அமைப்பு கூறி உள்ளது. நூற்றுக் கணக்கான இந்துக்கள், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அடைக்கலமாக வருவதற்கு முயன்று வருகிறார்கள் என்கிறது இந்த செய்தி.

சரி இந்தியாவுக்கு அடைக்கலமாக வந்தால் பாகிஸ்தானிய இந்துக்களுக்கு பிரச்சனை தீர்ந்து விடுகிறதா என்றால் அதுவும் இல்லை. முஸ்லிம்களுக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு பிரச்சனை என்றால் தூக்கத்தை இழக்கும் காங்கிரஸ் அரசு தலைமை, இந்துக்களுக்கு பிரச்சனை என்றால் கண்டுகொள்வதே இல்லை. பாகிஸ்தானில் இருந்து சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து இங்கேயே காஷ்மீரில் இரண்டு மூன்று தலைமுறை வாழ்ந்து விட்ட இந்துக்களுக்கு இன்னும் குடியுரிமை கொடுக்கப் படவில்லை. அவர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே தொடர்ந்து வரும் அரசுகள் நடத்தி வருகின்றன. பாகிஸ்தானிய இந்து அகதிகளை விடுங்கள், இங்கே இந்தியாவிலேயே பிறந்த காஷ்மீர் இந்துக்கள் மட்டும் என்ன வாழ்ந்து விட்டார்கள். அவர்கள் வாழ்க்கையும் சிக்கலாகவே இருந்து வருகிறது என்கிறது பயனியர் நாளிதழின் இந்த கட்டுரை.

எத்தனையோ இன்னல்களை அனுபவித்து விட்டாலும் காஷ்மீர் இந்துக்களுக்கு ஜீவ சக்தி இந்து மதத்தில் இருந்தே கிடைக்கிறது. அவர்கள் வாழ்க்கையை உயிர்ப்பிப்பது இந்து பண்பாட்டுக் கூறுகள் தான் என்பதில் ஐயமில்லை. இந்த ஜீவசக்தி நமது பாரத தேசத்துக்கே உரிய சிறப்பு.

12 Replies to “இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)”

 1. முஸ்லிமாக மாறமாட்டேன் என்ற பாகிஸ்தானிய மதிப்புக்குரிய இந்து பெண்ணுக்கு தலை வணங்குகிறேன்.
  தகவல்களுக்கு நன்றி.

 2. லூசுகள் தாம் ஹோலிப் பண்டிகையை அருவருக்கத்தக்க பண்டிகையாகக் கூற முடியும். ‘நவநாகரிக நாடுகள்’ பலவற்றில் தக்காளிப் பழங்களை எடுத்து ஒருவர்மேல் மற்றவர் அடிப்பது, சேற்றில் இறங்கி, சேற்றை வாரி, ஒருவர்மேல் மற்றவர் அடித்து மகிழ்வது ! என்றெல்லாம் எத்தனையோ அறிவார்ந்த கூத்துக்கள் ‘திருவிழாக்கள் என்கிற பெயரில்’ நடந்துகொண்டுதாம் இருக்கின்றன. அவற்றை எந்தப் பத்திரிகையாளரும் அறிவுக்குப் புறம்பான செயல்களாக வர்ணிப்பதில்லை.

  அது போலவே பட்டாசு வெடிப்பதும் மத்தாப்புக் கொளுத்துவதும் உலகின் (கிட்டத்தட்ட) எல்லா நாடுகளிலும் ப்ரஹ்மாண்டமாக நடைபெறுகின்றன, அடிக்கடி ! ஆனால், இந்தியாவில் மட்டும் ஹிந்து சமய எதிர்ப்பாளர்கள் (பல பெயர்களில்) குழந்தைத் தொழிலாளர் முறை தொடங்கி காசைக் கரியாக்குவது வரை எண்ணில்லாத எதிமறை விமர்சனங்கள் மூலம் தீபாவளியை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை தீபாவளியன்று வெடி வெடிக்கத் தடை பெற்றிருக்கிறார்கள். அநேகமாக அந்தத் தீர்ப்பைப் பெரும்பாலான ஹிந்துக்கள் ஏற்று நடக்கவில்லை என்பது வேறு விஷயம்.

  செல்வந்தர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை சாதாரணமாகத் திருமண விழா தொடங்கித் தேர்தல் வெற்றிகள் வரை பட்டாசு காதைப் பிளக்கிறது. ஆனால், சூழ்நிலை மாசுபாடு என்பது தீபாவளியாலும் விநாயக சதுர்த்தியாலும்தாம் வந்துவிடுகிறது இவர்களுக்கு.

  ஊருக்கு ஒரு நீதி. உலகுக்கு குருவாகும் நம் பாரதத்துக்கு வேறொரு நீதி..!

 3. குணம் மற்றும் செயல் ஆகியவற்றின் வழியாகவே வர்ண அமைப்பு உருவாகிறது. இது கடவுளின் குரல்.

  ஆகவே சாந்த குணமுள்ள எவரும் திருக்கோயில்களில் நெறியறிந்து அர்ச்சகராகலாம். இதைக் கேரளம் நடைமுறைப் படுத்தியிருக்கிறது என்பது மிக்க மகிழ்ச்சி தரும் விஷயம்.

  இதனை நம் தமிழகமும் அமுல்படுத்திவிட்டால் இங்கு ஹிந்து சமய எதிர்ப்புணர்வு வலுவிழந்து போகும் நல்ல நாள் வரும். ஆனால் இங்குள்ளவர்களுக்கு வேற்றுமைகள் நீடிக்க வேண்டும். அப்போது தான் தங்கள் அரசியல் தொழிலைச் சரியாக !, லாபகரமாகச் செய்ய முடியும்.

  அந்த எதிர் பார்ப்புத் தான் சம்ஸ்க்ரித்த எதிர்ப்பு, ஜாதி த்வேஷம்… உள்ளிட்ட பலவற்றையும் அணைத்து விடாமல் இவர்கள் எண்ணெய் ஊற்றி வளர்க்கக் காரணம்.

 4. // மலையாள மொழியில் சம்ஸ்கிருதத்தின் தாக்கம் மிக அதிகம். எனவே மலையாள மொழியை, அதன் நூல்களைப் படிக்கும் சராசரி மலையாளிகளுக்குக் கூட சம்ஸ்கிருத சொற்களஞ்சியத்தின் சொற்களும் உச்சரிப்பும் பிடிபட்டு விடும். கதகளி, மோகினியாட்டம் போன்ற கலைகள் முழுக்க சம்ஸ்கிருத மயமானவை. அங்கு சம்ஸ்கிருதத்தை யாரும் அன்னியமாக நினைப்பது கிடையாது//
  நீங்களும் கூட இப்படியா!
  தமிழ் மொழி தனிச்சிறப்பு வாய்ந்தது. அது தனி தமிழ். மலையாளம் போன்று அல்ல.
  தமிழ் உயர்வை இன்றைய தினமணியில் உள்ளது:
  தமிழை “”உயர்தனிச் செம்மொழி” என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள்.
  தமிழ்மொழி பேசவும் எளிது. தமிழ்ச் சொற்களில் 100 சொற்கள் எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு சொல்லாக ஒலித்துப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனிநாக்கு, அடிநாக்கு, நடுநாக்கு, அண்ணாக்கு, உண்ணாக்குக் கொண்டே ஒலிப்பதாக இருக்கும். தொண்டைக்குக் கீழே வேலையேயிராது. வடமொழிச் சொற்களில் பெரும்பான்மையானவை அடிவயிற்றின் துணையின்றி ஒலிக்க முடியாதவை. இவ்வாறு வலிந்து ஒலிப்பதால் நாவும் உலர்ந்து, தொண்டையும் வறண்டு குடலும் காய்ந்துவிடுகிறது. ஆகவே, இதுகாறும் கூறியவற்றால், தமிழ் மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் கூட மிகவும் எளிமையானது என நன்கறியலாம்.

  இப்படிப்பட்ட தமிழ் மொழிளில் வடமொழி சொற்களை எவ்வாறு கலப்பது?
  சாதிகள் ஒழிப்பதற்கு எவ்வளோ வழிகள் உள்ளன, அதை விடுத்து //அங்கு சம்ஸ்கிருதத்தை யாரும் அன்னியமாக நினைப்பது கிடையாது// என்பது உதவாது.
  நான் அறிந்தவரை கோவை மாவட்டங்களில் பல கோவில்களில் பல சமூகத்தையும் சேர்ந்தவர்கள் தமிழிலேய பூசை செய்கின்றனர்.
  நீங்கள் “தமிழ்” ஹிந்துவா?

 5. Soma is Sanskrit, Sundar is Sanskrit, Pooja(i) is Sanskrit.
  I have seen Pandits reciting ” Ruthram” for hours without any ill effects! (no drying up of tongue, throat.) I do not have a clue about this “drying up of intestine” Mr Somasundar is talking about. What is it?

 6. தமிழ் பேசவாவது அடி நாக்கு வேண்டும்.. போர்துகீசிய மொழி பேச நுனி நாக்கு போதும் அதனாலா போர்துகீசிய பாசை தான் சிறந்த பாசை. இப்படியே போனால் மௌனமே சிறந்த பாஷை ஆகிவிடும். சோமசுந்தரம் ஏன் கழகத்தில் சேர்ந்தவர் போல கலைஞர் மாதிரியே காரணங்களை அடுக்குகிறாரே.

  எல்லா பாகங்களை பயன்படுத்தி பேசுவதே சமஸ்க்ரிதத்தின் தனிசிடப்ப. இதனால் உலர்ந்து போகாது. மாறாக காற்று எல்லா இடத்திற்கும் சென்று உடலை குளுமை செய்கிறது. இதை வெள்ளை காரன் கூட ஒத்திக்கிட்டு சமஸ்க்ரிதம் படிக்கிறான். நாம் மட்டும் வாடா நாட்டு காரன் ரொட்டி சாப்ட்றான், நாம் இட்லி சாபடறோம் என்ற ரேஞ்சில கிளம்பி விடுகிறோம்.

  உடனே பாதியா பாதியா காத்து போச்சுன்னு காஞ்சி தானே போகும். துணிய காயபோட்டு காத்தடிச்ச உலர்ந்து போகுதுல்ல என்ற கேள்வி வரும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிரிக்கிறேன்.

  அவர் ஏன் இப்படி சொல்கிறார் என்பதற்கு அவரது பல பழைய மறுமொழிகளை படித்தவர்களுக்கு தெரியும்.

 7. அந்த ஹிந்து பெண்ணுக்கு துர்க்காதேவி அருள் பாலிக்கட்டும்.அவர் போற்றுவத்ட்குரியவர். “ஜெய் காளி”

 8. சாதிகள் ஒழிவதற்கு மொழி தடையல்ல. மனமே தடையாக உள்ளது.
  நமது அரசாங்கம் நினைத்தால் சாதிகளின் தாக்கத்தை ஒழிக்கலாம்.

 9. அன்புள்ள சோமசுந்தரம்,

  “சாதிகள் ஒழிவதற்கு மொழி தடையல்ல. மனமே தடையாக உள்ளது.
  நமது அரசாங்கம் நினைத்தால் சாதிகளின் தாக்கத்தை ஒழிக்கலாம்.”

  அரசாங்கம் என்பது அரசியல் கட்சிகளின் கையில் தான் உள்ளது. எனவே சாதிகளின் வாக்கு வங்கி சதவீதம் என்ன என்று கணக்கிட்டு , அரசியல் வியாபாரம் செய்துவரும் அரசியல் கட்சிகள் சாதி ஒழிய உதவி செய்ய மாட்டார்கள். சாதிகள் ஒழிந்தால் , பல அரசியல் கட்சிகளின் மோசடி வியாபாரங்களும் படுத்துவிடும். எனவே, எந்த அரசும் சாதி ஒழிப்புக்கு பாடுபடமாட்டார்கள்.

  கேரளாவில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்ட் , அனைத்து சாதியினரையும் கோயில் அர்ச்சகர்களாக நியமித்துள்ள செய்தி அறிந்து மிக மகிழ்ச்சி. செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அதிமுக அரசும் , இதே போன்ற சீர்திருத்தங்களை செய்து அழியாப்புகழ் பெறவேண்டும். செய்வாரா என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.

 10. ஹோலி பண்டிகை அருவருக்கத்தக்க நிகழ்ச்சி என்பவர்கள் அமெரிக்காவில் (குறிப்பாக நியூ ஓர்லியான்ஸ் மாநிலத்தில்) நிகழும் மார்டி கிரா நிகழ்ச்சியை போய் பார்த்து அங்கு பதின்வயது நங்கையர் மார்புகளை திறந்துகாட்டி கழுத்து மணிகள் வாங்கிக்கொள்ளும் (இதற்கு Beads for boobs என்று நாமகரணம் வேறு) களியாட்டங்களை கண்டுவிட்டு பிறகு வாய்திறக்கவேண்டும்.

  எங்கள் அலுவலக வெள்ளை மேலாளர் ஒருவர் சொன்னார் :

  I love this Holy festival that you guys celebrate and I love this Diwali very very much and I want that to be celebrated here.

 11. Shri Modi is on the cover page of TIMES magazine notwithstanding the fact that he was refused visa by the US.
  Thuglaq weekly tamil journal supports Modi and has given full coverage to the developments talkng place in Gujarat. Almost all other paper/journals either English or local language do not praise Modi on the contrary criticise and condemn him

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *