புனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா?

 குடியரசு இதழில் இப்படி ஒரு செய்தி வந்தது.

‘அப்பொழுதே – புனா ஒப்பந்தக் காலகட்டத்தில் – தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும், தோழர் ஈ.வே.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பேத்கருக்கு விஷயங்களை விளக்கி, ‘ஏமாந்து போகாதீர்கள்’ என்று அதாவது ஒரு காந்தியாரை விட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் கேவலமானதல்ல என்றும்; 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் நீண்ட தந்தி கொடுத்திருந்தும்…’

–குடியரசு 9-5-1937

 

இந்த செய்தியை அடிப்படையாக வைத்து, சுப.வீரபாண்டியன் எழுதுகின்றார் :

‘‘இரட்டை வாக்குரிமையை எதிர்த்து எரவாடா சிறையில் காந்தியார் உண்ணாநோன்பிருந்தபோது, பெரியார் தன் ஐரோப்பியச் சுற்றுப் பயணத்தில் இருந்தார். காந்தியாரின் உடல்நிலை, நாளுக்குநாள் நலிந்து கொண்டு போனபோது, அனைவரும் அம்பேத்கரை நெருக்கத் தொடங்கினர். காந்தியார் கோரும் சமாதான உடன்பாட்டில் கையெழுத் திட்டு, அவர் உயிரைக் காப்பாற்றுமாறு அம்பேத்கரை நாடே கேட்டுக் கொண்டது. பெரியார் ஒருவர்தான், வெளிநாட்டிலிருந்து அனுப்பிய நீண்ட தந்தியில், பலகோடி மக்களின் உரிமையைக் காட்டிலும், காந்தியாரின் உயிர் பெரியதன்று என்றும், உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக, காந்தியார் போன்ற மிகப் பெரும் மக்கள் தலைவரைப் பகைத்துக் கொள்ள யார் முன்வந்திருப்பார்கள்? பெரியார்தான் முன்வந்தார்.’’

(–பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம், பக்.173)

தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவிக்கின்ற உரிமைகளெல்லாம் ஈவெரா-வால்தான் போராடி பெற்றுத்தந்தவை போன்ற பிம்பத்தை பெரியாரியல் ஆய்வாளர்கள் அனைவரும் ஒரே குரலில் வலியுறுத்தி வருகின்றனர். அந்த ஆய்வு அடிப்படையில் சுப.வீரபாண்டியன் அவர்களின் இந்த புத்தகமும் ஈவெராவுக்கு ஒரு மிகப்பெரிய பிம்பத்தை உருவாக்குகிறது.

பூனா ஒப்பந்தம் குறித்த ஈவெராவின் பங்கு பற்றி வெளிவந்தநூல் அ.ஜெகநாதன் அவர்கள் எழுதிய ‘இரட்டை வாக்குரிமை குறித்தான சில ஆய்வுகள்’ ஆகும். ஆராய்ச்சி செய்து எழுதியுள்ள ஆசிரியர் ஆதிதிராவிட மக்களுக்கு தன்மானத்தை ஊட்டியுள்ளார் என்றே சொல்லவேண்டும்.

– பூனா ஒப்பந்தத்திற்கு போராட்டம் நடத்தியவர்கள்

– ஊர்வலங்கள் நடத்தியவர்கள்

– கூட்டங்கள் நடத்தியவர்கள்

ஆதிதிராவிடர் மட்டுமே என்பதை நிரூபித்து இருக்கிறார். இந்நூலிலிருந்தே பெரும்பகுதி இக்கட்டுரையில் சுருக்கத்துடன் சேர்க்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் ஆய்வுக்கு வருவோம்.

ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அடித்தாரா?

பூனா ஒப்பந்தக் காலகட்டத்தில் ஈவெரா ஐரோப்பாவில் இருந்தார். தமிழகத்தில் குடியரசு இதழில் இப்பிரச்சனைக்காக நிறைய கட்டுரைகள், தலையங்கங்கள் எழுதப்பட்டன என்பதை மறுக்க முடியாது.

ஆனால் ஈவெரா அம்பேத்கருக்குத் தந்தி அடித்தாரா என்றால் இல்லை. அந்த மாதிரியான தந்தி வாசகம் குடியரசில் ஒரு இடத்தில் கூட இல்லை.

ஈவெரா-வின் அயல்நாட்டு பயணக்குறிப்புகள் நூலை வெளியிட்ட ஆனைமுத்துவும் இப்படி ஒரு தந்தி அடித்திருப்பதாக அந்நூலில் பதிவு செய்யவில்லை.

அப்படியானால் ஈவெரா பொய் சொல்லி இருக்கிறாரா என்றால் ‘ஆம்’ என்பதுதான் பதில்.

‘6 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் நீண்ட தந்தி கொடுத்திருந்தும்…’ என்பதெல்லாம் ஆதிதிராவிடர்களை ஏமாற்றவே.

சுப.வீரபாண்டியன் அவர்கள் இதில் மேலும் ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார். அதாவது,

அந்தக் காலகட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக, காந்தியார் போன்ற மிகப் பெரும் மக்கள் தலைவரைப் பகைத்துக் கொள்ள யார் முன்வந்திருப்பார்கள்? பெரியார்தான் முன்வந்தார். (பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம், பக்.173)

இதன் பொருள் என்ன? தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஈவெரா மட்டுமே ரட்சகராக இருந்தார் என்பதுதானே?

ஆனால் உண்மை என்ன?

தாழ்த்தப்பட்டவர்களுக்காக யாருமே பகைத்துக்கொள்ள முன்வராத போது ஈவெரா மட்டுமே முன்வந்தார் என்று கூறுகிற சுபவீக்கு குடியரசு இதழிலிருந்தே பதில் தரலாம்.

வட்டமேஜை மாநாட்டில் ‘‘தாழ்த்தப்பட்டவர்களின் உண்மையான பிரதிநிதி நானே’’ எனப் பறைசாற்றிய காந்தியை எதிர்த்தும், தனித்தொகுதிதான் தேவை எனக் கோரியும், எம்.சி.ராஜா – மூஞ்சே ஒப்பந்தத்தை எதிர்த்தும், காந்தியின் உண்ணாவிரதத்தை எதிர்த்தும் ஆதிதிராவிடர்கள் தங்கள் தீர்மானங்களாக தெரிவித்து இருக்கின்றனர்.

வட்டமேஜை மாநாட்டில் ‘‘தாழ்த்தப்பட்டவர்களின் உண்மையான பிரதிநிதி நானே’’ எனப் பறைசாற்றிய காந்தியை எதிர்த்து ஆதிதிராவிட மக்கள் தங்கள் கோபத்தை, எதிர்ப்பைக் கண்டனக் கூட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்தினர்.

‘காந்தியையும், காங்கிரசையும் நாங்கள் நம்பவில்லை. எங்களின் உண்மையான பிரதிநிதி டாக்டர் அம்பேத்கரும், ராவ்பகதூர் ஆர். சீனிவாசனும்தான்’ என்பதான தீர்மானத்தை இயற்றி அதனைத் தந்தி வாயிலாக அம்பேத்கருக்குத் தெரியப்படுத்தினர். அம்பேத்கரும், சீனிவாசனும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் மொத்தம் 54 தந்திகள் தங்களுக்கு வந்திருப்பதாகவும் அவற்றில் 52 தந்திகள் காந்தியை நிராகரித்திருப்பதாகவும் ‘அம்பேத்கர் சீனிவாசனே உண்மையான பிரதிநிதிகள்; தனித்தொகுதிதான் எங்களுக்கு தேவை’ (குடியரசு 29-11-1931/15) என்று கோரியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்தே அதிகப்படியான ஆதரவுகள் இருந்திருக்கின்றன என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் கூடிய தாழ்த்தப்பட்டவர்கள் மாநாட்டில்,

‘‘இந்துக்களுக்குத் தலைவர் காந்தி ஒருவரே என்றிருப்பதை நாங்கள் கண்டிப்பதோடு ஆதிதிராவிடர்கள் என்பவர்களாகிய எங்களைத் தனியாகப் பிரித்து விடுமாறும், எங்களுக்குத் தனித்தொகுதியே அவசியம் என்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது’’ (குடி 27-9-1931/17)

என்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

11-10-1931 அன்று சென்னை கடற்கரை சாலையில் ஆதிதிராவிட மகாசன சபையின் ஆதரவில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில்,

‘‘இந்த ஏழை மக்களுக்கு வரப்போகும் அரசாங்கத்தில் தனித்தொகுதி வேண்டியில்லை என்ற காந்தியின் கொள்கையை மிக வன்மையாய்க் கண்டிப்பதுடன் அவரிடம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் டாக்டர் அம்பேத்கரும், இரட்டை மலை சீனிவாசன் அவர்களும் கொண்டுள்ள கொள்கையை முழுமனதோடு ஆதரிக்கின்றோம்’’ (18-10-1931/13)

என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

16-10-31 அன்று சென்னை நேப்பியர் பார்க்கில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில்,

‘‘அம்பேத்கரை நம் பிரதிநிதியல்ல என்று கூறிய செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.’’ (18-10-31/13)

எனத் தீர்மானம் இயற்றப்பட்டது.

சென்னை எழும்பூர் ஏரியில் எம்.சி.ராஜா தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில்,

‘‘தனித்தொகுதியே ஒடுக்கப்பட்டவர்களின் ஜீவாதாரமான கோரிக்கை….. தனித்தொகுதி வகுக்கப்படாத எந்த அரசியல் திட்டத்தையும் ஒடுக்கப்பட்டவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்… தனித் தொகுதியை எதிர்ப்பவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் ஜென்ம விரோதிகள். திரு.காந்தி ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வதை இக்கூட்டம் மறுப்பதுடன் இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்டவர் களுக்கெல்லாம் அவர் பெரிய விரோதி’’ (25-10-1931/12)

என்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல்,

பம்பாய் தாராவியில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிதிராவிட மகாசன சபையின் சிறப்புக்கூட்டம் 21-10-31 அன்று கூட்டப்பட்டிருக்கிறது. நாங்குநேரி தாலுகா ஆதிதிராவிடர் மகாசன சபை கூட்டம், கோலார் தங்க வயலில் 25-10-31ல் தமிழன் ஆசிரியர் கி. அப்பாதுரையார் தலைமையில் ஒரு கூட்டம், அக்டோபர் 17ல் தூத்துக்குடியில் கண்டனக்கூட்டம், 30-10-31ல் அரியலூரில் ஆதிதிராவிடர் வாலிபர் கூட்டம், திருவாரூரில் 30-1031ல் பொதுக்கூட்டம், அருப்புக்கோட்டையில் தாழ்த்தப்பட்டவர்கள் இரண்டாவது மாநாடு என்பதாக தமிழக தாழ்த்தப்பட்டவர்கள் கண்டனக் கூட்டத்தையும் கண்டனத் தீர்மானத்தையும் இயற்றியிருக்கின்றனர்.

காந்திஜியின் உண்ணாவிரதத்தை கண்டித்து சகஜானந்தர் கீழ்க்கண்டவாறு பேசியிருக்கிறார் :

‘‘…… காந்தியார் இதுசமயம் அவசரமாக தம் உயிரைத் தியாகம் செய்து விடப் போவதாகக் கூறுவதைக்கேட்டு நாம் நமது உரிமையை இழந்து உயர்சாதிக்காரர்களிடம் இன்னும் அடிமையாகவும் மனிதத் தன்மையற்ற இருகால் மிருகங்களாகவும் இருக்க முடியாது’’

குடியரசு 25-8-1932

இங்கு முக்கியமான செய்தியையும் பதிவு செய்ய வேண்டும். ஈவெராவுக்கு பின்னால் ஒளிவட்டத்தை உருவாக்குவதில் பெரியாரியல் எழுத்தாளர்கள் மிகவும் எளிதாகவே வேலை செய்துவருகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஈவெரா தொண்டாற்றினார்; போராடினார் என்றெல்லாம் சொன்னால் யார் அதை ஆராய்ச்சி செய்து நம்மை கேள்வி கேட்கப்போகிறார்கள் என்ற எண்ணம் பெரியாரியல் ஆய்வாளர்களுக்கு உண்டு. அதை தவிடுபொடியாக்கியிருப்பவர்  அ. ஜெகநாதன்.

எழுத்தாளர் அ.ஜெகநாதன் கூறுகிறார் :

‘‘காந்தியின் உண்ணாவிரதத்தை கண்டித்தும் அம்பேத்கருக்கு ஆதரவாகவும் சுயமரியாதை இயக்கம் பெரிய பொதுக்கூட்டமொன்றை 21-9-1932 அன்று ஈரோட்டில் நடத்தியது.’’(எஸ்.வி.ஆர்-வ.கீதா-190)

என எஸ்.வி.ஆர்-வ.கீதா ஆகியோர் மீண்டும் எழுதுகின்றனர். இது சரியா? என்றால் குடியரசு தவறு என்கிறது. எனவே குடியரசு பதிப்பித்திருக்கிற செய்தியை கீழே பார்ப்போம்.

ஈரோட்டில் பொதுக்கூட்டம்

டாக்டர் அம்பேத்கருக்கு ஆதரவு

திரு காந்தியின் உயிரைக் காப்பாற்றுவது யார் கடமை?

ஈரோடு அபிசவுக்கில் 21-9-1932 புதன்கிழமை மாலை 6..30 மணிக்கு தோழர் எஸ்.வி.லிங்கம் அவர்கள் தலைமையில் ஓர் பொதுக்கூட்டம் நடைபெற்றது என்பதாக குடியரசு பதிவு செய்கிறது. (செப்.25,1932 குஅ-8) குடியரசின் இந்தப் பதிவில் ‘ஓர் பொதுக்கூட்டம்’ என்றிருக்க எஸ்.வி.ஆர்-வ.கீதா ஆகியோர் ‘சுயமரியாதை இயக்கம் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை கூட்டியதாக’ எழுதுகின்றனர். அன்றைய குடியரசின் பொறுப்பாசிரியர் ச.குருசாமி மிக நேர்மையாக ஓர் பொதுக்கூட்டம் எனப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவை திரித்து எஸ்.வி.ஆர்-வ.கீதா ஆகியோர் சுயமரியாதை இயக்கப் பொதுக்கூட்டம் என எழுதுகின்றனர். இதுதான் ஆய்வா? தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்த பதிவில் தொடர்ந்து இருவரும் திரிபு வேலையில் ஈடுபடுவதை குடியரசே வெளிக்காட்டுகிறது. எனவே எஸ்.வி.ஆர்-வ.கீதா இணைந்து எழுதிய ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’. எஸ்.வி.ஆர் எழுதிய ‘பெரியார் ஆகஸ்ட் 15’ ஆகிய நூல்களில் உள்ள தரவுகளை ஆய்வாளர்கள் அப்படியே ஏற்காமல் முடிந்தவரை மூலத்தோடு ஒப்பிட்டு பயன்படுத்துதல் நலம்.

மற்றொரு பெரியாரியல் எழுத்தாளர் எழுதியதைக் குறித்து ஜெகநாதன் எழுதுகிறார் :

…… புனா ஒப்பந்தம் ஏற்பட்ட ஒரு மாதத்திற்குள் சென்னை தாழ்த்தப்பட்டவர்கள் அந்த ஒப்பந்தத்தை நிராகரிக்கவும் செய்தனர். இந்த கூட்டத்தை தான் பேராசிரியர் திரு.நீலகண்டன் சுயமரியாதை இயக்கத்தவர் போராடினர் என்பதற்கு சான்றாகக் காட்டுகிறார். எனவே 23-8-1932 அன்று குடியரசு பதிவு செய்திருக்கிற செய்தியை நாம் கீழே பார்க்கலாம்.

புனா ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு

ஒப்பந்தம் மாற்றப்பட வேண்டும்

சென்னை தாழ்த்தப்பட்டோர் கூட்டத் தீர்மானம்

என்ற தலைப்பில் குடியரசு செய்தியைப் பதிவு செய்திருக்கிறது. கூட்டத்திற்கு கே.சிவசண்முகம் தலைமை வகித்திருக்கின்றார். இந்தக் கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன….. குடியரசு பதிவு இவ்வாறிருக்க தாழ்த்தப்பட்டவர்களின் பொதுக்கூட்டத்தை சுயமரியாதை இயக்கப் போராட்டமாக மாற்ற பேராசிரியரால் எப்படி முடிந்தது?

இப்படி தாழ்த்தப்பட்டவர்கள் நடத்திய போராட்டங்களையெல்லாம் மறைத்து அதை ஈவெராவுக்கு அர்ப்பணித்து அவருக்கு ஒளிவட்டத்தை ஏற்படுத்த முனைகிற இந்த எழுத்தாளர்கள், ஆதிதிராவிடர்களின் உண்மையான போராட்ட சரித்திரத்திற்கு எதிரானவர்கள் என்பதை தாழ்த்தப்பட்டவர்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

4 Replies to “புனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா?”

  1. திராவிடத்தின் அரிதாரத்தை அகற்றிவிட்டார் வெங்கடேசன்.

  2. சு ப வீ மற்றும் எஸ் வி ராஜதுரை மற்றும் கீதா ஆகியோர் உண்மை வரலாற்றை திருத்தி, பொய் எழுதி வாழ முயற்சி செய்துள்ளனர். இந்த ஈனக்கும்பல் முறியடிக்கப்பட வேண்டும். திக என்பதே மோசடி கும்பல் தான் என்பது, வெங்கடேசனின் கட்டுரை மூலம் தெளிவாக தெரிகிறது. வெங்கடேசனின் பணி சிறக்கட்டும். அவருக்கு இறைஅருள் பெருகட்டும்.

  3. பொய் உரைத்தே திராவிட இயக்கத்தை வளர்க்கின்றனர் தமிழர் மேல் பற்று போல் பாசாங்கு செய்கின்றனர் .இவர்களை யாரும் நம்புவதிலை

  4. நல்லா பொய் எழுத கற்று கொடுக்கிறார் பேராசிரியர் சுப.வீ. ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தது தி.மு.க ன்னு பித்தலாடுற கும்பல் தானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *