பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாலும்,இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோலின் விலை ரூபாய் 7.54/லிட்டர் மட்டும் விலை உயர்த்தப்படுகிறது.-மத்திய அரசு அறிவிப்பு.

“இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாசமாக்காமல் ஓய மாட்டேன்” என சபதம் எடுத்துக் கொண்டு ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் சோனியா காங்கிரஸின் இன்னுமொரு பரிசு தான் இந்த அதிரடி பெட்ரோல் விலை உயர்வு. மோட்டார் வாகனம் பயன்படுத்துவோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது “அடப்பாவிங்களா கேக்குறதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான்.

ஏமாளிகளான மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் முகமாக 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு 11 வது முறையாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. புதிய விலை உயர்வின்படி,சென்னையில் பெட்ரோல் 77.53, பெங்களூரில் 81.40, மும்பையில் 78.67, கல்கத்தாவில் 77.88, டில்லியில் 73.18, ஹைதராபாத்தில் 80.58, ஜலந்தரில் 80.68 என்று இருக்கும். பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த, தினமும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக அரசு காரணம் கூறுகிறது. இந்த இழப்பைச் சரி கட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என பாரிக் கமிட்டி கொடுத்தப் பரிந்துரையின் பேரிலேயே விலை உயர்வு தீர்மானிக்கப்பட்டதாகவும் இந்த விலை உயர்வு பெட்ரோல் உபயோகிப்பாளர்களுக்குப் பெரிய சிரமத்தை அளிக்காது எனவும் மத்திய அரசு சப்பைக்கட்டு கட்டுகிறது.

உண்மையில் மத்திய அரசு கூறும் இந்தக் காரணம் அப்பட்டமான பொய் என்பதைக் கடந்த 2009 – 2010 நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்குக் கிடைத்த லாபம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. 2009-2010 ஆம் ஆண்டு கணக்குப்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் 10,200 கோடி, பாரத் பெட்ரோலியம் 1,500 கோடி, ஹெச்.பி.சி.எல் 1,300 கோடி, ஓ.என்.ஜி.சி 16,700 கோடி, கைல் 3,140 கோடி என கோடிக்கணக்கில் எண்ணெய் நிறுவனங்கள் இலாபம் ஈட்டியுள்ளன. சாதாரண மக்கள் இதையெல்லாம் கவனிக்கவா போகிறார்கள் என்ற ரீதியில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டவே விலை உயர்வு என மத்திய அரசு மக்களின் காதில் பூச்சுற்றியுள்ளது.

அத்தோடு இந்தச் சிறிய விலை உயர்வு பெட்ரோல் உபயோகிப்பாளர்களுக்குப் பெரியச் சிரமத்தைக் கொடுக்காது எனவும் மத்திய அரசு திருவாய் மலர்ந்துள்ளது. அதாவது, பெட்ரோலை அதிகமாக உபயோகிக்கும் மேல் தட்டு மக்களுக்குச் சிரமமாக இருக்காதாம். பெட்ரோலியப் பொருட்களின் விலையினை அடிப்படையாக வைத்தே, சாதாரண மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் பெட்ரோல் விலை ஏறினால் சாதாரண மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதும் இந்த அரசுக்குத் தெரியாதா என்ன?

நிச்சயம் தெரியும். சாதாரண மக்களைக் குறித்து இந்த அரசு எவ்விதக் கவலையும் படவில்லை என்பதையே மிகச் சாதாரணமாக பெட்ரோல் விலையை ஏற்றி, பணம் கொழிக்கும் தனியார் நிறுவனங்களின் மனதைக் குளிர வைத்து விட்டு, இதனைச் சாதாரண விலையேற்றம் போல் மத்திய அரசு சித்தரிக்க முயல்வது காட்டுகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வும் இந்த விலையேற்றத்துக்குக் காரணமாகும் என, ஏமாற்றுவதையே பிழைப்பாகக் கொண்டச் சில அரசியல்வாதிகளும் உளறிவருகின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 140 டாலராக இருந்த போது என்ன விலைக்கு விற்கப்பட்டதோ அதே விலைக்கே 30 டாலருக்கு விற்கப்பட்டபோதும் இதே மத்திய அரசு விற்றது நினைவுக்கு வருகிறது. அமெரிக்காவில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.35 க்குள் விற்கப்படுகிறது. பின்னர் ஏன் இந்தியாவில் மட்டும் இந்த தாறுமாறான விலை உயர்வு?

பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றத்துக்கு அரசு கூறும் காரணங்கள் மூன்று. முதலாவது காரணம், கச்சா எண்ணெய் விலை,பெட்ரோலிய நிறுவனங்கள் சந்திக்கும் இழப்பு,அரசு மானியங்கள்.இவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் அதற்கேற்றபடி பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதைத் தவிர, வேறு வழியில்லை என்று அரசும் எண்ணெய் நிறுவனங்களும் கூறுகின்றன. ஆனால், இதில் உண்மையில்லை. கச்சா எண்ணெயின் இப்போதைய விலை பீப்பாய்க்கு105 அமெரிக்க டாலர்கள். கடந்த ஆண்டிலிருந்து எடுத்துக்கொண்டால் சராசரியாக 94 டாலர்கள். ஒரு டாலரின் மாற்று மதிப்பு 55 ரூபாய். சராசரியாகக் கணக்கிட்டால் ஒரு பீப்பாயின் விலை ரூ.5170. ஒரு பீப்பாய் என்பது 159.99 லிட்டர். ஆக ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் மதிப்பு ரூ32.33

பெட்ரோல் உற்பத்தியில் கச்சா எண்ணெய் 90 சதவீதமும் உள்நாட்டில் தயாராகும் பொருள்கள் 10 சதவீதமும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஒட்டு மொத்தமாக உற்பத்திச் செலவு ஒரு லிட்டருக்கு 35 ரூபாயைத் தாண்டாது. இந்தக் கணக்கின்படி பார்த்தால் கடந்த 2006-07 ஆம் ஆண்டில் உற்பத்திச் செலவு ரூ.19.47 ஆகவும், 2007-08 ஆம் ஆண்டில் ரூ.25.71 ஆகவும், 2008-09 ஆம் ஆண்டில் ரூ.26.11ஆகவும், 2009-10 ஆம் ஆண்டில் ரூ.21.75 ஆகவும் இருந்திருக்கும். அரசின் தகவல்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. வரி வகையில் அரசு எந்த லாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்றால் பெட்ரோலை இதே விலைக்கே மக்களுக்குத் தந்திருக்க முடியும்.

ஏம்ப்பா மன்மோகன் சிங்! 35 ரூபாய்க்கு தயாராகும் பெட்ரோலை 78 ரூபாய்க்கு வித்தால் நஷ்டம் வரும்னு யாரு உங்களுக்கு சொல்லிக்கொடுத்தது?

அதனால் கச்சா எண்ணெயைக் காரணம் காட்டுவது போலியானது.

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு அரசு கூறும் இரண்டாவது காரணம், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படும் இழப்பு. கடந்த நிதியாண்டில் மட்டும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.78 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 208 கோடி நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் அரசு கூறுகிறது. இதன் அடிப்படையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு நியாயப்படுத்தப்படுகிறது.

இந்த வாதமும் மோசடியானது. ஏனெனில், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படுவது நஷ்டமே அல்ல. அது அரசின் விலைக்கும், இறக்குமதி விலைக்கும் இடையிலான வேறுபாடு மட்டுமே. (லாபத்தில் ஏற்படும் குறைவு) இதை ரங்கராஜன் கமிட்டி தெளிவாக்கியிருக்கிறது. உண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தில் இயங்குகின்றன என்பதை அந்தந்த நிறுவனங் களின் ஆண்டு அறிக்கையைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். கடந்த 2006 முதல் 2010 வரையிலான நான்கு நிதியாண்டுகளில் இந்த நிறுவனங்கள் ரூ.1,26,288 கோடி லாபம் ஈட்டியிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோலிய உயர்வுக்கு அரசு கூறும் மூன்றாவது காரணம், மானியங்களால் ஏற்படும் பொருளாதாரச் சுமை. சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், டீசல் போன்ற வற்றுக்கு அதிக அளவில் மானியங்கள் தரப்படுவதால் அவற்றை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல் மற்றும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்த வேண்டியிருக்கிறது என்று அரசு கூறுகிறது.

ஆனால், புள்ளி விவரங்களின்படி 2006-07 முதல் 2009-10 வரையிலான நிதியாண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ.23,325 கோடி. இதே காலகட்டத்தில் பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகள் மூலம் அரசுக்குக் கிடைத்திருக்கும் வருவாய் ரு.4,10,842 கோடி. இதன்படி அரசு வழங்கியிருக்கும் மானியம், லாபத்தில் வெறும் 5.67 சதவீதம்தான். மாநிலங்களின் வரி வருவாயான ரூ.2,63,766 கோடியையும் சேர்த்தால் இந்த அளவு வெறும் 3.45 சதவீதம்தான்.அது மட்டுமல்ல 2012-13க்கான பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் 25,000 கோடி ரூபாயை பெட்ரோலிய மானியத்தை ரத்தும் செய்து விட்டார்.

கிடைக்கும் லாபத்தில் சிறு துரும்பைத் தான் மானியம் என்கிற பெயரில் அரசு கிள்ளிப் போட்டிருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மொத்தத்தில் பெட்ரோலியத் துறை லாபம் கொழிக்கும் துறை. பெட்ரோலியப் பொருள் களின் விலைகளை உயர்த்துவதன் நோக்கம் லாபத்தை அதிகரிப்பதேயன்றி, நஷ்டத்தைச் சமாளிப்பதல்ல. இதுதவிர டீசலில் லிட்டருக்கு ரூ.18.19, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெயில் லிட்டருக்கு ரூ.29.69, சமையல் எரிவாயு சிலிண்டரில் ரூ.329.73 நஷ்டம் ஏற்படுவதாக அரசு கூறி வருகிறது.

இப்படி மிகைப்படுத்தி நஷ்டக் கணக்கைக் காட்டுவதன் மூலம் மக்களின் எதிர்ப்பை அடக்கலாம் என்பது அரசின் திட்டம்.மன்மோகன் சிங் கும்பல் சாமானிய மக்களை என்றுமே ஒரு பொருட்டாகக் கருதியதில்லை. அக்கும்பல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினைக் கட்டுப்படுத்தாததோடு, அப்பொருட்களின் விலை மேலும் உயரும் எனத் தெரிந்தேதான், எரிகிற நெருப்பில் எண்ணெயை எடுத்து ஊற்றுவது போலத்தான், இந்தக் கூடுதல் வரி விதிப்பையும் மானிய வெட்டையும் கொண்டு வந்திருக்கிறது;

இது மட்டுமின்றி, பட்ஜெட்டை அறிவித்த கையோடு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதாகவும் திமிரோடு அறிவித்திருக்கிறது.இந்த ஆண்டு முடிவுக்குள் சிலிண்டரின் விலையை 1200க்கு அனைவருக்கும்,4 சிலிண்டர்களை 930க்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களுக்கும் வழங்க வேண்டும் என அலுவாலியா,மற்றும் ஆர்.எஸ்.சர்மாவின் கூற்றுக்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து விட்டது நாம் என்ன செய்ய முடியும் ? என்று மீண்டும் மீண்டும் சொல்லும் மத்திய அர்சை பெட்ரோல் விலையை எப்படி உயர்த்தாமல் இருக்கமுடியும், என்பது ஆட்சியாளர்களின் வாதம். ஆனால் உலகச் சந்தையில் மற்ற நாடுகளெல்லாம் எவ்வளவு ரூபாய்க்கு பெட்ரோலை விற்கிறார்கள் தெரியுமா? டோகாவில் ரூ. 8.25, சௌதி அரேபியாவில் ரூ 8.53, யுனைடெட் அரேபிய எமிரேட்டில் ரூ. 18.14 என்று சொன்னால் இவையெல்லாம் பெட்ரோல் உற்பத்தி செய்கின்ற நாடுகள் என்று சொல்லிவிடுவார்கள். இவர்கள் எதற்கெடுத்தாலும் அண்ணாந்து பார்க்கிற அமெரிக்காவில் கூட 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 37.31, பக்கத்தில் இருக்கிற பாகிஸ்தானில் ரூ. 35.75, இலங்கையில் ரூ. 47.04 தான்.

உலகச் சந்தையைக் கைகாட்டும் மத்திய நிதியமைச்சர். பிரணாப் முகர்ஜி இவ்வளவு நாடுகளில் பெட்ரோல் விலைகள் குறைவாக இருப்பது ஏன் என விளக்குவார்களா? பெட்ரோல் என்பது மக்களின் அன்றாட வாழ்வோடு தொடர்புடையது. இதன் விலை உயர்ந்தால் காய்கறி, பலசரக்கு, பொருட்கள் எல்லாவற்றின் விலைகளும் உயர்ந்துவிடும். எனவே தான் பலநாடுகள் பெட்ரோலுக்கு மானியங்கள் தருகின்றன. அதன் மீது வரிகளைக் குறைக்கின்றன. உதாரணமாக அமெரிக்காவில் 1916 லிருந்து 94 ஆண்டுகளாக பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு பேரலுக்கு 100 டாலர்களுக்கு மேல் விலை போய்விடக் கூடாதென்பதற்காக இம்மானியங்கள் வழங்கப் பட்டுள்ளன. எனவே பெட்ரோலிய விலை உயர்வை உலகளாவிய போக்கு என சித்தரிப்பது வடிகட்டிய பொய்.

யாருக்கு லாபம்?

பெட்ரோலிய விலை உயர்வால் யாருக்கு லாபம் என்பது முக்கியமானது. அரபு நாடுகளிலும், லிபியாவிலும் ஏற்பட்டிருக்கிற பிரச்னைகளினால் பெட்ரோலிய விலை உயர்வு ஏற்படுவதாக ஒரு கருத்து உலவவிடப்படுகிறது. ஆனால் சரக்குச் சந்தையில் அரங்கேறும் யூக வணிகமே விலை உயர்வுக்கு முக்கியக் காரணியென்பது உண்மை. எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் (OPEC) பொது செயலர் அப்துல்லா எல்பரேடி, “யூக வணிகமே பெட்ரோல் விலைகளைத் தீர்மானிக்கிறது. கிராக்கி அளிப்பு சம்பந்தமான பொருளாதார விதிகள் அல்ல” என்கிறார்.

இதை அமெரிக்க அதிகார வர்க்கத்தாலும் முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை. அமெரிக்க நாட்டின் நிதிமோசடி கண்காணிப்பு நடவடிக்கைக் குழுவிலுள்ள அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் “டாலர்கள் விலைகளைப் பாதிக்கின்றன. முதலீட்டாளர்கள் யூக லாபத்தையே நாடுகிறார்கள்” என்கிறார். எண்ணெய் விலை ஆணையத்தின் செயலாளர் டாம் குளோசா என்பவர் “யாரும் விதிகளை மீறுவதில்லை. எனினும் ஒருசில கணினி அழுத்தல்களிலேயே லட்சக் கணக்கான, கோடிக்கணக்கான டாலர் சரக்குகள் சந்தைக்குள் வருகின்றன. அது உலகம் முழுவதிலும் விளிம்பு நிலையிலுள்ள மக்களை பாதிக்கிற வகையில் அவர்களின் உயிர் ரத்தமாக உள்ள பெட்ரோல் விலையினை உயர்த்தி விடுகிறது”

விதிகள் மீறப்படவில்லை என்பது ஏன் தெரியுமா? மீறல்களையே விதிகளாக்கிவிட்டால் அது எப்படி குற்றமாகும். சூதாட்டத்தை சரக்குச் சந்தை முன்பேர வர்த்தகமாக அங்கீகரித்து விட்டார்களல்லவா! சரக்குகள் கைமாறாமலேயே கணினி மூலம் சுற்றுக்கு விடப்படுவதும், பதுக்கப்படுவதும் பெட்ரோலியத்தை மட்டுமல்ல, பல்வேறு உணவு, நுகர்வுப் பொருட்களின் விலைகளையும் எக்கச்சக்கத்திற்கு ஏற்றிவிடுகின்றனர் என்பதே அனுபவத்தின் உண்மை. அதைத் தவிர அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிற மானியங்களும் “வானம் பொழிகிற லாபங்களை” தந்திருக்கின்றன.

அமெரிக்க நாட்டின் எக்ஸான் மொபில் நிறுவனத்தின் லாபம் 2011 ஏப்ரலில் 69 சதம் உயர்வையும், செவ்ரான் 33 சதம் ஷெல் நிறுவனம் 22 சதம் லாபத்தையும் ஈட்டியுள்ளன என்றால் என்ன நடந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஒருபுறம் ஒபாமா பெட்ரோலிய நுகர்வைக் குறைக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். மறுபுறம் இப்பன்னாட்டு நிறுவனங்களின் கல்லாப் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. டாப்-5 எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் (2001-+2010) 45 லட்சம் கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியுள்ளன.

இது அமெரிக்காவின் கதை மட்டுமல்ல. இந்தியாவிலும் அதே நிலைமைதான். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் நாமெல்லாம் கவலைப்படுகிறோம். வே டூ வெல்த் சர்வீசஸ் என்ற அமைப்பின் தலைமை நிர்வாக அலுவலர் அம்பரிசு பாலிகா சொல்லுவது என்ன தெரியுமா?“கச்சா எண்ணெய் விலைகளின் ஏறுமுகம் ரிலையன்சுக்கும், ஒஎன்ஜிசிக்கும் நல்ல செய்தியாகும்”.

இந்தச் செய்தியை கேட்டு அம்பானி மகிழ்ச்சியடைவது ஏன் தெரியுமா? உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கூடினால் அதே விலைக்கு இங்கே எண்ணெய் எடுக்கிற அம்பானியும் விற்கலாம். உற்பத்திச் செலவுக்கும், விலைக்கும் சம்பந்தமே கிடையாது. எண்ணெயைத் தோண்டி எடுப்பதற்கான உரிமக் கட்டணமும் உலக ரேட்டைக் காட்டிலும் குறைவு. உலகமயத்தின் இலட்சணம் இது.

ரிலையன்ஸ் போன டிசம்பரில் முடிகிற காலாண்டில் மட்டும் 17 சதவிகித இலாபம் சம்பாதித்தது. இதுவரை எந்தக் காலாண்டிலும் இல்லாத இலாபம். ஒஎன்ஜிசி 34 சதவிகித லாபத்தை ஈட்டியுள்ளது. இது எண்ணெய் வர்த்தகக் கம்பெனிகளுக்கு ஒஎன்ஜிசி தருகிற மானியம் போகக் கிடைத்த இலாபம். மக்களின் முதுகுகளில் கடந்த ஆண்டு ஒன்பது முறை விளாசித் தள்ளிய சாட்டை அம்பானியின் கைகளிலும் ,ஆயில் நிறுவங்களின் கைகளிலும் இருக்கிறது என்பது தெரிகிறதா!

இப்படி பெரும், பெரும் கம்பெனிகளின் இலாப வேட்டை ஒருபுறம், மறுபுறம் ஆட்சியாளர்களின் வரிச்சாட்டையும் புகுந்து விளையாடுகிறது. இந்தக் கணக்கை கீழே பாருங்கள்.

ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை – 105 டாலர்

ஆண்டு சராசரி – 94.00 டாலர்/பேரல்

ரூபாய் மதிப்பில் – ரூ.55.06

ஒரு பேரலுக்கு – 159.90 லிட்டர்

ஒரு லிட்டர் கச்சாஎண்ணெய் விலை – ரூ32

சுத்திகரிப்புச் செலவு – ரூ 0.52

மூலதனச் செலவு – ரூ 6.00

போக்குவரத்து செலவு – ரூ 6.00

முகவர் கழிவு – ரூ 1.05

மொத்தம் 1 லிட்டர் விலை – ரூ 45.57

எப்படிப் பார்த்தாலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 45.57தான். ஆனால் மும்பையில் ரூ.78, சென்னையில் ரூ.78, டெல்லியில் ரூ.73 பெங்களுரில் ரூ.81 எப்படி! மத்திய அரசு போடுகிற கஸ்டம்ஸ், எக்சைஸ் வரிகளும், மாநில அரசு போடுகிற விற்பனை, நுழைவு வரிகளும் தான். பெட்ரோல் விலை உயர உயர வரிகளும் உயருகின்றன. ஒரு ஆண்டில் பெட்ரோல் மீது வசூல் செய்யப்படுகின்ற வரிகள் எவ்வளவு தெரியுமா? 2010+-11ல் மட்டும் ரூ. 1,11,000 கோடிகள். இந்த ஆண்டு ரூ. 1,35,000 கோடிகள் எதிர்பார்க்கப்படுகிறது.

மானியம், மானியமென்று மாய்ந்து போகிறார்களே, போன ஆண்டில் ரூ. 38,400 கோடிகள்தான் திருத்தப்பட்ட மதிப்பீடு. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் கடந்த 2010 டிசம்பர், 31 வரையிலான காலத்தில் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 134 சதம் நிகர லாபத்தில் உயர்வு காண்பித்துள்ளது. அரசு தருகிற மானியத்தையும் சேர்த்ததால்தான் அந்த லாபம் என அரசு விளக்கம் தருகிறது. ஆனால் 1,35,000 கோடிகள் சுளையாய் பெட்ரோலிய வரிகள் மூலம் கிடைக்கிறது என்பதை மறைக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

சரி! மானியம் தருவதால் என்ன கெட்டுவிடுகிறது. ஒவ்வோராண்டும் கஸ்டம்ஸ், எக்சைஸ் நிறுவன வரிகளில் எவ்வளவு சலுகை தரப்படுகின்றன! 2011 பட்ஜெட் கணக்குப்படி

நிறுவன வரிகள் – 88,263 கோடி
எக்சைஸ் – 1,98,291 கோடி
கஸ்டம்ஸ் – 1,74,418 கோடி

கடந்த 5 ஆண்டுகளில் (2006+-11) இப்படி வாரி வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மொத்தம் 21 லட்சம் கோடிகளை தாண்டுகிறது. வைரம், தங்கம் இறக்குமதிக்கு மட்டும் தரப்படும் கஸ்டம்ஸ் வரிச்சலுகையான ரூ. 48,798 கோடிகளை ஒதுக்கினாலே இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு அரசு தருகிற
மானியங்களுக்குப் போதுமானது.

பிரச்னை என்ன?

பன்னாட்டு நிறுவனங்களின், தனியாரின், வசதிபடைத்தோரின் இலாபங்களை தாங்குகிற சுமைதாங்கிகளாக இந்திய மக்களின் முதுகுகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வுக்கு உண்மையில் பெட்ரோல் நிறுவனங்களின் நஷ்டமோ சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை உயர்வோ காரணமல்ல என்பதைத் தர விவரங்களைப் பரிசோதிப்பவர்கள் எளிதில் புரிந்துக் கொள்ளமுடியும். எனில், இந்த விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன?

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பும் தனியார் நிறுவனங்களின் கூட்டுக்கொள்ளைக்கு அரசுகள் துணை போவதுமே உண்மையான காரணமாகும். மத்திய அரசு சுங்க வரி, உற்பத்தி வரி என்று ஒரு புறமும் மாநில அரசுகள் விற்பனை வரி, மதிப்பு கூடு வரி என மறு புறமும் போட்டுத் தாக்கி வருகின்றன.

தற்போது விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலையில் சுமார் 51 விழுக்காடு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் தான். அதாவது தற்போது பெட்ரோல், டீசலுக்குக் கொடுக்கும் விலையில் பாதிக்கும் சற்று அதிகமாக வரி தானேயன்றி, அது பெட்ரோலுக்கான உண்மையான விலையல்ல. மத்திய மாநில அரசுகள் வரியைக் குறைத்துக்கொண்டாலே விலை உயர்வுக்கு அவசியமில்லாமல் போகும். மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று சொல்லும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, அந்தக் கருத்தை மத்திய அரசை நோக்கி சொல்ல வாயைத் திறப்பதில்லை.

ஆடம்பரமாக கேளிக்கை, உற்சாக பானம், பெண்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நடத்தப்படும் ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு வருமான வரி மற்றும் கேளிக்கை வரி விலக்கு, தமிழில் பெயர் வைக்கப்படும் சினிமாக்களுக்குக் கேளிக்கை வரி விலக்கு! இப்படி ஒருபுறம் அநாவசிய கேளிக்கைகளுக்கு வரி விலக்கு அளிப்பதோடு, அரசு செய்யும் அனைத்து ஊதாரித்தனமான செலவுகளுக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியங்களுக்கும் இந்தக் கடுமையான வரிகளையே அரசு சார்ந்திருக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது.

(தொடரும்… கட்டுரையும் விலைவாசி உயர்வும்தான்!)

அடுத்த பகுதி >>

முக்கியமான மேலதிக தகவல்களுக்கு:

7 Replies to “பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!”

 1. பெட்ரோல் விலை உயர்வு வருகிறது என்பதற்கு “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்பது போல மாண்டேசிங் அலுவாலியா எனும் பொருளாதார ஆலோசகர் இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்னார், பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றப் படாவிட்டால் எண்ணெய் கம்பெனிகள் மூடும் நிலைமை வந்து விடும் என்று . முடிவுகளை எடுத்துக் கொண்டு, மக்களின் நாடிபிடித்துப் பார்ப்பதற்காக காங்கிரசார் செய்யும் ஜாலம் இவை. இந்த கட்டுரை மிக ஆராய்ச்சி செய்து, உண்மை நிலவரங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதெல்லாம் காங்கிரஸ் காரர்களுக்குப் புரியாது. மக்கள் மீது இவர்களுக்கு என்றுமே அக்கறை இருந்ததில்லை. புலி, ஆட்டை அடித்துக் கொல்கிறது சாப்பிட, காங்கிரஸ்காரர்கள், ஐயோ பாவம் புலிக்குத்தான் எத்தனை பசி என்பார்களே தவிர ஐயோ பாவம் ஆடு என இரக்கப்படுவதில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். எத்தனைதான் பளுவை ஏற்றி முதுகில் வைத்தாலும், அடே அப்பா கனக்கிறதே நான் எப்படி சுமப்பேன் என்று இந்தியர்கள் சொல்லுவார்களே தவிர தூக்கி தூர எறிந்து விடும் மன நிலை கிடையாது. காந்தி பிறந்த நாடு அல்லவா? இன்னும் நூறு ரூபாய் அதிகப்படுத்தினாலும் சிறு முணுமுணுப்புதான் நம் இந்திய சகோதரர்களின் பதிலாக இருக்குமே தவிர, கொடுமைக் கார காங்கிரஸ்காரர்களே நீங்கள் ஆண்டது போதும், ஓடிப்போங்கள் என்று தேர்தலில் இவர்களை ஓட ஓட விரட்டியடிக்க மாட்டார்கள். காங்கிரசின் தலைவர்கள் சிதம்பரம், திக்விஜய்சிங், கபில் சிபல், மன்மோகன் சிங், சோனியா ஆகியோரும் இதனை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் ஓரிரு நாட்கள் ஓலமிடுவார்கள் பிறகு அடங்கிப்போய் பெட்ரோல் போட வரிசையில் வந்து நிற்பார்கள். விலை உயர்வு எல்லாம் இந்த கேடு கேட்ட இந்தியர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்ற சிந்தனை உடையவர்கள் அவர்கள். ஆகையால் நடக்கப்போவதும் அவர்கள் எதிர்பார்த்தபடி சில நாட்கள் முணுமுணுப்பு கேட்கும். இடது சாரிகள் ஒரு வாரம் போராட்டம் நடத்துவர். தொழிலாளர்களும், ஏழைகளும் வழாக்கம் போல் தங்கள் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு ஒட்டிக் கொண்டு இருப்பார். 2014 இல் தேர்தல் வரும். காங்கிரசுக்கு எப்படியும் பெரும்பான்மை வரும். மாநிலக் கட்சிகள் பல்லக்கு தூக்க தோள் கொடுக்க முன்வருவார்கள். அப்புறம் என்ன? ஜாலிலோ ஜிம்கானா பாடவேண்டியதுதான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு. புலம்புவோர் புலம்பட்டும், கட்டி அழ விரும்புவோர் கட்டி அழட்டும், எமக்கு ஏற்ற வழி இது வென்றால் புல்டோசர் போல போய்க்கொண்டிருப்போம். இருக்கவே இருக்கிறார்கள் மாநில கட்சித் தலைவர்கள் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்க. பின்னர் நமக்கு வேறென்ன வேண்டும்? நெட்டை மரங்கள் என நின்று புலம்புவோமா? நம் பெட்டை புலம்பல் அவர்கள் காதுகளுக்கு எட்டுமா? அல்லது மோதி மிதித்திடுவோமா? அக்கிரமங்களை ஒழிக்க மாட்டோமா? இவைகளுக்கு பதில் சொல்லுங்கள் இந்திய பெருமக்களே. அப்புறம் பார்க்கலாம் நம் எதிர் காலம் எப்படி இருக்குமென்று.

 2. ஸ்ரீமான் பொதுஜனம் என்ற பெயரில் பத்திரிகைகளில் கார்ட்டூனில் ஒருவர் இருப்பார், எல்லோரும் பார்த்திருக்கிறோம் அல்லவா, அவர் நடுத் தெருவில் நின்று கொண்டு ‘ஒ’வென்று பெருத்த குரலெடுத்து அழுது கொண்டிருந்தார். போவோரும் வருவோரும் கூட்டம் கூடிவிட்டது. ‘ஏன்யா அழறீங்க?” என்றார் ஒருவர். பெட்ரோல் விலை ஏறிப் போச்சுங்கரத்துக்காகவா அழறீங்க? என்றார் மற்றொருவர்.

  அவர் சொன்னார், “இல்லையா! அவுங்க சொன்னாங்க……”

  “யாரு சொன்னாங்க?” மறுபடி ஒருவர்.

  “அவுங்கதான், காங்கிரசுக்காரங்க!”

  “என்ன சொன்னாங்க?”

  “இவன் ரொம்ப நல்லவம்பா, எத்தனை விலை உசத்தினாலும் தாங்கிக்கறான். இவன் ரொம்ப நல்லவம்பா அப்படின்னாங்க. அதை நினைச்சுதான் அழறேன்” என்றார் பொதுஜனம்.

  இது வடிவேலு நகைச்சுவை இல்லை. உண்மை நிலை.

 3. மிகவும் அற்புதமான கட்டுரை. உண்மையிலேயே மன்மோகன் சிங்கும் பிரணாப் முகர்ஜியும் தனியார் எண்ணெய் கம்பெனிகளின் சார்பாக செயல்படுகின்றனர் என்பதை நினைத்தால் அவமானமாக இருக்கிறது. தேசிய பற்றுள்ள நமது அரசியல் தலைவர்கள் இந்த கையாலாகாத மானம் கெட்ட மத்திய அரசை கவிழ்ப்பதற்கு மிகத் தீவிர முயற்சி செய்ய எதற்க்காக காலம் தாழ்த்துகின்றனர் என்பது புரியவில்லை. எவ்வளவு சதி செய்தாலும் இந்த மத்திய அரசை வீழ்த்தியே தீரவேண்டும் என்று உறுதியுடன் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு உடனடியாக இந்த தேசவிரோத மக்கள் விரோத அரசை கவிழ்க்க வேண்டும்.

 4. If BJP increases, it is necessity.. Tamilhindu does not open it’s mouth.

  Do you remember, BJP increased the cooking gas drastically from 165 to 255?

 5. பெட்ரோல் விலையை மிக அதிகமாக உயர்த்தி இருக்கிறார்கள் காங்கிரசு விஷக்கூட்டணியினர். உலகமகா நடிகர் மஞ்சளார் , மத்திய அரசில் இருந்துகொண்டே , பெட்ரோல்விலை உயர்வை எதிர்த்து போராடப்போகிராராம். என்ன கொடுமையோ? இலங்கை தமிழனை நடுத்தெருவில் நிறுத்தி, அங்கு கொடுஞ்சாவுகள் ஏற்படுத்த, முன்னர் இருமணி நேரம் உண்ணா விரதம் இருந்த கூத்தை நாடு அறியும்.

  தமிழ் நாட்டு தமிழருக்கும் அதே இழிநிலை வரும்வரை , மஞ்சளார் மத்திய அரசின் நாற்காலிகளை பிடித்துக்கொண்டு தொங்கினாலும் தொங்குவாறே தவிர, இவரால் தமிழகத்துக்கு மேலும் மேலும் தீங்குகள் தான் நடக்கும். இவர் திருக்குவளை தீயசக்தி என்பதில் ஒன்றும் தவறே இல்லை.

  தமிழ் நாட்டுக்கு மின்சாரம் தர குஜராத் முன்வந்தும் , அந்த மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டுவர, மத்திய அரசு grid இல் இடம் தர மறுக்கிறது. எனவே, தமிழகம் கடுமையான மின்வெட்டில் தவிக்கிறது. இதற்கும் கலைஞரின் சூழ்ச்சியே காரணம். திமுக ஒரு தமிழக விரோத குடும்பம் என்பது மேலும் மேலும் உறுதியாகிறது.

  கடவுள் என்று ஒருவன் இருந்தால், இந்த தீய சக்திகளின் ஆட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் நாள் எந்நாளோ?

 6. ஒரு பக்கம் I P L என்ற கிரிக்கெட் போ(ட்டிகள்.) தை மூலம் விளம்பர பணம் பறித்து வெளி நாட்டுக்கு அனுப்பி நாட்டு பொருளாதரத்தில் சரிவை ஏற்படுத்தி ரூபாய் மதிப்பினை இறக்கி அதை சரிகட்ட மறு pakkam பெட்ரோல் டீஸல் விலைகளை ஏத்தி அப்பாவிகளை வாட்டி வதைக்கிறது மத்திய அரசு .விளம்பர போதையிலிருந்து விடுபட்ட சுதேசி விழிப்புணர்வு தற்போது மிக அவசிய தேவை

 7. If the likes of Pratiba Patil, Meira Kumar and Montek singh Aluvalia restrict theiir dirty travels abroad on daily basis it will save petrol for the common man. Empty Singh (our puppet PM) has to grow a spine for contrliing these parasites.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *