கேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா?

பெரும்பான்மையினரின் கருத்து ஏற்கப்படுவதே ஜனநாயகம் என்று கூறப்படுவதுண்டு. 49 பேர் ஆதரித்தாலும், அதை 51 பேர் எதிர்த்தால் எதிர்ப்பாளருக்கே வெற்றி கிடைக்கும் என்பது தான் வாக்களிக்கும் ஜனநாயகத்தின் அடிப்படை. இதெல்லாம், சிறுபான்மை மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதைத் தான் மத்திய அரசில் அவ்வப்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தெரியப்படுத்தி வந்திருக்கிறது சோனியா தலைமையிலான காங்கிரஸ். அவரது சிஷ்யரான ஓமன் சாண்டி ஒருபடி மேலே சென்றுவிட்டார். தனது தலைமையிலான 22 பேர் கொண்ட கேரள அமைச்சரவையில் சிறுபான்மையினரின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தி, தங்கள் கட்சி யாருக்கு சாதகமானது என்பதை முரசறைந்து அறிவித்திருக்கிறார் அவர்.

கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டசபை உறுப்பினர்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 72 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்த்தரப்பில் இடது  ஜனநாயக  முன்னணிக்கு 67 உறுப்பினர்கள் உள்ளனர் (மா.கம்யூ எம்.எல்.ஏ ஒருவர் பதவி விலகியதால் ஒரு இடம் காலியாக உள்ளது). ஐ.ஜ.முன்னணியில் காங்கிரஸ் கட்சியின் பலம் 38; முஸ்லிம் லீக் கட்சியின் பலம் 20. கூட்டணியில் உள்ள கிறிஸ்தவர்களின் கட்சிகளாக அறியப்படும் கேரள காங்கிரஸ் கட்சிகளின் இரு பிரிவுகளுக்கும் எம்.எல்.ஏக்கள் உண்டு.

அண்மையில் நடந்த பிரவம் இடைத்தேர்தலில் கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) சார்பில் வென்ற அனுப் ஜேக்கப் அமைச்சரானபோது, சாண்டியின் அமைச்சரவையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை (அவரையும் சேர்த்து) 6 ஆக உயர்ந்தது. அவருடன் மஞ்சாலம் குழி அலி பதவி ஏற்றபோது, அமைச்சரவையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மொத்தத்தில் 22 பேர் கொண்ட சாண்டி அமைச்சரவையில் இப்போது சிறுபான்மையினரின் எண்ணிக்கை 12!

கேரளாவின் மக்கள்தொகை விகிதாசார அடிப்படையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 56.2 சதவீதம்; இஸ்லாமியர்கள்- 24.7 சதவீதம்; கிறிஸ்தவர்கள்- 19 சதவீதம். காஷ்மீர்,  வடகிழக்கு மாநிலங்கள் தவிர்த்த நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கேரளாவில் தான் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகம். கேரள அரசியலில் மிகவும் செல்வாக்கு செலுத்துபவர்களாக சிறுபான்மையினர் மாறி உள்ளனர். அவர்களது ஒட்டுமொத்த அளவான 44  சதவீதம் வாக்குகளைப் பெறவே காங்கிரஸ் கூட்டணியும்  கம்யூனிஸ்ட் கூட்டணியும் போட்டியிடுகின்றன. கேரளாவில் பாஜகவுக்கு கணிசமான செல்வாக்கு இருந்தும் தேர்தலில் வெற்றி பெற இயலாமல் போவதற்கு இந்த மக்கள்தொகை மாறுபாடே காரணம்.

இந்நிலையில் தான், ஏற்கனவே 4 அமைச்சர்களைக் கொண்டிருந்த முஸ்லிம் லீக், அமைச்சரவையில் தனக்கு கூடுதலாக ஓரிடத்தை அளிக்குமாறு நிர்பந்தம் செய்தது; அல்லது ராஜ்யசபைக்கு தங்கள் கட்சியைச் சேர்ந்தவரை அனுப்ப வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக கேரளா மாநில காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த விவாதம் நடந்து வந்தது. நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அரசைக் காக்க  முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு அடிபணிய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. பெரும்பாலோர் லீகின் நிர்பந்தத்தை ஏற்கக் கூடாது என்றே கூறினர். ஆயினும்,  கட்சியினரின் கருத்துக்களை மீறி, இப்போது லீகின் சார்பில் ஐந்தாவதாக ஒருவர் அமைச்சர் ஆகி இருக்கிறார். இது கேரளாவில் பலத்த அதிர்ச்சியையும் சர்ச்சைகளையும் உருவாக்கி இருக்கிறது.

கேரளாவில் சிறுபான்மையினரின் வாக்குகளை நம்பியே காங்கிரஸ் கட்சி இயங்கி வந்துள்ளது. கருணாகரன் இருந்தவரை, அவரால் கட்சிக்குள் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க முடிந்தது. சோனியா வரவுக்குப் பின் அவரது நிலைமையே மோசமாகிவிட்டது. இப்போது அவரும் இல்லை. இன்றைய காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோணி (தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர்), முதல்வர் ஓமன் சாண்டி ஆகிய தலைவர்களின் பின்புலத்தில் தான் தாக்குப் பிடிக்கிறது.

அதனால் தான், அரசின் தலைமைக் கொறடாவாக, கூட்டணிக் கட்சியான கேரள  காங்கிரஸ் (மானி) பிரிவைச் சேர்ந்த பி.சி.ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு அமைச்சருக்கு இணையான அந்தஸ்து உண்டு. இக்கட்சி கிறிஸ்தவர்களின் கட்சி என்றே தன்னை அறிவித்துக் கொள்ளும் கட்சி. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.ஜார்ஜ், ”கேரளாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினர் என்பது வெறும் மாயை” என்று கூறி இருக்கிறார். உறைக்க வேண்டியவர்களுக்கு உறைத்தால் சரி.

சாண்டி அமைச்சரவையில் இதே கட்சியின் கே.கே.மானி, பி.ஜே.ஜோசப் ஆகியோரும் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் அல்லாது ஆர்.எஸ்.பி (பி) பிரிவின் ஷிபு பேபி ஜான், காங்கிரஸ் கட்சியின் கே.ஜோசப், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்)  பிரிவின் அனுப் ஜேக்கப்  ஆகிய கிறிஸ்தவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். முதலமைச்சர் சாண்டியுடன்  சேர்த்தால் அமைச்சரவையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 6!

வெறும் 19 சதவீதம் உள்ள கிறிஸ்தவர்களுக்கே 6  அமைச்சர்கள் என்றால், 24.7 சதவீதம் உள்ள இஸ்லாமியர்களுக்கு 5 அமைச்சர்கள் தானா? என்று முஸ்லிம் லீக் கேட்டது. அதிலுள்ள நியாயத்தைப் ‘புரிந்துகொண்டு’ தலைவணங்கி இருக்கிறது காங்கிரஸ். இப்போது முஸ்லிம் லீக் சார்பில், பி.கே.குன்னாலி குட்டி, பி.கே.அப்து ரப், வி.கே.இப்ராஹீம் குஞ்சு, எம்.கே. முனீர், மஞ்சாலம் குழி அலி ஆகியோர் (மொத்தம் 5) அமைச்சர்கள் ஆகி உள்ளனர். காங்கிரஸ் சார்பில் அமைச்சராக உள்ள இஸ்லாமியரான ஆர்யாதன் முகமதுவுடன் சேர்த்தால் சாண்டி அமைச்சரவையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 6 ஆகிறது!

இதைவிட முக்கியமான விஷயம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், கல்வி, பொதுப்பணி, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட முக்கியமான துறைகள் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மீதமுள்ள 10 பேரும் ஹிந்துக்கள். மொத்தத்தில், 56.2 சதவீதம் உள்ள ஹிந்துக்கள் தானே கிள்ளுக்கீரை? இந்த பாரபட்சத்தை எதிர்த்து பாஜக திருவனந்தபுரத்தில் அழைப்பு விடுத்த கடையடைப்புக்கு பெருவாரியான ஆதரவு இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் இந்த மண்டியிடுதல் கண்டு முன்னாள் முதல்வர் அச்சுவும் கூட வருத்தம் தெரிவித்திருக்கிறார். ”காங்கிரஸ் கட்சி தனது வலிமையை கேரளத்தில் இழந்து வருவதையே இது காட்டுகிறது” என்று அவர் விமர்சித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இந்த மண்டியிடுதல் உட்பூசலைக் கிளப்பி இருக்கிறது. முஸ்லிம் லீகுக்கு ஐந்தாவது அமைச்சர் பதவி அளிக்க எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் இஸ்லாமிய அமைச்சர் ஆர்யாதான் முகமது பதவி ஏற்பு விழாவைப் புறக்கணித்தார். ”காங்கிரஸ் முஸ்லிம் லீகிடம் மண்டியிட்டுவிட்டது தவறு” என்கிறார் இவர். கேரள மாநில முன்னால காங்கிரஸ் தலைவர் முரளிதரனும் தலைமையை கண்டித்திருக்கிறார். ஆனால், சாண்டியோ, எல்லாம் தில்லி தலைமையிடம் கேட்டுத் தான் செய்தேன்  என்கிறார்.

முந்தைய அச்சுதானந்தன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசில் இத்தகைய மோசமான போக்கு இல்லை. அப்போது 3 முஸ்லிம் அமைச்சர்களும், 2 கிறிஸ்தவ அமைச்சர்களும், 15 ஹிந்து அமைச்சர்களும் இருந்தனர். மத நம்பிக்கை அற்ற கட்சி என்று கூறிக் கொண்டபோதும், சிறுபான்மையினர் அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்த மார்க்சிஸ்ட்கள் விடவில்லை. அத்தகைய நிலைமை அவர்களுக்கு தேர்தல் முடிவுகளிலும் ஏற்படவில்லை.

ஆனால், இன்றைய நிலைமை மிகவும் மோசம். தேர்தல் களத்தில் வெல்பவர்களே மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள். மொத்தமுள்ள 56.2 சதவீத ஹிந்துக்களில் பலரும் ஜாதி, கட்சி பார்த்து வாக்குகளை சிதறடித்துவிடும் நிலையில், பலர் (குறிப்பாக மேட்டுக்குடியினர்) வாக்குச்சாவடிப் பக்கமே வராத நிலையில், சிறுபான்மையினர் திரண்டுவந்து வாக்களித்து தங்கள் சக்தியை நிரூபித்து விடுகிறார்கள். பிறகு புலம்புவதில் என்ன பயன் இருக்கிறது?

கேரள அமைச்சரவையில் சிறுபான்மையினர் ஆதிக்கம்

கிறிஸ்தவர்கள்: 6 பேர்
1. முதலமைச்சர் ஓமன் சாண்டி
2. கே.ஜோசப் (இருவரும் காங்கிரஸ்)
3. கே.கே.மானி
4. பி.ஜே.ஜோசப் (இருவரும் கேரள காங்கிரஸ் – மானி பிரிவு)
5. அனுப் ஜேக்கப் (கேரள காங்கிரஸ் -ஜேக்கப் பிரிவு)
6. ஷிபு பேபி ஜான் (ஆர்.எஸ்.பி -பி பிரிவு)

இஸ்லாமியர்கள்: 6 பேர்
1. ஆர்யாதான் முகமது (காங்கிரஸ்)
2. பி.கே. குன்னாலி குட்டி
3. பி.கே.அப்து ரப்
4. வி.கே.இப்ராஹீம் குஞ்சு
5. எம்.கே.முனீர்
6. மஞ்சாலம் குழி அலி (ஐவரும் முஸ்லிம் லீக்)

மக்கள் தொகையுடன் ஒப்பீடு:
மொத்த அமைச்சர்கள்: 22 பேர்.
சிறுபான்மையினர்: 12 பேர்.
பெரும்பான்மையினர்: 10 பேர்.
மக்கள்தொகையில் சிறுபான்மையினர் விகிதம்: 44
அமைச்சரவையில் சிறுபான்மையினர் விகிதம்: 54
மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் விகிதம்: 56
அமைச்சரவையில் பெரும்பான்மையினர் விகிதம்: 46

இப்போதுதான் காங்கிரஸ் கட்சியின் லட்சணம் நாயர் சேவை சங்கத்துக்கு (என்.எஸ்.எஸ்) தெரிந்திருக்கிறது. ”பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டைவிட்டு போய்விட வேண்டுமா?” என்று, அமைச்சரவை மாற்றத்தால் கொந்தளித்த என்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர் கேட்டிருக்கிறார். காலம் கடந்த பின்னர் ஞானோதயம். கேரளாவில் தற்போது நிலவும் அரசியல் நிலைமை நீடித்தால், கேரளாவில் இருந்து ஹிந்துக்கள் அகதிகளாக பிற மாநிலங்களுக்கு (காஷ்மீர் ஹிந்துக்கள் போல) படையெடுக்க வேண்டிய நிலைமை வரலாம்.

கேரள அரசியலில் அடுத்த முக்கியமான சக்தியான ஈழவர்கள் சார்ந்த ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (எஸ்.என்.டி.பி) அமைப்பும் சாண்டியின் விபரீத முடிவை எதிர்த்திருக்கிறது. அதன் பொதுச்செயலாளர் வெள்ளப்பள்ளி நடேசன், ”ஜனநாயகம் என்ற பெயரில் கேரளாவில் ஓமன் சாண்டி தலைமையில் மதவாதிகளின் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் குறித்து வெட்கப்படுவதை தவிர வேறு வழியில்லை” என்று மனம் புழுங்கி இருக்கிறார்.

இவ்விரு அமைப்புகளும் தான் காலம் காலமாக காங்கிரஸ் கட்சியை கேரளாவில் நிலைநிறுத்தி வந்துள்ளன. சமீபத்திய மாற்றங்களால் இந்த அமைப்புகள் அதிருப்தி அடைந்திருக்கின்றன. இந்த அதிருப்தி, நெய்யாட்டிங்கரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

அதைவிட முக்கியமானது, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, மதவாதிகளுக்கு மண்டியிடும் காங்கிரஸ் கட்சியின் போக்கை வெளிப்படுத்த இந்நிகழ்வு உதவி இருப்பதுதான். சுதந்திரத்துக்கு முன் முஸ்லிம் லீகிடம் மண்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் தான் தேசப்பிரிவினை நிகழ்ந்தது. மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா? நாட்டு மக்கள் முன்னுள்ள கேள்வி இது.

23 Replies to “கேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா?”

 1. திரு சேக்கிழார் அருமையாக எழுதியுள்ளார். காங்கிரசுக்கு வால் பிடிக்கும் ஈழவர் மற்றும் நாயர் அமைப்புகள் இனியாவது திருந்துவார்களா. திருந்தவேண்டும்.

 2. ஒரிஜினல் மதவாத காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் தேசத்தை பீடித்த வியாதிகள். இந்த நிலையில் பேதி கண்டவனுக்கு வாந்தியும் சேர்ந்தது போல் கிறிஸ்தவக் கட்சிகளுடன் கூட்டு நாயர் சேவை சங்கமும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சங்கமும் சேர்ந்து பாஜக வுக்கு வாக்களிக்க முழு மனதுடன் முன் வரவேண்டும். அதே நேரத்தில் போலி மதச் சார்பின்மை வா(வ்யா)திகளான கம்யூனிஸ்ட்களையும் ஒதுக்க வேண்டும். குருவாயூரப்பனும் பதமநாப சுவாமியும் பகவதியும் தான் காப்பாற்ற வேண்டும்

 3. மக்கள் தொகை விகிதாசாரப்படி பிரதிநிதித்துவம் என்பதை கட்டுரை ஆசிரியர், தமிழ் ஹிண்டு தளம் ஏற்கின்றார்களா? ஜாதிவாரி பிரதிநிதித்துவம், மண்டல் கமிஷன், இத்யாதி பற்றியும் இதே நிலைதானா என்பதை தெளிவுபடுத்த முடியுமா?

 4. /// ”பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டைவிட்டு போய்விட வேண்டுமா?” என்று, அமைச்சரவை மாற்றத்தால் கொந்தளித்த என்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர் கேட்டிருக்கிறார். காலம் கடந்த பின்னர் ஞானோதயம். கேரளாவில் தற்போது நிலவும் அரசியல் நிலைமை நீடித்தால், கேரளாவில் இருந்து ஹிந்துக்கள் அகதிகளாக பிற மாநிலங்களுக்கு (காஷ்மீர் ஹிந்துக்கள் போல) படையெடுக்க வேண்டிய நிலைமை வரலாம்//

  அபாயகரமான விஷயங்கள்! ஹிந்துக்களுக்கு எப்பொழுதுமே கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்ய விரும்பும் ஜந்துக்களாகவே இருக்கின்றனர்! இந்தியாவில் சுதந்திரத்தின் போது மைனாரிட்டிகளாக இருந்தவர்கள் இப்போது மெஜாரிட்டிகளாகி நாட்டைப் பிடித்து க் கொள்ளப் போகிறார்கள். இப்படியே போனால் உடையும் இந்தியா இன்னும் ஐம்பது வருடங்களில்!!!! இதே பாகிஸ்தானில் சுதந்திரம் பெற்ற போது இருந்த ஹிந்துக்களை அவர்கள் வளரவே விடவில்லை. இன்று வரை கட்டாய மதமாற்றம் நடந்து வருகிறது கிறிஸ்தவர்கள் .அந்த நாட்டில் தலை வைத்துக் கூட படுக்க முடியாது! ஆனால் செக்யூலரிசம் எம்மதமும் சம்மதம் என்று பேசி ஹிந்துக்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த இடம் கூட கிடைக்காமல் அலையப் போகிறோம். இலங்கையில் ஹிந்துக்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு ப்ரபாகரன் என்கிற காரணம் தேவைப்பட்டது! இந்தியாவில் ஹிந்துக்கள் கொல்லப்பட காரணம் கூட தேவைப் படாது. காங்கிரஸ் போதும்!

  இது போன்ற விஷயங்கள் நம்மைச் சுற்றி நடப்பதை வெளியே சொல்ல ஊடகங்களே கிடையாது. ஹிந்துக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை செய்துவரும் தமிழ் ஹிந்து தளத்தை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!

 5. மொத்த இந்தியாவிலேயே கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஹிந்துக்களின் மக்கள் தொகையில் சரிபாதி வந்திருப்பார்கள். ஆனால் இத்தாலிக்காரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மைனாரிட்டிகளாகவே அவர்களை கான்பித்து ஊரை ஏமாற்றக் கூடும். இன்னும் மைனாரிட்டி ஒதுக்கீடுகள் தேவையா என சிந்திக்க வேண்டிய தருணம் இது!

 6. ”ஒன்றுபட்டால் உண்டுவாழ்வே , நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைருக்கும் தாழ்வே.”
  வாழ்க பாரதி . அன்றே சொல்லிவிட்டு சென்றுவிட்டான். இதுதான் நடக்கின்றது ஹிந்து அதிபுத்திசாலிகளால் . வீபூதி பட்டையை மட்டும் போட்டுவிட்டால் போதாது. கொஞ்சம் ரூம்போட்டு உக்காந்து யோசிக்கவேண்டும்.

 7. திரு ஆர்வி,
  மக்கள் தொகை விகிதாசாரப்படி பிரதிநிதித்துவம்,ஜாதிவாரி பிரதிநிதித்துவம், மண்டல் கமிஷன் இவை எல்லாம் ஒன்றா? குழப்புகிறது

 8. திராவிடன்,

  இதில் என்ன குழப்பம்? 44 சதவிகிதம் உள்ள சிறுபான்மையர் அமைச்சரவையில் மெஜாரிட்டியாக இருப்பதை சேக்கிழான் வன்மையாகக் கண்டிக்கிறார், அதற்கு தமிழ் ஹிந்து தளம் முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கிறது. நாட்டில் எத்தனை சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர், தாழ்த்தப்பட்ட ஜாதியினர், பழங்குடியினர் இருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த விகிதாசாரப்படி அரசு வேலைகள், கல்வி வாய்ப்புகள், அமைச்சரவைப் பதவிகள் எல்லாம் இருக்க வேண்டும் என்ற கொள்கைப்படி மண்டல் கமிஷன், திராவிட இயக்கம், பா.ம.க. உட்பட்ட பல தமிழக ஜாதிக் கட்சியினர் வாதிடுகின்றன. இது வரை அப்படிப்பட்ட நிலை இல்லை மத்திய அரசு, கௌ-பெல்ட் மாநிலங்களில் இல்லை என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதைப் பற்றிய சேக்கிழான், தமிழ் ஹிந்து தளத்தின் நிலை என்ன என்று தெளிவுபடுத்த முடியுமா என்று கேட்டிருக்கிறேன். உங்கள் நிலையையும் முடிந்தால் தெளிவுபடுத்துங்கள். இதில் குழம்ப என்ன சார் இருக்கிறது?

 9. திராவிடன்! RV ஐக் கேள்வியெல்லாம் கேட்காதீர்கள் சலித்துக் கொள்வார் (நம்ப கலைஞர் போல). எண்ணிக்கையே இல்லை என்றான பின் சிறுபான்மை எங்கிருந்து வந்தது போன்ற கேள்விகளெல்லாம் நம் போன்ற பாமரர்க்கு தான்

 10. திரு ஆர்வி
  “மக்கள் தொகை விகிதாசாரப்படி பிரதிநிதித்துவம் என்பதை கட்டுரை ஆசிரியர், தமிழ் ஹிண்டு தளம் ஏற்கின்றார்களா?”
  ஐயா ஆர்வீ அப்படியானால் எல்லா எம் பி எம் எல் ஏ பதவிகளையும் அவர்களுக்கே விட்டுக்கொடுத்துவிடலாமா? சொல்லுங்கள்.

 11. // திரு ஆர்வி
  “மக்கள் தொகை விகிதாசாரப்படி பிரதிநிதித்துவம் என்பதை கட்டுரை ஆசிரியர், தமிழ் ஹிண்டு தளம் ஏற்கின்றார்களா?”
  ஐயா ஆர்வீ அப்படியானால் எல்லா எம் பி எம் எல் ஏ பதவிகளையும் அவர்களுக்கே விட்டுக்கொடுத்துவிடலாமா? சொல்லுங்கள். //

  அவர்கள் என்றால் யார்? முஸ்லிம்/கிருஸ்துவர்களா இல்லை பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட/பழங்குடி ஜாதியினரா? நீங்கள் சொல்ல வருவது சரியாகப் புரியவில்லை.

 12. ஆர்வி
  சலிப்பு எதற்கு? பிடிக்காவிடில் பதில் சொல்லாமல் இருங்கள் உங்களை கட்டயபடுத்த இல்லை. ராமதாஸ் கேட்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஐந்து கோடி வன்னியர்கள் தமிழ் நாட்டில் உள்ளனராம் ஆனால் அரசாங்க உயர்பதவிகளில் 200 பேர் மட்டுமே அவர்கள் சமூகத்தினர் உள்ளனராம் அதனால் விகிதாச்சார முறையில் இட ஒதுக்கிடு கேட்கிறார். அது சரியானதாக படுகிறது,இது மக்கள் தொகை விகிதாசாரப்படி பிரதிநிதித்துவம்,ஜாதிவாரி பிரதிநிதித்துவம் ஆகும். ஆனால் மண்டல் கமிசனின் படி பெரும்பான்மை மக்கள் குறைந்த இடங்களும் சிறுபான்மையினர் அதிக இடங்களும் பெறுவார். இது எப்படி மக்கள் தொகை விகிதாசாரப்படி பிரதிநிதித்துவம்,ஜாதிவாரி பிரதிநிதித்துவம் ஆகும்?
  (பி கு)நான் ராமதாஸ் கட்சியையோ இனத்தையோ சேர்ந்தவன் அல்ல.

 13. திராவிடன், எனக்கு சலிப்பும் இல்லை ஒன்றுமில்லை, வீணாக எதையாவாது நினைத்துக் கொள்ள வேண்டாம். வன்னியர்கள் பற்றி நீங்கள் எழுதியதிலிருந்து நீங்கள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தை ஆதரிக்கிறீர்கள் என்று தெரிகிறது. மண்டல் கமிஷனின் அணுகுமுறையில் உங்களுக்குப் பிரச்சினை இல்லை, ஆனால் அவர்கள் விகிதாசாரப்படி இல்லை, தவறாக இட ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் என்று நினைப்பதால்தான் அதை எதிர்க்கிறீர்கள் என்றும் புரிகிறது. உங்கள் நிலையைத் தெளிவுபடுத்தியதற்கு நன்றி!

 14. அன்புள்ள ஆர்வி மற்றும் அவருக்கு பதில் அளித்த நண்பர்களுக்கு,

  வணக்கம்.

  கேரளாவில் மாறிவரும் மக்கள்தொகை மாற்றத்தின் (Demography)அபாய அறிகுறியாகவே அந்த மாநில அமைச்சரவையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை நான் காண்கிறேன். 1947 க்கு முன்னர் இதே போன்ற நிலைமை காணப்பட்ட லாகூரும் டாக்காவும் இன்று நம்முடன் இல்லை. அதே நிலை கேரளாவிலும் நேரிடக் கூடாது என்பதே எனது கவலை. அந்த அடிப்படையில் தான் தமிழ் ஹிந்து தளமும் இக்கட்டுரையைப் பிரசுரித்துள்ளது.

  ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையின மதங்கள் பெரும்பான்மை பெற்றவுடன் அங்கிருந்த ஹிந்து பண்டிட்கள் அக்கிரமமான முறையில் துரத்தப்பட்டார்கள் (1985 -1990). அவ்வாறு துரத்தப்பட்டவர்கள் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் அகதிகளாக வாழ்கிறார்கள். அதே போன்ற நிலை கேரளாவிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையே எனது கட்டுரை பிரதிபலிக்கிறது. அதைப் புரிந்துகொள்ளாமல், திரு. ஆர்வி, வழக்கம் போல குதர்க்கம் பேசுகிறார். தூங்குபவர்களை எழுப்பலாம்; தூங்குவதுபோல நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

  நமது அரசுகளின் அமைச்சரவைகளில் பெரும்பாலும் ஜாதிவாரி பிரதிநிதித்துவம் உள்ளதை அனைவரும் அறிவர். மண்டல் கமிஷன், இட ஒதுக்கீடு (Reservation) ஆகியவை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பானவை. அது கண்டிப்பாக தேவை உள்ளவரை தொடர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதே சமயம் திறமைக்கு மதிப்பளிக்கும் வகையில், இடஒதுக்கீடு ஐம்பது சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் நான் ஏற்கிறேன்.

  இடஒதுக்கீடு என்பது காலம் காலமாக நசுக்கப்பட்ட தலித் சகோதரர்களுக்கு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். ஆனால், அதன் பயனை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் சிறுபான்மையினரும் தூக்கிச் சென்றுவிடக் கூடாது. மேல்ஜாதி என்று கூறப்படும் பல ஜாதிகளிலும் பலர் ஏழ்மை நிலையில் உள்ளனர். அவர்களை பொருளாதார அடிப்படையில் கைதூக்கிவிடுவதாகவும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற சிந்தனையை பலர் கூறி வருகின்றனர். இதுவும் எனக்கு ஏற்புடையதே.

  மற்றபடி இடஒதுக்கீட்டையும் அமைச்சரவையில் செல்வாக்கு செலுத்துவதையும் ஒன்றாகக் குழப்பக் கூடாது. கேரளாவில் சிறுபான்மையினர் திறமை அடிப்படையில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தால் நான் அதை எதிர்த்திருக்க மாட்டேன். ஆனால், அங்கு நடந்தது அரசியல் பேரம்; நாட்டை அழிவுக்குள்ளாக்கும் பேரம். எனவே தான் அதை நான் எதிர்க்கிறேன்.

  பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களிலும் சிறுபான்மையினருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அது அனைத்து சமூகத்தினரையும் இணைப்பதற்கான சமரசமான அரசியல் ஏற்பாடு. அதே சமயம், தங்கள் வாக்கு வங்கி பலத்தாலும், கூட்டணியில் செலுத்தும் ஆதிக்கத்தாலும், கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சி நிர்பந்தம் செய்து செல்வாக்கை உயர்த்திக் கொண்டுள்ளது. இது பிற மாநிலங்களிலும் பரவினால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.

  -சேக்கிழான்

 15. அன்புள்ள சேக்கிழான்,

  என்னைப் பற்றி பர்சனலாக நீங்கள் (மற்றவர்களும்) எழுதி இருப்பது புன்னகைக்க வைக்கிறது. இது வரையில் நான் வாதிக்கவே இல்லை, அதற்குள்ளாகவே குதர்க்கம் என்கிறீர்கள்! 🙂 மக்கள் தொகை விகிதாசாரப்படி பதவி, வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பு இத்யாதியில் பிரதிநிதித்துவம் என்ற கொள்கையை நீங்கள் ஏற்கிறீர்களா இல்லையா என்று தெரிந்த பின்தானே வாதிக்க முடியும்? இல்லை இல்லை குதர்க்கம் பேச முடியும்? உங்கள் நிலை என்ன என்று கேட்பதே குதர்க்கம் ஆகிவிடுகிறது! 🙂

  உங்கள் நிலை என்று நான் புரிந்து கொண்டது: விகிதாசாரப்படி பிரதிநிதித்துவம் என்ற கொள்கையின் அடிப்படையில் நீங்கள் இந்த கட்டுரையை எழுதவில்லை. Minority appeasement, அதிகார பேரம் போன்றவற்றை எதிர்த்து மட்டுமே எழுதி இருக்கிறீர்கள். மக்கள் தொகையைப் பற்றி நீங்கள் எழுதி இருப்பது Minority appeasement என்பதை வலியுறுத்தவே. சரிதானா?

 16. one indonesian chinese christian came on a business tour who met me in connection with some business told me that in indonesia , christians are actually 13 pct but they (christian missionaries) always say 4% only to escape the attenton of majority musilms . he explained to me the method and way of multiplying their conversion agenda to spread the dead god message- a cunning, cruel and evil minded christians missionaries who are decipitary in mentality to fool the majorities.

  hindust must wake up before they are slept on grave for jesus coming to raise them from deep sleep. ( he will never come as he could not save himself from crusification )

 17. அன்புள்ள் ஆர்.வி.

  நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்கள் தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன். அதனால் தான், உங்கள் அனாவசியமான கேள்வி திகைப்பூட்டியது. எல்லா விஷயங்களையும் அறிந்துகொண்டே, கட்டுரையை திசை திருப்புவது போல ஒரு கேள்வியை எழுப்ப எவ்வாறு உங்களால் முடிகிறது?

  //உங்கள் நிலை என்று நான் புரிந்து கொண்டது: விகிதாசாரப்படி பிரதிநிதித்துவம் என்ற கொள்கையின் அடிப்படையில் நீங்கள் இந்த கட்டுரையை எழுதவில்லை. Minority appeasement, அதிகார பேரம் போன்றவற்றை எதிர்த்து மட்டுமே எழுதி இருக்கிறீர்கள். மக்கள் தொகையைப் பற்றி நீங்கள் எழுதி இருப்பது Minority appeasement என்பதை வலியுறுத்தவே. சரிதானா?//

  – என்று இப்போது குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், உங்களுக்கு பதில் அளித்த அனைத்து நண்பர்களும், இதனை கட்டுரையைப் படித்த உடனேயே புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் உங்களை அவர்கள் விமர்சித்தார்கள். அந்த விமர்சனத்தில், இத்தனைக்குப் பிறகும் நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்களே என்ற ஆதங்கமே தெரிகிறது. அதே ஆதங்கம் தான் எனதும்.

  விவாதம் நமது அறிவை விசாலப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அதற்குத் தகுந்த மறுப்புகளை நீங்கள் முன்வைத்தால் நான் விவாதிக்க தயாராகவே இருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அரிச்சுவடியிலிருந்து கிளம்புவது (:-)) என்பது வீணான செயலாகவே இருக்கும். உங்கள் தளத்தில் காணப்படும் தீவிர ஈடுபாடு மலைக்க வைக்கிறது. அதே சமயம் உங்கள் கேள்விகள் சிறுபிள்ளைத்தனமாக (:-)) இருக்கின்றன. எனவே தான் அதை குதர்க்கமாகக் கருத வேண்டி வந்தது.

  இட ஒதுக்கீடு தொடர்பாக பல கட்டுரைகள் ‘தமிழ் ஹிந்து’ தளத்தில் வந்துள்ளன. அநேகமாக நானும் உங்கள் கேள்விக்காக (:-)) ஒரு விரிவான கட்டுரையை எழுத உத்தேசித்திருக்கிறேன். அதற்காக உங்களுக்கு என் நன்றி.

  மற்றபடி, கேரளாவில் இப்போது தான் தெளிவடைந்திருக்கும் என்.எஸ்.எஸ், மற்றும் எஸ்.என்.டி.பி. அமைப்புகள் போல, விரைவில் ஆர்.வி.யும் தெளிவடைவார் என்று நான் பரிபூரணமாக நம்புகிறேன். அதற்காக நான் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  -சேக்கிழான்

 18. அன்புள்ள சேக்கிழான்,

  மன்னிக்க வேண்டும், உங்கள் கட்டுரையில் தெரிவது விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்ற கொள்கையை மீறி சிறுபான்மையினருக்கு அதிக மந்திரி பதவிகள் கிடைத்திருக்கின்றன என்ற கோபமே. பத்துக்கு ஒன்பது வரிகளில் தெரிவது ஹிந்து/சிறுபான்மையரின் எண்ணிக்கை, எண்ணிக்கை, எண்ணிக்கை மட்டுமே. நீங்கள் எனக்கு எழுதிய பதிலிலிருந்தே உங்கள் எண்ணத்தை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். இங்கே மறுமொழி எழுதியவர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

  இது வியப்பான விஷயமில்லை. எழுதும்போது மனதில் இருப்பது சில சமயம் தெளிவாக வெளிப்படுத்தப்படுவதில்லை. அதனால்தான் இந்தக் கொள்கையை அடிப்படையாக வைத்து இருக்கும் இன்னொரு பிரச்சினை பற்றி உங்கள் நிலையைத் தெளிவுபடுத்தும்படி கேட்டிருந்தேன்.

 19. கடவுளின் சொந்த மாநிலம் என்று சொல்லி கொல்லும் கேரளம் இன்னும் சில காலங்களில் ஒரு காஷ்மீர் ஆகபோவது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *