வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்

இந்த ஆண்டு சுவாமி விவேகானந்தரின் 150 வதுபிறந்த நாள்.

அமெரிக்காவின் சிக்காகோ நகரிலுள்ள சிக்காகோ ஆர்ட் இன்ஸ்டியூட் உலகின் மிக பெரிய கலைக்கூடங்களில் ஒன்று. 250 ஆண்டுபாரம்பரியமிக்க இதில் பல அரிய ஓவியங்கள் உள்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் காட்சிபடுத்த பட்டிருக்கும் ஒரு அருங்காட்சியகம். வருடம் முழுவதும் ஓவிய காட்சிகள் நடைபெறும் இதன் ஆர்ட் காலரியில் ஒரு கண்காட்சி நடத்துவது என்பது பல ஓவியர்களின் கனவு.
இவற்றையெல்லாம்விட இங்கே நாம் பெருமைப்படவேண்டிய ஒரு விஷயமும் இருக்கிறது. 1893ல் விவேகானந்தர் “அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே” என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த சொற்பொழிவை நிகழ்த்திய உலக மதங்களின் பாராளுமன்றம் நடைபெற்றது இந்த இடத்தில் தான்.

விவேகானந்தர் பேசிய இடத்தில் இப்போது என்ன இருக்கிறது என கேட்ட நமக்கு ”அப்போது இந்த இடத்தில் ஒரு சிறிய கட்டிடமும் பெரிய மைதானமும் இருந்திருக்கிறது.பின் நாளில் கட்டிடம் விவாக்கி புதுப்பிக்க பட்டபோது மிக கவனமாக அந்த இடத்தை சின்ன ஆடிட்டோரியமாக உருவாக்கியிருக்கிறார்கள்” என்று சொல்லி கட்டிடத்தின் அன்றைய வரைபடம், இன்றைய வரைபடம் ஒப்பிடும் குறிப்புக்கள் எல்லாம் தந்து, நமக்காக அதை திறந்து காட்டவும் ஏற்பாடு செய்கிறார் திருமதி மேரி ஸ்காட். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியாரான இவர் இங்கு வருபவர்களுக்கு உதவும் பணியை செய்யும் ஒரு தன்னார்வலர். வயது 72. ஹாலின் நுழைவாயிலின் அருகில் விவேகானந்தர் வருகையின், சொற்பொழிவின் நினைவு பதிப்பாக ஒரு பட்டையம் பதித்திருக்கிறார்கள்.

இரண்டு தளங்களில் ஓவியங்களும்,கலைச் செல்வங்களும் குவிந்து கிடக்கும் இந்த கலைக்கூடத்தின் நடுவே மாடிக்கு செல்ல வெண் பளிங்கினால் ஆன பெரிய படிகள். இதை “கிராண்ட் ஸ்டேர்ஸ்” என அழைக்கிறார்கள்.

ஜிதீஷ் கல்லட் (Jitish Kallat) ஒரு வித்தியாசமான ஓவியர். ஓவியம் எனபது உருவங்களின் வடிவாக மட்டுமிருக்கவேண்டியதில்லை என்ற கருத்தை கொண்டவர்.இவர் ஓவியங்களைத்தவிர புகழ்பெற்ற வாசகங்களையே சம்மந்தபட்ட இடங்களில் பிரம்மாண்ட வண்ண ஒவியமாக்கி நிறுத்துவார். ஜவர்ஹாலால் நேருவின் எழுச்சி மிக்க முதல் சுதந்திரதின உரை, முதல் இந்திய பராளுமன்ற உரை போன்றவைகளை பிரமாண்ட எழுத்து ஒவியங்காளாக்கி புகழ் பெற்றவர்.

கடந்த ஆண்டு ஜித்திஷ் இங்கு நடத்திய ஒரு மாறுதலான ஓவிய கண்காட்சி பற்றி நாடு முழுவதும் பேசபட்டது. விவேகானந்தர் இந்த இடத்தில் ஆற்றிய உரையின் வார்த்தைகளை வான வில்லின் வண்ணங்களில் இந்த மாடிப்படிகளில் வரிசையாக பதித்து ஒரு ஓவியமாக்கியிருந்தார். முதல் படியில் துவங்கும் முதல் வரியின் வார்த்தைகளை படித்து கொண்டே ஏறும் நாம் இரண்டாம் தளம் அடையும் போது முழு உரையையும் படித்து முடிக்கிறோம்.


(இரவு பார்வையாளார்கள் நேரம் முடியும் வரை காத்திருந்து NIKON D3100 ல்night effectல் எடுத்த படம்)

”பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!” என்ற இறுதிப்பகுதி வாசகங்களையும் அந்த சொற்பொழிவு நிகழந்த நாள் செப்டம்பர் 11 என்பதையும் படித்த போது 118 ஆண்டுகளுக்குபின்னர் அதே செப்டம்பர் 11ம் நாளில் அமெரிக்க மண்ணில் நிகழ்ந்த வன்முறை ஒரு துரதிர்ஷடமான விசித்திரம்தான் என தோன்றியது.

உலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…

இந்த உரையை விவேகானந்தரின் குரலிலேயே கேட்கலாம் என சில இணையதளங்கள் அறிவிக்கின்றன. ஆனால் அதன் நம்பகத்தன்மையை கடந்த 10 ஆண்டுகளாக பல நிலைகளில் ஆராய்ந்து கல்கதாவிலுள்ள ராமகிருஷ்ண மடம் சமீபத்தில் அறிவித்திருப்பது அது விவேகானந்தர் குரல் இல்லை என்பதைத் தான். இந்த முடிவிற்கு வர முக்கியமான காரணம் 1893ல் டேப்பில் பதிவு செய்யும் வசதிகள் இல்லை என்பது தான்.
அவரின் உரையை, அவர் பேசிய இடத்தை, பாதுகாத்து, நினைவுபதிவு பட்டையம் இட்டு, உரை வாசகங்களை புதுமையான கண்காட்சியாக்க அனுமதித்து பல வகையில் இந்த கலைக்கூடம் விவேகானந்தரை சிறப்பாகத்தான் கெளரவிக்கிறது என்ற எண்ணத்துடன் வெளியே வந்து சாலையை கடக்க நிற்கும் நம் எண்ணத்தை இன்னும் வலுப்படுத்துவது கண்ணில் படும் இவர்கள் நிறுவியிருக்கும் அவர் பெயரைச்சொல்லும் எதிர் தெருவின் பெயர் பலகை!

படங்கள்: வி.ரமணன்

4 Replies to “வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்”

  1. நல்ல தான் இருக்கு! ஆனா சுவாமி சொன்னத, படிகட்டுல எழுதி வெச்சு அத மிதிசிகிட்டு நடக்கறது நல்லது தான? வெள்ளக்காரன் இதுல்ல எதுவும் குசும்பு பண்ணலையா? ஏன் கேக்குறேன்னா, வெள்ளக்காரன் நெறைய நேரம் நம்மள கவுத்து விட்டுடுவானுவோ, அதான் சூட பால்ல வாய வெச்சு வாய வெச்சு இப்போ மோர பாத்தா கூட பயமா இருக்கு!

  2. சிறு குறுங்கட்டுரை ஆனாலும் அரும் பெரும் தவத்தின் வீச்சையும், அதனைப் போற்றிப் பாதுகாக்கும் பண்பையும் எடுத்துக் காட்டும் அருமையை நாம் உணர்ந்து, அதுபோல நம்மைச் சுற்றியுள்ள இடங்களின் புனிதத்தைக் காக்கும் பணியினில் ஈடுபட நம்மை அழைத்துச் செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *