எழுமின் விழிமின் – 17

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

உடல் பலவீனம்

நமது உபநிடதங்கள் மிகவுயர்ந்தவையாக இருந்தாலும், நாம் மகரிஷிகளின் வம்சத்தில் பிறந்தவர்கள் என்று மார்பைத் தட்டிக் கொண்டாலும் மற்ற இன மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் பலவீனர்களாக, மிக பலவீனர்களாக இருக்கிறோம் என்பதை நான் சொல்லியாக வேண்டும். முதலாவதாக, நமது உடல்பலவீனமாக இருக்கிறது. நமது துன்பங்களில் குறைந்தது மூன்றில் ஒருபங்காவது நமது பலவீனத்தின் காரணமாக ஏற்பட்டவைதான். நாம் சோம்பலில் ஆழ்ந்திருக்கிறோம். நம்மால் உழைக்க முடிவதில்லை.

முதன்முதலில் நமது இளைஞர்கள் பலமுடையவர்களாக வேண்டும். சமய உணர்ச்சி அதற்கு பிறகு வரும். எனது வாலிப நண்பர்களே! பலமுள்ளவர்களாக இருங்கள். நான் அளிக்கக் கூடிய புத்திமதி இதுதான். நீங்கள் கீதையைப் படிப்பதைவிடக் கால்பந்து ஆடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். நான் தைரியமாகவே கூறுகிறேன். உங்களுக்கு இவற்றைச் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது; ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன்.

உங்களது கைத்தசைகளில் மேலும் சிறிது பலம் அதிகமானால் கீதை நன்றாக புரியும்:

செருப்பு எங்கே கடிக்கிறது என்று எனக்குத் தெரியும். எனக்குக் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. உங்களது கைகால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால் கீதை உங்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும். உங்கள் உதிரத்தில் சக்தி இருந்தால் ஸ்ரீகிருஷ்ணனுடைய பலமிக்க மேதாவிலாசத்தையும், பராக்கிரமத்தையும் உங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். உங்கள் உடை உங்களது கால்களின் மீது உறுதியாக நிமிர்ந்து நிற்க நீங்கள் ஆண்பிள்ளைகள் என்ற உணர்ச்சி உங்களுக்கு ஏற்படும் போது உபநிடதங்களின் தத்துவங்களையும் ஆத்மாவின் மகத்துவத்தையும் நன்றாக அறிந்துணர முடியும்.

கிளிப்பிள்ளைகளைப் போலப் பலவிஷயங்களை நாம் பேசுகிறோம். ஆனால் ஒரு போதும் அதன்படி நடப்பதில்லை. பேசுவதும் செய்யாமல் இருப்பதும் நமது பழக்கமாக இருக்கிறது. அதன் காரணம் என்ன? உடல் பலவீனம் தான். இத்தகைய பலமில்லாத மூளையால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அதனை நாம் வலிவு படுத்த வேண்டும்.

நாம் வேண்டுவது உதிரத்தில் சக்தி; நரம்புகளில் வலிமை, இரும்பாலான தசைகள், எஃகினால் ஆன நரம்பு – மனிதனைப் பஞ்சு போல மிருதுவாக்குகிற அசட்டுத்தனமான கருத்துக்கள் அல்ல.

சகோதரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு அன்னியர் முன் மண்டியிடுதல்:

நம்மிடம் மற்றொரு குறையும் இருக்கிறது… பல நூற்றாண்டுகளாக அடிமைப் பட்டிருந்ததனால் நாம் பெண்களின் நாடு போல ஆகிவிட்டோம். உங்களால் இந்த நாட்டிலோ வெளிநாட்டிலோ மூன்று பெண்களை ஐந்து நிமிட நேரம் ஒன்றாகக் கூட்டி வைக்க முடியாது. அதற்குள்ளாக அவர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் பெரிய சங்கங்கள் அமைத்துப் பெண்களின் ஆற்றலைப் பற்றிப் பிரமாதமாகப் பேசுவார்கள். ஆனால் உடனே தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வார்கள். அதனால் யாரோ ஒரு ஆண்பிள்ளை போய் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவான். உலகம் முழுவதும் இப்பொழுதும் பெண்கள் மீது ஆண்கள் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டி இருக்கிறது.

நாமும் அவர்களைப் போல உள்ளோம். நாம் பெண்களாகி விட்டோம். பெண்களுக்கு தலைவியாக ஒரு பெண் வரத்தலைப்பட்டால் அவளைத் தூஷித்து பலவாறாகத் திட்டி உட்கார வைத்து விடுவார்கள். ஆனால் ஒரு ஆண்பிள்ளை வந்து அவர்களைக் கடுமையாக நடத்தி அவ்வப்போது திட்டினால் அது சரிதான் என்று ஒப்புக் கொள்வார்கள். இந்த விதமான மனோவசிய சக்திக்கு அவர்கள் பழக்கப் பட்டிருக்கிறார்கள்.

அது போலவே நமது நாட்டு சகோதரர்களில் யாராவது ஒருவன் எழுந்து நின்று பெரியவனாக முயன்றால் நாம் அனைவரும் அவனைக் கீழே பிடித்து இழுத்து உயரவிடாமல் ஒடுக்குகிறோம். ஆனால் யாராவது அந்நியன் வந்து நம்மைக் காலால் உதைத்தானானால் அது பரவாயில்லை. அப்படிப் பட்ட வாழ்க்கைக்கு நாம் பழக்கப் பட்டு விட்டோம் இல்லையா?

பரஸ்பர பொறாமை – நமது பெரும் பாபம்:

நம்மால் ஒன்றாக இணைத்து வேலை செய்ய முடியாது. நமக்குப் பரஸ்பரம் அன்பில்லை. நாம் தீவிரமான சுயநலமிகள். மூன்று பேர் ஒன்றாக வாழ்ந்தால் ஒருவரை ஒருவர் வெறுக்காமல், ஒருவரிடம் ஒருவர் பொறாமை கொள்ளாமல் இருக்கவே முடிவதில்லை.

ஆம் பலநூற்றாண்டுகளாக நாம் பயங்கரமான பொறாமையால் நிறைந்து வாழ்கிறோம். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் பொறாமைதான். இவனுக்கு ஏன் முன்னணி இடம்? எனக்கு ஏன் இல்லை? கடவுளை வழிபடும் தெய்வ சந்நிதியில் கூட முதல் ஸ்தானம் கேட்கிறோம். அந்த அளவு அடிமைத்தனமான நிலைக்கு நாம் இழிந்து விட்டோம்.

வெறுக்கத் தக்க இந்த கடும் பகையுணர்ச்சியைக் கைவிடுக. நாயைப் போல பூசலிட்டுப் பரஸ்பரம் குறைத்துக் கொள்வதை நிறுத்துங்கள். நல்ல நோக்கம், நல்ல பாதை, நேர்மையான தைரியம் – இந்த அடிப்படையில் நிமிர்ந்து நின்று ஆண்மையுடன் இருங்கள்.

அடிமையான ஒருவனது நெற்றியில் இயற்கை எப்பொழுதும் ஒரு பொட்டு வைக்கிறது. அதுதான் போராமைஎன்னும் களங்கம். அதனை அழித்து விடுவோம். எவரையும் கண்டு பொறாமைப் படவேண்டாம். நல்ல காரியம் செய்கிற ஒவ்வோர் ஊழியனுக்கும் உதவ ஆயத்தமாக இருப்போம். மூவுலகிலும் வாழும் ஒவ்வொரு ஜீவனுக்கும் நல்லாசி அனுப்புவோம்.

ஒற்றுமைப்பட்டு இணைந்து வேலை செய்வதற்கான இயக்கத்தை நிர்மாணிப்பதில் பொறாமைதான் மிகப் பெரிய முட்டுக் கட்டை:-

ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு தேசத்தையும் மேன்மையடையச் செய்வதற்கு மூன்று விஷயங்கள் தேவைப் படுகின்றன:

  1. ஒரு நல்ல குணங்களுக்கு வலிமை உண்டு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை.
  2. பொறாமையும் சந்தேகப் படுவதும் இல்லாமை
  3. நல்லவனாக வாழவும், நல்லன செய்யவும் முயலுகிறவர்களுக்கு உதவி செய்தல்

ஹிந்து தேசத்துக்கு அதியற்புதமான புத்தி கூர்மையும், மற்றும் பல திறமைகளும் இருந்தும் கூட ஏன் அது சிதறுண்டு போக வேண்டும்? நான் விடை சொல்லுவேன், பொறாமையே காரணம்.

அந்த உதவாக்கரையான ஹிந்து இனத்தைப் போல, ஒருவருக்கொருவர் மட்டரகமாகப் பொறாமை கொள்கிற, ஒருவருக்கு ஏற்படுகிற பெயர், புகழ் பற்றிப் பொறாமைப்படுகிற மக்கள் உலகில் எப்பொழுதுமே தோன்றியதில்லை. ஐந்து நிமிட நேரத்துக்கு மூன்று பேர்கள் ஒன்றாக இணைந்து இந்தப் பாரத நாட்டில் செயலாற்ற முடியாது. ஒவ்வொருவரும் மற்றவரை மிஞ்சப் போராடுகிறார்கள். போகப் போக அவ்வியக்கம் முழுவதுமே நாசமாகி விடுகிறது.

ஒற்றுமையிலும், இயக்கம் ரீதியாக மக்களை இணைத்து அமைப்பதிலும்தான் வலிமையின் ரகசியம் உள்ளது.

அதர்வ வேத சம்ஹிதையிலிருந்து அற்புதமான சுலோகம் என் நினைவுக்கு வருகிறது.

ஸங்கச்சத்வம் ஸம்வதத்வம் ஸம்வோ மனாம்ஸி ஜானதாம்
தேவா பாகம் யதா பூர்வே ஸஞ்ஜானானாமுபாஸதே (அதர்வ – காண்டம் 1)

“நீங்கள் அனைவரும் ஒரே மனத்துடன் இருங்கள்; நீங்கள் அனைவரும் ஒரே சிந்தனையுடன் இருங்கள். ஏனெனில் பழங்காலத்தில் தெய்வங்கள் ஒரே மனத்துடனிருந்ததால் ஆகுதிகளைப் பெற முடிந்தது. கடவுளர் ஒரே மனத்துடன் இருப்பதால்தான் மனிதர்களால் அவர்களை வழிபடமுடிகிறது” என்று கூறுகிறது. ஒரு மனப்பட்டு விளங்குவதே ஒரு இயக்கத்தின் வலிமையின் ரகசியம்.

ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நான்கு கோடி ஆங்கிலேயர் நம் நாட்டிலுள்ள முப்பது கோடி மக்களை எப்படி ஆள்கிறார்கள்? மனோதத்துவ சாத்திரத்தின் படி இதற்கு விளக்கம் என்ன? இந்த நான்கு கொடியினரும் ஒரே மன உறுதியுடன், ஒரே கருத்துடன் நினைக்கிறார்கள். அதன் காரணமாக அளவற்ற சக்தி அவர்களுக்கு ஏற்படுகிறது. முப்பது கோடி மக்களாகிய நீங்கள் தனித்தனியான மனக்கருத்துடன் பிரிந்து நிற்கிறீர்கள். ஆகையால் உயர்ந்த வருங்கால பாரதத்தை நிர்மாணிப்பதற்கு மக்களை சங்கமாக இணைப்பது, வலிமை திரட்டுவது, மக்களின் மனோ சக்தியை ஒருமுகப் படுத்துவது – இவைதான் ரகசியங்கலாகும்.

“திராவிடர்கள்”, “ஆரியர்கள்”, “பிராம்மணர் – பிராம்மணரல்லாதார்” என்றெல்லாம் அற்ப காரணங்களுக்காகப் பூசலிட்டுச் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வரை வருங்கால பாரதத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான பலத்தைத் திரட்டுவது, ஆற்றலை ஒன்றுபடுத்துவத் – இவற்றுக்கும் உங்களுக்கும் வெகுதூரம் கவனியுங்கள்! பாரதத்தின் வருங்காலம் இவ்வொற்றுமை உணரச்சியையே முற்றிலும் சார்ந்ததாக இருக்கிறது. மக்களுடைய மனோசக்திகளைத் திரட்டுவது, இணங்கி இணைந்து நடக்க வைப்பது, எல்லோரையும் ஒருமுகப் படுத்துவது, இதுவே வெற்றிக்கு ரகசியம்.

சமயமாகிற போது அடிப்படையின் மீது நிர்மாணிக்க வேண்டும்:

மற்றெல்லா நாடுகளைக் காட்டிலும் பாரதத்திலுள்ள பிரச்னைகள் அதிக சிக்கலாகவும், மிகப் பெரிய வடிவுடனும் உள்ளன. இனம், சமயம், மொழி, அரசாங்கம் இவை எல்லாம் சேர்ந்து ஒரு தேசம் உருவாகிறது.

நம் அனைவருக்கும் பொதுவாக இருப்பது நமது புனிதமான பரம்பரை, நமது புனிதமான சமயம். அது ஒன்றுதான் நமக்குப் பொதுவான அடிப்படை அதன் மீது தான் நாம் நிர்மாணித்தாக வேண்டும். ஐரோப்பாவில் அரசியல் கருத்துக்கள் தேசிய ஒற்றுமையை உண்டாக்குகின்றன. ஆதலால் நமது நாட்டின் எதிர்கால வாழ்க்கைக்கு முதற்காரணமாக, முதற்படியாக, சமய ஒற்றுமை அமைவது இன்றியமையாத தேவை ஆகும். இந்த நாடு முழுவதிலும் ஒரு சமயத்தை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்க வேண்டும். ஒரு சமயம் என்றால் எனது கருத்து என்ன? கிறிஸ்தவர்களும், முகம்மதியர்களும், பௌத்தர்களும் சொல்லுகிற கருத்தின் படி நான் கூறவில்லை.

ஜீவாதாரமான பொதுக் கொள்கைகளை வெளிக்கொணர்க:

நமது சமயத்திலுள்ள உட்பிரிவுகளின் வழியும், முறை முடிவுகளும், எவ்வளவு வித்தியாசப் பட்டிருந்தாலும், தம்முடையதே உயர்ந்தது எனப் பலவிதமான உரிமை கோரினாலும், அதற்கு சில பொதுவான அடிப்படைக் கருத்துக்கள் உள்ளன என்பது நமக்குத் தெரியும். இப்பொதுக் கொள்கைகளின் எல்லைக் கோட்டுக்குள்ளே ஒவ்வோர் உட்பிரிவும் எல்லையில்லாத அளவுக்குச் சுதந்திரமாகச் சிந்திக்கவும், தத்தமக்கு ஏற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றியும் ஆச்சரியகரமான வித்தியாசங்களுடன் வாழவும், இந்த சமயம் இடம் தருகிறது.

இந்த ஜீவாதாரமான பொதுக் கொள்கைகளைத் தேர்ந்து பொறுக்கி எடுக்க வேண்டும். இந்த நாடு நெடுகிலும் உள்ள ஒவ்வொரு ஆண், பெண் குழந்தையும் இதை அறிந்து புரிந்து வாழ்க்கையில் நடத்திக் காட்ட வேண்டும். இதைத்தான் நாம் விரும்புகிறோம். இது முதற்படியாகும். ஆகவே இதனைச் செய்து முடிக்க வேண்டும்.

சமயத்தின் ஒன்றுபடுத்தும் சக்தி:

ஆசியாவின் குறிப்பாக, பாரத நாட்டில் மக்களிடையே இன வேறுபாட்டுச் சங்கடமிருக்கலாம்; மொழிக் கஷ்டம் இருக்கலாம். சமூகத் தொல்லைகள் இருக்கலாம். தேசியத் தொந்தரவுகள் இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் சமயத்தின் ஒன்றுபடுத்தும் சக்திக்கு முன்னால் மறைந்து விடுகின்றன. சமய லட்சியங்களை விடப் பாரத மக்களுக்கு உயர்வானது வேறு எதுவும் இல்லை. பாரதீய வாழ்க்கையின் ஆதார சுருதியாக சமயம் அமைந்துள்ளது. மக்களின் இயல்பை ஒட்டி, மிகக் குறைவான எதிர்ப்பு உள்ள வழிமுறை மூலம்தான் நாம் வேலை செய்ய முடியும்.

சமயமாகிற லட்சியந்தான் மிக உயர்ந்த லட்சியம் என்பது மட்டுமல்ல; பாரதத்தை பொருத்தவரை வேலை செய்வதற்குச் சாத்தியமான ஒரே பாதை அதுதான். முதலில் இதனைப் பலப்படுத்தாமல் வேறு எந்த வழிமுறை மூலமாகவாவது வேலை செய்தால் அதன் முடிவு அபாயகரமானதாக இருக்கும். ஆகையால் வருங்கால பாரதத்தை நிர்மாணிப்பதற்கு முதற்படியாகப் பழங்காலமாகிற பாறையிலிருந்து வருங்காலத்தை நிர்மாணிக்க முதலில் குடைந்து எடுக்க வேண்டிய பாறை, சமய ஒற்றுமை தான்.

சிதறிக் கிடக்கும் ஆத்மீக சக்தியை ஒன்று திரட்டல்:

ஹிந்துக்களாகிய நாம் – துவைதிகள், விசிஷ்டாத்வைதிகள், அத்வைதிகள், சைவர்கள், பாசுபதர்கள் என்று எத்தகைய உட்பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், நமக்குப் பின்னணியாகச் சில பொதுவான கருத்துக்கள் உள்ளன. இந்தக் கருத்துக்களை ஹிந்துக்கள் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். நமது நன்மைக்காகவும், நாம் நமது அற்பத்தனமான சண்டைகளையும் வேறுபாடுகளையும் கைவிட வேண்டிய காலம் வந்துள்ளது.

இச்சண்டை பூசல்கள் அனைத்தும் தவறானவை. நமது சாஸ்திரங்கள் இவற்றைக் கண்டிக்கின்றன. நமது முன்னோர்கள் இவற்றை வெறுத்துத் தடுத்திருக்கிறார்கள். பெயரும் புகழும் வாய்ந்த நம் மூதாதையர்களின் சந்ததியென நாம் உரிமை கொண்டாடுகிறோம். அவர்களது இரத்தம் நமது நரம்புகளில் ஓடுகிறது. தம் குழந்தைகள் இவ்வாறாக அற்பவித்தியாசங்களுக்காகச் சண்டையிடுவதைக் கண்டு, அந்த மகாபுருஷர்கள் அருவருப்புக் கொள்வார்கள் என்பதை உணருங்கள். பாரதத்தில் தேசிய ஐக்கியம் என்றால் சிதறிக்கிடக்கும் அதன் ஆத்மீக இசைக்கு ஏற்ற லயத்துடன் எவருடைய இதயங்கள் தாளமிடுகின்றனவோ அத்தகைய இதயங்களை இணைப்பதே. அதுவே பாரத தேசத்தை இணைப்பது ஆகும்.

(தொடரும்..)

அடுத்த பகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *