எழுமின் விழிமின் – 13

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

பாரதம் உயர்த்தப் படுவது ஊனுடம்பின் பலத்தால் அல்ல; ஆத்மாவின் பலத்தாலேயே. அழிவுக் கொடியால் அல்ல; அமைதி, அன்பு ஆகியவற்றின் கொடியால், சந்நியாசியின் துவர் ஆடையால் உயர்த்தப்படும்.

உனக்குள்ளே உறைந்திருக்கும் தெய்வீக சக்தியை வெளியே அழை. அது பசி, தாகம், வெப்பம், குளிர் இவற்றை நீ சுகிக்கத் துணை புரியும். சுகவசதி நிரம்பிய வீடுகளில் உட்கார்ந்து கொண்டு வாழ்க்கையிலுள்ள எல்லாச் சௌகரியங்களாலும் சூழப்பட்டு, பண்படாத சமயத்தைப் பற்றிச் சிறிதளவு பிறருக்கு உபதேசம் செய்தல் மற்ற நாடுகளுக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் பாரதத்துக்குப் பிறரைவிட உண்மையான உள்ளுணர்ச்சி இருக்கிறது. இயற்கையாக அமைந்த உள்ளுணர்வினால் அது போலி முகமூடிகளைக் கண்டுபிடித்து விடுகிறது. நீ தியாகம் செய்ய வேண்டும். உயர்ந்தோனாக இரு. தியாகத்தாலன்றி பெரிய காரியங்களைச் செய்ய முடியாது.

உங்களது சுக சௌகரியங்கள், உங்களது இன்பங்கள், உங்களது பெயர், புகழ், பதவி, அல்லது உங்கள் உயிர் ஆகியவற்றையே சமர்ப்பணம் செய்யுங்கள். மனிதர்களாகிய சங்கிலித் தொடரைக் கொண்ட ஒரு பாலத்தை உண்டு பண்ணுங்கள். அவற்றின் மீது நடந்து லட்சக்கணக்கானவர்கள் இந்த வாழ்க்கைக் கடலைக் கடப்பார்கள்.

நல்ல சக்திகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துத் திரட்டுங்கள். எந்தக் கொடியின்கீழ் அணிவகுத்துச் செல்கிறீர்கள் என்பது பற்றிக் கவலைப்பட வேண்டாம். உங்கள் கொடியின் நிறம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிக் கவலைப்படாதீர்கள். பச்சையோ, நீலமோ, சிவப்போ எல்லா நிறங்களையும் சேர்த்துக் குழைத்து அன்பின் நிறமான தீவிர வெண்மை ஒளியை உண்டாக்குங்கள். பணி புரிவதே நம் கடன். பலன்களைப் பற்றிக் கவலை வேண்டாம். அது தானே வந்தெய்தும். என்னால் வருங்காலத்துக்குள் நுழைந்து பார்க்க முடியாது. அதற்காகக் கவலைப்படவுமில்லை. ஆனால் ஒரு காட்சி உயிருள்ளதைப் போல் ஜீவசக்தியுடன் கூடியதாகத் தெளிவாக என்முன் உள்ளது. அதுதான் புராதனமான அன்னை மீண்டும் எழுந்து விட்ட காட்சி. புத்துயிர் பெற்றவளாக, இதற்குமுன் இருந்ததைவிட மிகுந்த புகழ்ப் பொலிவுடன் தனது சிங்காதனத்தில் வீற்றிருக்கிறாள். அமைதியும் ஆசியும் கலந்த குரலுடன் உலகனைத்துக்கும்  அவளைப் பிரகடனம் செய்க.

உண்மையான சீர்திருத்தவாதிக்குத் தேவையான மூன்று முதல் தேவைகள்.

முதலாவது: மனப்பூர்வமாக உணர்ச்சி கொள்:

நீ உண்மையான சீர்திருத்தவாதி என ஆக விரும்பினால் மூன்று பொருட்கள் தேவையாகின்றன.

முதலாவது, இதயத்திலிருந்து எழும் உணர்ச்சி தேவை. அறிவிலோ புத்தியிலோ என்ன இருக்கிறது? சில அடி தூரம் அது நடந்து சென்றுவிட்டு அங்கேயே நின்று விடுகிறது. ஆனால் இதயத்திலிருந்து தெய்வீக உணர்ச்சி வருகிறது. மிக மிக முக்கியமானது உள்ளம்தான். இறைவனை உள்ளத்தின் மூலமாகத்தான் தரிசிக்க முடியுமேயன்றி அறிவின் மூலமாக அல்ல. அறிவு என்பது தாம் போகும் பாதையைச் சுத்தம் செய்யும் ஒரு சாதாரணக் கருவிதான். நமக்காகப் பாதையை அது தூய்மைப்படுத்துகிறது. அது போலீஸ்காரனைப் போன்றது. இரண்டாந்தர வேலைக்காரன். ஆனால், சமூக வேலை செய்வதற்குப் போலீஸ்காரன் அத்தியாவசியத் தேவை அல்ல. அவன் ஒழுங்கீனங்களை நிறுத்தித் தவறு நடப்பதைத் தடுக்கிறான். அறிவிலிருந்து தேவைப்படுகிற வேலை அவ்வளவேதான்; அறிவு ஒரு குருடு. தானாக அதனால் நகர முடியாது. அதற்குக் கைகளோ கால்களோ இல்லை. உணர்ச்சி தான் வேலை செய்கிறது. மின்சாரத்தை விட அல்லது வேறொன்றைவிட மிக அபாரமான வேகத்துடன் அது வேலை செய்கிறது. இதனை நீ இதயப் பூர்வமாக உணருகிறாயா? அதுதான் கேள்வி.

அறிவு தேவைதான். அது இல்லையேல் நாம் மோசமான தவறுகளில் வீழ்ந்து, எல்லாவிதமான பிழைகளையும் செய்வோம். அறிவு தவறுகளைத்  தடுக்கிறது. ஆனால் அதற்கு மேலே, அறிவின் அடிப்படையில் வேறு எதனையும் நிர்மாணித்து விட வேண்டாம். அது செயலற்றது. இரண்டாந்தர உதவிதான் அது. உண்மையான உதவி செய்வன உணர்ச்சியும் அன்புமே.

திறக்கவே முடியாத கதவுகளை அன்பு திறந்து விடுகிறது:

திறக்கவே முடியாத கதவுகளை அன்பு திறந்து விடுகிறது. எனது வருங்காலச் சீர்திருத்தக்காரர்களே!  வருங்கால தேசபக்தர்களே!  நீங்கள் உண்மையான உணர்ச்சி கொண்டிருக்கிறீர்களா?  தேவர்கள், முனிவர்கள் இவர்களின் சந்ததிகளான கோடானு கோடி மக்கள் மிருகங்களினின்றும் அதிக வேற்றுமையில்லாமல் வாழ்கிறார்கள் என்பதை உணர்கிறீர்களா?  கோடிக்கணக்கான மக்கள் இன்று பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும், லட்சக்கணக்கானவர்கள் பல்லாண்டுகளாகவே பட்டினி கிடந்து வருகிறார்கள் என்பதையும் உணர்ந்திருக்கிறீர்களா? அறியாமை எனும் இருண்ட மேகம் இந்நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணர்கிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து, உங்களுக்குத் தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா? அது உங்கள் குருதியில் கலந்து, இரத்தக் குழாய்களில் ஓடி, இதயத் துடிப்போடு சேர்ந்து துடிக்கிறதா?  ஏறக்குறைய அவ்வுணர்ச்சி உங்களைப் பைத்தியமாகவே ஆக்கிவிடுகிறதா? இந்தப் பெரிய துன்பம் ஒன்றே உங்கள் மனத்தை முற்றும் கவர்ந்திருக்கிறதா? அழிவு பற்றிய துன்பம் பற்றிய கவலைகளால் பீடிக்கப்பட்டு உங்கள் பெயர், புகழ், மனைவி மக்கள், உடைமை இவையனைத்தையும் உங்கள் உடலையும் கூட மறந்து விட்டீர்களா?

ஆழ்ந்த அனுதாபம் – இதுவே அனைத்திலும் மகத்தான சேவை :

சதா ஏழ்மையிலும் அறிவீனத்திலும் அழுந்திக்கிடக்கிற  இருபது கோடி ஆண்களையும் பற்றி ஆழ்ந்த உணர்ச்சி கொண்டிருப்பவன் யார்? தாமும் மனிதன் தாம் என்பதை அம்மக்கள் மறந்து விட்டனரே! அதன் விளைவு தான் அடிமைத்தனம். சிந்தனையாளர்கள் கடந்த சில ஆண்டுகளுக்குள் அதன் காரணத்தைக் கண்டு கொண்டார்கள். ஆனால் அதற்கான பொறுப்பை ஹிந்து சமயத்தின் தலைவாசற்படியில் சுமத்தி வைத்து விட்டார்கள். அவர்களது கருத்துப்படி, இந்நிலை திருந்துவதற்கு ஒரே வழி – உலகிலேயே பிரமாதமான இந்தச் சமயத்தை நசுக்கி விடுவது தான்.

நண்பனே! நான் கூறுவதைக் கேள்! இறைவனின் திருவருளால் நான் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டேன். நம் சமயத்தின் மீது ஒரு குற்றமுமில்லை.

அதற்கு மாறாக, ஒவ்வொருவரும் உனது சொந்த ஆத்மாவின் பல வடிவங்களே என்று உனது மதம் கற்பிக்கிறது. அதனை நாம் நடைமுறையில் பயன்படுத்தவில்லை. பிறரிடம் நமக்கு அனுதாபம் இல்லாமல் போய்விட்டது. இதயப்பூர்வமான அன்பு  உணர்ச்சி இல்லாது போய்விட்டது.

இறைவன் உங்களிடம் மறுபடியும் புத்தராக வந்தார். ஏழைகள், துன்பப் படுகிறவர்கள், பாவிகள் ஆகியோரிடம் எப்படி அனுதாபம் காட்டுவது, எப்படி இதயப்பூர்வமாக அன்பு பாராட்டுவது என்று கற்பித்தார். ஆனால் நீங்கள் அவருக்குச் செவி சாய்க்கவில்லை.

ஹிந்து சமயத்தைப் போல மிக உயர்ந்த முறையில் மனித குலத்தின் மேன்மைச் சிறப்பைப் பற்றி வேறெந்தச் சமயமும் இந்த உலகத்தில் போதிக்கவில்லை. அத்துடன் ஏழை எளியவர்களின் கழுத்தின் மீது ஏறி மிதிக்கிற சமயமாக இவ்வுலகில் ஹிந்து சமயத்தைப்  போல வேறெதுவும் இல்லை.

இக்குற்றத்திற்குச் சமயம் பொறுப்பு அல்ல; ஹிந்து சமயத்திலுள்ள வெளி வேஷக்காரர்கள், வறட்டு ஆசாரவாதிகள் ஆகியோரே காரணம். அவர்கள் இறை தத்துவம் வேறு, நடைமுறை விவகாரம் வேறு என்பது போன்ற கொள்கைகளின் வடிவத்தில் பலவிதமான கொடுஞ் செயல்கள் புரியும் பொறிகளைக் கண்டுபிடித்தார்கள். கடவுள் இதனை எனக்குக் காட்டியுள்ளார்.

மருத்துவரின் இதயம் கொண்டு பணி செய்க :

”கர்மண்யேவ அதிகாரஸ்தே மா பலேஷு கதாசன ( கீதை. அ.2. சு. 47)”

தளர்ச்சியடையாதீர்கள். இறைவன் கீதையில் கூறுவதை நினைவிற் கொள்ளுங்கள்.:

“ பணி செய்வதற்கே உங்களுக்கு உரிமை; பயனுக்கு உரிமை கிடையாது”. வரிந்து கச்சை கட்டுங்கள். கடவுள் இதற்காகவே என்னை அழைத்திருக்கிறார். என் வாழ்நாளெல்லாம் இடைஞ்சல்களும் சித்திரவதைகளுமாக நிறைந்து இழுத்துச் செல்லப் பட்டிருக்கிறேன். எனது உற்றாரும் உறவினரும் அளவிலாப் பசியினாலேயே மடிந்ததை நான் பார்த்திருக்கிறேன். என்னைக் கேலி செய்திருக்கிறார்கள். என்னிடம் அவநம்பிக்கை காட்டியிருக்கிறார்கள். என்னைக் கேலி செய்து, பழித்தவர்களுக்குக் கருணை காட்டியதற்காகவும் துன்பப் பட்டிருக்கிறேன். ஆமாம்! உலகமே துன்பங்கள் நிறைந்த கல்விச்சாலைதான். அத்துடன் கூட மகாத்மாக்களும் தீர்க்கதரிசிகளும் உயர்ந்த பண்புகளைப் பயிலும் பள்ளியும் ஆகும். கருணை, பொறுமை, இவற்றுடன் எல்லாவற்றுக்கும் மேலாக நம் காலின் கீழுள்ள பிரபஞ்சமே பொடிப்பொடியாகப் போனாலும் நடுங்காத, வெல்ல முடியாது, எஃகினை ஒத்த உறுதி ஆகிய உயர்ந்த பண்புகளைப் பயிலும் பள்ளியாகும்.

பெரிய மனிதர்களைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன். அவர்கள் சமூகத்தில் பெரியவர்களாகவும், உயர்ந்த நிலையினராகவும் இருந்தாலும் அது அவர்கள் குற்றமல்ல. அவர்கள் குழந்தைகள். ஆம், உண்மையான குழந்தைகள். அவர்கள் நம்மைச் சுற்றிச் சில  கஜ தூரத்திலுள்ள சிறு வட்டத்தைத் தாண்டிப் பார்வையைச் செலுத்துவதில்லை. இயந்திரம் போன்று அன்றாட வேலைகளைச் செய்வது, உண்பது, குடிப்பது, பணம் சம்பாதிப்பது, கணக்குத் தவறாமல் குழந்தைகளைப் பெறுவது, இதுவே அவர்களது சிறுவட்டம். அதனைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது. சந்தோஷமான ஆத்மாக்கள்! அவர்கள் தூக்கம் ஒரு போதும் கலைந்ததில்லை.

பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட அடக்குமுறையின் விளைவாகப் பாரத நாட்டுச் சூழ்நிலையானது துயர ஓலம், துன்ப ஓலம், தாழ்வின் கதறல், ஏழ்மைக் கூக்குரல் ஆகியவற்றால் நிறைந்துள்ளது. ஆனால் அந்தக் கனவான்களின் அமைதிமயமான வாழ்வில் எவ்வித அதிர்ச்சியும் ஏற்பட்டதில்லை. எத்தனையோ தலைமுறைகளாக மக்களது மனத்தை, நீதியுணர்வை, உடலை அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தியதன் விளைவாக இறைவனது பிரதிபிம்பமாக விளங்கிய மக்கள், பொதி சுமக்கும் மிருகங்களாகி விட்டார்கள். தெய்வீக அன்னையின் சின்னமான பெண்கள், குழந்தைகளைப் பெறும் அடிமைகளாகி விட்டார்கள். வாழ்க்கையே ஒரு சாபக்கேடாகி விட்டது. கனவான்களுக்கு இத்தகையப் பயங்கர கால நிலையைப் பற்றிய கனவுகூட ஏற்பட்டதில்லை.

இந்தப் பாமர மக்களுக்கு தர்ம நெறி வாழ்வில் அவா இல்லை.  வருங்காலம் பற்றிய நம்பிக்கை செத்து விட்டது. அவர்களுக்கு நல்லது செய்ய முயலுகிறவர்கள் மீது தாவிப்பாய்ந்து தாக்க அவர்கள் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறர்கள். நடைப்பிணங்களான இந்தப் பாமர மக்களிடையே உங்களால் உயிர் ஊட்ட முடியுமா? உதைத்துக் கொண்டு முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிற குழந்தைக்கு மருந்து புகட்ட முயலும் வைத்தியரைப் போல உங்களால் சேவை செய்ய முடியுமா?

ஜப்பானியப் பெண் குழந்தைகளிடையே நிலவிவரும் ஒரு நம்பிக்கையைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். தமது பொம்மைகளை முழு உள்ளத்துடனும் நேசித்தால் அவற்றுக்கு உயிர் வந்துவிடும் என்று நம்புகிறார்கள். ஜப்பானியப் பெண் குழந்தை தனது பொம்மையை உடைப்பதே இல்லை. ஓ! அதிர்ஷ்டசாலிகளே! அவ்வாறே இந்நாட்டு மக்களை யாராவது தமது முழு உள்ளத்துடனும் நேசிக்க முடியுமானால் பாரதம் மீண்டும் எழுந்து விடும் என்று நானும் நம்புகிறேன்.

இந்த மக்களின் உடலில் செல்வத்தால் தோன்றும் அழகு இல்லை. அதிர்ஷ்டம் தகர்ந்து விட்டது.  விவேகம் அடியோடு அழிந்து விட்டது. நசுக்குண்டு கிடக்கிறார்கள்; எப்பொழுதும் பட்டினி; பூசலிடும் மனப்பாங்கும் பொறாமையும் கொண்டு வாழ்கிறார்கள். பரந்த மனம் படைத்த நூற்றுக் கணக்கான ஆண்களும், பெண்களும் வாழ்க்கையில் சுகபோகங்களை அனுபவிக்கும் ஆசைகளை அறவே ஒழித்துவிட்டு, இந்த மக்களுக்காக ஏங்கித் துடிக்க வேண்டும்; தமது முழுச் சக்தியுடன் உழைக்க வேண்டும். லட்சக்கணக்கான நம் நாட்டினர் அநாதைகளாகி இழிநிலையாகிற பயங்கரச் சூழலில் சிக்கி நாளுக்கு நாள் தாழ்ந்து மூழ்கி வருகிறார்களே, இத்தகைய மக்களுடைய க்ஷேம நலனுக்குப் பாடுபட முன்வர வேண்டும்.

இரண்டாவது: இதற்குப் பரிகாரம் நீங்களே காண வேண்டும்.

உங்கள் உள்ளத்தில் பரிவு உணர்ச்சி நிறைந்திருக்கிறதா?  அப்படியானால் அது முதற்படி மட்டுமேயாகும். அடுத்தபடியாக ஏதாவது பரிகாரமாக, நோய் தீர்க்கும் மருந்து ஒன்றைப்பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். பழையகாலக் கருத்துக்கள் எல்லாம் மூட நம்பிக்கைகளாக இருக்கலாம். ஆனால் அந்த மூட நம்பிக்கையின் உள்ளேயும் மேலேயும் தங்கப் பாளங்களும் சத்தியமும் உள்ளன. அந்தத் தங்கத்தின் மீது பாசியோ மாசோ படியாமல் காப்பாற்றி வைக்க நீங்கள் ஏதாவது வழி கண்டுபிடித்திருக்கிறீர்களா?

மூன்றாவது: உங்களது நோக்கம் தூயதாகவும் உங்களது உறுதி தகர்க்க முடியாததாகவும் இருக்க வேண்டும்.

உங்கள் சக்திகளையெல்லாம்  வெட்டிப் பேச்சில்  செலவிடுவதற்குப் பதில் எதாவது வழி, நடைமுறையில் கையாளக் கூடிய  உபாயம் கண்டுபிடித்திருக்கிறீர்களா?  குறை கூறிக் கண்டிப்பதற்குப் பதிலாக  உதவி செய்வதற்கும், அவர்களது துயர்களுக்கு ஆறுதலாக  இதமான  மொழிகளைக் கூறவும், நடைப்பிண வாழ்க்கையிலிருந்து மக்களை மீட்கவும் ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறீர்களா?

அப்படிச் செய்திருந்தால் அது இரண்டாவது படிதான். மற்றொரு விஷயமும் தேவை. உங்கள் தொண்டின் நோக்கம் என்ன? பணத்தாசை பிடித்தோ பெயர், புகழ் ஆசையால் தூண்டப்பட்டோ நீங்கள் வேலை செய்யவில்லை என்பது நிச்சயந்தானா?

அதுவும் போதாது, உங்கள் வேலையில் இடையூறுகள், மலை போலத் திரண்டுவரினும் அவற்றை எதிர்த்துத் தயங்காது செல்ல உங்களுக்கு மனவலிமையிருக்கிறதா? உலகமனைத்தும் சேர்ந்து கொண்டு, கையில் வாள் கொண்டு எதிர்த்து நின்றாலும், அந்த நிலையிலும், நீங்கள் சரியென்று நினைக்கும் செயலைச் சிறிதும் பின்வாங்காமல் செய்யும் தைரியம் உங்களிடம் இருக்கிறதா? உங்கள் மனைவி மக்களே உங்களுக்கு விரோதமாக நின்றாலும், உங்கள் செல்வத்தையெல்லாம் நீங்கள் இழக்க நேரிட்டாலும், உங்களது புகழ் கெடுவதானாலும், எல்லாச் சொத்து சுதந்திரங்களும் பறி போனாலும் அப்பொழுதும்கூட ஏற்றுக்கொண்ட பணியிலேயே ஊன்றி நிற்பீர்களா?  நீங்கள் கருதிய லட்சியம் கைகூடுகிற வரையில், இடைவிடாது தொடர்ந்து முன்னேறிச் செல்வீர்களா?  மாமன்னனான பர்த்ருஹரியார் கூறியது போல,

நிந்தந்து நீதி நிபுணா யதி வா ஸ்துவந்து

லஷ்மீ: ஸமாவிச’து கச்சது வா யதேஷ்டம்

அத்யைவ வா மரணமஸ்து யுகாந்தரே வா

ந்யாயாத் பத : ப்ரவிசலந்தி பதம் ந தீரா:

         ( பர்த்ருஹரி நீதி சதகம்)

ஞானிகள் நிந்திப்பதானாலும் நிந்திக்கட்டும் அல்லது புகழட்டும். சகல பாக்கியங்களையும் கொடுக்கும் லஷ்மி தேவியானவள் வந்தாலும் வரட்டும்; அல்லது தான் விரும்புகிற இடத்துக்குப் போனாலும் போகட்டும். மரணமானது இன்றே வந்தாலும் வரட்டும்; யுகமுடிவில் வந்தாலும் வரட்டும்; நேர்மைப் பாதையினின்றும் மயிரிழையேனும் எவர் பிறழாதிருப்பாரோ அவரே தீரர்களாவர்.

இந்த  உறுதி உங்களிடம் உள்ளதா?

இந்த மூன்று விஷயங்களும் உங்களிடம் இருக்குமாயின், நீங்கள் ஒவ்வொருவரும் அற்புதங்களைச் செய்வீர்கள். நீங்கள் செய்தித்தாளில் எழுத வேண்டியதில்லை. ஊர் ஊராகச் சென்று சொற்பொழிவாற்ற வேண்டியதில்லை. உங்கள் முகமே ஒளி வீசிக் கொண்டிருக்கும். நீங்கள் குகையினுள் வசித்தாலும் கூட, உங்களது எண்ணங்கள் குகைச் சுவரையும் ஊடுருவி, உலகமெல்லாம் பாய்ந்து, பரவிப் பல நூற்றாண்டுகள் வரை, அதாவது தக்க ஒரு மனிதனின் மூளையில் புகுந்து அங்கே வேலை செய்யும்வரை சூழ்ந்து கொண்டிருக்கும். உயர்ந்த சிந்தனையின்,  உண்மையுள்ளத்தின், குறிக்கோள்களில் தூய்மையாக இருப்பதன் சக்தி இப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்ததாகும்.

(தொடரும்..)

அடுத்த பகுதி >>

One Reply to “எழுமின் விழிமின் – 13”

 1. //வெளி வேஷக்காரர்கள், வறட்டு ஆசாரவாதிகள்//

  // இறை தத்துவம் வேறு, நடைமுறை விவகாரம் வேறு என்பது போன்ற கொள்கை//

  //இறைவனது பிரதிபிம்பமாக விளங்கிய மக்கள், பொதி சுமக்கும் மிருகங்களாகி விட்டார்கள். தெய்வீக அன்னையின் சின்னமான பெண்கள், குழந்தைகளைப் பெறும் அடிமைகளாகி விட்டார்கள்//

  //நூற்றுக் கணக்கான ஆண்களும், பெண்களும் வாழ்க்கையில் சுகபோகங்களை அனுபவிக்கும் ஆசைகளை அறவே ஒழித்துவிட்டு, இந்த மக்களுக்காக ஏங்கித் துடிக்க வேண்டும்//

  வைர வரிகள்.

  குறைக்கு உதவி ! துயருக்கு ஹித மொழி !! நடைப்பிணத்துக்கு மீட்பு !!!

  பர்த்ரு ஹரி சொன்ன ராஜ வாழ்க்கை நமக்கெல்லாம் சித்திக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *