பாரதி: மரபும் திரிபும் – 8

ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் எழுப்பும் பாரதி குறித்த பொய் அவதூறுகளுக்கு திட்டவட்டமான மறுப்புரை இந்தத் தொடர்.

முந்தைய பகுதிகள் :

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7

(தொடர்ச்சி…)

 

உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி

“உப்பரிகைகளிலும், மாட மாளிகைகளிலும், அரண்மனைகளிலும், அந்தப்புரங்களிலும் கோயில் தாழ்வாரங்களிலும் பணம் படைத்தவன் காலடியிலும் அடிமையாய்க் கிடந்த தமிழை விடுதலை செய்து, எளிமையாக்கி, வீதிக்குக் கொண்டுவந்து மக்கள்மயப்படுத்தியவன் பாரதி’ என்று பாரதிமேல் அபாண்டமாகப் புகழ் சுமத்துகிறார்கள் அறிஞர்கள்…”

–என்றுகூறுகிற மதிமாறன், பாரதிக்கு முன் சித்தர்கள் மிக மிக எளிமையாகத் தமிழில் பாடல்களை அமைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார். சித்தர்களின் பாடல்களை எடுத்துக்காட்டி விட்டு மதிமாறன் இப்படி முடிக்கிறார்:

‘‘இவ்வளவு எளிமையாக சமூகம் சார்ந்து சித்தர்கள் சிந்தித்து இருக்கும்போது- ‘பாரதிதான் முதலில் தமிழை தரைக்குக் கொண்டு வந்தார் என்று சொல்வது அபாண்டப் புகழ்தானே’’.

இப்படி பாரதி புகழ்பாடும் அறிஞர்களை விமர்சிக்கிறார் மதிமாறன்.

¦ ¦ ¦

பாரதிக்குமுன் தமிழின் பரவல் மக்களிடையே எப்படி இருந்தது? ஏன் பாரதியாரை தமிழ் மறுமலர்ச்சிக்கு உரியவராக்குகிறோம் என்ற கேள்வியெல்லாம் எழுகிறபோது மதிமாறன் கொண்டாடும் இரண்டுபேரைக் குறிப்பிட்டே அவருக்கு பதில் சொல்லிவிடலாம்.

ஒருவர் பெரியாரின் சீடர் என மதிமாறனால் போற்றப்படுகிற பாவேந்தர் பாரதிதாசன். மற்றொருவர் பெரியாரின் தளபதி அண்ணாதுரை. இவர்களின் அபாண்டப் புகழைப் பார்ப்போம்.

‘‘தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால் இமைதிறவாமல் இருந்த நிலையில் தமிழகம், தமிழுக்குத் தகும்உயர்வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான்’’

என்று கூறுகிற பாரதிதாசன் வேறொரு கட்டுரையில் கூறுகிறார்:-

‘‘அந்நாளில் பொருள் விரியும் தமிழ்ச் செய்யுட்கள் இருந்தன. பொருள் புரியும் தமிழ்ச் செய்யுட்கள் இருந்ததில்லை. புரியாத பாட்டைக் கேட்டுக் கேட்டு மக்கள் புரியும் பாட்டைக் காட்டி இந்தா என்று அழைத்தாலும் அவர்கள் தென்னாலி இராமனின் சுடக்குடித்த பூனைகளாய் ஓடுவார்கள். தமிழ்ப்பாட்டு என்பது தமிழர்க்கு வெறுப்பூட்டும் பொருளாயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வீழ்ந்த தமிழகம் பாவேந்தர் பாரதியாரின் பாட்டுக்கு வரும்வரைக்கும் எழுந்திருக்கவே இல்லை. கொட்டை நீக்கி கோது போக்கி இந்தா என்று மக்கட்குத் தந்த பலாச்சுளையே பாரதியார் அன்று அருள் புரிந்த பொருள் விளங்கும் பாட்டாகும்’’ (ஆனந்த விகடன் 3-5-1964)

முற்கால நடையோடு வேற்றுமைப்படுத்தித் தற்காலத் தமிழ்நடையில் பாரதியின் எளிமையைப் பாவேந்தர் இனங்காட்டிச் சிறப்பித்துள்ளார். முக்கியமானது என்னவென்றால்,

‘‘என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் தமிழால், பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் எவ்வாறென்பதை எடுத்துரைக் கின்றேன்’’

என்று புளங்காகிதம் அடைகிறார் பாரதிதாசன். தமிழ் பாரதியால் தகுதி பெற்றது என்பது பெரியார் சீடரின் வாக்குமூலம்.

அதுமட்டுமல்லாமல் பாரதியாரை முன்னோடியாகக் கொண்டு தம் படைப்புத்திறத்தை ஒழுங்கு செய்துகொண்ட பாரதிதாசன், தம்மிடம் பாரதி ஏற்படுத்திய பாதிப்புகளைக் குறித்தும் சரியாகக் கணித்துள்ளார்.

முப்பது ஆண்டு முடியும் வரைக்கும் நான் எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்? கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச் சுடச்சுட அவன் அருள் துய்ப்பீர் என்னும் ஆயினும் கடவுள் உருவம் அனைத்தையும் தடவிக் கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம் பாடலிற் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுவதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிர மணிய பாரதி தோன்றியென் பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார் – “கவிஞரும் காதலும்” என்னும் நூலுக்கான வாழ்த்துரையில் பாவேந்தர் பாரதிதாசன்

எளிய மக்களுக்கு மட்டுமல்ல, கவிஞர்களுக்கே பாரதியின் தமிழ் வழிகாட்டிற்று என்று கூறுகிறபோது பாரதியின் ஆளுமை மதிமாறன்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.

பெரியாரின் தளபதி அண்ணாதுரை கூறுகிறார்–

“பாரதிக்கு முன்பு வாழ்ந்து சென்ற புலவர்கள் ஆலய மணியாக அல்லது அரண்மனை முரசுவாக செயல்பட்டு வந்தார்கள். மக்கள் உள்மனத்தில் இருந்த எண்ணங்களை அவர்கள் கண்டுகொள்ள வில்லை. மக்களிடமிருந்து அவர்கள் தொலைதூரத்தில் இருந்து கொண்டார்கள்.

அறவிலை வணிகர்கள் போலவும் இன்பத்தை விற்பனை செய்பவர்களாகவும் இருந்துவந்தார்களேயன்றி அவர்கள் மக்கள் கவிஞர்களாக ஒருபோதும் இருந்ததில்லை. அதனால்தான் சங்க காலத்திற்குப் பிறகு பாரதியின் காலம்வரை மக்கள் கவிஞர் என்று ஒருவரையும் நாம் பெற முடியாமல் இருந்தது.

சிவன், விஷ்ணு, முருகன், எமன் முதலான கடவுளர்களின் வாகனங்களை அந்தப் புலவர்கள் விதந்தோதிப் பாடுவார்கள். அந்தப் பாடல்களில் அவர்தம் புலமைத்திறன் வெளிப்படும். மக்களிடமிருந்த மூடநம்பிக்கைகள் காரணமாக அவர்கள் அந்தப் புலவர்களுக்கு பயபக்தியுடன் மரியாதை செலுத்தினர். அதனால் அப்புலவர்கள் உயர்வு மனப்பான்மையுடன் உலா வந்தனர்.

‘நான் மக்கள் கவிஞன். மக்களுக்காக, மக்களைப் பற்றிப் பாடுவேன். ஏனெனில் நான் அவர்களில் ஒருவன்’ என்று ஒரு கவிஞன் சொன்னால், அவனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாறாக, அந்தக் கவிஞனை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பார்கள். கவிஞனுடைய பாக்கள் புரட்சிகரமானவையாக இருந்தால் மக்களின் எதிர்ப்பு இன்னும் வலுவாக இருக்கும். இவ்விதமான சூழலுக்கு இடையிலேதான் சுப்பிரமணிய பாரதி உறுதிகொண்ட நெஞ்சுடன் வீறுநடைபோட்டான்.

பசப்பு மொழிகளும் பாசாங்குத் தன்மைகளும் கண்டவிடத்து, அவற்றையெல்லாம் தோலுரித்துக் காட்டுவது ஒரு மக்கள் கவிஞனின் பணியாகும். பாரதி அதைச் செய்தான்.

பாரதி ஒரு தேசியக் கவிஞன் என்பதையே பெரிதுபடுத்திக் காண்பித்து மக்கள் கவிஞனாக அவன் விளங்கியதைச் சிலர் மறைக்க முயன்றனர். மக்கள் கவிஞன் பாரதி என்பதற்கு ஒன்றைக் குறிப்பாகக் குறிப்பிடுவதாயின், பாரதி மாயா வாதத்தை மக்கள் மத்தியில் அனுமதிக்க மறுத்தான். சந்நியாசிகளையும் துறவிகளையும் பாரதி சாடினான். அவர்கள் சுறுசுறுப்பு இல்லாதவர்களாக, சோம்பேறிகளாக, சமூகத்தில் பயனற்ற பதர்களாகிவிடுவார்கள் என்று கருத்துரைத்தான்.

மக்கள் கவிஞனின் பணி மகத்தானது. புதிய உண்மையை மக்கள் புரிந்துகொள்ளவும், புதிய வாழ்வு நெறியைக் கைக்கொள்ளவும் வாழ்வில் எல்லாவற்றையும் சரியாக மதிப்பீடு செய்வதற்குரிய வழிமுறைகளைக் கண்டறியவும் மக்கள் கவிஞன் மக்களை வழிநடத்த வேண்டும்.

பகுத்தறிவுப் பாதையில் செல்லுவதற்கு மக்கள் தயங்குவர். அவர்களைத் தள்ளிவிட வேண்டிய தேவையைப் பாரதி உணர்ந்தான். அதையும் அவன் செய்தான். மந்திரவாதி சொன்ன மாத்திரத்தில் மனக்கிலி, சூனியங்கள் என்று இந்த மக்களுக்குத்தான் எத்தனை துயர்கள்! சிப்பாயைக் கண்டு அஞ்சுவர்; கைகட்டி நிற்பர்; பூனைபோல் நடப்பர். கண்ணிலாக் குழந்தைகள் போல் மற்றவர் காட்டுகின்ற வழியிற் சென்று மாட்டிக் கொள்வர்.

‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று அறிவிப்பு செய்தான். விழலுக்கு நீர்பாய்ச்சுவதா? வெறும் வீணருக்கு உழைப்பதா? பூமியில் எவர்க்கும் அடிமை செய்யோம் என்று மக்களுக்கு விழிப்புணர்வூட்டுகிறான்.

மக்களுக்காகப் பணியாற்றுவதும் மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதுமே பாரதியின் சமயமாக இருந்தது.

சோதிடத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து அவர்கள் முன்பாக வானநூலறிஞரை அறிமுகப்படுத்துவது மக்கள் கவிஞனின் பணியாகும். அதேபோல், இரசவாதம் புரிவோரை மக்கள் மன்றத்திலிருந்து விரட்டிவிட்டு வேதியலறிஞரை அங்கு வரவழைத்தல், மதகுருமாரை அகற்றிவிட்டு அவ்விடத்தில் கல்வி புகட்டும் ஆசிரியரை இடம் பெறச் செய்தல், சித்துவேலை செய்பவரின் செல்வாக்கை நீக்கிவிட்டு அங்கே தேவைப்படும் பொதுமருத்துவர் வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்தல், மூட நம்பிக்கைகளை முற்றாக அகற்றிவிட்டு, அங்கே அறிவியலை மலர்ச்சி காணச் செய்தல் – என்றிவையெல்லாம் மக்கள் கவிஞனின் மகத்தான பணிகளாம். சுருங்கச் சொல்வதாயின், மக்கள் கவிஞனின் பணி ஒரு புரட்சியாளனைப்போல் செயல்படுவதாகும். ஒரு புரட்சிக்காரனை விட இது கடினமானது. ஏனென்றால், ஒரு கொடியவனைத் தம்முடைய மீட்பராகவும், மெய்யான ஒரு மீட்பரைக் கொடியவனாகவும் மக்கள் கருதிவிடுகின்றனர்.

இடர்ப்பாடுகள் நிறைந்த இவ்விதச் சூழலிலும் துணிச்சலுடன் பாரதி இப்பணிகளை மேற்கொண்டான். அவன் தொடுத்த போர் இன்றும் முடிவுக்கு வரவில்லை. எனினும் போரை வெற்றிக்கு இட்டுச் செல்லப் போதுமான படைக்கலச் சேமிப்பாக எண்ணங்களை அவன் நமக்கு விட்டுச் சென்றுள்ளான். நிலைத்த புகழைப் பாரதிக்குச் சேர்க்க வேண்டும் என்று விரும்புகின்ற ஒவ்வொருவரும் செய்ய வேண்டுவதெல்லாம் இந்தப் போரைத் தொய்வின்றித் தொடர்வதுதான். மக்களின் விடுதலைக்குரிய இப்போரை மேன்மையான நெறிப்படி தொடர்தல் வேண்டும். போருக்குத் தகுதியான மனிதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இந்தப் பணி நிறைவு செய்யப்படும்.”

(பாரதியை மக்கள் கவிஞன் என்று மதிப்பிட்டு அறிஞர் அண்ணா ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதை அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் உருவாக்கமான ‘மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர்’ 1982இல் இடம் பெற்றுள்ளது. அதன் சாரமே இது.)

 

ஆக மதிமாறனின் பாட்டனார்கள்- திராவிட இயக்கப் போர்வாள்கள். ‘உப்பரிகைகளிலும், மாட மாளிகைகளிலும், அரண்மனைகளிலும், அந்தப்புரங்களிலும் கோயில் தாழ்வாரங்களிலும் பணம் படைத்தவன் காலடியிலும் அடிமையாய்க் கிடந்த தமிழை விடுதலை செய்து, எளிமையாக்கி வீதிக்குக் கொண்டுவந்து மக்கள்மயப்படுத்தியவன் பாரதி’ என்று கூறி மதிமாறனின் முகத்தில் அறைகிறார்கள். ஆனாலும் மதிமாறன் அதையெல்லாம் துடைத்துக்கொண்டு மீண்டும், ‘பாரதி என்ன செய்தான்?’ என்றுதான் கேட்பார். மதி உள்ள மாறனல்லவா அவர்?

1924இல் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு சென்ற அத்துனை பேரும் (ஈவெரா உள்பட) பாரதியாரின் பாடலையே பாடிச் சென்றனர் எனும் போது பாரதியாரின் பாடல் மக்களின் மனங்களில் எவ்வளவு தூரம் இடம்பெற்றிருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

 

மற்றொரு நிகழ்ச்சி.

தமது எண்ணங்கள், விரைவில் பாமர மக்களையும் கவர்ந்திழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமது பாடல்களை சிந்து, கண்ணி என்னும் வகைப் பாக்களில் அமைத்தார். பாரதியாரின் பாட்டு மிக எளிதில் மக்கள் மனதில் இடம் பெற்றுவிடக்கூடிய அமைப்பு அப்பாடல்களில் இருந்தது. இதை உணர்ந்திருந்தது வெள்ளையர் அரசாங்கம். ஆகவே 1927இல் பாரதியாரின் பாடல்களுக்கு அரசாங்கம் தடைபோட்டது. (இத்தடைக்கு நீதிக்கட்சியின் ஆதரவும் இருந்தது) ஏனென்றால் பாரதியாரின் பாடல் மக்கள் மனங்களில் புகுந்தால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்ற அச்சம் வெள்ளையருக்கு இருந்த காரணத்தால் அவரின் பாடலைத் தடைசெய்தார்கள்.

இந்த நிகழ்வும் பாரதியின் ஆளுமையை- அவரின் தமிழ் கவிதையின் ஆளுமையை நமக்கு விளங்க வைக்கிறது. மதிமாறனுக்கு?

முதன்முதலில் தமிழகத்திற்கு ஹைக்கூ கவிதையை அறிமுகப் படுத்தியவர் பாரதி; முதன்முதலில் கருத்துப்படம் (கார்ட்டூன்) போட்டவர் பாரதி. மொழியாக்கம், சிறுகதை, எளிய தமிழில் வசன உரைநடை போன்றவற்றை பாரதி அன்று அநாவசியமாகக் கையாண்டார். இது மக்கள் மத்தியில் புதிய ஒளியைப் பாய்ச்சியது. அதனால்தான் அறிஞர்கள்,

‘‘இரும்புப் பெட்டிகளில் இருந்த இலக்கியத்தை ஏழைகளுக்குப் பரிமாறியவன் – நீ’’ (கவிஞர் அப்துல் ரகுமான்)

என்று அவர்களை எழுத வைத்தது.

¦ ¦ ¦

அடுத்து மதிமாறன் கூறியுள்ள சித்தர்கள் பற்றிய செய்திகளுக்கு வருவோம்.

சித்தர்கள் யாவரும் சித்தர் மரபின் ‘ஞான சித்தி’ அல்லது ‘யோக சித்தி’ மரபைச் சேர்ந்தவர்களாகவே அமைகின்றனர். இவர்கள் புறவுலகைப் புறக்கணித்துத் தன்னில் தான் ஒடுங்கி, தன்னுள்ளேயே லயிக்க வேண்டும் என்பதைப் போதித்துள்ளனர். இவர்கள் அறநெறிப் புலவர்களைப் போலன்றே உலகநிலையாமை, யாக்கை நிலையாமை, பெண் வெறுப்பு முதலியவற்றைக் கூறிச் சென்றுள்ளனர்.

அவர்கள் எழுதிய பல பாடல்களும் ஓலைச் சுவடிகளிலேயே தேங்கிவிட்டன. அதனால் சித்தர்கள் சமூகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் எதையும் கொண்டுவர முடியாமல் போய்விட்டது. காரணம் அவர்கள் சமூக உறவுகளிலிருந்து தாமே ஒதுங்கியதோடு பிறரால் ஒதுக்கியும் வைக்கப்பட்டனர். மதிமாறனே கூறுவதுபோல் சித்தர்கள் எளிமையாக சமூகம் சார்ந்து சிந்தித்தார்களே தவிர அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவில்லை. சித்தர்களை போற்றிய மற்றவர்களும் அதை கொண்டுபோய் சேர்க்கவில்லை. மதிமாறன் சித்தர் என்று போற்றுகின்ற வள்ளலாரே ‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என்று தம் கொள்கைக்கு நேர்ந்த கதியைத்தானே கூறினார்?

அதேபோல் சித்தர்கள் எழுதிய பாடல்கள் அனைத்தும் எளிமை என்று சொல்லிவிட முடியாது. சில பாடல்களைத் தவிர பெரும்பாலான பாடல்கள் விளக்கவுரை இல்லாமல் மதிமாறனாலும் புரிந்துகொள்ள முடியாது. உதாரணத்திற்கு அவரது புத்தகத்திலேயே ஒரு சித்தரின் பாடலை கொடுத்துவிட்டு அந்தப் பாட்டிற்கு உண்டான மற்றொரு விளக்கத்தை க.வெங்கடேசன் எழுதிய ‘நாட்டுப்புற மருத்துவம்- ஓர் ஆய்வு’ என்ற நூலிலிருந்து விளக்குகிறார்.

அதாவது சித்தர்களின் பாடல்கள் எல்லாமே எளிமை அல்ல என்பது மதிமாறனே கொடுத்துள்ள எடுத்துக்காட்டிலிருந்து தெரிகிறது. சித்தர்கள் எளிமையாக சிந்தித்து எழுதியிருந்தால் மதிமாறன் ஏன் அதற்கு பொருள் சொல்லாமல் வேறொருவரின் ஆய்வு புத்தகத்திலிருந்து விளக்கம் கொடுக்க வேண்டும்? விளக்கம் தெரியாததால்தானே! அப்படியென்றால் சித்தர்களின் பாடல்கள் எளிமையானது அல்ல என்பது புரிகிறதல்லவா!

மதிமாறன் கொடுத்துள்ள சித்தர்களின் பாடல்களில் வேதம், பிராமணர்கள், வர்ணாசிரமம் போன்றவற்றை எதிர்த்தவர்களாக காட்டுகிறார். உண்மைதான். ஆனாலும் காடுவெளி சித்தர் கூறுகிறார், “வேதவிதிப்படி நில்லு!” என்று. மற்றுமொரு சித்தரான பட்டினத்தார் உருவழிபாட்டை ஏற்கிறார். சிவவாக்கியர் ராமனை போற்றுகிறார். எல்லாச் சித்தர்களும் வைதீகத்திற்கு எதிரானவர்கள் அல்லர்.

ஆனால் எல்லாச் சித்தர்களுமே சிவனை ஏற்றுக்கொண்டவர்கள், கடவுள் உண்டு என்பதை நம்புபவர்கள் என்பதை மட்டும் மதிமாறன் சொல்ல ம(றைத்து)றந்துவிட்டார்.

¦ ¦ ¦

இதோ  அழுகணிச் சித்தர் பாடுகிறார்:

‘ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம்விட்டே என் கண்ணம்மா உன்பாதம் சேரேனோ’

இந்த  அழுகணிச் சித்தரின் கண்ணம்மாவைதான், கடத்தி வந்து பாரதி தன் காதலியாக்கிக் கொண்டார் என்று மதிமாறன் குற்றம் சுமத்துகிறார்.

மதிமாறனின் விமர்சனத்தை நினைத்து சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர் ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார்(?).

பாரதி கண்ணம்மா என்ற வரியை  அழுகணிச் சித்தரின் பாடலில் இருந்து கடத்திவரவில்லை. பாரதி தன் கவிதைகளில் கண்ணனின் பெண்வடிவங்களுக்குக் கண்ணம்மா என்ற விளியைப் பயன்படுத்தியிருந்தாலும், 1917இல் இயற்றப்பட்ட கண்ணம்மா – என் குழந்தை என்ற பாடலிலேயே முதன்முறையாக இந்த விளியைப் பயன்படுத்தியிருக்கிறான். கண்ணன் பாடல்களில் முதற்பாடலாக இயற்றப்பட்ட கண்ணன்- என்தாய் (1913) என்ற பாடலிலும் சரி, கண்ணன் எனும் பேருடையாள் என்ற அந்தப் பாடலிலும் சரி பெண் வடிவத்துக்கும் தொடக்கத்தில் கண்ணன் என்ற பெயரையே பயன்படுத்தியிருக்கிறான். பிறகு உலக வழக்கத்தில் உள்ள கண்ணம்மா என்ற விளியை 1917 முதல் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறான். பாரதி எழுதி, 1917இல் வெளிவந்த ‘கண்ணன் பாட்டு’ என்ற நூலில் கண்ணன் என் தோழன், கண்ணன் என் தாய், கண்ணன் என் தந்தை, கண்ணன் என் சேவகன், கண்ணன் என் அரசன், கண்ணன் என் சீடன், கண்ணன் என் சற்குரு, கண்ணன் என் குழந்தை, கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை, கண்ணன் என் காதலன், கண்ணன் என் காந்தன், கண்ணம்மா என் காதலி, கண்ணன் என் ஆண்டான், கண்ணம்மா எனது குலதெய்வம் – என்று கண்ணனை பல்வேறு நிலைகளில் உருவகித்துதான் பாரதி பாடுகிறார்.

கண்ணன் பாட்டின் 1919ஆம் வருஷம் இரண்டாம் பதிப்பில் வ.வெ.சு.ஐயர் அவர்களின் முன்னுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்– ‘‘இஷ்ட தெய்வத்தைப் பல பாவங்களால் வழிபடலாகும் என்று நமது பக்தி சாஸ்திரங்கள் கூறுகின்றன. நமது ஆசிரியரும் அதை அனுசரித்துக் கண்ணனைத் தாயாகவும் தந்தையாகவும் எஜமானாகவும் குருவாகவும் தோழனாகவும் நாயகியாகவும் நாயகனாகும் பாவித்துப் பாடுகிறார்’’ என்று கூறுகிறார். இதிலிருந்து கண்ணனைத் தான் பாரதி கண்ணம்மா என்று விளிக்கிறார் என்பதை மெய்ப்பிக்கலாம்.

அழுகணிச் சித்தரின் கண்ணம்மா என்ற பெயர் அல்லது விளியையே பாரதி பயன்படுத்தியிருப்பதாகவே வைத்துக் கொள்வோம். காப்பியடிப்பது என்பது ஒரு மேற்கத்திய சிந்தனைப் போக்கு. தமிழ் மரபில் இதற்கு எதிரடியான வழக்கமே இருந்து வந்திருக்கிறது.

‘‘முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும் பொன்னேபோற் போற்றுவம் என்பதற்கும் – முன்னோரின் வேறுநூல் செய்துமெனும் மேற்கோளி லென்பதற்குங் கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்’’

என்பது நன்னூல் வகுத்திருக்கும் சூத்திரம். தனக்கு முன்னால் இருந்த கவிஞர்கள் சொன்ன கருத்தை மட்டுமல்லாமல், அவர்கள் என்ன சொற்களில் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்களோ, அதே சொற்களையே தன்படைப்பில் ஒரு கவிஞன் அப்படியே சொல்லுக்குச் சொல் எடுத்தாளலாம். அது, முன்னோர்களுடைய கருத்தைப் ‘பொன்னேபோல்’ போற்றுவதாகும் என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள்.

எடுத்துக்காட்டாக, கம்பராமாயணம், பாலகாண்டத்தில், இராமனுக்குப் பழைய கதைகளைச் சொல்லிக் கொண்டு வருகிறார் விசுவாமித்திரர். அவற்றில் ஒன்றாக மகாபலியின் கதையைச் சொல்கிறார். மகாபலி தானம் கொடுக்கும்போது அதை சுக்கிராசாரியார் தடுக்கிறார். அப்போது அவரைப் பார்த்து மகாபலி சொல்வதாகக் கம்பன் இயற்றியுள்ள பாடல் இது:

‘‘எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கு அழகிதோ தகவில் வெள்ளி
கொடுப்பது விலக்கு கொடியோர் தமது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி ஒழியும் காண்’’

இந்தப் பாடலின் கடைசி இரண்டடிகளையும், அழுக்காறாமை அதிகாரத்தில் வரும் திருக்குறளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

‘‘கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்
உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.’’

வார்த்தைக்கு வார்த்தை, கம்பன் குறளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறான். இதுபோன்று சுமார் 300 குறட்பாக்கள் கம்பராமாயணத்தில் உள்ளன என்று அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இப்போது இளங்கோவைப் பார்ப்போம்.

‘‘கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்’’ (சிலப்பதிகாரம் 10:102:3)

என்று இளங்கோவடிகள் பயன்படுத்தியிருக்கும் அடிகள்,

‘‘மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்’’

என்ற புறநானூற்றுப்பாட்டின் (117ஆம்பாடல்) சொல்லுக்குச் சொல் எடுத்தாண்டிருக்கும் ஒன்று.

இவை போன்ற ஏராளமான எடுத்துக்காட்டுகள் தமிழின் நெடிய இலக்கிய வரலாற்றில் ஆயிரக்கணக்கில் சிதறிக் கிடக்கின்றன. மதிமாறன், தனக்கு இலக்கியமும் தெரியாது; வரலாறும் தெரியாது; பழந்தமிழ்ச் சிந்தனையின் போக்கும் தெரியாது என்பதை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்கிறார்.

செய்யுட்பகுதிகளை அப்படி அப்படியே கம்பன், இளங்கோ போன்ற பெரும்புலவர்கள் தம் முன்னோர்களுடைய பாடல்களிலிருந்து எடுத்தாண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கண்ணம்மா என்ற வழக்குப் பெயர், தற்செயலாக  அழுகணிச் சித்தர் பாடல்களில் மதிமாறன் கண்களில் பட்டுவிட்டது. அவருக்கு வரலாறு தேவையா, இலக்கியம் தேவையா, தமிழ் மரபின் நெறிதான் தேவையா? அவருக்கு வேண்டியதெல்லாம் பாரதியின்மேல் களங்கத்தை ஏற்ற ஏதாவது ஒன்று வேண்டும். பிடித்துக்கொண்டார்.

இப்படி பாரதியை விமர்சிக்கும்போது நமக்கு ஒன்று புரிகிறது. இவர் தமிழையும் சரியாகப் படித்தவர் இல்லை; பாரதியையும் சரியாகப் படித்தவர் இல்லை. அதனால்தான் இப்படிப்பட்ட உளறல்கள் வந்து விழுகின்றன.

(தொடரும்…)

7 Replies to “பாரதி: மரபும் திரிபும் – 8”

 1. நாவலர் சோமசுந்தர பாரதியாரின் வீட்டுக்கு ஒரு மங்கல நிகழ்ச்சிக்கு ( சுப காரியம்) சடங்குகளை செய்விக்க வந்த ஒரு அரைகுறை புரோகிதன், சொல்ல வேண்டிய மந்திரங்களை சொல்லாமல் , துக்க நிகழ்ச்சிகளுக்கு சொல்லப்படும் மந்திரத்தை மாற்றி சொல்லிவிட்டார். நாவலர் சோமசுந்தர பாரதியாருக்கு தமிழை விடவும் வடமொழியிலும் மிக அதிக புலமை உண்டு. எனவே, அவர் அதனை கண்டுபிடித்து , தவறான மந்திரத்தை சொன்ன அரைகுறை புரோகிதனை கண்டித்தார். இது பல பத்தாண்டுகளுக்கு முன்னரே பத்திரிக்கைகளிலும், வார இதழ்களிலும் வந்த செய்தி.

  தமிழ் நாட்டில் உள்ள அரைகுறை திராவிட இயக்கங்கள் மேலே சொன்ன நாவலர் சோமசுந்தர பாரதியார் வீட்டு நிகழ்ச்சியை மட்டும் தங்கள் கூட்ட மேடைகளில் திரும்ப திரும்ப சொல்லி, ஆன்மிகம் என்பதே ஒரு மோசடி என்பது போல பொய்யான ஒரு தோற்றத்தை மக்கள் மனத்தில் உருவாக்க முயற்சித்தனர். இதன் விளைவே நண்பர் மதிமாறன் போன்றோர் மூளை சலவை செய்யப்பட்டு, தேய்ந்து போன கிராமபோன் ரிக்கார்டு போல , போலிமயக்கத்தில் இருப்பது.

  நமது அரசியல் சட்டத்திலேயே பல குறைகள் இருப்பதனை நமது அரசியல் வியாதிகள் கண்டுபிடித்து தான் , நமது இந்திய அரசியல் சட்டம் சுமார் நூறுக்கும் மேற்பட்ட தடவை திருத்தப்பட்டுள்ளது. நாம் அதற்காக அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்துவிடவில்லை. எல்லாத்துறையிலும் நல்லவரும், தீயவரும் உள்ளனர்.ஒரு தீயவர் இருக்கிறார் என்பதற்காக ஒரு துறையை அழித்துவிடவேண்டும் என்று ஆரம்பித்தால், நம் நாட்டில் மட்டுமல்ல உலகு முழுவதுமே, ராணுவம், காவல்துறை, நீதித்துறை, அரசு அலுவலகம் , அரசியல் கட்சிகள் எதுவுமே தப்ப முடியாது. நாட்டில் பெருங்குழப்பம் மட்டுமே மிஞ்சும்.

  மதிமாறன் போன்ற நண்பர்கள் இனியாவது சிந்தித்து , தங்கள் சிந்தனை ஓட்டம் தவறான பாதையில் செல்வதை உணர்ந்து, திருத்திக்கொள்ளுதல் நல்லது. கவி வேந்தன் பாரதிக்கு இழுக்கு சேர்ப்பதாக நினைத்து , தனக்கும், தன் எச்சங்களுக்கும், மீளாத இழிவை தேடும் முயற்சியை மதிமாறன் அவர்கள் கைவிடவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 2. ம.வெங்கடேசன் மதிமாறனின் இலக்கிய அறியாமையைத் துவைத்துக் காயப்போடுவதைப் பார்த்தால், பாரதி என்ற கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகைச் சொறிந்து கொண்டுவிட்டோமோ என்று மதிமாறன் வடிவேலு போல் சத்தமாக யோசித்துக் கொண்டிருப்பார்.

 3. பாவம் மதி மாறன் .வயிற்றுப்பிழைப்புக்காக ஏதேனும் உளறியிருக்கலாம்.
  பாவம் விட்டு விடுங்கள்.
  கி.வீரமணியை எடுத்துக் கொள்ளுங்கள்.ஒரு வக்கீல்.ஆனால் ஒரு தேங்கா மூடி கூட சுயமாக சம்பாதித்தது கிடையாது..மணியம்மையை கையில் போட்டுக்கொண்டு பெரியார் சொத்தை அபகரித்து வாழ்க்கை நடத்துகிறார்.இந்த லட்சணத்தில் தன் பிள்ளையை அடுத்த ட்ரஸ்டியாக நியமித்துள்ளார்.மானங்கெட்ட ஜென்மங்கள்.

 4. //இந்த அழுகணிச் சித்தரின் கண்ணம்மாவைதான், கடத்தி வந்து பாரதி தன் காதலியாக்கிக் கொண்டார் என்று மதிமாறன் குற்றம் சுமத்துகிறார்.//
  சித்தரின் “ஊது சங்கே”” என்பதைத்தான் பாரதிதாசன் கடத்தி வந்து “சங்கே முழங்கு” என்று பயன்படுத்திக்கொண்டார்

 5. அருமை நண்பர் வெங்கடேசன் அவர்களே! இதை நீங்கள் புத்தகமாக போட வேண்டும்.

  பாரதியால் வெங்கடேசனுக்கு பெருமை, வெங்கடேசனால் பாரதிக்கு பெருமை!

 6. இப்போதைய மியன்மார் பர்மாவாக இருந்த பொது பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்தது. அங்கு தமிழர்கள் நிறைய இருந்தனர். அப்போதைய பர்மா அரசு பாரதி பாடல்களைத் தடை செய்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தில் ஆட்சி புரிந்து வந்த ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கம் (திராவிட இயக்கத்தின் பாட்டன் கட்சி) பாரதி பாடல்களைத் சென்னை மாகாணத்தில் தடை செய்தது. இதனை எதிர்த்து சட்ட மன்றத்தில் தீரர் சத்தியமூர்த்தி தொடர்ந்து பல மணி நேரம் எதிர்ப்புக் குரல் கொடுத்து ஜஸ்டிஸ் கட்சியின் முகத்திரையைக் கிழித்தார். அந்த அரசாங்கத்தில் மந்திரியாக இருந்த பி.சுப்பராயனைப் பார்த்து தீரர் சத்தியமூர்த்தி கேட்டார், பாரதி பாடலைப் பாடி தானே நீர் தேர்தலில் மக்களிடம் வாக்குக் கேட்டீர். அதனை தடை செய்ய வெட்கமாக இல்லையா என்றார். பின்னர் தடை நீக்கப்பட்டது என்பது வரலாற்றுச் செய்தி. இதையெல்லாம் அந்த மதிமாரனுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அப்போதாவது புரிகிறதா பார்க்கலாம்.

 7. பாரதி பற்றி அண்ணா துரை எழுதிய முழுக் கட்டுரை கிடைக்கமா?

  ‘மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர்’ 1982 புத்தகத்தில் அண்ணா துரை எழுதிய அந்தக் கட்டுரைப் பக்கங்கள் கிடைக்குமா? ஏனென்றால் சரியான ஆதாரம் இருந்ததால்தான் மற்றவர்களிடம் வாதிட முடியும். இல்லை என்றால் தக்க ஆதாரம் இல்லை எனச் சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *