ஈசாவாஸ்ய உபநிஷதம்

சுக்ல யஜுர்வேதம்: வாஜஸனேயி சம்ஹிதை, நாற்பதாம் அத்தியாயம்

ஓம்

இவையனைத்தும்
ஈசனால் நிரம்பியுள்ளது
அசையும் உலகனைத்தும்
அதைத் துறந்து
நீ இன்பம் துய்த்திடுக
பிறர் பொருளை
விரும்பற்க.   (1)

இங்கு
செயல்கள் புரிந்து
நூறாண்டு வாழ
இச்சை கொள்க
இது தவிர்த்து வேறுவழி
இல்லை
இத்தகைய மானிடரை
செயல்கள் பற்றுவதில்லை.   (2)

காரிருள் மூடியவை
ஒளியற்றவை அவ்வுலகங்கள்
ஆன்மாவை அழிப்போர்
செத்ததும்
அங்கு சென்றடைகின்றனர்.   (3)

அந்த ஒன்று
அசையாதது
மனதினும் விரைவானது
தேவர்களாம் புலன்கள்
அதனை அடைவதில்லை
அவற்றுக்கும் முன்செல்வது அது
நின்றுகொண்டு
ஓடுபவற்றை முந்துகிறது அது
அதன் இருப்பில் காற்று
அனைத்தையும் உயிர்ப்பிக்கிறது.   (4)

அது அசைகிறது
அசைவதில்லை
அது தொலைவிலுள்ளது
அருகிலும்
அது இவ்வனைத்தின்
உள்ளே உள்ளது
அனைத்தும்
கடந்தும். (5)

அனைத்துயிர்களையும்
தன்னிலும்
தன்னை அனைத்துயிர்களிலும்
காண்போர்
எதையும் வெறுப்பதில்லை.   (6)

ஆன்மாவே அனைத்துயிரும் ஆனது
என அறிந்து
ஒருமை கண்டோனுக்கு
ஏது மயக்கம்
ஏது கவலை?   (7)

அவன்
எங்கும் சூழ்ந்தவன் சுடரோன்
உடலற்றவன் வடுவற்றவன்
தசையற்றவன் தூயோன்
பாவம் துளைக்காதவன்
உட்பொருள் உணரும் கவி
அறிவோன் சுயம்பு
அனைத்தும் கடந்தவன்
முடிவற்ற வருடங்களுக்கு
அனைத்தையும்
முறையாக வகுத்து வைத்தான்.   (8)

அடர் காரிருள் வழிச் சென்றடைவர்
அறியாமையில் ஒழுகுவோர்
அதனினும் பெரிய இருளடைவர்
அறிவில் ஆழ்ந்தோர்.   (9)

அறிவால் அடைவது ஒன்று
அறியாமையால் அடைவது வேறொன்று என
எமக்கு அதை விளக்கிய பெரியோர்
கூறக் கேட்டோம்.   (10)

அறிவு அறியாமை
இரண்டும் ஒன்றுசேர அறிந்தோன்
அறியாமையால்
மரணம் கடந்து
அறிவினால்
அமுதநிலை அடைகின்றான்.   (11)

அடர் காரிருள் வழிச் சென்றடைவர்
அருவத்தை வழிபடுவோர்
அதனினும் பெரிய இருளடைவர்
உருவத்தில் ஆழ்ந்தோர்.   (12)

உருவத்தால் அடைவது ஒன்று
அருவத்தால் அடைவது வேறொன்று என
எமக்கு அதை விளக்கிய பெரியோர்
கூறக் கேட்டோம்.   (13)

அருவம் உருவம்
இரண்டும் ஒன்றுசேர அறிந்தோன்
உருவத்தால்
மரணம் கடந்து
அருவத்தால்
அமுதநிலை அடைகின்றான்.   (14)

பொன்மயமான மூடிக்குள்
மறைந்துள்ளது
சத்தியத்தின் முகம்
பேணி வளர்ப்போனே
சத்திய இயல்பினர் காண
அதைத் திறந்திடுக.   (15)

பேணி வளர்ப்போனே ஒருதனியரசே
யமனே ஞாயிறே பிரஜாபதியின் புதல்வா
கதிர்பரப்பி ஒளி கூட்டுக
அதோ உன்
நன்மங்கல வடிவை நான் காண்கிறேன்
அதிலுறையும் புருஷன்
நானே அவன்.   (16)

உயிர்மூச்சு காற்றில் கலந்திடும்
அழிவற்று
உடல் சாம்பலாகும்
ஓம்
மனமே எண்ணுக
செய்ததை எண்ணுக
மனமே எண்ணுக
செய்ததை எண்ணுக.   (17)

அக்னி
செல்வம்சேர் நல்வழியில்
எம்மை நடத்திடுக
தேவா
அனைத்து வழிகளையும் நீயே அறிவாய்
வளைந்து வரும் தீமையை விலக்கிடுக
உனக்கே எம் போற்றிப் புகழ்ச்சிகள்
மேன்மேலும்!   (18)

******

ந்து ஞான மரபின் மணிமுடியான வேதாந்த தரிசனத்தின் மையமான ஆதி நூல்கள் உபநிஷதங்கள். சங்கரர் தொடங்கி அனைத்து வேதாந்த ஆசாரியார்களும் ஈசாவாஸ்ய உபநிஷதம் முதலாக உள்ள பத்து முக்கிய உபநிஷதங்களுக்கும் மிகவும் விரிவான உரைகள் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு தத்துவத் தரப்பும் வேதாந்த தரிசனத்தின் பொதுக்கருத்துக்களுடன் கொள்ளும் இணைவையும், அந்த தரப்பின் தனித்தன்மையையும் வரையறுப்பதில் இந்த விரிவுரைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. இவற்றுள், பதினெட்டு மந்திரங்களே கொண்டு, அளவில் சிறியதாக உள்ள முதல் உபநிஷதமான ஈசாவாஸ்ய உபநிஷதம் இந்து ஞான மரபின் சாரமனைத்தையும் தன்னகத்தே கொண்டது என்று கருதப் படுகிறது.

இந்தப் பதிவின் நோக்கம் உபநிஷதக் கவிதையின் நேரடி அனுபவத்தை ஒரு துளியாக அளிக்க முயலும் ஒரு முயற்சியே அன்றி விரிவுரை எழுதுவதல்ல. எனவே சில குறிப்புகளை மட்டும் தருகிறேன்.

இந்த உபநிஷதத்தின் பல இழைகளும் குவியும் புள்ளி ஒருமை, முழுமை, பூரணத்துவம் எனலாம். கடவுள் – உலகம், துறவு – இன்பம், செயல் தரும் பந்தம் – செயலின்மை தரும் முக்தி, ஒன்று – பல, அறிவு – அறியாமை, இவ்வுலகம் – அவ்வுலகம் என்று ஒன்றுக்கொன்று எதிராக உள்ள கருத்தாக்கங்களை தத்துவ ரீதியாக சமன்வயப் படுத்துவதே இந்த உபநிஷதத்தின் நோக்கம்.

வாழ்க்கையை ஒருங்கிணைந்த யோகமாகக் கண்டு ஒழுகிட மானிடரை அறிவுறுத்துகிறது இந்த உபநிஷதம். செயல், இன்பம், அறிவு ஆகிய மூன்று மானுட லட்சியங்களையும் மோதல்கள் இன்றி நெறிப்படுத்தும் சமன்வயப் பார்வையை போதிக்கிறது. Work for the work’s sake, knowledge for the knowledge’s sake, love for love’s sake – செயலுக்காகவே செயல், அறிவுக்காகவே அறிவு, அன்புக்காகவே அன்பு என்ற கொள்கைகளே கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் முதலிய வாழ்க்கை நெறிகளாக கீதையின் உபதேசத்தில் முழுமையாகப் பரிணமிக்கின்றன என்று விவேகானந்தர் கூறுகிறார். அந்தக் கொள்கைகளின் தொடக்கப் புள்ளி உபநிஷதங்களில் தான் உள்ளது.

ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்‘ என்று தொடங்கிறது முதல் மந்திரம். புலன்கள் காணும் புறப் பிரபஞ்சம் எங்கும், மனம் உணரும் அகப் பிரபஞ்சம் எங்கும் இறைச் சக்தியே நிறைந்துள்ளது என்பது இதன் பொருள். உலகெங்கும் இறைமையால் தீண்டப் படாத பொருள் என்று ஒன்றும் இல்லை. எனவே, இவ்வுலகை நுகர்வுப் பொருளாகக் கருதாமல், பிறர் பொருளை விரும்பாமல் வாழ்க்கையை நடத்துக என்பது உபதேசம்.

காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ஒவ்வொரு நாளும் மாலை நேரப்பிரார்த்தனை இந்த மந்திரத்துடன் தொடங்கும் வழக்கம் காந்தியே ஏற்படுத்தியது. “எல்லா புனித நூல்களும் தத்துவங்களும் அழிந்து சாம்பலாகி விட்டாலும் கூட’ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற இந்த ஒரு சுலோகம் இந்துக்களின் நினைவில் எஞ்சியிருந்தால் போதும். இந்து மதம் என்றென்றும் வாழும்” என்று காந்தி பரவசத்துடன் எழுதுகிறார். காந்தி தன் வாழ்க்கை லட்சியங்களாகக் கருதிய சத்தியம், அகிம்சை, எளிய வாழ்வு, சுயநலமின்மை, தியாகம் ஆகிய அனைத்தையும் இந்த மந்திரத்தில் காண்கிறார். “உங்களுக்கு சொல்கிறேன், இந்த சிறிய மந்திரம் கூறும் சத்தியமான உபதேசம், மேன்மைக்காகவும் உயர்ச்சிக்காவும் ஏங்கும் ஒவ்வொரு மனித இதயத்தின் தேடலையும் பூர்த்தி செய்யும் வண்ணம் அமைந்துள்ளது. நான் இதுவரை படித்த எல்லா புனித நூல்களையும் எடுத்துக் கொண்டால், அவற்றில் உள்ள நற்கருத்துக்கள் யாவும், இந்த மந்திரத்திலிருந்தே பெறப்பட்டு, இதன் விரிவுரைகள் போன்றே உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. உலக சகோதரத்துவம் – மனிதர்களின் சகோதரத்துவம் மட்டுமல்ல, உயிர்கள் அனைத்தின் சகோதரத்துவம் எனக்கு இம்மந்திரத்தில் மட்டுமே கிடைக்கிறது. எனது பிரபுவும் இறைவனுமான ஈசன் மீது இடையறாத நம்பிக்கை – அதையும் இம்மந்திரம் கற்பிக்கிறது… எனது இருப்பின் ஒவ்வொரு இழையையும் ஈசனே நிரப்புகிறான் என்னும்போது, அதிலிருந்து புவிமீதுள்ள எல்லா உயிர்களும் சமஉரிமை கொண்டவை என்ற சிந்தனை மிகவும் உறுதியாக வலுப்படுகிறது..” (ஹரிஜன், 30-1-1937).

இரண்டாம் மந்திரம் கர்மயோகத்தைக் கற்பிக்கிறது. இதம் ஸர்வம் (*இவை* அனைத்தும்), இஹ (*இங்கு*) ஆகிய சுட்டுச் சொற்கள், இந்த உபதேசம் அவ்வுலக வாழ்க்கை பற்றியது அல்ல, இந்த மண்ணின் மீது நின்று கொண்டு இவ்வுலகைப் பற்றிப் பேசப் படுகிறது என்னும் தொனியை அறிவிக்கின்றன.

3வது மந்திரம் ஆத்மாவை அறிய முயலாதோர் அடையும் ஆன்மிக வீழ்ச்சியைக் குறிப்பிடுகிறது. 4,5வது மந்திரங்கள் உள்ளும் புறமும் நின்றிலங்கும் ஆத்மாவின் இயல்பினை “அது” என்ற சுட்டுச் சொல்லால் உணர்த்துகின்றன. 6-7ம் மந்திரங்கள் ஆத்மாவை அறிந்து உணர்வோரின் ஆன்மீக மேன்மையைக் கூறுகின்றன. 8ம் மந்திரம் ஆத்மாவை “அவன்” என்று சர்வசக்திமானான கடவுளாக விவரிக்கிறது.

9-11 மந்திரங்கள் சத்தியத் தேடலின் பாதையில் வித்யை (அறிவு), அவித்யை (அறியாமை) ஆகிய இரண்டிலும் நின்று ஒழுகி, பின் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்கின்றன. வித்யை, அவித்யை என்ற சொற்களுக்கு தத்துவ ரீதியாக பல விளக்கங்கள் அளிக்கப் பட்டுள்ளன. அவித்யை என்பது செயல்களில் ஈடுபடுவது, வித்யை என்பது செயல்கள் அனைத்தையும் துறந்து தியானத்திலும் அறிதலிலும் ஆழ்வது. ஒன்றை முழுமையாகத் தவிர்த்து மற்றொன்றை மட்டும் கைக்கொள்வோரது பாதை இருளடைந்தது. இவ்விரண்டிலும் சமநிலையுடன ஈடுபடுபவன் கர்மயோகத்தால் ஆன்மிக வீழ்ச்சியில் இருந்து விடுபட்டு (மரணத்தை வென்று), தியானத்தால் ஆன்மிக சத்தியத்தை (அமுதநிலை) தன்னில் உணர்கிறான் என்பது பொதுவான ஒரு விளக்கம்.

12-14 மந்திரங்களும் இதே போன்றவை. இதில் உருவம், அருவம் என்பதற்கான சொற்களாக ஸம்பூதி (தோற்றம் கொள்ளல்), அஸம்பூதி / வினாசம் (தோற்றமின்மை, தோற்றமழிதல்) ஆகியவை பயின்று வருகின்றன. அருவ தியானம், உருவ வழிபாடு ஆகிய இரண்டு பாதைகளின் சமன்வயத்தை இம்மந்திரங்கள் முன்வைக்கின்றன என்று கொள்ளலாம். அல்லது உருவம், அருவம் என்பவை முறையே இதற்கு முன்பு சொன்ன செயல்கள், செயலின்மை என்பவற்றுக்கான குறியீடுகளாக சொல்லப் பட்டன என்றும் கொள்ளலாம். தத்துவ ரீதியாக அருவம் என்பது வெளிப்படாது (அவ்யக்தம்)  நிற்கும் ஆதி இயற்கையையும் (மூலப்பிரகிருதி), உருவம் என்பது வெளிப்பட்டு (வ்யக்தம்) நிற்கும் பிரபஞ்சத்தையும் குறிப்பதாகவும் கொள்ளலாம். ஆதி இயற்கையில் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களும் சமநிலையில் உள்ளன. இந்த முக்குணங்களின் சமநிலை குலைவதால் பிரபஞ்சம் தோற்றம் கொள்கிறது. இவை முறையே செயலின்மை, செயல்கள் ஆகியவற்றைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

15வது மந்திரம் கவித்துவமான ஒரு வேண்டுதல். பேணி வளர்ப்போன் (பூஷன்) என்பது சூரிய தேவனுடைய பெயர்களில் ஒன்று. புறக் கண்ணால் காணும் சூரிய மண்டலம் சத்தியத்தை மறைத்துள்ள பொன்மூடியாகவும் அதன் உள் ஒளி ஞானமாகவும் இங்கு உருவகிக்கப் பட்டுள்ளது. சத்திய இயல்பினர் (சத்யதர்மா) என்ற சொல் ஆன்மிகத் தேடல் கொண்டவனைக் குறிக்கிறது.

16வது மந்திரம் சத்திய தரிசனம் கண்ட ரிஷியின் பரவசம். சூரிய மண்டலத்தின் ஒளிக்கு அப்பால் பரம்பொருளைக் கண்டு, அதனுடன் தனது ஆன்மா ஒன்றுபட்டு நிற்பதை ஒரு மகாவாக்கியமாக அறிவிக்கிறார் – நானே அவன் (ஹோஹம் அஸ்மி)!

சத்தியத் தேடல் கொண்டவனுக்கு உடல் அழிந்து மரணமெய்துவது என்பது ஒரு தொடர்ச்சியே அன்றி முடிவு அல்ல. 17வது மந்திரம் அதை அறிவிக்கிறது. உடலை விட்டுச் செல்லும் ஆத்மாவின் நினைவூட்டலாக, கடைசி சொற்களாக “மனமே எண்ணுக செய்ததை எண்ணுக” என்ற வாசகம் வருகிறது.

கடைசி மந்திரம் அக்னி தேவனிடம் பிரார்த்தனை. இம்மந்திரத்தில் ‘செல்வம் சேர் நல்வழி’ என்பது உலக வாழ்வின் வளங்கள், ஆத்ம ஞானம் இரண்டையுமே குறிக்கிறது.

ஈசாவாஸ்ய உபநிஷதம் கூறும் தத்துவங்கள் குறித்து மேலும் அறிய கீழ்க்கண்ட நூல்களைப் பார்க்கலாம். வேறு பல நூல்களும் இருக்கக் கூடும். இவை நான் கற்றவற்றில் தற்போது நினைவுக்கு வருபவை.

 • Isha Upanishad: Translation and commentary by Sri Aurobindo (Online book)
 • Ishavasya Upanishad – Commentary by Swami Chinmayananda, Published by CCMT, Mumbai.
 • ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்) – சுவாமி ஆசுதோஷானந்தர். ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை (சுவாமிஜியின் தமிழ் உபநிஷத நூல்கள் குறித்து முன்பு நான் எழுதிய ஒரு மதிப்புரை இங்கே.)
 • Experiencing the Ishavasya Upanishad – Guru Nitya Chaitanya Yati, Narayana Gurukula, Fernhill, Ooty (இப்புத்தகத்தை எழுத்தாளர் சூத்ரதாரி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நாராயண குருகுலம் பதிப்பாக வெளிவந்துள்ளது).

17 Replies to “ஈசாவாஸ்ய உபநிஷதம்”

 1. அன்புள்ள ஜடாயு,

  ஈசா வாஸ்யத்தின் மூலம் ஒரு புதிய உலகுக்கே அழைத்துள்ளீர்கள். நன்றி. எங்கும் உள்ளானை உணர இது உதவட்டும்.

 2. எனக்கு நீண்ட நாளாக இருந்து வரும் சந்தேகம் இது, யாரேனும் தெளிவிக்க முடிந்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.

  உபநிடதங்கல் இப்போது எளிதாக வலைத்தளத்திலும், விலை குறைந்த புத்தகங்களிலும் அச்சடிக்கப் பட்டு சுலபமாக கிடைக்கிறது. ஆனால் பழைய நாளில் உபநிடதங்கள் பிரம்மா வித்யை என்று அழைக்கப் பட்டன. பிரம்மத்தை தேடுபவர்களே கூட முறையாக ஆன்மீகக் கல்வியில் தேர்ச்சி பெற்று, அதிகாரம் பெற்றுத் தான் அணுக முடிந்தது என்று தெரிகிறது.

  எப்படியாயினும் உபநிடதங்கள் – வேதத்தின் கருத்து முடிவாக, இறுதி உண்மையாகக் கருதப் பட்டன என்பதை மறுப்பதற்கில்லை. அதனை நாடி வருகிற ஒருவனை இவ்வாறு

  //
  பிறர் பொருளை
  விரும்பற்க.
  //

  (வடமொழியில் மா கஸ்யஸ்வித் தனம்) என்று கூறுவது ஏன்? பிறர பொருளுக்கு ஆசைப் படுபவன் உலகியலை துறந்து பிரம்மத்தை தேடுவானா? பிரம்மத்தை அடைவதே குறிக்கோளாக கொண்டு வருபவனிடம் திருடாதே என்று சொல்வதே கூட ஒரு இன்சல்ட் இல்லையா?

  இதற்கு இன்னும் வேறு அர்த்தம் ஏதும் இருக்கிறதா?

 3. இன்னொரு கேள்வி, இந்த மொழிபெயர்ப்பு கவிதைகள் ஆதி சங்கரர் போன்ற முதல் ஆசாரியர்கள் சொன்ன விளக்கத்தின் படி உள்ளனவா? வேறு படுகின்றனவா… புதிய அர்த்தங்கள் எழுதக் கூடாது என்று சொல்வதற்கில்லை, ஆனால் ஆசாரியர்கள் வழியில் செல்வது என்பது சிலாக்கியமானது என்பது என் எண்ணம்.

 4. // Keerthi on April 25, 2012 at 11:15 pm
  இன்னொரு கேள்வி, இந்த மொழிபெயர்ப்பு கவிதைகள் ஆதி சங்கரர் போன்ற முதல் ஆசாரியர்கள் சொன்ன விளக்கத்தின் படி உள்ளனவா? வேறு படுகின்றனவா… புதிய அர்த்தங்கள் எழுதக் கூடாது என்று சொல்வதற்கில்லை, ஆனால் ஆசாரியர்கள் வழியில் செல்வது என்பது சிலாக்கியமானது என்பது என் எண்ணம். //

  அன்புள்ள கீர்த்தி, இவை எனது புரிதலின் அடிப்படையில் அமைந்த நேரடி மொழியாக்கங்கள் – விளக்ககவுரைகள் அல்ல. சொற்சிக்கனம், கச்சிதம் ஆகியவையே இவற்றை வாசிப்புக்கு உகந்ததாக ஆக்குகின்றன.

  ஆச்சாரியார்கள் வழியில் என்றால் எந்த ஆசாரியார் என்ற கேள்வி வருகிறது :)) ஒவ்வொரு மந்திரத்திற்கும் பாஷ்யங்களுக்கிடையில் பெரிய/நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. அந்த தத்துவ சிடுக்குகளை இந்த குறுவடிவத்தில் கொண்டு வருவது சாத்திமல்ல, அதற்கு அவசியமும் இல்லை என்றூ நினைக்கிறேன். மேலும், பெரும்பாலான நவீன வாசகர்களை அந்த பாஷ்யங்களின் மொழியும், இந்த சிடுக்குகளுமே உபநிஷதத்திற்கு உள்ளே வராமல் செய்துவிடுகின்றன என்பதும் உண்மை.

  அத்தகைய வாசகர்களை மனதில் கொண்டே இந்த மொழியாக்கத்தை செய்கிறேன். இதனால் ஆர்வம் தூண்டப் பெற்ற சிலர் விரிவுரைகளைப் படிக்கக் கூடும். அதற்காகத் தான் கடைசியில் புத்தகங்களின் பட்டியல் கொடுத்திருக்கிறேன்.

 5. // (வடமொழியில் மா கஸ்யஸ்வித் தனம்) என்று கூறுவது ஏன்? பிறர பொருளுக்கு ஆசைப் படுபவன் உலகியலை துறந்து பிரம்மத்தை தேடுவானா? பிரம்மத்தை அடைவதே குறிக்கோளாக கொண்டு வருபவனிடம் திருடாதே என்று சொல்வதே கூட ஒரு இன்சல்ட் இல்லையா? இதற்கு இன்னும் வேறு அர்த்தம் ஏதும் இருக்கிறதா? //

  அன்புள்ள கீர்த்தி, இதே போன்ற கேள்வியை எல்லா மந்திரங்களுக்கும் கேட்கலாம். பிரம்ம ஞானம் தேடி வருபவனுக்கு “எல்லாம் ஈசனே” என்பது தெரியாதா பிறகு ஏன் உபநிஷதம் அதைக் கூற வேண்டும் என்று கூட கேட்கலாமே.

  “மா க்ருத: கஸ்யஸ்வித் தனம்” என்பதற்குப் பொருள் “பிறர் பொருளை விரும்பற்க” என்பது தான், தெளிவாக இருக்கிறது. ஆனால் இது இன்சல்ட் அல்ல. ஆனால் Thou shall not steal என்று இங்கு ஒரு சாதாரண நீதிபோதனையாக இது சொல்லப் படுவதில்லை. இதற்கு முன்பு உள்ள வாசகங்களையும் சேர்த்துப் பார்த்தால் அது அளிப்பது ஒரு தரிசனம் – தியாகம், பிறர் பொருள் வேண்டாமை, இன்பம் துய்த்தல் இந்த மூன்றுக்குமான தொடர்பையும், முரணையும் பற்றிய ஒரு அழ்ந்த தத்துவ தரிசனம். ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற காரணத்தின் அடிப்படையில் அமைந்த தரிசனம்.

  ஸ்ரீ அரவிந்தரின் மொழியாக்கத்தைப் பாருங்கள், அதிலும் இப்படித் தான் இருக்கிறது –

  All this is for habitation1 by the Lord, whatsoever is individual universe of movement in the universal motion. By that renounced thou shouldst enjoy; lust not after any man’s possession.

  வேறு ஏதேனும் பாஷ்யகாரர் இந்த சொற்களை வேறு விதமாகப் பிரித்து/பகுத்து, முற்றிலும் வேறான ஒரு பொருளை அளித்திருக்கலாம். அத்தகைய சொல்/பொருள் விளையாட்டுகள் பாஷ்யங்களில் நிறையவே உண்டு. ஆனால் இந்தக் குறிப்பிட்ட மந்திரத்திற்கு நான் கற்ற எல்லா நூல்களீலும் இந்தப் பொருள் தான் உள்ளது. நீங்கள் வேறு விதமாகப் படித்திருந்தால் அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 6. ஜடாயு, இந்த உபநிடத சிந்தனை மிக மிக முக்கியமான ஒன்று. ஒரு தரிசனத்திலிருந்து ஒரு அறத்தை அது அளிக்கிறது. இறைக்கட்டளையாக மேலிருந்து கொடுக்கப்படும் எந்த ஆணையும் உண்மையான அறவொழுக்கத்தை உருவாக்க முடியாது. ஆனால் அனைத்தும் இறைமையால் நிரம்பியுள்ளது என்னும் தரிசனத்திலிருந்து மேலெழும் அறம் பல தளங்களில் பிரதிபலிக்கும் சக்தி கொண்டது. ஒரு சிறப்பான சமூக அறமாகவும் தனி அறமாகவும் மெய்ஞான சாதனையாகவும் இதனால் விரிவடைய முடியும். இதுவே ஆபிரகாமிய பத்து கட்டளைகளிலிருந்து பாரதிய அறத்தை வேறுபடுத்துகிறது. அடுத்ததாக இந்த உபநிடத்தில் அனைத்தையும் கடந்து அனைத்துள்ளும் இருப்பதாக பிரம்மம் சொல்லப்படுகிறது. கடவுள் எனும் தமிழ் வார்த்தைக்கான சரியான வரையறையாக இதுவே உள்ளது. கடத்துபவன் அல்லது கடவுதல் செய்பவன் எனும் அடிப்படையில் அந்த பதம் எழுந்ததாக கூறுவோரும் உளர். அகம் புறம் எனும் பிரிவு தமிழ் பண்பாட்டில் உள்ளது எனும் போது ஆக ஆழமாக அனைத்தின் அகத்திலும் ஆகப்பெரும் பிரபஞ்சத்துக்கும் புறத்திலும் இறைத்தன்மை இருத்தலை காட்டும் ஒரு சூத்திரமாக இந்த உபநிடத வாக்கியம் தமிழனின் இயைந்த இறைத் தேடலுடன் ஒருமிக்கிறது. கடவுள் என்பதற்கான அறிவுசார்ந்த பொருளாக இதுவே உள்ளது. இதுவே கடவுள் எனும் பதத்தை God என மொழி பெயர்ப்பது தவறு என சுட்டவும் உதவும். எனவே ஐந்தாம் மந்திரத்தில் ’வெளியிலும்’ என்பதை கடந்தும் என மாற்றினால் நன்றாக இருக்கும். மேலும் வெளியிலும் என்பதற்கு ambiguous பொருள் வர வாய்ப்புண்டு. வெளி- ஆகாயம். எனவே கடந்தும் என்பது பொருத்தமாக அமையலாம். அன்புடன் அநீ.

 7. அரவிந்தர், சின்மயானந்தர், ஆசுதோஷானந்தர் ஆகியோரின் உரைகளை நினைவுக்குத் தந்துள்ளீர்கள். நல்லது.

  இக்காலத்தில் ஸ்ரீ ராம கிருஷ்ண மடம் செய்து வரும் அறிவு விழிப்புப் பணிகள் அதி அற்புதம். தெரிந்தெடுக்கப்பட்ட 108 உபநிஷதங்களுக்கு ‘ஸ்ரீ ராமகிருஷ்ண தீபம்’ என்னும் தமிழ்ச் சுருக்க விளக்கம் தந்து, இவ்வுபநிஷதங்கள் என்னும் பொக்கிஷத்தைத் தமிழுலகுக்குத் திறந்துவிட்டுள்ள ஸ்ரீ ராம கிருஷ்ண மடம் இறைவனின் ஆசிகளைப் பற்று வளரட்டும்.

  தாங்களும் கவி நடையுடன் நிறுத்திக் கொண்டுவிடாமல் உரையும் தந்து வருவது சிறப்பு. இதுபோல் உரை தருவதை நிறுத்திவிடாதீர்கள்.

 8. அன்புள்ள ஜடாயு ,
  ஊட்டி நாராயண குருகுலத்தில் இந்த பாடல்களை மாலை நேர பிராத்தனை பாடல்களாக கேட்டிருக்கிறேன் மேலும் யதியின் உரையையும் வாசித்திருக்கிறேன் ,எனக்கு இதன் ஆழங்களையும் கவித்துவங்களையும் முழுமையாக உள்வாங்க ஆசை , இது சார்ந்து அரங்கம் அல்லது தொடர் கட்டுரை எழுத இயலுமா.ஏனெனில் அடர்த்தி கொண்ட உங்கள் விளக்கங்களில் என்னால் உட் செல்ல முடிய வில்லை எனினும் இதனை பிரதி எடுத்து திரும்ப திரும்ப வாசிப்பேன் .நன்றி

 9. அன்புள்ள அத்விகா, பெருந்துறையான் – நீங்கள் அளித்துவரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

  // இது சார்ந்து அரங்கம் அல்லது தொடர் கட்டுரை எழுத இயலுமா.ஏனெனில் அடர்த்தி கொண்ட உங்கள் விளக்கங்களில் என்னால் உட் செல்ல முடியவில்லை //

  அன்பின் ராதாகிருஷ்ணன், வரும் வாரங்களில் இதே போன்று சில உபநிஷத அறிமுகங்கள் தொடரும். ஆனால் விரிவான விளக்கங்கள் எழுதும் எண்ணம் இல்லை – ஏற்கனவே எழுதப் பட்டு்ள்ள நல்ல நூல்களையும் இக்கட்டுரைகளில் சுட்டி வருகிறேன். அவற்றை நீங்கள் படிக்கலாம். நேரில் சந்திக்கும்போது விரிவாக உரையாடுவோம்.

 10. // அனைத்தும் இறைமையால் நிரம்பியுள்ளது என்னும் தரிசனத்திலிருந்து மேலெழும் அறம் பல தளங்களில் பிரதிபலிக்கும் சக்தி கொண்டது. ஒரு சிறப்பான சமூக அறமாகவும் தனி அறமாகவும் மெய்ஞான சாதனையாகவும் இதனால் விரிவடைய முடியும். இதுவே ஆபிரகாமிய பத்து கட்டளைகளிலிருந்து பாரதிய அறத்தை வேறுபடுத்துகிறது //

  அரவிந்தன், ஆம். சரியாகப் பிடித்து விட்டீர்கள். காந்தியு் இதைத்தான் சொல்கிறார், பத்துக் கட்டளைகள் பற்றிய ஒப்புமை தவிர்த்து.

  // ஐந்தாம் மந்திரத்தில் ’வெளியிலும்’ என்பதை கடந்தும் என மாற்றினால் நன்றாக இருக்கும். மேலும் வெளியிலும் என்பதற்கு ambiguous பொருள் வர வாய்ப்புண்டு. வெளி- ஆகாயம். எனவே கடந்தும் என்பது பொருத்தமாக அமையலாம். அன்புடன் அநீ //

  தத் அந்தரஸ்ய ஸர்வஸ்ய தது ஸர்வஸ்ய பாஹ்யத: – என்பது மூலம். பாஹ்யத; என்பதற்கு “வெளியே” என்பது தான் iteral பொருள். ஆனால் மந்திரம் சுட்டுவது நீங்கள் சொல்லும் ‘கடவுள்’ என்பதற்கான பொருளைத் தான். எனவே, மாற்றி விடுகிறேன்.

 11. // (வடமொழியில் மா கஸ்யஸ்வித் தனம்) என்று கூறுவது ஏன்? பிறர பொருளுக்கு ஆசைப் படுபவன் உலகியலை துறந்து பிரம்மத்தை தேடுவானா? பிரம்மத்தை அடைவதே குறிக்கோளாக கொண்டு வருபவனிடம் திருடாதே என்று சொல்வதே கூட ஒரு இன்சல்ட் இல்லையா? இதற்கு இன்னும் வேறு அர்த்தம் ஏதும் இருக்கிறதா? //

  நம் உள்ளிருக்கும் ஆத்மா – பரமாத்வாவிற்கு சொந்தம் என்பதனை மென்மையாக நினவு கூர்வதாகவும் கொள்ளலாம். ஆத்மாவை பரமன் பொருளாக நினைப்பது, துறவறத்தின் முதல் படியாகவும் கொள்ளளலாம். இறுதி நிலையாகவும் கொள்ளளலாம்.

  பிரும்மத்தை தேடும் போது, அதன் நிலையையும், அப்போது தோன்றக் கூடிய எண்ணப் பிரவாகங்களின் துணுக்காகவும் கொள்ளலாம்.

  ஒரு தளத்தில், அனைவரும் தேடுவது ஆனந்ததையே!. இருப்பினும், எதிலாவது ஆசை வைத்தால் (பௌதீக, ஆத்மீக, தெய்வீக) சிக்கலில் அழுந்தி விடுவோம் என்றொரு சிந்தனை உண்டு. எல்லாவற்றையும் துறந்து, அதன் வாயிலாக பெரும் ஆனந்தத்திற்கு ஓர் பேரமைதி உண்டு.

  ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே.. என்பது போல்

  ஆதலால் பிறர் பொருளாசை வேண்டாம் –
  எனதா ருயிர் ஜீவனே!

  என்றும் குறள் போல் விரியலாம்.

  இவை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருந்தால்,

  sorry

  அன்புடன் murali

 12. வேதங்கள் நமது பொக்கிஷங்கள் . அதன் உட்பொருளை அறிந்துகொள்ள ஒரு குரு அவசியம் என்பது உண்மை. ஆனால் இந்த பொக்கிஷங்களை தெரிந்துகொண்டால் தானே புரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை வரும்.

  இத்தகைய முயற்சிகள் ஒரு சிலரையாவது அந்த பாதைக்கு இட்டுச்செல்லும் என்பதில் ஐயமில்லை.

  ஆனால் நமது கிராமத்து படிக்காத சுப்பனுக்கு நமது கலாச்சார சிந்தனைகள் கெட்டுவிடவில்லை என்பதை சமிபத்தில் உணர்ந்தேன்

  மதுரை meenatchikoovilluku சமீபத்தில் சென்றிருந்தேன். சுவாமி சன்னதியை விட்டு வெளியே வரும்பொழுது அங்கு சுவாமியின் panthathai சரிசெய்து கொண்டிருந்த பெரியாவர் எங்களை அழைத்து இன்னும் அரை மணிநேரத்தில் சுவாமி புறப்பாடு இருக்கும். மீனாட்சி சன்னதியில் சுவாமிக்கு பாதபூஜை முடிந்து சுவாமி சயன அறை செல்வார் . அம்மனும் சுவாமியும் சேர்ந்திருக்கும் பூஜையை எளிதாக காணலாம் … என்று ஒரு ரன்னிங் கமெண்டரி கொடுத்துக்கொண்டே வந்தார். அவர் தயவால் அன்று திவ்ய தரிசனம் கிடைத்தது

  அது முடிந்தவுடன் எனது மனதின் குரங்கு எட்டிபார்த்தது. இவர் எதையோ எதிர்பார்க்கிறார். சரி அவர் வெளியே நிற்பார் . சிறுது பணம் கொடுத்துவிடலாம் என முடிவு செய்து வெளியே வந்தேன். அவரும் நின்றுகொண்டிருந்தார்.

  எனது சந்தேகம் மெய்ப்பட்டுவிட்டது என்று அவர் கையில் பணத்தை நீட்டினேன். அவரும் வாங்கிக்கொண்டார்.

  அப்பொழுது ஒரு வாலிபன் கையில் பூக்குடையுடன் கடந்து சென்றான். அவன் கையில் அந்த பணமதை கொடுத்த பெரியவர்—- நிச்சயமாக, வறியவர்— தம்பி நாளைக்கு அம்பாளுக்கு பூ வாங்கி போடு என்றார்

  எனது சிந்தனை என்னை கேலியாக பார்த்தது.

  நமது பண்பாடு கெட்டுவிடாது.

 13. அன்புள்ள ஜடாய்,

  இத்தனை நாட்களாக இந்த அற்புதமான வாய்ப்பைத் தவற விட்டது குறித்து கவலைப்படுகிறேன். எல்லாம் ப்ராப்தம் தான்.

  ஆனால் இந்தப் பதிவை உரையாடலோடு (கருத்துகள்) பார்ப்பதற்கு பாக்கியம் செய்தவனாய் உணர்கிறேன்.

 14. //(வடமொழியில் மா கஸ்யஸ்வித் தனம்) என்று கூறுவது ஏன்? பிறர பொருளுக்கு ஆசைப் படுபவன் உலகியலை துறந்து பிரம்மத்தை தேடுவானா? பிரம்மத்தை அடைவதே குறிக்கோளாக கொண்டு வருபவனிடம் திருடாதே என்று சொல்வதே கூட ஒரு இன்சல்ட் இல்லையா? //

  நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்
  நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்
  செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்
  கன்ப னாய்அடி யேஞ்சதிர்த் தேனின்றே.

  இது மதுரகவிகளின் ”கண்ணிநுண் சிறுதாம்பின்” அருளிச்செய்ததில் ஐந்தாவது பாசுரம். முதலடியில் ” அயலாருடைய பொருள்களைக் களவுசெய்தேன்” என்று வருகிறது. இதற்க்கு வியாக்யானத்தை வியாக்யாதார் அருளிச்செய்ததை கீழே கொடுத்திருக்கிறேன்.

  முதலடிக்கு- அயலாருடைய பொருள்களைக் களவுசெய்தேன் என்று ஸாமாந்யமாகப் பொருளாயினும் நன்பொருள் என்ற ஸ்வாரஸ்யத்தால் இங்கு ஆத்மாபஹாரம் பொருளாகக்கடவது. ஈச்வரனுக்கு மேஷபூதமான விலக்ஷண ஆத்மவஸ்துவை யென்னுடையதாக அபிமாநித்திருக்கையாகிற ஆத்மாபஹாரக்களவைச் செய்துபோந்தேன் என்கை. “***“-யோந்யதாஸந்தமாத்மாநம ந்யதா ப்ரதிபத்யதே! கிம்தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாபஹாரிணா’ என்றதை இங்கு அநுஸந்திக்க.

  “***“-உத்தம: புருஷஸ்த்வந்ய?” என்கிற ப்ரமாணச்சாயையாலே எம்பெருமானைப் பிறர் என்கிறது. இப்படி ஆத்மாபஹாரம் பண்ணினே னாகையால் அதற்குப் பலமான விஷய ப்ராவண்யப் படுகுழியிலே விழுந்தேனென்கிறார் இரண்டாமடியில்; பகவத் பாகவதவிஷயத்திலே வைக்கவேண்டிய மஹாவிஸ்வாஸத்தை மின்னிடை மடவார் திறத்திலே வைத்தேனென்கிறார்.

  நம்பிள்ளை ஈடு:- “ரத்நாபஹாரம்பண்ண அஞ்சாதவன் விறகும் வைக்கோலும் களவுகாண அஞ்சுமோ? ஈஸ்வரன் ‘என்னுடையது’ என்று அபிமாநித்திருந்த (ஆத்ம) வஸ்துவை அபஹரித்தவன், ஸாமாந்யர் ‘என்னது” என்று அபிமாநித்திருக்கும் வஸ்துவை அபஹரிக்கச் சொல்லவேணுமோ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *