எழுமின் விழிமின் – 22

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

ஹிந்து சமயத்தின் வரம்புகள் [பிரபுத்த பாரதம்- ஏப்ரல் 1899]

பிரபுத்த பாரதத்தின் நிருபர் எழுதுகிறார்:

பாரதப் பெண்டிர் பண்டைய, நிகழ்கால, எதிர்கால வாழ்க்கை

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில், இமயமலையின் எழில் மிக்க ஒரு பள்ளத்தாக்கில்தான், எனது பத்திரிகை ஆசிரியரின் உத்தரவைக் கடைசியாக என்னால் நிறைவேற்ற முடிந்தது. நமது நாட்டுப் பெண்களின் நிலையைப் பற்றியும், எதிர்கால வாழ்க்கையைப் பற்றியும் சுவாமிஜி கொண்டிருந்த கருத்துக்களை அறிவதற்காக அவரை அணுகினேன்.

நான் எனது நோக்கத்தைக் குறிப்பிட்டதும் “நாம் சிறிது நேரம் உலாவி வரலாம்.” என்றார் சுவாமிஜி. உடனே நாங்கள் உலகத்தில் கண்ணைக் கவரக் கூடிய காட்சிகள் நிறைந்த பகுதியினூடே புறப்பட்டோம்.

ஒளி நிறைந்தது. ஆனால் நிழல் மூடிய பகுதிகள் வழியே சென்றோம். அமைதியான கிராமங்கள், துள்ளி விளையாடும் குழந்தைகள், பொன்னிரங் கொண்ட வயல்கள் இவற்றைக் கடந்து சென்றோம். ஓர் இடத்தில், நெட்டையான மரங்கள் நீல வானைத் துளைக்கப் பார்த்தன. வேறொரு இடத்தில் குடியானவப் பெண்களின் ஒரு கோஷ்டி அரிவாள்களை ஏந்திக் குனிந்து, அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். மயில்தோகை போன்ற சோளத் தட்டைகளை அறுத்துப் பனிக்காலத்துக்காகச் சேமித்து வைக்க எடுத்துப் போனார்கள். அதையும் தாண்டினோம். எங்கள் சாலை ஆப்பிள் தோட்டத்தின் வழியே சென்றது. அங்கே மரங்களடியில் செக்கச் செவேலென்று சிவந்த ஆப்பிள் பழக்குவியல்கள், ரகவாரியாக பிரிக்கப் படுவதற்காகக் குவிக்கப் பட்டிருந்தன. அதைக் கடந்து மீண்டும் திறந்த வெளியில் வந்தோம். வானவெளியில் வெண்மேகப் படலத்தின் மீது மிக்க அழகுடன் ஓங்கி நின்ற பனிப்படலங்களை நோக்கினோம்.

கடைசியில் என்னுடன் வந்தவர் மௌனத்தைக் கலைத்தார். “பெண்மை பற்றிய லட்சியத்தில், ஆரியர், சைமேந்திரியர் (ஹீப்ரு, ஆர்மீனியர், அரேபியர் போன்ற இனத்தவர்கள்) ஆகிய இரு சாராரிடயே எப்பொழுதும் நேர் எதிரிடையான கருத்து வேற்றுமை இருந்து வருகிறது. பெண்கள் இருப்பது பக்தி நெறிக்குப் பகையானது என்று சைமேந்திரிய இனத்தார் கருதுகிறார்கள். சமயத் தொடர்புள்ள எந்த ஒரு சடங்குச் செயலையும் பெண் செய்யக் கூடாது. உணவுக்காக ஒரு பறவையைக் கூட பெண் கொல்லக் கூடாது. ஆனால் ஆரியர் கருத்துப் படி மனைவியில்லாமல் ஒருவன் ஒரு மதச் சடங்கையும் செய்ய முடியாது.”

சற்றும் எதிர்பாராத விதத்தில் சுவாமிஜி கூறிய சொற்களைக் கேட்டுத் திடுக்கிட்டு, “ஆயின் சுவாமிஜி, ஹிந்து மதம் ஆரியர்களின் தத்துவமல்லவா?” என்று கேட்டேன்.

சுவாமிஜி அமைதியாகப் பதிலளித்தார். “நவீன கால ஹிந்து சமயம் பெரும்பாலும் பௌராணிக சமயமே; அதாவது புத்த சமயத்துக்குப் பின் தோன்றியதே. ஔபாசனம், வேத காரியம் இவற்றைச் செய்யும் ஒருவனது மனைவி அவனது பக்கத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், அவள் சாளக் கிராமங்களையோ, குல தெய்வ விக்ரகங்களையோ தொடலாகாது. ஏனெனில் சாளக்கிராம வழிபாடு நடைமுறையில் வந்தது பௌராணிக காலத்தின் பிற்பகுதியிலேதான் என்று தயானந்த சரஸ்வதி சுட்டிக் காட்டியுள்ளார்.

“ஆனால் நமது நாட்டு ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமமின்மை காணப் படுவதற்கு முக்கிய காரணம் புத்தசமயமே என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று நான் ஒரு கேள்வி கேட்டேன்.

“உயர்வு தாழ்வு நிலவு இடத்தில் உண்மையில் அதுவே காரணமாகும். ஆனால் திடீரென்று ஐரோப்பியர்கள் நம்மைக் குறை கூறுவது அதிகமாகி விட்டது. அதன் விளைவாக நம்மை அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள ஆரம்பித்து விட்டோம். இதனாலெல்லாம் நம் பெண்மணிகள் தாழ்ந்தவர்கள் என்ற ஆதாரமற்ற கருத்தை நாம் எளிதில் ஒப்புக் கொள்ளக் கூடாது. பல நூற்றாண்டுகளாகச் சந்தர்ப்பச் சூழ்நிலை காரணமாகப் பெண்ணினத்தைப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கு ஏற்பட்டு விட்டது. நமது பழக்க வழக்கங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையான பாடம் இதுதானே தவிர, பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று கருதக் கூடாது.

“அப்படியானால் நம்மிடையே பெண்கள் இன்றுள்ள நிலை பற்றி நீங்கள் முற்றிலும் திருப்தியடைந்திருக்கிறீர்களா?”

“ஒரு போதும் திருப்தியடையவில்லை. அவர்களுக்கு நாம் கல்வி கற்பிக்கலாம். அந்த அளவுக்குத் தான் அவர்களது வாழ்வில் தலையிட நமக்கு உரிமை உண்டு. பெண்கள் தமது பிரச்னையைத் தாமே தமக்கே உரிய முறையில் தீர்த்துக் கொள்ளத்தக்க நிலையில் வைக்கப் பட வேண்டும். இப்பணியை அவர்களுக்காக வேறு எவரும் செய்ய முடியாது. அல்லது செய்யக் கூடாது. உலகிலுள்ள எந்த நாட்டுப் பெண்டிருக்கும் ஈடு இணையாக நமது பாரதப் பெண்டிர் அதனைச் செய்து கொள்ள முடியும்.”

“புத்த மதத்தால் தீமை விளைந்தது என்கிறீர்களே, அதன் காரணம் என்ன?”

“புத்த மதம் க்ஷீணதசை அடைய ஆரம்பித்தது முதல் தான் தீமை விளைந்தது” என்றார் சுவாமிஜி. “ஒவ்வோர் இயக்கமும் தனக்கே உரிய ஒரு சிறப்புத் தன்மையினால் வெற்றி அடைகிறது. அது வீழ்ச்சி அடையும் போதே பெருமைக் குரிய அதே சிறப்புத் தன்மை அதனுடைய பலவீனத்துக்கும் முக்கியமான காரணமாக ஆகி விடுகிறது. புத்த பகவான் – மாந்தருள் மாணிக்கம், அசாதாரணமான ஒற்றுமை நிர்மாண சக்தி வாய்ந்தவர். இதன் மூலம் அவர் உலகமே தம்மைப் பின்பற்றும் படி செய்தார். ஆனால் அவரது சமயம் மடாலயத் துறவு வாழ்க்கை நிலையை அடிப்படையாகக் கொண்ட சமயமாகும். ஆகையால் இந்த சமயத்தில் பிக்ஷுவின் ஆடையைக் கூட மதித்துப் போற்றும் ஒரு தீய விளைவு ஏற்பட்டது. மடாலயங்களில் துறவியர் கூட்டம் கூட்டமாகக் கலந்து வாழும் முறையை முதன்முதலில் புத்தரே ஏற்படுத்தினார். ஆனால் அந்த மடங்களில் ஆண்களை விட பெண்களுக்குத் தாழ்ந்த நிலை தராமலிருக்க அவரால் முடியவில்லை. மடத்துத் தலைவிகள் எவ்வளவு உயர்ந்தவரானாலும் சில ஆண்தலைவர்களது அனுமதியின்றி எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஏற்பாடு தற்காலிகமாக புத்த சமயத்தின் ஒற்றுமையை உறுதிப் படுத்தியது என்றாலும் அதன் நீண்ட கால விளைவுகள் குறை கூறிக் கண்டிக்கத் தக்கதாகி விட்டன!”

“ஆனால் வேதங்களில் சந்நியாசம் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறதே!”

“ஒப்புக் கொள்ளப் பட்டுத்தான் இருக்கிறது. ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேற்றுமை கற்பிக்கப் படவில்லை. ஜனக மகாராஜாவின் சபையில் யாக்ஞவல்க்யர் எவ்வாறு கேள்வி கேட்கப் பட்டார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவரைக் கேள்வி கேட்டவரில் முதன்மையானவள் வாசக்னவி என்பவள். வாதாடுவதில் வல்லவள். பிரம்மவாதினி என்பது அக்காலத்தில் பிரபலமாக இருந்த பெயர் – ‘நிபுணனான வில்லாளியின் கையிலிருக்கிற பளபளப்பான இரு அம்புகளைப் போல எனது கேள்விகள் உள்ளன’ என்று அவள் கூறுகிறாள். அவளது பெண் பிறவியைப் பற்றிய பேச்சே எழவில்லை. பழைய காலத்தில் காட்டிலிருந்த குருகுலங்களில் சிறுவர் சிறுமியரிடையே நிலவிய சமத்துவத்தைப் போல பூரணமானது வேறு ஏதாவது உண்டா? சம்ஸ்க்ருத நாடகங்களைப் படியுங்கள். அதன் பிறகு டென்னிசன் எழுதிய “இளவரசி” என்ற நூல் நமக்கு என்ன கற்பிக்க முடியும் எனப் பாருங்கள்” என்றார் சுவாமிஜி.

“சுவாமிஜி நமது பண்டைப் பெருமைகளைப் புலப்படுத்த நீங்கள் பின்பற்றும் வழி ஆச்சரியகரமானது.” என்றேன்.

“ஒரு கால் உலகின் இரண்டு பகுதிகளையும் நான் கண்டதனால் அப்படி இருக்கலாம்.” என்று மெதுவாகக் கூறினார் சுவாமிஜி. “சீதையைத் தோற்றுவித்த இனம் – சீதையைக் கனவில் மட்டும் கண்டதாக வைத்துக் கொள்வோம். – உலகிலேயே ஈடிணையில்லாத முறையில் பெண்ணினத்திடம் பக்தி செலுத்துகின்றது. மேலைநாட்டுப் பெண்களுக்கு சட்டரீதியான பலவிதமான கட்டுதிட்டச் சுமைகள் உள்ளன. அப்படிப்பட்ட சட்டங்கள் நமக்கு முற்றிலும் தெரியாதவையாகும். உண்மையில் நம்மிடம் குற்றங்களும் குணங்களும் இருப்பது போல அவர்களிடமும் இருக்கின்றன. உலகிலுள்ள மக்களெல்லோரும் அன்பு, மென்மை, நேர்மை ஆகிய குணங்களை வெளிப்படுத்துவதற்காகப் பொதுவாக முயலுகிறார்கள் என்பதை ஒரு போதும் நாம் மறக்கக் கூடாது. இப்படி வெளிப்படுத்துவதற்கு சுலபமான கருவியாக தேசீய பழக்க வழக்கங்கள் அமைகின்றன. குடும்ப வாழ்க்கையில் நற்பண்புகளை நிலை நாட்டுகிற விஷயத்தில் பிறருடைய முறைகளைவிடப் பாரதீய முறைகள் பலவிதங்களில் மேம்பட்டவையாகும்.

“சுவாமிஜி! அப்படியானால் நமது பெண்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லையா?”

ஏன், எத்தனையோ உள்ளனவே! தீவிரமான பிரச்னைகள் உள்ளன. ஆனால் கல்வி என்ற மந்திரச் சொல்லால் தீர்க்க முடியாத பிரச்னையே இல்லை. உண்மையான கல்வியின் வடிவத்தை நமது மக்கள் இன்னும் கற்பனை செய்து அமைக்கவில்லை.”

“அதற்கு நீங்கள் கூறும் இலக்கணம் என்ன?”

“நான் எதற்கும் இலக்கணம் வகுப்பதில்லை” என்றார் சுவாமிஜி புன்முறுவலுடன் “இருப்பினும் அதனை ஒருவாறு வர்ணிக்கலாம். கல்வியென்பது ஆற்றலை வளர்ப்பதாகும். வெறும் சொற்களைக் குவித்து வைத்துக் கொள்வதல்ல. கல்வியென்றால் மனிதர்களைச் சரியான விதத்திலும், திறமையாகவும், சிந்திக்க, முடிவு கட்டப் பழக்குவதாகும். எனவே பாரதத்தின் நலனுக்காக நாம் அச்சமற்ற உயர்ந்த வீராங்கனைகளைத் தோற்றுவிப்போம். சங்கமித்திரை, லீலா, அகல்யா, மீராபாய் முதலியோர் விட்டுச் சென்ற உயர் பரம்பரையைப் பின்பற்றி வரக கூடிய பெண்மணிகளை உண்டாக்குவோம். தூய்மை உள்ளவர்களாக தன்னலம் கருதாத் தியாகிகளாக, இறைவன் திருவடியை வணங்குவதால் வரும் சக்தியைப் பெற்றவர்களாக விளங்கும் வீரர்களைப் பெற்றெடுக்கும் தாய்மார்களாக அவர்களை நாம் உருவாக்குவோம்.”

“சுவாமி! அப்படியாயின் கல்வியில் சமயத்தின் அம்சமும் கலந்திருக்க வேண்டும் என்பது உங்கள் கருத்தா?”

சுவாமிஜி கம்பீரமாய்ப் பதிலளித்தார், “சமயந்தான் கல்வியினுடைய ஜீவ சத்து என்று நான் கருதுகிறேன். சமயத்தைப் பற்றி நான் கொண்டிருக்கும் கருத்துக்களையோ அல்லது வேறொருவர் கருத்துக்களையோ கற்பிக்கச் சொல்லவில்லை. சமயத்தை ஆரம்பப் பாடமாக அமைத்துக் கொண்டு, மாணவியின் சொந்த இயல்பை ஒட்டிய ரீதியிலேயே, இயல்புக்கு விரோதமின்றி, அவளை ஆசிரியர் வளர்த்துச் செல்லவேண்டும்.

“சமய அடிப்படையில் பிரம்மசரியம் மிக உயர்ந்ததாகும். தாயாகவோ மனைவியாகவோ ஆகாமல் தட்டிக் கழிக்கிற பிரம்மசாரிணிகளுக்கு உயர்ந்த இடம் தருவதால் பெண்ணினத்துக்கு அது நேரடியான தீங்கு விளைவிக்காதா?”

“பெண்களுக்குப் பிரம்மசரியம் உயர்ந்தது என்று சமயம் கூறுகிற அதே வேளையில் ஆண்களுக்கும் அதையே விதிக்கிறது. இதை நினைவிற் கொள்ளவேண்டும். மேலும் உங்கள் கேள்வியே உங்கள் மனத்திலுள்ள குழப்பத்தைக் காட்டுகிறது. ஹிந்து சமயம் மனித ஆத்மாவுக்கு ஒரு கடமையை, ஒன்றே ஒன்றை விதிக்கிறது. அது நிலையா உலகத்தில் நிலையானதைத் தேடி அடைவதே ஆகும். இதனை அடைவதற்குக் குறிப்பாக ஒரே ஒரு வழியைக் காட்டுவதற்கு எவரும் துணிவதில்லை. திருமணம் அல்லது திருமணமின்மை, நல்லது அல்லது தீயது, படிப்பு அல்லது அறியாமை – இவற்றில் எவ்வழிச் சென்றாலும் சரி – அது லட்சிய நிலைக்கு மனிதனை அழைத்துப் போகவேண்டும். இதுவே நியாயமானது. இந்தக் கொள்கையில் தான் ஹிந்து சமயத்துக்கும் புத்த சமயத்துக்குமிடையே பெருத்த வேறுபாடு உள்ளது. வெளித் தோற்றங்களில் உள்ள நிலையாமையைக் காட்டுவதே புத்த சமயத்தின் சிறப்பான கொள்கையாகும். பொதுப்படையாகச் சொன்னால் புத்த மதத்தின் கருத்துப்படி ஒரே ஒரு வழி மூலமாகத்தான் அதனை அடைய முடியும்.

மகாபாரதத்தில் வருகிற இளம்யோகியின் கதை உங்களுடைய நினைவுக்கு வருகிறதா? அவனுக்குத் தனது மனோசக்தியைப் பற்றிக் கர்வமிருந்தது. அவன் கோபங்கொண்டு தனது தீவிரமான மனோவலிமையால் ஒரு காகத்தையும் நாரையையும் எரித்துவிட்டான். அந்த இளம் துறவி ஊருக்குள் சென்றபோது, நோய்வாய்ப்பட்ட தன் கணவனுக்குப் பணிவிடை செய்யும் ஒரு பத்தினியையும், பின்னர் தருமவியாதன் என்ற கசாப்புக் கடைக்காரனையும் கண்டு, அந்த இரண்டுபேரும் சாமானிய வழிகளான கற்புடைமை மூலமும், கடைமையைச் செய்வதன் மூலமும் ஆத்ம ஞானம் பெற்றார்கள் என்பதை உணர்ந்தான். இது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?”

“அப்படியாயின் சுவாமிஜி! நீங்கள் இந்நாட்டுப் பெண்களுக்கு வழங்கும் அறிவுரை யாது?”

“இந்த நாட்டுப் பெண்களுக்கு மட்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்? நான் ஆண்களுக்கு எதைக் கூறுவேனோ அதையே பெண்களுக்கும் கூறுவேன். பாரத நாட்டின் மீது நம்பிக்கை வையுங்கள். பாரதநாட்டின் கோட்பாடுகளின் மீது நம்பிக்கை வையுங்கள். வலிமை பெற்றிருங்கள். நம்பிக்கை கொள்ளுங்கள். வெட்கப் படாதிருங்கள். பிறரிடமிருந்து வாங்கிக் கொள்வதற்கு ஒரு சிறிது உண்டென்றாலும், பிறருக்குக் கொடுப்பதற்கு ஹிந்து மக்களிடம் உலகில் எந்த மக்களினத்தைக் காட்டிலும் அளவிட முடியாத விஷயங்கள் உள்ளன என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

(தொடரும்…)

அடுத்த பகுதி >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *