சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்
தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்: ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.
களத்தைத் தயாரித்தல்:
நமது மானிட இனத்தைப் படைத்து, நிலைக்கச் செய்து, காத்து வருபவராகவும், நம் முன்னோர்களின் தெய்வமாகவும் விளங்கிய அந்தப் பரம்பொருள், அவரை விஷ்ணு, சிவன் , சக்தி என்றோ கணபதி என்றோ எப்படி அழைத்தாலும், உருவ ( சகுண )மாக அல்லது உருவமற்ற (நிர்குணமான) தாக எப்படி வழிபட்டாலும், “ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி” – “பரம்பொருள் ஒன்றே, மகான்கள் அவரைப் பல பெயர்களால் அழைக்கின்றனர்” என்று நம் முன்னோர்கள் தெளிந்து கூறிய அந்தப் பரம்பொருள் எல்லையில்லாப் பெருங்கருணையுடன் நம் முன்னே நீக்கமற நிறைந்து, நம் மீது பேரருளைப் பொழியட்டும்! நாம் ஒருவரை ஒருவர் சரிவர அறிந்துணரவும், ஒருவருக்காக ஒருவர் உண்மை அன்போடு தொண்டு செய்யவும், உண்மையிடத்தே பேரன்பு கொள்ளவும் செய்யட்டும்! பாரதத்தின் புனர் நிர்மாணம் என்கிற இந்த மகத்தான பணியில் நம்மில் யாருக்குச் சொந்தப் புகழையோ சொந்த கௌரவத்தையோ சொந்த அனுகூலத்தையோ சிறிதும் சிந்திக்காதிருக்க அருள்பாலிக்கட்டும்.
நம் நிலையை உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்:
மிகப் பழங்காலத்தில் நம்நாடு ஆத்மீகத்துறையில் அபாரமாக முன்னேறிற்று. அந்தப் பண்டைய வரலாற்றை இன்று நம் மனக்கண் முன் கொண்டு வருவோம். ஆனால் நெடுநாட்களுக்கு முன்னர் இருந்த உயர்நிலையைப் பற்றித் தியானம் செய்வதில் பெரும் அபாயமும் உள்ளது. அதாவது நாம் புதியன பெறுவதற்கு உழைத்துக் கஷ்டப்படாமலிருந்து விடக்க்கூடும். மூதாதையர்களின் கழிந்து போன புகழ், பெருமையைப் பற்றி நினைத்துச் சோம்பிக் கிடந்து திருப்தியடைந்து விடலாம்; பெருமையடித்துக் கொண்டிருந்து விடலாம். அதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளவேண்டும்.
பாரதத்தினிடம் எனக்கு எவ்வளவுதான் அன்பிருந்தாலும், எவ்வளவுதான் தேசபக்தியிருந்தாலும், முந்தையர்களிடம் எவ்வளவுதான் மதிப்பு இருந்தாலும் கூட, நாம் மற்ற நாடுகளிடமிருந்து பல விஷயங்களைக் கற்கவே வேண்டும் என்பதை என்னால் எண்ணாமலிருக்க முடியாது. எல்லோருடைய காலின் கீழும் அமர்ந்து கற்க நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். ஏனெனில் கவனித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் நமக்குப் பெரும் பாடங்களைக் கற்பிக்க முடியும். அதே சமயத்தில் உலகத்துக்கு நாமும் மகத்தான ஒரு பாடத்தைக் கற்பிக்க வேண்டுமென்பதையும் நாம் மறக்கக் கூடாது.
பாரதத்துக்கு வெளியே உள்ள உலகத்தின் தொடர்பு இன்றி நாம் எதுவும் செய்ய முடியாது; செய்ய முடியும் என நினைத்து நமது பேதைமை. அதற்குத் தண்டனையாக ஆயிரமாண்டுகள் அடிமையாகக் கிடந்தோம். நாம் நமது நாட்டுக்கு வெளியே சென்று உலக நாடுகளுடன் நமது நிலையை ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. நம்மைச் சுற்றி உலகெங்கும் நடக்கும் பலவிதமான வேலைகளை நாம் கவனிக்கவில்லை. பாரதத்தின் உள்ளம் தாழ்வுற்றதற்கு இது முக்கியமான ஒரு காரணம். இதற்கான தண்டனையை அனுபவித்து விட்டோம். இனிமேலாவது அவ்வாறு செய்யாமலிருப்போம்.
பாரதீயர்கள் நாட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்பது போன்ற அறிவீனமான கருத்துக்கள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமான எண்ணங்கள். “ நீ அதிகமாக வெளியில் சென்று உலக நாடுகளிடையே பிரயாணம் செய்து வந்தால் அது உனக்கும் உனது நாட்டுக்கும் நல்லது” என்ற விஷயத்தை மூளையிற் பதிய வைக்க வேண்டும். இதனைக் கடந்த பல நூற்றாண்டுகளில் செய்திருந்தால் நாம் இன்றுபோல், பாரதத்தை ஆள விரும்புகிற ஒவ்வொரு நாட்டின் காலின் கீழும் கிடந்திருக்க மாட்டோம்.
வாழவேண்டுமாயின் விரிவு கொள்ள வேண்டும்:
உயிருள்ள பொருள் வளர்ந்து பெருகும். உயிர் இருப்பதற்கு முதல் அறிகுறி அது. நீ விரிவடைவதை நிறுத்தினால், அந்தக் கணமே மரணம் உன்னைத் தாக்கும். அபாயம் உன்னைத் தாக்க விருக்கிறது. நான் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போயிருந்தேன்; நான் போக வேண்டியிருந்தது; ஏனெனில் விரிவு பெறுவது தேசீய வாழ்க்கையினுடைய மறுமலர்ச்சிக்கு முதற் சின்னமாகும். இவ்வாறு மறுமலர்ச்சியடந்துவரும் தெசீய வாழ்க்கை, உள்ளே வளர்ந்து பெருகி, என்னை வெளியே போகச் செய்தது. ஆயிரக்கணக்கானவர்களை அது போலவே வெளியே போகச் செய்ய வேண்டும். நான் கூறுவதைக் கவனியுங்கள். இந்த நாட்டில் உயிர் இருக்கின்றதென்றால் நான் கூறுவது போல நடந்தே தீர வேண்டும். ஆதலால் இந்தப் பிரச்னை தேசீய வாழ்க்கையின் மறுமலர்ச்சிக்கு மிகப் பெரியதோர் அறிகுறியாகும். இந்த விஸ்தரிப்பின் மூலம் உலக ஞானமென்னும் பொது நிதிக்கு நமது பங்கினை, உலகப் பொது உயர்வுக்கு நமது பங்கினைச் சேர்த்துவிட முடியும். வெளிநாடுகளுக்குச் செல்லத்தான் வேண்டும்.
அன்றியும் இது புது விஷயமல்ல; ஹிந்துக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எப்பொழுதும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே அடைபட்டுத்தான் கிடந்தார்கள் என்று நினைத்தால், அது தவறு. பழைய நூல்களை ஆராயவில்லை. இந்த மக்களினத்தின் வரலாற்றைச் சரியாக அறியவில்லை.
நீங்கள் உங்கள் வாழ்வை வழங்கினால், நீங்கள் வாழ்வு பெறலாம்:
ஒவ்வொரு தேசமும் உயிர்வாழ வேண்டுமாயின் கொடுக்கவேண்டும். நீங்கள் உங்களது உயிரைக் கொடுத்தால் உங்களுக்கு உயிர் கிடைக்கும். உங்களுக்கு ஏதாவது ஒன்று கிடைத்தால் மற்ற அனைவருக்கும் கொடுப்பதன் முலம். நீங்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும். நாம் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக உயிர் வாழ்கிறோம் என்ற உண்மை நம் எதிரில் நிற்கிறது. அதற்குக் காரணம், அறிவீனர்கள் எப்படிச் சொன்னாலும், சரியான காரணம் – நாம் எப்பொழுதும் உலகுக்கு வாரிவழங்கிக் கொண்டிருப்பதுதான். ஆனால் பாரதம் அளித்த பரிசு சமயம், தத்துவஞானம், தெய்வீக அறிவு, ஆத்மீக ஞானம், இவைதான். ஆகவே நாம் வெளியே செல்ல வேண்டும். நமது ஆத்மீகத்துக்குப் பண்டமாற்றாக அவர்கள் நமக்குத் தரக்கூடியவற்றைப் பெற்றுவர வேண்டும். ஆத்மீகத்துறையிலுள்ள அதிசயங்களை அவர்களுக்குக் கொடுத்து, பௌதிகத்துறையிலுள்ள அதிசயங்களைப் பெற்று வருவோம். எப்பொழுதுமே நாம் மாணவர்களாக இருப்போம். சமத்துவம் இல்லையேல் நட்பு இராது. ஒரு சாரார் எப்பொழுதுமே ஆசிரியர்களாக இருந்து கொண்டு, மறுதரப்பினர் எப்பொழுதும் அவர்களது காலடியின் கீழ் உட்கார்ந்திருந்தால் சமத்துவம் ஏற்பட முடியாது. ஆங்கிலேயருக்கோ, அமெரிக்கருக்கோ சமமாக ஆக நீங்கள் விரும்பினால் நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கவும், அவர்களிடமிருந்து கற்கவும் வேண்டும். வரப்போகிற பல நூற்றாண்டுகளுக்கு அவர்களுக்குக் கற்பிப்பதற்கு உங்களிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன.
மேலைநாடுகளிடலிருந்து பல விஷயங்கள் கற்க வேண்டும்:
நாம் உயர வேண்டுமானால் மேலை நாடுகளிலிருந்தும் பல விஷயங்களைக் கற்க வேண்டுமென்ற நினைவு நமக்கு இருக்க வேண்டும். மேலைநாடுகளின் கலைகளையும், விஞ்ஞானங்களையும் கற்க வேண்டும்.
உலகுக்குக் கற்பிக்க வேண்டியது இந்த ஆத்மீகத் தத்துவம்தான். ஓரளவுக்கு நாம் உலகாயத, பௌதிக அறிவில் சிறிது மேம்பட வேண்டும். மக்களை ஒன்றுபடுத்தி இணைக்கும் திறமை, சக்திகளைக் கையாளும் திறமை, சக்திகளை ஒழுங்குற அமைத்துக் கோப்பது, சிறு விஷயங்களைக் கொண்டு மகத்தான லாபங்களை அடைவது இவற்றை இன்னும் கொஞ்சம் கற்க வேண்டும்.
பிறரைப் போல நடிப்பது நாகரிகமாகாது:
மற்றவர்களைப் பின்பற்றி நடிப்பது நாகரிகப் பண்பு ஆகாது. நாம் நினைவிற்கொள்ள வேண்டிய மற்றொரு பெரிய பாடம் இது. நான் ஓர் அரசனைப்போல உடையுடுத்தி என்னை அலங்கரித்துக் கொள்ளலாம். அதனால் அரசனாகி விடுவேனா? சிங்கத்தின் தோல் போர்த்த கழுதை சிங்கமாகிவிடாது. கோழைத்தனமாகப் பிறர் போல் நடிப்பது அவர்களைப் பின்பற்றுவது, ஒருநாளும் முன்னேற்றத்தைத் தராது. ஒரு மனிதனின் பயங்கரத்தாழ்வுக்கு அது கண்கூடான அறிகுறியாகும். ஒரு மனிதன் தன்னையே வெறுக்கத் தொடங்கி விட்டான் என்றால் அவன் ஒழிந்து போனான் என்று கொள்க.
ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்க:
ஒருவன் தனது முன்னோர்களைப் பற்றி அவமானப்படுவானாயின் அவனுக்கு முடிவு காலம் வந்துவிட்டது. ஹிந்து இனத்தில் நான் மிகச் சார்ஹாரண மனிதந்தான். ஆனாலும் நான் எனது இனத்தைப் பற்றிப் பெருமைப்படுகின்றேன். (என்னை ஹிந்து என அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்). உங்களுடைய தகுதியற்ற தாழ்ந்த ஊழியர்களில் ஒருவன் என்று நான் பெருமைப்படுகிறேன். முனிவர்களின் பரம்பரையினரான, உலகம் கண்ட மகரிஷிகளிடையே மிக கீர்த்தி வாய்ந்த ரிஷிகளின் சந்ததியினரான உங்களுடன் கூட இந்த நாட்டில் பிறந்திருக்கிரேன் என்று பெருமையடைகிறேன்.
பிறரிடமிருந்து நாம் கற்கலாம்: ஆனால் நமது முறைக்குத் தகுந்தவாறு அதனை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்:
ஆகவே உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்கட்டும். உங்களது முன்னோர்களைப் பற்றி அவமானமடைவதற்கு மாறாகப் பெருமையடையுங்கள். பிறரைப் பின்பற்றி ஒரு போதும் நடிக்காதீர்கள். நீங்கள் பிறருடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்போதெல்லாம் உங்களது சுதந்திரத்தை இழந்து விடுகிறீர்கள். ஆத்மீக விஷயங்களில் கூட மற்றவர்களின் உத்தரவை எதிர்பார்த்து அதற்கு உட்பட்டு நடப்பீர்களானால் மெல்ல மெல்ல எல்லாத் திறமைகளையும் சுயசிந்தனைச் சக்தியையும் கூட இழந்து விடுவீர்கள். உங்களுக்குள்ளே மறைந்து கிடக்கும் ஆற்றல்களை உங்களது சொந்த முயற்சியால் வெளிக்கொணர முயலுங்கள். ஆனால் எவரையும் பார்த்து நடிக்காமல் அவர்களிடம் உள்ள நல்லதை மாத்திரம் அவசியம் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களிடமிருந்து கற்க வேண்டியவை நிறைய உள்ளன.
ஒரு விதையை நிலத்தில் விதைக்கிறோம். அதற்கு உணவாக ஏராளமான தண்ணீரும், மண்ணும், காற்றும் ஏற்பாடு செய்கிறோம். விதை செடியாகி, பெரிய மரமென ஆகும்பொழுது அது மண்ணாக ஆகிறதா? இப்படி எந்த ஒன்றாகவும் அது ஆவதில்லை. தன்னுடைய இயல்பின்படி அது வளர்ந்து தனக்குத் தரப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் சத்துப் பொருளாக உள்ளதை ஏற்றுப் பிரம்மாண்டமான மரமாகத்தான் ஆகிறது. நீங்களும் அதுபோலவே ஆகுங்கள்.
யாரிடமேனும் நல்ல விஷயங்களைக் கற்கலாம்:
பிறரிடமிருந்து பல விஷயங்களை நாம் கற்க வேண்டும். ஆம்: கற்க மறுப்பவன் செத்தவனாகி விட்டான் எனக் கொள்க.
“அததீத பராம் வித்யாம் ப்ரயத்னாதவராதபி
அந்த்யாதபி பரம் தர்மம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி “ (மனு 2.238)
”மாணிக்கத்தை நிகர்த்த பெண்மணி தாழ்ந்த ஜாதியில் தோன்றினாலும் அவளை உன் மனைவியாகக் கொள்வாயாக: தாழ்குடிப் பிறந்த ஞானியிடமிருந்தாவது, உயர்ந்த ஞானத்தை, அவரது திருவடிகளில் சேவை செய்து பெறுவாயாக; சண்டாளனிடமிருந்தேனும், முக்திக்கு மார்க்கத்தை அவருக்குத் தொண்டு செய்து பெறுவாயாக” என்று நமது மனு கூறியுள்ளார்.
பிறரிடமிருந்து நல்லன அனைத்தயும் கற்போம். ஆனால் உங்களது சொந்த இயல்புக்குத் தகுந்தபடி அவற்றைக் கிரகித்துச் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களைப் போல் மாறிவிடாதீர்கள். இந்தப் பாரதீய வாழ்க்கையின் இயல்பு முறையிலிருந்து வெளியே இழுக்கப்படாமலிருங்கள்; பாரதீயர்கள் அனைவரும் வேற்று இனத்தவரைப் போல உண்டு, உடுத்து, நடந்தால், அது பாரத் நாட்டுக்கு நன்மை செய்யுமென்று ஒரு கணமும் நினைக்காதீர்கள்.
வாழ்க்கை அருவி தங்கு தடையின்றி ஓடிப் பெருகட்டும்:
சமீப வருடங்களில் ஏற்பட்ட பழக்கமாயினும் அதை விட்டு விடுவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களது உதிரத்தில் இந்தச் சிறப்பான, குறிப்பான, தேசீய வாழ்க்கை முறை எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைக் கடவுள்தான் அறிவார். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடைய தேசீய வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட ரீதியில் போய்க்கொண்டிருக்கிறது. இம்மாபெரும் நதி அனேகமாகக் கடலுடன் கலக்குமிடத்திற்கு அருகில் உள்ளது. இந்தப் பெரு நதி தனது உற்பத்தி ஸ்தானமான இமயத்தின் பனி மூடிய சிகரங்களுக்கே திரும்பிப் போக வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது நடவாது. அவ்வாறு நடக்க வேண்டும் என்று முயன்றால் அது குலைந்து தான் போகும்.
ஆதலால் நமது தேசத்தின் ஜீவசக்தியை அதன் போக்கில் போகும்படி விடுங்கள். அந்தப் பெருநதியின் பெருக்கைத் தடுக்கும் தடைகளை அகற்றி விடுங்கள். அதன் படுகைகளையும், வழிமடைகளையும் அடைத்துக் கொண்டிருக்கும் அசுத்தங்களை நீக்கித் தூய்மைப் படுத்துங்கள். அதற்கு மேல் அந்த ஆறு தனக்கே உரியதான இயற்கை வீறுடன் குதித்துப் பாய்ந்து ஓடும். நாடு செழித்தோங்கித் தழைக்கும்.
பாரதீயர்களாகிய நம்மீது ஏராளமான அந்நியக் கருத்துக்கள் படையெடுத்துப் புகுந்துள்ளன. அவை நமது தேசீய சமயத்தின் ஜீவ நாடியையே அரித்துத் தின்று வருகின்றன. இன்று நாம் ஏன் இவ்வளவு பிற்போக்கானவர்களாக இருக்கிறோம்? நம்மில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர்கள் வெளிநாட்டுக் கருத்துக்களாலும், சக்திகளாலும் உருவாக்கப்பட்டிருப்பது ஏன்? உலகநாடுகளின் மதிப்பில் நாம் உயர வேண்டும் என்றால் இந்த இழிநிலையைத் தூர விரட்டி ஓட்ட வேண்டும்.
(தொடரும்.)
”சென்றிடுவீர் எட்டு திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொண்ர்திங்கு சேர்ப்பீர்” என்றான் பாரதி. அக ஒழுக்கம் நம்மிடம் நிறைய இருக்கிறது… புற ஒழுக்கம் மற்றோரிடம் நிறைய இருக்கிறது. இவைகளும் கற்பித்தும் கற்றும் இருக்கப் பட வேண்டும். இதைத் தான் நமது கடமைகளாக சுவாமி சொல்கிறார். நம்மின் குறை; எல்லாம் தெரிந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டு இறுமாப்பாய் இருந்துக் கொண்டு அவசியத்தை பிறரிடம் கற்றுக் கொள்ளாது விடுவது அல்லது எதுமே தெரியாது என்று அப்படியே சரணாகதி அடைவது… அதுகூடப் பரவாயில்லை, சுவாமி சொல்வது போல் அவர்களைப் போல் முகத்திலும், முடியிலும் சாயம் பூசுவதும், அவர்களைப் போல் கழுத்துச் சுருக்கொடு உடை உடுத்துவதும், அவர்களைப் போல் ஆங்கிலம் பேசுவதும் மாத்திரமே செய்து கொண்டு சுயத்தை மறந்து…. அவர்களாக வேஷம் போட்டு நடிப்பதே நமது பெரும்பாலோரின் வேலையாக இருக்கிறது. ஆங்கிலம் என்பது அவர்களின் தாய் மொழி, அதை அந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு சாதாரணனும் சௌகரியமாகப் பேசுவான், அப்படி இருக்க, அதைப் பேச பழகிய (வாய்ப்புக் கிடைத்து) நம் மக்களைக் கூட பெரிதாக தாங்கி, பெரிய அறிவாளிகளாகத் தாங்கும் குருட்டுத் தனம் இன்னும் நம்மிடம் இருப்பது மேற்கூறிய வேஷம் தரிப்பதில் இருக்கும் ஆர்வத்தையேக் காண்பிக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை.
சுயத்தை விடாமல் அவசியமான அறிவியலைக் கற்றுக் கொள்ள வேண்டும்…. அதே நேரம் மானுட ஜன்ம மகிழ்ச்சிக்கு அருமருந்தான அருளியலை இறைவன் நம் முப்பாட்டன்கள் வழியே நமக்குத் தந்தவற்றை நாம் அனைவருக்கும் தந்து இந்த பாரை மகிழ்ச்சியிலும் ஆழ்த்த வேண்டும். அதாவது கலியுகத்தை விரட்டி அடிக்க பாரதீயர்களின் கடமைகளான மெஞ்ஞானத்தை இந்த உலகிற்கும் அளிக்க வேண்டும் என்பதே இந்த பெரியோரின் ஆவல் அதுவே இறைவனின் ஏற்பாடு.
மகாகவி சொன்னது போல்…
” ……………….. அதை
இந்தியா இந்த உலகிற்களிக்கும்
ஆம், உலகிற்கு அளிக்கும்,
ஆம்,ஆம், உலகிற்கு அளிக்கும்
ஆம்,ஆம்,ஆம் உலகிற்கு அளிக்கும்” என்றே
தீர்க்கமாக சொல்லி விட்டு சென்றிருப்பதை நாம் எல்லோரும் நினைவில் கொண்டே செயலாற்றவேண்டும் என்பதையும் மறக்க இயலாது. அற்புதமான அவசியமான சத்தியமான நல்லுரை இவைகள் பட்டி தொட்டியெல்லாம் பரவ வேண்டும்… நமது அணு விஞ்ஞானத் தந்தை அப்துல் கலாம் அவர்கள் சொன்னது போல் எந்தத் துறை மாணவன் என்றாலும் ஒவ்வொருவனும் ஒரு தொழில் கல்வியைப் பாடமாகப் படிக்க வேண்டும்…
அப்படிப் படிக்கும் பொது அறிவியல் சிந்தனை யாவரிலும் விரைந்துப் பரவும். அப்போது சமூகத்தில் விஞ்ஞான முன்னேற்றத்தில் ஒருப் பெரும் தாக்கம் ஏற்படும்… ஒவ்வொரு இந்திய இளைஞனும் உலகம் முழுவதும் பயணிக்க ஒரு வழி பிறக்கும். அப்போது தான் இந்த பெரியோரின் கனவுகளும் நினைவாகும். இன்னமும் பலம் பெருமையை மட்டுமே பேசிக் கொண்டும் பழைய ஏற்றத் தாழ்வுகளை மாத்திரமே அசை போட்டுக் கொண்டு அதன் காரணம் நீயா நான் என்று வாதிட்டுக் கொண்டும், செத்து சுண்ணாம்பைப் போன பழைய வாழ்வு முறையை கிளப்பி, வெட்டி பேச்சில் பொழுதை வீணடித்துக் கொண்டும் மூலையிலே இருக்கிறது இந்தியா…
நம் கண் முன்னமே கூட இல்லை, சிந்தனைக்கு எட்டிய தூரத்தையும் தாண்டி உலகம் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஆனால் உளவியல் மருத்துவர்களாகிய நாமோ இங்கேயே உறங்கிக் கொண்டிருக்கிறோம்….
விழித்தெழ வேண்டும்.. வீறுபெற வேண்டும்… கருத்தில் ஒன்றுபட வேண்டும்…. கடமையை கருத்தாகக் கொண்டு உயர நம் இளைய பாரதத்தினை ஆயத்தப் படுத்த வேண்டும் அந்தக் காலம் மிக அருகில் இருப்பதாகவே தோன்றுகிறது.
நல்லப் பதிவு, இதன் தாக்கம் எனது சிந்தையை சிறிது தட்டியது.
நன்றி, வணக்கம்.