எழுமின் விழிமின் – 16

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

நாம் எவர் மீதும் பழிசாற்ற வேண்டாம்: நமது வினைக் கர்மாவே காரணம்:

நண்பர்களே! வருத்தம் தரக்கூடிய சில உண்மைகளை உங்களுக்கு நான் சொல்லித் தீர வேண்டியிருக்கிறது. இந்நாட்டவன் ஒருவனை ஓர் ஆங்கிலேயன் கொலை செய்தாலோ, கொடுமைப்படுத்தினாலோ, நாடு முழுவதும் பெருத்த எதிர்ப்பு ஆரவாரம் ஏற்படுவதை நான் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அதைப் படித்துக் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். ஆனால் மறுகணமே  என் மனத்தின்கண்  ஓர் கேள்வி எழுகிறது. இவை அனைத்துக்கும் பொறுப்பாளி யார்?  ஒரு வேதாந்தி என்ற முறையில் நான் என்னையே இக்கேள்வி கேட்டுக் கொள்ளாமல் இருக்க முடியாது. ஹிந்து என்பவன் ஆத்ம சோதனை செய்து பார்ப்பவன்; எல்லா விஷயங்களையும் தன்னிலே தன் மூலமாகப் பார்க்க விரும்புபவன். ஆத்ம திருஷ்டி மூலம் பார்ப்பவன். ஆகவே என்னையே நான் யார் இதற்குக் காரணம் என்று கேட்டுக் கொள்ளும்பொழுது, “ஆங்கிலேயர்களல்ல இதற்குப் பொறுப்பு. இந்த அவலநிலைக்கு, தாழ்ந்த நிலைக்கு- நாம்தான்- நாம் மட்டும்தான் பொறுப்பு” என்ற பதில் ஒவ்வொரு தடவையும் எனக்குக் கிடைக்கிறது.

முதலில் நம்மை நாமே தாக்கிக் காயப்படுத்திக் கொண்டால் ஒழிய இந்த உலகில் நம்மைத் தாக்கிப் புண்படுத்தும் சக்தி வேறொன்றுமிராது என்ற விஷயத்தை வேதாந்திகளாகிய நாம் நிச்சயமாக அறிகிறோம். பாரதத்தின் ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு முஸ்லீம்களாகி விட்டார்கள்.. ஏற்கனவே கிறிஸ்தவர்கள் ஜனத்தொகை பத்து லட்சத்துக்கும் அதிகமாகி விட்டது.

யாருடைய குற்றம் இது? நமது சொந்த சமயத்தைக் கைவிட்டவர்களுக்காக நாம் என்ன செய்தோம்? அவர்கள் ஏன் முகம்மதியர்களாகியிருக்க வேண்டும்?

இவ்வாறு நம்மை விட்டு அகன்றவர்களுக்காக இப்பொழுது நாம் அழுகிறோம். ஆனால் அதற்கு முன்னால் நாம் அவர்களுக்கு என்ன செய்தோம்? நாம் ஒவ்வொருவரும் நம்மையே கேள்வி கேட்டுப் பார்த்துக் கொள்வோம். நாம் கற்ற படிப்பினை என்ன? சத்தியமாகிற தீபஜோதியை நாம் கைப்பிடித்துள்ளோமா? அப்படியாயின் எவ்வளவு தூரம் அதனை முன்னுக்குக் கொண்டு சென்றுள்ளோம்? நாம் முதலில் அவர்களுக்கு உதவவில்லையே? இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் அவர்களுக்கு உதவாதது நமது தப்பு; நமது சொந்தக் கர்ம வினையாகும். பிறரை நாம் குற்றஞ்சாட்ட வேண்டாம். நமது சொந்தக் கர்மாவையே நொந்து கொள்வோம்.

உடல் பலவீனமாக இருக்கும்பொழுதுதான் நோய் அதனைப் பீடிக்கிறது:

உலகாயத வாதம், முஸ்லீம் மதம், கிறிஸ்தவ மதம் அல்லது உலகிலுள்ள வேறெந்த மதமும், நாம் அனுமதித்திராவிட்டால், இங்கு வந்து வெற்றி பெற்றிருக்க முடியாது. உடலானது தீய பழக்கங்களால், கெட்ட உணவால், கஷ்டங்களால், தக்க பாதுகாப்பு இன்றி நலிவுறுகிறது. நலிவுறாமற் போனால் நோய்க்கிருமிகள் அதனைத் தாக்கவே முடியாது. விஷக்கிருமிகள் சூழ்ந்து மூடினாலும் கூட ஆரோக்கியமுள்ள மனிதன் மாசுமறுவற்றுத் தப்பிவிட முடியும்.

…நோய் உண்டாவதற்கு இரண்டு காரணங்கள் இருக்க வேண்டுமென்று நாம் அறிவோம். ஒன்று வெளியிலிருந்து வரும் விஷக்கிருமி; இரண்டாவது நமது உடலின் பலவீன நிலை. கிருமிகளை உட்புகவிடக் கூடிய நிலையில் நமது உடல் இருந்தாலொழிய, கிருமிகள் நுழைந்து பலம் பெற்றுப் பெருகும் அளவுக்கு உடலின் ஜீவசக்தி குறைந்து  இருந்தாலொழிய, உடலிலுள்ள எந்த ஒரு கிருமிக்கும் வியாதியை உண்டாக்கக் கூடிய சக்தி கிடையாது. உண்மையாகப் பார்த்தால் ஒவ்வொருவருடைய உடலுக்குள்ளும் லட்சக்கணக்கான கிருமிகள் இடைவிடாமல் வந்துபோய்க் கொண்டிருக்கின்றன. ஆனால் உடலில் பலம் இருக்கும்வரை அவை நம்மைப் பாதிப்பதில்லை. உடலில் பலக்குறைவு ஏற்பட்டால் இந்தக் கிருமிகள் உடலைத் தாக்கிக் குடிபுகுந்து நோயை உண்டாக்குகின்றன. நமது தேசிய வாழ்க்கையும் இத்தன்மையானதுதான்.

நம் தேசிய வாழ்க்கையாகிற உடல் பலவீனப்படும்பொழுதுதான் பலவித நோய்க்கிருமிகளான கருத்துகள் நமது மக்களினத்தின் அரசியல் துறையில், சமூகத் துறையில், அறிவுத் துறையில் பெருங்கூட்டமக நுழைந்து நோயை உண்டாக்குகின்றன. ஆதலால் இதனை நீக்குவதற்காக நாம் நோயின் மூல காரணத்தை ஆராய்ந்து  கண்டுபிடித்து நமது இரத்தத்திலிருக்கும் அசுத்தங்களை நீக்க வேண்டும். அதற்குமேல் அந்த உடலானது எல்லாவிதமான வெளி விஷயங்களையும் தடுப்பதுடன் நோய் வாய்ப்படாமலும் தற்காத்துக் கொள்ளும்.

சகோதரர்களே! அந்நிய இனத்தவர்கள் ஹிந்து ராஷ்டிரத்தை உண்மையான பல இழிகுணங்களுகாகத் தூற்றுகிறார்கள். அவற்றின் பெரும்பாலான இழிவுகளுக்கு நாமே காரணம் என்பதை வெட்கத்துடன் அறிந்துள்ளோம். பாரதத்திலிருக்கும் பிற இனத்தவர் மீது தகாத ரீதியில் குற்றஞ்சாட்டும் நிலை ஏற்பட நாமே காரணம்.

நகைப்புக்கு இடந்தரும் நிலை:

எவ்வளவு கேலிக்கூத்தான நிலைக்கு நாம் தாழ்ந்து விட்டோம். தோட்டியொருவன் தோட்டியென்ற ரீதியில் ஒருவரிடம் வந்தால் ‘பிளேக்’ வியாதியைப் போலக் கருதி அவனை வெறுத்து ஒதுக்குவார்கள். ஆனால் அவனது தலைமேல் பாதிரியொருவர் ஏதோ பிரார்த்தனைகளை உச்சரித்துக் கொண்டே ஒரு கோப்பைத் தண்ணீரை ஊற்றிவிட்டால், ஒரு சட்டையை- அது எவ்வளவு கந்தையானாலும் பரவாயில்லை- அவன் அணிந்து கொண்டு மிகுந்த ஆசாரசீலரான  ஹிந்துவின் அறைக்குள் நுழைகிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்நிலையில் அவன் அமருவதற்கு நாற்காலி தருவார்கள். மனமாரக் கைகுலுக்குவார்கள். இவ்வாறு செய்யாமல் மறுக்கக்கூடிய தைரியம் எவருக்கும் இல்லை. இதை விடக் கேவலமான வேடிக்கை இருக்க முடியாது.

கடந்த அறுநூறு, எழுநூறு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை எண்ணிப் பாருங்கள். வயது முதிர்ந்த ஆண்பிள்ளைகள், நூற்றுக்கணக்கில் தண்ணீரை வலது கையால் குடிப்பதா, இடது கையால் குடிப்பதா என்பது பற்றியும் கையை மூன்று தடவை கழுவுவதா, நான்கு தடவை கழுவுவதா என்பது பற்றியும் வருடக் கணக்காக விவாதித்து வருகிறார்கள்…

ஆண்மையின்மை:

சிலருடைய மூளையில் இரவு பகலாகச் சில “பிரச்சினைகள்” தொந்தரவு பண்ணிக் கொண்டிருக்கும். அதாவது பூஜை மணியை வலது பக்கம் அடிப்பதா, இடது பக்கம் அடிப்பதா? சந்தனப் பொட்டு தலையில் வைக்க வேண்டியதா அல்லது வேறெங்காவதா? தீப ஆரத்தியை இரண்டு தடவை சுற்றுவதா, நான்கு தடவை சுற்றுவதா? இது போன்ற கேள்விகள் யார் மனத்தில் வழக்கமாகத்  தோன்றுகிறதோ அவர்களை வெறும் மட்டரக உதவாக்கரைகள் என்பேன்; இது போன்ற அற்பமான விஷயங்களைத் தவிர வேறெதுவும் நுழையாத அந்த மண்டைகளையே ஆண்மையற்றவர்கள் என்பார்கள். இத்தகைய தன்மைகளால்தான் சுபிட்சம் நம்மை ஒதுக்கி வைத்து விட்டது; உலகம் நம்மை வெறுத்து  உதைக்கிறது; ஆனால் இதே நேரத்தில் மேல்நாட்டு மக்கள் உலகத்துக்கெல்லாம் அதிபதிகளாக விளங்குகின்றார்கள்.

சுயமான மதியூகம், வீரியம், சுறுசுறுப்பு- இவற்றை இழந்தோம்:

மேற்கூறியபடி  அதிமுக்கியமான விஷயங்களைப் பற்றித் தர்க்கம் பண்ணுவதிலேயே வாழ்க்கையைக் கழிக்கிறவர்கள், அவை பற்றி ‘ஞானம்’ கொழிக்கும் ‘தத்துவ’ நூல்களை எழுதுகிறவர்கள்- இவர்களிடமிருந்து எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

“உருளைக்கிழங்கு ஒன்று ஒரு கத்தரிக்காயைத் தீண்ட நேர்ந்தால் உலகம் பிரளயத்தில் மூழ்கி அழிவதற்கு இன்னமும் எவ்வளவு காலம் இருக்கிறது? கைகளைக் கழுவுவதற்காக ஒருவன் ஒரு டஜன் தடவை மண்ணைப் போட்டுத் தேய்க்கா விட்டால் அவனது முன்னோர்களில் எத்தனை தலைமுறைகள் நரகத்துக்குப் போவார்கள்?  பதினான்கு தலைமுறைகளா? இருபத்து நான்கா?” இது போன்ற நுணுக்கமான பிரச்சினைகளுக்குக் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, விஞ்ஞானரீதியான விளக்கம் தேடிக் கண்டுபிடித்து வருகிறார்கள். அதே நேரத்தில் மக்கள் தொகையில் கால்பாகம் பட்டினி கிடக்கிறது.

எட்டு வயதுச் சிறுமி முப்பது வயதுக்காரனுக்கு மணம்முடிக்கப் படுகிறாள். பெற்றோர்கள் கொண்டாட்டமாக இருக்கிறார்கள். அதைப் பற்றி யாராவது குறை கூறினால், “எங்கள் சமயத்தைத் தலைகீழாக மாற்றுகிறார்களே” என்று பேசுகிறார்கள். பெண் பெரியவளாவதற்கு முன் குழந்தைக்குத் தாயாராக மாறிவிடவேண்டும் என்று விரும்புகிறவர்கள், அதற்காக விஞ்ஞான ரீதியாக விளக்கம் தருகிறவர்கள், இவர்கள் கடைப்பிடிக்கும் சமயம்தான் என்ன? முகம்மதியர்கள் மீது இதற்கான பொறுப்பைப் பலர் சாட்டுகிரார்கள். உண்மையில் அவர்களைத்தான் குற்றஞ்சாட்ட வேண்டும்! இல்லையா?

நமது சமயம் சமையலறை மதமாகி விடக்கூடிய அபாயமிருக்கிறது. இப்பொழுது நம்மில் பெரும்பாலோர் வேதாந்திகள் அல்லர்; புராணவழி நடப்பவர்களும் அல்லர்; தந்திர சாஸ்திர முறையைப் பின்பற்றுகிறவர்களும் அல்லர். நாமெல்லாம் வெறுமனே, ‘என்னைத் தீண்டாதே’ என்று முணுமுணுக்கிறவர்கள் தான். நமது சமயம் சமையலைறையில் இருக்கிறது. சோற்றுப் பானைதான் நமது கடவுள். ‘என்னைத் தொடாதே, நான் புனிதமானவன்’ என்பதுதான் இப்போது நமது சமயம். இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு நிலைமை இப்படியே நீடிக்குமானால், நாம் ஒவ்வொருவரும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் தான் இருப்போம்.

வாழ்க்கையிலுள்ள பெரும் பிரச்சினைகளை மனது கிரகிக்கவில்லை என்றால் மூளை பலவீனமுற்று இருக்கிறது; சுயமான ஆராய்ச்சித் திறமை அற்றுப் போய்விட்டது; அறிவு பலத்தை, சுறுசுறுப்பை, சிந்திக்கும் வலிமையை இழந்து விட்டது. கண்ணுக்குத் தெரிகிற சிறு வட்டத்திற்குள் அது உழன்று வருகிறது- என்பனவற்றைத்தான் அது தெளிவாகக் குறிக்கிறது.

மூட நம்பிக்கை, பொய் ஆசாரம், உலகாயத வாதம்- இவற்றிலிருந்து தப்ப வேண்டும்:

ஒரு பக்கம் பழைய மூட நம்பிக்கையிலாழ்ந்த பொய் ஆசாரம். மறுபுறம் உலகாயத வாதம் அல்லது ஐரோப்பிய வாதம். இரு பக்கத்திலுமுள்ள இந்த இரண்டு பயங்கர ராட்சதர்களிடமிருந்து தப்பி நாம் நமது பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஒரு பக்கத்தில் மேல்நாட்டு அறிவு என்னும் மதுவை அருந்தி விட்டுத் தனக்கு எல்லாமே தெரியும் என்று எண்ணுகிற மனிதன் பண்டைக்கால ரிஷிகளைக் கண்டு சிரிக்கிறான். ஹிந்து சிந்தனையெல்லாம்  மட்டரகமான குப்பைக் கூளமாகவும், தத்துவ ஞானமெல்லாம் குழந்தைப் பிதற்றல்களாகவும், சமயமானது முட்டாள்களின் மூட நம்பிக்கையாகவும் அவனுக்குப் படுகிறது.

மற்றொரு பக்கத்தில்- படித்த மனிதன், ஆனால் அவன் ஒருவிதமான ஒரே மூர்க்கமான சிந்தனையுடைய வெறியன். அவன் தனது சிந்தனையில் மறுகோடிக்குப் போய்விடுகிறான். அவன் ஒவ்வொரு விஷயத்துக்கும் சகுனம் பார்த்து விளக்குகிறான். தனது குறிப்பிட்ட இனத்தாரிடமிருக்கும் மூட நம்பிக்கைகள் அல்லது தனது குறிப்பிட்ட தெய்வங்கள் அல்லது குறிப்பான கிராமம் இவை ஒவ்வொன்றைப் பற்றியும் அவனிடம் தத்துவ சாஸ்திர ரீதியான, அத்தியாத்மிக ரீதியான விளக்கங்கள் இருக்கின்றன.  இன்னும் எத்தனை விதமான அற்பத்தனமான விளக்கமெல்லாம் அவனிடம் இருக்கிறதோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம். அவனது கிராமத்தின் ஒவ்வோர் அற்பமான மூட நம்பிக்கையும்கூட அவனுக்கு வேத வாக்கு ஆகும். அவனைப் பொருத்தவரையில்- அந்த மூட நம்பிக்கைகள் நிறைவேறுவதைப் பொருத்துதான் தேசிய வாழ்க்கை உள்ளது. இது குறித்தும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பெருந்தன்மையும் உயர்வும் வாய்ந்த கருத்துக்களைக் கிரஹிக்கத் திறனில்லாத மூளை, சுயமான ஆற்றலையும், வீரியத்தையும் இழந்து நிற்கும் அந்த மூளை, மதம் என்பதன் பேரால் பற்பல அற்பமான மூட நம்பிக்கைகளைக் கொண்டு தன்னைத்தானே விஷமாக்கிக்கொண்டு வருகிறது. நாம் இதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மூடுமந்திரமும், மூட நம்பிக்கைகளும் பலவீனத்தின் அறிகுறிகள்:

மர்மமான மூடுமந்திர முறைகளை நாடுவதும், மூட நம்பிக்கையும் எப்பொழுதுமே பலவீனத்தின் அறிகுறியாகும். எப்பொழுதுமே இவை தாழ்வுக்கும் சாவுக்கும் அறிகுறியாகும். ஆகையால் அவை குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள். பலசாலிகளாக உங்கள் சொந்த பலத்தையே நம்பி வாழுங்கள். மிகப் பெரிய விஷயங்கள், அதியற்புதமான விஷயங்கள் என இருக்கின்றன. அவற்றை அசாதாரண விஷயங்கள் என்று நாம் அழைக்கக் கூடும். ஆனால் இவற்றில் ரகசிய வித்தை என்று எதுவுமே இல்லை.

சமய உண்மைகள் ரகசியமானவை என்றோ, அவையெல்லாம் இமயமலையின் பனிமூடிய சிகரத்தில் உட்கார்ந்திருக்கிற ரகசிய சங்கங்களின் ஏகபோக உடைமை என்றோ, இந்நாட்டில் ஒரு காலத்தும் பிரசாரம் செய்யப்படவில்லை.

தூய சமயத்திலிருந்து மூட நம்பிக்கைகளைக் களையெடுத்து விடுங்கள்:

இத்தகைய ரகசிய சங்கங்கள் எங்குமே கிடையாது. இந்த மூட நம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள்; நீங்கள் அப்பட்டமான நாஸ்திகனாகப் போனாலும் பரவாயில்லை; அதனால் உங்களுக்கு பலமாவது வரும்; ஆனால் இந்த மூட நம்பிக்கைகள் மூலம் தாழ்வும் நாசமும் நேரும். பலசாலிகளாக இருப்பவர்கள் இந்த மூட நம்பிக்கையில் தமது நேரத்தைச் செலவிடுவது மனித குலத்துக்கே வெட்கக் கேடான காரியமாகும். உலகிலுள்ள மூட நம்பிக்கைகளில் அழுகி, நாற்றமடித்துக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை விளக்குவதற்காக உருவகக் கதைகளைக் கண்டுபிடிப்பதில் தமது முழு நேரத்தையும் செலவிடுகிறார்களே! வெட்கம் ! தைரியமாயிருங்கள். அந்த முறை மூலம் எல்லாவற்றையும் விளக்க முயற்சி செய்யாதீர்கள்!

நமது உடலில் ஏராளமான மூட நம்பிக்கைகளாகிற மாசு மறுக்கள், ஏராளமான குழிப்புண்கள் உள்ளன. இது உண்மை. இவற்றை வெட்டிச் சீவி அழித்து விட வேண்டும். ஆனால் இவையெல்லாம் நமது சமயம், நமது தேசிய வாழ்க்கை, நம் ஆன்மிக முறை இவற்றை அழிப்பதில்லை. சமயத்தினுடைய ஒவ்வொரு கொள்கையும் பாதுகாப்பாகவே இருக்கிறது. இந்தக் குறைபாடுகளை எவ்வளவு விரைவில் ஒழிக்கிறோமோ அவ்வளவுக்கு நமது கொள்கைகள் அதிகமான பிரகாசத்துடன் ஜொலிக்கும். உறுதியுடன் அவற்றைக் கடைப்பிடியுங்கள்.

(தொடரும்..)

அடுத்த பகுதி

One Reply to “எழுமின் விழிமின் – 16”

  1. அருமை! அருமை! மிக அருமை! தமிழ் ஹிந்து விற்கு வாழ்த்துக்கள் பல! தொடரட்டும் உங்களின் இந்த சிறப்பான பணிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *