இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 23

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

23.1 நேர்பட ஒழுகு

சீதையின் அழகில் மயங்கி இருந்த ராவணனுக்கு விபீஷணன் சொன்னது பிடிக்கவில்லை; அவனது அறிவுரையை ஏற்க மறுத்தான். விபீஷணன் சொன்ன எதற்கும் அந்தக் குழுவில் இருந்த எவருமே எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதையும் அவன் உணர்ந்தான். அதே சமயம் குழுவில் இருந்த மற்றவர்கள் ஆரவாரமாகத் தாங்கள் தனியாளாக ராமனிடம் போர் புரிந்து வெற்றி பெறுவோம் என்று கை உயர்த்தி, மார் தட்டிப் பேசியதையும் அவன் வெறும் திண்ணைப் பேச்சு என்றும் புரிந்துகொண்டான். சிலரே இருந்த அந்தக் குழு என்றில்லாமல், பொது மக்களில் பலரும் இருக்கும் பெரியதொரு வட்டத்தில் தனக்கு வேண்டிய பக்கபலம் கிடைக்குமா என்று பார்க்க, அத்தகைய கூட்டத்தைக் கூட்டி அந்தப் பிரச்சினையை அவர்கள் முன் வைத்தான்.

தண்டகாரண்ய வனம் அரக்கர்களாகிய நமக்குச் சொந்தம். அங்கு ராமனுடன் மற்றவர்களும் விதி மீறி தங்க வந்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் எனது தம்பியான காராவையும் அவனுடன் காவலுக்காக இருந்த பதினான்காயிரம் வீரர்களையும் கொன்று போட்டிருக்கிறான். அதற்குத் தண்டனையாகவும், ராமனின் மனைவி சீதை அழகாக இருப்பதால் தன் மனைவியாக அடைவதற்குமாக அவளைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டதாக மக்களிடம் இராவணன், தான் செய்த செயலை நியாயப்படுத்திப் பேசினான். தனக்கு மனிதர்களிடமோ, வானரர்களிடமோ பயம் எதுவுமில்லை என்றும், மேலும் அவர்களால் கடலைத் தாண்டி இலங்கைக்கு வந்து நம்முடன் சண்டை போட வரவும் மிகவும் கஷ்டம் என்றும் சொன்னான். ஆனாலும் அனுமன் கடல் தாண்டி இங்கு வந்து நகரத்தைப் பாழ்படுத்தி விட்டதால் அவர்களால் வரமுடியாது என்றும் சொல்வதற்கில்லை என்பதால் நாம் சும்மா இருந்து விடக்கூடாது. இந்த நிலையில் ஒரு வேளை போர் வந்தாலும் வரலாம். அதனால் போரா அல்லது இவ்வளவு அட்டகாசம் செய்துள்ள அவர்களுடன் சமாதானமா என்ற கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும் என்று சாமர்த்தியமாக பிரச்சினையை திசை திருப்பிவிட்டான்.

அகண்ட உறக்கத்திலிருந்து எழுப்பிவிடப்பட்டு அங்கு உட்காரவைக்கப்பட்டிருக்கும் ராவணனின் இன்னொரு தம்பியான கும்பகர்ணன், அப்போது சபையில் எழுந்து நின்று ராவணன் எல்லாவற்றையும் செய்துவிட்டு இப்போது நம்மிடம் நியாயம் கேட்பது எப்படி முறையாக இருக்கும்; தண்டகாரண்ய வனத்திற்குப் போகும் முன்பாகவோ, சீதையை அபகரிக்கும் முன்பாகவோ நம்மிடம் ஆலோசனை செய்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும் என்று ராவணனை ஒரு பிடி பிடித்தான். நடந்த செயலை நியாயப்படுத்த ராவணன் இப்போது முயற்சி செய்கிறான். எல்லாவற்றிற்கும் காலம் கடந்து விட்டது; எதையுமே செய்வதற்கு முன் நன்கு யோசித்து, சரியான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே அல்லாது, இப்படியா ஒரு தவறைச் செய்துவிட்டு அப்புறமாக அதன் பாதகங்களைப் பற்றி யோசித்து வருந்துவது என்றும் சொன்னான்.

ந்யாயேன ராஜகார்யாணி ய​: கரோதி த³ஸா²னன |
ந ஸ ஸந்தப்யதே பஸ்²சான்னிஸ்²சிதார்த²மதிர்ன்ருʼப​: || 6.12.30 ||

த³ஸா²னன = பத்துத்தலையனே
ய​: === எந்த
ந்ருʼப​: == அரசன்
ராஜகார்யாணி = ராஜகாரியங்களை
ந்யாயேன = நியாய வழியில்
கரோதி = செய்கிறானோ
நிஸ்சிதார்த²மதி: = எண்ணித்துணிந்த மதியாளன் ஆன
ஸ: = அவன்
பஸ்²சாத் = சிறிதும்
ந ஸந்தப்யதே = தாபப் படுவதில்லை.

ராவணா! ஓர் அரசன் நீதியும், நேர்மையுமான தர்மத்தின் வழியில் ஆட்சி செய்யவேண்டும்; அப்படிச் செய்தால் பின்னால் அவன் எதற்கும் வருந்த மாட்டான்.

முதலில் சூர்ப்பனகையின் தவறான அறிவுரையை ராவணன் கேட்டான். அவனுக்கே அழகிய பெண்களிடம் மயக்கம் இருப்பதால், அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சூர்ப்பனகையின் மேல், இப்போது இருக்கும் நிலைக்குக் காரணமாக அவன் பழி சுமத்த முடியாது. சீதையைத் தூக்கிக்கொண்டு வந்தது ஒரு தகாத செயல். அதற்குண்டான தண்டனையைத் தான் அனுபவிக்க வேண்டிய நிலையை மறைத்து, ராவணன் அநியாயமாக அனைவரின் உயிரையும் பணயம் வைக்கும்படியாக இராமரோடு நடக்கவிருக்கும் போரில் அரக்கர்களை ஈடுபட வைக்கிறான். ஆதலால் கும்பகர்ணன் அரக்கர்களை இப்படிப் பலி கடாவாக ராவணன் ஆக்கியுள்ளதைப் பற்றிக் கேட்டு அவன் செய்த குற்றத்திற்கு அவர்கள் ஏன் உயிரை விட வேண்டும் என்கிறான். இப்போது கூட சில தலைவர்கள் எடுக்கும் தவறான முடிவினால் மக்கள் அனைவரும் துயருறுவதைப் போலத்தான் இதுவும்.

23.2 அளந்தறிந்து பிளந்தெறிவான் அமைச்சன்

கும்பகர்ணன் அடுக்கிய குற்றச்சாட்டுகளைக் கேட்டு ராவணன் அதிர்ந்து போனான். இதைக் கவனித்த பிரஹச்தா என்ற ஒரு தலையாட்டி அமைச்சர், ராவணன் அரசர்களுக்கெல்லாம் அரசன், அவன் ராமன் சீதை உட்பட யாரை வேண்டுமானாலும் வென்று, தன் வழிக்குக் கொண்டுவர முடியும் என்றான். வேண்டுமானால் சீதையை பலாத்காரம் செய்து அவனுடைய மனைவியாக்கிக் கொள்ளலாம் என்று சொல்லி ராவணனை சமாதானம் செய்கிறோம் என நினைத்துக்கொண்டு பிதற்றினான். ராவணனை ஈனச் செயல்களில் ஈடுபடுத்த ஊக்கம் அளிக்கும் கர்ண கொடூரமான அறிவுரைகளை அமைச்சர், தனது சுயநலத்தினால் கைதட்டு பொம்மைபோல், சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்ட விபீஷணனுக்கு மனம் பொறுக்கவில்லை. உடனே எழுந்து நின்று மதியீனமாகப் பேசிக்கொண்டிருக்கும் அமைச்சர்களைக் கடிந்துகொண்டு, அவர்கள் அனைவரும் வரப்போகும் அபாயத்தையும், இராமரின் வலிமையையும் சரியாகக் கணிக்காமல் உளறுவதாகக் கூறினான். எதிரியின் வலிமையையும், போரில் அவர்களுக்கு உள்ள மாற்று வழிகளையும் சரியாக மதிப்பிட்டு, அதேபோல் தங்கள் தரப்பின் வலிமையையும் வளமையையும் அவர்களுடையதோடு ஒப்பிட்டு அதற்கேற்றாற்போல் அரசனுக்கு அறிவுரை கூறவேண்டிய அமைச்சர்களா இவர்கள் என்று கண்டனக் குரலை எழுப்பினான்.

பரஸ்ய வீர்யம்ʼ ஸ்வப³லம்ʼ ச பு³த்³த்⁴வா ஸ்தா²னம்ʼ க்ஷயம்ʼ சைவ ததை²வ வ்ருʼத்³தி⁴ம் |
ததா² ஸ்வபக்ஷே (அ)ப்யனும்ருʼஸ்²ய பு³த்³த்⁴யா வதே³த் க்ஷமம்ʼ ஸ்வாமிஹிதம்ʼ ச மந்த்ரீ || 6.14.22 ||

பரஸ்ய = எதிரியின்
வீர்யம்ʼ = வீர்யத்தை
பு³த்³த்⁴வா = அறிந்து கொண்டு
ஸ்வப³லம்ʼ ச = தனது கட்சியின் (அல்லது நாட்டின்) பலத்தையும் (நினைந்து)
ததை²வ = அதோடு கூட
ஸ்தா²னம்ʼ = (போருக்கான) இடம்
க்ஷயம்ʼ = (ஏற்படக்கூடிய) அழிவு
வ்ருʼத்³தி⁴ம்ʼ = அபிவிருத்தி (இவற்றையெல்லாம்)
ஸ்வபக்ஷே = தன் பக்கத்திலும்
பு³த்³த்⁴யா அனும்ருஸ்²ய = புத்தியால் ஆராய்ந்து
ஸ்வாமிஹிதம்ʼ = தனது அரசனுக்கு ஹிதமானதை
க்ஷமம்ʼ = அனுகூலமானத்தை
மந்த்ரீ = மந்திரி
வதே³த் = சொல்லவேண்டும்.

தங்களது பலத்தையும், எதிரியின் பலத்தையும் ஒப்பிட்டு, அதனால் தங்களுக்கு உள்ள சாதக பாதகங்களையும் அறிவுகூர்மையுடன் அலசி ஆராய்பவனே ஓர் அமைச்சன். அப்படி ஆராய்ந்தபின் தன் அரசுக்கு ஆதாயமான வழிகளையும் அவன் எடுத்து விளக்கிச் சொல்லவேண்டும்.

அரசுக் கட்டிலில் வீற்றிருப்பவன் தன் சொல்லுக்குத் தலையாட்டும் பொம்மைகளை விலக்கி, ஒரு இக்கட்டான காலத்தில் தனக்குச் சரியான அறிவுரைகளைக் கூறத் தயங்காதவர்களை அமைச்சர்களாக்கிக் கொள்ளவேண்டும்.

23.3 வீட்டுக்கு வீடு வாசற்படி

தன் தந்தைக்கு அறிவுரை கூறுவதுபோல் இருந்த பேச்சைக் கேட்ட இந்திரஜித் வெகுண்டெழுந்து, போருக்கு எதிராகப் பேசிய விபீஷணனை ஒரு கோழை என்று விவரித்தான். இப்படிச் சமாதானமாகப் பேசும் விபீஷணன் ஒரு அரக்கனாகவோ, அதுவும் ராவணனின் தம்பியாகவோ எப்படி இருக்கமுடியும் என்ற சந்தேகத்தைக் கிளப்பி விட்டு, தான் தேவர்களுடன் போர் புரிந்த சாகசத்தைப் பெருமையாகப் பேச ஆரம்பித்தான். இந்திரனின் யானையான ஐராவதத்தின் கொம்பை ஒடித்ததும் அல்லாமல், அந்தக் கொம்பைக் கையிலே வைத்துக்கொண்டே தான் எப்படி தேவர்களைத் தோற்கடித்து, அவர்கள் அனைவரையும் போர்க்களத்தில் இருந்தே விரட்டியடித்தேன். ஆனானப்பட்ட தேவர்களின் நிலையே அவ்வாறு ஆயிற்று என்றால், சாதாரண மனிதர்களையும், வானரர்களையும் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று விபீஷணனைப் பார்த்துக் கேட்டான்.

ஒரு சிறியவன் தன்னைப் பார்த்துக் தகாத வார்த்தையும் சொல்லி அப்படிக் கேட்டது விபீஷணனுக்கு வருத்தம் கொடுக்கவே, போரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் கூட்டத்தில் சிறியவனான இந்திரஜித் குறுக்கே பேசுவதற்கு எந்த விதத் தகுதியும் இல்லை என்று சொல்லிவிட்டு, மறுபடியும் ராவணனைப் பார்த்து போர் பற்றி யோசிக்காமல் சமாதானத்திற்கு உண்டான வழிகளை ஆராயச் சொன்னான். சீதையை இராமனிடம் திருப்பி அனுப்பிவிட்டு, அவளோடு பல வெகுமதிகளையும் கொடுத்தனுப்பி, அதுவரை நடந்ததற்கு மன்னிப்பு கேட்பதே இனி செய்யவேண்டியது என்று விவரமாகவும் விபீஷணன் சொன்னான்.

இதைக் கேட்ட ராவணனுக்கு ரத்தம் கொதித்தது. அவன் தன்மேல் பொறாமை கொண்டு, விபீஷணன் தானே ஆட்சிக்கு வரும் எண்ணத்தை வளர்த்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டை வைத்தான். மேலும் எப்படி ஒரு காட்டு யானை தன்னைப் பிடிக்க உதவிக்கு வரும் வளர்ப்பு யானைகளிடம் கவனத்துடன் இருக்க வேண்டுமோ, அப்படியே எந்த அரசனும் ஆட்சிப்பீடத்தைப் பொறுத்தவரை தன் கூடப் பிறந்தவர்களை எதிரியாக நினைத்து எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்றும் சொன்னான்.

ஸ்²ரூயந்தே ஹஸ்திபி⁴ர்கீ³தா​: ஸ்²லோகா​: பத்³மவனே க்வசித் |
பாஸ²ஹஸ்தான்னரான் த்³ருʼஷ்ட்வா ஸ்²ருʼணு தான் க³த³தோ மம || 6.16.6 ||

நாக்³னிர்னான்யானி ஸ²ஸ்த்ராணி ந ந​: பாஸா² ப⁴யாவஹா​: |
கோ⁴ரா​: ஸ்வார்த²ப்ரயுக்தாஸ்து ஜ்ஞாதயோ நோ ப⁴யாவஹா​: || 6.16.7 ||

ஸ்²ருʼணுஸ்²ருʼணு தான் க³த³தோ மம = (ராவணன் சொன்னான்) “ நான் சொல்லுவதைக் கேள்
க்வசித் = முன்னொரு சமயம்
ஹஸ்திபி⁴: = யானைகளால்
பத்³மவனே = பத்மவனத்தில்
பாஸ²ஹஸ்தான் நரான் = கைகளில் கயிறுகளுடன் இருந்த மனிதர்களைப்
த்³ருʼஷ்ட்வா = பார்த்துவிட்டு
அக்³னி: = நெருப்பு
அன்யானி ஸ²ஸ்த்ராணி = வேறு ஆயுதங்கள்
பாஸா²: = கயிறுகள்
ந: = நமக்கு
ந ப⁴யாவஹா: = பயத்தைக் கொடுப்பவை அல்ல
ஸ்வார்த²ப்ரயுகதா: = நம்மைப் பிடிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ள
ஜ்ஞாதய: = நம்மினத்தவரே
நோ = நமக்கு
கோ⁴ரா: = கொடூரமான
ப⁴யாயாவஹா: = பயத்தைக் கொடுப்பவர்கள்.
ஸ²ஸ்த்ராணி (மந்த்ர-ஸஹித-அஸ்த்ராணி) = மந்திரம் ஓதி செலுத்தப்படும் ஆயுதம் (புல்லின் நுனியாகவும் இருக்கலாம் !)

முற்காலத்தில் எப்படி பத்மா வனத்தில் காட்டு யானைகள் கையில் கயிறுகளுடன் வருபவர்களைப் பார்த்துத் தன்னைத்தான் பிடிக்க வருகிறார்களோ என்று பயப்படுமோ, அப்படியே ஆட்சிப்பீடத்தில் இருப்பவர்களும் நம் கூடப் பிறந்தவர்களே, எவருடைய தூண்டுதலினாலோ, நமது ஆட்சியைப் பிடித்துவிடுவார்களோ என்று எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

சகோதரர்களுக்குள் சண்டை, மனத்தாங்கல் என்பது சர்வ சாதாரணமாக இருப்பதுதான். அவர்களில் ஒருவன் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தால், அவனைப் பார்த்து மற்றவர்கள் பொறுமுவதும், அவனை ஏதாவது வகையில் இறக்கிவிட முயற்சி செய்வதும் எதிர்பார்க்கக் கூடியதே. அதேபோல அன்பார்ந்த சகோதரர்களைப் பற்றியும், ஒருவருக்காக மற்றவர் செய்யும் தியாகங்களைப் பற்றியும் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். ராமாயணத்திலேயே ஆட்சிபீடம் சம்பந்தம் இருந்தும், ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாக இருக்கும் இராமர்-பரதனையும் பார்க்கிறோம். அதேபோல் முன்பு கூடிக் குலாவியிருந்தாலும் பின்பு மன வேறுபாடுகள் அதிகரித்து ஒருவரை ஒருவர் கொல்லவும் தயங்காத வாலி-சுக்ரீவனையும் பார்க்கிறோம். இதுதான் உலகத்தில் உள்ள உண்மை; எவருக்கு எப்படி இருப்பது சரி என்று தோன்றுகிறதோ அவர் அப்படி இருப்பதை அவரிடமே வால்மீகி விட்டுவிடுகிறார்.

23.4 கெடுவான் கேடு நினைப்பான்

தொடர்ந்து ராமனை எதிர்த்து நிற்கும் எண்ணத்தை விபீஷணன் தடுத்துக் கொண்டிருந்தது, தன்னுடைய வீரத்தின் மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லாததை வெளிப்படுத்துவதாக ராவணன் தவறாக நினைத்தான். தனது தம்பியாய் இல்லாமல் வேறு எவராவது விபீஷணன் பேசியதுபோல் பேசியிருந்தால் அவனது தலையைச் சீவியிருப்பேன் என்றும், அவனுக்கு இருந்த ஆத்திரத்தில் சொன்னான். இன்னும் பேசி அவனது கோபத்தை மேலும் கிளறாமல், அவன் முன்னிலையிலிருந்து உடனே விபீஷணனை நகர்ந்து போகச் சொன்னான். அதைக் கேட்ட விபீஷணன் வருத்தத்துடன் கூட்டத்திலிருந்து வெளியேறும் முன்பாக அண்ணன் என்ற மரியாதை தனக்கு இன்னமும் ராவணனிடம் இருக்கிறதென்றும், தனக்கு அவன் மேல் எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் கிடையாது; அவனுடைய நல்லதற்கு என்றே தான் எல்லாம் சொன்னதாகவும், அவனுக்கு நல்லதே நடக்கட்டும் என்று தான் விரும்புவதாகவும் சொன்னான். தன்னுடைய ஒரே வருத்தம் தனது நல்ல புத்திமதியை அவன் கேட்கவில்லையே என்றும், எவரும் தனது இறுதிக் காலத்தில் இப்படித்தான் இருக்கிறார்கள் என்றும் தான் எதிர்நோக்குவதைச் சொல்லிவிட்டு வெளியேறினான்.

ந க்³ருʼஹ்ணந்த்யக்ருʼதாத்மான​: காலஸ்ய வஸ²மாக³தா​: || 6.16.20 ||

காலஸ்ய வஸ²மாக³தா: காலத்தின் பிடியில் சிக்கியவர்
அக்ருʼதாத்மான​: == நல்ல சிந்தனை இல்லாதவர்கள்
ந க்³ருʼஹ்ணந்தி, (நலன் பயக்கும்) உபதேசத்தை எடுத்துக்கொள்வதில்லை.

நல்ல சிந்தனை இல்லாதவர்களுக்குத் தங்கள் முடிவை எட்டும்போது, நல்ல அறிவுரை காதில் ஏறாது.
நடந்த நிகழ்ச்சியைத் திரும்பிப் பார்ப்பவர்களுக்கு, தான் முன்னமேயே நமக்கு வந்த நல்ல அறிவுரையைக் கேட்காது போய்விட்டோமே என்று தோன்றும். சாதாரணமாகச் சொல்லப்படும் “விநாச காலே விபரீத புத்தி” அல்லது “கேடு வரப்போகிறவனுக்குக் கெட்ட வழிதான் கண்ணுக்குத் தெரியும்” என்பதைத்தான் இங்கு வால்மீகியும் கூறுகிறார்.

23.5 வஞ்சமில்லாத் தஞ்சம்

எப்போது ராவணன் தன் எண்ணங்களில் சந்தேகம் கொண்டு, தன்னையும் எதிரியாகக் கருதி, தன்னை வெளியே போகச் சொல்லிவிட்டானோ, அப்போதிலிருந்தே தான் இலங்கையில் இனியும் இருப்பது கூடாது என்று விபீஷணன் முடிவு செய்துவிட்டான். தன் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்றும் உணர்ந்து, சத்தியமே வடிவான இராமரிடமே தஞ்சம் புகுவதுதான் சரியான முடிவு என்றும் தீர்மானித்துவிட்டான். அதனால் அவன் தன்னிடம் விசுவாசம் கொண்ட நான்கு உதவியாளர்களுடன் கடலைக் கடந்து, அக்கரையில் வானரர்களுடன் இராமர் இருக்கும் இடத்தைப் போய்ச் சேர்ந்தான். தான் இலங்கை அரசனான ராவணனின் தம்பி என்று அறிமுகம் செய்துகொண்டு, தான் அவனிடம் சீதையை திருப்பி அனுப்பிவிடுவதே முறை என்று சொன்னதற்கு தன்னை அவர்களிடமிருந்து ஒதுக்கிவிட்டதால்், தான் இராமரிடமே தஞ்சம் புகுவது என்று வந்துவிட்டதாக இராமரிடம் போய்ச் சொல்வதற்கு அங்குள்ள வானரர்களிடம் கேட்டுக்கொண்டான்.

அதை அவர்கள் மூலம் கேட்ட சுக்ரீவனுக்கு அரக்கர்கள் என்றாலே கொடியவர்கள்தான், அவர்களை நம்பமுடியாது, அவர்களில் எப்படி நல்லவர்கள் இருக்கமுடியும் என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதனால் விபீஷணனை உடனே கைது செய்து தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொன்னான். ஆனால் இராமரோ அவசரப்பட வேண்டாம், மற்றவர்களையும் கலந்து ஆலோசிப்போம் என்று வரவழைத்து, தயக்கம் ஏதும் இல்லாமல் அவர்களது எண்ணங்களைக் கூறச் சொன்னான். அவர்களில் அங்கதன் சற்று நடுநிலையாகப் பேசினான். எதிரிகள் முகாமிலிருந்து வருபவர்கள் ஆரம்பத்தில் நல்லவர்கள் போல் இருந்து, பின் ஒரு தக்க சமயத்தில் வானரர்களை அழிக்க முயற்சி செய்யலாம். அதனால் விபீஷணனை நமது முகாமுக்கு உள்ளே அனுமதிப்போம்; ஆனால் அவனது நேர்மையையும், நம்பகத் தன்மையையும் சில வழிகள் மூலம் சோதித்தாக வேண்டும் என்று அங்கதன் சொன்னான்.

ஸ²த்ரோ​: ஸகாஸா²த் ஸம்ப்ராப்த​: ஸர்வதா² ஸ²ங்க்ய ஏவ ஹி | …. || 6.17.37 ||

ஸ²த்ரோ: = எதிரியின்
ஸகாஸா²த் = அருகிலிருந்து
ஸம்ப்ராப்த: = நம்மால் அடையப்பட்டவன்
ஸர்வதா² = எப்போதும்
ஸ²ங்க்ய ஏவ ஹி = சந்தேகிக்கப்பட வேண்டியவனே

எதிரிகள் முகாமிலிருந்து வருபவர்களின் நேர்மையையும், நம்பகத் தன்மையையும் அவசியம் சோதிக்கவேண்டும்.

எல்லா விஷயங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் எண்ணங்களையும் கேட்டறிந்து, அவர்களுடன் கலந்து ஆலோசிப்பது என்பது ஒரு நல்ல தலைவனின் முக்கியமான குணங்களில் ஒன்று. இவருடன் யார் பேசுவது என்றோ அல்லது பேசி என்ன ஆகப்போகிறதோ என்று மற்றவர்களை நினைக்கவிடாமல், அவர்களை தயக்கமில்லாமல் அப்படி பேச வைப்பதே ஒரு கலைதான். ஓர் அரசோ அல்லது ஒரு குடும்பமோ, ஆட்சியிலோ அதிகாரத்திலோ உள்ள எவருக்குமே ஒரு கலந்துரையாடலை எப்படி நடத்துவது என்பதற்கு அன்று அந்தக் கடற்கரையில் நடந்த கருத்து விவாதம் ஒரு நல்ல முன்னோடி.

(தொடரும்…)

3 Replies to “இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 23”

  1. எங்களை ஒரு புது உலகுக்கு அழைத்து செல்லும் திரு ராமன் அவர்களுக்கு எங்களது வணக்கங்கள் உரித்தாகுக. என் தாத்தா அவருடைய தமிழாசிரியர் சைவத்திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் விளக்கி சொல்லிய ராமநாம மகிமையை , பேரன், பேத்திகளுடன் சொல்லி, எங்களுக்கு அருள் புரிந்தார். இந்த கட்டுரை தொடரை படிக்கும் போது, மேலும் மேலும் மன மகிழ்ச்சி பெருகுகிறது.

  2. It is very interesting and informative .As declared earlier, Veda teaches only what is right and what is wrong. The proper knowledge of that society is possible only with the help of Puranas or Ithihasas. The interaction among the brothers of that age is well depicted.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *