ஒரு காசிப் பயணம்

சினிமா பார்த்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும் தான் பத்திரமாகத் தான் இருந்தன. பூட்டு உடைக்கப் படவில்லை. உடைப்பதற்கு அறையில் ஏதும் இல்லை. முதல் தடவையாக தனியாக வந்துள்ள அனுபவமும் தான் சற்று பயப்பட வைத்துள்ளது என்று மனம் சமாதானம் சொன்னாலும் ஹோட்டல் ஒன்றும் அப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. இருப்பினும் படுத்துக்கொண்டேன். இரவு முதலில் கொஞ்ச நேரம் மனம் அமைதியின்றி கழிந்தாலும் எப்படியோ தூக்கம் வந்து கவலையைத் தீர்த்தது. தூங்கினால் காட்டில் தனிமையில் இருந்தாலும் நகரச் சந்தடியில் கூட்டத் தோடு இருந்தாலும் தூக்கம் எல்லாவற்றையும் அழித்து விடுகிறது. சுய நினைவே இல்லையென்றால் எது எப்படி இருந்தால் என்ன?

காலையில் எழுந்ததும் காசிக்குப் போனால் என்ன என்று தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து விட்டு காசிக்குப் போகவில்லை ன்றால்…? பின், எப்போது இந்தப் பக்கம் வரும் காசிக்கு இவ்வளவு அருகில் வரும் சந்தர்ப்பம் ஏற்படுமோ? அதிலும் என் காசியாத்திரைக்காகும் செலவு அலாஹாபாதில் இருந்து காசிக்குப் போய் வரும் செலவு தான். யார் யாரெல் லாமோ நிறைய பணம் வாழ்நாளெல்லாம் சேர்த்துக்கொண்டு, சொத்துக்களை நிர்வகிக்க ஏற்பாடு செய்து,  உயில் எழுதி வைத்து விட்டுப் போவார்களாம். எனக்கு அந்த கஷ்டம் இல்லையே. அதோடு அப்பா அம்மாவுக்கு காசியிலிருந்து கங்கை ஜலச் செம்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் இன்னும் சந்தோஷப்படுவார்களே. அத்தோடு புள்ளையாண்டானுக்கு அபூர்வமா காசிக்குப் போகணும், கங்கை ஜலம் வாங்கிக் கொடுக்கணும்னு அக்கறையும் பக்தியும் வந்து விட்டது என்றால் சந்தோஷம் தானே. நான் சொன்னால் நம்ப மாட்டார்கள். ஆனால் கங்கைச் செம்பு சாட்சி சொல்லுமே.

திரும்பி வரவேண்டும் அலாஹாபாதுக்கு. இலவச பாஸ் அலாஹாபாதிலிருந்து சம்பல்பூருக்கு. காசிக்கு டிக்கட் வாங்கி ரயிலில் உட்கார்ந்து கொண்டால், சுற்றி இருப்பவர்கள் ஒரு கூட்டம், ஐந்தாறு பேர், தமிழ் பேசுகிறவர்களாக இருந்ததில் ஒரு ஆச்சரியமும் சந்தோஷமும். எல்லாம் நாற்பது ஐம்பது வயசுக்காரர்கள். பெண்கள் யாரும் இல்லை. பேச்சுத் துணையாயிற்று. யார், எந்த ஊர், எங்கே வந்தீர்கள், எங்கே போகணும்? இத்யாதி விசாரிப்புகள் இல்லாதிருப்பது சாத்திய மில்லையே. பேசிக்கொண்டோம். அவர்களும் அதிசயமாக காசிக்குப் போகிறவர்கள் தான். அதுவும் நல்லதாயிற்று. என்னைப் பற்றித் தான் அவர்கள் துருவித் துருவி கேட்டார்களே ஒழிய, அவர்கள் பற்றி அவர்களாகச் சொன்னதைத் தவிர எனக்கு அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

மாலை வரை தான் உறவு. பின் பிரியப் போகிறோம். தெரிந்து என்ன ஆகப் போகிறது என்பதற்கு மேல், அப்படி ஒரு சுபாவம் வளரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவர்களுடன் பேசிக்கொண்டே வந்ததில் பொழுது போயிற்று. சுவாரஸ்யமாகவும் இருந்தது. காசி வந்ததும் இறங்கினோம். அவர்களோடு சேர்ந்ததில் ஒரு லாபம். எல்லா விசாரிப்புகளையும் அவர்களே செய்தார்கள். ஒரு சத்திரமோ மடமோ சரியாக நினைவில் இல்லை. அங்கே தங்கினோம். இதுவும் இதை எழுதும் இச்சமயம் ஒரு சந்தேகம் தட்டுகிறது. தங்கின இடத்தின் முகப்பு, தூண்களும் தாழ்வாரமும் கொண்ட முகப்பு நினைவில் பதிந்திருக்கிறது. ஆனால் அது காசியிலா, இல்லை, பூரியிலா என்று நிச்சயமில்லாது ஒரு மங்கலான நினைவாக இருக்கிறது

இதை இடையில் சொல்ல மறந்து விட்டேன். ஒரு சமயம் ஊருக்கு விடுமுறையில் போக, கட்டக் வரை பஸ்ஸிலும் பின்னர் அங்கிருந்து கல்கத்தா மெயிலில் ஊருக்கும் செல்லலாமே என்று தோன்றியது. இரவு பூராவும் பஸ்ஸில். அப்போது என்னுடன் இன்னும் சிலர் ஹிராகுட் வாசிகள் இருப்பது இடையில் தெரிந்து அவர்கள் நண்பர்களாகி, பூரி போய் ஜகந்நாதர் தரிசனம் செய்து விட்டு போகலாமே என்று பெல்லாரிக் காரர், தன் தங்கையுடன் வந்தவர் சொல்ல, சரி என்று எல்லோரும் பூரி சென்றோம். அங்கு தங்கியிருந்த ஒரு மடம், இலவசமாகக் கிடைத்த தங்கல். அது ஒரு மிகவும் மனதுக்கு சந்தோஷம் அளித்த அனுபவம். அதை எழுத எப்படி ஏன் மறந்தது என்று தெரியவில்லை.

கூட வந்தவர்கள் சொல்லி, வழியில் ரோடில் பூரி சாப்பிட்டதும், அவ்வளவாக ரசிக்காத பூரி, நிழலாடுகிறது. ஆனால் இதெல்லாம் முக்கியமில்லை. குறுகி வளைந்த இருபுறமும் இர்ண்டு மூன்று அடுக்கு மாளிகை போன்ற பெரிய வீடுகள் கொண்ட நீண்ட தெருக்கள் வழி சென்றது ஒரு புதுமையான அனுபவம். இப்படிப் பட்ட குறுகிய, வளைந்து நீளும் சந்துகள் இருபுறமும் உயர்ந்த கட்டிடங்கள் என்பது இது காறும் காணாத ஒன்று. எத்தனை நூற்றாண்டு பழமையான, சரித்திரப் பிரசித்தி பெற்ற நகரம் இது! அதன் குறுகிய சந்துகளின் ஊடே நடந்து செல்வதே பெருமையாக இருந்தது. தரையில் வெயில் படாத சந்துகளான தெருக்கள்.

முதலில் கங்கைக் கரையடைந்தோம். எந்த படித்துறை என்பதெல்லாம் நினைவிலில்லை. நீண்ட விசாலமான படிகள். வெகுதூரம் படிகளில் இறங்கியே ஆழத்தில் கங்கை நதி பாயும் நீர்த்தடத்தை அடைய முடியும். படிகளின் இடையே ஒரு சமதளம். ஒரு பெரிய மரம் பின் மறுபடியும் படிகள். ஆற்றின் அருகே சென்றதும் எதிர்க்கரையைப் பார்த்தால் அது எங்கோ தூரத்தில். எவ்வளவு பிரம்மாண்ட ஆறு. இதற்கு முன் காவிரி எல்லாம் வெறும் வாய்க்கால் தான். எதிர்க் கரையிலும் பெரிய பெரிய மாளிகைகள். கண்ணுக்கெட்டிய தூரம் இரு புறமும், இரு கரைகளிலும் மாளிகைகள். கோயில்கள் போன்ற கோபுரங்கள். நீண்ட விஸ்தாரமான, ஆற்று நீரைத் தொட்டுக் கொண்டிருக்கும் படிகள்.

பார்க்க ஆனந்தமாகத் தான் இருந்தது. இது நாள் வரை காணாத காட்சி. காணாத பிரம்மாண்டம். என்னுடன் வந்தவர்கள் இறங்கிக் குளித்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஆற்றில் இறங்குவதா, வேண்டாமா என்ற தயக்கம். ஆற்றையும் அதில் கண்ட இட மெல்லாம் மிதக்கும் பொருள்களையும் குப்பைகளையும் பார்க்க மிகக் கஷ்டமாக இருந்தது. மேலும் ஆற்று நீரின் கலங்கல் இறங்குமிடத்தில் காணும் சேறு என்னவோ மனத்தைப் புரட்டியது. காவிரி ஆற்றின் நீரும் கலங்கல் தான். ஆனால் அது இப்படி அசுத்தங்கள் மிதக்கும் ஆறு இல்லை. இத்தகைய சேறு நிறைந்த கரையும் அல்ல. உடையாளூரின் ஆற்றில் இறங்க படியில் கால் வைத்தால் படிகளை கலங்கலற்ற  நீரின் அடியில் பார்க்கலாம். மீன்கள் கால்களைக் கடிக்கும். இப்போது தான் ஆற்றில் நீரும் இல்லை. ஒரு வேளை மணலும் இல்லை என்று நினைக்கிறேன்.

குளித்துக்கொண்டிருந்தவர்கள் “பயப்பட வேண்டாம் . நாங்கள் இருக்கோம்.” என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு சின்னப் பெண் பாவாடை அணிந்த பத்து வயசுப் பெண், அவர்களைத் திட்டிக்கொண்டே கரையில் நின்று கொண்டிருந்தது. ரொம்ப சூட்டிக்கையான பெண். முகத்தைப் பார்த்தாலே அதோடு விளையாடத் தூண்டும் முகம். அது ”ஐயோ” என்று இடையில் கத்தியது தமிழ்ப் பெண்ணோ என்ற எண்ணத் தோன்றவே அதன் பயம் நீக்கி அதோடு பேச்சுக் கொடுத்தால், அந்தக் குழந்தை அங்கு கங்கைக் கரையிலேயே வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் பெண் என்று தெரிந்தது. இங்கு விளையாட வந்திருக்கிறது. கங்கைக் கரையில் குடியிருந்தால் குழந்தைகள் விளையாட கங்கைக் கரைக்கு வருவது பற்றி பெற்றோருக்கு பயம் இல்லை போலும். சகஜமாகியிருக்கும் வாழ்க்கை. சூழல். அப்பா அங்கேயே அருகில் ஏதோ கோயிலில் பூஜை செய்பவர். அதற்கு அதிக நேரம் என்னோடு பேசுவதில் இஷ்டம் இருக்க வில்லை. “ரொம்ப நாழியாயிடுத்துன்னு அம்மா கோவிச்சுப்பா” என்று சத்தம் போட்டு சொல்லிக்கொண்டே ஓடிவிட்டது.

”போறும் பேசினது. வாங்க குளிக்க” என்று அழைப்பு தொடர்ந்தது. வெகு தயக்கத்திற்குப் பிறகு இஷ்டமில்லாமல் அரை மனதோடு ஆற்றில் இறங்கினேன்.

இது நடந்தது 1956-ம் வருடம்.

அதன் பிறகு கிட்டத் தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு ராஜீவ் காந்தி கங்கையைச் சுத்தம் செய்ய ஒரு பெரும் திட்டம் வகுத்து பல ஆயிரங்கோடிகள் செலவழித்த பிறகு, 1990களில் நான் ஒரு முறை காசிக்கு நாடகக் கருத்தரங்குக்குப் போயிருந்தேன். கங்கையோ இன்னும் 45 வருட அசுத்தங்களைச் சுமந்து கொண்டு பிரவாஹித்துக் கொண்டு இருந்தது. நாங்கள் ஒரு படகில் கங்கையைக் கடந்து அக்கரைக்குச் சென்றோம். படகில் எங்களுடன் அமர்ந்திருந்த காசி வாசிகள், காசி பல்கலைக் கழக பேராசிரியர்கள் பேராசிரியைகள், மற்றும் பல நகரங்களிலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள், படகு நதியில் இறங்கியதும் கங்கை நீரைக் கையில் ஏந்திப் பருகினர். பக்தி பரவசத்தோடு தலையில் தெளித்துக் கொண்டனர். எனக்கு அந்த  நீரைத் தொடவே அருவருப்பாக இருந்தது. அன்று 1956-ல் ஆற்றில் குளிக்க இறங்கியவர்கள் வற்புறுத்தியது போல இவர்களும் வற்புறுத்து வார்களோ என்ற பயம் ஏற்பட அவர்களைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொண்டேன். என்னில் பக்தி உணர்வும் புனிதம் பற்றிய சிந்தனையும் அறவே வற்றுவிட்டதோ என்னவோ, தெரிய வில்லை.

எல்லோரும் பின் விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றோம். அதைக் கோயில் என்று சொல்வதா இல்லை ஒரு மடத்தின் அறையில் தரையில் ஒரு தொட்டியில் பதிக்கப் பட்டிருக்கும் லிங்கம் என்று சொல்வதா என்று கேட்கத் தோன்றும். ஒரு பாண்டா லிஙகத்தின் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தான். வருபவர்களுக்கு புஷ்பங்கள் எடுத்துக் கொடுத்து ஆசீர்வதிப்பான். அவன் ஆசிர்வதிக்கிறானோ என்னவோ, அதை வாங்கிக் கொள்பவர்கள் மிகுந்த பக்தி பாவத்தோடு கைகளைச் சேர்த்துக் குவித்து வாங்கிக்கொண்டார்கள். நம் கோயில்களில் காணும் யாரும் அண்டாத கர்ப்பக்கிரஹம், தூர இருந்து சேவிப்பது, மந்திரங்கள் சொல்லி அர்ச்சிப்பது என்று ஏதும் இல்லை. ஜனங்கள் அதிகம் இல்லை. இல்லையென்று இல்லை. பத்திருபது பேர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இது கோயிலாக, கர்ப்பக்கிரஹமாக, ஒரு புனித ஸ்தலமாக, இல்லை. விஸ்வநாதர் ஏதோ நீண்ட தூர பயணத்தில் தாற்காலிகமாக இங்கு ஒரு அறை எடுத்து விஸ்ராந்திக்காக, பயணக் களைப்பு போக தங்கியிருக்கிறார். இன்று மாலையோ நாளைக் காலையோ இந்த அறை விட்டு தன் பயணத்தைத் தொடங்குவார் என்பது போலிருந்தது.

அப்போது எனக்குத் தோன்றவும் இல்லை. அது பற்றிய விவரமோ பிரக்ஞையோ இருக்கவில்லை. இந்த கோயில் என்னும் அறை, ஒரு பெரிய மசூதியை ஒட்டி இருப்பது. ஒரு பெரிய மாளிகையை ஒட்டி ஒரு அவுட் ஹவுஸ் என்று ஒரு அறை கட்டியது போலத் தான் இந்த காசி விஸ்வநாதர் ஆலயம். தெற்குக் கோடியிலிருந்து, ராமநாதபுரத்திலிருந்து, இந்தியாவின் தூர எல்லைகளிலிருந்து நூற்றாண்டு காலங்களாக தம் ஆயுட்கால தவமாக பணம் சேர்த்து, இறுதிக்கால ஏற்பாடுகள் செய்து காசியாத்திரை வருவது விஸ்வநாதரைத் தரிசிக்க இந்த அறைக்குத் தான். ஒரு காலத்தில், பிருமாண்டமாக இருந்த ஆலயம் இது. எத்தனை முறை இது இடிக்கப்பட்டுக் கட்டப்பட்டதோ. இப்போது என் பூர்வீக இடத்தை விட்டு நான் போகமாட்டேன் என்று காசி விஸ்வநாதர் மசூதியின் பின் சுவரை ஒட்டி “தர்ணா” வில் உட்கார்ந்திருப்பது போல பட்டது.

கங்கையும் ஏமாற்றியது. காசி விஸ்வநாதரும் ஏமாற்றினார். ஒன்று, சரித்திரம் வாங்கிய பழி. இன்னொன்று நம்மை நாமே அழித்துக் கொண்டிருப்பது. இரண்டு பாதகங்கள் பற்றியும் நமக்கு பிரக்ஞை இல்லை.  வழியில் ஒரு கடையில் கங்கை ஜலம் நிரப்பி பற்று வைத்து மூடிய செம்பு இரண்டு வாங்கிக் கொண்டேன். ஒன்று அப்பாவுக்கு. இன்னொன்று நிலக்கோட்டை மாமாவுக்கு. இரண்டும் அவரவர் பூஜை அறையில் இடம் கொள்ளும்.

என்னோடு வந்தவர்கள் அங்கேயே தங்கினார்கள். அவர்களூக்கு இன்னும் சில நாட்கள் தங்கும் திட்டம் இருக்கும். நான் அலஹாபாதுக்குத் திரும்பினேன். வேறு எங்கும் போகும் எண்ணமில்லாததால் சம்பல்பூர் வந்து புர்லா போய்ச் சேர்ந்தேன்.

திரும்பி வந்த பயணத்தின் நினைவு எதுவும் இல்லை.

யாருக்குத் தெரியும்? நேர்காணலும் தேர்வும் என்னவாகும் என்று?. ஏதும் வேலைக்கான உத்திரவு வரும் வரை, இது போல, தினம் பத்திரிகைகளில்  wanted column –ஐத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான். இதை எழுதிய வாக்கியத்தில் ஒரு அலுப்பும் சோர்வும் தட்டுவதாகத் தோன்றலாம். இல்லை. இப்படி மனுச் செய்து கொண்டே இருக்கலாம். நேர்காணலுக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கும். நானும் புதுப்புது இடங்களை இலவசமாகப் பயணம் செய்து பார்க்கலாம் என்று ஒரு புதிய வாழ்க்கையும் அனுபவமும் கிட்டத் தொடங்கியிருப்பது நினைக்க எனக்கு உற்சாகமாகத் தான் இருந்தது.

[வெங்கட் சாமிநாதன் எழுதிவரும் “நினைவுகளின் சுவட்டில்” சுயசரிதை தொடரில் ஒரு பகுதி இது. மற்ற பகுதிகளை இங்கு படிக்கலாம்]

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

7 Replies to “ஒரு காசிப் பயணம்”

  1. உத்தர பாரதத்தின் பல க்ஷேத்ரங்களுக்கு பலமுறை சென்ற அனுபவம் எனக்குண்டு. காசி, மதுரா-ப்ருந்தாவன், ஹரித்வார், பத்ரி மற்றும் கேதார்நாத். காசியும் வ்ருந்தாவனமும் வித்யாசமான மன அலைகளை எழுப்பும் நகரங்கள். வ்ருந்தாவனம் சென்றால் பக்தி எனும் மனோபாவம் பொங்கிப் பெருகுவது போல் காசி நகரத்தில் கால் வைக்கும் போதிலேயே கர்மானுஷ்டான ச்ரத்தை மனதில் பொங்கி வழியும்.

    பனாரஸ் கீ ஸுபே ஔர் லக்னவ் கீ ஷாம்

    என்று உருது பாஷையில் ஒரு வசனமுண்டு

    அது சுட்டுவது பனாரஸ் (காசி நகரத்தின்) நகரத்தின் காலைப்பொழுது
    மற்றும் லக்னவ் நகரத்தின் மாலைப்பொழுது

    அதிகாலை நேரத்தில் காசி நகரத்து கங்கை நதிக்கரையில் சென்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ஸ்னான கட்டங்களில் ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் தங்கள் காலைப்பொழுதிற்கான வழிபாடுகளைச் செய்வதைக் காணலாம். சந்த்யாவந்தனம், சிவபஞ்சாக்ஷரி ஜபம், தமிழ், ஹிந்தி, சம்ஸ்க்ருதம், பங்காலி, தெலுகு, கன்னட போன்ற பல மொழிகளில் ஸ்துதி பாடல்களை முணுமுணுக்கும் பக்தர் குழாம். நேரத்தில் அனுஷ்டானங்களைச் செய்ய மனதில் ஊக்குவிப்பு தரும்.

    லக்னவ் கீ ஷாம் என்று சொல்லிவிட்டதால் அங்கு மாலை நேரத்தில் கேளிக்கைக்காக ஒன்று கூடி உருது பாஷையில் முஷாய்ரா (கவிஞர்களின் கவி சம்மேளனம்) எனும் உருது பாஷையிலான கவிதைப்பரிமாற்றம் என்பதை வசனம் சுட்டுகிறது.

    பதிலெழுத முற்பட்டு காசி என்றதும் நினைவுகள் கங்கையின் அலைகளைப்போல அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளது. எழுத ஆரம்பித்தது சிறிய உத்தரமாக இல்லாது ஒரு வ்யாசமளவு நீண்டு சென்றது. இயன்றால் பகிர்ந்து கொள்கிறேன்.

    சைவ, வைஷ்ணவ, சாக்த, பௌத்த மற்றும் ஜைன புனித க்ஷேத்ரம் காசி.

    டுண்டிவிநாயகர்,காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, அன்னபூரணி, காலபைரவர், பஞ்ச மாதவ ஸ்தலங்களில் ஒன்றான பிந்துமாதவர்,துளசிதாசருக்கு காக்ஷியளித்த நினைவைப் போற்றும் சங்கடமோசன ஹனுமான், துர்காம்பா, புத்தபெருமான் முதலில் உபதேசமளித்த சாரநாத், பேல்பூரில் உள்ள பார்ஷ்வநாத் திகம்பர ஜைன தீர்த்த க்ஷேத்ரம் மற்றும் காசி வித்யா பீடத்தில் மஹாத்மா காந்தியடிகள் சமர்ப்பணம் செய்த பாரதமாதா (பாரதாம்பா) மந்திர் என எண்ணிறந்த கோவில்கள்.

    கங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் சதைரபி
    முச்யதே ஸர்வ பாபேப்யோ விஷ்ணுலோகம் ஸ கச்சதி

    நூறு யோஜனை தூரத்திற்கப்பாலிருந்து கூடஒருவர் கங்கே என்று ஒரு முறை சொன்னாலும் அவர் பாபங்கள் துலக்கப்பட்டு வைகுந்தம் ஏகுவார் என்று சான்றோர் சொல்வர். விஸ்வநாதர் ஆலயக்கரையான தசாஸ்வமேதகாட், அந்திம க்ரியைகள் நடைபெறும் மணிகர்ணிகா மற்றும் ஹரிஸ்சந்த்ரா காட், தமிழகத்துப் பண்டிதர்கள் இருக்கும் ப்ராசீன் ஹனுமான் காட் என்றெல்லாம் சொராஸி காட் எனும் புனிதமான 84 கங்கைப்படித்துறைகள்.

    வாழ்வில் எத்துணை கஷ்டங்கள் வரினும் சத்யத்தை கைவிடேன் என சத்யத்திற்காக வாழ்ந்த ராமசந்த்ர ப்ரபுவின் வம்சஜரான ராஜா ஹரிச்சந்த்ரன் அவனுடைய பத்னி சந்த்ரமதி புத்ரன் லோஹிதாக்ஷன், அவனுக்கு சோதனை தந்த விச்வாமித்ரர், கண்ணனைப் போல் வேடமணிந்து கண்ணனால் வதம் செய்யப்பட்ட ராஜா பௌண்ட்ரக வாஸுதேவன், போன்ற புராண கால ராஜாக்கள்,

    காசிநகரில் விச்வநாத தரிசன பாக்யம் பெற்ற ஆதிசங்கரர், சைதன்யமஹாப்ரபு, மதுசூதன ஸரஸ்வதி, சீக்கிய சமயம்
    ஸ்தாபித்த குருநானக் மஹராஜ் போன்ற அருளாளர்கள்.

    உத்தரபாரதமெங்கும் படித்தவர் படிக்காதவர் என அனைவராலும் பாடப்படும் ராமசரிதமானஸ் இயற்றிய் கோஸ்வாமி துளசிதாசர், ஹிந்துக்களும் முஸல்மான் களும் போற்றும் ராமபக்தரான கபீர்தாஸர் மற்றும் அவர் மகன் கமால், குரு ரவிதாஸர் போன்ற அருளாளர்களைப் பெற்றெடுத்த பூமி.

    அன்றிலிருந்து இன்று வரை சம்ஸ்க்ருத கல்விக்கு பெரும் கேந்த்ரமாய் இருப்பது காசிமாநகரம். லௌகிக கல்வியிலும் காசி பின்வாங்கக் கூடாது என பரிச்ரமப்பட்டு பண்டித மதன் மோஹன் மாளவியா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட காசி விச்வ வித்யாலயம் (BHU – Banaras Hindu University)

    காசிப்பண்டிதர்கள் எங்களுக்கு காசிமஹிமையைச் சொன்னது போதாதென்று சங்கர மடத்து நாவ்வாலா (படகோட்டி) பாபுலால் தன் கொச்சைத்தமிழில் பஞ்சகங்கா ஸ்னானத்தின் போது சொன்ன விஷயம்

    காசில பசு முட்டாது (சின்ன சின்ன சந்து பொந்துகளில் யாத்ரிகர்கள் பார்த்து அஞ்சும் பெரும் ரிஷபங்கள்), பல்லி சொல்லாது, பருந்து பறக்காது, எரி(ய)ற பொணம் நாத்த(ம்)டிக்காது. எதைச் சொல்வது எதை விடுவது.

    காளகண்டன் உமாபதி தருபாலா
    காசி கங்கையில் மேவிய பெருமாளே

    என எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானும் பாடியிருக்கிறாரே.

    எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு

    இவற்றையெல்லாம் எனக்கு நினைவில் கொணர காரணார்த்தமான அன்பார்ந்த ஸ்ரீமான். வெ.சா அவர்களுக்கும் இங்கு பங்கு பெறும் அனைத்து எழுத்தாளர்கள் வாசகர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி விடியற்காலை ஸ்நானம் செய்து கங்கா ஸ்நான பலனை அனைவரும் பெற காசி கங்கையில் மேவிய விசாலாக்ஷி உடனுறை விச்வநாதப் பெருமானைப் ப்ரார்திக்கிறேன்.

  2. 2001 மார்ச் மாதம் டெல்லில் சென்று அங்கிருந்து ஹரித்வார், ரிஷிகேஷ் சென்று அதுவரி செய்த பாவங்களை கங்கையில் நீராடிக் கரைத்தேன்.அங்கெல்லாம் கங்கை சுத்தமாகத்தான் இருக்கிறாள். காசியில் ஏன் இத்தனைக் குப்பை என்று தெரியவில்லை. கங்கை நீர் பலவருடங்கள் ஆகியும் கெடாது என்று பிளாஸ்டிக் கானிலும், தாமிரச் சொம்பிலும் பலர் வைத்திருகிறார்கள். நான் கொண்டு வந்த நீரும் வாசனை ஏதுமில்லாமல் தான் இருந்தது. சுத்திகரிக்கப்பட்ட சென்னைக் குடிநீர் இரண்டு நாட்களில் வலை வாடை வீசுகிறது. இப்போது காவிரியில் மணலும் இல்லை நீரும் இல்லை என்பது உயர்வு(!) நவிற்சி அல்ல. உள்ளங்கை நெல்லிக்கனி போல உண்மையே. எழுபதுகளின் இறுதியில் கோடை காலத்தில் நான் பார்த்த காவிரி வெண் மணற் பரப்பு பெரும்பான்மையை, ஓரத்தில் அமிழ்ந்து நீராடும் வண்ணம் தெள்ளிய நீரோடும். இப்போது பிளாஸ்டிக் குப்பைகளும் கருவைமுள் மரங்களுமே காவிரிப் பரப்பில். நெஞ்சில் சொல்லமுடியாத வேதனை. நீர்நிலைகளை பராமரிப்பதில் நாம் முன்னோர் மொழிந்தவற்றை விட்டுவிட்டு வெட்டிகதைகள் பேசி புற நானூற்று புலிகள் என்றும் அக நானூற்று அடலேறுகள் என்றும் கதை திரித்துகொண்டு திரிகிறோம் என்றல் மிகையல்ல.

  3. இப்ப இந்த கட்டுரை ரொம்ப முக்கியமா?

    மிக மிக சாதாரண நடை. எல்லோரும் பேசும், தெரிந்த மாதிரியான விஷயங்கள். இதை எழுத வெ.சா. போன்ற மிகப்பெரும் எழுத்தாளர்கள் வேண்டுமா?

  4. என் பார்வையில் இன்றைக்கு இது ஒரு முக்கியமான கட்டுரை.. ஆனால், என்ன? இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு என் மனதில் ஓரத்திலும் ஒட்டிக் கொண்டிருந்த ஒருமுறை காசிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இல்லாமலே போயிற்று…

  5. அன்புள்ள மயூரகிரி ஷர்மா அவர்களுக்கு,

    நமஸ்காரம். உங்கள் மனத்திலிருந்த் ஆசையைக் கருக வைத்ததற்கு மன்னிக்க வேண்டும். கங்கை சாக்கடையாகியிருக்கிறது வாஸ்தவம். காசி விஸ்வநாதர் கேவல்ப்பட்டுக்கிடக்கிறார் அதுவும் வாஸ்தவம்.

    ஆனால் காசி பார்க்க வேண்டிய நகரம். எனக்கு மிகவும் பிடித்த நகரங்களில் ஒன்று. அதன் அமைப்பே தனிப்பட்டதொன்று. அடுத்து கஙகை ஆற்றில் படகு ஒன்று அமர்த்திக்கொண்டு கஙகை நதியில் சென்று வாருங்கள். அது மிக அழகாக இருக்கும். இரு கரைகளிலும் உள்ள படித்துறைகள், பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் ரம்யமான காட்சி. மாலை நேரங்களில் இதே படகு சவாரி, இரு புறமும் உள்ள கட்டிடங்கள் ஜோதிமயமாகக் காட்சி தரும். மிக அழகான காட்சி.

    அடுத்து உங்களுக்கு கங்கையில் புனித நீராடித்தான் ஆகவேண்டும். உங்கள் பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றவேண்டுமென்றால், காசியைத் தவிர்த்து விட்டு ஹரித்வார் அல்லது ரிஷி கேஷ் போய் வாருங்கள். இரவு நேரங்களில் கங்கை ஆற்றில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அகல் விளக்குகள் ஏற்றி கங்கையில் மிதக்க விடுவார்கள். கங்கையில் மிதக்கும் அத் தீபங்கள் ஒரு கண்கொள்ளாக் காட்சி. அத்தனையும் மனித ஜீவன்களின் தாபங்களையும் வேண்டுதல்களையும் சுமந்து இறைவனை நோக்கிச் செல்லும் ஹரித்வாரில் செட்டியார்கள் கட்டிய சத்திரங்கள் உண்டு. அச்சத்திரங்களின் பின்பக்க படிகள கட்டிடத்தின் உள்ளே கட்டப் பட்டவை. கங்கை ஆறு சத்திரத்தின் உள்ளே கட்டப்பட்ட படிகளை நனைத்துச் செல்லும். கங்கா ஜலம் வேண்டுமாயின் ஹரித்துவாரில் வாங்கிக் கொள்ளுங்கள்.

    ஒரு முறை லக்ஷ்மன் ஜூலா, ரீஷிகேஷ் எல்லாம் போய் வாருங்கள். பின் மறக்க மாட்டீர்கள். இறைவனை தியானிக்கும் போது இவை நினைவுக்கு வரும். இவற்றை நினைக்கும் போது இறைவனிடம் தியானம் செல்லும்.

  6. ஒரு முறை காசி சென்று வந்து உள்ளேன். கடவுள், ஆன்மீகம் கடந்த ஒரு நிலை, ஏதோ வேறு ஒரு உலகத்திற்கு சென்று வந்து போல் உணர்தேன். இத்தனைக்கும் எனது பயணம் ஆன்மீக பயணம் அல்ல, காதலித்து இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் முடித்த எட்டு மாதத்தில்……….. நெஞ்ச மெல்லாம் காதல் தேகமெல்லாம் …………. உடன் . இருத்தும் ஏதோ ஒரு மர்ம முடிச்சு இருந்தது காசியில்…………. அங்கு வந்து சேர்த்தவர்கள் எல்லோரும், ஏதோ ஒரு கதவை திறந்தால் மோட்ச திற்கு சென்று விட முடியும் என்று நம்பினார்கள். எங்களுடன் வந்த ஒருவர் அகால மரணம் அடைந்துவிட்டார். என்னால் முடிந்தவரை, காசி பொது மருத்துவ மனையில் அவரது பிரேத பதப்படுத்த முயற்சியும் அவரது மகனுக்கு தகவல் தெரிவித்து… நான் கங்கை ஆற்றில் குளிக்க அதில் தவறி மூழ்க போய் தப்பியது……………. ஏதோ ஏதோ ஒன்று காசியில் இருக்கிறது…..இன்னும் ஒரு முறை போக வேண்டும்…….

  7. கங்கை நதியை தூய்மையாக்கும் திட்டங்கள் திரு.நேருவின் காலத்தில் தொடங்கி, திரு.இராஜீவ் காலத்திலும் முயற்சிகள் நடந்தும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த இயலவில்லை.

    தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், நகரக் கழிவுகள் என்று டண் டண்ணாக கங்கையில் சேருகின்றன. இதில் உள்ள வர்த்தகத்தையும், வேறு மாற்றுவழி இல்லாததையும் எதார்த்தமாக அவதானித்தால்தான், வலுக்கட்டாயமாக இதை நிறுத்துவது நடைமுறை சாத்தியமற்றது என்பது புரியும்.

    நதிகளைத் தூய்மை படுத்துவது ஒரு பயணம். அரசாங்கத்தால் மட்டுமே இதை செயல்படுத்தி விட முடியாது.

    நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கிறேன். என் வீட்டை
    ஒட்டியே காவிரி ஆறு ஓடுகிறது. எனக்கு நீர் பயம் உண்டு. ஆகவே குளிப்பது
    நடக்காது. ஆனால் பலர் இங்கு புனித நீராடுவது வாடிக்கை. என் தாயாரும்
    எப்பொழுதாவது நீராடச்செல்வார். நான் அவரிடம் காவிரி இன்று Wholesale
    சாக்கடை என்று வாதம் செய்வேன்.

    கங்கை, காவிரி போன்ற புனித நதிகளாக போற்றப்படும் நதிகளில் நீராடுவது
    புண்ணியம் என்று நம்பப்பட்டாலும், நுரையுள்ள, அசுத்தமான, தேங்கி நிற்கக்கூடிய
    நீர்நிலைகளில் நீராடக்கூடாது என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆகவே
    நீராடாதே என்றே கூறுவேன். அதை அவர் கேட்பதில்லை என்பது வேறு விஷயம்.

    சில வருடங்களாகவே எனக்கு உள்ள ஒரு யோசனை இது.
    ஹிந்து ஆன்மீகத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அறிக்கை விட வேண்டும்.
    அதாவது கங்கை, காவிரி போன்ற நதிகளில் ப்ரோக்ஷணம் (தலையில் நீரை
    தெளித்துக் கொள்வது) செய்து கொண்டாலே, ஸ்நானம் செய்த புண்ணியம்
    கிடைத்து விடும். ஆகவே கும்பமேளா போன்ற சில விசேஷ நாட்களைத் தவிர்த்து,
    அனைத்து மக்களும் நேரடியாக குளிக்க வேண்டாம் என்று அவர்கள் கோரிக்கை
    வைக்கலாம்.

    எந்த ஒரு முன்னெடுப்பிலும் Moral Authority இருந்தால், அந்த முன்னெடுப்பு எளிதில்
    வெற்றி பெற வாய்ப்பு அதிகமாகும். பொதுமக்களில் பெரும்பான்மையினர் இதை
    அனுசரித்தால், குறைந்தபட்சம், பெரிய தொழிற்சாலைகள் சுத்திகரிப்பு செய்தே
    கழிவுகளை நதிகளில் கலக்க சமூகத்தில் அழுத்தம் ஏற்படும். சில தசாப்தங்களில்
    100 சதவிகிதம் தூய்மை அடையாவிட்டாலும், குறைந்த பட்சம் குளிப்பதற்கு ஏற்ற
    நிலைக்கு நம் நாட்டின் நதிகள் வந்துவிடும் என்று நான் நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *