ஊழலின் ஊற்றுக்கண் எது?

சுதந்திர இந்தியாவில் ஊழல் என்பது சர்வ சாதாரணமாக மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாக ஆகிவிட்டது. அதிலும் அரசியல் வாதிகளின் ஊழல், அவர்களை முன்னிறுத்தி அதிகாரிகள் வர்க்கம் செய்யும் ஊழல், அப்படி தலைமையில் இருக்கும் ஊழல் அடிமட்டம் வரை பாய்ந்து இன்று அது புறையோடிக் கிடக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவிலும் சரி, அதன் பின்னர் சுதந்திர இந்தியாவிலும் கிராம அதிகாரிகள், கிராம முன்சீப், கணக்குப் பிள்ளை, வெட்டியான், தலையாரி என்று அடிமட்ட ஊழியர்கள் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் நல்ல மரியாதையும் செல்வாகும் உள்ளவர்களாத் திகழ்ந்தார்கள். பட்டாமணியம் அல்லது கிராம முன்சீப், கணக்குப் பிள்ளை அல்லது கர்ணம் என்பவர்கள் அந்த கிராமத்திலுள்ள நிலங்கள், அதன் சர்வே நம்பர்கள், புறம்போக்கு வகையறாக்கள், அவை எங்கெங்கு எவ்வளவு இருக்கின்றன போன்ற விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார்கள். மேலும் இதுபோன்ற கிராம நிர்வாக அதிகாரிகள் அதே கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். மரியாதையும், செல்வாக்கும் அவர்களுடைய பதவிக்காக இல்லையென்றாலும், அவர்கள் நடந்து கொள்ளும் முறையால் பெரும் நிலக்கிழார் முதல் அடிமட்ட விவசாயக் கூலிகள் வரை அவர்களிடம் உண்மையான அன்போடும், மரியாதையோடும் நடந்து கொண்டிருந்தார்கள்.

என்ன காரணமோ, யார் மூளையில் உதித்த திட்டமோ, எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் இந்த பாரம்பரிய பதவி முறை ரத்து செய்யப்பட்டு கிராம அதிகாரிகள் வி.ஏ.ஓ. என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் அதே கிராமத்தை அல்லது பகுதியைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டுமெங்கிற அவசியம் இல்லை. மா நிலம் முழுவதுக்குமாக ஒரு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வு எவ்வளவு நேர்மையாக நடக்கும் என்பது தெரியாது. அதில் தேர்வடைந்தவர்கள் கிராம நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சிறு அறையொன்று அலுவலகம் எனும் பெயரில் திறக்கப்பட்டிருக்கும். அவர் எப்போது வருவார், எப்போது மக்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்டு அதற்கான ஆவணங்களைக் கொடுப்பார் என்பதையெல்லாம் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அவசரத்துக்குப் போய் அவர்களைப் பார்த்துவிடவோ, அல்லது நமக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்றுவிடவோ முடியுமா? அந்தக் கடவுளுக்குக்கூடத் தெரியாது

பழைய நிலவரப்படி நான் பிறந்த கிராம கணக்குப்பிள்ளையிடமிருந்து எனது பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டியிருந்தது. நான் இருந்த ஊரிலிருந்து என் கிராமத்துக்குச் செல்வது மிக நீண்ட பயணம் மேற்கொண்டாக வேன்டும். ஆகவே அந்த கணக்குப்பிள்ளையின் பெயருக்கு ஒரு கடிதம் எழுதினேன். என்னுடைய பிறந்த ஆண்டு, மாதம், தேதி இவற்றையும், என்னுடைய தந்தை விலாசம் முதலியவற்றையும் கொடுத்து, பிறப்புச் சான்றிதழ் அனுப்ப முடியுமா என்று கேட்டிருந்தேன். அதற்கு மூன்றாவது நாளே அவர் அஞ்சலில் எனக்கு அந்த சான்றிதழை அனுப்பி வைத்திருந்தார். அது என் பணியில் எத்தனை தூரம் உதவியாக இருந்தது ஒரு புறம் இருந்தாலும், அந்த அஞ்சல் செலவைக்கூட (சிறிய தொகையாக இருந்த போதும்) அவரே செலவழித்து எனக்கு அந்த சான்றிதழை அனுப்பி வைத்தார். இத்தனைக்கும் அவர் எனக்கு பழக்கம் இல்லாதவர். என் தந்தை காலத்தில் அவரைத் தெரிந்ததுதான் ஒரே தொடர்பு. இப்போது இந்த நிகழ்ச்சியைச் சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள்.

இன்று தினசரி செய்தித் தாள்களைப் பிரித்ததும் நம் கண்களில் படும் செய்தி இந்த ஊரில் இன்னார் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார், கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார் என்பதுதான் நம் கண்களில் படுகின்றன. அப்படி கைது செய்யப்படும் அரசாங்க அதிகாரிகளின் பட்டியலில் அதிகமாக மாட்டிக் கொள்வோர் கிராம நிர்வாக அதிகாரிகள்தான். மிக உயர்ந்த மாவட்ட ரெவின்யு அதிகாரிகள்கூட மாட்டிக் கொண்டிருக்கின்றனர். நல்ல பதவி, நல்ல வருமானம், சமூகத்தில் நல்ல அந்தஸ்து இவை அத்தனையும் இருந்தும், ஏழை எளிய மக்கள் உட்பட பொதுமக்களிடமிருந்து லஞ்சமாகப் பெற்று தங்கள் சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்வது என்பது இப்போதெல்லாம் பழக்கமாகிவிட்டது.

லஞ்சம் தேவைக்கு வாங்குவது என்பது ஒரு புறம், ஆடம்பரத்துக்கு வாங்குவது என்பது அதிகமானது. சமீபத்தில் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு முன்னாள் ஆணையர் என்.விட்டல் அவர்கள் சென்னையில் சமூகப்பணி கல்லூரியின் மேரி கிளப்வாலா ஜாதவ் அவர்களின் நினைவாக நடந்த சொற்பொழிவில் பேசியிருக்கிறார். அவர் மிகவும் கண்டிப்பானவராகவும், அவர் வகித்த அந்த பதவிக்கு உயர்வும் பெருமையும் கிடைக்கும் விதத்திலும் பணியாற்றியவர். அப்பழுக்கில்லாத நேர்மையான அதிகாரியாகத் தன் வாழ் நாளை ஓட்டியவர். அவர் சொல்கிறார், “இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ஊழல் நிறைந்துள்ளது. ஊழலுக்கான பல உதாரணங்கள் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. ஆங்கிலேயர்கள் இந்தியாவை சிறிது சிறிதாக ஆக்கிரமித்ததற்கு அவர்கள் லஞ்சம் கொடுத்துத்தான் அப்படிப்பட்ட பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் மக்கள் ஊழலை சர்வ சாதாரணமாக வாழ்க்கையின் ஓர் அங்கமாக எடுத்துக் கொள்ளத் துவங்கி விட்டனர்.”

“சர்வதேச நிறுவனங்கள் வெளியிடும் ஆய்வுப் பட்டியலில், ஊழல் மிகுந்த நாடுகளில் இந்தியா கெளரவமிக்க முதல் சில இடங்களைப் பிடித்துக் கொண்டுவிட்டது” என்று கிண்டலாகக் குறிப்பிட்ட அவர் சொல்கிறார். “ஊழலுக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது தேவைக்காக ஊழலில் ஈடுபடுவது ஒன்று. மற்றொன்று பேராசையால் ஊழல் செய்வது. தேவைக்காக லஞ்சம் வாங்குபவர்களுடைய ஊதியம் போதுமானதாக இல்லாவிட்டால், அவர்களுடைய ஊதியத்தை அவர்கள் தேவைக்கேற்ப உயர்த்தி வழங்குவதால் அவர்கள் செய்யும் ஊழலைத் தடுத்துவிட முடியும். ஆனால், பேராசை, குறுகிய காலத்தில் கொள்ளையடித்து கோடீஸ்வரர்களாக ஆகவேண்டுமென்று, வசதிகளையும் ஆடம்பரங்களையும் விரும்பி ஊழல் செய்பவர்களைத் தடுக்க முடிவதில்லை.” என்கிறார் திரு விட்டல்.

அவருடைய அசைக்கமுடியாத, தீர்க்கமான முடிவு என்னவென்றால், “அரசியல்வாதிகள் பேராசையின் காரணமாக ஊழல் செய்யத் தொடங்குகின்றனர். அதில் ருசி கண்டபின் அவர்களைப் பின்பற்றி எல்லோருமே பேராசையால் லஞ்ச லாவண்யங்களில், குறுக்கு வழிகளில் சம்பாதிக்கத் தொடங்குகின்றனர். ஊழல் பெருகுவது இப்படித்தான்” என்கிறார் திரு விட்டல்.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக 2ஜி ஊழலைக் குறிப்பிடுகிறார் அவர். “நம் நாட்டில் உள்ள அரசியல் நிலைமைகள் ஊழல் செய்வதற்கு ஏற்றவிதமாக அமைந்துவிட்டன. அரசியல்வாதிகளில் சுமார் 80 சதவீதம் பேர் ஊழல் பேர்வழிகள்” என்பது அவருடைய கருத்து. “நம்முடைய பாரத திரு நாட்டை இப்போது ஊழல் போன்ற பல கொடிய நோய்கள் தாக்கியுள்ளன. இந்த கோளாறுக்ளை சரிசெய்ய சரியான மருத்துவர்கள் தேவை. அப்படிப்பட்ட மருத்துவர்களாக யாரால் இருக்க முடியும் என்றால், நம் அரசியல் சட்ட அமைப்புப்படி சில அமைப்புகள் இருக்கின்றன. அவை நீதித்துறை, தேர்தல் ஆணையம், இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி, மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு போன்றவைகளால் இந்த ஊழல்களைத் தடுத்து நிறுத்த முடியும், நிறுத்தக்கூடிய சக்தியும் அதிகாரமும் இவைகளுக்கு உண்டு.”

திரு விட்டல் இப்படிச் சொல்லிவிட்டார் என்றாலும், நீதிமன்றம் அரசை ஏதாவது ஒரு துறையில் நடந்த முறைகேட்டைச் சுட்டிக் காட்டிவிட்டால், உடனே சில அமைச்சர்கள் நீதிமன்றங்கள் அரசாங்கத்தின் நிர்வாகச் செயல்பாட்டில் தலையிடக்கூடாது என்று நியாயம் பேசத் துவங்கிவிடுகிறார்கள். தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாட்டுகளை விதித்தால், மத்தியில் பெரிய பதவிகளில் இருக்கும் அமைச்சர்கள் உட்பட பலரும் அந்தக் கட்டுப்பாடுகளை மதிப்பதில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் ஆதாயம் தேடுவதற்காக மதவாதத்தை நுழைக்ககூடாது என்பது பொதுவான விதி. இதை பா.ஜ.க. அல்லது ஆர்.எஸ்.எஸ். மீறிவிட்டால் கொய்யோ முறையோ என்று அலறுவதும், எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு இது மதவாத அரசியல் என்றும் குற்றம் சாட்டிவிடுகிறார்கள். ஆனால் உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலின் போது பிற்பட்டோருக்கு உரிய ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு சில சதவீதம் ஒதுக்கப்படும் என்று மந்திரிகள் பேசியதை அடுத்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டதற்கு எங்கள் தேர்தல் அறிக்கையில் இருப்பதைத்தானே சொன்னோம் என்று அலட்சியமாகப் பதில் சொல்லி, செய்த தப்பை மீண்டும் மீண்டும் செய்தார்கள். மக்கள் அதை நிராகரித்துவிட்டார்கள் என்பதற்கு தேர்தல் முடிவுகளே சாட்சி என்றாலும், அப்படி அடாவடித்தனம் செய்ய அமைச்சர்கள் தயங்குவதில்லை என்பதே இங்கு ஜன நாயகமும், ஊழலை ஒழிக்கும் சக்தி படைத்த அமைப்புகளும் செயலிழந்து விடுகின்றன. இந்த நிலையில் எப்படி இங்கு ஊழலற்ற சமுதாயம் உருவாகும்?

இந்த ஊழல் வாதிகளின் செயல்பாடுகளால் என்னவெல்லாம் தீமைகள் ஏற்படுகின்றன என்பதையும் திரு விட்டல் பட்டியலிட்டார். அரசியல் வாதிகளின் ஊழலால் சமூக சீர்கேடுகள் நடக்கத் தொடங்குகின்றன. தீவிரவாதம் அதிகரிக்கிறது என்கிறார் அவர். இன்றைய குறைபாடு என்னவென்றால், எதிர்கட்சியாக செயல்படும் வரை அனைவருமே ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்புகின்றனர். அவர்களே ஆளும் கட்சியாக வந்துவிட்டால் அவர்களும் அதே ஊழல் வண்டியில்தான் பயணம் செய்கின்றனர். இந்த சூழ் நிலையில் ஊழலை ஒழிக்க என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

நிர்வாகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளின் நியமனத்தில் வெளிப்படையான தன்மையை அரசாங்கம் கடைபிடிக்க வேண்டுமென்பது அவரது கருத்து. அதுமட்டுமல்லாமல் சரியான சில பதவிகளுக்கு நேர்மையான அந்தப் பதவிக்கு ஏற்ற நபர்களை அரசு நியமனம் செய்ய வேண்டும். இந்த முறை எப்படியெல்லாம் கடைபிடிக்கப்படவில்லை, எப்படியெல்லாம் எதிர்ப்புகள் இருந்தும், நியாயமற்ற முறையில், நேர்மையில்லாத ஆட்களைப் பொறுப்பான பதவிகளில் கடந்த காலத்தில் நியமித்திருக்கிறார்கள் என்பதை பல உதாரணங்களைக் காட்டிச் சொல்ல முடியும் என்றாலும் பட்டவர்த்தனமாகத் தெரிந்த ஒரு நியமனம் தாமஸ் அவர்களின் நியமனம். நீதிமன்றம் தலையிட்டு கண்டிப்பான உத்தரவு போட்டும், விடுவேனா பதவியை என்று உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்துவிட்டு வேறு வழியில்லாத நிலையில் பதவி விலகிய காட்சிகளையெல்லாம் பார்த்தோமல்லவா? இதெல்லாம் ஒரு ஜன நாயக நாட்டில் நடப்பது நமது ஜன நாயக அமைப்புக்கே கேவலம், அவமானம் இல்லையா? ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியவர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. தாங்கள் தெரிந்தே செய்த தவறுகளை, ஊழல்களை நியாயம் என்று அடித்துப் பேசுவதோடு, நாடாளுமன்றத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வந்தால் விவாதத்துக்குத் தயார் என்று சவால் விடுகின்றனர். இதுபோன்ற விவாதங்கள் தரும் முடிவுதான் என்ன. பெருவாரியான எண்ணிக்கை இருந்தால் குற்றச் சாட்டுகள் நிராகரிக்கப்பட்டுவிட்டன என்று மார்தட்டிக் கொள்வதைத் தவிர, இதில் உண்மைக்கு என்றுமே வெற்றி கிட்டியதில்லை.

“லோக்பால் மசோதா” என்றொரு பிரச்சினை. இதில் என்னவோ இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டால் நாட்டில் ஊழல் ஒழிந்து போகும் என்பதுபோல ஒரு பிரமையை சிலர் கிளப்பி விட்டனர். நாடுகாணாத அளவுக்கு ஊழலை எதிர்க்கும் பொதுமக்கள் இப்படி கோஷம் எழுப்பியவர்களின் பின்னால் நாட்கணக்கில் நின்று போராடியதுதான் மிச்சம். ஆளும் அரசியல் வாதிகளுக்குத் தெரியாதா, யாரை எப்படி மிட்டாய் கொடுத்து ஏமாற்றலாம் என்று. ராஜ்ய சபா விவாதம் நள்ளிரவில் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டு சபாவும் ஒத்திவைக்கப்பட்டு விட்டது. அரசியல் சாமர்த்தியத்தின் முன்பு சத்தியமும், நேர்மையும் ஈடுகட்டி நிற்க முடியாது என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேன்டும்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். “திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது” என்று. சூடான தோசைக் கல்லை அடுப்பில் இருக்கும்போது தொட்டுவிட்டு கை கொப்புளித்து, ஐயோ ஐயோ என்று அலறுபவனைப் போல ஊழல் பேர்வழிகள் எதிலாவது கைவித்து ஐயோ ஐயோ என்று அலறினால் அன்றி இவர்கள் திருந்த மாட்டார்கள். மகாகவி பாரதி சொல்கிறான், “படித்தவன் பாவமும் சூதும் பண்ணினால், போவான், போவான், ஐயோவென்று போவான்” என்று. ஊழலில் கோடிக்கணக்கில் சுருட்டிய பெரிய மனிதர்கள் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறார்களா. திருடிச் சேர்த்த சொத்து அவர்களிடம் நிலைத்து நிற்கிறதா என்பதையெல்லாம் ஒரு ஆய்வு செய்து வெளியிட வேண்டும். பார்ப்போம் அந்த பட்டியலில் உள்ளவர்களில் எத்தனை பேர் திருடிய சொத்தை அனுபவிக்கிறார்கள் என்று. ஊழலை எதிர்ப்பதாக வேஷம் போடுபவர்களோ, அல்லது அதுபோன்ற போராட்டங்களில் ஊழல் பேர்வழிகளே சேர்ந்து கொண்டு குரல் கொடுப்பவர்களோ ஊழலை ஒழித்துவிட முடியாது. கோடானுகோடி இந்திய மக்கள் ஒன்று திரண்டு இவர்களுக்குத் தேர்தலில் ஜன நாயக வழியில் படுதோல்வியைத் தழுவச் செய்வது ஒன்றே ஊழலை ஒழிக்கும் வழி. அதற்கு இந்திய மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். விழித்துக் கொள்வார்களா பார்க்க வேண்டும்.

ஆக்கம்:
தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,
28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு,
தஞ்சாவூர் 613007

7 Replies to “ஊழலின் ஊற்றுக்கண் எது?”

 1. இங்கு ஊழலுக்கு மாற்றாக மற்றொரு ஊழல்தான் உள்ளது. திமுகவிற்கு மாற்றாக அதிமுக. மத்தியில் காங்கிரசுக்கு மாற்றாக பாஜக. அனைத்தும் ஊழல் கட்சிகளே. எனவே மக்களும் ஊழல் செய்கின்றனர்.

  மகாநதி என்ற திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். “லஞ்சம் வாங்காதவன் இருக்கலாம்; ஆனால், லஞ்சம் கொடுக்காதவன் என்று யாரும் இல்லை. குறைந்த பட்சம் ரயில்வே TTR க்கு பணம் கொடுத்து பெர்த் வாங்குகிறோம்”.

  எனக்குத் தெரிந்த ஒருவரின் தாயார் ஒரு தாதில்தார் அலுவலகத்தில் 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். Block Development Officer பதவி உயர்வைத்
  தவிர்த்து வந்தார். ஒரு கட்டத்தில் பதவி உயர்வை ஏற்கும்படி ஆகிவிட்டது. அடுத்த நாளே VRS மனு செய்து வந்து விட்டார். ஏனெனில், BDO மூலமாகத்தான் அனைத்து லஞ்சங்களும் பெறப்படுகின்றன.

  மக்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய தலைவர் ஒருவரையும் எந்தக் கட்சியிலும் பார்க்க முடியவில்லை. கடவுள் காப்பாற்றினால்தான் உண்டு.

  தீர்வுதான் என்ன என்று தெரியவில்லை.

 2. Even Chanakya despite his stringent personal conduct could not avoid practising chicanaery in dealing withpoliticians of his time.Serpent and eve started corruption and God punished them severely and showed the way how to deal with it.The tragedy is despite summary execution in China still we hear of its presence even thoughit is not as alarming as it is in india.Unless the king (government) is willing to punish with strong hand and in that the Judiciary assist it without demur and the people who allow themselves to be corrupted for their votes India does not have any salvation and Ramarajya will still a dream devoutly wished for.
  A.T.Thiruvengadam

 3. காங்கிரசு மகாவிஷ்ணு மீண்டும் ஒரு ஊழல் அவதாரம் ( – சுரங்க ஊழல் -) எடுத்துள்ளது அம்பலத்துக்கு வந்துவிட்டது. எனவே, காங்கிரசுக்காரன் இனிமேலும் பத்தினி வேடம் போடாமல், ஒரு வாலண்டரி டிஸ்க்ளோசர் ஸ்கீம் ( voluntary disclosure scheme) உடனடியாக ஒரு அவசர சட்டம் மூலமாக அறிவித்து, ஒரு 30/ 40 சதவீதத்தை வருமான வரியாக வசூலித்துவிட்டு, எஞ்சிய எழுபது அல்லது அறுபது சதவீதத்தை கொள்ளையர்களே அனுபவிக்கும்படி விட்டுவிடலாம். இல்லையென்றால், அரசுக்கு இதுவும் கிடைக்காமல் போய்விடும். காலதாமதம் செய்யாமல், உடன் இதனை செய்யவேண்டும்.

  சோனியாவின் குடும்பமும், மஞ்சளாரின் குடும்பமும் தொடர்ந்து பத்தினி வேடம் போடுவதை கைவிட வேண்டும். அரசுக்கு சிறிதாவது வரி செலுத்துங்கள். இல்லையென்றால், ஏழைகளின் வயிற்றெரிச்சல் உங்களை சும்மா விடாது.

 4. /////தான் தோன்றி on March 24, 2012 at 9:32 am
  காங்கிரசு மகாவிஷ்ணு மீண்டும் ஒரு ஊழல் அவதாரம் ./////
  ஆசிரியர் குழு இது போன்ற வரிகளை அனுமதிப்பது மனதுக்கு வருத்தம் அளிக்கிறது.
  தான்தோன்றிகள் இப்படித்தான் எழுதுவார்கள் அவர்களை திருத்தமுடியாது. ஆசிரியர் குழு இதை அனுமதித்தது தான் வருத்தமாக உள்ளது

 5. அன்புள்ள திராவிடன்,

  மகா விஷ்ணு என்ற சொல்லை நீக்கிவிட்டு படித்துக்கொள்ளுங்கள். உங்கள் மனது புண்பட்டிருந்தால் , என் மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.

  நமது இந்து இலக்கியம் , புராணம். மற்றும் இதிகாசங்களில் , எனக்கு தெரிந்து மகாவிஷ்ணு ஒருவரே பல அவதாரங்கள் எடுத்துள்ளதாக வருகிறது. வேறு யாரும் இதுபோல அவதாரங்கள் எடுத்ததாக தெரியவில்லை. தமிழர்களின் வாழ்வில் , எங்கள் ஊரில் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களே இவை. பொய் சொன்ன ஒருவரை ஏண்டா அரிச்சந்திரா என்று சொல்வார்கள். பல தாரம் கொண்ட ஒருவரை என்னப்பா ஏக பத்தினி விரதா என்று கிண்டல் செய்வார்கள். இது தான் தொன்றிகளுக்கு தெரிந்த உண்மை. இருப்பினும் தான் தோன்றி மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்கிறான் .

 6. திரு தான்தோன்றி,
  நீங்கள் எந்த அர்த்தத்தில் கூறினீர்கள் என்று எனக்கு தெரியாது. தவறான அர்த்தத்தில் குறிப்பிடவில்லை என்ற உங்கள் விளக்கத்திற்கு மகிழ்ச்சி. இருப்பினும் இனி ஊழல் மற்றும் எந்த கெட்ட விஷயத்திற்கும் எந்த கடவுளரையும் ஒப்பிடாதீர்கள். இது என் வேண்டுகோளே.
  நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *