சாந்தோக்ய உபநிஷதம் – ஆறாம் அத்தியாயம்
(1)
அருணனின் பேரன் சுவேதகேது என்றொருவன் இருந்தான். அவன் தந்தை (உத்³தா³லகர் ஆருணி) அவனிடம் சொன்னார் – சுவேதகேது, பிரமசாரியாய் வாழ்ந்து கற்றிடு. அன்பு மகனே, நம் குடும்பத்தில் படிக்காமல் பெயரளவுக்கு பிராமணனாக எவரும் இருந்ததில்லை.
பன்னிரண்டு வயதில் போனவன், வேதங்கள் அனைத்தும் கற்று இருபத்தி நான்கு வயதில் திரும்பி வந்தான். சுயபெருமிதத்துடன், தன்னை நன்கு கற்றவனாக எண்ணிக் கொண்டு, இறுக்கத்துடன் இருந்தான்.
தந்தை கேட்டார்: அன்பு மகனே சுவேதகேது, சுயபெருமிதத்துடன், நன்கு கற்றவனாக எண்ணிக் கொண்டு, இறுக்கத்துடன் நீ இருப்பதைக் காண்கிறேன். கேளாததைக் கேட்கச் செய்வதும், உணராததை உணரச் செய்வதும், அறியாததை அறியச் செய்வதுமான அந்த உபதேசத்தைக் கேட்டுக் கற்று வந்தாயா?
போற்றுதற்குரியவரே, என்ன உபதேசம் அது?
அன்பு மகனே, ஒரு மண்கட்டியினால் மண்ணாலானவை அனைத்தும் அறியப் படுகின்றன. மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மண் மட்டுமே சத்தியம்.
அன்பு மகனே, ஒரு பொன்மணியால் பொன்னாலானவை அனைத்தும் அறியப் படுகின்றன. மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. பொன் மட்டுமே சத்தியம்.
அன்பு மகனே, ஒரு இரும்பு நகவெட்டியால் இரும்பாலானவை அனைத்தும் அறியப் படுகின்றன. மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. இரும்பு மட்டுமே சத்தியம்.
இதுவே அந்த உபதேசம்.
அன்பு மகன் கூறினான்: போற்றுதலுக்குரிய அந்த ஆசிரியர்கள் இதனை அறிந்திருக்கவில்லை போலும். அறிந்திருந்தால், அதை எப்படி எனக்கு சொல்லாமல் இருந்திருப்பார்கள்? போற்றுதலுக்குரியவரே, நீங்களே எனக்கு அதனைக் கூறுங்கள்.
அப்படியே ஆகட்டும் என்றார் அவர்.
(2)
அன்பு மகனே, ஆதியில் சத் ஒன்று மட்டுமே இருந்தது, இரண்டற்று. ஆதியில் அசத் ஒன்று மட்டுமே இருந்தது, இரண்டற்று – என்பார் சிலர். அந்த அசத்திலிருந்து சத் தோன்றியது.
அது எப்படி அசத்திலிருந்து சத் தோன்றும் அன்பு மகனே? அவர் கூறினார்: ஆதியில் சத் ஒன்று மட்டுமே இருந்தது, இரண்டற்று.
அது எண்ணியது – நான் பலவாகுக, நான் வளர்க. அது அக்னியைப் படைத்தது. அந்த அக்னி எண்ணியது – நான் பலவாகுக, நான் வளர்க. அது நீரைப் படைத்தது. எனவே, மனிதன் உலர்கையிலும், வியர்க்கையிலும், அந்த நெருப்பே நீராகப் பிறக்கிறது.
அந்த நீர் எண்ணியது – நான் பலவாகுக, நான் வளர்க. அது அன்னத்தைப் படைத்தது. எனவே, மழை பொழிகையில் அன்னம் நிறைகிறது. நீரிலிருந்தே உணவாகும் அன்னம்* பிறக்கிறது.
(*: இந்த மந்திரங்கள் அனைத்திலும் ‘அன்னம்’ என்பது அன்னத்தை விளைவிக்கும் பூமி தத்துவத்தைக் குறிக்கும்).
(3)
அனைத்து உயிர்களுக்கும் பிறப்பிடங்கள் மூன்றே தான் – முட்டையிலிருந்து பிறப்பவை, உயிரிலிருந்து பிறப்பவை, விதையிலிருந்து முளைத்தெழுபவை.
அந்த தெய்வம் எண்ணியது: நல்லது, இந்த மூன்று தெய்வங்களிலும் (நெருப்பு, நீர், பூமி) ஜீவாத்மாவாக உட்புகுந்து பெயர்களாகவும் உருவங்களாகவும் (நாமரூபங்கள்) பிரிந்து வெளிப்படுவேன்.
இவை ஒவ்வொன்றையும் மூன்றாக்குவேன் – இவ்விதம் எண்ணி அந்த தெய்வம் இந்த மூன்று தெய்வங்களிலும் ஜீவாத்மாவாக உட்புகுந்து பெயர்களாகவும் உருவங்களாகவும் பிரிந்து வெளிப்பட்டது.
அவை ஒவ்வொன்றையும் மூன்றாக்கியது. அன்பு மகனே, இந்த மூன்று தெய்வங்களும் எப்படி மூன்று மூன்றாக ஆயின என்பதை என்னிடம் இருந்து அறிவாய்.
(4)
அக்னியின் செஞ்சுடர் – அது நெருப்பின் வண்ணம். வெண்மை நீருடையது. கருமை பூமியினுடையது. இவ்விதம் மறைந்தது அக்னியின் அக்னித்துவம். மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மூன்று வண்ணங்கள் மட்டுமே சத்தியம்.
சூரியனின் செம்மை – அது நெருப்பின் வண்ணம். வெண்மை நீருடையது. கருமை பூமியினுடையது. இவ்விதம் மறைந்தது சூரியனின் சூரியத்துவம். மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மூன்று வண்ணங்கள் மட்டுமே சத்தியம்.
நிலவின் செம்மை – அது நெருப்பின் வண்ணம். வெண்மை நீருடையது. கருமை பூமியினுடையது. இவ்விதம் மறைந்தது சந்திரனின் சந்திரத்துவம். மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மூன்று வண்ணங்கள் மட்டுமே சத்தியம்.
மின்னலின் செம்மை – அது நெருப்பின் வண்ணம். வெண்மை நீருடையது. கருமை பூமியினுடையது. இவ்விதம் மறைந்தது மின்னலின் மின்னல்துவம். மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மூன்று வண்ணங்கள் மட்டுமே சத்தியம்.
முன்னாளில் இதனை அறிந்திருந்த இல்லறத்தாரான பெரியோரும், வேதஞானியரான பெரியோரும் கூறினர்: ‘இனி யாம் கேட்காதது, எண்ணாதது, அறியாதது ஒன்று உள்ளதென யாரும் சொல்லமாட்டார்கள்’. இவற்றின் (மூன்று தெய்வங்கள்) மூலம், அவர்கள் அனைத்தையும் அறிந்தனர்.
செம்மையின் தோற்றங்கள் அனைத்தும் நெருப்பென அறிந்தனர். வெண்மையின் தோற்றங்கள் அனைத்தும் நீரென அறிந்தனர். கருமையின் தோற்றங்கள் அனைத்தும் பூமியென அறிந்தனர்.
அறியாத தோற்றங்கள் அனைத்தும் இதே தெய்வங்களின் சேர்க்கைகள் என அறிந்தனர். அன்பு மகனே, மனிதரிடத்தில் எவ்வாறு இம்மூன்று தெய்வங்களும் மூவடிவாகின்றன என்பதை இப்போது அறிவாய்.
(5)
உண்ணும் அன்னம் மூன்றாய்ப் பிரிகிறது. அதன் பருண்மை மலமாகிறது. அதன் நடுவுரு ஊனுடம்பாகிறது. நுண்மை மனமாகிறது.
உண்ணும் நீர் மூன்றாய்ப் பிரிகிறது. அதன் பருண்மை மூத்திரமாகிறது. அதன் நடுவுரு உதிரமாகிறது. நுண்மை பிராணனாகிறது.
உண்ணும் நெருப்பு மூன்றாய்ப் பிரிகிறது. அதன் பருண்மை எலும்பாகிறது. அதன் நடுவுரு மஜ்ஜையாகிறது. நுண்மை வாக்காகிறது.
அன்பு மகனே, அன்னத்தால் ஆனது மனம். நீரால் ஆனது பிராணன். நெருப்பால் ஆனது வாக்கு.
‘மேலும் விளக்குங்கள், போற்றுதலுக்குரியவரே’.
அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.
(6)
அன்பு மகனே, தயிர் கடையும்போது, அதன் நுண்மை மேலெழுகிறது. அது நெய்யாகிறது.
அது போலவே, அன்பு மகனே, உண்ணும் அன்னத்தின் நுண்மை மேலெழுகிறது. அது மனமாகிறது.
அன்பு மகனே, பருகும் நீரின் நுண்மை மேலெழுகிறது. அது பிராணனாகிறது.
அன்பு மகனே, உண்ணும் நெருப்பின் நுண்மை மேலெழுகிறது. அது வாக்காகிறது.
ஆகவே, அன்பு மகனே, அன்னத்தால் ஆனது மனம். நீரால் ஆனது பிராணன். நெருப்பால் ஆனது வாக்கு.
‘மேலும் விளக்குங்கள், போற்றுதலுக்குரியவரே’.
அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.
(7)
அன்பு மகனே, பதினாறு கலைகள் கொண்டவன் மனிதன். நீ பதினைந்து நாட்கள் உண்ணாமல் இரு, நீர் மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் பருகிடு. நீரால் ஆனது பிராணன். எனவே, நீர் குடித்துக் கொண்டிருக்கும் வரை பிராணன் அறுபடுவதில்லை.
சுவேதகேது பதினைந்து நாட்கள் உண்ணவில்லை. பிறகு அவரிடம் வந்து கேட்டான்: என்ன சொல்வது ஐயா?
ருக், யஜுர், சாம வேத மந்திரங்களைச் சொல், அன்பு மகனே.
அவை எதுவும் மனதில் எழவில்லை ஐயா.
அவர் சொன்னார்: எரியும் பெரு நெருப்பில் விட்டில் பூச்சி அளவுள்ள ஒரே ஒரு கங்கு மட்டும் எஞ்சியிருந்தால், இதற்கு மேல் அது எரியாது. அன்பு மகனே, உனது பதினாறு கலைகளில் ஒரு கலை மட்டுமே உன்னிடம் எஞ்சியுள்ளது. அதனால் வேதங்கள் உனக்கு நினைவு வரவில்லை. போ, உணவு உண். பிறகு நான் சொல்வது புரியும்.
அவன் உண்டான். பிறகு அவரிடம் சென்றான். அவர் கேட்டதனைத்திற்கும் அவன் விடையளித்தான்.
அவர் சொன்னார்: எரியும் பெரு நெருப்பில் விட்டில் பூச்சி அளவுள்ள ஒரே ஒரு கங்கு மட்டும் எஞ்சியிருந்தாலும், உலர்ந்த புல்லைப் போட்டு அதை முன்பை விடவும் பெரிதாகச் சுடர்ந்தெரியச் செய்யலாம். அதே போன்று, உனது பதினாறு கலைகளில் ஒரே ஒரு கலை மட்டுமே எஞ்சியிருந்தது. அன்னம் அதைச் சுடர்ந்தெரியச் செய்தது. அதனால் வேதங்களை இப்போது நீ உணர்கிறாய்.
ஆகவே, அன்பு மகனே, அன்னத்தால் ஆனது மனம். நீரால் ஆனது பிராணன். நெருப்பால் ஆனது வாக்கு.
அவர் கூறியதனைத்தும் அவன் அறிந்தவனானான். ஆம், அறிந்தவனானான்.
(8)
உத்தாலகர் ஆருணி தன் மகன் சுவேதகேதுவிடம் கூறினார்: அன்பு மகனே, உறக்கத்தின் (ஸ்வப்னம்) உண்மை இயல்பை அறிந்து கொள். மனிதன் உறங்கும்போது அவன் ‘சத்’துடன் ஒன்றுபடுகிறான். தனது உண்மை இயல்பை அடைகிறான். அவன் ‘உறங்குகிறான்’ (ஸ்வபிதி) என்கிறார்கள், ஏனென்றால் அவன் தன் சுயமான தன்மைக்கு (ஸ்வம்) சென்று விட்டான் (அபீத:).
கயிற்றில் கட்டப் பட்ட பறவை திசை திசையாகப் பறந்தும் இடம் காணாமல் கடைசியில் கட்டப் பட்ட இடத்தையே வந்தடைகிறது. அது போல, அன்பு மகனே, மனம் திசை திசையாய்ப் பறந்தும் இடம் காணாமல் கடைசியில் பிராணனிடம் வந்தடைகிறது. ஏனெனில், அன்பு மகனே, மனம் பிராணனில் கட்டப் பட்டிருக்கிறது.
அன்பு மகனே, பசி தாகத்தின் உண்மை இயல்பை அறிந்து கொள். மனிதனுக்கு பசி (அச’நா) எடுக்கையில் அவன் உண்பதை நீர் இட்டுச் செல்கிறது. பசுக்களை இட்டுச் செல்பவனையும் (கோ³-நாய:), குதிரைகளை இட்டுச் செல்பவனையும் (அச்’வ-நாய:), மனிதர்களை வழிநடத்துபவனையும் (புருஷ-நாய:) நாம் குறிப்பது போல, உணவை வழிநடத்துபவனாக (அச’-நாய:) நீரைக் குறிக்கிறோம். அன்பு மகனே, இவ்வாறு இந்தக் குருத்து (உடல்) வளர்கிறது. வேரின்றி இது வளர முடியாது என்பதை அறிந்து கொள்.
அன்னத்தில் (பூமியில்) அன்றி அந்த வேர் வேறு எங்கு இருக்க முடியும்? அதே போல, அன்பு மகனே, அன்னம் குருத்து. அதன் வேரைத் தேடிச் செல், அது நீர். நீர் குருத்து, அதன் வேரைத் தேடிச் செல், அது நெருப்பு. நெருப்பு குருத்து. அதன் வேரைத் தேடிச்செல், அது சத். இந்த அனைத்துயிர்களுக்கும் வேர் ‘சத்’. அவற்றின் வசிப்பிடம் சத். அவை நிலைபெற்றுள்ளதும் சத்திலேயே.
மேலும், மனிதனுக்கு தாகமெடுக்கையில் (பிபாஸா) அவன் குடிப்பதை நெருப்பு இட்டுச் செல்கிறது. பசுக்களை இட்டுச் செல்பவனையும் (கோ³-நாய:), குதிரைகளை இட்டுச் செல்பவனையும் (அச்’வ-நாய:), மனிதர்களை வழிநடத்துபவனையும் (புருஷ-நாய:) நாம் குறிப்பது போல, நீரை வழிநடத்துபவனாக (உத³-நாய:) நெருப்பைக் குறிக்கிறோம். இவ்வாறு இந்தக் குருத்து (உடல்) வளர்கிறது. வேரின்றி இது வளர முடியாது என்பதை அறிந்து கொள்.
நீரில் அன்றி அந்த வேர் வேறு எங்கு இருக்க முடியும்? அதே போல, அன்பு மகனே, நீர் குருத்து. அதன் வேரைத் தேடிச் செல், அது நெருப்பு. நெருப்பு குருத்து, அதன் வேரைத் தேடிச் செல், அது சத். ஆம் அன்பு மகனே, இந்த அனைத்துயிர்களுக்கும் வேர் ‘சத்’. அவற்றின் வசிப்பிடம் சத். அவை நிலைபெற்றுள்ளதும் சத்திலேயே.
இந்த மூன்று தெய்வங்களும் (அன்னம், நீர், நெருப்பு) எவ்வாறு மனிதனை அடைந்து மும்மூன்றாக ஆகின்றன என்பதை முன்பே கூறினேன். மனிதன் இங்கிருந்து போகும்போது, அவன் வாக்கு மனத்தில் ஒன்றுகலந்து விடுகிறது. மனம் பிராணனில், பிராணன் நெருப்பில், நெருப்பு பரம்பொருளான தெய்வத்தில்.
அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.*
மேலும் விளக்குங்கள், போற்றுதலுக்குரியவரே.
அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.
(* மூலம்: “ஸ ய ஏஷ அணிமைதத்³ ஆத்ம்யம் இத³ம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா தத்வமஸி ச்’வேதகேதோ”. தத்வமஸி – நீயே அது – என்பது வேதாந்த தரிசனத்தின் நான்கு மகாவாக்கியங்களில் ஒன்று).
(9)
அன்பு மகனே, விதவிதமான மரங்களிலிருந்து அவற்றின் ரசத்தை எடுத்துச் சேர்த்து ஒரு ரசமாக, தேனாக சமைக்கின்றன தேனீக்கள். அந்த ரசங்களுக்கு நான் இந்த மரத்தின் ரசம், நான் அந்த மரத்தின் ரசம் என்று பகுத்தறியும் விவேகம் இருப்பதில்லை. அது போலவே, இந்த அனைத்து உயிர்களும் ‘சத்’தில் கலந்திருக்கையில் (உறக்கத்தில், இறப்பில், மகா பிரளயத்தில்), நாம் சத்தில் ஒன்றுகலந்திருக்கிறோம் என்பதை அறிவதில்லை.
புலியோ சிங்கமோ ஓநாயோ பன்றியோ புழுவோ பூச்சியோ விட்டிலோ கொசுவோ, இங்கிருக்கும் இவை எதுவாயினும் அவை மீண்டும் அதாக ஆகின்றன.
அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.
மேலும் விளக்குங்கள், போற்றுதலுக்குரியவரே.
அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.
(10)
அன்பு மகனே, இந்தக் கிழக்கு நதிகள் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன, மேற்கு நதிகள் மேற்கை நோக்கி. அவை கடலில் இருந்து* கடலை நோக்கிச் செல்கின்றன. கடலாகவே ஆகின்றன. அங்கு, தான் இந்த நதி தான் அந்த நதி என்பதை அவை அறிவதில்லை. அது போலவே, ‘சத்’திலிருந்து வந்த இந்த அனைத்து உயிர்களும் ‘சத்’தில் இருந்து வந்திருக்கிறோம் என்பதை அறிவதில்லை.
புலியோ சிங்கமோ ஓநாயோ பன்றியோ புழுவோ பூச்சியோ விட்டிலோ கொசுவோ, இங்கிருக்கும் இவை எதுவாயினும் அவை மீண்டும் அதாக ஆகின்றன.
அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.
மேலும் விளக்குங்கள், போற்றுதலுக்குரியவரே.
அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.
(*: கடல் நீர் ஆவியாகி மழையாய்ப் பொழிவதைக் குறிக்கிறது).
(11)
அன்பு மகனே, இந்தப் பெருமரத்தின் வேரில் வெட்டினால், உதிரம் (பசுஞ்சாறு) தெறிக்க, அது உயிர்வாழும். அதன் நடுவில் வெட்டினாலும், உதிரம் தெறிக்க அது உயிர்வாழும். அதன் மேலே வெட்டினாலும், உதிரம் தெறிக்க அது உயிர்வாழும். மரம் முழுவதும் உயிரால் (ஜீவாத்மா) நிரம்பியுள்ளதாலேயே, அது நீர் பருகி இன்புற்று நிற்கிறது.
இந்த மரத்தின் ஒரு கிளையை விட்டு உயிர் சென்று விட்டால், அந்தக் கிளை காய்கிறது. இரண்டாவதை விட்டுச் சென்று விட்டால், அது காய்கிறது. மூன்றாவதை விட்டுச் சென்று விட்டால், அதுவும் காய்கிறது. மரம் முழுவதையும் விட்டுச் சென்றுவிட்டால், மரம் காய்கிறது.
அது போலவே, அன்பு மகனே, உயிர் விட்டுச் சென்றுவிட்டால் இதுவும் (உடல்) அழியும். ஆனால் உயிர் (ஜீவாத்மா) அழிவதில்லை.
அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.
மேலும் விளக்குங்கள் ஐயா.
அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.
(12)
இந்த மரத்திலிருந்து ஒரு அத்திப்பழம் கொண்டு வா.
இதோ ஐயா.
இதை உடை.
உடைத்துவிட்டேன் ஐயா.
அதில் என்ன காண்கிறாய்?
துகள்கள் போன்று சிறிய விதைகள், ஐயா.
அவற்றில் ஒன்றை உடை.
உடைத்துவிட்டேன் ஐயா.
அங்கு என்ன காண்கிறாய்?
ஒன்றுமில்லை ஐயா.
அவர் சொன்னார் – அன்பு மகனே, உன்னால் அங்கு காணமுடியாத நுண்ணிய சூட்சுமப் பொருள்; இந்த நுண்பொருளிலிருந்தே இந்தப் பெரும் அத்திமரம் வளர்ந்து நிற்கிறது.
சிரத்தை கொள், அன்பு மகனே. அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.
மேலும் விளக்குங்கள் ஐயா.
அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.
(13)
இந்த உப்பைத் தண்ணீரில் போடு. பிறகு காலையில் என்னிடம் வா.
அவன் அப்படியே செய்தான்.
அவர் சொன்னார் – குழந்தாய், இரவில் தண்ணீரில் போட்டாயே உப்பு, அதைக் கொண்டு வா.
அவன் அதைத் தேடிப் பார்த்தும் காணவில்லை. முழுதாகக் கரைந்து விட்டிருந்தது.
குழந்தாய், இதன் மேலிருந்து ஒரு வாய் தண்ணீர் குடி. எப்படி இருக்கிறது?
உப்பாக.
நடுவிலிருந்து ஒரு வாய் குடி. எப்படி இருக்கிறது?
உப்பாக.
அடியிலிருந்து ஒரு வாய் குடி. எப்படி இருக்கிறது?
உப்பாக.
தண்ணீரைக் கொட்டிவிட்டு வா.
அவன் அப்படியே செய்தான். பிறகு சொன்னான் – அது எப்போதும் இருக்கிறது.
அவர் சொன்னார் – அன்பு மகனே, இதில் (நீரில்) இருப்பதை* உன்னால் காண முடியவில்லையே. அதுபோலவே இதிலும் (உடலில்).
அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.
மேலும் விளக்குங்கள் ஐயா.
அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.
(* இருப்பு = சத்)
(14)
அன்பு மகனே, காந்தாரத்திலிருந்து கண்களைக் கட்டிக் கூட்டிவந்து ஆளில்லாத இடத்தில் ஒருவனை விட்டுவிடுகிறார்கள். கிழக்கையும் வடக்கையும் தெற்கையும் மேற்கையும் பார்த்துத் திரும்பி, அவன் கூவுகிறான் – கண்களைக் கட்டிக் கொண்டுவந்து விட்டார்கள், கண்களைக் கட்டிக் கொண்டுவந்து விட்டார்கள்!
பிறகு ஒருவன் வந்து அவன் கண்கட்டை அவிழ்த்துவிட்டு கூறுகிறான் – அந்தத் திசையில் காந்தாரம், அந்தத் திசையில் போ. பிறகு அவன் கிராமம் கிராமமாக கேட்டு, அறிந்து, தானாக தெளிந்து காந்தாரத்தைச் சென்று அடைந்து விடுகிறான், ஆசிரியன் மூலம் இங்கு மனிதன் அறிவது போல. விடுபடாத வரையில் தான் தாமதம், பிறகு உடன் அதனுடன் ஒன்றுகலந்து விடுகிறான்.
அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.
மேலும் விளக்குங்கள் ஐயா.
அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.
(15)
அன்பு மகனே, நோயுற்ற மனிதனைச் சுற்றி நின்று உற்றார் கேட்கிறார்கள் – என்னைத் தெரிகிறதா? என்னைத் தெரிகிறதா? என்று. அவன் வாக்கு மனத்திலும், மனம் பிராணனிலும், பிராணன் நெருப்பிலும், நெருப்பு பரம்பொருளான தெய்வத்திலும் ஒன்று கலந்திடாத வரையில், அவர்களை அவனால் தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால், அவன் வாக்கு மனத்திலும் மனம் பிராணனிலும், பிராணன் நெருப்பிலும், நெருப்பு பரம்பொருளான தெய்வத்திலும் ஒன்றுகலந்துவிட்டால், அவர்களை அவனால் தெரிந்து கொள்ள முடியாது.
அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.
மேலும் விளக்குங்கள் ஐயா.
அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.
(16)
அன்பு மகனே, கையைப் பிடித்து அவனைக் கூட்டி வருகிறார்கள். இவன் அபகரித்திருக்கிறான். திருடியிருக்கிறான் என்கிறார்கள். அவன் அதை செய்தோன் (கர்த்தா) எனில், தன்னை பொய்யாக்கிக் கொள்கிறான். பொய்மயமாகி பொய்யால் தன்னை நிரப்பி அந்தக் கொதிக்கும் கோடாலியைத் தொடுகிறான். அவன் எரிகிறான். கொல்லப் படுகிறான்.
அவன் செய்திலன் (அகர்த்தா) எனில், தன்னை சத்தியமாக்கிக் கொள்கிறான். சத்தியமயமாகி சத்தியத்தால் தன்னை நிரப்பி அந்தக் கொதிக்கும் கோடாலியைத் தொடுகிறான். அவன் எரிவதில்லை. விடுபடுகிறான்.
அங்கு அந்த மனிதன் எரிவதில்லை. அவ்வாறே, அது இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.
அவர் கூறியதனைத்தும் அவன் அறிந்தவனானான். ஆம், அறிந்தவனானான்.
ஓம்.
(ஆறாம் அத்தியாயம் முற்றிற்று)
அற்புதமான மொழி நடை நன்றி ஜடாயு
மிகவும் அழகாக அருமையாக எளிமையாக எழுதிய பதிவு…
அமுதக் கடலில் இருந்து தெறித்த துளிகளும் அமுதமென!!!
பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!
அன்பர் ஜடாயுவுக்கு,
உமது பணி மேலும் தொடரட்டும். தமிழில் அசிங்கமாக எழுதவும், அசிங்கமாக பேசவும் மட்டுமே முடியும் என்று செயல்படும், கழக தமிழ் கலாசாரத்தின் நடுவில், தமிழ் ஒரு உயர் தனி செம்மொழி , அது ஒரு தேன், அது ஒரு அமிர்தம் என்பதை உமது தமிழ் நடையும், அதன் லாவகமும் விளக்குகிறது. நீவிர் பல்லாண்டு வாழ்ந்து மேலும், இனிய தமிழ்ப்பணி ஆற்றுவீராக. செல்வ முத்துக்குமரன் உமக்கு எல்லா நலன்களையும் வழங்க வேண்டுகிறேன்.
வெகு அருமை. தெள்ளிய நடை, திகட்டாத மொழியாக்கம். பாராட்டுக்கள்.
ஒரு சிறு திருத்தம்….
///இந்த மரத்திலிருந்து ஒரு அத்திப்பழம் கொண்டு வா.///
///உன்னால் அங்கு காணமுடியாத நுண்ணிய சூட்சுமப் பொருள்; இந்த நுண்பொருளிலிருந்தே இந்தப் பெரும் ஆலமரம் வளர்ந்து நிற்கிறது.///
பழம் ‘அத்தி’ என்றால், மரமும் ‘அத்தி’.
மரம் ‘ஆலம்’ என்றால் பழமும் ‘ஆலம்’.
திருத்தப்படவேண்டியது எது என்பதை மூலம் கண்டு திருத்துக.
நல்ல விளக்கம்.
ஒரு பொருளை எப்படியெல்லாம் விளக்க வேண்டும் என்பதை இந்த அத்தியாயம் மூலமாக அறிகிறோம்.
நன்றி ஜடாயு.
மகோன்னதமான முயற்சி, இதை உணர்வது தானே ஞானம் அடைவது. இதை மொழிபெயர்த்த ஜடாயு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
வணக்கத்துடன்,
கவ. கார்த்திகேயன்.
சிறப்பான மொழிபெயர்ப்பு, ஜடாயு!
ஜடாயு அவர்களே,
அருமையான மொழிபெயர்ப்பு… வடமொழில் உருவான கவித்துவம் சிறிதும் குறையாமல் கொடுத்துள்ளீர்கள்… மனதில் உச்சபட்ச எழுச்சியை அளித்தது.
கோடி நன்றிகள்,
-பாலாஜி.
வாழ்த்தும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. உங்களது அன்பு மொழிகளே இத்தகைய மொழியாக்கங்களில் ஈடுபட எனக்கு ஊக்கமளிக்கின்றன.
அடியவன்,
// பழம் ‘அத்தி’ என்றால், மரமும் ‘அத்தி’.
மரம் ‘ஆலம்’ என்றால் பழமும் ‘ஆலம்’. //
மூலத்தில் உள்ள சொல் “ந்யக்ரோத:”. சம்ஸ்கிருத அகராதிப் படி இந்தச் சொல் மேலே உள்ள இரண்டையுமே குறிக்கீறது.
न्यग्रोध (p. 148) [ nyag-ródha ] m. [growing down wards], Indian fig-tree, banyan (ficus Indica).
ஆனால் இந்த இடத்தில் அத்தி தான் சரி. இந்த உபநிஷத்தின் ஆங்கில மொழியாக்கங்களில் எல்லாம் fig fruit, fig tree என்றே இருக்கிறது. விதைகள் பற்றிய வர்ணனையும் அதற்கே பொருந்துகிறது.
திருத்தி விட்டேன்.
“ஆலமர் வித்தின் அருங்குறள் ஆனான்” “ஆலமர் வித்தினில் அடங்கும் தன்மையான்” போன்ற கம்பன் வரிகளின் ஞாபகத்தில் மொழிபெயர்ப்பின் போது அங்கு ஆலமரம் வந்து விட்டதோ என்று தோன்றுகிறது :))
திரு ஜடாயு , அருமையாக உள்ளது, தொடர்ந்து எழுதுங்கள். என்னை மாதிரியான ஆட்கள் உபநிஷதங்களை இந்த மாதிரி படித்தால் தான் உண்டு. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை.
இறுக்கமான மொழி நடையில் தத்துவ நூல்களைப் பயின்று பழகிய எனக்குத் திரு ஜடாயு அவர்களின் சாந்தோக்ய உபநிடத மொழிபெயர்ப்பின் இதமான மொழி நடை புதுக் கவிதை வாசிக்கும் அனுபவத்தை அளித்தது. யாருக்கும் புரியும்படியான எளிய நடை.
சாந்தோக்ய உபநிடதம், சைவசித்தாந்தம் பிரமாணமாகக் கொள்ளும் உபநிடதங்களில் ஒன்று அதிலும் 6ஆம் பிரபாடகம் குறிப்பிடத் தக்கதொன்று. சிலபகுதிகளுக்குச் சைவசித்தாந்தம் தரும் விளக்கங்களைத் தமிழ் ஹிந்து வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
//அன்பு மகனே, ஆதியில் சத் ஒன்று மட்டுமே இருந்தது, இரண்டற்று. ஆதியில் அசத் ஒன்று மட்டுமே இருந்தது, இரண்டற்று – என்பார் சிலர். அந்த அசத்திலிருந்து சத் தோன்றியது.//
‘இரண்டற்று’-இப்பதம் உபநிடதத்தில் ஏகமாத்விதீயம்’ என்று காணப்படுகின்றது. இதற்குத் ‘துவிதமின்மை’ எனப் பொருள் கூறுவர். ஜடாயு அவர்களின் ‘இரண்டற்று’ என்ற மொழிபெயர்ப்பு சைவசித்தாந்தத்திற்கு ஏற்புடையது. அ+துவிதம் என்ற பதத்தின் முன்னுள்ள (ந)அகரம் எதிர்மறைப் பொருளைத் தரும். அது அன்மை, இன்மை முதலிய ஆறு வகைப்படும். இந்திய தத்துவஞானத்தில் அத்துவிதம் என்னும் பதத்திற்கு ‘இரண்டின்மை’ என்ற பொருளையே பிறர் கொள்வர். சைவசித்தாந்திகள் ‘ அன்மைப் பொருளையே கொள்வர். இதற்கு வடசொல் ‘தத்ஸாத்ருச்யம்’ என்பது. இதற்கு ‘அதுபோன்றது’ , ஒப்பு என்பது பொருள்.ஸத்ருச்யம்- சமம்.
பிராமணன் அல்லாதவொருவன் பிராமண கன்மங்களிச் செய்யும் ஒழுக்கமுடையவனாக இருந்தால், அவன் ‘அப்பிராமணன்’ எனப்படுவான். அப்பிராமணன் என்றால் non- Brahmin என்று பொருள் அன்று. பிராமணனுக்கு ஒப்புள்ளோன் என்று பொருள்.
சீவான்மா யோக ஞான விளக்கமுற்ற்போது பரமான்மாவாக ஆகிவிடுவதில்லை. பரமான்மாவின் கல்யாண குணங்களை அடைந்து அப்பரமான்மாவை யொத்து இருக்கும் என சைவம் கூறும். (கோளில் — எண்குணத்தான் தாளைவணங்காத் தலை. (குறள்) ‘ எண்குணத்துள்ளோமே’ அப்பர்)
இவ்வன்மைப் பொருளே வைதிக சைவ சித்தாந்தத்திற் கொள்ளப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மேலும் சில கருத்துக்களைப் பின்னர் கூற விரும்புகின்றேன்.
மொழிபெயர்பிலே ஒரு பிரச்சினை உண்டு. மூலத்தை எழுதியவரின் மனநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். இல்லையென்றால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும்.
ரிஷிகளின் மனநிலையில் நின்று வந்த மொழிபயர்ப்பு இது.
வணக்கங்கள்
thank you sir, clear and understandable translation retaining the original meaning, very rare to get such translation
ஜடாயுவிரக்கு பாராட்டுக்கள். மிகவும் அருமையான மொழிபெயர்ப்பு. ஆங்கில மொழிபெயர்ப்பு அண்மையில் எனக்கு கிடைத்தது. அதில் ஏற்பட்ட சில சந்தேகங்கள் இதனால் விளக்கம் பெற்றேன். முதல் ஐந்து மற்றும் பின் அத்தியாயங்களின் யூ ஆர் எல் விவரம் கொடுத்தால் அதையும் படித்து மகிழலாம் . நன்றி.
என்ன ஒரு தெளிவான விளக்கம். உங்கள் நற்பணி தொடர ப்ரார்த்திக்கிறேன்.