உலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…

செப்டம்பர் 11 நாகரீக உலகின் மிக உன்னதமான நாள், 2001ஆம் ஆண்டு வரை.

swami_vivekananda_chicago_address1893 செப்டம்பர் 11 ஆம் தேதி, உலக மதங்களின் பாராளுமன்றம் என்ற அமைப்பின் முதல் மாநாடு சிகாகோ மாநகரில் கூடியது. கடல்கடந்து பாரத சன்னியாசிகள் செல்வதில்லை என்ற மரபை சுவாமி விவேகானந்தர் உடைத்து, இந்த மாநாட்டில் பங்கேற்று, பாரதத்தின் தொன்மையான மரபான சகோதரத்துவ தத்துவத்தை உலகுக்கும் ஏனைய மதங்களுக்கும் அறிமுகப் படுத்தினார். சுவாமிகளின் உரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று பலரும் கூறுவது எனக்கு உடன்பாடல்ல. ஏனெனில், இந்த மாநாடே சுவாமிகளின் உரையால்தான் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இடம் பிடித்தது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு மேலை நாகரீகமும், மேலை மதங்களும், சகோதரத்துவத் தத்துவத்தை (Universal Brotherhood) முதல் முதலாக உணர்ந்தன. சுவாமிகளின் உரை இல்லாவிட்டால், இந்த மாநாட்டைப் பற்றியே மானுட சமுதாயம் இன்னொரு முறை பேசியிருக்காது. 1893 க்குப் பின்னர் 1993 இல்தான் இந்த மாநாடு மீண்டும் கூட்டப்பட்டது என்பது, சுவாமிகளின் ஆளுகை ஒரு நூற்றாண்டுக்கு மறுபேச்சுக்கே இடமில்லாமல் செய்துவிட்டதை உறுதிப்படுத்துகிறது . மாநாடு மீண்டும் கூட்டப்பட்டது கூட 1893 நிகழ்வுகளை நினைவு கூறவே ஆகும்.

மாநாட்டின் தலைவரான பாரோஸ் அவர்கள் “ஹிந்து மதத்தை மதங்களின் அன்னை” என்று வர்ணித்ததோடு, “காவி உடுத்திய சுவாமிகள் இந்த அரங்கத்தினர் மீது தனக்கு உள்ள மகத்தான செல்வாக்கை நிறுவினார்” என்று புகழ்ந்தார். (ஆனால் இங்கோ, நல்லோர் பலரும் புகழ்ந்தேத்தும் காவியை இன்றைய இந்திய அரசியலார் வன்முறையோடு தொடர்பிட்டுப் பேசித் தமது சிறுமதியை நிறுவுகின்றார்).

சுவாமிகள் இந்த உரையில் “எனது அமெரிக்க சகோதர சகோதரிகளே” என்றழைத்ததும், அரங்கத்தில் உள்ளோர் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட நேரம் கைதட்டி ஆரவாரத்துடன் சகோதரத்துவத்தை வரவேற்ற நிகழ்வு மானுட சரித்திரத்தின் பொற்காலம்.

சுவாமிகள் இந்த உரையில் கூறினார்:

universal_brotherhood_vivekananda“நான் இந்த உலகுக்கு சகிப்புத் தன்மையைக் கற்றுத்தந்த மதத்தினன் என்பதில் பெருமிதம் அடைகிறேன். நாங்கள் பிறமதங்கள் குறித்து சகிப்புத் தன்மை கொண்டிருப்பதோடு, எல்லா மதங்களையும் சத்தியமானவை என்றே ஏற்கிறோம். இனவாதத்தாலும், மதவாதத்தாலும் அடிபட்டு ஆதரவற்று தஞ்சம் புகுந்த எல்லா மதத்தினரையும் எல்லா நாட்டினரையும் அடைக்கலம் தந்து ஆதரித்த தேசத்தவன் என்பதில் பெருமிதம் அடைகிறேன். ரோமானிய சர்வாதிகாரத்தால் இஸ்ரேலியக் கோவில்கள் நொறுக்கப்பட, கொடுங்கோன்மையிலிருந்து தப்பி அடைக்கலம் நாடிவந்த இஸ்ரவேலர்களுக்கு தென்னிந்தியாதான் அடைக்கலம் தந்தது என்பதில் பெருமிதம் அடைகிறேன். தொன்மையான சோராஸ்ட்ரிய (பார்சி) மதத்தினருக்குப் பன்னெடுங்காலம் முன்னரே அடைக்கலம் தந்து இன்னமும் பாதுகாத்து வருகின்ற மதத்தினன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்”

“பிரிவினைவாதம், குறுகிய மனப்பாங்கு இவற்றின் கோரப் பிறப்பான மத அடிப்படைவாத வெறி இவையெல்லாம் இந்த பூமியை பன்னெடுங்காலமாக ஆக்கிரமித்திருக்கின்றன. இவற்றால் விளைந்த வன்முறை இந்த நிலத்தை மனித ரத்தத்தால் குளிப்பாட்டி யிருக்கிறது; பல்வேறு கலாச்சாரங்களை அழித்திருக்கிறது; பல தேசங்களை விளிம்பு நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இவையில்லாமல் இருந்திருந்தால் மானுட சமுதாயம் இப்போது மிகவும் முன்னேறியிருக்கும்.”

எத்தனை தீர்க்க தரிசனம்! 117 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் சுவாமிகளின் வாக்கு அப்படியே பொருந்துகின்றதே. மானுட சமுதாயம் அவர் அன்றே அடித்த மணிக்கு இன்னமும் விழிப்படையவில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது?

இன்னொரு நிகழ்வுக்கு வருவோம்.

gandhi_in_south_africa1906 செப்டம்பர் 11 ஆம் தேதி, மஹாத்மா காந்திஜி தென்னாப்பிரிக்காவில் முதல் முதலாக அறவழியிலான அஹிம்சா நெறியிலான போராட்டத்தைத் துவக்கி அதற்கு சத்யாக்கிரகம் எனப் பெயரிட்டார். “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று மகாகவி பாரதியார் பாட வைத்த நிகழ்வு அது. தென்னாப்பிரிக்காவில் ட்ரான்ஸ்வால் நகரில் இருந்த அனைத்து இந்தியர்களையும் கூட்டி பாரத சித்தாந்தத்தின் அடிப்படையில் காந்திஜி எடுத்த முடிவு மானுட சமுதாயத்துக்கு மகத்தானதொரு புதிய வகைப் போராட்ட தத்துவத்தை அளித்தது. வன்முறையில்லாத போராட்டம் என்பதை நினைத்தும் பார்க்காத கால கட்டத்தில், அஹிம்சா நெறியை காந்திஜி அறிமுகப்படுத்தினார். கூடியிருந்த இந்திய வம்சாவளியினரிடம் அவரே ஹிந்தியிலும் குஜராத்தியிலும் எடுத்தியம்பவும், ஏனைய சிலரால் தமிழிலும் தெலுங்கிலும் முழுமையாக எடுத்தியம்பவும் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் சத்தியாக்கிரகப் போராட்டம் குறித்து, கூடியிருந்த மக்கள் அனைவரின் ஒருமித்த கருத்தை உருவாக்க காந்திஜி எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்.

வந்திருந்தவர்களில் ஷேக் ஹாஜி ஹபீப் என்ற இஸ்லாமிய சகோதரரின் ஆலோசனையின் பேரில் காந்திஜி அங்கிருந்த அனைவரிடமும் இறைவனின் பெயரால் உறுதிமொழி எடுக்கவைத்தார். கூட்டத்தீர்மானம் என்பது வெறுமே “கூட்டத்தில் கூடி நின்று கூடிப் பிதற்றிவிட்டு நாட்டத்தில் கொள்ளாரடி” என்று மகாகவி எள்ளி நகையாடியது போல அமையக்கூடாது என்பதில் காந்திஜி அக்கறை காட்டினார். கூட்டத் தீர்மானம் ஒரு சங்கல்பமாக அமைந்தால் அதனை மீறும் எவரும் வினைப் பயன்களை அனுபவிக்க வேண்டி வரும் என்பதை கூட்டத்தினரிடம் தெளிவாக எடுத்துரைத்தார். (தற்போது வாக்கு வாங்க அரசியலார் கையூட்டுக் கொடுத்து, தமக்கு வாக்களிக்கக் கற்பூரம் ஏற்றிச் சத்தியம் வாங்குவதை நினைத்தால் “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்தால்” என்றே கதறத் தோன்றுகிறது. காந்திஜியின் அறவழி எப்படியெல்லாம் சிதைக்கப் படுகிறது?)

“நாம் அனைவரும் ஒரே இறைவனைத்தான் வணங்குகிறோம். ஹிந்து என்றாலும், முஸ்லிம் என்றாலும். இறைவனின் பெயரால் உறுதிமொழி எடுப்பதை சாதாரணமாக எண்ணக்கூடாது. உறுதி தவறினால் கடும் பாவம் வந்து சேரும்” என்றார்.

“உறுதிமொழியையும், சங்கல்பங்களையும் அடிக்கடி எடுக்ககூடாது என்றும், அபூர்வமாகவே எடுக்க வேண்டும் என்றும் எனக்குத் தெரியும். அடிக்கடி உறுதி எடுப்பவன் வழுவுவது நிச்சயம். ஆனால், தற்போது தென்னாப்பிரிக்க இந்திய சமூகத்துக்கு நிலவும் நெருக்கடியான சூழல் காரணமாக அப்படிப்பட்ட உறுதிமொழியையும் சங்கல்பத்தையும் எடுத்தே ஆகவேண்டும். அதிரடியான முடிவுகளை எடுக்கும்போது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் இருத்தலே விவேகம் ஆகும். எச்சரிக்கைக்கும், நிதானத்துக்கும் உள்ள எல்லையை நாம் கடந்துவிட்டோம்.” என்றார்.

the_matchless_weapon_satyagraha_gandhi“நாம் சிறை செல்ல நேரிடலாம். சிறையில் சிறுமைப்படுத்தப் படலாம். பட்டினி கிடக்க வேண்டி வரலாம். கடும் குளிருக்கும், வெயிலுக்கும் ஆளாகலாம். கடும் உழைப்பைத் தண்டனையாகப் பெறலாம். காவலர்களால் அடிக்கப் படலாம். நம் சொத்துக்கள் முடக்கப்படலாம். கடும் வறுமைக்குத் தள்ளப்படலாம். நாடு கடத்தப் படலாம். சிலர் நோய் வாய்ப்பட்டு இறக்கவும் கூடும். எல்லா சிரமங்களையும் அனுபவித்தாலும், வெறும் ஐந்து பேர் மன உறுதியுடன் இறுதி வ்ரை போராடினால் வெற்றி நிச்சயம். நான் என் மட்டில் கூறிக்கொள்வது என்னவென்றால் நான் உறுதிமொழிப்படி இறுதி வரை போராடுவேன். உங்களில் எவருக்கேனும் அப்படி இருக்கமுடியாதென்று தோன்றினால் உறுதிமொழி எடுக்காதீர்கள்” என்றார். கூடியிருந்த அத்தனை பேரும் இறைவனின் பெயரால் உறுதி பூண்டனர்.

பின்னர் போராட்டத்துக்கு ‘அசையா எதிர்ப்பு’ என்ற பொருள்பட Passive Resistance என்று பெயர் சூட்ட எழுந்த கருத்தை காந்திஜி ஏற்கவில்லை. ஆங்கிலப் பெயரில் அவருக்கு விருப்பமில்லை. மகன்லால் காந்தி என்பவர் கொடுத்த பெயர் “சதாக்ரஹா” – நற்செயலுக்கான உறுதி – என்ற பொருள்படவே, அது காந்திஜியைக் கவர்ந்தது. ஆனாலும் காந்திஜி இதையே சிறிது மாற்றி, உண்மையின், அன்பின் அடிப்படையிலான சக்தி அல்லது இயக்கம் என்ற பொருள்பட “சத்தியாக்கிரஹா” என்ற பெயரை இட்டார். இந்தப் போராட்டத்தின் பின்னர் காந்திஜி இந்தியாவுக்கு நாடு திரும்பியதும் அதன் பின்னர் சத்தியாக்கிரகப் போராட்டம் இந்திய சுதந்திரப் போராட்டமாகப் பரிணாம வளர்ச்சி கண்டதும் சரித்திரங்கள்.

அந்தோ, இன்றைய நவநாகரீக சமுதாயம் செய்தது என்ன? சமத்துவம், மத நல்லிணக்கம், மதச் சார்பின்மை, மத சுதந்திரம் என்றெல்லாம் முழக்கமிட்டு வரும் வல்லரசுகள், பின்னணியில் தந்திரமாக வளராத அல்லது வளரும் நாடுகளின் ஆட்சி பீடங்களில் குழப்பம் விளைப்பதும், ஆட்சிக் கவிழ்ப்பு செய்வதும், போலிக் காரணங்களைக் காட்டி போர் நிகழ்த்துவதும், உள் நாட்டுப் போருக்குத் தூண்டி விடுவதுமாக இருக்கின்றன. இது போதாதென்று ஆபிரஹாமிய மதங்களின் பல்வேறு பிரிவுகள் பிறமதத்தினரை தமது மதத்துக்கு மாற்றும் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு வேறு. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்துக்கும், இஸ்லாத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கும், குறிப்பிடத்தக்க அளவில் மதமாற்றம் நடந்திருப்பதாக பரஸ்பரம் இரு மதத்தினரும் கூறிக்கொள்கிறார்கள்.

அப்படியே இந்த வீடியோவையும் பார்த்து விடுங்கள்.

உண்மை எது பொய் எது என்று புரியவில்லை, ஆனாலும் இத்தகைய செய்திகள் இரு மதத்தினருக்கும் இடையே உள்ள சூடான பகைமையை உறுதி செய்கின்றன. இவற்றின் எதிர் விளைவாகவும், மத ரீதியான தூண்டுதல்கள் காரணமாகவும், ஆங்காங்கே குண்டு வெடிப்பு, விமானக் கடத்தல், துப்பாக்கி சூடு, ஆள் கடத்தல், தற்கொலைப்படைத் தாக்குதல், கண்ணிவெடி என்று பலவிதமான வன்முறைச்செயல்கள். தேசங்களுக்கைடையே நேரிடும் போரில் கூட படை வீரர்கள், படைக்கலங்கள், கப்பல்கள், விமானங்கள், கப்பற்படைத்தளம், ஆயுதக் கிடங்கு, விமானப் படைத்தளம் என்று போருடன் தொடர்புடைய கட்டமைப்புகளின் மீது தான் தாக்குதல் நடைபெறும். ஆனால் தற்போது தீவிரவாதத்தின் எல்லா இலக்குகளும் மனித உயிர்களே. சில நேரம் அரசியல் தலைவர்கள், பெரும்பாலும் சாதாரண அப்பாவி குடிமக்களே பலியாகின்றனர்.

9-11-burningஇவற்றின் உச்சகட்டமாக 11 செப்டம்பர் 2001 அன்று நியூ யார்க் நகரில் கீழ் மன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களின் மீது இரு விமானங்களைக் கடத்தி வந்து மோதி பலத்த உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் விளைத்தனர். 2977 பேர் உயிரிழந்ததாக அதிகாரப் பூர்வத் தகவல்கள் கூறுகின்றன.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியால், இரட்டை கோபுரத் தாக்குதலை நேரடி ஒளிபரப்பாகவே உலகம் முழுவதும் பொதுமக்கள் கண்டு அதிர்ந்தனர். இதை ஏவிவிட்டவர்கள நிச்சயமாக கண்டு ரசித்திருப்பார்கள்தான். இதைச் செய்தவர்கள் அல் கொய்தாதான் என்பது நிரூபணமாகிவிட்டது. நல்ல வேளையாக அமெரிக்காவில் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், நமது மாண்புமிகு அரசியல்வாதிகள் கொடுக்கும் அறிக்கைகளை அமெரிக்கப் பத்திரிகைகள் வெளியிடுவதற்கு சரியான வாய்ப்பு இல்லாததாலும், காவிக்கு “இரட்டை கோபுரத் தீவிரவாத விருது” கிடைக்காமல் போனது. லாலூ பிரசாத் யாதவ் போன்றவர்கள் அமெரிக்காவின் விமானத்துறை அமைச்சராக இல்லாதது அல் கொய்தாவின் துரதிருஷ்டமே. அப்படி அவர் இருந்திருந்தால் தனது துறை ரீதியான ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்து அவசர அவசரமாக ஹிந்துத் தீவிரவாதிகளே காரணம் என்று ஒரு அறிக்கையை அமெரிக்கப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பார். அல்கொய்தாவும் உண்மைக் குற்றவாளிகளும் தப்பித்திருப்பர். பின் லேடன் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதலாக ஆண்டாண்டு தோறும் அமெரிக்க மக்கள் நியூ யார்க் நகர நிர்வாகத்தின் முன்னெடுப்போடு, இந்த தினத்தை ஒரு துக்க தினமாகக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்களுடைய துயரங்களைப் புரிந்துகொள்ளும், பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், சில விதமான நிகழ்வுகளை ஆண்டாண்டு தோறும் துக்க தினமாக நினைவு கொள்வது விவேகம் அல்ல என்பதை எடுத்துச் சொல்லியே ஆக வேண்டும். இப்படிச் செய்தல் ஒரு மதப்பிரிவினருக்கு மற்ற பிரிவினர் மீது மென்மேலும் வெறுப்பை வளர்க்கவே உதவும். இது மக்களிடையே ஒற்றுமைக்கு ஊறு விளைக்கும் செயலே. எதையுமே எதிர்வினையாகச்(negative) செய்யாமல் நேர்வினையாகச் (positive) செய்யவே பழகவேண்டும் என்று ஆங்காங்கே மேடை போட்டு முழங்கும் மேலாண்மை வல்லுனர்கள் நிரம்பிய அமெரிக்காவிலேயே இந்த நிலை என்பது வேதனை தருகிறது. போதாதென்று முஸ்லிம்களும் அதன் அருகாமையிலேயே ஒரு மசூதியைக் கட்டுவோம் என்று மல்லுக் கட்டினால், அமைதியின் கதி? அந்தோ பரிதாபம்தான்.

செப்டம்பர் 11 ஆம் தேதியை உலக சகோதரத்துவ தினமாக (Inteernational Day of Universal Brotherhood) ஐக்கிய நாடுகள் அறிவிக்க வேண்டும் அல்லது அஹிம்சா தினமாக ( International Day of Non-violence) அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் 2005 ஆம் ஆண்டு ஐ.நா. நிறுவனத்துக்கு அனுப்பினேன்.

மேலை நாடுகளின் ஆதிக்கப் பிடியில் இருக்கும் ஐ.நா இதைச் செய்யுமா என்ற ஐயத்தை எனது நண்பர்கள் எழுப்பினர். 2006 செப்டம்பரில், ஐ.நா. இந்தப் பிரச்சினையில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து விவாதித்ததே தவிர, நேர்வினையாக சகோதரத்துவத்தை வலியுறுத்தி நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இன்றுவரையிலும் ஐ.நாவும் கூட இவ்விஷயத்தில் நேர்மறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்குகிறது என்றே தோன்றுகிறது.

நமது கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் 2008 ஆம் ஆண்டு முதல்  இந்த நாளை உலக சகோதரத்துவ தினமாக அனுசரிக்கிறது.

நோபல் பரிசு பெற்றவரான ஷிரின் எபாடி ஜனவரி 2004 இல் வைத்த கோரிக்கையையும், சோனியா காந்தியின், டெஸ்மொண்ட் டுடுவின் கோரிக்கையையும் கருத்தில் கொண்ட ஐ.நா. சபை, 2007 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியிட்ட தீர்மானத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ஆம் தேதியை உலக அஹிம்சா தினமாக (International Day of Non-violence) ஏற்று தீர்மானம் நிறைவேற்றியது. அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை உலக அஹிம்சா தினமாக அனுசரிப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.

9-11-destruction

எனவே இப்போது 11 செப்டம்பரை சுவாமி விவேகானந்தரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிகாகோ உரையின் நினைவாக உலக சகோதரத்துவ தினமாக (International Day of Universal Brotherhood) அனுசரிப்பதே உலக அமைதிக்கு ஐ.நா. எடுக்கும் முக்கிய அடியாக ( step forward) அமையும். ஒரு குறிப்பிட்ட தினத்தை ஒரு தீய நிகழ்வுக்கு நினைவு கூறுவது மென்மேலும் விரோதத்தை வளர்க்கவே பயன்படும். அதைவிடுத்து நல்ல நிகழ்வான சுவாமிகளின் சிகாகோ உரையை நினைவு கூறுவது புண்பட்ட நெஞ்சங்களுக்கு ஆறுதலாகவும் அதே நேரம் தீய பாதையில் செல்பவர்களில் சிலரையாவது சிந்திக்கவும் வைக்கும்.

ஐ.நா நேற்று தனது உறுப்பு நாடுகளுக்கு விட்டிருக்கும் அறைகூவல்: “தீவிரவாதத்தை எதிர்கொள்ள உலகளாவிய ஒருங்கிணைவும் கூட்டு முயற்சியும் நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளும் தேவை.” வெறும் அறைகூவல் போதுமா? நேர்மறை நடவடிக்கை அல்லவோ உதவும்? உறுப்பு நாடுகளின் அரசு அமைப்புகளே வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டாமா? ஐ.நாவில் இருப்பவர்கள் சிந்திப்பார்களா?

சுவாமிகள் தனது சிகாகோ உரையில் இறுதியில் சொன்னார்:

“இன்று காலை இந்த மாநாட்டைச் சிறப்பிக்கும் வண்ணம் இங்கே அடிக்கப்பட்ட மணி கத்தியாலோ, பேனா முனையாலோ செய்யப்படும் எல்லாவிதமான மத வெறிக்கும், இன அடக்குமுறைக்கும், அத்தகு சூழலுக்கு இட்டுச்செல்லும் வண்ணம் மனிதர்களிடையே நிலவும் எல்லாவிதமான விரும்பத்தகாத ஈவிரக்கமற்ற சிந்தனைகளுக்கும் அடிக்கப்பட்ட சாவு மணியாக அமையும் என்று நம்புகிறேன்.”

ஐ.நா. இந்த நாளை உலக சகோதரத்துவ தினமாக அறிவித்து, மதவெறி, தீவிரவாதம், இனவாதம், ஈவிரக்கமற்ற வன்முறை ஆகியவற்றுக்குச் சாவு மணி அடிக்க வேண்டும்.

11 Replies to “உலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…”

  1. அன்புள்ள உமாசங்கர்,

    உலக அமைதியையும், சமாதானத்தையும் விழையும் ஒரு மனிதநேய இந்துவின் குரலாக உங்கள் எண்ணங்கள் இருக்கின்றன.

    ’லோகா: சமஸ்தா: சுகினோ பவந்து’, ’வையகமும் துயர் தீர்கவே’ என்று உலகம் முழுவதும் அமைதியும், இன்பமும் வேண்டிய இந்து மகரிஷிகளின் திருவாக்குகள் உலகில் நிலவும் பகைமையை, வெறுப்பை ஒழித்து அன்பையும், அமைதியையும் வளர்க்கட்டும்!

    ஐ.நா சொல்வது இருக்கட்டும்.. ஒரு முன்னுதாரணமாக, இந்திய அரசு செம்டம்பர் 11ம் நாளை உலக சகோதரத்துவ தினமாக அறிவிக்க வேண்டும்.

  2. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் சுவாமி விவேகானதரின் கருத்துக்களையும், மகாத்மா காந்தியின் கருத்துக்களையும் கொண்டு செல்வது மனித சமுதாயத்துக்கு நாம் செய்யக் கூடிய நன்மை ஆகும். எல்லா மனிதர்களைடமும் கொண்டு போய் சேர்க்க முடியாவிட்டாலும் எத்தனை பேரிடம் சேர்க்க முடியுமோ அத்தனை பேரிடம் சேர்க்க வேண்டும்.

    குறுகிய எண்ணங்களை உடைத்து அன்பு வெள்ளத்தை, சமரசத்தை, சமத்துவத்தை, நல்லிணக்கத்தை மக்களின் மனதிலே உருவாக்கும் படியாக உள்ளன அவர்களின் கருத்துக்களில் உள்ள உண்மையும், அவர்களின் சுயநலமற்ற செயல் பாடுகளும்.

    திரு, உமா சங்கரின் கட்டுரை சிறப்பாக உள்ளது.

    செபடம்பர் 11 ஆம் தேதியை உலக சகோதரத்துவ தினமாக அறிவிக்க வேண்டியது மிகவும் அவசியமானது. காலத்தின் கட்டாயம். திரு. ஜடாயு சொன்னது போல முதல் கட்டமாக இந்தியா செபடம்பர் 11 ஆம் தேதியை உலக சகோதரத்துவ தினமாக அறிவிக்க வேண்டும்.

    let me happily repeat,

    “இன்று காலை இந்த மாநாட்டைச் சிறப்பிக்கும் வண்ணம் இங்கே அடிக்கப்பட்ட மணி கத்தியாலோ, பேனா முனையாலோ செய்யப்படும் எல்லாவிதமான மத வெறிக்கும், இன அடக்குமுறைக்கும், அத்தகு சூழலுக்கு இட்டுச்செல்லும் வண்ணம் மனிதர்களிடையே நிலவும் எல்லாவிதமான விரும்பத்தகாத ஈவிரக்கமற்ற சிந்தனைகளுக்கும் அடிக்கப்பட்ட சாவு மணியாக அமையும் என்று நம்புகிறேன்.”

  3. உங்கள் கருத்தை நான் வழிமொழிகின்றேன். இந்துவின் இந்தநல்ல எண்ணத்தைத் தீவிரவாதம் எதிர்கொள்ளப் பிரார்த்திப்போம்

  4. Pingback: Indli.com
  5. அன்புள்ள உமாசங்கர்,
    அற்புதமான கட்டுரை; நன்றி.

    செப்டம்பர் 11ம் தேதி தான், உலக மகாகவியான பாரதியார் நினைவு நாள். விவேகானந்தரும் (1893 ) மகாத்மா காந்தியும் (1906) மகாகவி பாரதியும் (1921) இந்நாளை புனிதப்படுத்தி இருக்கிறார்கள்.

    ‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே’ என்று பாடிய பாரதியும், அஹிம்சையை ஆயுதமாக்கிய மகாத்மா காந்தியும், ‘அனைவரும் சகோதரர்கள்’ என்று உணர்த்திய சுவாமி விவேகானந்தரும் விரும்பியது உலக நன்மை அல்லவா?

    இந்நாள், உலக சகோதரத்துவ தினமாகக் கொண்டாடப்பட அனைத்து தகுதியும் கொண்டது தான். முதல்கட்டமாக நமது பாரத அரசு இதற்கான முன்முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

  6. Shri Umashankar,

    A very good message – 9/11 is being projected as a terrosits day and your message is full of warmth

  7. Dear UmaShankar sir,

    It was really a good article.

    Rightly as you said, we have to try not to remember some bitter incidents because it will fuel to more hatred among the brotherhood. One example is “The burning of Koran” incident on September 11, 2010. These types of incidents, fuelled by religious fanatics (who are meant actually to preach peace and brotherhood), should not happen and such thoughts would definitely pave way to violence.

    Everyone has to understand that what we try to say is not to be misunderstood that we don’t understand the feelings and pain of the persons affected by the 9/11 attacks or by such violent incidents. We are also deeply wounded by the attack on our fellow human beings (brothers). We try to say that these should not be the incidents, which favour the separatists.

    Aptly, as you quoted, Swamy Vivekananda’s Chicago speech on “Universal Brotherhood” has to be understood in the true sense and sincerely followed by each and every human being to live peacefully.

    We all agree that the day has to be announced as “ The International Day of Universal Brotherhood ” and everyday has to be meant and followed in the same way.

    Note: Since I didn’t have Tamil fonts, I have typed this message in English.

    With warm regards
    Venky

  8. மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றி.

    “எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்ற நமது பாரம்பரிய சித்தாந்தத்தில் ஊறிய எவரும் இதைத்தான் விரும்புவோம்.

    இது போலவே இங்கும் 1992 டிசம்பர் 6 இல் நடந்த அயோத்தி நிகழ்வுகளுக்கு, ஆண்டு தோறும் கருப்பு தினம் கடைப்பிடித்து நாடு முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டியதே. இதை நான் கட்டுரையில் சொல்லாத காரணம், கட்டுரையின் தனிப்பட்ட கவனம் செப்டம்பர் 11 ஆம் தேதியிலிருந்து நழுவக்கூடாது என்பதே. டிசம்பர் ஆறாம் தேதியை அண்ணல் அம்பேத்காரின் நினைவாக பாரதம் ‘சமத்துவதினமாக’ அனுசரிப்பது ஓரளவு கவனத்தை நல்வழிப் படுத்தக் கூடும். எது எப்படியானாலும், மும்பை குண்டு வெடிப்பு, கோவை குண்டு வெடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு, அதன் தொடர்க் கலவரங்கள், மும்பை ஓட்டல்கள் – ரயில் நிலையத் தொடர்க் கொலைகளும் – பயங்கரங்களும், மாலேகான் குண்டு வெடிப்பு என இவற்றை யெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு படுத்தி அதற்கு துக்கதினம் அனுசரிக்கும் போக்கைக் கைவிடவேண்டும் என்பதே எனது அவா.

    எந்த அரசானாலும், மக்கள் தங்கள் கோரிக்கைகளை அமைதியான முறையில் சொல்லும் போதெல்லாம் கண்டு கொள்வதே இல்லை என்கிற நிலையே இப்போது இருக்கிறது. நமது அதிகார வர்க்கம் காலனியத்தின் தொடர்வாக “நாம் ஆள்கின்றவர்” என்ற சிந்தனையில் உழல்கிறது. போராட்டத்தில் வன்முறை வந்தால் ஒழிய கோரிக்கை பற்றி கவனம் செலுத்துவதே இல்லை என்ற நிலை மாறவேண்டும். காஷ்மீரின் வன்முறைக்கு வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளும் மதரீதியான அரசியலும் காரணம். நக்சலைட் பிரச்சினைக்கு வெளியிலிருந்து வரும் தூண்டுதலும், வறுமையும் காரணம். ஆனால் மொத்தமாக உள்நாட்டுப் பிரச்சினைகளான தெலுங்கானா, காவிரி- கிருஷ்ணா – முல்லைப் பெரியார் – கோதாவரி – பாலாறு நீர்ப் பகிர்வு, இவற்றிலெல்லாம் கூட மத்திய-மாநில அரசுகள் அமைதியான சூழல் இருக்கும்போதே தீர்வு காணும் மன நிலையில் இல்லை. எதுவும் விளிம்பு நிலைக்கு வந்தால்தான் தீர்வு பற்றி யோசிக்கவே ஆரம்பிப்போம் என்று அதிகார வர்க்கம் இருக்கிறது. சிறு சிறு பொறிகள்தாம் பெருந்தீ வளரக் காரணம் என்பதை உணர்வதாகத் தெரியவில்லை.

  9. இனித் தமிழ் ஹிந்து இந்த நாளை மனித சகோதரத்துவ நாளாக கொண்டாடும்! நாம் அனைவரும் கொண்டாடுவோம்! நமால் ஆரம்பிக்கப் பட்டாலே உலகம் அதைப் பின்பற்றத் தொடங்கி விடும்! கவலை வேண்டாம்! நாமே தான் உலகை நிர்மாணிக்கிறோம், நம்மிலிருந்து தொடங்கட்டுமே! நன்றி!

  10. இனித் தமிழ் ஹிந்து இந்த நாளை மனித சகோதரத்துவ நாளாக கொண்டாடும்! நாம் அனைவரும் கொண்டாடுவோம்! நம்மால் ஆரம்பிக்கப் பட்டாலே உலகம் அதைப் பின்பற்றத் தொடங்கி விடும்! கவலை வேண்டாம்! நாமே தான் உலகை நிர்மாணிக்கிறோம், நம்மிலிருந்து தொடங்கட்டுமே! நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *