I
வெயில் உச்சத்தை அடைய இன்னும் நேரமிருந்த போதிலும் மண் பரந்த அப்பெரும் மைதானத்தில் சிறு ஊளை ஓசையுடன் வீசிய காற்றில் மதியத்தின் அனல் தகிப்பு ஏற்கனவே ஆரம்பித்திருந்தது.
”சாம்… சாமுவேல்…”
மனைவி ஆக்னஸின் குரல் சாமுவேல் ஈவான்ஸை எட்டிய போது அவர் அந்த சுவரையே பார்த்து கொண்டிருந்தார்.
ஆங்காங்கே வெள்ளைத் தீட்டலுடன் இருந்த செங்கல் சுவர் அதன் கடும் சிவப்பினை எப்போதோ இழந்திருந்தது. ஆனால் துப்பாக்கி குண்டுகள் நுழைந்து சிதறடித்த செங்கற்களில் மட்டும் இருட்டுத் துளைகளைச் சுற்றி இரத்த சிவப்பாக செம்மண் வட்டங்கள் தெரிந்தன. குறிப்பாக வாசல் வளைவுகளுக்கு அருகே தண்ணீர் தெளித்த தடம் போல துப்பாக்கி குண்டுகள் செங்கற்களெங்கும் பதிந்திருந்தன.
சாமுவேல் ஈவான்ஸ் திரும்பிப் பார்த்தார். சாமுவேலின் பிரகாசமான கண்களும், கூர்மையான மூக்கும் ஒழுங்குடன் சீராக வகிடெடுத்து வாரப்பட்ட முடியின் பளிச்சிடும் கருமையும், தினசரி உடற்பயிற்சியால் தேவையற்ற சதைகள் ஏதுமின்றி இருந்த அவர் தேகமும் அவர் வயதை அடக்கி வாசித்தன. நாற்பது வயதை நெருங்கிவிட்டவர் என்பதை நம்புவது சற்று கடினம்.
மனைவியின் அழைப்பைக் கேட்டு திரும்பிய சாமுவேல் அவளுடன் மற்றொருவரும் வருவதைக் கண்டார். இந்திய வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்ப வெள்ளை தொப்பியுடன் தனது மிகப் பெரிய உருவத்தை சுமந்தபடி மண் பரப்பிய அந்த மைதானத்தில் கஷ்டப்பட்டு அடி மேல் அடி வைத்து வந்து கொண்டிருந்தார் அவர்.
“பிஷப்! எப்போது மெட்ராஸிலிருந்து வந்தீர்கள்?”
“ஓ நினைவு வைத்திருக்கிறாயா சாமுவேல்.. பத்து ஆண்டுகள் தாண்டிவிட்டன.. உஸ்ஸ்ஸ்” நடை அவரை பெருமூச்சு விடவைத்தது, “லண்டன் பான் ஆங்கிலிக்கன் (London Pan Anglican) மாநாட்டில் சந்தித்தோம் இல்லையா?”
”மறக்கமுடியுமா ஹென்றி… ” என்று சொன்ன சாமுவேல் ஆக்னஸ் பக்கம் திரும்பினார், “இது பிஷப் ஹென்றி வொயிட்ஹெட், மெட்ராஸ் பிஷப்… நான் இந்தியா வர காரணமாக அமைந்தவர்… என் குடும்பத்தின் க்வாக்கர் பின்னணியால் எஸ்பிஜி (SPG) சபை என்னை இந்தியாவுக்கு மிஷினரியாக அனுப்ப தயங்கிய போது பிஷப்தான் என்னை சிஎம்எஸ்ஸின்(CMS) இந்திய ஊழியத்துக்கு பரிந்துரை செய்தார்… ”
“பிஷப் இது…” என்று ஆக்னஸை காட்டி அறிமுகப் படுத்தும் பாவனையில் தொடரும் முன்,
“தெரியும் தெரியும் ஏசுவுக்குள் பிரவேசித்த ராஜபுத்திர பெண்மணி என் அன்புக்குரிய ஏசுவின் ஊழியரான சாமுவேலின் காதல் மனைவி ஆக்னஸ்… திருமணத்துக்கு முன் உங்கள் பெயர் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?”
“ஆக்னஸ் தான்” என்றாள் ஆக்னஸ், அவளது மெல்லிய குரலில் அந்நியரிடம் பேசும் போது உடையும் இந்திய பெண்களின் குரலுக்கே உரித்தான தனித்தன்மை வெளிப்பட்டது, “என் தந்தையார் அவரது சிறுவயதிலேயே கிறிஸ்துவுக்குள் பிரவேசித்துவிட்டார். அப்போது அவர் பெயர் கோகுல் சந்த்… ரட்சிப்புக்கு பிறகு பாபு பெஞ்சமின்”
”நல்லது” என்றார் பிஷப் ஹென்றி. பிறகு சாமுவேலை பார்த்து ”நல்ல முடிவு சாமுவேல்…நீ எடுத்தது நல்ல முடிவு… பை தி வே நான் இப்போது மெட்ராஸ் பிஷப் அல்ல… நான் இங்கு வந்தது…”
“சொல்லுங்கள் பிஷப்… எனக்கு நீங்கள் என்றுமே பிஷப்தான்.. மெட்ராஸ் பிஷப் என்கிற வார்த்தைகள் என் மனதில் உங்களைத்தான் எப்போதும் எழுப்பும்… அல்லது உங்கள் உருவம் என் மனக்கண்ணில் தோன்றும் போது எப்போதும் மெட்ராஸ் பிஷப் என்றுதான் வார்த்தைகளாக மாறும்.”
“ஆக ஒரு சிறந்த கிழக்கத்திய பேச்சாளனாகவே ஆகிவிட்டிருக்கிறாய்… உன் மீசை வேறு உன் கிழக்கத்திய தன்மையை அதிகரிக்கிறது…” ஹென்றி சிறிய குதிரை கனைப்பு போல சிரித்துவிட்டு தொடர்ந்தார், “நான் இங்கு வந்திருப்பது இங்குள்ள பல சி எம் எஸ் மிஷினரி அமைப்புகள் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன. லண்டனிலிருந்து அறிக்கை கேட்டிருந்தார்கள். அப்படியே இங்கே வந்த போது உங்களை குறித்தும் கேள்விப்பட்டேன். நீங்கள் இங்கே வந்திருப்பதாக மிஷனில் சொன்னார்கள். எனவே பார்த்துவிட்டு போகலாம் என்று…’
சாமுவேலின் பார்வை மீண்டும் ஒரு கணம் அந்த செங்கல் சுவர்களை நோக்கி திரும்பி மீண்டது. ஹென்றியும் சாமுவேலின் கண்கள் சென்ற திசையை கவனித்தார். “துயரமான சம்பவம்தான் சாம், சந்தேகமேயில்லை… கட்டுப்பாடற்ற ஜனங்கள், உணர்ச்சிகளை தூண்டிவிடும் சமத்கார தலைவர்கள்… மானுட பண்பாட்டையும் ஆன்ம விடுதலையையும் மக்களிடம் கொண்டு வர வேண்டிய கடமையுடன் ஒரு பேரரசு… இப்படி பல சக்திகள் மோதும் போது இத்தகைய சில சம்பவங்கள் தவிர்க்க இயலாதவை ஆகிவிடுகின்றன அல்லவா? முன்னூற்றி எழுபது பேர் இறந்துவிட்டதாக ஹண்டர் கமிஷன் ரிப்போர்ட் பார்த்தேன்…வாழ்விலும் மறுமையிலும் மீட்பில்லாத மரணங்கள் என்ன ஒரு கொடுமை!” ஹென்றி தொப்பியை கையிலெடுத்து விசிறிக் கொண்டார், “இந்த வெப்பமே பாதி இந்த மக்களை இப்படி ஆக்கிவிடுகிறதென்று நினைக்கிறேன்.”
“முன்னூற்றி எழுபது அல்ல…ஆயிரத்து ஐநூறு என்கிறார்கள் இந்தியர்கள்… ஆனால் நமது முக்கிய பிரச்சனை அவர்களுக்கு மீட்பில்லை என்பதுதான் இல்லையா…” சாமுவேலின் கண்கள் கூர்மையாக ஹென்றியின் கண்களை பார்த்தன…
“இதோ இந்த கிணற்றை நோக்கித்தான் அவர்கள் ஓடியிருக்கிறார்கள்… பிஷப் ஹென்றி இங்கே பாருங்கள்… இந்த சுவரின் வளைவு வாசல்களை பாருங்கள்… அதில் பதிந்திருக்கும் குண்டுகளை பாருங்கள்… பெண்களும் குழந்தைகளுமாக சடலங்களை பின்னர் இந்த கிணற்றிலிருந்து மீட்டார்கள்… ஆனால் நம் பிரச்சனையெல்லாம் இவர்கள் மீட்பற்று இறந்துவிட்டார்கள் என்பதுதான்.. இந்த கிணறு மட்டும் கிறிஸ்துவுக்குள் முழுக்கு அளிக்கும் நீராக இருந்திருந்தால்… எத்தனை நன்றாக இருந்திருக்கும் அல்லவா?”
ஹென்றி பெரியண்ணன் தன்மையுடன் சாமுவேலின் தோளில் கையை வைத்து “கான்பூர் கிணறு இதைவிட பெரியது என்றார்கள்” என்றார்.
சாமுவேல் உடலில் ஒரு மெல்லதிர்வு சடசடத்து மறைந்தது.
ஆக்னஸ் சிறிது தவிப்புடன் சாமுவேலை பார்த்தாள், ”நாம் இங்கிருந்து சென்றுவிடலாம்.. நேரமாக நேரமாக கூட்டம் கூட ஆரம்பித்துவிடும் வாய்ப்பு இருக்கிறது… ”
“மிஷன் காம்பவுண்டுக்கே சென்றுவிடலாம். நான் மோட்டாரை வெளியே நிறுத்தி இருக்கிறேன்… நீங்கள் எப்படி வந்தீர்கள்?” ஹென்றியின் கேள்வியே உள்ளே செல்லாதது போல சாமுவேல் ஏதோ வேறு உலகத்தில் இருப்பவர் போல இருந்தார்…
“குதிரை வண்டியில்தான்” என்றாள் ஆக்னஸ் ”வாடகை வண்டி அனுப்பிவிட்டோம்…”
“சரி அப்போது என்னுடனேயே வந்துவிடுங்கள்”.
***
மோட்டார் புழுதியான தெருக்களில் விரைந்தது. ஆங்காங்கே காக்கி சீருடைகளுடனும் தோள்களில் துப்பாக்கிகளுடனும் விரைப்பாக நின்றிருந்த கரிய முகங்களை அவர்கள் கடந்து சென்றார்கள். எங்காவது அபூர்வமாக தன்னந்தனியாக தெரிந்த மக்கள் முகங்களில் ஒரு வித கையாலாகாத ஆத்திரம் தோன்றி அது கண்களில் வெறுப்பாக மாறி அவர்கள் மீது மோதியது.
மோட்டார் மிஷன் காம்பவுண்ட் முன்னால் நின்றது. வெள்ளை உடை அணிந்த இந்தியன் வந்து கதவை திறந்தான். மிஷன் காம்பவுண்ட் பெரிய பங்களாவாக இருந்தது. பளிச்சிடும் வெள்ளை வர்ணம் பூசி அதில் சிவப்பாக சிலுவை வரையப்பட்டிருந்தது. சுவரில் குருமுகி லிபியில் எழுதப்பட்டிருந்த விவிலிய வார்த்தைகள் கீழே “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்” என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்ததன. அதன் கீழே திராட்சை கொடி ஓவியம். அந்த வெள்ளைச் சுவரை ஒட்டிய மர கதவின் அருகே ஒரு போலீஸ்காரர் துப்பாக்கியுடன் நின்றிருந்தார்.
உள்ளே வழிபாடு கூடத்தில் ஒரு சிவப்பு கண்ணாடி சிலுவை ஆளுயரத்தில் இருந்தது. அதன் முன்னால் இருந்த மேடையில் வெள்ளை துணி போடப்பட்டிருந்தது. அதன் மீது ஒரு கறுப்பு அட்டையில் பெரிய விவிலியம் இருந்தது. சரியாக அமைக்கப்பட்ட கட்டிட வேலைப்பாட்டின் திறமையால் வெயிலில் அந்த சிவப்பு சிலுவை உள்ளே ஒளிபெற்றது போல பிரகாசித்தது. ஆனால் அதில் ஒரு விரிசல் அதன் அழகை குறைத்தது.
அதை பார்த்ததும் ஆக்னஸ் ஹென்றியிடம் கேட்டாள், “பிஷப் என்னாயிற்று… அந்த அழகான சிலுவையில் விரிசல்…”
“ஓ அதுவா…” நடந்தபடியே ஹென்றி பதிலளித்தார், “போனவாரம் கலவரம் நடந்த போது ஒருவன் இங்கேயே வந்து கல்லெறிந்துவிட்டான். உடனே போலீஸ் அவனை பிடித்துவிட்டார்கள்… ஆனால் லண்டன் டைம்ஸ் நிருபர் நாளைத்தான் வந்து புகைப்படம் எடுப்பார் என்பதால் அதை சரி செய்யாமல் வைத்திருக்கிறோம்… உலகத்துக்கு தெரியவேண்டுமல்லவா… எத்தகைய ஆபத்துகளுக்கிடையே தேவனின் நற்செய்தி பரப்பப்படுகிறதென்று… பார்த்தாலொழிய திறப்பதில்லையம்மா… மனங்களும் பணம் வைத்திருக்கும் கைப்பைகளும்…”
அவர்கள் அந்த அறையைக் கடந்து மேலும் உள்ளே சென்றிருந்தார்கள். ஒரு சிறிய தோட்டம் இருந்தது. மண் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த செடிகளில் ஒழுங்கான உயரத்தில் மலர்கள் பூத்திருந்தன. மலர்களின் எண்ணிக்கைக் கூட கச்சிதமாக திட்டமிட்டது போல அந்த இடத்தின் அழகுக்கு ஏற்றாற்போல அமைந்திருந்தது. அதைத் தாண்டி ஒரு நீளமான அறையின் மேலே ‘டயோஸிஸ் லைப்ரரி’ என வெள்ளை ஆங்கில எழுத்துகள் அறிவித்தன. அறையின் அளவுக்கு நூலகம் சிறியதாக இருந்தாலும் அந்த அறையில் நூலக அமைதி தெளிவாகவே இருந்தது. அழகிய தேக்கு மர அலமாரிகளில் புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் இருந்தன… பஞ்சாபி. ஹிந்தி, உருது மற்றும் ஆங்கில நூல்கள்…
உள்ளே அமர்ந்திருந்த வெள்ளை சல்வார் கமீஸ் அணிந்திருந்த ஒரு இந்திய பெண் இவர்கள் நுழைந்ததும் எழுந்து, துப்பட்டாவால் அவசரமாக முக்காடு போட்டபடி “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்றாள் பஞ்சாபியில்.
ஹென்றி அவளிடம் ஆங்கிலத்தில் “நாங்கள் பேச வேண்டும் நீ போகலாம்” என்றார். அவள் அகன்றாள்.
புத்தக அலமாரிகளின் நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலிகளை சாமுவேலுக்கும் ஆக்னஸுக்கும் அமர்வதற்கு காட்டிய ஹென்றி. ஒரு நாற்காலியை தான் அமர இழுத்தார்.
அந்த ஓசையால் சட்டென பூவுலகுக்கு வந்தவர் போல சாமுவேல், “ஹென்றி!” என்றார், நாற்காலியில் அமரப் போன ஹென்றி நிமிர்ந்து பார்த்தார், ”1857 இல் பிரிட்டிஷ் நடவடிக்கைகளை நியாயப்படுத்த உருவாக்கப்பட்டதுதான் கான்பூர் கிணறு. அதை நீங்களும் அறிவீர்கள் ஹென்றி.”
”அட அதையேவா இத்தனை நேரம் சிந்தித்தீர்கள்… இத்தனை மௌனமாக?” ஹென்றி உண்மையான ஆச்சரியத்துடன் கூறினார்,”சரி அமருங்கள் சாமுவேல்… தயவு செய்து ஆக்னஸ்” ஹென்றி மீண்டும் நாற்காலிகளை காட்டினார். இருவரும் அமர்ந்தனர். ஹென்றி சாமுவேலை கனிவு ததும்ப பார்த்தார். அதில் ஒரு ஆசிரிய பாவம் இருந்தது.
”மிகவும் அப்பாவியாக இருக்கிறீர்கள் சாமுவேல்… இது ஞாயிற்றுக்கிழமை விவிலிய வகுப்பு கதை அல்ல. இது சரித்திரம். எல்லா பிரிட்டிஷ் வன்முறைக்கும் ஒரு பண்பாட்டு நியாயம் இருக்கும் அல்லது கற்பிக்கப்படும்… பெருமளவு உலகத்தின் வரலாற்றை, சர்வ நிச்சயமாக இந்த தேசத்தின் வரலாற்றை எழுதும் கடமையை கர்த்தர் நம்மிடம்தான் கொடுத்திருக்கிறார். இதோ இந்த பாவப்பட்ட இந்திய மக்களின் வரலாற்றையும் நாம்தான் எழுதி அவர்களுக்கு அளிப்போம்..”
“பஞ்சாபின் இந்த கிணற்றுக்கும் ஒரு பண்பாட்டு நியாயம் உண்டு. அதை நாம் அவர்களுக்கு சொல்வோம்… பின்னர் அவர்களின் வரலாற்றாசிரியர்களே அதை அவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கற்பிப்பார்கள்… இதுவும் விவிலிய வகுப்புகளின் கதைகளாகும் நாள் வரும். அப்போது அது நல்லொழுக்கமும் இறையச்சமும் ஊட்டும் சுவையான கதையாகவே இந்த நாட்டுக்கு இருக்கும். கவலைப்படாதீர்கள்… சாமுவேல்… இந்தியாவின் வரலாறு எப்போதுமே அதை வெற்றி கொண்டவர்களால்தான் எழுதப்பட்டு வந்துள்ளது, இந்தியர்களால் அல்ல.”
திடத்துடன் ஒலித்தது ஹென்றியின் குரல், இருண்ட கண்டங்களை வெற்றி கொண்ட பின் ரோமானிய அவையில் முழங்கிய சீசரின் குரல் போல.
“ஆனால் வரலாற்றிலிருந்து யதார்த்தத்துக்கு வரலாம்.” ஹென்றி இப்போது தணிந்த குரலில் கூறினார்,
“நான்கு பள்ளிகள் தாக்கப்பட்டிருக்கின்றன.. ஒரு மருத்துவமனை… ஏழு மிஷினரிகள் தாக்கப்பட்டிருக்கின்றனர். இந்திய விடுதலை என்பது கிறிஸ்தவத்துக்கு எதிரான வெறுப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக அகிம்சையின் தலைமை பூசாரியாக தன்னை காட்டிக் கொள்ளும் காந்தியும் மௌனமாக இருக்கிறார்.”
”இவை எல்லாம் எதிர்வினைகள் ஹென்றி… அண்மை காலங்களின் மிகப்பெரிய படுகொலையை பஞ்சாப் மண்ணில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் விசுவாசமான அதிகாரிகள் நடத்தி யிருக்கிறார்கள்… ஆயுதமற்றவர்கள் மீது… அந்த கிணற்றில் குழந்தைகளை கட்டிப்பிடித்த படி இறந்த பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. அதனுடன் ஒப்பிடுகையில்…” சாமுவேல் வார்த்தைகள் கிடைக்காதவராக தடுமாறினார்
“… நீங்கள் விரிசல் விழுந்த கண்ணாடி சிலுவையை புகைப்படமெடுத்து லண்டன் டைம்ஸுக்கு அனுப்பக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்…”
ஹென்றி சில நொடிகள் அமைதியாக சாமுவேலை பார்த்தார்…
“உணர்ச்சி தராசில் நிறுத்து எடை போடும் விஷயமல்ல இது சாம். இது நம் பிரிட்டிஷ் பேரரசின் நிர்வாக பிரச்சனை. சிலுவையை உடைக்கும் மனநிலையில் இருக்கும் வன்முறை மனித பண்பாட்டுக்கே இப்போதுதான் பழகிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் கும்பல் வன்முறை, ஆனால் ஒரு ராணுவ அதிகாரியின் நடவடிக்கை கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் நீதியின் கரங்களால் அதை என்றென்றும் கட்டுப்படுத்த முடியும். அவ்விதத்தில் கும்பல் வன்முறைதான் இந்த சமுதாயத்துக்கு பெரும் ஆபத்து”
ஹென்றி பெருமூச்சுவிட்டபடி தொடர்ந்தார், ”அது மட்டுமல்ல சாம்… இது யாருடைய எதிர்வினை என பாருங்கள். இந்தியாவின் மிகப்பெரிய அகிம்சாவாதியின் இயக்க எதிர்வினை சாம்.. என்றால் அந்த கோவண பக்கீர் தன்னை அரசியல்வாதியாகவே காட்டிக் கொள்ளட்டும்…ஏன் இந்த ஏசு வேஷம்? தன்னை ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு மறுகன்னத்தை காட்டிய ஆண்டவரின் ஊழியர்கள் நாம்.. அவருடைய ரத்தத்தில் மீண்டும் பிறந்த பண்பாட்டில் எழுந்தது இந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்”
”மன்னித்துவிடுங்கள் பிஷப்…” சாமுவேல் ஈவான்ஸ் இறுக்கமாக சொன்னார், “காந்தி சௌரிசௌராவில் தன் இயக்க வன்முறைக்குக் காட்டிய மனசாட்சியின் வேதனையை கவர்னர் மைக்கேல் ஓ டயரின் வார்த்தைகளிலும் ஜெனரல் ரெஜினால்ட் டயரின் செயல்களிலும் என்னால் காணமுடியவில்லை ஹென்றி… அவர்கள் அரசு இயந்திரத்தின் உணர்ச்சியற்ற இயந்திர பாகங்களாக இருக்கலாம்.. ஆனால் நீங்கள்… நாம் கர்த்தரின் ஊழியரல்லவா? குறைந்த பட்சம் நீங்களாவது டயரின் செயலை கண்டிக்கலாம் அல்லவா?”
“சாம்… நீங்கள் எப்போதுமே உணர்ச்சிவசப்படுகிறீர்கள்… நாம் ஏசுவின் ஊழியர்கள்.. இந்த சாம்ராஜ்ஜியம் இந்தியாவை ஏசுவிடம் கொண்டு வருவதற்காக நமக்கு அளிக்கப்பட்டது.
“உங்களைப் போலவே ஏன் உங்களை விட அதிக காலம் இந்த மக்களுடன் வாழ்ந்த, உங்களை விட அதிக அன்புடன் இந்த மக்களுக்காக உழைத்த, உங்களை விட அதிக விசுவாசத்துடன், உங்களை விட அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் நம் கர்த்தரை கொண்டு சென்ற, உங்களை விட அதிகமாக துயரத்தின் பாடுகளையும் அனுபவித்த ஐந்து மிஷினரிகள் –அவர்கள் அனைவருமே பெண்கள்- ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் பிரதிநிதிகளுக்கு கடிதம் எழுதி டயரின் செயல்கள் முழுக்க முழுக்க நியாயமானவை என்று சொல்லியிருக்கிறார்கள். மற்றொரு 1857 இலிருந்து பண்பாட்டையும் மானுடத்தையும் இப்பகுதியில் காப்பாற்றிய வீரர் டயர் என்று மனதார புகழ்ந்திருக்கிறார்கள்… “
“சாம், நம் ஆண்டவர் இரக்கத்தின் ஆண்டவர் மட்டுமல்ல நீதியின் ஆண்டவரும் கூட. எகிப்தியர்களின் முதல் குழந்தைகளை நீதியின் நிமித்தம் பலி கொண்ட தேவதூதனின் எக்காளம் கர்த்தரின் கருணைக்கு முகமன் கூறும் பேரொலி. அந்த ஆண்டவரின் நீதியின் கரம்தான் நம் சாம்ராஜ்ஜியத்தின் மேல் ஆசி அளித்து நீதியை நிலை நிறுத்துகிறது.” ஹென்றிக்கு மூச்சிரைத்தது.
ஆக்னஸ் உறைந்து அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் அதிர்ச்சி சட்டென மின்னலாக ஓடி மறைந்ததை சாமுவேல் கவனித்தார்.
ஹென்றி இப்போது குரலை சிறிது தாழ்த்தினார், “சாம் நான் முக்கியமாக உன்னை சந்தித்து சொல்ல விரும்பியது மற்றொரு விஷயம்… நீ இப்போது சிஐடி கண்காணிப்பில் இருக்கிறாய், உன்னை குறித்து ஒரு அறிக்கை கவர்னரிடம் உளவுத்துறையால் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. கவனமாக இரு… உன் அமெரிக்க குடியுரிமை கூட சில விஷயங்களில் செல்லுபடியாகாது…”
”பிஷப்…” சாமுவேலின் கண்கள் விரிந்தன, “அது எனக்கு தெரியாது என நினைக்கிறீர்களா… இன்னும் சொன்னால் நான் என் அமெரிக்க குடியுரிமையை துறந்து இந்தியனாகிவிட்டேன்… உங்களுக்கு தெரிந்திருக்குமென நினைத்தேனே!” ஹென்றியின் முகம் இருண்டது, “சாம் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது… உன் அமெரிக்க குடியுரிமை உனக்கிருந்த முக்கியமான பாதுகாப்பு… அப்படியும் நீ ஆபத்தில் இருந்தாய்… இப்போது… அதுவும் நீ இப்போது செய்யும் செயல்கள்…”
காலடி ஓசை கேட்டது. ஆடையின் சரசரப்பு… அந்த பெண் உள்ளே வந்து ஹென்றியின் முன் பவ்யமாக சிதறிய ஆங்கிலத்தில் “அனைவருக்கும் டீ கொண்டு வரவா?” என்றாள்.
”சாம்… ஆக்னஸ் டீ?” என்று கேட்டபடி ஹென்றி சாமுவேலுக்காக திரும்பிய போது தனது இருக்கையிலிருந்து சாமுவேல் எழுந்து விட்டிருந்தார். ஆக்னஸ் கூடவே எழுந்தாள்…
“நேரமாகிவிட்டது பிஷப் மன்னித்து கொள்ளுங்கள் பிறிதொரு நேரம் பார்க்கலாம்… நாங்கள் மற்றொரு முக்கியமான சந்திப்புக்கு செல்ல வேண்டும்…”
“யார் என நான் கேட்கப்போவதில்லை” என்றார் ஹென்றி.
“இருந்தாலும் நான் சொல்கிறேன். பிறகு நீங்கள் அறிக்கை அளிக்க உதவும்… சிரத்தானந்தர்…” சாமுவேல் புன்னகையுடன் சொன்னார், “ஆரிய சமாஜி.”
II
லாகூரின் பிரதான வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. எல்லா கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே போலீஸ்காரர்கள் லத்திகளுடன் நின்று கொண்டிருந்தனர். நகராட்சி பூங்கா முச்சந்தியில் இருந்த மணிக்கூண்டின் அருகே வெள்ளை கதர் உடைகளில் அவர்கள் ஐந்து பேர் நிற்பது தெரிந்தது. அந்த வயதானவரின் சற்றே பருமனான உடலும் பெரிய வெள்ளை தலைபாகையும் அவரை தனியாக தெரிய வைத்தன. ஒரு கறுப்பு குடையை அவர் இரு கரங்களாலும் நிலத்தில் ஆழ ஊன்றி அதை அழுத்தியபடி நிற்பது தெரிந்தது. அவரை சாமுவேல் ஈவான்ஸ் எளிதாக கண்டு கொண்டார். லாலா லஜ்பத்ராய்!
சதா சோகம் கவிந்த கண்கள் அவருடையவை. அத்தனை தூரத்தில் அவை தெரியவில்லை எனினும், அவரை நினைத்ததும் அவையே பிரதானமாக நினைவுக்கு வரும். அவருடைய மிகச்சிறந்த நகைசுவை உணர்வை அவருடன் சிறையில் கழித்த நாட்களில் ஈவான்ஸ் அறிந்திருக்கிறார். ஆனால் அப்போதும் கூட, அவர் உடலே நகைத்தாலும் கூட அவரது கண்களில் சோகம் இருந்து கொண்டே இருக்கும்.. அவர் அருகில் நின்றவரிடம் ஏதோ சொல்வது தெரிந்தது. அருகே நின்ற நடுத்தர வயதுகாரரை அடையாளம் தெரிந்து கொள்ளமுடிந்தது. ஹன்ஸ்ராஜ். நேற்று மாலை லாகூர் ரயில் நிலையத்தில் இறங்கியதும் சாமுவேல் ஈவான்ஸ் பார்த்தது அவரைத்தான்.
“ஊரெங்கும் போலீஸாக இருக்கிறதே” என்று சாமுவேல் ஈவான்ஸ் கேட்டதற்கு “கவலைப் படாதீர்கள்” என்றவர் உடைந்த ஆங்கிலத்தில். மெதுவாக “காவல்துறை உள்ளூர் போலீஸ்காரர்களை நம்பாமல் வெளி மாகாண போலீஸ்காரர்களைக் கொண்டு வந்திருக்கிறது. அவர்களுக்கு இந்த ஊரின் சந்து பொந்துகள் தெரியாது. பார்த்துக் கொண்டே இருங்கள் லாலாஜி. சரியான நேரத்தில் எப்படி வருகிறார்கள் என்பதே தெரியாமல் வந்துவிடுவார்கள்…” அவரிடம் பேசிக் கொண்டே ரயில் நிலையத்திலிருந்து வெளியே ஈவான்ஸ் வந்த போதுதான் போலீஸ்காரர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு விட்டார்கள். ஈவான்ஸை மரியாதையாக ஆனால் வலுக்கட்டாயமாக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுவிட்டார்கள்.
இப்போது சாமுவேல் ஈவான்ஸ் அந்த வசதியான லாகூர் விடுதியின் மாடி அறையில் இருந்தார். ஜன்னல் வழியாக வெளியே நடக்கும் காட்சிகள் விரிந்தன. நகராட்சி பூங்காவிலிருந்து ரயில் நிலையம் வரையிலான வீதியில் அந்த ஐவரின் வெண்மையையும் ஆங்காங்கே திட்டாகத் தெரிந்த காக்கி உடைகளையும் தவிர வேறெதுவுமில்லை. ஒருமணிக்கு அந்த ஊர்வலம் ஆரம்பிப்பதாக திட்டம். ஒருவேளை ஹன்ஸ்ராஜ் சொன்னது தவறோ… பிரிட்டிஷ் அரசு இயந்திரத்தை இவர்கள் ரொம்ப குறைவாக மதிப்பிட்டுவிட்டார்களோ…
“கூடி கூடி போனால் இருநூறு பேர் வரலாம்…” அன்று இரவு ஈவான்ஸிடம் பேசிக் கொண்டிருந்த போது காவல்துறை அதிகாரி சொல்லிக் கொண்டிருந்தான். இளம் அதிகாரி. காக்கி சட்டையில் விருது நிறப்பட்டைகளின் மேலே இருந்த பெயர் ‘ஜே பி ஸ்காட்’ என்றது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் முழு விசுவாசி என்பது பேச்சிலேயே தெரிந்தது. அந்த இளமையிலேயே மாவட்டத்தின் முக்கிய காவல் அதிகாரி ஆகிவிட்டிருந்தான். எல்லா காலனி பிரதேசங்களிலும் இப்போது இளவயது அதிகாரிகளையே உயர் பதவிகளில் அமர்த்துவதாக சாமுவேல் ஈவான்ஸ் கேள்விப்பட்டிருந்தார். ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்கிற உத்வேகத்தில் காலனிய பிரதேசங்களின் மக்கள் போராட்டங்களை இந்த இளம் அதிகாரிகள் இரும்பு கரங்களால் அடக்கினர். மூத்த அதிகாரிகளுக்கு வன்முறையை பயன்படுத்துவதில் இருக்கும் சில மனதடைகள் இவர்களுக்கு சுத்தமாக இல்லை.
”துப்பாக்கி குண்டுகளை விரயம் செய்வதையும் அரசு விரும்பவில்லை. ஒருவேளை விரைவில் மற்றொரு யுத்தத்தை எதிர்பார்க்கிறார்களோ என்னவோ…எனவே நாளைக்கு தடியடி மட்டும்தான்… முதல் தடியடியிலேயே கலைந்து கல்லடி பட்ட தெருநாய் போல ஓடிவிடுவார்கள்… இந்த அகிம்சா போராளிகள். ஆக, டயரின் சாதனையை நான் முறியடிக்க வாய்ப்பில்லை. ஆனால் நான் இன்னொரு சாதனையை செய்வேன். இல்லையா சாண்டர்ஸ்… நாளையோடு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு ஒரு தொந்தரவு முடியும்… என்னுடைய வாழ்நாள் சாதனையாக இருக்கும்” அவன் ஊதிய ’ட்ரிச்சினாப்பள்ளி’ சுருட்டின் புகை மண்டலம் காறும் வாசனையுடன் அந்த அறையில் மண்டலமாக பரவியது. ஈவான்ஸ் கொஞ்சம் செருமினார்.
“அமெரிக்க ஆப்பிள் சாகுபடியாளருக்கு சுருட்டு புகை அலர்ஜியாகிவிட்டது அதிசயம்தான் அந்த பக்கீர் காந்தி மந்திரவாதி போலும்…” கேலியுடன் சொன்ன ஸ்காட்டின் குரலில் கடுமை ஏறியது, “ஆனால் என் சாதனையில் ஒரு அமெரிக்க இடையூறை நான் விரும்பவில்லை திரு.சாமுவேல் ஈவான்ஸ்… வரப்போகும் அந்த இருநூறு இந்தியர்கள் செத்தாலும் பிரச்சனையில்லை ஆனால் ஒரு அமெரிக்கன் மீது என் லத்தி விழுந்ததென்றால் நான் இங்கிலாந்து திரும்ப வேண்டியதாகிவிடும். அந்த அமெரிக்கன் இந்திய குடியுரிமை பெற்றவனாக இருந்தாலும் என்பதுதான் அதில் கொடுமை. என்ன சொல்கிறாய் சாண்டர்ஸ்?”
சாண்டர்ஸ் அசப்பில் பார்க்க ஸ்காட் போலவே இருந்தான். “சர்” என்றான். அவன் உடல் இறுக்கத்துக்கும் அவன் முகத்தில் நெளிந்த வக்கிரமான இளிப்புக்கும் தொடர்பே இருக்கவில்லை. ஸ்காட் மீண்டும் புன்னகைத்தான், “ஆமாம் ஈவான்ஸ் நீங்கள் கிறிஸ்தவ விசுவாசமுள்ள ஊழியராகத்தான் வந்தீர்கள் என கேள்விப்பட்டேன்.. நானும் விசுவாசிதான்… அந்த பக்கீர் அந்தி கிறிஸ்து… நாம் இந்த மண்ணிலிருந்து அகன்றுவிட்டால் இது விக்கிர ஆராதனையின் உலகின் அனைத்து மூடநம்பிக்கைகளின் சுவர்க்கமாகிவிடும்… ஈவான்ஸ் இந்த பூமி நம் பிதாவின் தேவாலயமாக இந்த ஆத்ம ஞான வேடம் போடும் அரசியல் விபச்சாரிகளை தடியால் அடித்துதான் வெளியேற்ற வேண்டும். நம் ஆண்டவர் ஜெருசலேமின் தேவாலயத்திலிருந்து வியாபாரிகளை அகற்றியது போல… நம் ஆண்டவர் பரிசேயர்களை வெறுப்பவர் ஈவான்ஸ்”
“பரிசேயர்கள் அதிகாரத்தின் சின்னம் மாண்புமிக்க பேரரசியின் காவல் அதிகாரியே” வாய்க்குள் கசப்பு சுரக்க ஈவான்ஸ் பதிலளித்தார், “உங்களைப் போல அடக்குமுறை அதிகாரத்தின் சின்னம்.”
ஸ்காட் பதட்டமடையாமல் அவரையே கூர்ந்து பார்த்தான், “யோவானுக்கே ஞானஸ்நானம் செய்து ஏசுவுக்கே பாவமன்னிப்பும் அளிப்பவர்கள் உங்களைப் போன்ற அதிமேதாவிகள் … ஆனால் உண்மையில் பரிசேயர்கள் அன்றைய அரசு அதிகாரத்தையும் யூத மத தலைமையையும் எதிர்த்த கிளர்ச்சியாளர்கள்… நான் கொஞ்சம் விவிலிய வரலாற்றை ஆழமாக படித்திருக்கிறேன்… உங்கள் ரொமாண்டிஸ புரிதல்களையும் க்வாக்கர் மத திரிபுகளையும் நம் ஆண்டவர் மீது சுமத்தாதீர்கள். நம் ஆண்டவர் அதிகாரத்தை அல்ல கீழ்படிதலின்மையையும் விசுவாசமின்மையையுமே எதிர்க்கிறவர்… சீசருக்கு உள்ளதை சீசருக்கு கொடு என அவர் கூறியது ரோம சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தபடி ரோம சாம்ராஜ்ஜியத்தை எதிர்க்க அவரை பயன்படுத்தி கொள்ள நினைத்த கிளர்ச்சியாளர்களுக்கு… ஆனால் வழி தப்பி போன மத போதகரே நான் உம்முடன் மதவிவாதம் செய்ய விரும்பினாலும் அதற்கு எனக்கு நேரமும் இல்லை அதற்கான தருணமும் இப்போதில்லை.”
சட்டென ஸ்காட்டின் முகம் தீவிரமடைந்தது. குரலில் தொழில்முறை அதிகாரம் ஏறியது, ”நம் மேன்மை தங்கிய அமெரிக்கரை லாகூர் ரெஸிடென்ஸியின் மேல் அறையில் தங்க வை… சாண்டர்ஸ்… நாளைக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வல்லமையை நம் அமெரிக்க விருந்தாளி நேரில் காணட்டும்…திரு.சாமுவேல் ஈவான்ஸ் நீங்கள் அந்த அறையை விட்டு அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்துக்கு எங்கும் செல்லக்கூடாது. இல்லையென்றால் நீங்கள் இந்த நாட்டை விட்டே வெளியேற வேண்டியிருக்கும்”
வெறிச்சோடிய அந்த வீதிகளிலிருந்து திடீரென ஒரு குரல் கேட்டது
”மகாத்மா காந்தி கி ஜே”
பதின்ம வயதின் தொண்டை உடையும் அந்த உச்ச ஸ்தாயி குரல் ஈவான்ஸை நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது. போலீஸ்காரர்கள் அனைவரும் அந்த குரல் வந்த திக்கில் தூக்கிய லத்திகளுடன் விரைவது தெரிந்தது. பின்னர் ஒரு கறுப்பு நூல் போன்ற அச்சந்தில் காக்கிநிற பூச்சிகள் போல மறைந்தனர். “டேய் நாய் மகனே …நில்லுடா” ஈவான்ஸ் நன்கறிந்த ஹிந்தி வசை சொற்கள் காற்றில் கலந்து சிதறின. மணி கூண்டில் மணியோசை டாண் என்று அதிர்ந்தது. சரியாக மணி மதியம் ஒன்று.
இப்போது வேறு இரண்டு சந்துகளிலிருந்து திமு திமுவென மக்கள் குவிய ஆரம்பித்துவிட்டனர். அடைக்கப்பட்டிருந்த எல்லா கடைகளும் திடீரென ஒன்றுக்கொன்று நகர்ந்து விட்டது போல ஒரு பிரமை சாமுவேல் ஈவான்ஸுக்கு தோன்றியது. அங்கெல்லாம் சந்துகள் இருக்குமென்றே கற்பனை செய்ய முடியவில்லை. எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் வந்தபடியே இருந்தார்கள். பெரும்பாலும் ஆண்கள். முக்காடிட்ட உருவங்கள் மூலம் பெண்களும் இருப்பது தெரிந்தது பஞ்சாபுக்கே உரிய தலைபாகைகள் வெண்ணிற கதரில் அந்த தெருவை பிரகாசமாக்கின. அந்த சந்திலிருந்து திரும்பிய போலீஸ்காரர்களுக்கு அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது உறைத்திருக்க வேண்டும்.
அந்த தெரு முழுக்க மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது.
அவர்கள் நிற்கும் இடம் சிறு காக்கி திட்டாக தெரிய எலிக்குஞ்சுகளை அலட்சியப்படுத்தி மெல்ல அசைந்து செல்லும் பிரம்மாண்டமான கஜராஜன் போல மெதுவாக நகர ஆரம்பித்தது கூட்டம். முன்னணியில் அவர்கள் மூவரும் சென்றனர். அவ்வப்போது “வந்தேமாதரம்” “மகாத்மா காந்திக்கு ஜே” எனும் குரல்கள் வெடித்து கிளம்பின. பின்னர் பேரலை போல பல நூறு குரல்கள் அக்கோஷங்களை மீண்டும் மீண்டும் எழுப்பி ஓய்ந்தன.
நேற்று ஹன்ஸ்ராஜ் சொன்னது சாமுவேலுக்கு நினைவுக்கு வந்தது, “மூல்சந்த் கோவிலிருந்தும் மற்றொரு அணி மௌலானா ஸாஃபர் அலி தலைமையில்.. கிளம்பும் அதே போல மற்றொரு அணி மேற்கு பகுதியிலிருந்து சர்தார் மங்கல் சிங் தலைமையில். அரை மணி நேரத்தில் ரயில்வே நிலையத்தின் முன்னால் மிக பிரம்மாண்டமான மக்கள் சமுத்திரமே அங்கு திரண்டு விடும்”
சமுத்திரமேதான்.
வெள்ளை கதராடைகள் படர்ந்தசையும் சமுத்திரம். எப்படி இவ்வளவு பேர் இத்தனை கச்சிதமாக இத்தனை ஒழுங்காக அகிம்சையின் படைவீரர்கள். திடீரென சாமுவேலுக்கு சௌரி சௌரா நினைவுக்கு வந்தது.
இவர்கள் வன்முறையில் இறங்கினால்….
சாமுவேல் ஈவான்ஸ் தனது அடிமனதில் ஒரு அசௌகரியமான அச்ச பந்து உருண்டு உருவாவதை போல உணர்ந்தார்… இப்போது கோஷங்கள் மாறலாயின ”சைமனே திரும்பி போ” என தாளகதியுடன் கூட்டம் கோஷிக்க ஆரம்பித்தது. திடீரென ஒரு இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. வெள்ளைகடல் நடுவே ஒரு கறுப்பு தெப்பம் போல ஒரு குதிரை படை மிதந்து வருவது தெரிந்தது. அது செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் சிதறி பின்னர் இணைந்தனர். பின்னாலேயே மற்றொரு காவல் கூட்டம் லத்திகளால் அடித்த படி முன்னேறிக் கொண்டிருந்தனர். அந்த குதிரைப்படையின் முன்னணியில் ஸ்காட் இருப்பது தெரிந்தது. தலைவர்கள் இருக்கும் இடத்தை அவன் அடைந்தான்.
அவர்களை திரும்பி கூட பார்க்காமல் கூட்டத்தை பார்த்து உச்ச குரலில் கத்தினான். “இது சட்டவிரோதமான கூட்டம். ஐந்து நிமிடங்களில், ஐந்தே நிமிடங்களில் கலைந்து போகாவிட்டால் கடுமையான தடியடி நடத்தப்படும்…ஐந்து நிமிடங்கள் அவகாசம்” அவனருகில் இருந்த இந்திய அதிகாரி அதை பஞ்சாபியில் மொழி பெயர்த்து கூவினான்.
கூட்டம் சில கணங்கள் அமைதியானது. லஜ்பத்ராய் குடையிலிருந்து கையை எடுத்து மேலே உயர்த்துவது தெரிந்தது. கூட்டம் இப்போது கர்ஜித்தது, “வந்தே மாதரம்!”.
அடுத்த நிமிடமே ஆரம்பித்தது தடியடி. எந்த பாகுபாடும் இல்லாமல் பிரிட்டிஷ் மேற்பார்வையில் இந்திய கைகள் லத்திகளால் இந்திய மண்டைகளை பிளந்தன. வெள்ளை சமுத்திரம் ஆங்காங்கே பிளந்து மூடியது. மக்கள் சிதறி ஓடி பின்னர் மீண்டும் முன்னேறினர். ஸ்காட் தனியாக காவலர்கள் சூழ நின்றபடி ஒரு காக்கி கூட்டத்துக்கு பிரத்யேக சைகை காட்டுவதை ஈவான்ஸ் பார்த்தார்.
அந்த காக்கி கூட்டம் தலைவர்களை நோக்கி வேகமாக முன்னேறியது.
அந்த ஜன்னல் வழியாக லாலா லஜ்பத்ராயின் நெஞ்சில் நேரடியாக லத்தியால் ஒருவன் அடிப்பதையும் அவர் சிலை போல நிற்பதையும், இரண்டாவதும் எவ்வித கூச்சமும் இன்றி அவன் மீண்டும் அடிப்பதையும் இப்போது ஹன்ஸ்ராஜ் நடுவே பாய்வதையும் சாமுவேல் கண்டார். ஹன்ஸ்ராஜின் கையில் லத்தி முழு வேகத்துடன் இறங்கியதையும் ஹன்ஸ்ராஜ் அடுத்த கரத்தால் அடிவாங்கிய கையைப் பற்றிக் கொண்டு அப்படியே கீழே விழுந்து விழுந்து வலியுடன் புரளுவதையும் ஈவான்ஸ் கண்டார்.
அந்த காவலன் பூட்ஸ்காலால் தரையில் புரளும் ஹன்ஸ்ராஜின் அடிவயிற்றில் காலால் உதைத்தான். அடுத்து ஏதோ கவனம் தவறி மீண்டும் கர்ம சிரத்தையானவன் போல அந்த காவலன் லாலா லஜ்பத் ராயை குறிவைத்து மீண்டும் அவர் நெஞ்சில் லத்தியால் அடித்தான். இப்போது வேறு சிலர் அவருக்கும் லத்திக்கும் நடுவில் விழுவதும் அவர்களை விலக்கி லாலா மீண்டும் மீண்டும் லத்தி அடிகளுக்கு தன்னையே இலக்காக்குவதும் …
ஈவான்ஸின் தலைக்குள் வலி கொப்பளங்கள் பெரிதாகி உடைந்தன. அவர் கண்கள் இருண்டு தன்னுணர்வு இழக்கும் முன் இறுதி நினைவாக விவரிக்கமுடியாத ஒரு இசை சோக அழைப்பாக அவரை நிரப்புவதை சாமுவேல் ஈவான்ஸ் உணர்ந்தார்.
காலத்தை வெல்லும்… கவனத்தை ஈர்க்கும் எழுத்து நடை…. அற்புதம்… மிக நன்றாக இருக்கிறது…. தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி…. வாழ்க…
ஆலந்தூராரின் தொடர்கள் எப்போதுமே வலிமையான கருத்தாழம் உள்ளவை. நன்றி, தொடர்க.
மிக அற்புதமான கதை.
மிக அற்புதமான படைப்பு.
இதைக் கதை என்று சொல்லக் கூடாது. முன்னர் எழுதப்படாத சரித்திரம் இப்போதுதான் எழுதப்படுகிறது.
இந்த நிகழ்வில் சொல்வதுபோல பாரதத்தின் சரித்திரத்தை முகலாயரும் ஆங்கிலேயரும்தானே எழுதி வைத்தனர். இப்போதுதான் இந்த மண்ணின் மைந்தர்கள் எழுதுகின்றனர். இதுதான் உண்மை வரலாறு.
மறக்கடிக்கப்பட்ட இந்திய விடுதலைப் போராட்டத்தை சித்திரமெனத் தீட்டிய அருமையான படைப்பு. ஆலந்தூர் மள்ளனின் படைப்புகள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். செல்வராஜன் என்னும் ஆபாச எழுத்தாளனின் நோன்பு போன்ற கதைகளைப் பாடமாக வைக்கும் பல்கலைக்கழக கல்வியாளர்கள் பார்வையில் ஆலந்தூர் மள்ளனின் அற்புதப் படைப்புகள் தென்படாது போலும்..
மறைக்கப்பட்ட வரலாறு அம்பலமேறுவது வரவேற்பட வேண்டியது.
//இந்தியாவின் வரலாறு எப்போதுமே அதை வெற்றி கொண்டவர்களால்தான் எழுதப்பட்டு வந்துள்ளது, இந்தியர்களால் அல்ல.”
திடத்துடன் ஒலித்தது ஹென்றியின் குரல், இருண்ட கண்டங்களை வெற்றி கொண்ட பின் ரோமானிய அவையில் முழங்கிய சீசரின் குரல் போல.//
சுதந்திர இந்தியாவிலும் இன்னும் இந்த நிலையே தொடர்வது கேவலமில்லையா? மாற்றமுடியவில்லையே?
Very good concept. Good start. Bad style.
Now, like frauds, I am sure you will censor my comment to suit your selfish purpose.
//இந்தியாவின் வரலாறு எப்போதுமே அதை வெற்றி கொண்டவர்களால்தான் எழுதப்பட்டு வந்துள்ளது, இந்தியர்களால் அல்ல.”//
அவர்கள் எழுதியது தான் வரலாறு என ஆகிவிட்டதே! 🙁 என்று தொலையும் இந்த அவமானம்?
கண்ணீர் வர வைத்த பதிவு. தொடரக் காத்திருக்கிறேன்.
ஆலந்தூர் மள்ளனின் சிறுகதைகளில் பிரச்சார நெடி இருந்தாலும், நல்ல படைப்புகள். அவ்வளவாகத் தெரியாத விஷயங்களைத் தோண்டி எடுத்து எழுதுவதை மனமாரப் பாராட்டுகிறேன். அவரது சிறுகதைகளை தமிழ் ஹிந்துவே தொகுத்து புத்தகமாக வெளியிடலாமே?
கண்ணீர் வருகிறது….மள்ளன் சார்….