பெட்ரோல் விலை உயர்வு – 2

<< முந்தைய பகுதி

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெருமுதலாளிகளுக்கு அரசு தரும் சலுகைகள் பல்லாயிரம் கோடிகளை எட்டும். கடந்த நிதிநிலை அறிக்கையில் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு கம்பனி வரி உள்ளிட்ட நேரடி வரிவிதிப்புகளில் மத்திய அரசு அளித்திருக்கும் சலுகை மட்டுமே 80,000 கோடி. இது தவிர கலால் வரி, சுங்கவரி போன்ற வரிவிதிப்புகளிலிருந்து அளிக்கப்பட்டுள்ள சலுகை மொத்தம் 4,19,786 கோடியாம். அதாவது ஒரு ஆண்டில் மொத்தம் 5 லட்சம் கோடியை பெருமுதலாளிகளுக்கு மானியமாக அள்ளிக்கொடுத்துவிட்டு, அரசின் வருவாய் இழப்பைச் சரிகட்ட சாதாரண மக்களைப் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் கைவைப்பது எத்தகைய அயோக்கியத்தனம்!

இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 74 விழுக்காடு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதேவேளை, மீதமுள்ள 26 விழுக்காடு இந்தியாவிலேயே கிடைக்கிறது. இவ்வாறு இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணையை இந்திய அரசு தோண்டி எடுக்காமல் அதனையும் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துள்ளன.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் கச்சாப்பொருள் மீது விதிக்கப்படும் பெரும்பாலான வரிகள் ஏதும் இந்தியாவில் கிடைக்கும் இந்தக் கச்சா எண்ணெய் மீது இல்லாத நிலையில் கூட, நாடெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் ஒரே விலையிலேயே விற்கபடுகிறது. இதன் மூலம் பலகோடிக்கணக்கான ரூபாய் ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களுக்கு இந்திய அரசு தாரை வார்த்திருப்பினும் அதுவும் போதாது என இந்தத் தனியார் நிறுவனங்கள் அண்மையில் நாடெங்கும் பெட்ரோல் டீசல் விற்பனையை விலை கட்டுபடியாகவில்லை என்று மூடிவிட்டன. இவற்றின் நெருக்குதலுக்குப் பணிந்தே, இனிமேல் பெட்ரோல், டீசல் விலையினைத் தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அன்றாட கஷ்டப் பட்டு கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தாறுமாறான வரிகள் என்பதோடு அதனை இனிமேல் நிர்ணயிப்பது தனியார் நிறுவனங்களின் கைகளில்! கேளிக்கைகளுக்கு நீக்கும் வரிவிலக்கால் சாதாரண மக்களின் வயிற்றுப்பாடு கழியுமா? என்று எந்த அரசியல்வாதியும் சிந்திப்பது போல் தெரியவில்லை. எங்கே சென்று சொல்வது இந்தக் கொடுமையை?

Rich is getting richer and poor is getting poorer என்ற கோட்பாட்டை நோக்கியே மத்திய அரசின் கொள்கைகள் இருக்கின்றன. பெட்ரோல் விலையில் ஒரு காசு உயர்ந்தாலும் அது, சாதாரண மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும். இதனால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகும். நாட்டின் அனைத்துப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை தனியார்களின் தீர்மானத்திற்கு அரசு விட்டதிலிருந்தே, சாதாரண மக்கள் மீது இந்த அரசு எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை விளங்க முடிகிறது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெயின் மீது விதிக்கப்படும் வரியால் இருமடங்கு விலையில் விற்கப்படும் பெட்ரோலின் அதே விலையிலேயே இறக்குமதி, கலால் வரிகள் ஏதுமின்றிக் கிடைக்கும் உள்நாட்டு உற்பத்தி பெட்ரோலையும் விற்றுக் கொள்ளை இலாபம் ஈட்டி வந்ததுப் போதாமல் நஷ்டம் என இழுத்து மூடி விட்ட இந்தத் தனியார் கொள்ளைக்காரர்களின் கைகளில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை அரசு அளித்திருப்பது இந்நாட்டு மக்களுக்கு அரசு செய்துள்ள மிகப்பெரும் அயோக்கியத்தனம் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.

மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்ற பச்சை அயோக்கியர்கள் பதவியில் அமர்ந்த போது படித்தவர்களாலும்.பொருளாதார மேதைகளாலும் ஆளப்படும் நாம் மிகப்பெரிய முன்னேற்றங்களை அடைவோம் என்றும், நம்பகமான தொழில்வளர்ச்சியும்,நல்ல வாழ்க்கை முறையும்,கிடைக்கும் என்று நம்பிய ஆம் ஆத்மி மீண்டும் ஏமாற்றத்துடன் தன் பிடுங்கப்பட்ட கோவணம் இருக்கும் இடத்தை தடவிப்பார்த்துக்கொள்ள வேண்டியது தான். இதையும் விமர்சிக்காமல்,எதிர்க்காமல் என்ன செய்வது என்று இருந்தால் ….. நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. வாழ்க ஜன நாயகம். வளர்க ஊழல்!

நாம் இதை இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.

நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)

IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி
கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்

HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி
கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்

BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி
கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்

மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணை ‘நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.

1. நஷ்ட கணக்கு

நஷ்டம் என்று அரசு கூறுவது ‘வர வேண்டிய லாபத்தை என்று’ சில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று. லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் “விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.

பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு ‘அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்று’ என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா?

எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை மாறாக கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.

2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது

அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.

தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 104 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 77.78 ரூபாய். ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 மட்டும் தான்.

2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம் அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.

இது மிகப்பெரும் அநியாயமாகும்.

2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும் போதே பெட்ரோலை லிட்டர் 54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 104 டாலர் தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.

எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்

உண்மையில் தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது. ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.

இதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011

வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள் 35 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 43 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி விதித்து77.78 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.

ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..

மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 1170(சுமாராக 78 எனக்கொள்கிறேன்.)

இதில் 650 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!

இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 520 ரூபாய் மட்டும் தான்!

மாதம் 650 எனில் வருடத்திற்கு 7800 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.

நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்)

இது தெரியுமா உங்களுக்கு ?.

இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!

100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம் பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க) பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.

ஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட இரண்டு மடங்கு வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம். இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.

எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின் நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கூடுதலாக வரி விதிக்க காரணம்

1. தனியார் நிறுவனங்கள்

சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும் முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.

கனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றது.

ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.

இதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.

Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு தெரியுமா? 4923 கோடியாகும்.

இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.

தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது.

இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.

முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் நான்காவது இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.

2. வட்டி

65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான். இத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது. அதன் அடிப்படையில் தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.

பெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை சுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி விதிக்கக் கூடாது. அமெரிக்காக போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரி தான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.

18% எங்கே 65% எங்கே ?

மேலோட்டமாக சலுகைகளை அறிவித்து விட்டு பொதுமக்களுக்கு தெரியாமல் பெட்ரோல் மூலம் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது .இப்படி கொள்ளை அடிக்கப்படும் பணத்தில் தான் சோனியாகாந்தி,பிரதீபா பாட்டீல்,மீராகுமார் போன்றவர்கள் ஊர் சுற்றுவதும் 2g,காமன்வெல்த்,ஆதர்ஷ் என்று ஊழல் புரியவும் உபயோகிக்கிறார்கள்.இந்த கயமையான மத்திய அரசை கண்டிக்காவிட்டால் தொடர்ச்சையாக இதே விதமான கயமைகளை புரிய தயங்காது.

(முற்றும்)

முக்கியமான மேலதிக தகவல்களுக்கு:

11 Replies to “பெட்ரோல் விலை உயர்வு – 2”

 1. ” உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று. லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் “விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.”

  Superb… why your biased mentality does not think about ‘Loss’ in 2G.
  If you want, it is loss in profit else total corruption. Don’t you feel shame?

 2. எல்லாம் சரி நண்பரே….

  ஆனால் பெட்ரோலிய பொருட்களின் விலை வாரா வாரம் மாற்றி அமைக்கப்படும் என்றும் , [ ராம் நாயக் அப்போதைய பெட்ரோலிய அமைச்சர் ] எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயித்துகொள்ளலாம் என்ற ” கொள்கை ” முடிவும் முதன் முதலில் எடுக்கப்பட்டது பா.ஜ.க ஆட்சி காலத்தில் தானே?

 3. எய்தவன் இருக்க அம்பை நொந்த கதையாக இருக்கிறது.

  உலகப் பெட்ரோலிய வளத்தின் பெரும் பகுதியைத் தங்கள் ஆக்கிரமிப்பில் வைத்திருக்கும் அரபு – இஸ்லாமிய நாடுகளின் கொடும்பிடியிலிருந்து, இயற்கையாகவே உருவான கச்சா எண்ணெய் வளத்தை விடுவித்து, உலக மக்களின் பொதுச் சொத்தாக்கினாலேயே போதும்.

  கச்சா எண்ணெயை பூமிக்குள்ளிலிருந்து எடுத்தல், பிற இடங்களுக்குக் கொண்டுவருதல், சுத்திகரித்து விநியோகித்தல் ஆகியவற்றுக்கு ஆகும் அடக்க விலையை மட்டுமே மக்களிடமிருந்து பெறவேண்டும்.

  எண்ணெய் விற்பனை என்ற பெயரில் உலக மக்களைக் கொள்ளையடித்து அரபு – இஸ்லாமிய நாடுகள் பதுக்கி வைத்திருக்கும் பெரும் செல்வத்தை மீட்டெடுத்து வளரும் நாடுகள் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.

 4. திரு. சான்றோன் அவர்களே

  உங்கள் கூற்று முற்றிலும் சரி .

  பா.ஜ.க ஆட்சி முதன் முதலாக வெளிநாடுகளில் என்னை வயல்களில் முதலிடு செய்ததது . விலையை குறைக்க முயற்சி செய்தது. எத்தனால் மிக்ஸ் பத்து சதவிகிதம் பயன் படுத்த முயற்சி எடுத்தது . முக்கியமான PETORLEUM அமைச்சர் 5 வருடம் மாற்றாமல் நல்ல நிர்வாகம் நடந்தது.

  இங்கே UPAII பாவம் எதோ ஒரு பலி கடாவை அமைச்சர் ஆக்கி எந்த முயற்சியும் இல்லாமல் தூங்கி வளிந்து கொண்டு உள்ளது.

 5. Dear Mr, Saravanan.. In 2 G specturm its not only the license were sold for less profit..The main part is the company who got the license sold them out for more profit and more over the license where given to few letter pad company.Govt has given licens to one company for less profit..in order to help cost cutting. But those company sold it for some other company for more profit..Instead if the govt had sold it for more profit..Please do not compare this 2 and show ur ignorance

 6. அய்யா இந்திய பாவப்பட்ட நடுத்தர வர்க்கமே, மேல கூறிய உண்மைகளை அனைவருக்கும் தெரிய செய்து ஒரு விழிப்பு உணர்வு கொணர்ந்து,இந்த அரசாங்கம், அதன் அல்லக்கை அதிகாரிகள், இடை தரகர்கள், கொள்ளை அடிக்கும் தனியார் இந்திய,அந்நிய நிறுவனங்கள், அனைவரிடம் இருந்தும் மீண்டும் சுதந்திரம் பெற ஒரு சுதந்திர போரை தொடங்கவேண்டும். இல்லை என்றால் விழிக்காத அரசாங்கம் அது மதிய அரசு ஆனாலும் மாநில அரசு ஆனாலும், எவ்ளவு அடித்தாலும் தாங்குகிறார்கள், இவர்கள் மிக நல்லவர்கள் என்று மீண்டும் மீண்டும் நடுதரவர்கமகிய நம்மை தான் துன்புறுத்த விழையும்.

 7. நிச்சயமாக பெட்ரோலியத்துறை மூலமாக மக்களை அரசுகள் ஒட்ட ஒட்ட சுரண்டி தனியார் துறைகளுக்கு மாமா வேலை பார்ப்பதை சிறப்பாக செய்வது புலனாகிறது. ஆனால் இதை எப்படி எவ்வொரு விஷயத்திலும் ஒற்றுமையே இல்லாத பொதுமக்களாகிய நம்மால் தடுத்து நிறுத்த இயலும் ? நாளைக்கே பா.ஜ.க அரசாண்டாலும் இதே நிலைதான். எந்த அரசுதான் பொதுமக்கள் சார்பு நிலை எடுத்து பெருமுதலாளிகளது மடியில் கை வைக்கத்துணியும் ?

  குறைந்த பட்சம் அரசின் வரிவிதிப்பை குறைக்கவாவது நம்மால் செய்யக்கூடியது என்றுகூட எதுவும் தோன்றவில்லையே !

  பாவப்பட்ட நமது தேசத்திற்கு என்று விடிவுகாலமோ !!

 8. பெட்ரோல் விலை அதிகம் அதிகம்…. பொலம்பினா மட்டும் போதுமா நாடு முழுவதும் வேலைநிறுத்தம் பன்னான்களே பான் எத்தனைபேர் அதுக்கு ஒத்துழைப்பு தந்தோம் ? நமக்கே அதை பத்தின அக்கறை இல்லை அவன் எப்படி நம்மை மதிப்பான் ?

 9. //எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயித்துகொள்ளலாம் என்ற ” கொள்கை ” முடிவும் முதன் முதலில் எடுக்கப்பட்டது பா.ஜ.க ஆட்சி காலத்தில் தானே?//

  இந்தியாவில் முதன் முதலில் 1948-ஆம் ஆண்டு பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கட்டுப் படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்திற்கும் பர்மா ஷெல் (Burmah Shell) எண்ணெய் நிறுவனத்திற்குமிடையே ஒரு ஒப்பந்தமிடப்பட்டது. இதன்படி பெட்ரோலியப் பொருட் களின் விலையை இறக்குமதி விலைக்கு சமான விலையை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டது. இம்முறை Valued Stock Account (VSA) எனப்படும். இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மதிப்புடன் காப்பீடு, சுங்கவரி, வட்டி, பயணச் செலவு சேர்த்து பெட்ரோலியப் பொருட்களின் விலை தீர்மானிக்கப்பட்டது.

  1958-ஆம் ஆண்டு VSA முறையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிர்ணயம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. இதன் காரணம் ஊகங்களின் அடிப் படையில் ஒவ்வொரு வருடமும் பெட்ரோலியப் பொருட் களின் விலையை நிர்ணயிக்காமல் உண்மையான விலையுடன் குறைந்த அளவு லாபம் சேர்த்து கணக்கிடலாம் என்ற வாதம் எழுந்ததினாலேயே. முதன் முதலில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த முறையான அணுகுமுறையை 1961-இல் டால்மே (Dalme) கமிட்டி மொழிந்தது.

  அதன் பின்னர் வந்த டலுக்தர் (Talukdar) கமிட்டியும் இறக்குமதி சமான விலையின் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்ய பரிந்துரைத்தது. 1969-இல் சாந்திலால் ஷா கமிட்டி இறக்குமதி சமான விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பது சரியல்ல என்று கூறியது. அப்போது உள்நாட்டிலேயே பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி துவங்கியிருந்தது. எனவே உள்நாட்டு உற்பத்திக்கும் இறக்குமதி விலையின் அடிப்படையில் விலை நிர்ணயிப்பது முறையாகாது என்று கூறியது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அந்நிய நாடுகளுடன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான ஒப்பந்தமிட்டிருந்ததால் வேறு வழியின்றி இம்முறையே தொடர்ந்தது.

  அட்மினஸ்டெர்டு பிரைஸ் மெகானிசம் – APM (1970-2001)

  1970-ஆம் ஆண்டு APM என்னும் இந்த வழிமுறை இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் உலகச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வினால் ஏற்படும் தாக்கங்களை (அ) பாதிப்பு களிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதுதான். உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வரும் மாற்றங் களால் ஏற்படும் அதிக நிதிசுமையினை சமாளிப்பதற்கு ஆயில் பூல் அக்கௌண்ட் (OIL POOL ACCOUNT) என்னும் கணக்கினையும் துவங்கியது மத்திய அரசு. பொதுமக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலியப் பொருட்களின் மீது சுமத்தப்படும் சுங்கவரி, வணிகவரி, விற்பனை வரி ஆகிய வரிகளினின்று கிடைக்கும் நிதி இந்த எண்ணெய் கணக்கில் சேர்க்கப் பட்டது. இந்த கணக்கிலிருந்துதான் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், LPG, ஆகியவற்றை தள்ளுபடி விலை (அ) சலுகை விலை (Subsidy) யில் விற்பதனால் ஏற்படும் இழப்பீட்டு தொகையினை மத்திய அரசு வழங்கி வந்தது. 1990 வரை இந்த எண்ணெய் கணக்கு நல்ல முறையில் இருந்தது. கணக்கில் நிதியும் இருந்து வந்தது. 1991-ஆம் ஆண்டுக்கு பிறகு, தாராளமயம் எண்ணெய் கணக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. எண்ணெய் கணக்கு நிதி பற்றாக்குறை கணக்காக தடுமாறத் துவங்கியது. பல ஆயிரம் கோடிகள் நஷ்ட கணக்காக உருவானது. அத்தகைய சூழலில் கூட பொதுமக்களின் அதிகமான பயன்பாடே இத்தகைய இழப்பீட்டுக்கு காரணம் என்று பழியை மக்கள் மீதே சுமத்திவிட்டு கோர முகங்களை மறைத்துக் கொண்டனர். அரசியல்வாதிகள், நிதி பற்றாக்குறையை சரிசெய்ய பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது மத்திய அரசு. எண்ணெய் கணக்கை சரிகட்ட வேண்டி உலக கச்சா எண்ணெய் சந்தையில் அதன் விலை வீழ்ச்சியடைந்த போதும் கூட பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க முன்வரவில்லை மத்திய அரசு.

  இறக்குமதி விலைக்கு சமான விலை (Import Parity Price)

  2001-ஆம் ஆண்டு வாஜ்பேயி தலைமையிலான NDA அரசு APM முறையை கைவிட்டு, உலக சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை அடிப்படையாகக் கொண்டு நம் உள்நாட்டில் விற்கப்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை தீர்மானிக்கும் புதிய முறையைக் கொண்டு வந்தது. இதற்கு IPP என்று பெயர். அதாவது வெளிநாடுகளிலிருந்து ஒரு லிட்டர் டீசலை நமது இந்திய துறைமுகங்களில் இறக்குமதி செய்யும்போது எவ்வளவு விலை கொடுக்கின்றோமோ அந்த விலையுடன் இந்திய அரசாங்கம் நம் மீது சுமத்தும் வரிச்சுமைகள் மற்றும் அதனை பாதுகாப்பாக கொண்டு சென்று மக்களிடம் விற்பனை செய்ய ஆகும் போக்கு வரத்து செலவு, டீலர் கமிஷன் ஆகியவை சேர்த்து ஒரு லிட்டர் டீசல் விலை எவ்வளவு என்று மத்திய அரசு தீர்மானித்து வந்தது.

  காங்கிரஸ் ஆட்சியில் ரங்கராஜன் குழு 2005 இல் அமைக்கப்பட்டு, பெட்ரோலிய பொருட்களின் விலை – வரி நிர்ணயம் குறித்து ஆய்வு நிகழ்த்தப்பட்டது. பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து வெளியேறும் பொழுது உள்ள விலைக்கு, ஒரு வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என அக்குழு பரிந்துரைத்தது. 2009 இல் அமைக்கப்பட்ட கிரித் பாரிக் குழு, தனது அறிக்கையை 2010 இல் அளித்தது. அரசு, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வழங்கும் தனது மானியத்தை முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும்; பெட்ரோலிய பொருட்களின் விலையை அரசு நிர்ணயிக்கக் கூடாது; அதனை அந்தந்த நிறுவனங்களே – உலக சந்தையின் நிலவரத்தைப் பொருத்து நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என கிரித் பாரிக் குழு தனியார் முதலாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நனவாக்கியது.

  கிரித் பாரிக் குழு சூன் 25 அளித்த அறிக்கையைக் கொண்டுதான் காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவை 2010 ஜுலை மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்க முடிவெடுத்தது.

  எனவே பாரதிய ஜனதா ஆட்சிகாலத்தில் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை அரசிடம்தான் இருந்தது.

  ” தி.மு.க. தலைவர் கருணாநிதி பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி நடந்தபோது தில்லியில் நடந்த கூட்டத்தில் தான் பெட்ரோலிய நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பங்கேற்றார். அப்போது ஒப்புதல் அளித்துவிட்டு இப்போது பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என்று கருணாநிதி கூறுவதை யாரும் பெரிதாக நினைக்க மாட்டார்கள்” என்று தோழர் ஜி. ராமகிருஷ்ணன் கூட தனது அறிக்கையில் இதைக் குறிப்பிட்டுள்ளார். பார்க்க இணைப்பு https://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=603145&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

 10. பெட்ரோல் விலை உயர்வு மக்களை ஏமாற்றும் செயல்.

 11. நண்பர் திரு பார்த்திபன் அவர்களின் விளக்கமான பதிலுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *