பள்ளிக் கல்வி – 2 [நிறைவுப் பகுதி]

பள்ளிக் கல்விமுதல் பகுதி

தொடர்ச்சி…

தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்காக ஒரு பரிசோதனை செய்தேன். முதல் தேர்வைக் காட்டிலும் எளிதாக மறுதேர்வு நடத்தினாலும் அதிலும் பெரும்பாலானோர் தோல்வியே அடைந்தனர். ஆகையால் வகுப்பறை போதனா முறை சற்று சுவாரஸ்யம் ஆக்கப்பட்டது. உற்சாகம் கூட்டப்பட்டது. தோல்வி அடைந்தாலும் என் வகுப்பு அந்த மாணவர்களுக்குப் பிடித்தே இருந்தது. எத்தனை முறையானாலும் புரியாத விஷயங்களைப் புரியவைத்தேன். 35 ஆண்டுகள் ஆசிரியப் பணியில், நான் தினமும் தூங்கியது 4 மணிநேரம் மட்டுமே. பகல்தூக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நல்ல மாணவர்கள் மேலும் வளர்ந்தனர். மோசமான மாணவர்கள் மேலும் மோசமான நிலைக்கே சென்றனர். செப்டம்பரில் தோல்வியடைந்தவர்கள் பிப்ரவரியிலும் தோல்வியையே சந்தித்தனர். இதை எவ்வாறு தடுப்பது? சிலர் மேசையருகில் சென்று பார்த்தால் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. மரத்தில் தங்கள் பெயர்களைச் செதுக்கி இருந்தார்கள். அவர்கள் கவனம் பாடத்தில் இல்லை. கனவுலகில் சஞ்சாரம் செய்துகொண்டு இருந்தனர். சிலர் கண்ணைச் சுழற்றிக் கொண்டு இருந்தனர். தூக்கத்தை மீறி விழித்துக் கொண்டிருப்பதே ஒரு பெரிய இமாலயப் போராட்டமாக இருந்தது. முதல்நாள் இரவு முழுவதும் ஒருவன் தூங்கவில்லை. குருகுலத்தில் ஒரு பூஜையில் கலந்து கொண்டு இருந்துள்ளான். அவனை வகுப்பறையிலேயே ஓர் ஓரமாகப் படுக்க வைத்து தூங்கச் சொன்னேன். அடுத்த நாள் அவன் வகுப்பில் மிகக் கவனமாக இருந்தான். அதே போல தேர்வின் போது வெளியே வேடிக்கை பார்ப்பது சிலரது வழக்கம். பிறகு திடீரென்று அவசர அவசரமாக எழுத ஆரம்பிப்பார்கள்.

ஒருநாள் ஒரு மாணவருக்கு “மைட்டோகாண்டிரியா”வின் வேலைகளைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன். அதன் முக்கியமான வேலை சுவாசித்தல். பத்து முறை தெளிவுப்படுத்தினேன். பத்து நிமிடம் கழித்துக் கேட்டான், “சார்! ‘சுவாசித்தல்’ அப்படின்னு ஒரு Answer வருகிறதே அதோட கேள்வி என்ன?” என்று! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆனால் பொறுமையாகச் சொன்னேன். சிலர் பாடம் நடத்தும்போது நிறைய புரிந்துகொள்வது போலத் தலையை நன்கு ஆட்டுவார்கள். அது நம்மைக் கவிழ்ப்பதற்காக என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாடம் நடத்துவதைச் சற்று நிறுத்தி ஒரு சிறு வினாவைத் தொடுத்தால் அவன் திருதிருவென முழிப்பான். ஆகவே நீங்களே வகுப்பறை முழுவதையும் ஆக்கிரமிக்காமல் இடையிடையே மாணவர் பங்கேற்பு’ என்ற விஷயத்துக்கும் முக்கியத்துவம் தாருங்கள். விடை யாருக்குத் தெரியும் எனக் கேட்டுப்பாருங்கள். எல்லாக் கைகளும் உயர்ந்துவிடும். ஆனால் அதில் பலருக்கு விடைதெரியாது. கேள்வி கேட்கும் ஆசிரியர்கள் சரியான பதிலுக்காக மட்டுமே தங்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள். சரியான பதில் கிடைத்து விட்டால் மிகத் திருப்தி அடைந்து விடுகிறார்கள். சில மாணவர்கள், தாம் பதிலளிக்கும் போது ஆசிரியரின் முக பாவனையை கவனித்து அதற்குத் தகுந்தாற்போல் பதில் கூறுவார்கள். ஓர் ஆசிரியர் Noun, Vetb, Adjective பற்றி நடத்திக் கொண்டிருந்தார். ஒவ்வொன்றுக்கும் நேராக ஓர் உதாரணம் எழுதினார். அந்த உதாரணத்தைக் காட்டி, “இது என்ன சொல்?” எனக் கேட்பார். குழந்தைகள் அது Noun-க்கு நேரே இருப்பதால் பெயர்ச்சொல் என்பர். Verb-க்கு நேரே இருந்தால் வினைச்சொல் என்பர். ஆசிரியர் என்ன நினைக்கிறார்? கற்றல் மிக எளிமையாக உள்ளதாக நினைக்கிறார். ஆனால் இங்கு கற்றல் நிகழவே இல்லை என்பதை அவர் உணரவில்லை.

குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருவதைத் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு தினசரி வேலையாகத் தான் நினைக்கிறார்கள். கடமை உணர்வு மிக்க ஆசிரியர் குழந்தைகளை ஒரு மகத்தான பயணத்தில் உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்வதாக நினைக்கிறார். ஆகவே சுவாரஸ்யமாகப் பாடங்களை நடத்த மெனக்கெடுகிறார். ஆனால் அவர் செய்யும் ஒரே தவறு இதுதான். தனக்குப் பாடங்கள் மீது இருக்கும் அதே ஆர்வம் குழந்தைகளுக்கும் இருக்கும் என்று தப்புக் கணக்குப் போடுவதுதான். நானும் இப்படி அடிபட்டிருக்கிறேன். பின் ஏன் குழந்தைகள் வகுப்புக்கு வருகிறார்கள்? அவர்கள் அங்கு வந்தாக வேண்டும். வேறுவழியில்லை. ஓர் உதாரணம்: உடம்பு சரியில்லாத குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுகிறோம். மருத்துவர் அன்பாக மருந்து கொடுத்து சாப்பிடச் சொல்லுவார். ஆனால் குழந்தை என்ன நினைக்கிறது? ‘இந்த மருந்து கசக்குமோ, குமட்டுமோ? இதை ஜன்னல் வழியாகத் தூக்கி எறிஞ்சுடலாம். இந்த ஆளு ஊசி கீசி போட்டுத் தொலைக்கப் போறாரு?’ என்றெல்லாம் நினைக்கும். விட்டால் ஓடியே போய்விடும். இதே போலத்தான் பள்ளியிலும் குழந்தை இருக்கிறது. மாலையில் பள்ளி கடைசி வகுப்பு முடிந்து மணி அடிக்கும்போது ஒரு சந்தோஷச் சத்தம் வருகிறதே, அதைக் கவனியுங்கள். விட்டது தொல்லை என்று ஓடுகிறார்கள்.

மாணவர்களைப் பொருத்த வரை பள்ளியில் அவர்களது வேலை ‘கற்றுக்கொள்ளுதல்’ அல்ல; மாறாக, கஷ்டப்படாமல் தினம் கொடுக்கப்படும் வேலையை முடித்துக் காட்டி, தன்மேல் பழி வராத அளவுக்கு நடந்துகொள்வது. அந்த வேலையை நியாயமாகச் செய்யமுடியவில்லையானால் குறுக்கு வழியிலும் முடித்து நல்லபெயர் வாங்குவது ஒன்றுதான் மாணவனது வேலை. தன்னிச்சையாக முயன்று சிந்திப்பவனுக்குப் பள்ளியில் மரியாதை இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். எப்படியாவது விடையைச் சொல்லி ஆசிரியரிடம் சபாஷ் வாங்க வேண்டும். திட்டு வாங்காமல் தப்பிக்க வேண்டும். இதனால் சுயஅறிவை பயன்படுத்த வழியே இல்லாமல் போகிறது. குழந்தைகளைக் கேள்விகள் கேட்க ஊக்கப்படுத்த வேண்டும். கேள்விகள் கேட்க அவர்களுக்குப் பயம் வரக்கூடாது. அப்துல் கலாம், தான் செல்லுமிடங்களிலெல்லாம் இந்த வேலையை நன்றாகச் செய்கிறார். எங்கு போனாலும் குழந்தைகளைக் கேள்வி கேட்க வைக்கிறார்.

ஒருநாள் என் வகுப்பறையில் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி மாணவர்களிடம் மனம்விட்டுப் பேச விரும்பினேன். “நான் கேள்வி கேட்கும் போது உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் உங்களுக்கு என்ன தோன்றும்? தயவுசெய்து பதில் சொல்லுங்கள்,” என்றேன். வகுப்பில் மயான அமைதி. ஒரு பையன், “சார்! முதலில் எச்சில் முழுங்குவோம்!” என்றான். “பாதி உயிர் போனது போல இருக்கும்” என்றான் ஒருவன். நல்ல பெயர் வாங்கிய பள்ளியிலேயே இப்படி ஒரு நிலை.

அதே போல கணித ஆசிரியர் ஒருவர் சொன்னார், “ஓரிரு கணக்குகள் கொடுத்தால் நன்றாக செய்கிறார்கள். மொத்தமாக 100 கணக்குகள் கொடுத்தால் திணறித் தடுமாறுகிறார்கள்,” என்றார். ஆனால் உண்மை என்னவென்றால் அவர் வேலை கொடுத்த மாதிரியே மற்ற 4 பாடத்தின் ஆசிரியர்களும் அதே அளவு வேலை கொடுத்துள்ளார்கள். எழுத்து வேலை தேவைதான். ஆனால் ஒரே நேரத்தில் ஒரு லாரி எழுத்து வேலை கொடுத்தால் அவன் என்ன செய்வான் பாவம்! தேர்வு சமயத்தில் மிக அதிக அளவில் தவறுகள் செய்யும் பிள்ளைகள்தான் பெரும்பாலும் முதலில் விடைத்தாளை முடித்துக் கொடுக்கிறார்கள். கவலையிலிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தப்பிக்கவே குழந்தைகள் நினைக்கிறார்கள்.

பிள்ளைகளை எவ்வளவு தூரம் கட்டாயப்படுத்தலாம், எவ்வளவு தூரம் மனஅழுத்தத்திற்கு உட்படுத்தலாம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஓர் எல்லை தாண்டினால் நமக்கும் மாணவனுக்கும் உள்ள இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அதன்பிறகு அவர்கள் தம் அறிவைப் பூட்டி வைத்துக் கொள்கிறார்கள். கனத்தை கழற்றி விட்டு விடுகிறார்கள். ஆகவே அவர்களுக்கு சுதந்திரம் அளியுங்கள். உங்கள் வகுப்பறை உற்சாகமாக இருக்க வேண்டும்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இருந்தால் அவர்களை, தாமும் சராசரிக் குழந்தைகளே என்று எண்ணச்செய்ய வேண்டும். அவர்களை ஒதுக்கித் தள்ளிவிடாதீர்கள்.

சில பிள்ளைகள் எந்த விதத்திலும் தயாராக இருக்கமாட்டார்கள். வேலைநேரத்தில் பென்சில் இல்லை, பேனா இல்லை, பேப்பர் இல்லை என்பார்கள். அவர்களது இடம் எப்போதும் குப்பையாக இருக்கம். நூலகத்தில் புத்தகம் எடுத்தால் தொலைத்துவிடுவார்கள். வீட்டுப்பாட நோட்டை வீட்டிலேயே பத்திரமாக வைத்துவிட்டு வருவார்கள். தம் நோட்டுகளை ஒழுங்காக வைத்துக்கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற விஷயங்களைத் தன் புத்திசாதுர்யத்தால் ஆசிரியர் சமாளித்தாக வேண்டும்.

ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கும் பாடங்களின் மூலம் அவர்கள் எந்த உருப்படியான விஷயத்தையும் கற்றுக் கொள்வதில்லை. இன்றைய தேர்வில் எழுதிய பாடங்களை 2 மாதம் கழித்து மறந்து விடுகின்றனர். எல்லாம் பயனற்ற செய்கைகளாக இருக்கின்றன. இதையெல்லாம் நினைத்தாலே மனதுக்குச் சங்கடமாக உள்ளது. மூளையின் செயல்திறன் மந்தமாகும் வகையில் மாணவர்களுக்கு நாம் அளிக்கும் கல்வி இருக்குமேயானால் அவர்களது மூளையை நாம் மேலும் மழுங்கவைத்துக் கொண்டிருப்பதாகப் பொருள். ஆகவே Activity Based Learning-ஐ அமுல்படுத்துங்கள். கற்றுக் கொள்வார்கள். குழந்தைகளிடம் சொல்லுங்கள், எந்த விஷயத்தைச் செய்தாலும் அதை முழுவதுமாகப் புரிந்துகொண்டு செய்யுங்கள் என்று. நாம் பயன்படுத்தும் மொழிப்பிரயோகமும் குழந்தைகளுக்குப் புரிந்துகொள்ளும் படியாக இருக்க வேண்டும்.

வகுப்பறையில் மாணவர்களிடம் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிக்கச் சொல்லி, ஆனால் எந்த அவசரமும் இல்லை; பதட்டப்படாமல் மெதுவாகக் கண்டுபிடித்தால் போதும் எனக் கூறிப்பாருங்கள். அசத்திவிடுவார்கள். ஒருமுறை செய்முறை வகுப்பில் இதுபோல ஒரு சோதனை செய்வதைக் கொடுத்து, நீங்கள் சோதனை செய்வது முக்கியமல்ல. நீங்கள் எந்த முறையில் அதை அணுகப் போகிறீர்கள் என்பதே முக்கியம் என்றேன். பலர் பலவிதமான அணுகுமுறைகளைக் காட்டினார்கள். நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவ்வளவு Creative Thinking இடம் பெற்றிருந்தது. இதேபோலத் தொடர்ந்து நான் செயல்படமுடியவில்லை. நான் பாடத்திட்டத்தை முடிக்கவில்லை என தலைமையாசிரியர் வருத்தப்பட்டார். நானும் வேறு வழியில்லாமால் பழைய உருப்படாத போதனை முறைக்கு மாறிவிட்டேன்.

பல ஆசிரியர்கள் நிஜ அறிவுக்கும் அறிவு போன்ற தோற்றத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வதில்லை. பலமுறை பயிற்சி செய்த பின்னரும் மாணவர் தவறு செய்தால் அவன் முட்டாள் என்றும் அவனுக்கு படிப்பில் நாட்டமில்லை என்றும் முடிவுகட்டி விடுகின்றனர். ஓர் ஆசிரியர் இன்னும் ஒடிபடி மேலே போய் மாணவனுக்கு மனநிலை குறைபாடு இருக்கக் கூடும் என்று முடிவு கட்டுகிறார். அந்த மாணவருக்கு அடிப்படை விஷயங்களில் தெளிவு இல்லை என்பதை நாம் யோசித்துப் பார்ப்பதே இல்லை. அடித்தளத்தை மாற்றியமைப்பதுதான் நமது முதல் வேலை. கொஞ்ச விஷயங்களைப் பற்றி மட்டுமே படித்தாலும் அவற்றை முழுமையாகப் புரிந்து கொள்வது சிறந்தது. மிக அதிகளவில் படித்து சாதித்து விட்டது போல காட்டிக்கொண்டு விஷய ஞானம் பூஜ்ஜியமாக இருந்தால் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை. எனக்கு சோமசுந்தரம் என ஒரு தலைமையாசிரியர் இருந்தார். Prose-ல் 10 பாடமும் Poetry-ல் 10 Poem-மும் இருந்தது. (9ம் வகுப்புக்கு). அவர் என்னை அழைத்து 6 பாடம் 6 Poem நடத்தினால் போதும் அதை Perfect ஆகச் செய்யுங்கள் என்பார். புரிந்துகொள்ளுதல் என்றால் என்ன? ஒரு விஷயம் நமக்குப் புரிந்தது என்றால் என்ன பொருள்? அந்த விஷயத்தை நம் சொந்த வார்த்தைகளால் விவரிக்க தெரியவேண்டும். அதைப்பற்றிய உதாரணங்கள் கொடுக்கத் தெரிய வேண்டும். அவ்விஷய ஞானத்தை பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தத் தெரியவேண்டும். இதுபோல குழந்தைகளைப் பழக்க வேண்டும். பல்வேறு விஷயங்களை நினைவு வைத்துக்கொள்வது அறிவோ, கல்வியோ ஆகாது. அந்த விஷங்களை சூழ்நிலைக்கேற்பப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். அதுதான் உண்மைக்கல்வி. அதுதான் உண்மையான அறிவு. சென்னை மாநகரின் சாலைகளின் பெயரையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு பூந்தமல்லி சாலையிலிருந்து ஹாரிங்டன் சாலைக்கு போகத் தெரியவில்லையெனில் என்ன பயன்? பள்ளிகளில் மாணவர்கள் விஷயங்களையும் விபரங்களையும் மட்டுமே சேகரித்து வைக்கின்றனர். தேர்வின் போது அதை நன்றாகவே வாந்தி எடுக்கின்றனர். இந்த விபரங்களையும் விஷயங்களையும் ஜீரணித்துக் கொள்வதில்லை. ஒரு பச்சைக்கிளிக்குப் பாடஞ்சொல்லிக் கொடுத்தால் என்ன நிலையோ அதே நிலையில்தான் மாணவர்களும் இருக்கின்றனர்.

மாணவர்கள் கட்டுரைகள் எழுதும் போது ஆசிரியர் கூறுகிறார், ஒரு பக்கத்துக்கு மூன்றுக்கு மேற்பட்ட தவறுகள் இருந்தால் அந்தப் பக்கத்தை மறுபடியும் எழுதித்தர வேண்டும். அடிப்படை நோக்கம் என்ன? மாணவர்கள் தெளிவாகவும் திருத்தமாகவும் எழுத வேண்டும் என்பதுதான். இந்த இடத்தை அடையும் எண்ணத்துடன் பயணத்தைத் தொடரும் மாணவன் வழியில் உள்ளதையெல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு, சென்றடைய வேண்டிய இடத்தை மறந்தே விடுகிறான். ஆகவே குறிக்கோளை மறந்து விடக்கூடாது. உண்மையில் பள்ளிகள், தங்கள் நிர்வாக வசதிக்காகவும், தம் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும் நடத்தும் செயல்களுக்கு நியாயச் சாயம் பூசக்கூடாது.

தேர்வு எழுதுவது, பாஸ்மார்க் வாங்குவது எல்லாமே ஒரு போலியான விஷயம். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளிகள் எல்லோரும் கூட்டணியாகச் சேர்ந்து கொண்டு நடத்தும் ஒரு மிகப் பெரிய நாடகம்தான் தேர்வு. குழந்தைகளுக்குத் தெரியாதவற்றையும் தெரியும் என நம்ப வைக்கும் ஏமாற்று வேலை. ஒவ்வொரு தேர்வுக்கும் நாம் ஏன் முன்னறிவிப்பு வெளியிடுகிறோம்? எந்தக் கேள்விகள் வரலாம் என்று ஏன் முன்கூட்டியே அனுமானிக்கிறோம்? 10 வருட வினாத்தாள்களில் ஏன் பயிற்சி கொடுக்கிறோம்? இப்படிச் செய்யாவிட்டால் முக்கால்வாசி மாணவர்கள் தேர்வில் தோல்வியைத் தழுவுவார்கள். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இது பற்றி யாரும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு பகிரங்கமான ரகசியம்.

ஆசிரியர்கள் பலர் நல்ல நடத்தையை நல்ல பண்பு என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். அமைதியாக இருப்பது நல்ல குணம் என்று எண்ணுகிறார்கள். சொன்னதைச் செய்ய வேண்டும் என்பதே குழந்தைகளிடம் அவர்கள் எதிர்பார்க்கும் குணம். ஆனால் இதுதான் குழந்தைகளுக்குப் பிடிக்காது என்பதை அவர்கள் உணருவதில்லை. மற்றவர்கள் விரும்பும் விதத்தில் பேசுவது, நடந்து கொள்வது என்பதை விட வெறுக்கத்தக்கது எதுவுமில்லை என்று குழந்தைகள் நினைக்கின்றன. ஆகவே கல்வி மூலம் குழந்தைகளின் உள்ளார்ந்த நற்பண்புகளை வெளிக் கொணரவேண்டும். “Education is the manifestation of perfection already in man” என்பார் விவேகானந்தர். ஆனால் இந்தத் தேர்வுக் கிறுக்குப் பிடித்து அலையும்வரை இது சாத்தியம் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் சிந்தனையாளர்களை ஊக்குவிப்பது பற்றி பேசுகின்றன. ஆனால் சிந்தனையாளர்கள் உருவானார்களா? உருவாகியிருந்தாலும் பாரதத் திருநாட்டில் தங்கினார்களா?

LKG-லிருந்து கல்லூரி வரை ஆசிரியர்களாகிய நாம் என்ன செய்தோம்? நம் மாணவர்களை, உண்மையில் அவர்களுக்கு உள்ள அறிவைக் காட்டிலும் அதிக அறிவுள்ளவர்கள் போலக் காட்டிக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளோம். சக ஆசிரியர்கள் மத்தியில் நம் மதிப்பை உயர்த்திக் கொள்ள, மற்ற பள்ளிகளின் முன்னால் நம் பெருமையை பீத்திக் கொள்ள நாம் பின்பற்றும் முறை இதுதான். மாணவர்களுக்கு உண்மையில் என்ன தெரியும்? தெரிந்ததை அவர்கள் எவ்வளவு தூரம் நிஜ வாழ்க்கையில் பயன்படுத்துகின்றனர் என்பதைப் பற்றியெல்லாம் யாருக்கும் கவலையேயில்லை. மாணவர்களுக்கு இவ்வளவு விஷயங்கள் தெரியும் என்று பிறரை போலியாக நம்பவைப்பதே நம் வேலையாக உள்ளது. இந்தப் பாடம், பாடத்திட்டம் (Syllabus) இதெல்லாம் வெறும் வீண். நமது பாடத்திட்டத்தின்படி நன்றாக நாம் பாடம் நடத்தி விடலாம். அதில் மாணவர்களும் தேர்வு எழுதி பாஸாகிவிடலாம். ஆனால் அவனுக்குக் கடைசியில் என்ன விஷய ஞானம் மிச்சமிருக்கும் என்ற கேள்விக்குப் பதில் என்னவோ வெட்கக் கேடுதான்! முதன்முதலில் தேர்வுகள் என்பது நியாயமான முறையில் மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் விஷயம் என்றுதான் எண்ணினேன். ஆனால் கொஞ்ச காலத்திலேயே எனக்கு சில உண்மைகள் புரிந்தன. முன்னறிவிப்பின்றி நடத்தப்படும் திடீர் தேர்வுகளில் பெரும்பான்மையானவர்கள் தோல்வியடைந்தனர். இது ஓர் ஆசிரியன் என்ற முறையில் எனக்குக் கெட்டபெயர். பள்ளியின் மானம் காப்பாற்றப்பட வேண்டுமானால் மாணவர்களுக்கு அவகாசம் அதிகம் கொடுக்க வேண்டும். பயிற்சி கொடுக்க வேண்டும். Repeated questions-க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதைத்தான் இப்போது எல்லாரும் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். இது அருமையான பித்தலாட்டம். இதை எப்படி மாற்றுவது? பூனைக்கு யார் மணியைக் கட்டுவது? ஆசிரியர்களுக்கு வேண்டியது புத்திசாலியாக இருக்கும் தோற்றமே! உண்மைக்கல்வி அவர்களது குறிக்கோள் அல்ல. உண்மையான புரிந்து கொள்ளுதல் தேவையில்லை என்ற ஒரு சூழல் உருவாகிவிட்டது. சிந்தனையாளர்களின் ஆவலும், துடிப்பான கேள்விகளும் ஆசிரியர்களுக்கு எரிச்சலைத்தான் உண்டாக்கும். ஏனென்றால் அவர்களிடம் அதற்கு விடை இல்லை. குழந்தைகள் தேர்வில் குறைவான மார்க் வாங்கினால் பெற்றோர்களுக்கு வரும் கோபம் சொல்லிமுடிவதில்லை. வேறு பள்ளியில் சேர்க்கவும் இந்த மதிப்பெண்தான் தேவைப்படுகிறது. என்னுடைய உடல் அடிமைப்பட்டுக் கிடந்ததே தவிர என் மனமும் அறிவும், உணர்வுகளும் அடிமைப்பட்டு விடவில்லை. நான் மறைமுகமாக என் சிந்தனைகளை மாணவர்களுக்கு ஊட்டி வந்தேன். இருந்தாலும் நான் 10 சதவீத வெற்றிதான் பெற்றேன்.

மாணவர்கள் சிறைச்சாலையில் இருந்ததாகவே நான் நினைத்தேன். அவர்களைக் கைதிகளாகத்தான் பார்த்தேன். ஏவலாட்கள் வேலையைத் தான் மாணவர்கள் செய்தார்கள். அவர்கள் மூளை வகுப்பில் இல்லை. பள்ளி என்பது முட்டாள்களைப் பழக்கும் இடமாகவே எனக்குத் தெரிந்தது. இது ஒரு கசப்பான உண்மை. பள்ளியில் நுழையும் போது குழந்தைகள் ஆர்வமாகத்தான் உள்ளார்கள். சில வருடங்களில் அந்த ஆர்வம் செத்து விடுகிறது. பெரியவர்கள் ஒரு மணிநேரம் கூட செய்ய முடியாத வேலைகளை நாள் பூராவும் செய்யும்படி குழந்தைகள் திணிக்கப்படுகிறார்கள். தாகூர் போன்றவர்கள் இதைக் களைய சாந்தி நிகேதன்களை அமைத்தனர். நாளடைவில் அவைகளும் பழைய குருடி கதவைத் திற கதைதான். நவோதயா வித்யாலயாக்களும் ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்களைத் தியாகம் செய்து விட்டன. CBSE, ICSE, World School, International School என்று பெயர்களும் மாறலாம். ஆனால் அடிப்படை, அடிமைத்தனம்தான். சுய சிந்தனைக்கு மதிப்பில்லை. அவர்கள் சொல்வதைச் செய்ய வேண்டும். அதனால்தான் படித்தவுடன் வெளிநாட்டுக்கு ஓடுகிறான்.

மாணவரின் கவனத்தை பாடத்தின் மீது கொண்டுவரச் செய்வது ஆசிரியரின் கடமை. அதற்குச் சுவையான சூழலை உருவாக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்டும் பொருள்கள் பயன்படுத்தப்படவேண்டும். பாடம் சுவையாக இல்லையென்றால் குழந்தை வேறு சுவையான இடத்துக்கு தாவத்தான் செய்யும். குழந்தைகளின் சுற்றுச்சூழல், கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஈடுபாட்டை உண்டாக்குவதாக இருக்க வேண்டும். பள்ளி ஒரு சந்தோஷமான இடமாக இருக்க வேண்டும். அறிவார்த்தமான அணுகுமுறை வேண்டும். மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும், நினைவு நல்லது வேண்டும். இன்றைய நிலையே நீடித்தால் குழந்தைகள் அறிவைத் துறந்து, உணர்வைத் துறந்து வெறும் மரப்பாச்சி பொம்மைகளாகத்தான் உருவாவார்கள்.

சிலவற்றைத் தெரிந்து கொள்ள விரும்பும் குழந்தை அவற்றை நன்கு ஞாபகத்தில் வைத்திருக்கும். அவற்றைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தவுடன் அப்படியே ஆர்வத்துடன் பற்றிக் கொண்டு பயன்படுத்துகிறது. ஆனால் மற்றவர்களை திருப்திப்படுத்தவேண்டி ஒன்றைக் கற்கும் குழந்தை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் நீங்கிய உடனேயே அதனை மறந்து விடுகிறது. இதன் காரணமாகவே குழந்தைகள் தாம் கற்ற விஷயங்களை மறந்து விடுகின்றன.

பள்ளிக் கல்வி என்பது முழுமையானதல்ல. குழந்தை சொற்களைக் கற்று ஆசிரியர் கேட்கும் போது அவற்றை வாந்தி எடுத்து- இப்படிக் கற்றல் நிகழும் போது மாணவப்பருவமே வீணடிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வியே தேவையற்றது என்று நான் கூறவில்லை. வாந்தியெடுக்கும் முறை கூடாது என்கிறேன். ஒரு குழந்தை தனது ஆர்வத்தின் அடிப்படையில் இயற்கையாகக் கற்கும்போது, பயமோ, தயக்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் தனக்குத் தேவையில்லாததைக் கற்காமல் விலக்கும் போது அது கற்பதில் விருப்பமும் இன்பமும் கண்டு மேலும் நல்ல அறிவு வளர்ச்சி அடைகிறது. இத்தகைய மாணவ மாணவியரே சமுதாயத்திற்குத் தேவை. இத்தகைய பண்புள்ள ஒரு மாணவன் தன் வாழ்நாள் முழுவதும் தனது ஒவ்வொரு அனுபவத்திலும் கற்றுக் கொண்டே இருப்பான். பள்ளியில் மாணவர்கள் இதைத்தான் கற்கவேண்டும் என்று நாம் பிடிவாதம் பிடிக்கும்வரை நல்ல கல்வியளிக்க முடியாது : நல்ல மாணவர்களை உருவாக்க முடியாது. அவர்களது விருப்பங்களை ஒழுங்குபடுத்தி, அவர்கள் அவற்றைக் கற்க உதவி புரிவதாகப் பள்ளி இருக்க வேண்டும். தான் என்ன கற்க வேண்டும், எதனைக் கற்க வேண்டாம் என்பதை மாணவனே தீர்மானிக்க வேண்டும். ஆசிரியர்கள் மனம் வைத்தால் இது சாத்தியமே, இது சாத்தியமே! மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி தேவையானதைக் கற்க பள்ளிகளில் வசதி இருக்க வேண்டும். இனியாவது குழந்தைகளை நம் வழியில் கட்டாயப்படுத்தி வீணடிக்காமல், அவர்களது ஆர்வத்தை வளர்க்கும் கல்விக் கூடங்களை உருவாக்குவோம். ஒரே நாளில் மாற்றிவிட முடியாது என்பதை ஆசிரியன் என்ற முறையில் நான் நன்கு அறிவேன். ஒரு முயற்சி செய்யலாமே என்பதே என் அவா!

வணக்கம்.

6 Replies to “பள்ளிக் கல்வி – 2 [நிறைவுப் பகுதி]”

  1. என் மனக் கிடக்கைகளை அப்படியே வெளிப்படுத்தியிருக்கும் கட்டுரை.

    முதலில் தேர்வு, Pass, Fail… என்கிற முறை மாற வேண்டும். Grading system பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஆனால், அது வந்தபின்தான் அதன் குறைபாடுகள் புரியும்.

    தேர்ச்சி, தோல்வி முறையை ஒழிப்பது, உழைக்க மனமில்லாத ஆசிரியர்களுக்கு (ஒரு சாரார் தான் !) அளிக்கப்பட்ட இன்னொரு வாய்ப்பாகவும் போய்விடக் கூடாது. காலை முதல் இரவு வரை படி, எழுது, படி, எழுது, என்னும் இம்முறை போலித்தனத்தையும் மாயத்தோற்றத்தையும் வளர்த்து, மாணவர்களின் மூளையை மழுங்கச் செய்வதாகவே நான் உணர்கிறேன்.

    ‘Bring light to ignorant and more light to the எடுகாடேத், for the vanities of the Education of our time are tremendous’ என்னும் ஸ்வாமிஜியின் சொற்கள் நினைவுக்கு வருகின்றன.

    மற்றவர்கள் ‘பெரும் சுமை’ எனக் கருதுகிற இந்த தேசத்தின் மக்கள் தொகையை, ‘பெரும் செல்வ’மாகக் குறிப்பிடும் திரு ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் போன்ற பெரியோர்களிடம் இந்நாட்டுக் கல்வி முறைகளைச் சீர்திருத்தும் பணியை ஒப்படைக்க வேண்டும். வளரும் இளைஞர்கள், எதிர்கால இந்தியாவின் தூண்கள் எனப்படும் இன்றைய சமுதாயத்தின் அறிவை உண்மையாக வளரச் செய்து நாடு நன்மை பெற வேண்டும்.

    அதுவரை… மாணவர்கள் பாவம்.

  2. மேற்படி மறுமொழியில் ‘எடுகாடேத்’ என்பதை ‘educated’ என்று வாசிக்கவும்.

  3. உங்கள் கட்டுரை மிகவும் அருமை. ஒரு ஆசிரியராக இருந்து செய்ய வேண்டிய கடமையை அருமையாக தொகுத்து உள்ளீர்கள். அதேபோல் ஒரு பெற்றோரா
    இருந்து செய்ய வேண்டிய பொறுப்பை சொன்னா உதவியாக இருக்கும்.

  4. சோமு சாரின் கட்டுரை அற்புதம். வழங்கிய தமிழ் இந்துவுக்கு நன்றி. ஒரு ஆராய்ச்சி கட்டுரையை படித்த மனநிறைவு ஏற்பட்டது. நமது கவலைகளை பிரதிபலிப்பதாக கட்டுரை அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *