சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்
தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்: ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.
இந்த லட்சியத்துக்காக வாழ்வையே அர்ப்பணிக்க விரதம் பூணுங்கள்:
இது ஒரு நாள் வேலையல்ல. அத்துடன் பாதையும் பயங்கர விஷமயமான முட்களால் நிறைந்ததாகும். ஆனால் பார்த்தனுக்குச் சாரதியாக இருந்தவர் நமக்கும் சாரதியாக இருக்கச் சித்தமாக இருக்கிறார். நமக்கு அது தெரியும். அவருக்காக, அவரிடம் மீளாத நம்பிக்கை பூண்டு, பாரதத்தின் மீது பல சகாப்தங்களாகக் குவிந்து, மேடிட்டு மலைபோல் இருக்கும் துயரங்களைச் சுட்டுப் பொசுக்குங்கள்.
பார்த்தசாரதியின் கோயிலுக்குச் செல்லுங்கள், கோகுலத்து எளிய ஆயர்களின் தோழனான கண்ணனுக்கு முன்னால் சென்று அந்த உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணன் ஏழைகளின், தாழ்ந்த இடையர்களின் நண்பனாக இருந்தான். பறையனான குகனைக் கட்டித் தழுவ (இராமாவதாரத்தில்)அவன் தயங்கவில்லை. புத்தாவதாரமாக அவன் வந்தபோது சீமான்கள் விடுத்த அழைப்பை விட்டுவிட்டு, ஒரு வேசியின் அழைப்பை ஏற்று அவளைக் காப்பாற்றினான். அந்தப் பார்த்தசாரதியின் சன்னிதியில் சென்று தலை தாழ்த்துங்கள்; மகத்தானதொரு தியாகத்தை மேற்கொள்ள அங்கே சங்கற்பம் செய்யுங்கள். யாருக்காக அவர் அவ்வப்பொழுது அவதரிக்கிறாரோ, அந்த ஏழைகள், தாழ்ந்தவர்கள், ஒடுக்கப் பட்டவர்கள் – இவர்களுக்காக உங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிப்பதாகச் சபதம் செய்யுங்கள். அதன்படி நாளுக்கு நாள் தாழ்வுற்று வரும் முப்பது கோடி மக்களை மீட்பதற்காக வாழ்நாள் முழுவதையும் அளித்து விடுங்கள்.
நம்பிக்கை:
சகோதரர்களே! வாருங்கள், நாம் ஏற்றுக் கொண்டுள்ள வேலையின் வடிவத்தை நேருக்கு நேர் பாருங்கள். வேலை மிக மேன்மை வாய்ந்தது. நாம் மிக எளியவர்கள், ஆனால் நாம் தெய்வீக ஒளிச்சுடரின் மைந்தர்கள். இறைவனின் புதல்வர்கள்.
வாழ்க இறைவன் திருநாமம்! நாம் வென்றே தீருவோம். இந்தப் போராட்டத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் மடிந்து வீழ்வார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் வீழ்ந்தவர்களின் இடத்தை நிரப்பி நிற்பார்கள். வெற்றி பெறாமல் நான் மடிந்து போகலாம். வேறொருவர் இந்தப் பெரும்பணியை ஏற்பார்.
வியாதி என்னவென்று உங்களுக்குத் தெரியும்; மருந்தும் தெரியும். நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். பணக்காரர்களென்றும், பெரிய மனிதர்களென்றும் அழைக்கப் படுகிறவர்களின் தயவை நாட வேண்டாம். இதயக் கனிவு இல்லாத, அறிவு படைத்த, இலக்கிய ஆசியர்களையும் அவர்களது ஈவிரக்கமற்ற செய்தித் தாள் கட்டுரைகளையும் பற்றி அக்கறை கொள்ள வேண்டாம். உங்களது உள்ளத்தில் நம்பிக்கையும் அனுதாபமும் – தீச்சுடர் போன்ற நம்பிக்கையும், தீச்சுடர் போன்ற அனுதாப உணர்ச்சியும் – குடிகொள்ளட்டும். நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடமே தன்னம்பிக்கை. பக்தி, பக்தி, இறைவனின் பக்தி! மேன்மை பெறுவதற்கான ரகசியம் இதுதான்.
நசிகேதனின் சிரத்தையுணர்வு உங்கள் உள்ளத்தில் குடிபுகட்டும்:
தன்னம்பிக்கையில்லாதவன் தான் நாஸ்திகன். உபநிடதங்கள் யாவற்றினும் அழகானதான கடோபநிஷத்தைப் படித்தவர்களுக்கு இந்தக் கதை நினைவிருக்கும். அரசன் பெரிய யாகமொன்றைச் செய்து கொண்டிருந்தான். தானமாக நல்ல பொருள்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, உபயோகமற்ற பசுக்களையும் குதிரைகளையும் தானம் கொடுத்துக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் சிரத்தையுணர்வு அரசகுமாரனான நசிகேதனின் உள்ளத்தில் குடிபுகுந்தது. ‘சிரத்தை’ என்ற சொல்லை இங்கே நான் மொழி பெயர்க்கப் போவதில்லை. மொழிபெயர்த்தால் தவறு ஆகி விடும். சிரத்தை என்ற சொல்லுக்கு அற்புதமான பொருள் உண்டு. அதைப் புரிந்து கொள்வது மிக அடிப்படையான தேவை. நசிகேதனின் மனதில் அவ்வுணர்ச்சி எப்படி வேலை செய்கிறதென்று பார்ப்போம். உடனே அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்:
பஹூனாமேமி ப்ரதமோ பஹுனாமேமி மத்யம:
கிம்ஸ்வித் யமஸ்ய கர்த்தவ்யம் யன்மயாத்ய கரிஷ்யதி
(கட உபநிஷத் 1-1-5)
“நான் பலரிலும் மேம்பட்டவன்; எவருக்கும் தாழ்ந்தவனல்லன்; எங்குமே நான் கடைசியல்ல. ஏதாவதொன்றைச் செய்ய முடியும்”.
இந்தத் தைரியம் அவனது மனதில் வளர்ந்தோங்கியது. “மரணம் என்றால் என்ன” என்ற கேள்வி அவன் மனத்திலிருந்தது. அக்கேள்விக்கு விடைகாண அவன் விழைந்தான். யமலோகம் சென்று யமனைக் கேட்டால் தான் அதற்கு மறுமொழி கிடைக்கும். எனவே அங்கும் சென்றான். ஆண்மைமிக்க அந்த நசிகேதன் மரண தேவனின் இல்லத்து வாசலில் மூன்று நாட்கள் காத்திருந்த பின்னர் அவனைச் சந்தித்தான். அதற்கு மேல் அவன் விரும்பிய ஞானத்தை எவ்வாறு பெற்றான் என்பதையெல்லாம் நீங்கள் அறிவீர்கள்.
இந்த சிரத்தையுணர்ச்சி உங்களுக்குள் குடிபுக வேண்டும். மேல்நாட்டு இனத்தவரிடையே காணப்படுகிற உலகாயத சக்தியெல்லாம் இந்த சிரத்தையுணர்வின் பலனாக உண்டானவை தான். அவர்கள் தமது உடல்பலத்தில் நம்பிக்கை வைத்தே இவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறார்கள் என்றால் நீங்கள் உங்களது ஆத்மாவில் நம்பிக்கை கொண்டால் இன்னும் எவ்வளவு அதிகமாக முன்னேற முடியும்!
நான் வேண்டுவது இத்தகைய சிரத்தையுணர்வு தான். நம்மிடையே நமக்கு நம்பிக்கை வேண்டும். நம் அனைவருக்கும் இது வேண்டும். இந்த நம்பிக்கையைப் பெறவேண்டிய பெரும் கடமை உங்களுக்கு உள்ளது. எல்லாவற்றையும் பரிகாசம் பண்ணுவது, எதைப் பற்றியும் முனைந்து சிந்தியாதிருப்பது ஆகிய இந்த நோய் நமது தேசிய இரத்தத்தில் நுழைந்திருக்கிறது. இந்த பயங்கர வியாதியை விட்டுத் தொலையுங்கள். வலிமையுடன் இருங்கள். சிரத்தையுடன் இருங்கள். மற்றவையெல்லாம் தாமாக வந்தடைந்தே தீரும்.
துறவறம்:
வேலையில் ஈடுபடுங்கள், அப்பொழுது உங்களால் தாங்கமுடியாத அளவுக்கு மகத்தான சக்தி உங்களுக்குள் வருவதைக் காண்பீர்கள். பிறருக்காக செய்யப் படுகிற சிறு வேலை கூட நமக்குள்ளிருக்கும் சக்தியை எழுப்பவல்லது. பிறர் நலத்தைப் பற்றி சிறிதளவேனும் சிந்திப்பதனால் படிப்படியாக நமது உள்ளத்தில் சிங்கத்தைப் போன்ற பலம் உண்டாகிறது.
மிக முக்கியமான விஷயம் துறவு. துறவு பூணாமல், பிறருக்காகத் தொண்டாற்றுவதில் தனது முழு உள்ளத்தையும் ஈடுபடுத்த எவராலும் முடியாது. துறவு பூண்டவன் எல்லாரையும் சமமான பார்வையுடன் நோக்கி, அனைவருக்கும் தொண்டாற்றுவதற்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறான்.
தொண்டின் மூலம் வழிபாடு:
வைராக்கியம் பூணுங்கள். மகத்தான் காரியங்களைச் செய்வதற்காக உங்கள் முன்னோர்கள் உலகைத் துறந்தார்கள். தாங்கள் மோட்சமடைவதற்காக உலகைத் துறக்கிற மக்கள் இக்காலத்தில் உண்டு. ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடுங்கள். “நான் மோட்சமடைய வேண்டும்” என்ற விருப்பத்தைக் கூட வீசி எறிந்து விட்டுப் பிறருக்கு உதவி செய்யச் செல்லுங்கள்.
நமது மனத்திலிருந்து வெறும் கடவுளர்கள் இப்பொழுது மறைந்து போகட்டும். நமது சொந்த மக்களினமாகிற கடவுள் மட்டும் தான் இப்பொழுது விழித்துக் கொண்டிருக்கிறார். எங்கு நோக்கினும் அவரது கைகள்; எங்கும் அவரது திருவடிகள்; எங்குமே அவரது காதுகள். எல்லாவற்றையும் வியாபித்து மூடி அவர் நிற்கிறார். நம்மைச் சூழ்ந்து காணப் படும் விராட் புருஷனை வழிபடாமல் வீணான மற்ற தெய்வங்களின் பின்னால் ஏன் போக வேண்டும்? இந்தத் தெய்வத்தை வழிபட்டால், மற்றெல்லாத் தெய்வங்களையும் வழிபட முடியும்.
பிறருக்காதத் தனது உடைமைகள் எல்லாவற்றையும் கைவிடுகிற மனிதனுக்குத் தான் முக்தி கிடைக்கும். “எனது விடுதலை, எனது விடுதலை” என்று இரவுபகலாக முழங்கி மூளையை வருத்திக் கொண்டிருப்பவர்கள், தமது தற்கால க்ஷேமநலனையும் வருங்கால நலனையும் பாழாக்கிக் கொண்டு திரிபவர்கள் ஆவார்கள்.
சித்த சுத்தி தான் தேவை. அதாவது உள்ளத் தூய்மை. அது எப்படி வரும்? அதனை எய்துவதற்காக எல்லா வழிபாடுகளுக்கும் முதலில் செய்யப் படவேண்டியது விராட் புருஷனென்ற கடவுள் வழிபாடு ஆகும். அதாவது நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களை வழிபட வேண்டும். பூஜை செய்ய வேண்டும். வழிபாடு என்பது தான் சரியான சொல்லாகும். ஆங்கில வார்த்தை எதுவும் பயன்படாது. இந்த மக்களும் பிராணிகளும் நமது தெய்வங்களாகும். நாம் முதலில் வழிபடவேண்டிய கடவுள் நமது நாட்டு மக்களே ஆவர்.
துறவும் தொண்டும் உடையவர்களே இன்றைய தேவை:
துறவு, தொண்டு இவை தான் பாரதத்தின் தேசீய லட்சியங்கள் ஆகும். அந்தப் பாதையில் பாரத நாட்டு மக்களின் உணர்ச்சிகளைத் தீவிரப் படுத்துங்கள். மற்றவை தாமே நடக்கும். ஆத்மீகக் கொடியினை இந்த நாட்டில் எவ்வளவு உயரத்தில் ஏற்றினாலும் அது பொருத்தமேயாகும். அதில்தான் நம் நாட்டின் விமோசனம் உள்ளது.
நான் வேண்டுவது இரும்பினை ஒத்த தசை நார்கள். எஃகினையொத்த நரம்புகள். இவற்றினூடே இடியேறு போன்ற வலிமையுள்ள மனம். பலம், ஆண்மை, க்ஷத்திரிய வீர்யம், பிரம்ம தேஜஸ் ஆகிய இவையே நான் வேண்டுவது. நமது அழகான, நம்பிக்கையுள்ள இளைஞர்களிடம் இவையெல்லாம் உள்ளன. ஆனால் லட்சக்கணக்கில் அவர்கள் திருமணம் என்று அழைக்கப் படுகிற பலிமேடையிலே பலியாக்கப் படுகிறார்களே! இறைவனே, எனது ஓலத்துக்குச் செவி சாய்ப்பாயாக.
சில பேர் மட்டும் தனித்து நின்று, இறைவனுக்காக வாழ்ந்து, உலக நன்மைக்காக நமது சமயத்தைப் பாதுகாக்கட்டும். உண்மையில் மாயைகளுக்கு நீ காரணபூதனாக, மூதாதையாக இருந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஜனகரைப் போல இருப்பதாகப் பாசாங்கு பண்ணாதே. (ஜனகர் என்ற சொல்லுக்கு மூதாதை என்று பொருள். இந்தப் பெயர் தாங்கிய மன்னர் தமது மக்களின் நலத்துக்காக அரசாட்சியை நடத்தி வந்த போதும் எல்லாவற்றையும் மனதால் துறந்து விட்டார்). யோக்கியனாக இருந்து கொண்டு, “எனது லட்சியம் எனக்குத் தெரிகிறது. ஆனால் நான் இன்னும் அதனை நெருங்கவில்லை” என்று சொல்லுக. எதையும் நீ துறக்காத போது, துறப்பதாகப் பாசாங்கு பண்ணாதே. ஒரு முறை துறவு பூண்டால் உறுதியாக நில். போரில் உன் தரப்பினர் நூறு பேர்கள் மடிந்து வீழ்ந்தாலும், அவர்களிடமிருந்து கொடியைப் பிடுங்கி உன் கையில் எடுத்துக் கொண்டு முன்னேறிச் செல். யார் வீழ்ந்தாலும் சரி, சத்திய வடிவானவனாக இறைவன் இருக்கிறான்! வீழ்கின்றவன், மற்றொருவனது கையில் கொடியைத் தரட்டும். அவன் அதை ஏந்திச் செல்வான். ஒருபோதும் கொடி கீழே விழாது!
தூய்மையின் காரணமாக உற்சாகத் தீ கொழுந்து விட்டெரிய, இறைவனிடம் குன்றாத பக்தியெனும் கவசமணிந்து, சிங்கத்தின் தைரியம் நரம்புகளில் துடிக்க, நூறாயிரம் ஆண்களும் பெண்களும் முன்வருவார்கள். அவர்களது உள்ளத்தில் ஏழைகளிடமும், தாழ்ந்தோரிடமும், ஒடுக்கப் பட்டவர்களிடமும் கருணை பொங்கும். அவர்கள் நாட்டின் மூலை முடுக்கெங்கும் அலைந்து, முக்திக்கான உபதேசத்தை, ஒருவருக்கொருவர் உதவிபுரிந்து வாழவேண்டும் என்ற உபதேசத்தை, சமூக எழுச்சியின் உபதேசத்தை, சமத்துவத்தின் உபதேசத்தை பிரசாரம் செய்வார்கள்.
இறைவனின் தொண்டர்களாகக் களத்தில் இறங்குங்கள்:
நமது பாரதத் தாய் பல தடவை மயங்கி வீழ்ந்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் பாரதத்தின் மகா பிரபுவான இறைவன் தமது அவதாரங்களின் மூலம் அவளை மூர்ச்சை தெளிவித்திருக்கிறார்.
இறந்தவர்கள் மீள்வதில்லை. கழிந்த இரவு திரும்புவதில்லை; எழுந்து ம்றைந்த அலை புதிதாக மீண்டெழுவதில்லை. அது போலவே மனிதன் ஒரே உடலில் மீண்டும் வசிக்க வருவதில்லை. ஆகையால் மாந்தர்களே! செத்தொழிந்த பழமையை வழிபடுவதை விடுத்து உயிருடனிருக்கும் இக்காலத்தை வழிபட உங்களை நாம் அழைக்கிறோம். நடந்து போன செயல்களைப் பற்றிச் சிந்தித்து சிந்தை கலங்கி வருந்துவதை விட்டுவிட்டு, இக்கால நடவடிக்கைகளில் ஈடுபட அழைக்கிறோம். இழந்து போன, இடிந்து தகர்ந்து போன பாதைகளைத் தேடிக் கண்டு பிடிப்பதில் சக்தியை வீணடிப்பதை விடுத்து, அருகிலே உள்ள அகலமான, புதிய நெடுவழிப் பாதைக்கு வருமாறு உங்களைத் திருப்பி அழைக்கிறோம். அறிவுள்ளவன் எவனோ அவன் புரிந்து கொள்ளட்டும்.
அந்த மகாசக்தியின் முதல் துடிதுடிப்பின் மூலம் உலகின் திக்கெட்டிலும் தூரத்து எதிரொலிகள் எழுந்துள்ளன என்றால், அந்த சக்தி முழுமைபெற்றுக் காட்சி தரும் பெருநிலையைக் கற்பனை செய்து பாருங்கள். அடிமைப்பட்ட மக்களிடம் இருக்கக் கூடிய இழிகுணங்களான அர்த்தமற்ற தவறான கருத்துக்களையும், பலவீனத்தையும் பொறாமையையும் ஒழித்துக்கட்டி விட்டு வாருங்கள். இந்தப் புதிய தெய்வீக அமைப்பாகிற சக்கரம் சுழலுவதற்குத் துணை புரியுங்கள்.
“நாங்கள் இறைவனின் தொண்டர்கள்; அவரது புதல்வர்கள்; அவரது விருப்பங்களை ஈடேற்றுவதில் துணை புரிகிறவர்கள்” என்ற திட நம்பிக்கை, பணிபுரியும் களத்தில் புகும்போது உங்களது உள்ளத்தில் உறுதியாக வேரூன்றி இருக்கட்டும்!
(தொடரும்)
சிறப்பாக செயல்படும் தமிழ் இந்து ஏன் மற்ற மொழிகளும் தொடங்கி செயல்
படக்கூடாது ? இது காலத்தின் கட்டாயம் . தயவு செய்து இதை ஒரு வேண்டுதலாக எடுத்துக்கொண்டு ஆவன செய்ய கேட்டுகொள்கிறேன் மிக்க நன்றி. வணக்கம்
//எல்லாவற்றையும் பரிகாசம் பண்ணுவது, எதைப் பற்றியும் முனைந்து சிந்தியாதிருப்பது ஆகிய இந்த நோய் நமது தேசிய இரத்தத்தில் நுழைந்திருக்கிறது. இந்த பயங்கர வியாதியை விட்டுத் தொலையுங்கள். வலிமையுடன் இருங்கள். சிரத்தையுடன் இருங்கள். மற்றவையெல்லாம் தாமாக வந்தடைந்தே தீரும்.//
//அடிமைப்பட்ட மக்களிடம் இருக்கக் கூடிய இழிகுணங்களான அர்த்தமற்ற தவறான கருத்துக்களையும், பலவீனத்தையும் பொறாமையையும் ஒழித்துக்கட்டி விட்டு வாருங்கள். இந்தப் புதிய தெய்வீக அமைப்பாகிற சக்கரம் சுழலுவதற்குத் துணை புரியுங்கள்.//
ஆசிரியர் குழுவுக்கு நன்றி. ஸ்வாமி விவேகனந்தருடைய ஆக்கங்களை அழகாக வெளியிட்டு நம் மக்களுக்கு நன்மை செய்கிறீர்கள்.