பாரதி: மரபும் திரிபும் – 4

பாரதி: மரபும் திரிபும் – பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3

ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் எழுப்பும் பாரதி குறித்த பொய் அவதூறுகளுக்கு திட்டவட்டமான மறுப்புரை இந்தத் தொடர்.

(தொடர்ச்சி…)

பாரதியின் சிவனும் – திருவள்ளுவரும்

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்று தொடங்கிய திருவள்ளுவர், தன்னுடைய 1330 குறள்களிலும் கடைசிவரை ஆதிபகவன் யார் என்று சொல்லாமலேயே விட்டு விட்டார். இது, சுப்பிரமணிய பாரதிக்கு பெரிய தொந்தரவாகவே இருந்திருக்கிறது. அந்தக் கடுப்பு தாங்காமல், எடுத்திருக்கிறார் எழுதுகோலை – வடித்திருக்கிறார் பாடலை. ஆதிபகவன் யாரென்றும், தன்னுடைய சிறப்புகள் எதனால் என்றும் தமிழ்த்தாயே ஒப்புதல் வாக்குமூலம் தருவதுபோல் எழுதி அடைத்தார் தமிழர்களின் வாயை.

‘ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக் கணஞ் செய்து கொடுத்தான்

மூன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்ட நல் லன்பொடு நித்தம் வளர்த்தார்
ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்’

இதில் மொத்தம் மூன்று ஆப்புகளை தமிழர்களுக்கு அடித்திருக்கிறார் சுப்பிரமணியார்.

1. வள்ளுவர் சொன்ன ஆதிபகவன் சிவன் என்று அறிவிக்கிறார். (பார்ப்பனரில் பாரதி அய்யர் பிரிவைச் சேர்ந்தவர். அய்யருக்கு சிவனே எல்லாம்)

2. தமிழுக்கு இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்று சொல்லப்படுவதைப் பயன்படுத்தி, அகத்தியர் ஒரு பார்ப்பனர் என்று அவருக்குப் பூணூல் அணிவிக்கிறார்.

3. நன்றாக செய்யப்பட்டதாக தன் பெயரிலேயே சொல்லிக் கொள்கிற (ஸம் என்றால் நன்றாக, ‘கிருதம்’ என்றால் செய்யப்பட்டது) ஸம்ஸ்கிருதத்திலிருந்தே, தமிழ் தயாரிக்கப்பட்டதாக, ஒட்டு மொத்தமாக சேர்த்து வைத்து ஆணியடிக்கிறார்.

மதிமாறனின் விமர்சனம் இது.

முதலில் இந்த கவிதையின் கருத்தை உரைநடையில் பார்ப்போம். தமிழ்த்தாய் தன்னைப் பற்றி சொல்வதாக இந்த கவிதையை அமைத்திருக்கிறார் பாரதி. ஆதிசிவன் (ஆதியில் சிவன்) தமிழாகிய என்னை படைத்தான். பெருமைமிக்க வேதியரான அகத்தியன் என்னை கண்டு, மகிழ்ந்து இலக்கணம் செய்து கொடுத்தான். மூன்று குலத் தமிழ் மன்னர்கள் தமிழாகிய என்னை நல்ல அன்போடு வளர்த்தனர். மொழிகள் பலவற்றுள் உயர்ந்த மொழியாகிய ஆரிய மொழிக்கு நிகரென (சமமான நிலையில்) வாழ்ந்தேன். இதுதான் அதனுடைய பொருள்.

1. வள்ளுவர் சொன்ன ஆதிபகவன் ‘சிவன்’ என்று, பாரதி இந்த கவிதையில் எங்கே அறிவிக்கின்றார் ?

அதாவது வள்ளுவர் ஆதி என்ற வார்த்தையை பயன்படுத்தி யிருக்கிறார். பாரதியும் ஆதி என்று பயன்படுத்தியிருக்கிறார். இது போதாதா மதிமாறனுக்கு? உடனே மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார். மதியுள்ள மாறன் அல்லவா – அவர் முடிச்சு போடலாம். இறைவனான சிவன் தமிழையும் வடமொழியையும் கொடுத்தான் என்பதும் மரபுவழிச் செய்தி –

‘வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கு இணையா,
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வகுத்தருளும் கொல்லேற்றுப் பாகர்’

என்கிறது காஞ்சிப் புராணம். அதாவது சிவனே தமிழை அருளினார் என்பது மரபுவழிச்செய்தி.

அதுமட்டுமல்ல, முதற்சங்கத்துக்கு தலைவனாக இருந்தவன் சிவனே என்கிறது இன்னொரு செய்தி.

‘‘இடைச்சங்கமும் மற்றை இரண்டு சங்கங்களும் இருந்த இடமுதலியவற்றைப் பின்வரும் ஆசிரியப்பாவானும் உணர்க.

‘வேங்கடக்குமரி தீம்புனற் பௌவத்
திந்நான் கெல்லையி னிருந்தமிழ் பயின்ற,
செந்நாப் புலவர் செய்தியீன் டுரைப்பின்
ஆடகக் குடுமி மாடக் கூடலின்,
முன்னர்ச் சங்கக் கன்மாப் பலகையில்,
திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள்,
மன்றன் மரார்தார்க் குன்றெறி யிளஞ்சேய்,
திண்டிறற் புலமைக் குண்டிகைக் குறுமுனி….’

– இச்செய்யுள் பாண்டி நாட்டிலுள்ள செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயவரவர்கள் வீட்டிலிருந்த பழைய ஏட்டுப் புத்தகமொன்றில் எழுதப்பட்டிருந்ததாக ‘இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார் நல்லாருரையும்’ என்ற நூலில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் கூறுகிறார்.

சிவனின் உடுக்கையிலிருந்துதான் தமிழ், வடமொழி வெளிவந்ததாக மரபுவழிச் செய்தி ஒன்று உண்டு. இம்மாதிரியான செய்திகளை உள்வாங்கிக்கொள்கிற பாரதி அதை அப்படியே வெளிப்படுத்துகிறான். ஏனென்றால் இறைவனே படைத்தான் என்கிறபோது அதற்கு மதிப்பு அதிகம்தானே. அதனாலேயே இந்த மரபுவழி செய்திகளை ஏற்றுக்கொள்கிறான், அதை அப்படியே வழிமொழிகிறான்.

‘பாரதி அய்யர் பிரிவைச் சேர்ந்தவர். அய்யருக்கு சிவனே எல்லாம். அதனால் பாரதி தமிழை சிவன் தான் பெற்றான் என்று அறிவிக்கிறார்’ என்று மதிமாறன் உள்நோக்கம் கற்பிக்கின்றார். ஐயா மதிமாறன் அவர்களே! ஏதாவது எழுத வேண்டும் என்று எழுதாதீர்கள். கொஞ்சமாவது படித்துவிட்டு எழுதுங்கள். பாரதி ஐயர் என்று தமிழகத்தில் அழைக்கப் படும் ஸ்மார்த்தர் பிரிவைச் சார்ந்தவர் தான். ஆனால் ஸ்மார்த்தர்களுக்கு சிவன் மட்டுமல்ல, சக்தி, விஷ்ணு, சூரியன், கணபதி, குமாரன் ஆகிய கடவுளர்களும் முக்கியம்தான். ஸ்மார்த்தர்கள் இன்றும் பஞ்சாயதன பூஜை என்ற ஒருவகை வழிபாட்டை அவரவர் இல்லங்களிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தி வருகின்றனர். இந்த பஞ்சாயதன பூஜை என்பது சிவன், சக்தி, விஷ்ணு, சூரியன், கணபதி ஆகிய கடவுளர்களை பிரதிஷ்டை செய்து அவர்களுக்குரிய மந்திரங்களை உச்சரித்து வழிபடுவதாகும்.

2. பாரதி அகத்தியருக்கு பூணூல் அணிவிக்கிறாராம். அகத்தியர் வேதியர், முனிவர் என்பதும் வழிவழியாகத் தமிழ் மரபில் வரும் மரபான செய்தி; புராணங்கள் கூறும் செய்தி. அக்காலத்தில் மரபுச்செய்தி, செவிவழிச்செய்தி, புராணச்செய்தி, வரலாற்றுச் செய்திகளையெல்லாம் தொகுத்து ‘அபிதான சிந்தாமணி’ நூல் உருவாக்கப்பட்டது. அந்நூல் 1910ல் வெளிவந்தது. அந்நூலில் அகத்தியர் ஒரு வேதியர் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அகத்தியர் பாண்டிய மன்னர்களுக்கு புரோகிதராக விளங்குகினவர் என்று பாண்டிய சாசனங்களால் அறியலாம். ராஜசிம்மப் பாண்டியனின் சின்னமனூர் (பெரிய) சாசனம் கல்வெட்டு குறிப்பிடுவதாவது :

‘பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது’

பராந்தக வீரநாராயண பாண்டியனின் தளவாய்புரம் செப்பேடு பகர்கிறது :

‘….விஞ்சத்தின் விஜம்பனையும் பெறல் நகுஷன் மதவிலாசமும்
வஞ்சத் தொழில் வாதாவி சீராவியும் மகோததிகளின் சுருங்காத
பெருந்தன்மையும் சுகேது சுதை சுந்தரதையும் ஒருங்கு முன்னால்
மடிவித்த சிறுமேனி உயர்தவத்தோன் மடல் அவிழ் பூ மலையத்து
மாமுனி புரோசிதன்னாக….’

(நூல் ஆதாரம்: பாண்டியன் செப்பேடுகள் பத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)

இப்படி பல்வேறு செய்திகள் தமிழ் இலக்கணம் செய்த அகத்தியரை வேதியர் என்றே குறிப்பிடுகிறது. மரபுவழிச் செய்திகளையும், புராணச் செய்திகளையும் அறிந்த பாரதி அதை வழிமொழிகிறார். அவ்வளவுதான்.

*********

திருவள்ளுவர், ஔவையார் போன்றவர்களின் அறிவை வானுயரப் புகழும் பாரதி – அவர்களின் திறமைக்கான காரணத்தையும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

‘பகவான் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஒளவை, திருவள்ளுவர், கபிலர், பரணர், உப்பை, உறுவை, வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து உபய குலத்துக்கும் நீங்காத கீர்த்தி ஏற்படுத்தியதை இக்காலத்திலும் பறையர் மறந்து போகவில்லை.’

பகவனுக்கும், ஆதிக்கும் நடந்த கலப்புத் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டவர் மாதிரி ஆணித்தரமாகப் பொய் சொல்லுகிறார் பாரதி. இந்த பிரம்மாண்ட பொய்யில் இரண்டு பொய்களை மிக கவனமாகச் சொல்கிறார்.

1. பார்ப்பனருக்குப் பிறந்ததினால்தான் திருவள்ளுவருக்கும், அவ்வையாருக்கும் இவ்வளவு அறிவு.

2. பார்ப்பனர்களுக்கும் – தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வரலாற்று ரீதியான உறவை கற்பிக்கும் முயற்சி.

என்று வே.மதிமாறன் பாரதி மீது விமர்சனம் வைக்கிறார்.

பாரதி கூறியிருக்கின்ற திருவள்ளுவர் வரலாறு பாரதி தாமே எழுதிய வரலாறு அல்ல. பாரதியாருக்கு முன்பே புலவர் புராணத்திலும், கபிலர் அகவலிலும் இவ்வரலாறு இருக்கிறது. அக்காலத்திலிருந்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த மரபுவழி செய்திகளையும், செவி வழிசெய்திகளையும் தொகுத்து வெளியிடப்பட்ட அபிதான சிந்தாமணியில் இவ்வாறு கூறப்படுகிறது:-

‘திருவள்ளுவர் – இவருக்குத் தந்தை யாளிதத்தன் எனும் வேதியன் என்பது பழைய நூல்.’யாளிகூவற் றூண்டு மாதப் புலைச்சி காதற்காசனியாகி மேதினி, யின்னிசை யெழுவர்ப் பயந்தன ளீண்டே’எனும் ஞானாமிர்தத்தாலறிக’

அதுமட்டுமல்லாமல் பொ.வேல்சாமி அவர்களும் கவிதாசரண் இதழில் இதற்கான மிகத் தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். அவர் கூறுகிறார் :

‘திருவள்ளுவரைப் பற்றிய இந்தச் செய்தி கபிலர் அகவல் என்ற நூலில் தொடங்கி, 1859ல் முதன்முதலாக வெளிவந்த தமிழ்ப்புலவர் வரலாறு கூறும் ‘தமிழ் புளுடார்க்’ நூலின் இதன் ஆசிரியர் சைமன், காசிச்செட்டியால் திருவள்ளுவர் வரலாற்றில் குறிப்பிடுகின்றது. பின்னர் 1886இல் இலங்கை சதாசிவம் பிள்ளை எழுதிய ‘பாவலர்’ ‘சரித்திர தீபிகம்’ அல்லது The Galaxy of Tamil Poets என்ற நூலிலும், டாக்டர் தெ.பொ.மீ.யின் ஆசிரியரான கோ.வடிவேலு செட்டியார் 1904இல் வெளியிட்ட ‘திருக்குறள் பரிமேலழகர் உரை: அதன் விளக்கம்’ நூலிலும், அந்த நூல் பின்னர் 1918இல் மறுபதிப்பு வந்த போதும், 1972ல் மதுரை பல்கலைக் கழகம் மூன்றாம் பதிப்பு வெளியிட்ட போதும் இதே வரலாறு குறிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட திருக்குறள் பதிப்புகள் அனைத்திலும் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.

இதனை பாரதிதான் உருவாக்கினார் என்று கூறுவது, இந்த வரலாறு மதிமாறனுக்குத் தெரியாததனால் ஏற்பட்ட அறியாமையா? இல்லை தெரிந்தும் படிப்பவனுக்கு எதுவும் தெரியாது என்ற மமதையா?’

என்று மிக ஆராய்ச்சியோடு பதில் தருகிறார்.

மதிமாறனுக்கு அந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா என்ன? சேற்றை வாரி வீச வேண்டும். அவ்வளவுதான். நம்முடைய கேள்வி என்னவென்றால் பார்ப்பனருக்குப் பிறந்ததினால்தான் திருவள்ளுவருக்கும், அவ்வையாருக்கும் இவ்வளவு அறிவு என்று பாரதி எங்கே கூறுகிறார்? இதை படிக்கும் வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

பார்ப்பன ஆணுக்கும் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கும் பிறந்ததால்தான் திருவள்ளுவர், ஒளவையார் போன்றோர் அறிவு பெற்றார்கள் என்பது பாரதியின் கருத்தாக (உண்மையில் அப்படியில்லை) மதிமாறன் முன்வைக்கும் வாதம். அதுமட்டுமல்லாமல் கீழ்க்கண்டவாறு மதிமாறன் சொல்கிறார் :

‘…இந்தப் புரட்சிகரமான பொய் முயற்சியில், பகவன் என்ற பிராமணன், ஆதி என்ற பறைச்சி என்றுதான் சொல்கிறார். பகவன் என்ற ஆணை தாழ்த்தப்பட்டவராகவும், ஆதி என்ற பெண்ணைப் பார்ப்பனராகவும் கற்பனை செய்து பார்ப்பதற்குக்கூட பாரதிக்குத் துணிச்சல் இல்லை’ (‘பாரதிய ஜனதா பார்ட்டி’, பக்.101).

மதிமாறனின் கருத்தாக நாம் இப்படி இதைப் புரிந்துகொள்ளலாம். தாழ்த்தப்பட்ட ஆணுக்கும், பார்ப்பனப் பெண்ணுக்கும் பிறந்ததால் திருவள்ளுவர், ஒளவையார் போன்றோர் அறிவு பெற்றார்கள். இப்படி பாரதி சொல்லவில்லையே ஏன்? இதுதான் மதிமாறனின் கேள்வி.

அந்தக் காலகட்டத்தில் இந்த மரபுவழிச் செய்தியை யாரும் மதிமாறன் போல சாதியுடன் முடிச்சுப் போட்டு பார்க்கவில்லை. பிராமணனுக்குப் பிறந்ததால்தான் திருவள்ளுவருக்கு அறிவு இருந்தது என்பது மாதிரியான கேனத்தனமான எண்ணம் உடையவர்களாக அப்போது யாரும் இல்லை. அதனாலேயே அதற்கு எதிரிடையாக யாரும் சிந்திக்கவில்லை. பாரதியும் சிந்திக்கவில்லை. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் சென்னை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்துமூவர் திருவிழா வருடா வருடம் நடக்கிறது. அதில் நாயன்மார்களுக்கு இணையாக திருவள்ளுவரையும் வைத்து அவரையும் ஒரு நாயன்மாராக – தெய்வத்திருவுருவாக – திருவள்ளுவ நாயனாராக இன்றும் வழிபட்டு வருகின்றனர் தமிழக மக்கள். திருவள்ளுவரை குறிப்பிடும்பொழுது எல்லோரும் வழிபடக்கூடிய நாயன்மார்களுக்கு இணையாக திருவள்ளுவரை வைத்து பாரதி ‘திருவள்ளுவ நாயனார்’ என்றே குறிப்பிடுகிறார் தம் கட்டுரைகளில். வள்ளுவரை பல இடங்களில் குறிப்பிடுகிற பாரதி சிறப்பான அடைமொழி கொடுத்தே குறிப்பிடுகிறார் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். ஏனென்றால் திருவள்ளுவரின் அறிவை சாதியுடன் முடிச்சுப் போட்டு பார்க்கிற வக்கிர எண்ணம் பாரதிக்கு இல்லை.

எனக்கு ஒரு கேள்வி இங்கு எழுகிறது.

பகவன் என்ற ஆணை தாழ்த்தப் பட்டவராகவும், ஆதி என்ற பெண்ணைப் பார்ப்பனராகவும் கற்பனை செய்து பார்த்தாலும் கூட -‘பார்ப்பனர்களுக்கும் – தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வரலாற்று ரீதியான உறவை கற்பிக்கும் முயற்சி’ தான் என்று மதிமாறன்கேட்ட அதே கேள்வி எழாதா? இந்த கேள்வி எழுந்தால் மதிமாறன் என்ன பதில் சொல்வார்? பார்ப்பனத்திக்குப் பிறந்ததினால்தான் திருவள்ளுவருக்கும், அவ்வையாருக்கும் இவ்வளவு அறிவு என்று கேள்வி எழுந்தால் மதிமாறன் என்ன பதில் சொல்வார்? மரபுவழிச் செய்தியில் (மதிமாறன் புரிந்துகொள்கிற கருத்தாக) இருந்தாலும் சரி, மதிமாறன் சொல்கிற செய்தியாக இருந்தாலும் சரி; இரண்டிலும் அறிவு ஏற்படுவது ஆணினுடைய வித்தினால்தான்.

பார்ப்பன ஆண் – தாழ்த்தப்பட்ட பெண் – அறிவு
தாழ்த்தப்பட்ட ஆண் – பார்ப்பன பெண் – அறிவு

உண்மையிலேயே மதிமாறனின் புரிதல் இதுதான். ‘ஆணினுடைய வித்தினால் மட்டுமே தான் அறிவு ஏற்படுகிறது’ – இதைத் தான் அவர் சொல்லியிருக்கிறார்.

மதிமாறனின் இந்த புரிதலை, இன்றைக்கு மிக நுட்பமாகவும் சிறப்பாகவும் வளர்ந்து விட்ட மரபணு அறிவியலின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால், அது முற்றிலும் முட்டாள்தனமானது என்பது தெரிய வரும்.

சரி, அறிவியல் தான் தெரியாது என்றாலும், தன்னுடைய ‘பொதுப்புத்தியை’ வைத்து இப்படிப்பட்ட ஒரு கருத்தை உருவாக்கிய மதிமாறனின் மனநிலை எப்படிப் பட்டது? பெண்ணியவாதிகள் மட்டுமல்ல, வாசகர்கள் அனைவரும் கூட, கட்டாயம் இது பற்றி சிந்திக்க வேண்டும்.

(தொடரும்)

22 Replies to “பாரதி: மரபும் திரிபும் – 4”

 1. மதிமாறன் அலுவலகம் செல்லும் வழியில் ட்ராஃபிக் ஜாம் ஆனால் இது பார்ப்பன சதி என்று எழுதுபவர். இந்தப் பகுதியில் கொடுத்திருக்கும் உதாரணங்கள் இவற்றை மிகத் தெளிவாக விளக்குகின்றன. இவரை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்தானா என்று எனக்கு ஒரு கேள்வி உண்டு. ஆனாலும் மிகச் சிறப்பான, தர்க்கபூர்வமான dismantling என்பதை சொல்லியே ஆக வேண்டும். வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்!

 2. நீங்கள் மதியற்ற மாறனின் முட்டாள் தனத்தை விமர்சித்து எழுதிய இந்த கட்டுரை மூலம் பாரதியின் பெருமையை அறிந்து கொண்டோம்.

  தங்கள் சேவைக்கு நன்றி.

  மதிமாறனின் இந்த மானம் கெட்ட பிழைப்பிற்கு பதிலாக மஞ்சள் பத்திரிக்கைகளை விற்று பிழைக்கலாம்.

 3. மதிமாறன் என்றால் மதி மாறியவர், வக்ரபுத்தி என்பது பொருளோ?

 4. அன்புள்ள வெங்கடேசன்,

  உங்கள் தொண்டு மேலும், மேலும் சிறக்கட்டும். தமிழகத்தில் இவ்வளவு சிறந்த சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் என்பது தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து நலன்களும் பெருக, எல்லாம் வல்ல முருகப்பெருமானை வணங்கி வேண்டுகிறேன்.

 5. ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் வாழ்வில் நடந்த பின்வரும் நகைச்சுவை நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது!

  George Bernard Shaw was once approached by a seductive young actress who cooed him in his ear:- ‘Wouldn’t it be wonderful if we got married and had a child with my beauty and your brains?’ George Bernard Shaw who was hardly a handsome man replied: ‘My dear, that would be wonderful indeed, but what if our child had my beauty and your brains?’ The actress who did not need much persuasion just sped off.

 6. /// https://mathimaran.wordpress.com/?s=mooLai

  காணவில்லை

  மன்னிக்கவும், இங்கே இல்லாத எதோவொன்றை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்///

  (மதிவாணனின் பிளாக் பக்கத்தில் போய் மூளை என்று தேடினேன், வந்த தகவல் மேலே உள்ளது.)

 7. உங்கள் எடுத்துக்காட்டுகளும் கட்டுரைக்கு வரும் பேஷ் பேஷ் களும் புல்லரிக்க வைக்கிறது

  உங்கள் மரபணு கேள்வியை தானே அவரும் கேட்கிறார்.ஆண் பிராமணன் பெண் தாழ்ந்த குலம் என்று பல எடுத்து காட்டு அள்ளி விடபடுகிறதே .ஆனால் அதே போல் ஆண் கீழ் சாதி,பெண் உயர்ந்த சாதி என்று ஏதாவது எடுத்துகாட்டுகள் உண்டா என்று கேட்பதில் தவறு எங்கே வருகிறது
  பஞ்சமர் ,சண்டாளர் என்பதே அப்படி உருவானது தானே.மிகவும் தடை செய்யப்பட்ட விஷயம் அது தானே.அதில் தானே ஹிந்டுத்வத்தின் சாதி,ஆணாதிக்க வெறி அடங்கியுள்ளது
  தேவதாசி பெண்கள் கலைகளில் சிறந்து விளங்கினார்கள்.அவர்களுக்கு பிராமணர்கள்@புரட்சி வாழ்க்கை தந்து புரட்சிக்கே எடுத்துகாட்டாக விளங்கினார்கள் என்று முதலில் கதை படித்தீர்கள்.அதே காலத்தில் dk பட்டமாள் தாய் பாட கூட முடியாத நிலைக்கு காரணம் என்ன என்பதற்கு பதில் இல்லை.
  எதற்கு DK என்று தந்தை பெயர் வருவதை போல MS இல்லை என்று கேட்டால் கேட்பவன் பிற்போக்குவாதி.

 8. ”ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
  காரிகை யார்க்கு கருணைசெய் தானே”

  ”தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
  உணர்த்தும் அவனை உணரலும் ஆமே”

  – திருமூலர்.

  திருவள்ளுவர், தொல்காப்பியர், திருமூலர்., மொத்தத்தில் எல்லா தமிழ் புலவர்களும் பார்ப்பானுக்கு சொம்பு தூக்கியவர்கள் என்பதுதான் ஈவேரா சொம்பு தூக்கிகளின் மூட நம்பிக்கை.

 9. கலித்தொகையில் கடவுள் வாழ்த்தில், ஈசனை பற்றி பாடல் வரும், அது பார்பன சதியோ ?
  அகத்தியனும், வள்ளுவரும் இந்த சாதி என்று கூற இயலாது, அப்பொழுது இந்த சாதி முறைகள் இல்லை.
  ஒரு புறநானூறு உரையில் கபிலர் அந்தணர் என்று எழுதியவர் கூறுகிறார், இருக்கலாம் , ஆனால் இன்றும் பிரான் மலை பகுதிகளில் கபிலன் என்று எல்லோரும் பெயர் வைக்கிறார்கள். வடநாட்டிலும் கபில் என்ற பெயர் கபிலர் என்ற பெயரில் தான் வந்தது என்று எனக்கு ஒரு சம்ஸ்க்ருத பண்டிதர் கூறினார்.
  மதிமாறன் போன்றோர் பாரதியை பிறப்பின் காரணமாக அவரை கீழ்தனமானவர் என்று சொல்கிறார்கள், இது என்ன பகுத்தறிவு?

  \

 10. அற்புதமான தரவுகளோடு அழகாக எழுதிவரும் வெங்கடேசனது உழைப்பு மகத்தானது. வாழ்த்துக்கள் வெங்கடேசன்! தங்கள் பணிக்கு தமிழ் ஹிந்து உலகம் என்றும் கடமைப் பட்டுள்ளது!

 11. பூவண்ணன் சுட்டும் பெண்ணடிமைத்தனம் இஸ்லாமியர் ஆட்சி காலத்தில் நமது
  நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டது.. இஸ்லாமியரிடமிருந்து தன் குலப்பெண்களைக்காக்க இந்துசமுதாயம் பல உபாயங்களைக் கைக்கொண்டது. பெண்கள் முகம் மறைத்தல், வீட்டைவிட்டு வெளிவராத தன்மை, குழந்தைத் திருமணம் ஆகியவை இஸ்லாமிய ஆட்சி காலத்திலேயே ஏற்பட்டன.

  பாரதி சொல்லுவார்:”டெல்லித்துருக்கர் செய்துவிட்ட வழக்கமடி பெண்கள் முகத்தைத் திரையிட்டு மறைத்தல்…”

  புராணத்தில் தந்தை பெயர் தெரியாத சத்யகாமனுக்கு தாய் பெயருடன் சேர்த்து சத்ய காம ஜாபாலி என்ற பெயர் அளிக்கப்பட்டுள்ளது.
  இதை அடிப்படையாக வைத்து குமரன் சன் ஆஃப் மஹாலக்ஷ்மி என்ற திரைப்படம் வந்தது.

  நம் நாட்டில் கருப்பு அங்கி அணிந்து கோடிக்கணக்கில் இஸ்லாமியப்பெண்கள் உலாவுகிறார்கள். அவர்கள் அடிமை வாழ்க்கையே வாழ்கிறார்கள். அவர்களுக்காகப் பூவண்ணன் போன்ற பெண்ணிய வாதிகள் செய்தது என்ன?

 12. https://www.jeyamohan.in/?p=27457
  திரு முத்துராமக்ரிஷ்ணன் அவர்களே
  இந்த கட்டுரையில் வள்ளுவரின் தாய் தந்தை கூட வருகிறார்கள்.
  வாயில்லா குழந்தை கோயிலும் உண்டு
  இது நடக்கும் காலத்தில் இஸ்லாமியர் எங்கே வந்தார்கள்
  சாதி,voluntary சாதி விலக்கு,மந்திரியாக இருப்பவர் தன்னை விட பல வயது இளைய மணப்பது (பொருந்தா திருமணம்),கணவன் சொல்வதால் பெற்ற குழந்தைகளை விட்டு விடுதல்
  மந்திரி சொல்வதால் குறிப்பிட்ட சாதி குழந்தையை கூட ராசா தண்டித்தல் எல்லாம் வருகிறது.இதில் எல்லாம் இல்லாத பெண்ணடிமைத்தனம் எது புதிதாக இஸ்லாமியர் வந்த பின் நுழைந்தது

  மதிமாறன்,வெங்கடேசன் இருவரும் ஒரே கேள்வியை தானே கேட்கிறார்கள் என்று தானே குறிப்பிட்டிருந்தேன்.
  ஆண் எந்த சாதியாக இருந்தாலும் குழந்தையின் அறிவு குறையாதே.அப்படிஎன்றால் பிராமண ஆணுக்கும் பிற சாதி பெண்களுக்கும் பிறந்த குழந்தைகள் சாதித்த கதைகள் பல உள்ளதே ஆனால் அதற்க்கு மாறாக பிராமண பெண்ணுக்கும் பிற வர்ண ஆண்களுக்கும் பிறந்த கதைகள் இல்லையே ஏன் எனபது தானே.இதை மதிமாறன் கேட்பதில் பெண்ணடிமைத்தனம் எங்கே வருகிறது

 13. சப்தரிஷிகளில் அகத்தியர் இல்லை.அவர் எட்டாவது.
  அவர் தந்தை பிராமணர் என்றால் அவர் கோத்திரம் என்ன.
  அகஸ்தியர் கோத்திரம் என்று அவர் பெயரில் கோத்திரம் உருவாக காரணம் என்ன
  பாண்டிய மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த அகத்தியர் என்றால் அவர் பெயரில் உருவான கோத்திரங்கள் சென்ற ஆயிரம் ஆண்டுகளுக்குள் தான் வந்ததா.இல்லை
  பல அகத்தியர்கள் ,திருவள்ளுவர்கள் இருந்தார்களா.இவைகளுக்கு தெளிவான விடை உண்டா.
  இதில் அவர்களுக்கு குறிப்பிட்ட சாதி சாயம் பூசுவதை குறை சொல்வது தவறா

 14. இவர்களோடெல்லாம் வாதிட்டு இவர்கள் மனம் மாறச் செய்ய முடியுமா தெரியவில்லை. இவரகள் திட்டங்கள் வேறாகவே இருந்து வந்துள்ளன. இருந்து வருகின்றன. சாதியின் பேரில் எதையாவது சொல்லி சேற்றைப் பூசுவது என்ற தீர்மானம் இருக்குமாயின் – (அந்த தீர்மானத்தில் தான் எல்லா பிரசாரங்களும் எல்லா தளத்ங்களிலும் கடந்த நூறு வருஷங்களாக நடந்து வருகின்றன்) – வாதங்கள் பயன்படுமா? அவர்கள் வாதிடவே வரவில்லையே? சேற்றை வாரி இறைப்பது தானே அவர்கள் நோக்கம். ஆகவே, வாதங்கள் பயனில்லை. இது இலக்கிய தளத்தில் அல்ல. சாதித் தளத்தில் திட்டமிட்டு நடப்பது

  வாதங்களே பிரசினைகளைத் தீர்த்திருக்குமானால், நெருங்க்ய நண்பர்களான, ராஜாஜியும் ஈ.வே.ரா.வும் பேசியே தீர்த்திருப்பார்கள். சாதி வெறுப்பானதால் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ந்கர்ந்து கொண்டார்கள்.

  வாதங்கள், சர்ச்சைகள் எப்போது hidden agenda வைத் தொடுவதில்லை. அது பாட்டுக்கு அது அடிமனதில் இருந்து கொண்டே இருக்கும். எல்லாம் அரசியல்.

  ராஜாஜி என்ன பேசினாலும், “அவர் பார்ப்பனர். பார்ப்பனர் நலத்துக்குத் தானே பேசுவார்?” என்று சொல்லி விட்டால் என்ன கருத்துப் பரிமாறல் சாத்தியம்?

  அவருடைய சொக்கத் தங்கம் தந்த விருந்தில் .கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. சமாஜ் வாதி கட்சி தேர்தல் அறிக்கையை பொதுக்கூட்டதில்கிழித்தெறிந்த ராகுலும் முலாயம் சிங்கும் சேர்ந்துவிருந்து சாப்பிட்டார்கள். அங்கு என்ன கருத்தொற்றுமை, இங்கு என்ன க்ருத்து வேற்றுமை என்பது வெளியே தெரிந்ததா? அப்படித்தான். எல்லாமே. மதிமாறனின் அஜெண்டா மாறினால், வெங்கடேசனுக்கு வாதங்களை வரிசையாக அடுக்கும் அவசிய்மே இருக்காது.

  என்னை சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்று ஒரு தலைமுறைக்காலத்துக்கும் மேலாக வசை பாடியவர், நேருக்கு நேர் பேசும் போது, “அட நீங்க ஒண்ணு, அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு……” என்று சிரித்துக்கொண்டே அளவளாவுகிறார்கள். நான் என்ன வாதம் புரிந்து அவர்களை வென்றேன், யாராவது சொல்ல முடியுமா?.

 15. @பூவண்ணன் ,
  அப்படிக்கேளுங்கன்னே.. இவர்கள் ஹிந்து மதத்தையே பிராமன மதமாக மாற்றிவிடுவார்கள். நமது அனைத்து ஹிந்து மத நூல்களிலும் , ஒரு பிராமனனுக்கு பிறந்தவன் தான் பிராமனாக இருக்கமுடியும் என்று சொல்லும் போது . ஒரு சூத்திரனக்கு பிறந்த அகத்தியன் எப்படி ப்ராமனன் ஆகமுடியும் . அவரை எப்படி ப்ராமனன் என்று கூறமுடியும். (இந்த மாதிரி ஹிந்து மத நூல்களில் இல்லை என்றால் தயவுசெய்து மாற்றி விடவும்).

 16. @பூவண்ணன் , ஜாதி, மதம் , தாழ்புணர்ச்சி, உயர்வாக எண்ணுதல் எல்லாமே , ஒரு தனிமனிதரின் உள்ளுணர்வே. அதை வீட்டு வெளியே வாருங்கள். நீங்களும் கடவுளே. நிங்களூம் , அந்த பிராமனனும் , , அந்த கடவுளும் ஒன்றே. இதைத்தான் நமது மதம் சொல்கிறது ( நமது மதம் என்று நான் சொல்லலாமா?) . பின் எதற்க்கு இந்த காழ்ப்புணர்வு?.

 17. உங்கள் முயற்சியைப் பாராட்டுகிற அதே நேரத்தில், இனி இவருக்கு நீங்கள் பதில் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா என்று யோசியுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன். எத்தனை எழுதினாலும் இவர் தன்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்று தெரிகிறது. அபத்தங்களைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும். அது இயலாதென்றால் இவரிடமெல்லாம் லாவணி படுவதை நாம் விட்டுவிடலாம். இந்திய மகானுபாவர்கள் எவரையுமே இவர்கள் ஏற்றுக்கொண்டது கிடையாது. இதனால் நஷ்டம் நாட்டுக்கேயல்லாமல் இவர் போன்ற ஆட்களுக்கு என்ன வந்தது? பாரதியைப்பற்றிய இனிய தகவல்களை மட்டும் நாம் தொடர்ந்து சிந்தனை செய்வோம். மதிமாறன் பெயரெல்லாம் இதில் வேண்டாம். அன்பு.

 18. //மூன்று ஆப்புகளை தமிழர்களுக்கு அடித்திருக்கிறார் சுப்பிரமணியார்//.
  இது உங்களுக்கே ஓவர் ஆக தெரியவில்லை திரு வெங்கடேசன் அவர்களே! வரலாறு தெரியாமல் சும்மா பீற்றகூடாது.

 19. @vasu , நீங்களும் என்னை மாதிரிதானா? பதிவைப்படிக்காமலே அப்படியே மேய்துவிட்டு , மறுமொழி போடுவது….. (இது கூட உங்களின் ”மூன்று ஆப்புகளை தமிழர்களுக்கு அடித்திருக்கிறார் சுப்பிரமணியார்” அதை தேடிப்பார்த்து விட்டு, இது யார் சொன்னது என்று பார்த்தபின் தான் , இந்த மறுமொழி) , இது அந்த திசைமாறிப்போன …………………………………………………………………………………………………………..
  அன்பர் மிக்க மதியுள்ள மாரனின் கருத்து.

 20. கட்டுரைகளைப் படிக்கப் படிக்க என் இரத்தம் சூடேறுகிறது.
  மலை மலை தான் மிருகம் மிருகம் தான்; மிருகங்களின் தெளிவில்லாத பேச்சுகளை தேர்ந்த என் பாரதி மீது தெளித்தலாகாது.

  கட்டுரைகளுக்கு நன்றி..

 21. இப்படி பிராமணர்கள் என்ற ஒரு சாதியை வெறுப்பதால் என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது. மேலும் பகுத்தறிவு என்பது வள்ளுவர் சொன்னதுபோல்”எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்பதுதானே. ஆனால் சிலர் மட்டும் எதையும் ஆராயாமல் இப்படி குதர்க்கமாகவே பேசிக் கொண்டிருப்பது சரியா?

 22. ஏங்க…. மதிமாறன் என்ன ஆராய்ச்சியாளரா…? இவர் ஆசான் ஈவேராவே சிந்தனையாளர் அல்லர், சமூக சீர்த்திருத்தம் பேசியவர், மற்றபடி ஈவேரா சொன்னதே விஞ்ஞானப் பூர்வமற்ற வாதம். அவர் சிஷ்யன மதிக்கு மட்டும் என்ன தெரியும்…. வீண் வசவு தவிர …. அதனால் மதிமாறன் கூறுவதை பொருட்படுத்த தேவையில்லை. வரலாற்றின் குப்பைத் தொட்டியில் அவருக்கு இடமுண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *