இராமாயணத்தின் மூன்று தளங்கள்

ராமாயணத்தின் மங்கல நிறைவு பட்டாபிஷேகம். தமது ஆர்வ நிறைவுக்கு அபிஷேகம் செய்ய முயல்வதே வாழ்க்கை. அனைவர் வாழ்க்கையும் பட்டாபிஷேகம் நோக்கிய நகர்வே.

பாஷோவின் தவளைக் கவிதையிலும் அது உண்டு. ஷேக்ஸ்பியரின் மேக்பெத்திலும் அது உண்டு. ஸ்ரீஅரவிந்தரின் சாவித்திரியிலும் அது உண்டு. ஜீவநதியின் பரமானந்தம் நோக்கிய நகர்வின் அழகிய சித்திரங்களே உலகின் உன்னதப் படைப்புகளில் ஒளிரும். இராமாயணம் ஒரு மகோன்னதப் படைப்பு

எம்மொழியில் தந்தாலும், எக்காலத்தில் தந்தாலும் அதன் உன்னதம் குறைவதில்லை. இன்னும் எழிலோடு – இன்னும் ஏற்றத்தோடு – இன்னும் பொருத்தத்தோடு அக்காவியம் உயர் மனங்களில் சஞ்சரிக்கும்.

மூன்று தளங்கள்

இராமாயணம் மூன்று தளங்கள் உடையது – 1. கதைத்தளம் 2.கருத்துத் தளம் 3.ஆன்மீகத் தளம். இவை மூன்றும் தனித்தனியே எண்ணரும் நலங்கள் உடையவை.

கதைத்தளம்:

இலக்கிய நெடுஞ்சாலையில் ஏற்றமும் எழிலும் பெற்றுத் திகழ்வன காவியங்கள். மொழி தன் அழகையும் ஆழத்தையும் ஆனந்தமாக அருந்தும் வண்ணம் விருந்து படைக்கும் மாளிகைகள் காவியங்கள். வாழ்க்கையின் அனைத்துத் திசைகளின் பயணங்களும் அதில் எடுத்துரைக்கப் படும். வாழ்க்கையின் உயரங்களுக்கும் ஆழங்களுக்கும் அழைத்துச் சென்று அனுபவச் செழுமை வழங்குமிடங்கள் காவியங்கள்.

உலகக் காவியங்கள் அனத்திலும் கதைநலம் உண்டு. அது காவிய நலத்தின் அஸ்திவாரம். உலகில் தோன்றிய அனைத்துக் காவியங்களின் கதைகளையும் ஒவ்வொன்றாக இராமாயணக் கதையோடு ஒப்பிட்டு நோக்கும் போது இதன் சிகர உயரம் புலப்படும்.எக்கதையின் ருசியையும் வெல்லும் ருசியுடையது இராம காதை. எனவேதான் கதை தோன்றிய காலம் முதல் இன்று வரையிலும் இராமாயணத்தின் கதை ஈர்ப்பு எத்திசையிலும் குன்றவில்லை.

வேத இனிமை யாக இனிமையாகிப் பூதக்கரத்தின் பாயாசமாகிறது! அயோத்தியில் தசரதன் மகிழத் தேவியர் மணிவயிறு புண்ணியம் பூக்கிறது ! வசிஷ்டரின் கல்வியும் விஸ்வாமித்திரரின் யாகக்காவலும் அமுதத்துக்கு அமுது செய்கின்றன! கணையில் வீழ்கின்றாள் தாடகை—கைவண்ணம் மிளிர்கிறது !கல்லில் எழுகிறாள் அகலிகை — கால்வண்ணம் ஒளிர்கிறது! வில் சீதையை மண்ம் முடிக்கிறது — நல்வண்ணம் பொலிகிறது! பரசுராமன் பணிகிறான்; சீதாராமன் உயர்கிறான் ! பட்டாபிஷேக எதிர்பார்ப்பில் மந்தரையின் சூழ்ச்சியும், கைகேயியின் மனமாற்றமும் தந்திட்ட திருப்புமுனை! கதையின் பயணம் நாட்டிலிருந்து காட்டுக்கு! வரங்கள் சாபஙகளாகின்றன — சாபஙகள் வரஙகளாவதற்கு ! ஓடக்காரக் குகனின் உன்னத உள்ளம் கஙகையினும் புனிதம் ! பரதனின் சீலத்தில் பாதுகைக்கே பட்டாபிஷேகம் ! இலக்குவனின் சீற்றத்தில் சூர்ப்பனகையின் அவமான இரத்தம் ! மாயமான் மயக்கில் இராவணக் கபடம் ! சீதையின் இழப்பில் இராமனின் தவிப்பு ! சொல்லின் செல்வனின் அறிமுகத்தில் சுக்ரீவன் நட்புக்கு அடிக்கல் ! வாலிவதை நியாயமும் வானரசேவையின் நற்றுணையும் ! கடல் தாவிய அனுமனுக்கு அசோகவனத்தில் சீதா தர்சனம்! இராமதூதனின் வாலுக்கு நெருப்பு – இலங்கையின் அகந்தைக்கு நெருப்பு ! கண்டனன் கற்பினுக்கணியை ! எனவே நீண்டது ராம சேது ! போர்க்களம் விரிந்தது ;வீரம் உயர்ந்தது !அறமும் மறமும் எதிர் நின்ற போர்முகம் ! அறமே வென்றது; அரக்கம் வீழ்ந்தது ! இராவண வதம் ! ஸ்ரீராமஜெயம்!

நீண்ட கதை பட்டாபிஷேகத்தில் நிறைவு பெறுகின்றது. விழுமிய கதை ! விழுப்பத்தை நோக்கிச் செலுத்தும் கதை ! முனிவர்கள் தமக்குள் எடுத்துரைத்து உயரும் கதை; பாமரரும் தமக்குள் பரிமாறி மகிழும் கதை! பல்வகைக் கலைகளில் ஏறிய பெருமையிலும் இக்கதைப் பெருமை பெரிதினும் பெரிதே! சிற்பமும் – சித்திரமும், நடனமும் – இசையும், நாட்டுப்புறக் கலைகளும் – மேட்டுப்புறக் கலைகளும் இராமாயணத்தால் நன்றாகவே வளமை பெற்றுள்ளன.

கருத்துத் தளம்:

கருத்துக்களின் களஞ்சியம் இராமாயணம். வாழ்க்கை அலசல்களின் பெருஞ்சுரங்கம் அக்காவியம். “நாற்பொருள் பயக்கும் நடை நெறித்தாகி” எனக் காவிய இலக்கணம் வகுப்பது இல்க்கிய மரபு. அறமும் பொருளும் இன்பமும் வீடும் இராமாயணக் கருத்தோட்டங்கள்.

எண்ணற்ற சிந்தனைத் தீபங்களை ஏற்றிய திருவிழா மண்டபமாகவே இராமாயணம் ஒளிர்கின்றது. நல்லரசும் வல்லரசும் இங்கு சிந்திக்கப்படுகின்றன. அமைச்சர் பண்புகளும், தூதர் குணங்களும் குறிக்கப் படுகின்றன. இலட்சியங்களும், எச்சரிக்கைகளும் சித்திரம் பெறுகின்றன. பாத்திரங்கள் அனைத்துமே பாரத ஞானம் சுமந்த சிந்தா நதியை முகந்து தருகின்றன. அனைத்து நற்குணங்களின் திசைகாட்டும் நந்தா விளக்காக இராமன் – கற்புக்கனலியின் பொற்சித்திரமாகச் சீதாதேவி — தார்மீகக் கோபத்தின் தீப்பிழம்பாக இலக்குவன் — தொண்டென்னும் சுடர் தாரகையாக அனுமன் — செஞ்சோற்றுக்கடனின் சீர்மிகு சிகரமாகக் கும்பகர்ணன் எனப்பாத்திரங்கள் அனைத்துமே மானுடப்பண்பின் சிந்தனை விருந்துகளாகின்றன.

சீதையின் மரவுரி, ஜடாயுவின் சிறகுகள், கானக வேடனின் ஓடம், சபரியின் இலந்தைக் கனிகள், பரதன் தலை சுமந்த பாதுகைகள் போன்றவை குறியீடுகளாகச் சுரக்கும் வாழ்வியல் சிந்தனைகள் ஒரு புறம்! மந்தரை தூக்கி எறியும் முத்துமாலை, சூர்ப்பனகையின் காமவல்லி வேடம், சீதையையும் மயக்கும் மாரீச மான், இராவணக் கபட சன்னியாசி ஏந்தும் பிச்சைப் பாத்திரம், அகன்ற வாய் பிளந்து அனுமனை விழுங்கும் சுரசை போலும் குறியீடுகள் சுரக்கும் எச்சரிக்கைச் சிந்தனைகள் மறுபுறம்.

இராம-இலக்குவர் சூர்ப்பனகையை இத்துணை அலைக்கழிவு செய்யலாமா? வாலியை இராமன் மறைந்து நின்று கொல்லலாமா? சீதைக்கு அக்கினிப்பிரவேச ஆணை இடலாமா? – என்பன போலும் விவாதங்களுக்கு அழைத்துச் செல்லும் சிந்தனைகளும் உள. வாழ்க்கையை இரு முரண்களின் மோதல்களாகக் காணும் காட்சியை அனைத்துத் தத்துவங்களிலும் காணலாம். இராமாயணப் பார்வையிலும் இரு முரண்களின் மோதல் உளது. வாழ்க்கையை நன்மை-தீமைப் போராட்டமாகவே சித்திரிக்கின்றது இராமாயணம். இராமப் பண்பும் இராவணப் பண்பும் சீதையை மையப்படுத்திப் போரிடுகின்றன. மானுட மன அரங்கில் கிளர்ந்தெழும் அரக்கத்துக்கும் தெய்வீகத்துக்கும் நிகழும் போராட்டம் அது. நிறைவில் ஸ்ரீராம ஜெயம்! எனினும் தீமையின் அழிவுக்கு ஏற்படும் நன்மையின் நஷ்டம் அவலம் சுரக்கிறது. இராம வாழ்க்கையினை உன்னில் வடித்தெடுக்கும் போது உன் சீதா நலத்துக்கு அசோகவனம் நிச்சயம் உண்டு. இராவண அழிவிற்கும் ஸ்ரீராம ஜெயத்துக்கும அசோகவனத் திண்மை மிக முக்கியம். கருத்துத் தளத்தில் இச்சிந்தனை மிக முக்கியமானது.

ஆன்மீகத் தளம்:

ஆன்மா என்றால் என்ன? சாரம்; உன் சத்து; The essence of you. அனுபவ எல்லை சென்றவர்க்கு அது பேருண்மை; செல்ல இயலாதவர்க்கு அது கருத்தாக்கம் (Concept).

புலன்சார்ந்த மனத் தளத்திலிருந்து ஆன்மத் தளத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இராமாயணம் சிகரநிலை பெறுகிறது. ஆன்மீகம் என்பது அகத்தில் ஒடுங்கும் அனுபவமாக விளக்கப் பட்டாலும் அது அகத்தின் அகத்தில் விரிவது. அதன் விரிவு எல்லையற்றது. வெளியுலகப் பார்வைகளும் ஈர்ப்புகளும் அங்கு தன்மாற்றம் (Transformation) அடைகிண்றன. ’வெளி’யும், ’உள்’ளும் ஒற்றைத் தளமாகும் உன்னதம் நிகழ்கிறது.

இத்தளம் நோக்கிய பயணத்தில், மனத்தளத்தின் உண்ர்ச்சிகள் பக்தி யோகம் ஆகும்; செயலாற்றல் கர்ம யோகம் ஆகும்; சிந்தனை ஆழம் ஞானயோகம் ஆகும்; சித்தவிருத்திகளை ஒடுக்குதல் தியானயோகம் ஆகும். இவற்றில் ஒன்றையோ – சிலவற்றையோ –அனைத்தையுமோ அவரவர் இயல்புக்கு எற்ப இணைத்து முயன்று ஆன்மத்தளத்தை அணுகலாம். அதுவே அனைத்துத் தளங்களுக்கும் அடித்தளம் என்னும் அநுபூதி அடையலாம். இத்ற்குத் தத்துவ விசாரங்களும், புராண விரிவுகளும், கிரியைப் பன்மைகளும் உதவலாம்.

இப்பார்வையில் இராமாயணம் ஆன்மீகம் காண்கிறது. இராமாயணத்தின் கதைத்தளமும், கருத்துத் தளமும் ஆன்மீகத் தளத்துக்குஅழைத்துச்செல்கின்றன. இராமாயணம் என்னும் காவியம் இங்கு ஸ்ரீமத் ராமாயணம் ஆகின்றது. வைணவ உலகத்துக்கு இராம சரிதம் இராமாவதாரம். ஆன்மீகம் பேணுவோர்க்கு இராம சிந்தனை ஓர் இனிய பற்றுக்கோடு. “கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?” – என நம்மாழ்வார் போற்றும் அளவுக்கு உன்னதமான ஆன்மீக சரிதம் இராமகதை. உள்ளிருக்கும் தெய்வீகத்தை வாழ்க்கைப் பெருவெளியில் பிரகாசிக்கும் வண்ணம் வாழும் இலட்சிய வாழ்க்கைக்கு ஓர் ஒப்பற்ற உதாரணம் இராமசரிதம். இராம வாழ்க்கையின் அழகும், பயனும், அர்த்தமும் முயல்வோர் ஆன்மீகஞானம் அருந்தப் பெறுவர்.

பாரத ஞான மரபில் குறியீடுகளின் கோலாட்டத்தை எங்கும் காணலாம்; எப்போதும் காணலாம். இராமாயணக் கதை முழுதுமே ஆன்ம ஞானச் சித்திரம் என்பது ஞான ஆர்வலர் நோக்கு. வேதஞானம் வேள்வித் தீயில் இராம இனிமை வழங்குகிறது. அது காலமும் இடமும் கடந்த பயணத்தில் ஆன்ம வெற்றி பெறுகின்றது. சீதை அபகரிப்பும், இராம சேதுவும் , அசோகவன விடுவிப்பும் இங்கு ஆன்மஞான மொழிகள்! ஸ்ரீராம பட்டாபிஷேகம் நோக்கிய நகர்வுகள் ! அரசத்தலைமை – கானக நிர்பந்தம் – கங்கை ஓடம் – மாயமான் மயக்கு – பஞ்சவடியிலும் இராவணக் கயமை – அனுமனால் விரியும் சுந்தரம் – அசோகவனத் திண்மை – இலங்காதகனம் – இராமசேது – போர்க்கள வெற்றி – அக்கினிப் பிரவேசம் – அயோத்தி மீளல் – பட்டபிஷேகம் – என அனைத்துமே குறியீடுகளின் கோலாட்டம்தான்!

”ராம” என்னும் பெயர் பாரத ஆன்மீக வளத்தில் முக்கிய பங்காற்றுவது. உழவனும் பண்டிதனும் நம்பிக்கையோடு உச்சரிப்பது. சைவமும் வைணவமும் கண்ட மந்திரங்களின் பிழிவாக ஒலிப்பது. நாராயணாய நம: என்பதுவும், நமச்சிவாய நம என்பதுவும் இரண்டாம் எழுத்தில் இசைவு கொண்டு பிறந்த ராம என்னும் மகாமந்திரமாகப் பொலிவது. இராமதாசர் முதல் தியாகராஜர் வரைப் பக்தியால் முக்தி பெற முயன்ற ஆர்வலர்கள் பலர்க்கும் ஆரமுதாகச் சுவைப்பது. தசாவதாரங்களில் தனிநலம் பெற்று ஆலயங்களில் அருள் நலம் சுரப்பது. அர்ச்சாவதாரமாக வழிபடப்படுவது.

‘சரணாகதி சாஸ்திரம்’ என்னும் படிக்குப் பெருநலம் பெற்றுத்திகழ்வது இராமாயணம். சபரியின் பக்தியும், அனுமனின் சேவையும், அகலிகையின் தவமும், முனிவர்களின் ஞானமும் இராமனைத் துதிக்கின்றன. பரிபூரணம் நோக்கிய முயற்சியில் அறியவேண்டும் உண்மைகளையும் பெறவேண்டும் தகுதிகளையும் ஏந்திநின்று வழிகாட்டும் அற்புத ஆன்மீக விளக்கு இராமாயணம்.

பேரா. என்.சுப்பிரமணியம் அவர்கள் நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் குறிப்பாக பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும் கொண்டவர்.

5 Replies to “இராமாயணத்தின் மூன்று தளங்கள்”

 1. இத்தனை அருமையாக
  இவ்வோளவு நயமாக இதுவரை ஸ்ரீமத் ராமாயணத்தை அறிந்தேனில்லை.
  நன்றி.
  இந்த கட்டுரையின் தேர்ந்தெடுத்த வார்த்தைப் பிரயோகங்களின் சொல்வண்ணம் அப்படியே என் உள்ளே ரீங்கரித்த் வண்ணம் உள்ளது.
  நன்றி.
  வணங்கி மகிழ்கிறேன்.
  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்.

 2. பேராசிரியர் என் சுப்பிரமணியம் அவர்களின் இந்த எழுத்தோவியம் எங்கள் மனதை மிக கவர்கிறது. வெளியிட்ட தமிழ் இந்துவுக்கு நன்றிகள். பேராசிரியர் அவர்கள் இதே போன்று மேலும் பல எழுத்தோவியங்களை வாசகர்களுக்கு தொடர்ந்து தருவதற்கு , எல்லாம் வல்ல பெரியசாமி எனப்படும் அருள்மிகு முத்துக்குமாரசாமியின் அருள் அவருக்கு என்றும் துணை நிற்கட்டும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

 3. பெருமதிப்பு மிக்க பேராசிரியர் அவர்களின் தத்துவ செறிவும், இலக்கிய அழகும், ஆழ்ந்த ராம அன்பில் தோன்றிய கருத்துக்களும் மிக அழகானவை!
  //வேத இனிமை யாக இனிமையாகிப் ……………… அறமே வென்றது; அரக்கம் வீழ்ந்தது ! இராவண வதம் ! ஸ்ரீராமஜெயம்! //
  எவ்வளவு அழகாக விளக்கி இருக்கிறார்கள், ஒரு பத்தியில் ஸ்ரீ ராமாயணம் பூர்த்தியாக! அந்த சக்ரவர்த்தி திருமகனும் பாவை நல்லாளும் எங்கள் குடிக்கரசரான வள்ளல் ராமானுசரும் என்றும் இந்த ஸ்ரீ ராமாயணத்தின் அமுத எழுத்துக்களை நாம் படித்து கொண்டே இருக்கும் படி, பேராசிரியர் போன்ற பெரியோர்களை நம்மிடையே பிறக்க வைத்துக்கொண்டே இருக்க வேண்டும்!
  ஒரு ஒப்பற்ற மனிதரின் ஒரு இணையற்ற கட்டுரையை பிரசுரித்தமைக்கு நன்றி! வாழ்க பேராசிரியரின் பணி!

 4. மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.
  பேராசிரியரின் பாதங்களுக்கு நமஸ்காரங்கள்.
  இதுபோன்று உள்ளத்திலே விளக்கை ஏற்றி வைக்கும் கருத்துக் கோர்வைகளை வெளியிடும் தமிழ் ஹிந்துவுக்கு நன்றி.
  அன்புடன்
  ஸ்ரீனிவாசன் .

 5. பேராசிரியர் அவர்களே!
  ஆரியத்தைப் போற்றும் நீங்கள் திராவிடத்தையும் ஒப்பிட்டிருக்கலாம்.ராவண காவிய ஒப்பீட்டை ஆவலாய் எதிர்பார்க்கும் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *