தமஸோ மா… – 2

[<<<<<முந்தைய பகுதி]

III

குளிர் தீவிரமாக இருந்தது. இலை உதிர்ந்த ஆப்பிள் மரங்களின் அருகே தோட்டக்கருவிகளுடன் கீழ் கிளைகளை உடைத்து விட்டுக் கொண்டிருந்தார் சாமுவேல்.

“சாம் டீ தயார்” ஆக்னஸின் குரல் வீட்டு முகப்பிலிருந்து கேட்டது.

மெல்ல நடந்து வந்தார் சாமுவேல்… ”நாளை கிராமத்து ஆப்பிள் மரம் வளர்ப்பவர்கள் அவர்கள் சங்க கூட்டத்துக்கு அழைத்திருக்கிறார்கள். நன்றாகவே ஆப்பிள் சாகுபடி வளர்ந்து வருகிறது” ஜன்னல் வழியாக பள்ளத்தாக்கை பார்த்தபடியே நின்றார். ஜன்னலுக்கு வெளியே பனி மிக மெல்லிய படலமாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை கவிந்திருந்தது.

”நிகழ்வுகள் உங்களை வெகுவாக மாற்றிவிட்டன” ஆக்னஸின் குரல் வெளியே பனிமூட்டத்தையே பார்த்தபடியே நின்று கொண்டிருந்த சாமுவேல் ஈவான்ஸ் திரும்பினார். மெதுவாக அங்கிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். அவர் முன்னால் இருந்த வட்டமான மூங்கில் மேசையில் இரு சீனத்து பீங்கான் கப்புகள் இருந்தன.

“உங்கள் முடிவு குறித்து ஆண்ட்ரூஸுக்கு எழுதினீர்களே…” ஆக்னஸ் சீனா கோப்பையிலிருந்து

தேநீரை அந்த கப்பில் விட்டபடியே கேட்டாள், “அவர்… என்ன சொல்கிறார்?”

“ஆண்ட்ரூஸிடமிருந்து நேற்றுதான் பதில் வந்தது. அவர் காந்தியை பார்க்க போயிருந்தாராம். ஆனால் ஆண்ட்ரூஸுக்கு இது அவ்வளவாக ரசிக்கவில்லை நீ வேதாந்தி என்கிறாய். ஆனால் வேதாந்திக்குத்தான் அடையாளங்கள் தேவை இல்லையே… என்று கேட்டிருக்கிறார். சரி அது கிடக்கட்டும் ஆக்னஸ் என் முடிவை குறித்து நீ என்ன நினைக்கிறாய்?”

ஆக்னஸ் எதிரிலிருந்த மற்றொரு சாய்வு நாற்காலியில் கையில் கப்புடன் அமர்ந்தாள். “நான் சொல்ல என்ன இருக்கிறது… உங்கள் முடிவுதான் என் முடிவும்… நீங்கள் என்ன முடிவெடுத்தாலும்…”

”சாதுரியமான இந்திய பதில் ஆக்னஸ் ஆனால் உன்னை உன் விருப்பமில்லாமல் என் பாதையில் இழுத்துச் செல்கிறேன் என்கிற சுமையுடன் நான் என்றென்றும் அல்லல்பட முடியாது. உனக்கென்று ஒரு எண்ணம் இருக்காதா? உன் எண்ணம்?”

ஆக்னஸ் தன் தலைமுடியை கோதிவிட்டாள், “நான் ராஜபுதனத்தை சார்ந்தவள் சாம்… மீராவின் ஊர்… ஆனால் என் பள்ளியில் பாதிரிகள் பக்த மீராவை பித்து பிடித்த ஒரு காமாந்தகாரி என சொல்லி கொடுத்தார்கள்… என் வீட்டிலோ இந்துக்கள் அஞ்ஞானிகள் என்று சொன்னார்கள்… அதை நம்பி வளர்ந்தவள் நான் … சாம்… முதன் முதலாக மீரா பஜன்களை நான் கேட்ட போது எதனை நான் இழக்க வைக்கப்பட்டேன் என்பதை உணர்ந்தேன்… எனவே எனக்கு கிடைத்த விசுவாசம் அதை விட மேலானது என எனக்கு நானே சொல்லி கொண்டேன்… என் மேல் சுமத்தப்பட்ட விசுவாசத்தை கர்த்தருக்கான சிலுவையாக என் வாழ்நாளெல்லாம் சுமந்து கொண்டிருப்பேன் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்… ”

ஆக்னஸின் முகம் தீவிரமடைந்தது, “ஆனால் … நீங்கள் என்னை மணக்க முடிவு செய்த போது கர்த்தரின் மேல் வைத்த என் விசுவாசத்துக்கு ஆண்டவர் அளித்த பரிசு என்றே அதை நினைத்தேன்.. பின்னர் நீங்கள் உபநிடதங்களை படிக்க ஆரம்பித்த போது, அவற்றை என்னுடன் பகிர்ந்து கொண்ட போது, …என் விசுவாசம் படிப்படியாக குறைந்தது. நம் மகன் இறந்த போது….” ஆக்னஸின் குரல் தழுதழுத்து உடைந்தது, சாமுவேல் பெருமூச்சு விட்டார்…

ஆக்னஸ் சிரமத்துடன் சமனமடைந்த குரலில் தொடர்ந்தாள்,“…தாரா சந்தை புதைத்த பின்னர் நான் இரவுகளில் என் விசுவாசக் குறைவுக்காக நம் ஆண்டவர் அவனை நம்மிடமிருந்து எடுத்து விட்டார் என அழுதேன்… ஆனால் பஞ்சாப் படுகொலைக்கு பிறகு …அந்த கிணற்றில்தான் எத்தனை குழந்தைகளின் சடலங்கள்… அதை லாலாஜி நம்மிடம் விவரித்தாரே… ஆனால் உங்கள் பிரிட்டிஷ் நண்பர் அந்த பிஷப் அதற்கு ‘நீதியின் தேவனின் செயல்’ என்ற போது… என் விசுவாசத்தின் உள்ளே இருக்கும் ஆண்டவனின் கொடூர முகம் எனக்கு முதன் முதலாக தெரிந்தது… குழந்தைகளை கொல்லும் ஆண்டவனின் இரக்கமும் விசுவாசமும் எனக்கு தேவையில்லை என அந்த தருணத்தில் நான் நினைத்தேன்…”

“அதன் பிறகு நீங்கள் தீவிரமாக காங்கிரஸில் ஈடுபட்டு சிறை சென்ற போது… நான் ஞாயிற்று கிழமைகளில் புனித ஆண்ட்ரூ தேவாலயத்துக்கு செல்லுகையில் இந்திய கிறிஸ்தவர்களே ரௌலட் சட்டத்தை சிலாகித்ததை கண்டேன்… இந்துக்களிலும் அப்படி பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சபையாக ரௌலட் சட்டத்தை இந்திய கிறிஸ்தவர்கள் ஆதரிக்க வைக்கப்படுவதை கண்ட போது நான் சுமந்து கொண்டிருக்கும் சிலுவையின் உண்மை சுமை எனக்கு வலிக்க ஆரம்பித்ததுஎனவே மனதளவில் நான் எந்த முடிவுக்கும் தயாராகிவிட்டேன்… ஆனால் உங்கள் … ஏன் இந்த முடிவுக்கு வந்தீர்கள் சாம்? உங்கள் நண்பர் லாலாஜியின் மரணமா? ”

சாமுவேல் ஆழமாக பெருமூச்சு விட்டார். தன் இரு கரங்களாலும் நெற்றியை அழுத்தி பிடித்தபடி குனிந்தார். அவர் உடல் மெல்ல குலுங்கியது. அவர் நிமிர்ந்த போது கண்கள் சிறிது கலங்கியிருந்தன.

”ஆக்னஸ் முதன் முதலில் நான் டாக்டர் கால்ட்டனுடன் மிஷினரியாக இந்தியா வந்தேன். தொழுநோயாளிகள் நிரம்பி வழியும் இந்தியாவை கடைத்தேற்றும் மெடிக்கல் மிஷினரி. ஆனால் பிறகு திரும்பி சென்றுவிட்டேன். … என் உடல்நிலை இந்த நாட்டின் வெப்பத்தை தாங்க முடியவில்லை.”

“ஆனால் நான் ஏன் மீண்டும் இந்தியா வந்தேன் தெரியுமா?”

“என் அழைப்பு ஒரு நாள் நள்ளிரவில் வந்தது… விண்மீன்கள் நிறைந்த மேகமற்ற நிலவற்ற இரவு அது… வீட்டின் மேல்தளத்தில் என் படுக்கையில் இருந்தபடி ஜன்னல்வழியாக விண்மீன்களைப் பார்த்து கொண்டிருந்தேன்… அப்போது நான் அதை கண்டேன்… அது ஒரு பாதை … பசுக்களின் கால் தடங்கள் புழுதிகளில் பதிந்திருக்கும் இந்திய கிராம பாதை… அதில் அவர் … என் மேய்ப்பர் வெறும் காலுடன் சென்று கொண்டிருந்தார்…  அவர் முதுகையே நான் பார்த்தேன்…

எனக்கு ஒரு குரல் துல்லியமாக கேட்டது… ’கிழக்கின் அழைப்பை ஏற்பாயா என் அன்பனே…நல்ல மேய்ப்பன் நான் அழைக்கிறேன்…ஏற்பாயா என் மகனே…’ அந்த அழைப்பு வார்த்தைகளாக இல்லை ஆனால் என் காதில் இசையின் இனிமையாக அந்த அழைப்பை உணர்ந்தேன். உடலின் ஒவ்வொரு செல்லிலும் அலையென பொங்கும் உணர்ச்சி ஊற்றாக அந்த அழைப்பின் இனிமை என்னை மூழ்கடித்தது …அந்த தருணத்தில் நான் முடிவு செய்தேன்… இந்தியாவுக்கு மீண்டும் சென்று ஊழியம் செய்வேன், இறந்தால் அங்கேயே இறப்பேன் என்று… அந்த இந்திய வீதியில் புழுதியையும் சருகுகளையும் காற்று வீசியடிக்க அவர் பின்னால் நான் சென்றேன்… என்றாவது என் மேய்ப்பனின் முகம் எனக்காக திரும்பும்.

”ஆக்னஸ் நான் நன்றாகத்தான் திட்டமிட்டேன்… இந்து வழக்கங்கள் மூலமாக கிறிஸ்துவை இம்மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்… … இந்த இருண்ட இந்துஸ்தானத்தை ஏசுவிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காகவே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் ஏற்பட்டிருப்பதாக நான் நம்பினேன். உன்னை மணந்த போது ஒரு இந்திய குடும்பஸ்தனாக இந்திய குடும்பங்களை கர்த்தரிடம் கொண்டு வந்துவிட முடியுமென களிப்புற்றேன்… ஆனால் இந்த மண்ணில் ஒரு மேய்ப்பன் இருந்து கொண்டிருக்கிறான்… அன்று இரவு நான் கேட்ட அந்த அழைப்பு அவனுடைய அழைப்பு என்பதை நான் தொடர்ந்து உணரலானேன். காந்தியின் அகிம்சையில், இதோ இந்த கிராமத்து மக்கள் நம் மகனின் மரணத்தின் போது அதை அவர்களின் சொந்த  துக்கமாக பகிர்ந்து கொண்ட அந்த தூய அன்பில் …”

ஈவான்ஸ் ஒரு நிமிடம் மௌனத்தில் உறைந்து  பின் ஆரம்பித்தார் … “ஒரு முறை வட இந்திய பஞ்சத்தின் போது நான் பஞ்சத்தில் இறந்த இந்து குழந்தைகளை அடக்கம் செய்திருக்கிறேன்… ஆக்னஸ்… பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளை கொண்டு சென்று அடக்கம் செய்யும் முன்னால் அவர்களின் இறுதி நொடிகளில் ஞான ஸ்நானம் செய்ய வேண்டுமென்று எங்களுக்கு சபையிலிருந்து உத்தரவு இருந்தது… அப்படி எத்தனை குழந்தைகளை கிறிஸ்தவர்களாக்கி அடக்கம் செய்தோம் என்பதை நாங்கள் அறிக்கையாக அனுப்ப வேண்டும்… ஆனால் அன்றைக்கு அந்த இந்துக்கள் நம் மகனின் மரணத்தை தங்கள் துக்கமாகவே கருதி அடக்கக் குழியை தோண்டிய போது … நான் நம் மகனுக்காக மட்டும் அழவில்லை…  இழந்த என் ஆத்மாவை என் அழுகையால் மீட்டேன்… அந்த அழுகையின் உள்ளே… மீண்டும் நான் என் மேய்ப்பனின் அழைப்பினை உணர ஆரம்பித்தேன்..”

ஈவான்ஸ் மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்தார். இப்போது ஆக்னஸின் விசும்பல் மௌனத்தை கிழித்தது. ஈவான்ஸ் தொடர்ந்தார்,

” அடுத்து நான் எதிர்கொண்ட சோகமும் கொஞ்சமும் குறைந்ததில்லை ஆக்னஸ்… நான்கு வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் தடியடியால் அடிபட்டு இறந்த என் நண்பர் லாலா லஜ்பத்ராய் அந்த தடியடிகளை எதிர்கொண்ட விதம் … ஆம்…

மறுநாள் நான் அவரை லாகூர் மருத்துவமனையில் சென்று பார்த்தேன். அவர் தோள்பட்டையில் மார்பில் கருநீலமாக ரத்தம் கட்டிய அடித்தளும்புகள். ஒவ்வொரு அசைவும் அவருக்கு வேதனை அளவிடமுடியாமல் இருப்பது தெரிந்தது. ஆனால் அந்த வேதனையிலும் அவரால் புன்னகைக்க முடிந்தது. “ஸாம்! எனக்கு மிகப் பெரிய மரியாதையை செய்துவிட்டது பிரிட்டிஷ் அரசாங்கம்! இதோ தேச பக்தி பாரதம் முழுவதும் அலையடிக்கிறது… இந்த கிழவன் வாழ்ந்து செய்ய முடியாததை என் மரணத்தில் சாதிக்க வைத்துவிட்டார்கள் காவல்துறையினர்” அவர் குரலில் எவ்வித வெறுப்பின் சாயல் கூட இல்லை.

லாலா லஜபத் ராய்

ஒரு நிறைவான வாழ்க்கைக்கு தன்னை இட்டு சென்ற நண்பர்கள் என்றார் காவல்துறையினரை… பக்கத்து படுக்கையில்தான் ஹன்ஸ்ராஜ் இருந்தார்… அவரது உள்ளங்கை முழுமையாக சிதைந்திருந்தது. அவருக்கும் எந்த வெறுப்பும் இல்லை. லஜ்பத்ராயை காப்பாற்ற தன் கரம் பலியானதில் அவருக்கு ஒரே பெருமிதம். ஆக்னஸ்,,,ஏசு குறித்து நாம் உருவாக்கி விற்கும் கற்பனைகளின் உன்னதங்களை வெகு இயல்பாக வாழக்கூடியவர்களை கொண்ட தேசம் இது என்பதை நான் உணர்ந்தேன்…

”என் மேய்ப்பரின் அழைப்பின் இசையை அப்போது நான் உணர்ந்தேன்… அந்த தெய்வீக  இசையை ஒரு தேசமாக ஒரு பண்பாடாக  காண எனக்கு அவன் கொடுத்த அழைப்பு… என் உண்மையான என் அந்தரங்கத்தின் அடியாழத்தின் என்னை வழி நடத்தும் நல்ல மேய்ப்பன்…. அவனை தரிசிக்க, அவனது விராட ரூபத்தை தரிசிக்க என்னை அழைத்தான். ஆனால் நானோ என் இறுமாப்பில் இந்த தேசத்தையே ஒரு புத்தகத்தின் சத்தியத்தில் அடைப்பதற்கான அழைப்பு என்று முடிவு செய்து இங்கு வந்தேன். என் கிறிஸ்தவ இறுமாப்பும் என் வெள்ளைத் தோல் ஆணவமும் இந்த மண்ணின் மகோன்னதத்தின் முன் மண்டியிட்டுவிட்டது… ஆனால் அந்த சரணாகதி முழுமையட வேண்டும்…

ஆகவேதான் இந்த ஒரு வேலை மிச்சமிருக்கிறது… அவன் என்னை திரும்பி பார்க்கிறான்… நான் என் மேய்ப்பனின்  முகத்தை கண்டுவிட்டேன்… அவன் தலையில் அணிந்திருக்கும் மயில் பீலியையும் … என் ஆச்சரியத்தைக் கண்டு அவன் கண்கள் காட்டும் குறும்பு மகிழ்ச்சியையும்… அன்று நான் கேட்ட அழைப்பு அதுதான்…ஆக்னஸ்… வேணு கானம்… அவன் புல்லாங்குழலின் தெய்வீக இசை

உணர்ச்சியின் வேகத்தில் குரல் தடுமாற ஈவான்ஸ் தலை நிமிர்ந்து ஆக்னஸை பார்த்தார்,,, ஆக்னஸின் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது… மெல்ல எழுந்து அவரருகே வந்து அவரது தோள்களை பற்றிய படி அவள் கூறினாள், “சாம் உங்களுக்கோ வேணு கானம் ஆனால் எனக்கு … …நான் மறந்து மறுத்த என் மூதாதை… மாளிகைகளை துறந்து வீதிகளில் பக்தியால் பித்தான மீராவின் குரல்…”

தன் உணர்ச்சி வேகத்திலிருந்து விடுபட்டு தன்னை மீண்டும் திடப்படுத்தியவளாக ஆக்னஸ் கேட்டாள், “சரி… ஆண்ட்ரூஸுக்கு என்ன பதில் எழுதினீர்கள்?” ஈவான்ஸ் மெல்ல சோகமாக புன்னகைத்தார், “வேதாந்தி குடும்பஸ்தனாக இருந்தால் அவனுக்கு அடையாளங்கள் வேண்டும் என்று எழுதினேன். குடும்பம் என்றதும் நினைவுக்கு வருகிறது.” ஈவான்ஸ் எழுந்து எதிரே இருந்த மேசையிலிருந்த சில தாள்களுக்கு கீழே இருந்து ஒரு கவரை எடுத்தார்… இந்தா என் மைத்துனன் உன் அடாவின் புருஷன் நஸீப் ஒரு கடிதம் எழுதியிருக்கிறான்…எனக்குத்தான்… ஆனால் நீ கட்டாயம் படிக்க வேண்டும் உள்ளே இருக்கிறது படித்து பார்”

ஆக்னஸ் அதை வாங்கி உள்ளேயிருந்து கசங்கிய அந்த சிறிய தாளை எடுத்தாள், மூன்றே வரிகள்தான் இருந்தன. அதை படித்ததும் ஆக்னஸின் முகம் வெளுத்தது, “அட கடவுளே…! இதென்ன முட்டாள்தனம்…சாம் இதை நீங்கள் காவல்துறையிடம்…”

“அசடே” என்றார் சாமுவேல் மிக மெலிதாக சிரித்தார், “கொலை செய்துவிடுவேன் என்று எழுதினால் கொலையா செய்துவிட போகிறான்! அவன் உணர்ச்சி வசப்படுபவன்… ஆனால் நீ வேண்டுமென்றால் அடாவிடம் கேட்டுப் பார், கோகுல் சந்த் பெஞ்சமினான போது யாராவது இப்படி கடிதம் அனுப்பினார்களா என்று… எதுவானாலும் அந்த கவித்துவ வரிகளை ரசித்தேன், நீ இங்கு கொண்டு வந்தது அமெரிக்க ஆப்பிள்களை அல்ல ஆதிபாவத்தின் கனிகளை… நம் விவிலிய விசுவாசி நஸீப்புக்குள் இப்படி ஒரு கவிஞன் இருக்கிறான் என்றால் யார் நம்புவார்கள்…” ஆக்னஸின் கண்ணில் நிரம்பிய அந்த நீர் திரைக்குள்ளும் புன்னகை செய்ய முடிந்தது.

***

அந்த சிறு உலோக குண்டம் தலை கீழான, அடிப்பாகம் திறந்த பிரமிடு போல இருந்தது. அதற்குள் சாண வறட்டிகள் போடப்பட்டு நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. வெள்ளை உடை அணிந்த ஒரு சிறுவன் அவ்வப்போது அந்த குண்டத்தில் ஒரு வெகு சிறிது நெய்யை ஊற்றி தீ அணையாத வண்ணம் பார்த்து கொண்டிருந்தான். செந்தழல்களின் நடனம் அவன் முகத்தில் செம்மையை ஆங்காங்கே இடம் மாற்றி தீட்டி அழித்தபடி இருந்தன. ஆரிய சமாஜத்தின் ஹிமாலயன் ஆங்கிலோ சம்ஸ்கிருத் பள்ளியின் மலைவாசி மாணவர்கள் வேத மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தனர். சிறுகிராமமான கோட்கார்கின் ஒட்டுமொத்த மக்களும் அந்த சிறிய மர கோவிலின் முன் பகுதியில் குழுமியிருந்தனர். குளிர்ந்த காற்றும் இளம் வெயிலும் அங்கு குழுமியிருந்தோரின் முகங்களில் இருந்த திருவிழா கொண்டாட்ட சந்தோஷ சூழலை இன்னும் இதமாக்கியது.

சாமுவேல் ஈவான்ஸ் ஸ்டோக்ஸ் தனது மனைவியுடனும் தனது பதின்ம வயது மகள்கள் இருவருடனும் மெல்ல வந்து கொண்டிருந்தார். அவர் தூய வெள்ளை கதராடை அணிந்திருந்தார். தலையில் ஹிமாச்சல பிரதேசத்துக்கே உரிய வண்ண நிற குல்லா. பெண்கள் மூவரும் சல்வார் கமீஸ் அணிந்து வந்து கொண்டிருந்தனர்.

வாயிலின் முகப்பில் கவலை தோய்ந்த முகத்துடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். வெள்ளை உடையில் இருந்த அவர் தோள்களில் காவி அங்கவஸ்திரம் தவழ்ந்தது. இடது தோளில் ஒரு துணி ஜோல்னா பை தொங்கிக் கொண்டு இருந்தது. அதில் நட்ட நாயகமாக தையல் வேலை தேவநாகரியில் ‘ஓம்’ என்றது. “வணக்கம் பண்டிட் ரிஷி ராம்” என்றார் சாமுவேல், “சரியான நேரத்துக்கு வந்துவிட்டோம் அல்லவா… பெண்கள் பள்ளியிலிருந்து நேற்றுதான் விடுமுறையில் வந்திருந்தார்கள்… ஏற்கனவே அவர்களுக்கு இதை எழுதியிருந்தேன்…அவர்களுக்கு பெயர் மாற்ற வேண்டியதில்லை இவள் சாவித்திரி … பெரியவள் சத்தியவதி…” ஆக்னஸ் பண்டிட்டுக்காக கை கூப்பினாள். பெண்கள் கை கூப்பி ஒன்றாக ‘நமஸ்தே பண்டிட்ஜி’ என்றதில் மெலிதான குறும்பு இருந்தது. பண்டிட் அமைதியாக இரு கரம் கூப்பி வணங்கினார், “திரு.ஸ்டோக்ஸ் உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்”

சாமுவேல் ஸ்டோக்ஸின் நெற்றியில் கவலை வரிகளிட்டது. “ஏதாவது புது பிரச்சனையா?” அவர்கள் இருவர் மட்டும் மெல்ல கோவிலின் வெளிப்பிரகாரத்தில் சுற்றி கர்ப்பகிருகத்துக்கு பின்னால் வந்தார்கள். கல் தளங்களின் மேல் புல்கள் வளர்ந்திருந்தன.

”சொல்லுங்கள் பண்டிட்ஜி…”

அவர் தனது ஜோல்னா பையிலிருந்து ஒரு பத்திரிகையை எடுத்தார். ‘ஹரிஜன்’. “காந்திஜி உங்கள் முடிவை குறித்து கூறியிருப்பதை படியுங்கள்… ஹிந்துவாக நீங்கள் மாறுவதே ஒரு மதமாற்றத் தந்திரம் என வதந்திகள் பரவியுள்ளன…” ஸ்டோகஸ் வருத்தத்துடன் புன்னகைத்தார். ”பண்டிட்ஜி அவசியமில்லை. நான் ஏற்கனவே படித்துவிட்டேன்… உங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் ஸ்வாமி சிரத்தானந்தர். அவர் இந்த நாளை எப்படியோ முன்னுணர்ந்திருந்தார் என்று நாம் இருவருமே பேசினோம். சுவாமிஜி தவறான நபரை உங்களுக்கு சுட்டிக்காட்டியிருப்பார் என நினைக்கிறீர்களா…? ”

பண்டிட்ஜியின் தலை சிறிது கவிழ்ந்தது. ஸ்டோக்ஸ் தொடர்ந்தார், ”பண்டிட்ஜி இதை உங்களுக்கு அனுப்பியவர்களை உங்களால் ஊகிக்க முடியாவிட்டாலும் என்னால் ஊகிக்க முடிகிறது. என் பழைய எஜமானர்கள். ஆனால் அது பழைய பத்திரிகை. அதற்கு அடுத்த இதழில் என் விளக்கமும் அதனை காந்திஜி ஏற்றுக் கொண்டதும் வந்திருந்ததே… மகாதேவ் தேசாய் எனக்கு அதனை அனுப்பியிருந்தார்… யாராவது இதை எழுப்பலாம் என்பதால் நான் எழுதிய கடித நகலை கொண்டு வந்திருந்தேன்… ஆனால் நீங்களே கேள்வி எழுப்புவீர்களென நான் நினைக்கவில்லை. “

பண்டிட் அந்த கடித நகலை படித்தார், “…ஆன்மிக பாதையில் தீவிரமாக இறங்கும் ஒவ்வொருவரும் ஒரு பாதையை கட்டாயமாக கண்டடைவர். என்பதை நீங்கள் அறிவீர்கள்… நான் வேறெதையும் விட உபநிடதங்களையும் கீதையையும் என் ஆன்மிக பாதையென என உறுதியாக கண்டு தெளிந்துவிட்டேன்…” பண்டிட் கண்களில் நீர் பனிக்க ஸ்டோக்ஸை தழுவிக் கொண்டார்.
நடுவில் பெற்றோரும் மகள்கள் இருபுறமுமாக ஸ்டோகஸ்கள் அந்த அக்னி குண்டத்தின் முன் அமர்ந்தனர். பண்டிட் அவருக்கு யக்னோபவீதம் அணிவித்தார். பெண்களும் ஆரிய சமாஜ முறைப்படி தங்கள் ஆடைகளின் மேல் யக்ஞோபவீதத்தை அணிந்தனர்.

Samuel Evans Stokes

மாணவர்களின் குரல்களில் வேதரிஷிகள் கண்டடைந்த மந்திரங்களின் ஒலி அந்த சிறு கோவிலிலிருந்து சுற்றி நின்ற தேவதாரு மரங்களூடாக சென்று மீண்டும் வெளியில் கரைந்தன.
பண்டிட் சொல்ல சொல்ல சத்தியானந்த ஸ்டோக்ஸ் காயத்ரி மந்திரத்தை கூறினார். கூடவே அவரது மனைவி பிரியதேவியும் புதல்விகள் சத்தியவதியும், சாவித்ரியும் கூறினர்.

ஓம்.
ஓம்
யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ
யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ
அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத்
தியானிப்போமாக.
அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத்
தியானிப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

ஸ்டோக்ஸின் மனவெளியின் பரப்பெங்கும் சத்தியத்துக்கும், நித்திய ஒளிக்கும், அமரத்துவ நிலைக்கும் அழைத்து செல்லும் நல்ல மேய்ப்பனின் புல்லாங்குழல் இசை முழுமையான விடுதலை உணர்ச்சியாக அலையடிக்கும் ஆனந்தமாக நிரம்பியது….

(முற்றும்)

——-

சில வரலாற்று குறிப்புகள்:

 • SPG – Society for the Propagation of Gospel; CMS- Church Missionary Society
 • சாமுவேல் ஈவான்ஸ் ஸ்டோக்ஸ் வரலாற்றில் வாழ்ந்தவர். அமெரிக்கர். கிறிஸ்தவ மிஷினரியாக இந்தியா வந்தவர். ஹிமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் சாகுபடியை அறிமுகப்படுத்தியவர் இவரே. இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். ஆரிய சமாஜத்துடன் அவருக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. லாலா லஜ்பத்ராயின் நண்பர். இந்திய விடுதலை போராட்டத்தின் போது ’பிரிட்டிஷார் மீது இந்தியர்களுக்கு வெறுப்பை உண்டாக்கிய காரணத்துக்காக’ சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சில சலுகைகள் அளிக்க நிர்வாகம் முன்வந்த போது தன்னை இந்திய கைதிகள் போலவே நடத்த வேண்டுமென நிர்ப்பந்தித்தார். மகாத்மா காந்தி இவரது நடத்தையை வெகுவாக சிலாகித்தார். 1932 இல் சாமுவேல் ஈவான்ஸ் தனது குடும்பத்துடன் ஹிந்துவாக மாறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மிஷினரிகள் அவர் ஹிந்துக்களை மதம் மாற்றவே ஹிந்துவாக அவர் மாறுகிறார், அது ஒரு மதமாற்ற யுக்தி என பிரச்சாரமும் செய்தனர். இந்த வதந்தி காந்தியை எட்டியது. ஹரிஜனில் காந்தி இதை தெரிவித்த போது மகாதேவ் தேசாய்க்கு தனிப்பட்ட கடிதம் எழுதி தனது முடிவு ஹிந்து ஆன்மிக பண்பாடே தனது பாதை என தாம் கண்டடைந்ததால் விளைந்தது என அவர் தெளிவுபடுத்தினார். அவர் குறித்த நூல் ஆஷா ஷர்மா எழுதிய An American in Gandhi’s India, Indiana University Press, 2008.
 • லாலா லஜ்பத் ராயை கொல்ல காவல்துறை அதிகாரி ஸ்காட் திட்டமிட்டே அந்த தடியடியை நடத்தினான். அந்த தடியடியே லாலா லஜ்பத்ராயை கொல்ல நடத்த ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல்தான். பிறகு ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிப்பப்ளிக்கன் ஆர்மி எனும் அமைப்பைச் சார்ந்த பகத் சிங் லாலாஜியின் கொலைக்கு பழிவாங்க சாண்டர்ஸை சுட்டுக் கொன்றார். அவர்கள் குறி வைத்தது ஸ்காட்டுக்கு.
 • கிறிஸ்தவ அமைப்புகள் டயரையும் ரவ்லட் சட்டத்தையும் ஆதரித்தது குறித்த ஆதாரங்கள்:
  // Ms. Marcella Sherwood of the Church of England Zenana Missionary Society and the Rev. Canon Guildford of the CMS, also in Punjab , openly declared that Gen. Dyer’s action at Jallianwala Bagh was justified “by its results” // Elizabeth Susan Alexander, The attitudes of British Protestant missionaries towards nationalism in India: with special reference to Madras Presidency, 1919-1927, Konark Publishers, 1994, பக்.29,//I have letters from five other English missionary ladies who were in Amritsar at the time, and who went though this terrible time. All asked me to implore the House of Commons not to do this great wrong to General Dyer. //
  Parliamentary debates: Official report, Volume 131, Great Britain. Parliament. House of Commons, H.M. Stationery Off., 1920, பக். xcviii
 • மேலும் பொதுவான கிறிஸ்தவ நிலைபாடுகள் குறித்து: https://www.christianaggression.org/item_display.php?type=ARTICLES&id=1087982035
 • பஞ்சத்தில் அல்லது நோயில் இறந்து போகும் குழந்தைகளை பெற்றோர் அறியாமல் ஞான ஸ்நானம் செய்வித்து கிறிஸ்தவர்களாக மாற்றும் வழக்கம் குறித்து நேரு அரசின் காலத்தில் மத்திய பிரதேசத்தில் நியமிக்கப்பட்ட நியோகி கமிஷன் அறிக்கை விவரிக்கிறது.

14 Replies to “தமஸோ மா… – 2”

 1. ” ஆனால் நீ வேண்டுமென்றால் அடாவிடம் கேட்டுப் பார், கோகுல் சந்த் பெஞ்சமினான போது யாராவது இப்படி கடிதம் அனுப்பினார்களா என்று…”- மிக அற்புதம். அபிரகாமிய மதமாற்ற வியாபாரிகள் இதனைப்படித்து திருந்தினால் அவர்களுக்கு நல்லது.

 2. ஆயிரம் கட்டுரைகளால் சாதிக்க முடியாத விழிப்புணர்வையும் மனமாற்றத்தையும் இதுபோன்ற ஒரு கதையால் சாதிக்க முடியும். ஆனாலும் பிரசார வாடையே வீசாத மிகவும் நுட்பமான படைப்பிலக்கிய ஆளுமையுடன் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனை
  இவர் மாதிரியான படைப்பாளிகள் நமக்கு நிறையத் தேவை. .
  -மலர்மன்னன்

 3. அன்புள்ள ஆலந்தூர் மள்ளன்,

  வெள்ளையர்கள் நம் வரலாற்றை அவர்கள் விருப்பத்திற்குப் ‘புணைந்தார்கள்’. நீங்கள் அந்தப் புணைவுகளில் மறைக்கப்பட்ட உண்மையை உருவி எடுத்து புனைகதை ஆக்கியிருகிறீர்கள்.

  தியாகி. லாலா லஜ்பத் ராயின் சோகமான கண்கள் என்பது மிக நுணுக்கமான அவதானிப்பு. ஆம், அவர் புகைப்படங்களைப் பார்த்தால் அஹிம்சைவாதிக்கே உரிய ஒரு அமைதியும், நிதானமும் கொஞ்சம் சோகமும் இருக்கும்.

  கிழக்கிற்கு ஊழியம் செய்ய அழைத்த மேய்ப்பன் முதுகு காட்டிப் போவதும், இந்துக்களின் வழியிலேயே சென்று அவர்களை கிறிஸ்தவர்களாக்க திட்டமிட்ட இவான்ஸ் அந்த வாழ்க்கை முறையின் தியாகத்தாலும், வஞ்சகமில்லாத அன்பினாலும், நேர்மையினாலும் தன் மனம்மாறி உண்மையை உணரும் தருணத்தில் மயில்பீலி காற்றில் ஆட உண்மை மேய்ப்பன் திரும்பிப் பார்த்து முகம் காட்டும் இடம் -அழகு! அருமையான புனைவுத் தருணம். கூடவே இவான்ஸின் மனைவியுடைய மீராவின் ஊர் பின்புலமும் – ஒரு சிறந்த முன்மாதிரி பக்தையின் ஞாபகங்கள் வழியாக தான் மறந்த, மறுத்த கண்ணனைக் தன்னுள் கண்டுகொள்வதும் மிகப் பொருத்தம்.

  லாஹூர் போராட்டத்தில் லஜ்பத் ராயுடன் பண்டிட் மதன் மோகன் மாளவியாவும் இருந்தார் இல்லையா?

  தொடருங்கள். வாழ்த்துக்களும் நன்றியும்.

 4. மதன் மோகன் மாளவியாவின் கண்களை ஆலந்தூர் மள்ளன் பார்க்காமல் இருந்திருக்கலாம் இல்லையா?

  இந்த இல்லையாவைத் தடை செய்யாதவரை இலக்கியம் உருப்படாது இல்லையா?

 5. சகுனி, கூனி போன்ற பெயர்களில் வந்து உருப்படாத மறுமொழிகள் போடாவிட்டால் மலச்சிக்கல் தீராது இல்லையா?

 6. நல்ல ஒரு கதை.சில பகுதிகளை கண்ணீரோடே கடக்கமுடிந்தது. ஆனாலும் பிரச்சார நெடி நேரடியாக இரண்டாம்பகுதியில் தெரிகிறது. சில ஓவர்ட்ரமாடிக் ஓவர்டோன்களை தவிர்த்திருந்தால் மிக அழகான இலக்கிய தரமான கதையாகியிருக்கும். அறம் சிறுகதைகள் போல உயர்ந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கிறது.

 7. // சில ஓவர்ட்ரமாடிக் ஓவர்டோன்களை தவிர்த்திருந்தால் மிக அழகான இலக்கிய தரமான கதையாகியிருக்கும். அறம் சிறுகதைகள் போல உயர்ந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கிறது. //

  ஓ.. இதற்கு பேர்தான் இலக்கிய நாட்டாண்மையா? எது “உயர்ந்த” கதை என்று சொல்ல நீங்களும் உங்களைப் போன்ற ஜெ.மோ வாசகர்களும் தான் அத்தாரிட்டியா? என்ன கொடுமை இது சரவணன்!

  இது ஒரு வரலாற்றுக் காவியம். உண்மை மனிதர்கள் கதாபாத்திரங்களாக வரும் இடங்களில் ஒரு பிசிறு, ஒரு தவறு கிடையாது. அனைத்திற்கும் ஆதாரம் மிகத் தெளிவாக தரப்பட்டுள்ளது. கதையின் நடை, உரையாடல்கள் அனைத்தும் நெஞ்சைத் தொடுகின்றன. “பிரசாரம்” என்று உங்களுக்குத் தோன்றும் பகுதிகள் அப்பட்டமான, முகத்திலறையும் உண்மைகள்.. அவற்றை நீங்கள் கேள்விப் படாததால் அது பிரசாரமாகி விடுமா? அல்லது, இத்தகைய “உண்மைகளை” ஜெ.மோ அவரது ஸ்டைலில் சொன்னால் மட்டும் தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? – ஜெமோ எழுதினால் இலக்கியம், அதையே வேறு ஒரு எழுத்தாளர் எழுதினால் பிரசாரம்.. நல்ல இலக்கிய நேர்மை!

  அறம் சீரிசில் உள்ள *பல* கதைகளை விட இந்தக் கதை உயர்ந்தது, அதில் உள்ள மிகச் சிறந்த கதைகளுடன் ஒப்பிடத் தக்கது என்று நான் நினைக்கிறேன்.

 8. A great history. Initially, I thought it is just a story, but later on when I saw the pictures of Lalaji and Samuel, a pleasant surprise took me on. Sanatana Dharma! Hail thy birthplace Bharat!

 9. அமர கதை! வாழ்த்துக்கள் திரு. ஆலந்தூர் மல்லன் அவர்களே!

 10. “ஏசு குறித்து நாம் உருவாக்கி விற்கும் கற்பனைகளின் உன்னதங்களை வெகு இயல்பாக வாழக்கூடியவர்களை கொண்ட தேசம் இது என்பதை நான் உணர்ந்தேன்…”

  கண்கள் பனிக்க வைக்கும் வைர வரிகள்!

 11. தமஸோமா என்கிற ஆலந்துராரின் சிறுகதை வாசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் சிந்தனைக்கும் நன்றாக இருக்கிறது. இப்படியே தொடர்ந்து எழுதி விரைவில் சிறுகதைத்தொகுப்பு நமது தமிழ் ஹிந்து சார்பில் வெளியிட வேண்டும். முன்வெளியீட்டு த்திட்டம் எதாகிலும் இருந்தாலும் சொல்லுங்கள் பணம் அனுப்பத் தயார். எந்தை தில்லை கூத்தப்பெருமான் திருவருள் நிறைக.
  விபூதிபூஷன்

 12. உண்மையை தேடுபவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை பாரதப்பண்பாடு ஆன்மீகம் தன்னிடத்தில் ஈர்த்துக்கொள்ளும் என்பதை இனிமையாக சொன்னது ஸ்ரீ ஆலந்தூர் மள்ளனாரின் தமஸோமா சிறுகதை.
  விபூதிபூஷன்

 13. அருமையான முயற்சி. நிகழ்வை சற்றே சுவையாகப் பதிந்திருக்கிறார் ஆலந்தூர் மள்ளனார். சிறுகதை என்பதை விட வரலாற்றுக் கதை என்பது பொருந்தும் பெயர். இக்கதை குறித்து முகநூலில் இட்லி வடைக்கு மிளகாய்ப் ‘பொடி வைத்த’ கருத்தையும் கண்டேன். ஆனால் மிளகாய்ப் பொடியில் காரம் சாரம் இல்லை என்பது இங்கே வந்து படித்து முடித்ததும் தெரிகிறது, இறையருள் துணையுடன் இது போலப் பல நிகழ்வுளின் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொணர்வீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *