ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்
தொடர்ச்சி..
உண்ணாவிரதம் ஏற்று உயிர் துறப்பதற்காக, அங்கதனுடன் எல்லா வானரர்களும் கடற்கரையில் கிழக்கே பார்த்து உட்கார்ந்தனர். அருகே ஒரு மலையுச்சியில் சம்பாதி என்ற கழுகும் அவர்கள் எப்போது இறப்பார்கள், தனக்கு எவ்வளவு நாட்களுக்கு அவர்களது பிணம் தின்னக் கிடைக்கும் என்று மகிழ்வோடு காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. தங்களுக்குள் வானரர்கள் சீதை கிடைக்காது போய்விட்ட துரதிருஷ்டத்தையும், அதனால் தாங்கள் உயிர்விட நேர்ந்ததுள்ளதையும் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தனர். அவர்களில் சில பேருக்கு மட்டுமே தெரிந்திருந்த விவரங்களான ராவணன் சீதையை அபகரித்ததையும், அவளைத் தூக்கிக்கொண்டு போகும்போது எப்படி ஜடாயு வழிமறித்து சண்டை போட்டு தன் உயிரையும் விட்டது, அப்புறம் எப்படி சுக்ரீவனை நண்பனாக்கிக் கொண்டதில் அவர்களும் சீதையைத் தேடிக் களைத்து, அவள் கிடைக்காத விஷயத்தை சுக்ரீவனிடம் சொல்ல மனமில்லாமல் இப்போது உயிர் துறக்க இருக்கிறார்கள் என்று எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தனர். அதையும் சம்பாதி கேட்டுக்கொண்டிருந்ததால், ஜடாயு என்ற பெயரைக் கேட்டதும் உஷாராகி உடனே அவர்களிடம் வந்து மேலும் விவரங்களைக் கேட்டது.
ஜடாயு இறந்துவிட்டது என்று அறிந்ததும் அது மிகவும் துக்கமுற்று, ஜடாயு தனது சகோதரன்தான் என்று சொல்லி அவர்களின் முன்கதையைச் சொல்லிற்று. அவர்களது இளமைக் காலத்தில் ஜடாயுவும், சம்பாதியும் புதிதாக ஏதாவது பண்ணவேண்டும் என்ற ஆர்வத்தில் ஒருமுறை ஆகாயத்தின் எல்லையைத் தொடப் போட்டி போட்டார்கள். அப்படி மேலே மேலே பறக்கும் சமயம், சூரியனின் வெப்பக் கதிர்களால் தாக்கப்பட்டு ஜடாயு சிரமப்படுவதைப் பார்த்து, சம்பாதி மேலே பறந்து நிழல் கொடுக்க அந்த நிழலில் ஜடாயு லாவகமாகப் பறந்தது. ஆனால் தான் வெப்பத்தால் தாக்கப்பட்டதால் தனது இறக்கைகள் சூட்டில் கருகிப் போயின என்று சம்பாதி வானரர்களிடம் சொன்னது.
பக்ஷாப்⁴யாம்ʼ சா²த³யாமாஸ ஸ்னேஹாத்பரமவிஹ்வல: || 4.58.6||
பரமவிஹ்வல: overcome by pain, வலி தாங்க முடியாததால்
ஸ்னேஹாத் lovingly, ஆசையுடன்
பக்ஷாப்⁴யாம் with both my wings, என் இரண்டு இறக்கைகளாலும்
சா²த³யாமாஸ I covered, நான் மூடினேன்.
(ஜடாயுக்கு) வலி தாங்க முடியாததால் என் இரண்டு இறக்கைகளாலும் ஆசையுடன் நான் மூடி (நிழல் தந்தேன்).
எல்லோருடைய விஷயத்திலும் அண்ணன்-தம்பி உறவு முறை வேறு வேறாகத்தான் இருக்கின்றன. வாலி-சுக்ரீவன் இரண்டு சண்டை போட்டுக்கொள்ளும் சகோதரர்களாகவும், ஜடாயு-சம்பாதி இரண்டு பாசமுள்ள சகோதரர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
18.2 மனதில் உறுதி வேண்டும்
கூர்மையான பார்வைக்குக் கழுகுக் கண் என்று சொல்வார்கள் இல்லையா, அதனால் கழுகாகவே இருக்கும் சம்பாதியால் மலையின் உயரச் சென்று உட்கார்ந்து, கடலையும் தாண்டி இருக்கும் இலங்கையில் உள்ள சீதையைப் பார்க்க முடிகிறது. உடனே வானரர்களையும் இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டு வரச் சொல்கிறது. அலை மோதும் கடலையும், அவை எழுப்பும் பேரொலியையும் கேட்ட வானரர்கள் பயந்துபோய் கடலை எப்படித் தாண்டுவது என்று மலைத்துப்போய் நின்றனர். சீதை இருப்பதைப் பார்த்து சம்பாதி சொல்லியும் தங்களால் அங்கு போக முடியுமா என்று கைகளைப் பிசைந்துகொண்டு நின்றனர். தலைவனான அங்கதன் அவர்களுடைய தயக்கத்தையும், அதைரியத்தையும் பார்த்து அவர்களிடம் நம்பிக்கையை இழப்பது ஒரு பாம்பின் விஷம் போல; அதுதான் ஒருவன் இறப்பதற்குக் காரணம். விஷம் ஒருவனைக் கொன்றுவிடுவதுபோல அதைரியம் ஒருவனின் வலிமையை இழக்கவைத்து அவனது மனோதைரியத்தையும் கொன்றுவிடும். அதனால் விஷம் போல் இருக்கும் அதைரியத்தை வளர்க்கக் கூடாது என்கிறான்.
விஷாதோ³ ஹந்தி புருஷம்ʼ பா³லம்ʼ க்ருத்³த⁴ இவோரக³:|| 4.64.11||
க்ருத்³த⁴: angry, கோபம் கொண்ட
உரக³: serpent, பாம்பு
பா³லம் இவ like young boy, இளம் பாலகனைப் போல
புருஷம் man, மனிதனை விஷாத³: despondency, அதைரியம்
ஹந்தி destroys, அழிக்கிறது.
கோபம் கொண்ட பாம்பின் விஷம் இளம் பாலகனைக் கொல்வது போல, அதைரியம் மனிதனை அழிக்கிறது.
எந்த முயற்சியிலும் வெல்வதற்கு, ஒருவனுக்கு முதலில் மனோதைரியம் வேண்டும். தன் தொண்டர்களிடம் பயமோ, தயக்கமோ காணப்பட்டால் அவர்களின் தலைவன் அதைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு இருக்கும் தடைகளைக் கண்டுபிடித்து நீக்கவும், மேற்கொண்டு முன்னேறவும் ஊக்கத்துடன் திட்டமிட்டு உழைப்பதற்கு வேண்டிய தைரியத்தை வளர்க்க வேண்டும்.
18.3 உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் …
கடலைத் தாண்டி இலங்கைக்குப் போவதற்குண்டான வலிமையும், விருப்பமும் உள்ளவர்களை தன்னுடன் பேசுமாறு அங்கதன் அழைத்தான். அதற்கு கவா, கவாக்ஷா, மைந்தா, த்வைதா உட்படப் பலர் அவன் முன்னிலையில் வந்தும், அவர்களது முந்தைய சாதனைகளைப் பார்த்தால் அவர்களில் எவருமே தேறமாட்டார்கள் என்று தெளிவாய்த் தெரிந்தது. அவர்கள் எல்லோரிலும் முதியவனும், வன்மையும் படைத்தவன் ஜாம்பவான் என்றாலும், ஜாம்பவானே முன்பு இளம் வயதில் கடலைத் தாண்டுவது தன்னால் முடிந்திருக்கும்; ஆனால் வயதான காலத்தில் அது முடியுமா என்பது சந்தேகமே என்றான். அங்கதனோ தான் இங்கிருந்து தாண்டும் வலிமை தனக்கு இருந்தாலும், இலங்கையிலிருந்து தாண்டித் தன்னால் இங்கு திரும்பி வருவது சந்தேகமே என்றான். தலைவனான அங்கதன் திரும்புவது சந்தேகம் என்றால் அவன் போக முயற்சிப்பதில் ஜாம்பவானுக்கு விருப்பமில்லை. கடைசியில் ஜாம்பவானையே ஒருவனைத் தேர்ந்தெடுக்கச் சொல்ல அவன், அனுமனால் கடலைத் தாண்டிப் போகவும் திரும்பித் தாண்டி வரவும் முடியும் என்பதால், அனுமனைப் போகச் சொல்கிறான்.
உத்திஷ்ட² ஹரிஸா²ர்தூ³ல! லங்க⁴யஸ்வ மஹார்ணவம்| …… 4.66.36||
ஹரிஸா²ர்தூ³ல O tiger among monkeys, குரங்குகளில் புலியே!
உத்திஷ்ட² you may get up, நீ எழுந்திரு!
மஹார்ணவம் great ocean, அகன்ற கடலை
லங்க⁴யஸ்வ you may cross, நீ தாண்டுவாய்.
குரங்குகளில் புலியே! நீ எழுந்திரு! அகன்ற கடலை நீ தாண்டுவாய்.
சாதாரணமாகவே ஒருவனுக்குத் தன் தகுதியைப் பற்றி சரியான கணிப்பு இருக்காது என்பது மட்டுமல்லாமல், முக்கியமான நேரங்களில் அதைக் குறைத்தும் மதிப்பிடுவான். அப்போது அவன் தகுதியைப் பற்றி முன்பே நன்கு தெரிந்திருந்த ஒரு பெரியவரோ, நண்பரோ அதை எடுத்துச் சொல்லும்போது அவனுக்குப் பொறியில் தட்டியது மாதிரித் தோன்றி, அவன் செயற்கரிய செயலையும் செய்யத் துணிந்து நிற்பான்.
மேலே இருக்கும் வால்மீகியின் ஒரு வரியைக் கேட்டால் முன்பு நாம் பார்த்த வெங்கடேச சுப்ரபாதத்தின் வரி ஒன்று நினைவுக்கு வருகிறதோ? மேலும் இந்த வரியில் உள்ள சம்ஸ்கிருதச் சொல்லான “லங்க” என்பது ‘தாண்டு’ என்ற பொருளைத் தருவதால், இந்தியாவிலிருந்து தாண்டக் கூடிய தொலைவில் இருக்கும் தீவு என்பதால்தான் அதற்கு இலங்கை என்று பெயர் வந்திருக்கிறதோ? இவை தவிர, எனக்கு வேறொன்றும் தோன்றுகிறது. அதாவது, நீளம் தாண்டும் வீரர் ஒருவர் முன்னதாக இருந்த ஓர் ஒலிம்பிக் சாதனையை முறியடிக்கும்போது செய்து காட்டிய அதே அதிக அளவை, தன்னாலேயே இன்னுமொருமுறை கூடத் தன் வாழ்விலே செய்துகாட்டவே முடியவில்லை. அன்று அவர் ஏதும் கூடாத மருந்து சாப்பிட்டிருக்கவில்லை என்பது உண்மையானால், அவருக்கு அவரது திறமையை யார் ஞாபகப்படுத்தி அன்று அவரை உசுப்பேற்றிவிட்டார்களோ?
18.4 புத்துணர்ச்சி பெறல்
ஒரு கூட்டத்தில் ஒருவருக்கு மனத்தளர்ச்சி ஏற்படுமானால் அது பலரையும் தொத்திக்கொள்ளும் அபாயம் பொதுவாக இருப்பதால், அந்த வானரக் கூட்டத்தில் பலருக்கும் இருந்த தளர்ச்சி அனுமானையும் தொத்திக்கொண்டுவிட்டது. கடலைத் தாண்டுவது யாரால் முடியுமோ அவர்களை அங்கதன் முன்னே வரச் சொன்னபோதும், அதன்பின் நடந்த ஆலோசனைகளின்போதும், அனுமான் எதுவும் பேசாது மௌனமாக இருந்தது ஜாம்பவானுக்கு ஆச்சரியமாக இருந்தது. அனுமானுக்கு ஊக்கம் ஊட்டும் வகையில், கடலைத் தாண்டுவதற்கு வேண்டிய சக்தியும், திறமையும் இருக்கிறது என்று அவனிடம் ஜாம்பவான் சொன்னான். அதற்கு வேண்டிய உடலமைப்பையும், மனதையும் கடவுளர்கள் அவனுக்குக் கொடுத்திருப்பதையும் ஞாபகப்படுத்தினான். அதையெல்லாம் ஒரு நல்ல காரியத்தில் ஈடுபடுத்துவதற்கு வேண்டிய காலம் கனிந்து வந்திருப்பதையும் பக்குவமாக எடுத்து ஜாம்பவான் சொன்னான். அதைக் கேட்ட அனுமான் தனது சக்தியெல்லாம் திரும்பப்பெற்றதாக உணர்ந்து, தான் கடலைத் தாண்டி சீதையின் இருப்பிடத்தை உறுதிப்படுத்தி வருவதாக அறிவித்தான். அதைக் கேட்ட வானரர்கள் ஆரவாரம் செய்து மகிழ, அந்த ஆரவாரமும் அனுமனுக்கு வேண்டிய சக்தியை மேலும் தந்ததாக வால்மீகி குறிப்பிடுகிறார்.
….. ஹர்ஷாத்³ப³லமுபேயிவான் || 4.67.4 ||
ஹர்ஷாத் joyfully, மகிழ்ச்சியுடன்
ப³லம் strength, பலம்
உபேயிவான் assumed, கொண்டான்.
மகிழ்வோடு மேலும் பலம் இருப்பதாகக் கொண்டான்.
ஒருவன் தான் செய்யவேண்டிய காரியம் அளவில் பெரியதாயும், அபாயகரமனதாயும் இருந்தால் துவண்டு போய் ஏதும் செய்யாது இருக்கும் நிலையில் வேறொருவர் வந்து ஊக்கப்படுத்தினால், அதுவே அவனை இயக்கவைக்கும் ஒரு பெரிய சக்தி. மிக வலுவான சக்தி இருக்கும் அனுமானுக்கே அத்தகைய ஊக்கம் தேவைப்பட்டதென்றால், மற்றவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? ஆக ஒருவன் ஊக்கம் தளர்ந்து போனால், அவன் வெளியிலிருந்து அதை வரவழைத்துக் கொள்ளும்படியாவது அவனுக்கு உற்றமும், சுற்றமும் அமைந்தால் அது அவன் செய்த பாக்கியமே.
18.5 நன்றி மறவேல்
அனுமான் மகேந்திர மலையுச்சியிலிருந்து ஒரே தாவாகத் தாவி இலங்கையை நோக்கி கடல் மேல் பறந்தார். அவர் போகும் வழியில் மைனாகம் என்றொரு மலைக்குன்று நீருக்குள்ளே இருந்து எழும்பி வந்தது. அது அனுமனைச் சிறிது நேரம் இறங்கி வந்து தன் மேல் தங்கி இளைப்பாறிச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறது. இராமருடைய முன்னோரான சாகரா என்பவனுடைய மகன்கள் தோண்டிய பள்ளங்களிலிருந்து தோன்றியதாலேயே கடலுக்கு சாகரம் என்றும் பெயர் வந்தது. தன்னை உருவாக்கிய முன்னோர்களின் வழி வந்தவரின் தூதனாகச் சென்றுகொண்டிருக்கும் அனுமனுக்கு உதவி செய்யவேண்டும் என்று சாகரத்திற்கு நன்றியுணர்வு வந்தது. அதனால் சாகரம் வேண்டிக்கொண்டு மைனாகத்தை அவருக்கு உதவ மேலே அனுப்பியது. காலத்தில் பெற்ற உதவிக்குக் கைம்மாறு செய்வது நமது பண்டைய வழக்கங்களில் ஒன்றானதால், சாகரம் தன்னை அனுப்பி, தான் வேண்டுவதால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மைனாகம் அனுமனிடம் சொன்னது.
க்ருʼதே ச ப்ரதிகர்தவ்யமேஷ த⁴ர்ம: ஸனாதன: | ….. 5.1.114||
க்ருʼதே when help is rendered, உதவி பெற்றதற்கு
ப்ரதிகர்தவ்யம் the gesture should be returned, நன்றியுணர்வைக் காட்டல்
ஏஷ: this, இது
ஸனாதன: eternal, என்றும் உள்ள
த⁴ர்ம: duty/ law, நீதி.
உதவி பெற்றதற்கு நன்றியுணர்வைக் காட்டுவது நாம் கடைப்பிடிக்கும் நீதிகளுள் ஒன்று.
முதலில் ஒரு நல்ல மனிதனுக்கு என்று சொல்லப்பட்ட பதினாறு குணங்களுள் நன்றி உணர்வு ஒன்றாதலால், எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அவைகளை வால்மீகி நமக்கு நினைவுபடுத்துகிறார்.
இறுதியாக அனுமன் இலங்கையைச் சென்றடைந்தான். தன்னை எவரும் சந்தேகத்துடன் தொடரக்கூடாது என்று அவன் முன்னெச்சரிக்கையாக இரவுக் காலம் தொடங்குவதற்குக் காத்திருந்து பின்னரே, அவன் நகரத்திற்குள் நுழைந்தான். அப்படியும்கூட அவனை ஒரு பெண் காவலாளி பார்த்துவிட்டாள். அவனை அவள் யார் என்று கேட்க, எங்குமே காண்பதற்கு இல்லாத அழகிய மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், மரங்கள் அடர்ந்த சாலைகளும் இலங்கை நகரில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவைகளைப் பார்த்து ரசிக்க வந்திருக்கும் ஒரு அயலூர்வாசி என்று அனுமன் தன்னை விவரித்துக் கொண்டான். மேலும் தனக்கு எந்த வித கெட்ட எண்ணங்களும் கிடையாது என்றும் சொன்னான். ஆனால் அந்த அரக்கிக்கோ அவன் சொல்வதில் நம்பிக்கை வரவில்லை. மேலும் அவன் பேசும்போது அனுமனிடம் ஒரு பயமோ, தயக்கமோ தெரியாததால், எப்போதும் காவல்துறை கடைப்பிடிக்கும் வன்முறை வழிகளால்தான் அவன் வழிக்கு வருவான் என்று அவள் தீர்மானித்தாள். உண்மையை அப்போதுதான் கக்குவான் என்று அவள் அனுமனை ஓங்கி அறைந்தாள். அதனால் அனுமன் திடுக்கிட்டாலும், அவன் அவளுக்குத் திருப்பிக் கொடுத்த அறையால் அவள் நிலைகுலைந்து கீழேயே விழுந்துவிட்டாள். அவனுடைய பலத்தை உணர்ந்த அரக்கி எங்கே அவன் தன்னையே கொன்றுவிடுவானோ என்று பயந்து, தான் ஒரு பெண் என்றும், வலிமை மிக்கவர்கள் பெண்களிடம் மிகவும் கருணை காட்டுவார்கள் என்றும் சொல்லி தன்னை மேலும் துன்புறுத்தாது இருக்குமாறு கெஞ்சினாள்.
ஸமயே ஸௌம்ய திஷ்ட²ந்தி ஸத்த்வவந்தோ மஹாப³லா: | ….. 5.3.45||
ஸௌம்ய O pious, நல்லவரே!
ஸத்த்வவந்த: heroes of great strength, வலிமை மிக்கவர்கள்
மஹாப³லா: strong one, வீரர்கள்
ஸமயே on an agreement (word), ஒப்பந்தப்படி
திஷ்ட²ந்தி stay, இருப்பார்கள்.
நல்லவரே! வலிமை மிக்க வீரர்கள் (பெண்களைத் துன்புறுத்தாமல் முன்பே) ஒத்துக்கொண்டபடி இருப்பார்கள்.
பெண்களுக்கு என்று வரும்போது, எப்போதும் ஆண்களைவிட சற்றுக் கூடுதலாகவே மரியாதையும், இரக்கமும் காட்ட வேண்டும். அவர்களுக்குத் தண்டனை கொடுக்க நேரிட்டாலும், அதன் கடுமை குறைவாகவே இருக்க வேண்டும் என்பதுதான் பொது நியதி. ஒருவனது பிறப்பிலிருந்து இறப்பு வரை பெண்ணினம் காட்டும் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் மனித குலமே தழைத்து வளர்ந்திருக்க முடியாது என்று உணர்ந்து அவர்களுக்கு அன்புடன் செலுத்தப்படும் ஒரு நன்றியுணர்ச்சிக் காணிக்கைதான், ஆதியிலிருந்தே இந்த மாதிரியான வழக்கம் இருப்பதன் காரணம். “பொம்பளையாப் போயிட்டே, போ போ பொழைச்சுப்போ” என்ற சாதாரணப் பேச்சின் காரணமும் இதுதான். மற்றபடி பெண்கள் பலம் குறைந்தவர்கள் என்பதால் அல்ல; அவர்கள் உடல் அளவில் இல்லாவிட்டாலும் மனதளவில் மிகவும் வலிமை வாய்ந்தவர்களே.
(தொடரும்)
மனித குல புருஷோத்தமன் இராமனைப்பற்றிய இந்த தொடர் மிக அற்புதமாக வந்துகொண்டுள்ளது. சுவைபட தொகுத்து வழங்கும் திரு இராமன் அவர்களுக்கு நமது பணிவான வணக்கங்கள்.
இது வெளியிடும் அனைத்து செய்திகளும் உண்மையா? அதை ஏப்படி நம்பி ஏற்பது?