வெ.சா. பக்கம்: செல்வமாகாளி அம்மன்

[கலை, இலக்கிய விமர்சன பிதாமகர் வெ.சா அவர்களின் படைப்புக்களை தமிழ்ஹிந்து தளத்தில் வெளியிடுவதில் பெருமையடைகிறோம்]

டையாளூரே ஒரு மேடிட்ட தளத்தில்தான் இருந்தது. ஊருக்குள் நுழையும்போதே மாட்டுவண்டி மேட்டில் ஏறித்தான் நுழைய முடியும். சுற்று வட்டாரத்தில் எந்த கிராமமும் அப்படி ஒரு மேட்டில் இருப்பதாக நான் காணவில்லை. உடையாளூரில் மொத்தம் இருந்ததே நான்கு தெருக்கள்தான். ஒவ்வொரு தெருவிலும் சுமார் இருபது வீடுகள் இருக்கலாம். எங்கள் தெருவில் வீடுகள் ஒரு சாரியிலேதான் இருந்தன. ‘ப’ வடிவில் மூன்று தெருக்கள். ‘ப’வின் நடுவில் குறுக்கே ஒரு கோடிட்ட மாதிரி நான்காவது தெரு.

அந்த நடுத்தெருவில்தான் ஒரு பெருமாள் கோவில் இருந்தது. அந்தக் கோவிலை நான் பார்த்திருக்கிறேனே தவிர அங்கு ஏதும் உற்சவங்கள் நடந்ததாக எனக்கு நினைவில் இல்லை. அந்தக் கோவில்பற்றி யாரும் பேசிக்கூட எனக்கு நினைவில் இல்லை. உடையாளூரில் மிகவும் கொண்டாடப்பட்ட கோவில்கள் ஊருக்கு ஒரு எல்லையில் வெளியே இருந்த சிவன் கோவிலும் அதன் மறு எல்லையில் இருந்த செல்வமாகாளி அம்மன் கோவிலும்தான். சிவன் கோவில் மிகப் பழமையான கோவில். 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். கோவிலைச் சுற்றி வரும்போது, சுற்றிலும் கோவில் சுவர்களில் கல்வெட்டுக்கள் காணும். அந்தக் கோவிலுக்கு எதிரே இரண்டு குளங்கள். ஒன்று மனிதர்கள் குளிப்பதற்கும் மற்றது மாடுகளைக் குளிப்பாட்டுவதற்கும் என இருந்தன. நான் அங்கு படித்துக் கொண்டிருந்த 47-48, 48-49 வருடங்களில் நீர் நிரம்பிருந்த அந்தக் குளங்கள் சில வருடங்களுக்கு முன் நான் போயிருந்தபோது முற்றிலுமாக வற்றியிருந்தது மட்டுமல்லாமல், குளங்கள் இரண்டும் இருந்த சுவடு கூட அழிந்து போயிருந்தன.

ஊரின் மறு கோடியில் இருக்கும் செல்வமாகாளி அம்மன் கோவில்தான் சிவன் கோவிலை விடப் பிரசித்தமானது. பங்குனி உத்திரத்தின்போது திருவிழா நடக்கும். பின் வருடங்களில் எங்கள் குடும்பம் உடையாளூரை விட்டு நீங்கி என் தம்பி வேலை பார்க்கும் இடத்திற்கு ஏற்ப ஊர், வீடு மாற்றிக்கொண்டிருந்த காலத்திலும், அப்பா எங்கு இருந்தாலும், பங்குனி மாத செல்வமாகாளி கோயில் திருவிழாவுக்கு உடையாளூருக்கு வந்துவிடுவாராம். அவர் மாத்திரமல்ல, ஊரில் உள்ளவர்கள் யாருமே எந்த வெளியூரிலிருந்தாலும் செல்வமாகாளி அம்மன் கோயில் உற்சவத்துக்கு ஊருக்குத் திரும்பி வந்துவிடுவார்களாம். உற்சவம் அந்த ஊருக்கு பெரிய உற்சவம்தான். காவடி எடுத்தல், தீ மிதித்தல் எல்லாம் உண்டு. ஊரில் எல்லாருடைய வீட்டிலும் ஒரு குழந்தைக்குப் பெயர் அம்மனின் பெயராகத்தான் இருக்கும். என் தங்கை ஒருத்தியின் பெயரும் கூடச் செல்லம்மாள் தான்.

எங்கள் குடும்பங்களில் சுவாமி மலைக்குச் சென்று குழந்தைக்கு முடி இறக்குவது என்பது ஒரு கட்டாயம். இரண்டாவது கட்டாயம் உடையாளூர் செல்வமாகாளி அம்மன் கோயில் சென்று அங்கும் முடி இறக்கவேண்டும். மூன்றாவது என் அம்மா வேண்டிக் கொள்வது திருப்பதி சென்று மூன்றாவது முடி இறக்குவது. தில்லியிலிருந்து ஒவ்வொரு வருடமும் என் பையன் கணேசனுக்கு முடி இறக்குவது என்று வேண்டிக்கொண்டது மூன்று ஸ்தலங்களில் ஆனதால் மூன்று முறை விடுமுறையில் வரவேண்டியிருந்தது. எங்கள் ஊர்க்காரர் மற்றவர்களுக்கு செல்வமாகாளி அம்மன் கோயில் ஒரு ஃபர்லாங் தூரத்தில். சுவாமிமலை மூன்று மைல் தூரத்தில். எங்களுக்கு இஷ்ட தெய்வங்கள் நிறைய. இந்த குடும்பப் பழக்கம் என் பேத்தி விஷயத்திலும் தொடர்கிறது. என் பேத்திக்கு முடியிறக்க மூன்று வருடங்களுக்கு முன் சென்றபோது, செல்வமாகாளி அம்மன் கோயிலில் சில தெய்வங்களுக்கு சுருட்டும் சாராயமும் கூடப் படைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

உடையாளூரும் செல்வமாகாளி அம்மனும் சுற்று வட்டார கிராமங்கள் ஊர்களில் கூட பிரசித்தம் பெற்றிருந்தது பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது. சிவன் கோயில் கல்வெட்டு பற்றிச் சொன்னேன். அந்தக் கல்வெட்டில் உடையாளூரின் பெயர் வேறாகத் தான் குறிப்பிடப் பட்டிருந்தது. அக்கல்வெட்டின் ஒரு பகுதியை, சுமார் இருபது இருபத்தைந்து வரிகள் அச்சிட்டு கண்ணாடி போட்டு வைத்திருந்ததை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். பின்னர் ஊரின் பெயர் சோழர் காலத்தில் என்னவாக இருந்தது என்று மறந்ததை நினைவுபடுத்திக்கொள்ள ஒருமுறை அதைக் கோவிலில் தேடியபோது அது இருக்கவில்லை. புராதனச் சின்னங்கள் மாத்திரம் இல்லை, அச்சின்னங்களின் பதிவுகள் கூட மறைந்து போய்க் கொண்டிருக்கின்றன. இந்நாட்களில் இவற்றிற்கு மதிப்பு ஏதும் இருப்பதில்லை. ஊரில் இருந்த இரண்டு பெரிய குளங்களே சுவடற்று மறைந்து விட்ட பிறகு, இவற்றிற்கு கிராமத்தில் அன்றாடத் தேவை உண்டு, புராதன சின்னங்களுக்கு என்ன பொருளார்த்த தேவை? இருப்பினும்… நாம்தான் எதையும் பகுத்தறிந்து ஆராய்ந்து செயல்படுபவர்களாயிற்றே!

உ.வே.சாமிநாத அய்யர் எழுத்துக்களில் உடையாளூர் பற்றி பிரஸ்தாபங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் எனக்கு இப்போது கிடைத்துள்ளது. உ.வே.சாவுக்கு இரண்டு தலைமுறை முந்தியவரும், அக்காலத்திய புகழ்பெற்ற சங்கீத வித்வானும், சாகித்ய கர்த்தாவுமான கனம் கிருஷ்ணய்யரின் வாழ்க்கைபற்றி தான் அறிந்த குறிப்புகளையும் தான் சேர்த்து வைத்திருந்த கீர்த்தனங்களையும் சேர்த்து ஒரு சிறிய புத்தகம் எழுதியுள்ளார் உ.வே.சா. அதில் கனம் கிருஷ்ணய்யர் தன் ஸ்தல யாத்திரையின்போது உடையாளூருக்கும் செல்கிறார். அதுபற்றி அவர் எழுதியுள்ளதை அவர் வார்த்தைகளிலேயே சொல்லலாமே.

“அப்போது அந்தக் கிராம தேவதையாகிய செல்வமாகாளி யென்னும் தெய்வத்துக்கு உத்சவமாதலின் அந்தத் தேவதை திருவீதியில் வந்தது; அக்காலத்தில் அக்கிராமத்தாருடைய விருப்பத்திற்கிணங்கிக் கல்யாணி ராகத்தில் “வல்லமையுன் வல்லமையே” என ஒரு கீர்த்த்னத்தை இவர் பாடினார்.

அது வருமாறு

ராகம் – கல்யாணி: தாளம் – ஆதி

பல்லவி
வல்லமையுன் வல்லமையே
சொல்ல எவர்க்குந் தரமா? (வல்லமையுன்)

அனுபல்லவி
எல்லாம் உன் செயலே வேறில்லை
பூபதிராஜபுரந்தனில் வாழும்
செல்ல மாகாளி அம்மையே தேவி பரஞ்சோதி (வல்லமையுன்)

இவ்வளவு போதும் இப்போதைய தேவைக்கு. பின் உ.வே. சா ஒரு அடிக்குறிப்பு தருகிறார். “பூபதிராஜபுரம் என்பது உடையாளூரில் உள்ள ஒரு பகுதி. தமாஷாகத்தான் இருக்கிறது. உழக்குக்குள் கிழக்கும் மேற்குமா என்பது ஒரு கேலி வழக்கு. உடையாளூரே நான்கே தெருக்களும் சுமார் 80-100 வீடுகளே கொண்ட ஒரு சிறிய கிராமம். அதனுள் பூபதிராஜபுரம் ஒரு பகுதி. கனம் கிருஷ்ணய்யர், தியாகப்ரம்மம் வாழ்ந்த காலத்தவர். அவருடன் பழக்கமுள்ளவர். அந்த காலத்தில் உடையாளூரும் பூபதிராஜபுரமும் இருந்த கோலம் அப்படித்தானோ என்னவோ.”

உடையாளூர் சென்ற பிறகுதான் சிவன் கோவில் மணியின் ஒலி காதில் விழத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும், விடியும் முன் தொடங்கும் உஷத்கால ஒலியின் தொடக்கத்திலிருந்து அர்த்தஜாம பூஜை நடப்பதன் செய்தியாக வரும் கடைசி ஒலி வரை, அது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகியது. கிராமத்திலிருந்து அதிக தூரமில்லை, சுமார் ஒன்று அல்லது ஒன்றரை ஃபர்லாங்கு தூரம்தான் இருக்கும், ஆற்றின் பெயர் எனக்கு மறந்துவிட்டது. முடிகொண்டான், திருமலை ராஜன், குடமுருட்டி என்று ஏதோ ஒரு பெயர் அதற்கு, அந்தப் பெயரை வெகு அபூர்வமாகத்தான் நான் கேட்டிருக்கிறேன். அதிலும், ஒவ்வொரு கிராமமும், வழியில் குறுக்கிடும் ஆறும் எல்லாமே சுமார் ஒரு மைல் அல்லது அரை மைல் தூரத்திலிருந்தன. தஞ்சை ஜில்லா கிராமத்தாருக்கு, அவர்கள் ஊரில் ஓடும் ஆறு எதாக இருந்தாலும், அது காவிரிதான் அவர்களுக்கு. ஆறு என்ன, எந்தப் பெரிய வாய்க்காலும், குளிக்கத் தகுந்த பெரிய வாய்க்காலானால், அதுவும் கிராமத்து ஜனங்களுக்கு காவிரிதான். காலையில் விடியும் முன் கிராமத்துப் பெண்கள் ‘காவிரிக்குப்’ போய்க் குளித்துவிட்டு ஈரப்புடவையுடனும், இடுப்பில் ஜலம் நிரப்பிய குடத்துடனும் வருவதை, ‘காவிரியில்’ ஜலம் ஓடும் காலங்களில் பார்க்கலாம். அதற்கும் முன்னால், விடிவதற்கு முன்னாலேயே மார்கழி மாதமானால் பஜனை கோஷ்டி பாடிக்கொண்டே ஊர்வலம் வந்து முடிந்திருக்கும். இன்னொரு கோஷ்டி தேவாரம் பாடிச் செல்லும்.

உடையாளூரில் ஒரு பெருமாள் கோவிலும், மிகப் பழமையான 12-ம் நூற்றாண்டு சிவன் கோவிலும் இருந்த போதிலும் மிகப் பிரசித்தமானதும் வெளியூரில் எங்கிருந்தாலும், எவ்வளவு தூரத்திலிருந்தாலும், உடையாளூர் வாசிகளைப் பங்குனி உத்திரத்தில் நடக்கும் தன் உற்சவத்திற்கு அழைத்துவிடும் தெய்வம் செல்வமாகாளி அம்மன்தான். கனம் கிருஷ்ணய்யரையே ஊர்வலம் வந்த அக்கணமே ஒரு கீர்த்தனையை இயற்றிப் பாட வைத்த அம்மன். உ.வே.சா.வின் எழுத்துக்களில் இடம்பெற்றது உடையாளூர் சிவனோ பெருமாளோ இல்லை. செல்வமாகாளி அம்மன்தான். ஒன்றும் பெரிய கோவில் இல்லை. சின்னதுதான். கோவிலின் கர்ப்பக் கிரஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அம்மனின் மூர்த்தியும் முழு உருவ மூர்த்தி இல்லை. ஒரு பாளம் போன்ற பாறையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பம். எனக்கு இது ஒரு வித்தியாசமான காட்சியாகப் பட்டது.

ஒரு சின்னக் கோயில். அதைச் சுற்றி நாலாபக்கமும் எழுப்பட்டுள்ள சுற்றுச் சுவர். இதற்குள் அதன் வலது பக்கத்தில் ஒரு கிணறு. இன்னும் சில சின்னச் சின்ன தேவதைகள். ஒரு சின்ன தேவதைக்கு சுருட்டு முதலியன படைக்கப்பட்டிருந்தது. ஆனால் உயிர்பலி இங்கு நடப்பதில்லை. அதை நான் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. கல்கத்தா காளி கோயிலில்கூட இன்றும் ஆடுகள் பலி கொடுக்கப்படுகின்றன. செல்வமாகாளி அம்மனின் கோயிலிக்கு பூசைகள் செய்வது பரம்பரையான ஒரு பூசாரிதான். மூன்று வருடங்களுக்கு முன் நான் என் பேத்திக்கு முடியிறக்கப் போனபோது பூசாரியாக இருந்தது முப்பதுக்களில் இருந்த ஒரு இளம் வாலிபன்தான். முன்னாலேயே அருகிலிருக்கும் சாக்கோட்டையில் இருக்கும் என் தம்பி மூலம் சொல்லி வைத்திருந்ததனால் பூசாரியே பூசைக்கு வேண்டிய பூக்கள் வகையறா, நிவேதனத்துக்கு வேண்டிய பொங்கல், வடை, எல்லாம் செய்து வைத்திருந்தது தயாராக இருந்தது. பால் வாங்கி வைத்திருந்தார். பஞ்சாமிர்தமும் செய்து வைத்திருந்தது. எல்லாம் அபிஷேகத்திற்காகத்தான். சம்பிரமங்களில் எதுவும் குறைபட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் உற்சவம் இல்லாத காலம் என்ற காரணத்தாலோ, அல்லது கால மாற்றத்தில் கிராம மக்களும், கிராமமும் நலிவடைந்த காரணத்தாலோ, அன்றைய முற்பகலில் எங்களைத்தவிர கோவிலுக்கு வந்தவர்கள் அதிகம் யாரும் இல்லை.

அந்த பூசாரி இளைஞனின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக இக்கோவில் காரியங்களில் ஈடுபட்டிருந்ததால், பூஜைக்கான பொருட்களைச் சேகரிக்க, நிவேதனங்களைத் தயாரிக்கவும் முடிந்திருக்கிறது. அதோடு அந்த இளைஞன் அபிஷேகம், அர்ச்சனைகளை, வடமொழியில் மந்திரங்கள் சொல்லியும் தமிழில் பிரார்த்தனைப் பாடல்களைப் பாடியும் செய்தான். வடமொழி மந்திரங்களை எங்கிருந்து கற்றான்? தலைமுறை தலைமுறையான ஈடுபாட்டில்தான் என்று எனக்குத் தோன்றிற்று. இது ஏதும் இப்போது நாம் கேட்கும் அரசியல் ரீதியான நிர்ப்பந்தங்களால் நிகழ்வது அல்ல. இக்கோயில் தமிழ் அரசின் அறநிலையத் துறையின்கீழ் வருவதல்ல. இது செல்வமாகாளி அம்மனின் பல நூற்றாண்டுகளாக கிராமத்தில் எல்லா மக்களிடையேயும் செல்வாக்குப் பெற்றதன் காரணமாக அந்த பூசாரிக் குடும்பமே தானாகவே கொண்ட ஈடுபாட்டின் விளைவு என்று எனக்குத் தோன்றுகிறது. அரசியல் கட்சியின் பயமுறுத்தல் காரணமாக இல்லாது, அரசின் கட்டளை காரணமாக இல்லாது தானாகவே மக்களின் உடன்பாட்டில், விருப்பத்தில் நிகழும் மாற்றங்கள்.

எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. 1974லில் நான் என் மகனுக்குச் செல்வ மாகாளி அம்மன் கோயியில் குடும்ப வழக்கப்படி/ஊர் வழக்கப்படி முடியிறக்க தில்லியிலிருந்து உடையாளூர் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் என் பெற்றோரும் வந்திருந்தனர். அப்பாவோ ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதில் தீவிரமாக இருப்பவர். அம்மாவும்தான். ஆனால் அப்பா அளவுக்குத் தீவிரம் இல்லை. அப்போதும் இந்த பூசாரிக் குடும்பத்தின் மூத்தவர் ஒருவர்தான் பூஜைகள் செய்தார். பரம்பரையாக ஏதோ காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பழக்கத்தால்தான் ஆசார சீலரான என் அப்பா இதையெல்லாம் சகஜமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதுபற்றி எந்த மாற்று சிந்தனையும் இல்லாமல். இதில் அவர் தனியர் இல்லை. அந்த கிராமமே ஏற்றுக்கொண்ட விஷயம் இது. அதோடு, அவர்கள் எங்கிருந்தாலும் பங்குனி உற்சவத்துக்கு உடையாளூர் ஓடி வந்துவிடுகிறார்கள் என்றால்..!

இன்னமும் சொல்வதானால், சுவாமிமலையில் பிறந்த என் மாமாவுக்கு குல தெய்வம் சுவாமிநாத சுவாமியே ஆன போதிலும், நிலக்கோட்டையில் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தவர். நிலக்கோட்டை மாரியம்மனின் பக்தராகி விட்ட காரணத்தாலோ என்னவோ, ஒருமுறை என் சிறுவயதில் தஞ்சைக்கு என்னை அழைத்துச் சென்றபோது அவர் சென்றது பெரிய கோவிலுக்கு அல்ல. தஞ்சை மாரியம்மன் கோவிலுக்குத்தான் அர்ச்சனை செய்ய அழைத்துச் சென்றார். வாழ்விடமும் அதன் பழக்கங்களும்கூடப் பல மாற்றங்களைக் கொணர்ந்து விடுகின்றன போலும். வேறு எப்படிப் புரிந்து கொள்வது?

6 Replies to “வெ.சா. பக்கம்: செல்வமாகாளி அம்மன்”

 1. திரு.வெங்கட் சுவாமிநாதனின் இக்கட்டுரை அருமையானது. நாட்டுப்புற சாமிகள் மேல்நிலையாக்கம் போன்ற மேற்கத்திய கண்ணோட்டங்களில் நமது பாரம்பரியத்தை அணுகும் முறையின் குறைபாடுகள் சொல்லாமலே வெளிப்படும் கட்டுரை இது. நம் பாரம்பரியத்தின் நாட்டார் கூறுகளை அவற்றின் ஆழத்தை காண நம் ‘ஆராய்ச்சியாளர்கள்’ செல்ல வேண்டிய தூரம் நிரம்ப இருக்கிறது. இந்த தூரத்தை கடக்கம் அல்லது இந்த ஆழங்களில் முங்கி முத்தெடுக்க உள்நோக்கங்களுடன் வெளிநாட்டு ஃபண்டுகளுடன் நடத்தப்படும் நிறுவனங்களின் கட்டிப்போட்ட நரிகளுக்கு என்றைக்கும் இயலாது. வெங்கட் சுவாமிநாதன் போன்ற மகத்தான மனங்கள் தரும் உள்ளொளியை பெற்று ஒரு புதிய ஆராய்ச்சி தலைமுறை உருவாக வேண்டும். வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் வெளியிட்ட தமிழ் இந்து.காம் தளத்துக்கும் வணக்கங்களும் நன்றியும்.

 2. இயல்பான நடை – உடையாளூர் ஆறு போல் ஓடுகிறது.

  யதார்த்தமான விஷயங்கள் – அந்த ஆற்றின் நீர் போல் தெளிவாக இருக்கின்றன.

  அழகான வர்ணனை – செல்வமாகாளி அம்மன் போல்!

  பல வருடங்கள் கழித்து நாம் சிறிய வயதில் விளையாடி மகிழ்ந்த சொந்த மண்ணுக்கு செல்லும்போது ஒரு சுகம் கலந்த சோகம் மனதில் இழையோடுமே! நீங்கள் அனுபவித்துணர்ந்த அந்த சுகமான சோகத்தை நாங்களும் தங்கள் கட்டுரையை படிக்கும்போது உணர்கிறோம் அய்யா!

  தங்கள் இளம்பிராயத்தில் இருந்த உடையாளூர் போன்ற சிறிய அழகான கிராமங்களை எங்களைப் போன்ற இந்தக்கால நடுத்தர வயதானவர்கள் கனவிலும் கற்பனையிலும் தானே கண்டு களிக்க முடியும்!

  அந்தக் கோவிலையும் கோவில் பூசாரி குடும்பத்தையும் அவற்றின் மேல் தங்கள் தகப்பனார் மற்றும் தங்களின் ஈடுபாட்டையும் பற்றி படிக்கும்போது, யதார்த்தமான வேறுபாடுகள் இல்லாத உண்மையான ஆன்மீகத்தையும் கலாச்சாரத்தையும் நாம் இன்னும் இழந்துவிடவில்லை என்பது ஊக்கமளிக்கிறது. தங்கள் தகப்பனாருக்கு பிறகு மூன்று தலைமுறைகளாக தங்கள் குடும்பம் அந்த சொந்த மண்ணை மறக்காமல் இருக்க காரணம் அந்த செல்வமாகாளி அம்மனே அல்லவா?

  அந்த தெய்வ அருள் இருக்கும் வரை நம் இந்து மதத்திற்கு எவ்வளவு ஆபத்துக்கள் வந்தாலும் தர்மமாகிய நம் இந்து மதம் இறுதியில் வெல்லும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது அய்யா!

  மிக்க நன்றி அய்யா! நமஸ்காரங்கள்!

  அன்புடன்
  ப.இரா.ஹரன்.

 3. நீங்கள் இருவரும், பின் ஜடாயுவும் தந்துள்ள பாராட்டுக்கள், உங்கள் அளவில் ஆத்மார்த்தமானவை என்பதை நான் உணர்கிறேன். இருந்த போதிலும் அவை என்னைக் கூச்சப்பட வைக்கின்றன. நான் என்னளவில் என் ஆரம்ப வாழ்க்கையை நினைவு கூறும் போக்கில் மனதில் பதிந்தவற்றை எழுதியுள்ளேன். அவை இன்றைய தலைமுறையினருக்கு வித்தியாசமானவையாக சிலசமயங்களில் புரிந்துகொள்ள முடியாத வாழ்க்கை முறையாக, மதிப்புகளாகவும் தோன்றும். அவையே என் நினைவுகள் பெறும் மதிப்பு. ஆனால் இன்றைய போலியான நாத்திகமும், போலியான ஆத்திகமும் மூச்சடைக்கும் விஷச் சூழலில், உண்மைக்கும் தெய்வீகத்துக்குமான ஏக்கம், நான் எழுதும் நினைவுகளுக்கு ஒரு உணர்ச்சிகரமும் தாபமும் மிக்க ஒரு வாசக பரிமாணத்தைக் கொடுக்கின்றன என்று தோன்றுகிறது.

  இன்னமும், சிறு தெய்வமாகவும் திராவிட இனத்தின் பாரம்பரிய தாய் தெய்வமாகவும் பாவிக்கப்படும் அம்மன், பல நூற்றாண்டுகளாக,(குறைந்தது கனம் கிருஷ்ண அய்யர் காலத்திலிருந்து பதிவு கிடைக்கிறது) பிராமணர்களின் இஷ்ட தெய்வமாக, குல தெய்வமாக, (ஊரில் இருக்கும் சிவனையும் பெருமாளையும் பின்னுக்குத் தள்ளி) பரிணாமம் பெற்றது எனக்கு இன்னமும் புதிராகத்தான் இருக்கிறது.

  இதை தீவிர திராவிட இயக்கத்தவர் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? என்ன விளக்கம் தருவார்கள்? திராவிட இயக்கத்தவர் ஏன் மாரியம்மனையும் காளியையும் ஏசவில்லை, நிராகரிக்கவில்லை. வெ.சா.

 4. //திராவிட இயக்கத்தவர் ஏன் மாரியம்மனையும் காளியையும் ஏசவில்லை, நிராகரிக்கவில்லை//
  இன்றைய தேதியில் நாட்டார் தெய்வங்கள் என அடையாளப்படுத்தப்பட்டவற்றை இகழ்வதென்பது அரசியல்-சரித்தன்மை கொண்டதாக இருக்காது என்பதால் மு.க இத்யாதிகள் அவற்றினைக் குறித்து அத்தனை பிரஸ்தாபிப்பதில்லை என்பதால் அத்தெய்வங்கள் திராவிட இயக்கத்தினரால் இகழப்பட/தாக்கப்படவில்லை என கருதலாகாது. இந்த தாய் தெய்வங்களின் கிராமப்புற சடங்குகளே திராவிட இயக்கங்களால் குறிவைத்து தாக்கப்பட்டன. வேப்பிலை கட்டி வருவது, தீச்சட்டி எடுப்பது, பூக்குழி இறங்குவது ஆகியவை காட்டுமிராண்டி சடங்குகளாக கூறப்பட்டன. ஆனால் எவனோ ஒருவன் கிராமப்புற தாய் தெய்வங்களை தனியாக பிரித்தெடு – பிறகு மாரியம்மனையும் மேரியையும் கலந்து மக்கள் மனதை மயக்கு என திட்டமிட உடனே அதற்கு இயைவாக இங்குள்ள நாட்டார் வழக்காற்றியல் துறைகளும் அதன் இன்றைய துறை முதன்மைகளும் இயங்க ஆரம்பிக்கும்.

 5. வெங்கட் சாமிநாதனின் உடையாளூர் விவரங்கள் அருமை. தஞ்சாவூர் ஜில்லா என்றாலே ஒரு தனி மணம் கமழும் . என்னதான் சென்னை மாநகரம் சோற்றுக்கு வழி செய்தாலும் சொந்தஜில்லா என்றால் மனம் கசிந்துதான் போகிறது. கோவில் விழாக்கள் தான் என்றுமே மக்களை இணைக்கும் கயிறு.

 6. திரு வெ.சா அவர்களுடைய இந்தப் பதிவைப் படித்தவுடன் எனக்கு எங்கள் குலதெய்வக் கோயில் பற்றிய சில எண்ணங்கள் தோன்றின. எங்கள் குலதெய்வமும் செல்லாண்டியம்மந்தான். கட்டாயம் எங்கள் குடும்பங்களில் செல்லப்பன், செல்லம்மாள் செல்லாத்தள், செல்லாயி போன்ற பெயர்கள் இருக்கும். இப்பொழுது நாகரிகமாகச் செல்வநாயகி , செல்வக்குமார் முதலிய பெயர்கள் வந்து விட்டன.
  பழைய குலதெய்வக்கோவில் காங்கேயம் பக்கத்தில் கீரனூர். அங்கு அருகிலேயே சோழீச்சுரம் என்னும் ஒரு சிவன் கோவிலும் இருக்கின்றது. சிவ்ன் கோவில் குருக்கள் ஆதிசைவமரபினர். அவரே குலகுருவும் ஆவர்.பழைய செல்லாண்டியம்மன் கோவிலில் உயிர்ப்பலி இருப்பதால் எங்கள் குலப் பெரியவர்கள் கூடி கோவைக்கருகில் உள்ள ஒருகிராமத்தில் உயிர்ப்பலி இல்லாத செல்லாண்டியம்மன் கோவில் அமைத்துள்ளனர். மூன்று தலைமுறையாகச் சிவதீக்கையும் சைவ ஆச்சாரமும் கொண்ட எங்கள் குடும்பமும் குலத்தாரும் கோவையில் உள்ள இந்தக் கோவிலையே குலதெய்வக் கோவிலாகக் கொண்டாடி வருகின்றோம். இதனைச் சிலர் பிராமணீய மாற்றம் எனக் கேலி செய்வர். இது சமூகம் மேனிலை நோக்கிச் செல்வது என உணர்கின்றேன்.இது வைதிக நெறி காட்டும் உயர்வு.

  செல்லாண்டியம்மன், கவைய காளியம்மன் போன்ற சிறுதெய்வங்கள் ஆதிசைவர்களுக்கும் குலதெய்வமாகும். ஆதிசைவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு முடி இறக்கல் போன்ற சடங்குகளைக் குலதெய்வத்தின் கோவில்களில் செய்வர். குலதெய்வக் கோவில்களில் பூசாரிகளாக இருப்பவர்கள் பண்டாரம் என அழைக்கப்படும் இனத்தார். ஆதிசைவர் கோவிலுக்கு வழிபட வருவதற்கு முன்னால் தகவல் தெரிவித்தால் ,உயிர்ப்பலி நிறுத்தி, அன்று கோவிலைச் சுத்தி செய்து ஆதிசைவரின் பூசைக்கு வழிவிடுவர் என்று கூறக் கேட்டுள்ளேன். ஆதிசைவர்களின் உறவு சமய ஒழுக்கத்தில் மேம்பட ஆர்வமுடைய குடும்பங்களுக்கு வழி வகுத்தது. இது பழைய நிலை.

  இன்று அரசியல் சூழலினாலும் வேறு பல காரணங்களாலும் குலகுருக்கள் தொடர்பு பெரிதும் ஒழிந்து விட்டது. அவர்களும் போதிய கல்வியில்லாமல் இருளிலும் மருளிலும் வாழ்கின்றனர். குலதெய்வக்கோவில் அரசு கட்டுப்பாட்டில் இல்லாததாலோ என்னவோ செழிப்பாக உள்ளது. அருகில் இருக்கும் சிவன் கோவில் பரிதாபமாகக் காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *