தர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை

ர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் என்ற ஊரில் காதல் திருமண விவகாரம் வெடித்து பெரும் வன்முறையில் முடிந்துள்ளது.

கலப்பு காதல் திருமணங்கள் என்பவை பல்வேறு தளங்களில் விரிவடைந்து வரும் நமது சமூகத்தின் யதார்த்தமாகும். கல்வியறிவுப் பரவலும், பெண்கள் சுதந்திரமாக பல துறைகளில் பணிக்குச் செல்லுதலும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இரு பாலரும் ஒருவருக்கொருவர் உரையாடவும் நட்புடன் பழகுவதற்குமான சமூக வெளிகளை ஏற்படுத்தி வருகின்றன. நகர்ப்புறங்கள் மட்டுமல்லாது, கிராமங்களிலும் கூட இப்போக்குகள் வளர்ந்து வருகின்றன.

காலம் காலமாக சாதி சமூகங்கள் விதித்து வரும் சமூகக் கட்டுப்பாடுகள் மீறப் படுகின்றன. இதனால் குடும்பங்களில் பெரும் ஏமாற்றங்களும் கசப்புணர்வும் ஏற்படலாம். சமூக இயக்கம் எதிர்பாராத திசைகளில் பீறிட்டுச் செல்லும் போது அதற்கு சமூகங்கள் தரும் விலையின் ஒரு பகுதி இது. உலகில் எல்லா சமூகங்களிலும் இத்தகைய விசயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஆனால், இத்தகைய கலப்பு காதல் திருமணங்களில் மணமகன் / மணமகள் ஆகியோரில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், அத்திருமணத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் மற்ற சாதியினரிடத்தில், அது ஒரு குடும்ப ரீதியான கசப்புணர்வு என்பதையும் தாண்டி, கடும் சாதிய வெறுப்பு விஷமாக மாறி விடுகிறது. மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் காதல் திருமணத்தை பெண் வீட்டாரான ஆதிக்க சாதியினர் அங்கீகரிக்காததால், காதல் ஜோடியினர் வேறு வழியின்றி ஊரை விட்டுத் தப்பியிருக்கின்றனர். பெண்ணின் தந்தை இதனை ஒரு மிகப் பெரும் அவமானமாகக் கருதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது மிகவும் துக்க கரமானது. அந்தக் குடும்பத்திற்கு இது ஒரு பேரிழப்பு. இதனால் வாழ்நாள் முழுதும் அந்தப் பெண் குற்ற உணர்வில் மருக நேரிடலாம். அந்தக் குடும்பத்தின் சோகத்தை நாம் பகிர்ந்து கொள்கிறோம்.  அவரது மரணத்திற்காகக் கண்ணீர் சிந்துகிறோம்.  அதே சமயம், தலித் இளைஞர் அல்லாது வேறொரு ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அப்பெண் காதலித்து, குடும்பத்தினரின் அனுமதியையும் மீறி மணம் புரிந்திருந்தால், அவர் இத்தகைய முடிவுக்குச் சென்றிருப்பாரா என்ற கேள்வியையும், ஒரு சமூகமாக நாம் கேட்டாக வேண்டும்.

இந்த மரணத்தின் பின்னணியில், ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆயிரம் பேர் கும்பல்  மணமகனின் கிராமத்திற்குள் புகுந்து 250க்கும் மேற்பட்ட குடிசைகளை தீ வைத்துக் கொளுத்தி இருக்கிறது. வீடுகளில் இருந்த அனைத்து உடைமைகளையும், குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் உட்பட, சேதப் படுத்தி இருக்கின்றனர். அங்கு வாழ்ந்தவர்கள் உயிருக்குத் தப்பியோடி இருக்கின்றனர். வன்முறையாளர்கள் அதோடு மட்டும் விடவில்லை. தற்கொலை செய்து கொண்டவரின் உடலை சாலையில் கிடத்தி, மறியல் செய்து, சாதி வெறியையும் தலித்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் மேலும் மேலும் தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

ஒரு குடும்ப சோகத்தை, தற்கொலையை முகாந்திரமாக்கி அதன் மூலம் இன்னொரு சமூகத்தினருக்கெதிரான கடும் வெறுப்பை கூட்டு வன்முறை மூலம் வெளிப்படுத்துவது என்பது, ஒரு ஜனநாயக நாட்டில், நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாத செயல். ஒரு சிறு கிராமத்தில், இத்தகைய வன்முறைக்காக ஆயிரம் பேர் உடனடியாகத் திரண்டெழுந்து வருகிறார்கள் என்பதே அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம்.

தமிழக அரசும், காவல் துறையும் இந்த வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டு வன்முறைச் செயல்பாடுகளில் குற்றவாளிகளை தனிப்பட்டு அடையாளம் காண்பது கடினம் என்பது தான், கும்பல்களுக்கு ஒரு அசாதாரண துணிச்சலை அளிக்கிறது. வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசும் சாதி அமைப்புகளின் தலைவர்களை அரசு கைது செய்து தண்டிக்க வேண்டும்.

இந்த சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் உட்பட தமிழக தலித் இயக்கங்களிடமிருந்து பெரிய அளவிலான எதிர்ப்பும் கண்டனமும் வரவில்லை – அதன்பின் எத்தகைய அரசியல் கணக்குகள் உள்ளனவோ? நாமறியோம்.

ஆனால், இந்து இயக்கங்கள் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது மிக மோசமான வரலாற்றுத் தவறாகும். தமிழக பா.ஜ.கவும், தமிழகத்தின் இந்து இயக்கங்களும் இந்த வன்முறை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப் போராட வேண்டும். கடும் உரிமை மறுப்புகளையும் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு, மதமாற்ற வல்லூறுகளின் கோர வேட்டைக்கு இரையாகி விடாமல் தங்களது சுயத்தையும் இந்து அடையாளத்தையும் நிலைநிறுத்தி, இந்து தர்மத்தையும் சமூகத்தையும் காப்பாற்றி வரும் தலித் சகோதரர்களுக்கு இந்து இயக்கங்கள் செய்ய வேண்டிய குறைந்த பட்ச கடமை இது.

முன்பு தமிழ்ஹிந்துவில் வெளிவந்த ஒரு கட்டுரையின் வரிகளை இந்து இயக்கங்களுக்கு இத்தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறோம் –

சாதீய வெறி என்னும் கொடு விஷத்தை உண்டு செரித்து சமத்துவமெனும் அருளமுதைப் பொழியும் திருநீலகண்டம் இந்துத்துவம். சாதீயக் காளியனின் தலைகளை மிதித்து நசுக்கி சமுதாயப் பொய்கையின் நஞ்சறுத்து நன்னீராக்கும் கிருஷ்ணபாதம் இந்துத்துவம். சக மனிதர்களின் உரிமைகளை மறுக்கும் எருமைத் தலையர்க்கு பாடம் புகட்டி நல்வழிப் படுத்தும் தேவியின் திரிசூலம் இந்துத்துவம்.

ஒவ்வொரு இந்துவும் தன்னில் தலித் சகோதரர்களின் வலியை உணரும் நாளே உண்மையான இந்து ஒற்றுமை உருவாகும்.

45 Replies to “தர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை”

 1. இங்கேயும் ஆதிக்க ஜாதி என்ற சொல் தானா ?

  ஹும், விளங்கும்

 2. //ஒவ்வொரு இந்துவும் தன்னில் தலித் சகோதரர்களின் வலியை உணரும் நாளே உண்மையான இந்து ஒற்றுமை உருவாகும்.//

  What about dalits feeling the pain of other people?

  After the Thevar guru pujai, dalit criminals have attacked a van of Thevars, killed 4 and 7 people are hospitalized.

  Where was your advice to dalits at the time?

  Why are you not telling the caste of those who attacked the dalits and call them as Hindus?

  Do you mean that dalits are not hindus?

  You are not honest.

 3. தர்மபுரி சம்பவம் சமூக அக்கரை கொண்ட எவரையும் மிகக் கவலையும் அறச்சீற்றமும் கொள்ளவைக்கும் சம்பவம். நமது இந்து சமூகத்துக்கு இது மாபெரும் இழுக்கு தேடித்தரும் சம்பவம். இதை இததருணத்தில் பதிவு செய்த தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவை மனமாறப் பாராட்டுகிறேன். இந்து சமுதாயத்தை நல்வழிப்படுத்த இது போன்ற கட்டுரைகள் தேவையான தருணங்களில் வரவேண்டியது மிக மிக அவசியம். நமது இந்து இயக்கங்கள் இக்கட்டுரையை பெரிதும் பொருட்படுத்தி தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவேண்டும் என மனமாற வேண்டிக் கொள்கிறேன்.

 4. ஆசிரியர் குழுவின் மிக அருமையான கருத்து.

 5. ஆர். எஸ் எஸ் ஷாகாவுக்கு முதலில் ஆதரவு கொடுங்கள். அப்புறம் இந்த ஜாதி வெறி அப்படி மறைகிறது என்று நீங்களே உணர்வீர்கள்.

 6. மிகவும் கண்டிக்கப்பட்ட வேண்டிய ஒரு வெறுப்பியல் செயல். தமிழ்ஹிந்துவின் தலையங்கம் சரியான விதத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதில் இன்னொரு அம்சத்தையும் பகிர விரும்புகிறேன்:

  காதல் கல்யாணத்தின் பொருட்டு கம்யுனிஸ்டு கட்சி சார்பில் பிராமணப்பையன் ஒருவனுக்கு அரிஜனப்பெண் ஒருத்தியை பெண் கேட்டுப்போன என் தந்தைக்கு நேர்ந்தது ஞாபகம் வருகிறது. ஊர் எல்லை டீக்கடையிலேயே பெண் வீட்டு சாதி நண்பர் ஒருவர் என் தந்தையை சந்தித்து சொன்னார்:

  “தெரிஞ்சவராப்போய்ட்டீங்க தலைவரே, இல்லாட்டி இங்கயே வெட்டியிருப்பேன், ஊருக்குள்ள போய் இத பேசினீங்கனா கட்டாயம் உயிரோட திரும்ப மாட்டீங்க…”
  “என்ன தோழர் இப்படி சொல்றீங்க, பிராமணப்பையன்தாங்க அவன், நம்ம யூனியன்தான். அவங்க வீட்டுல பேசி சமாளிச்சுரலாம்”
  “விஷயம் புரியாம பேசுறீங்க…பாப்பார வீட்டுல பொண் எடுப்போம், பொண் கொடுக்க மாட்டோம், ஒங்களுக்கு ஊர் நடைமுறை தெரியாது, பேசாம திரும்பிப்போங்க”.

  இந்த ”பழங்குடி” குறுங்குழு மனப்பான்மை தலித்துகள், ஆதிக்க ஜாதிகள் என்று அனைத்து ஜாதிக்குழுக்களிடம் வேரூன்றி இருப்பதுதான்.

  இரண்டு ஆதிக்க ஜாதி குழுக்களிடையே இப்படிப்பட்ட பிரச்சனை எழுந்தால் ஊர்ப்பெரியவர்கள் ஒன்று சேர்ந்து பேசித்தீர்ப்பார்கள். ஆனால் தலித்- ஆதிக்க ஜாதி பிளவு என்பது இருபக்கங்களிடமும் உள்ள திருமா, ராம்தாஸ் போன்ற ஜாதிப்படைத்தலைவர்களால் அவநம்பிக்கையாலும் வெறுப்பாலும் நிரம்பிய ஒரு வெளியாக ஆகியிருக்கிறது. தன் ஜாதிக்குழுவை மீறி சிந்திக்கும் தலைவர்கள்தான் நம் சமுதாயத்திற்கு இப்போதைய தேவை.

 7. அகற்ற வேண்டியது தீண்டாமை,வுயர்வு தாழ்வு ,இன கல்புணர்ச்சி தான் தவிர குல கோத்திரம் இல்லை , நம் சமயத்தில் எல்லா சம்பிரதாயுங்களும் குலம்,கோத்திரம் பெரியவர் பெயர்கள் சொல்லி தொடங்குவது வழக்கம் ,நம் சமய நெறியில் எல்லா இன மக்களையும் ரிசி வாரிசுகளாக தான் சொல்லபட்டுவுள்ளது சிறப்பு ,அதை மேற்கொண்டு நாம் தீண்டாமை அகற்றல்லாம் தவிர இணக்கலபடம் ஆக்கி அடையாளமற்ற வர்களாக ஆக்குவது தேவையா -கண்டிக்க வேண்டியது இது போன்று சுயநலம் வுள்ள kathalarkalyum தான் இவர்களின் இருவரின் ஆசைக்கு எதனை பேர் பலி ,
  எல்லா anbum தியாகத்தில் தான் சிறப்பாக சொலப்படுகிறது ,மேலும் ஆசீரியர் தாங்கள் பெற்றோர் மன நிலை அறிந்து பாருங்கள் அவர்கள் பாரம் theriyum

 8. //நமது இந்து இயக்கங்கள் இக்கட்டுரையை பெரிதும் பொருட்படுத்தி தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவேண்டும் என மனமாற வேண்டிக் கொள்கிறேன்.//

  The Hindu organizations are doing what is required to do, unlike armchair critics who only know how to condemn, criticize, tell negatively, and think negatively.

  When the caste wall was built in a village, it was hindu organizations that resolved the caste conflicts. The communists and other organizations were only blaming and criticizing. There was an article from this tamilhindu site itself about hindu organizations resolving the caste problem amicably. That is the way of hindu organizations, and not giving public statements like Karunanidhi and Manmohan Singh who do not mean what they say.

  Unfortunately, instead of supporting hindu organizations consolidation activities, the tamilhindu site has taken a negative turn just to get to be known as progressive people although the actions reeks of hypocrisy.

  Traitors who wanted fame and money are the main reason for the fall of hinduism.

 9. Marudavanan, //You are not honest// You doubt the honesty based on recent Paramakkudi happeings. Any atrocity done under the banner of caste cannot be tolerated, but this incedent is just for a love marriage and that too within Hindu society. Cross caste maarriages within Hindu society are to encouraged by all and this is not only order of the day but also need of the day.

 10. Marudavanan,//When the caste wall was built in a village, it was hindu organizations that resolved the caste conflicts.// Yes. I agree with you. But these actions are not publicised and a general Hindu mind feels that Hindu organisation’s inter caste acts are either void or inadequate. Many a times these incidents come handy for commies and they exploit these to the maximum.

  Hind organisations should do more, do better and above all their acts are to exposed for the sake of average Hindu mind’s integrity.

 11. Normaly, Hindu Organisations are not working through media, they are always maintain low profile, There is no instant or dramatic solutions to be presented by Hindu Organisations. But some peoples’ expectations are like that.

 12. c.venkatesaperumal //இது போன்று சுயநலம் வுள்ள kathalarkalyum தான் இவர்களின் இருவரின் ஆசைக்கு எதனை பேர் பலி // இது போன்ற கருத்துக்கள் அப்பட்டமாக சாதி வெறியைத் தூண்டி இந்து மதத்தையே சீரழித்து விடுபவை. இந்துமதத் தொன்மங்களின் படி எல்லா சாதிகளும் ரிஷிகளிடமிருந்து வந்திருந்தால் ஏன் இப்படி தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது? சாதிக்கலப்பு திருமணங்கள் சுயநலமானது என்று பச்சையான சாதி வெறியுடன் நீங்கள் குற்றம் சாட்டினால் இதே சாதிக்கலப்பு திருமணங்கள் எத்தனை எத்தனை நமது புராணங்களில் நிகழ்ந்திருக்கின்றன, அவையெல்லாம் சுயநலமா? அன்று நடந்த மீனவப்பெண் சத்தியவதி திருமணத்திலிருந்து இந்த நூற்றாண்டில் நடந்த சதாசிவ ஐயர் வரை எத்தனை எத்தனை நடந்திருக்கிறது? இதெற்கெல்லாம் நமது அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டதா? இதை எல்லாம் சுயநலம் என்று பச்சையாக இழித்துரைப்பதா? கலப்புத் திருமணங்களை சாதிகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற வெறியினால் கரித்துக் கொட்டினால் இதெல்லாம் சமூக மேன்மைக்கானதா?

 13. “தெரிஞ்சவராப்போய்ட்டீங்க தலைவரே, இல்லாட்டி இங்கயே வெட்டியிருப்பேன், ஊருக்குள்ள போய் இத பேசினீங்கனா கட்டாயம் உயிரோட திரும்ப மாட்டீங்க…”
  “என்ன தோழர் இப்படி சொல்றீங்க, பிராமணப்பையன்தாங்க அவன், நம்ம யூனியன்தான். அவங்க வீட்டுல பேசி சமாளிச்சுரலாம்”
  “விஷயம் புரியாம பேசுறீங்க…பாப்பார வீட்டுல பொண் எடுப்போம், பொண் கொடுக்க மாட்டோம், ஒங்களுக்கு ஊர் நடைமுறை தெரியாது, பேசாம திரும்பிப்போங்க”
  This is statement of Dalits. They are double standard.Atleast, other communites are honest.They never given and take. That’s why anger comes. Donot always comes for dalits.

 14. திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான சொந்த விஷயம். திருமணம் என்றால் என்ன, அதற்குரிய தகுதி, அதனால் ஏற்க நேரிடும் பொறுப்பு ஆகியவ யாவை என்பதை எல்லாம் முற்றிலும் அறியும் வயது வந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தால் அதில் தலையிடும் அதிகாரம் எவருக்கும் இல்லை. ஆலோசனைகள் கேட்டால் கூற மட்டுமே உரிமை உண்டு. அவற்றை ஏற்பதும் மறுப்பதும் திருமணம் செய்துகொள்ள விரும்புவோர் விருப்பம். ஒரு ஹிந்து ஆணோ ஹிந்து பெண்ணோ மாற்று மதத்தவரை மணக்க விரும்பும்போது அந்த மாற்று மதத்தில் சேருமாறு நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் அவர் தனது பாரம்பரியமான நம்பிக்கைகள், கலாசாரம் எல்லாவற்றையும் துறக்க நேரிடுகிறது. எனவே ஹிந்துக்கள் மாற்று மதத்தவரை மணப்பது ஆதரிக்கப்படுவது சரியல்ல. ஆனால் ஹிந்துக்களிடையே இரு வேறு சாதியினர் திருமணம் செய்துகொள்வதில் பெரிய பிரச்சினை ஏதும் வர வாய்ப்பில்லை. ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிக் கலாசாரக் கூறுகள் உள்ளன.
  இதனால் நிச்சயமாக இருவருக்குமிடையே கருத்து மோதல்கள் எழுவது இயற்கை. இது குறித்து சமரசம் செய்துகொள்வது அவரவர் மனப் பக்குவத்தைப் பொருத்த விஷயம். எனக்குத் தெரிந்து இரு வேறு சாதியினர் திருமணம் செய்துகொண்டபின் சமரசம் செய்துகொள்ளும் மனப் பக்குவம் இன்றி மண முறிவுவரை போகாவிட்டாலும் மன முறிவுடன் வாழ்கிறார்கள். ஒரே சாதியில் திருமணம் செய்துகொண்டவர்கள் மட்டும் மணமுறிவோ மன முறிவோ இன்றி வாழ்கிறார்களா என்று கேட்கலாம். ஆனால் ஒரே சாதியினரிடையிலான திருமணத்தில் இந்த ரிஸ்க் குறைவு. அவர்களுக்கு இரு தரப்பு உறவினர் சகாயமும் நிச்சயம் கிட்டும். ஆகவே இரு வேறு சாதியினர் தாமாகத் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்தால் அதை எதிர்க்கத் தேவையில்லை. அனுமதிக்க வேண்டியதுதான். ஆனால் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்க வேண்டியதில்லை. இப்படி இரு வேறு சாதியினரிடையே திருமணம் செயவதால் சாதி ஒழிந்துவிடும் என எண்ண வேண்டா. மணமக்கள் தேவை விளம்பரங்களைப் பார்த்தால் புதிது புதிதாகக் கலப்பு சாதிகள் உருவாகியிருப்பது புலப்படும்.
  மலர்மன்னன்

 15. // What about dalits feeling the pain of other people? – Marudavanan//
  தலித்துகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத்தான் தங்கள் சுய சிந்தனைகளையும் சுய உணர்வுகளையும் வெளியிடும் துணிவைப் பெற்று வருகின்றனர். அவர்களின் கோபாவேசம் புரிந்துகொள்ளக் கூடியதுதான். தலித் சமூகங்கள் மீது நடெங்கும் பரவலாக அத்துமீறல்களும் வன்கொடுமைகளும், தண்டனை என்ற பெயரால் மனிதத் தன்மைக்கு மாறான அசுரத் தனங்களும் இன்றளவும் நடந்து வருகின்றன. சட்டத்தின் பாதுகாப்பு அவர்களுக்கு இருந்தாலும் நடைமுறையில் அது சாத்தியமாக இல்லை. அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக உயிரையே பணயம் வைத்துப் போராட வேண்டியுள்ளது. எனவே தலித்துகள் மற்ற சாதியினரின் வலிகளை உணர வேண்டாமா எனக் கேட்பதில் பொருள் இல்லை, நியாயமும் இல்லை. வலிக்கிறது என்று சொல்லக் கூட உரிமை இல்லாதவர்களாகத்தான் தலித்துகள் இன்னமும் பல கிராமப்புறங்களில் இருந்து வருகிறார்கள். சில இடங்களில் அவர்களின் சீற்றம் எல்லை மீறுவது புரிந்துகொள்ளக்கூடியதுதான். தலித்துகள் மாற்று சாதியினர் மீது தாக்குதல் நடத்துவது மிக அபூர்வமாகவும் பழிக்குப் பழி வாங்குவதாகவும்தான் உள்ளது. இதில் மத மாற்றிகள் உள்ளே புகுந்து அவர்களைத் தூண்டி விடுகிற போக்கிரித்தனமும் நடக்கிறது. குறிப்பாகத் தென் மாவட்டங்களில் மறவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே உள்ள பகைமையை அகற்ற சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் அரும்பாடுபட்டபோது மத மாற்றிகள் தலித்துகளைத் தூண்டி விடுவதைக் கண்டேன். தென் மாவட்டங்களில் விசுவ ஹிந்து பரிஷத் கிராமத்துக்கு கிராமம் ஒரு குழு அமைத்து இரு தரப்பினரையும் ஒன்று படுத்துவதில் முழு மூச்சுடன் இடைவிடாது முனைய வேண்டும் என விரும்பினேன். இனியாவது இதில் அவர்கள் கவனம் செலுத்தினால் நல்லது.
  -மலர்மன்னன்

 16. மிக வருத்தமளிக்கும் சம்பவம். மிகவும் தொலைவில் இருந்தாலும் தமிழக ஹிந்துக்கள் பற்றி அவ்வப்போது அறிய நான் நாடுவது தமிழ் ஹிந்து தளம் தான். பாதிக்கப்பட்ட தலித் சஹோதரர்களின் வலியைப் போக்க சகாயம் செய்யலாமே ஒழிய அவ்வலியைப் போக்குவது என்பது தொடர்ந்து ஹிந்து இயக்கங்கள் அவர்களுடன் பணியாற்றுவது மூலமும் ஹிந்துக்களில் பல ஜாதியினரிடையே இணக்கச்சூழலை வளர்ப்பது மூலமுமே (ஊத்தப்புரம் கோவிலில் ஹிந்துக்களின் ஒற்றுமை நல்ல முயற்சி) சாத்தியம். ஹிந்து இயக்கங்கள் தளர்வின்றி ஹிந்துஸ்தானம் முழுதிலும் சமூஹ ஒற்றுமைக்கு பாடுபட்டு வருவது நிச்சயம் நன்மை பயக்கும்.

  ஜாதி இணக்க விவாஹங்கள் நல்ல முயற்சி. அதிலும் இருவீட்டார்கள் இணக்கத்துடன் என்றால் மிகவும் நன்று. இதற்கான சாத்தியக்கூறுகள் இன்றைய சூழலில் நகரங்களில் சாத்தியமே. க்ராமப்புறங்களில் நிலமை வேறு எனப்புரிகிறது.
  ஒரே ஜாதியில் என்றாலும் காதல் திருமணங்கள் என்ற விஷயம் சமூஹத்தில் இன்னும் சந்தேஹாஸ்பதமாகவே பார்க்கப்படுகிறதே.

  \\\\There is no instant or dramatic solutions to be presented by Hindu Organisations.\\\

  சரி தான். தலித் சஹோதரர்கள் மற்றும் அவர்களுடன் அநியாயமாய் பிணக்கில் ஈடுபட்ட மற்றைய ஹிந்து சஹோதரர்கள் இருவரிடையிலும் ஊத்தப்புரம் போன்ற இணக்கத்திற்கு பாடுபட்டால் முருகனருளால் நன்மையே பயக்கும்.

  பின்னும் மாறி வரும் சூழலில் ஹிந்து இயக்கங்களின் கருத்தை ப்ரதிபலிக்கும் வண்ணம் வெகுஜன சஞ்சிகைகள், மற்றும் டெலிவிஷன் இவை ஹிந்து இயக்கங்களால் நடத்தப்பெறுவதும் மிகவும் அவசியமான ஒன்று.

 17. \\Marudavanan, //You are not honest// You doubt the honesty based on recent Paramakkudi happeings.\\

  Mr. Okai,

  I doubt the honest not based on recent Paramakkudi happening. I doubt the honesty based on no advice from this site when dalits killed people of other caste.

  Before responding read what i wrote.

  // அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக உயிரையே பணயம் வைத்துப் போராட வேண்டியுள்ளது. எனவே தலித்துகள் மற்ற சாதியினரின் வலிகளை உணர வேண்டாமா எனக் கேட்பதில் பொருள் இல்லை, நியாயமும் இல்லை.//

  Mr. Malarmannan,

  There is no need for Dalits to kill Thevar community people returning from Gurupujai. Dalits are not the only people who have family and human relatives. Thevars are also human beings who have family, hard earned properties, and hope.

  Are not those Thevar people who got killed by Dalits have family? Are not they human beings? They also have heart and they are also human beings. Why you are crying crying only for Dalits?

  If there is no need for Daltis to know the pain and suffering of others, they will continue to kill our people. You want that. You want our people to get killed by people who need not have to realise the pain of us.

  Thevars also are oppressed people. Dalits may be liberated 300 years before. But, Thevar people are liberated only after our god Pasumpon Muthuramalinga Thevar aiya fought for our freedom. We got liberated very late after very long time. Even before us, the Dalits are liberated.

  Before you support killing of Thevar people, listen to your mana saachchi.

 18. வெளிப்படையாக வன்னியர்கள் என்றும் காடுவெட்டி குரு என்றும் எழுதுதலே நேர்மைத் திறம். குற்றம் செய்பவர் இன்னார் என்று தெரிந்தும் அடையாளம் காட்டாவிட்டால் குற்றங்கள் மென்மேலும் தொடரும். கட்டுரை ஆசிரியர் சொல்வதுபோல கும்பலாக வன்முறை செய்யும்போது குற்றவாளி இவர்தான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது என்பது போலவே, ஆதிக்கம் செய்து கொலைவெறி வன்முறையில் இறங்குவோரை ஊடகங்கள் அடையாளம் காட்டாமல் பூசி மெழுகுவது அடுத்தக் குற்றத்துக்குத் துணைபோவதுதான்/ விதை போடுவதுதான் ஆகும்.

 19. கற்கால குழுக்கள் போல் உள்ளது இவர்களின் நடவடிக்கைகள். கல்வி கண்ணைத் திறந்துவிடும் என்பார்கள். ஆனால் கண்மூடித்தனமான ஜாதிவெறி தான் வளர்ந்துள்ளது. பாரம்பரிய பிராமணாள் ஹோட்டல் என்று பெயர் வைத்தால் குதிக்கும் திராவிட(திருட) கழக வீரமணி தர்மபுரிக்கு ஒரு தடவை சென்று ஜாதிவெறியை தணிக்க ஒரு போராட்டமோ /ப்ரசங்கமோ நிகழ்த்தி விட்டு திரும்பி(?) வரலாமே?துணைக்கு சுப வீரபாண்டியன், வைகோ , தொல்(லை) திருமா போன்றவர்களையும் , தமிழ்க்குடி தாங்கி டாக்டர் ஐயா அவர்களையும் அழைத்துக் கொண்டு சமாதான சகவாழ்வு நற்செய்தி பிரசங்கத்தை நடத்த முன்வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

 20. தர்மபுரி சம்பவத்தின் மூலம் சில விஷயங்கள் நமக்கு புரிய வேண்டும்.
  1. ஹிந்து சமுதாயத்தில் உள்ள பிளவுகளை சரி செய்யாமல் பெரிது படுத்திக் கொண்டு லாபம் சம்பாதிக்கும் சிலரின் கைகளில் நமது அரசியல் தலைவர்கள் வோட்டுக்காக சிக்கியுள்ளார்கள்.
  2. இத்தனை ஆண்டுகளாக ஜாதியை ஒழிப்போம் என்று மார் தட்டிக் கொண்டு திரிந்தவர்கள் சமுதாயத்தில் ஒற்றுமை கொண்டு வர முடிய வில்லையா, அல்லது அதை வைத்துக் கொண்டே தாழ்த்தப்பட்ட சமுதாயத்து வோட்டுகளை சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்களா, அல்லது உண்மையிலேயே ஒற்றுமை உண்டாக முயற்சி செய்து தோல்வி கண்டார்களா.
  3. அம்பேத்கார் பெயரிலேயே எத்தனை அமைப்புகள், கட்சிகள் தாழ்த்தப் பட்ட மக்களை பல கூறுகளாக போட்டு ஒன்று சேரவிடாமல் செய்து லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  4. இந்த உண்மைகளை மக்கள் புரிந்துகொண்டு அரசியவாதிகளை விரட்டிவிட்டு சமுதாயத் தலைவர்கள், சமயத் தலைவர்களைக் கொண்டு பிரச்சினையைத் தீர்க்க முயல வேண்டும்.
  5. இந்த பிரச்சினையில் அரசியவாதிகள் இருக்கும் வரை பிரச்சினை தீரப் போவதில்லை என்பதை உணர வேண்டும். உத்தாபுரம் இதற்க்கு உதாரணம்.

 21. தமிழகத்தில் திக, திமுக , மற்றும் பாமக ஆகிய மூன்று தீய சக்திகளும் ஒன்றுகூடி சமுதாயத்தில் சாதி வெறுப்பை தொடர்ந்து வளர்த்து வந்துள்ளன. சாதியற்ற சமத்துவ சமுதாயம் என்று பொய் சொல்லி, இன்று ஒவ்வொருசாதிக்கும் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீடு தாருங்கள் என்று நம் அரசியல் தலைவர்கள் கூப்பாடு போடுவது வெட்ட வெளிச்சமாகிறது.

  இருபதாம் நூற்றாண்டில் தொடங்கி, இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டு வரை , கற்பனையான திராவிடநாடு என்ற பொய்யை நம்பி, மக்களை கூறுபோடும் இயக்கங்களே இவை. காடு வெட்டி குரு என்ற பாட்டாளி மக்கள் கட்சி நண்பர் , வன்னியர் சங்க கூட்டத்தில் பேசும் போது, கலப்பு திருமணம் செய்துகொள்வோருக்கு எதிராக விடுத்த அச்சுறுத்தல், மிரட்டல் எல்லா பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது.

  ““விஷயம் புரியாம பேசுறீங்க…பாப்பார வீட்டுல பொண் எடுப்போம், பொண் கொடுக்க மாட்டோம், ஒங்களுக்கு ஊர் நடைமுறை தெரியாது, பேசாம திரும்பிப்போங்க”.- இதுபோன்ற சாதீய நச்சுக்களை அரசியல் தலைவர்களே வளர்த்து தண்ணீர் ஊற்றி , உரமிட்டு வந்துள்ளனர். கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அரசு ரயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை என்று சட்டத்திருத்தம் செய்யவேண்டும். ஐந்து வருடங்களில் சாதி நாய்கள் செத்து, சாதிகளை வைத்து அரசியல் செய்யும் திராவிட இயக்க பொய்யர்களும் மண்டையை போட்டு விடுவர். திராவிட இயக்கங்களும், அவற்றின் அடிவருடிகளும் ஒழிந்தால் தான் நாடு உருப்படும்.

 22. தலித்துகள் மீது பலவகையான ஆதிக்கங்கள் காலம் காலமாகச் செலுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அவர்களை அடக்கி ஒடுக்கி அவர்களது உழைப்பையும் பொருளையும் சுரண்டும் வகையானவையே அவை. அத்தனையையும் மீறி அவ்வப்போது சில தலித்துகள் பிரகாசித்திருக்கின்றனர். அவர்களை உதாரணமாகக் காட்டி தலித்துகள் மீது எந்த வகையான ஒடுக்கு முறையும் கையாளப்படவில்லை என்று சொல்லி தற்போதைய அறிவு ஜீவிகள் தப்பிக்கப் பார்க்கிறார்கள் என்பது ஒரு புறம். இவர்களுள் வருவோரே பிராமணர்கள்.

  இன்னொரு புறம், நில உரிமைகள், பயன்பாடுகள், கிராமியப் பொருளாதாரம் சார்ந்து இன்னொரு விதமான ஆதிக்கமும் சுரண்டலும்… மாறிவரும் சமூகப் பொருளாதாரச் சூழலில் தலித்துகள் தொடர்ந்து பண்ணைக் கூலிகளாகவும், கொத்தடிமைகளாகவும் இருக்காமல் பொருளாதார / கல்வி ரீதியான விடுதலையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி விட்டார்கள். அம்பேத்கார் உள்ளிட்டவர்களால் பெறப்பட்ட கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றிலான இட ஒதுக்கீடு இந்த விஷயத்தில் பெரும் அளவில் உதவியுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் பிற மேச்சாதியினர் ஒவ்வொரு பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் இடங்களில், அவர்களுக்கும் தலித்துகளுக்குமான மோதல்கள் வருகின்றன. இதன் காரணம் இப்படிப்பட்ட சாதியினர், குறிப்பாக வன்னியர், தேவர், நாடார், கொங்கு வேளாளர்கள் ஆகியோர். இவர்களுக்கு நில, அரசியல் ஆதிக்கத்தைச் செலுத்துவதில் தொடர்ந்து பண்ணை அடிமைகள் தேவை, ஆனால் தலித்துகள் சுரண்டலில் இருந்து விடுதலை, பொருளாதார விடுதலை ஆகியவை நோக்கி பயணிக்கின்றனர். அவர்களும் அரசியலில் முக்கிய இடத்தை நோக்கி நகர்வுகளைச் செய்கின்றனர். இதனால் அவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை இந்தச் சாதியினர் செய்கின்றனர். கும்பலில் திருடிய கும்பலே திருடன் திருடன் என்று கத்திக் கொண்டு ஓடுவதைப் போல இவர்கள் தாங்கள் செய்த/ செய்துவரும் அடக்குமுறையையும் சுரண்டலையும் மறைக்க ஓங்கி ஒலிக்க பிராமணர்களைக் கண்டபடிப் பேசி திசை திருப்புகின்றனர், இதில் வெற்றியும் பெற்று விட்டனர். பிராமனர்கலால்தான் தலித்துகள் சொத்துரிமை, தீண்டாமை ஆகிய விஷயங்களில் பெருமளவில் பாதிக்கப் பட்டனர் என்பது உண்மை ஆனாலும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் பிராமணர்கள் பெருமளவு திருந்தி விட்டார்கள் என்றே கூற வேண்டும் (இன்னும் திருந்த வேண்டும் என்பது வேறு விஷயம்) ஆனால் தம்மைப் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று காட்டி கல்வி, வேலைவாய்ப்பு எனவும் பொருளாதாரச் சலுகைகளையும் பெற்று ஓரளவு முன்னேறிவிட்ட இந்த ஆதிக்கச் சாதியினர் இப்போது தலித்துகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும்போது இவர்களைத் தோலுரிக்காமல் மூடி மறைத்துப் பூசி மெழுகி எழுதுவது சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயலுக்கும், தொடர்ந்து தலித்துகள் கொல்லப்படுவதற்குமே வழி வகுக்கும்.

  குறைந்த பட்சம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாகவேனும் தலித்துகள் ஒடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவு. இப்படி இருக்க, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை கடந்த அறுபது ஆண்டுகளாக இருந்தது போதும் என்ற வகையில் மேச்சாதியினர் பேசி வருவது மன வேதனை தருகிறது. இப்படிப் பேசுபவர்கள் பொருளாதார முன்னேற்றம் என்ற ஒரு குறியீட்டை தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டில் புகுத்த பிரசாரம் செய்கின்றனர். இந்த வகையில் பிராமணர்களும், செட்டியார்களும், முதலியார்களும், ரெட்டியார்களும், நாயுடுக்களும் வருகின்றனர். ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சாதியினர் வெறும் அறுபது ஆண்டுகளில் முன்னேறி விட முடியுமா? என்ற கேள்வி இவர்களுக்கு எட்டிக்காயாகக் கசக்கிறது.

  ஆக தலித்துகளையும் அவர்களது பிரசினைகளையும் அணுகும் பொது எல்லா மேச்சாதியினரும் தத்தம் சாதி நன்மையைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கின்றனர். இப்படி இருந்தால் எப்படி வரும் இந்து ஒற்றுமை? தலித்துகள் தங்களை இன்னமும் இந்துக்கள் என்று அடையாலப்படுத்தான் வேண்டுமா என்று அம்பேத்கார் அறுபது ஆண்டுகளுக்கும் முன்னர் கேட்ட கேள்வி மாறவே இல்லை.

  இன்னொரு பக்கம்

 23. 20 வருடம் கஷ்டப்பட்டு வளர்த்த தனது பெற்றோருக்கு துரோகம் செய்து நேற்று வந்தவனுடம் சென்ற தோடு மட்டும் இல்லாமல் தனது தந்தை தற்கொலை
  செய்து கொள்ள காரணமாக இருந்த அந்த பெண்ணுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்….

  ஒருவர் தற்கொலை செய்து கொண்டுவுள்ளார். அதை பற்றி யாருமே பேசுவதாக தெரியவில்லையே?

  காதல் இயற்கையாக வந்தால் தவறு இல்லை. வம்புக்கு இழுப்பதர்காவே இது போன்ற சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. இது எனது நேரடி அனுபவம்.

  முதலில் பாதிக்கப்பட்டது வன்னியகளுடைய வீடு… தலித்துக்கள் வீடு அடித்து உடைக்கப்பட்டவுடன் கண்டனம் தெரிவித்த தமிழ் ஹிந்து… வன்னியர்கள் வீட்டை சூறையாடிய தலித் என்று பெயரை வைத்து கொண்டு ….. வன்முறை செய்யும் கூட்டத்திற்கு கண்டனம் செய்யாமல் இருப்பதன் காரணம் என்ன?

  என்னை பொறுத்தவரை கலவரதிக்கு இரண்டு பேருமே காரணம்… ஆதலால் சமுதாய பிரச்னையை ஏற்படுத்திய இரண்டு கூடத்திற்கும் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

  இந்த பிரச்சனையில் தான் பெற்ற மகளையும், தனது கணவனையும் ஒரு சேர இழந்த அந்த பெண்ணுக்கு எனது ஆழ்த்த அனுதாபத்தையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

  இதில் தேவையே இல்லாமல் பாஜகவை இழுக்க வேண்டாம். தர்மபுரியில் பாஜக ஒன்றும் பெரிய கட்சி இல்லை.. இது போன்ற இடத்தில சமந்தப்பட்ட மக்களை பார்ப்பது என்பது சாதரணமான விஷயம் அல்ல….

 24. தமிழ் இந்து தளம் சரியான திசையில் செல்கிறது என்பது இந்த கட்டுரையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை எழுதிய கட்டுரை ஆசிரியருக்கு ஆதிஇந்துக்கள் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.
  ம.வெங்கடேசன்

 25. ///முதலில் பாதிக்கப்பட்டது வன்னியகளுடைய வீடு… தலித்துக்கள் வீடு அடித்து உடைக்கப்பட்டவுடன் கண்டனம் தெரிவித்த தமிழ் ஹிந்து… வன்னியர்கள் வீட்டை சூறையாடிய தலித் என்று பெயரை வைத்து கொண்டு ….///

  இப்படித்தான் ஒரு போய், வதந்தியாகிப் பின்னர் செய்தியாகிறது, வன்முறைக்கு வித்திடுகிறது.

  கலப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு என்ற பெயரில் நத்தம்காலனி தலித்துக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது வன்னியர்கள்தான். இந்தக் கட்டுரையில் இருக்கும் சுட்டிலில் உள்ள செய்தியில் இருந்து சில வரிகள்.

  ///மேலும் ஆத்திரம் அடைந்த அவர்கள் அந்த கிராமத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து அங்கிருந்து வாகனங்கள், மற்றும் பொருட்களை சேதப்படுத்தி தீ வைத்தனர். மேலும் பள்ளி குழந்தைகளின் சான்றுகள், புத்தகங்கள், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு கிராமத்தையே சூறையாடினர். இதனால் பயந்து போன பொதுமக்கள் உயிர் பிழைக்க குடும்பத்துடன் அருகில் உள்ள தோட்டத்திற்குள் சென்று பதுங்கி கொண்டனர்.///

  உடைமைகள் என்றால், பள்ளிக் குழந்தைகளின் புத்தகங்கள், ஆடை, சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை எரித்திருக்கிறார்கள். ஆக, நோக்கம் தலித்துகளின் சமுதாய/ கல்வி/ பொருளாதார விடுதலையைத் தடுக்க வேண்டும் என்பதே.

  தலித்துகளது சமுதாய விடுதலையைச் சகிக்க முடியாத செல்லன்கொட்டாயை சேர்ந்த வன்னியர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற முறையில் அரசின் சலுகைகளையும், கல்வி/ வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டையும் அனுபவிக்க எந்தத் தகுதி பெற்றிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு என்ன பதில்?

 26. நல்ல கட்டுரைதான். இருந்தாலும் ஏன் நம் வெகுஜனப் பத்திரிகைகள் போல தமிழ் ஹிந்துவும் ஆதிக்க ஜாதி என்ற சொல்லைப் பயன் படுத்துகிறது? நேரடியாக வன்னியர்கள் என்ற ஜாதிப் பெயரைப் பயன் படுத்துவதே முறையானதாக இருக்கும். ஆகவே ஆதிக்க ஜாதி என்ற ஜல்லியை எடுத்து விட்டு உண்மையான ஜாதிப் பெயரைப் நேரடியாகப் பயன் படுத்தவும். அதுவே நேர்மையான செய்தியாக இருக்கும்

  விஸ்வாமித்ரா

 27. இந்த சம்பவத்தை கண்டித்தோ அல்லது எது தீர்வோ, அதை முன்வைத்து, இந்து முன்னனி தலைவர் ஒரு அறிக்கை விட வேண்டியதுதானே? அது செய்தித்தாள் படிக்கும் சாதாரண ஹிந்துவிற்கு தேவையாக இருக்கிறது என்பது தெரியாமல் போய்விட்டதோ? கூடவே அங்கு சமரசம் ஏற்பட என்னவெல்லாம் செய்கிறோம் என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும். நாடார் சமுகத்தினரைப் பற்றி பாடப் புத்தகங்களில் தவறாக வந்ததற்கும் எந்தவொரு ஹிந்து உணர்வையும் காணோம்!

 28. //தமிழ் இந்து தளம் சரியான திசையில் செல்கிறது என்பது இந்த கட்டுரையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை எழுதிய கட்டுரை ஆசிரியருக்கு ஆதிஇந்துக்கள் கடமைப்பட்டு இருக்கிறார்கள். ம.வெங்கடேசன்//

  என் கருத்தும் இதுவே…

 29. அஞ்சன்குமார்
  //குறைந்த பட்சம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாகவேனும் தலித்துகள் ஒடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவு.//
  எந்தெந்த சாதி எந்தெந்த காலக் கட்டத்தில் ஆதிக்கத்தில் இருந்தது; அவ்வப்போது இவ்வடுக்கு எப்படி மாறியது அல்லது மாறவில்லை? இதையெல்லாம் விளக்க முடியுமா?

 30. பல ஆண்டுகளாகவே இஸ்லாமிய, கிறிஸ்தவ சதிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒன்றும் மிகைப் படுத்தல் இல்லை. ஆதாரத்துடன் மற்றும் அனுபவத்துடன் இதைப் பதிவு செய்கிறேன். காதல் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்தல் அதில் ஒன்று.சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவனைக் குறிவைத்து பெண்ணைப் பழகவிடுதல் இரு மதத்தினருமே கையாளும் திட்டம். ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் கேரளாவில் நடைபெற்ற மிகப் பெரிய சதி. உச்சநீதி மன்றத்தினாலேயே கடுமையாக கண்டிக்கப் பட்ட ஒன்று. சென்ற முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தென் தமிழகத்தில் நடைபெற்ற ஜாதிக் கலவரத்தில் சர்சசுகளின் பங்கு இருந்தது என்பது காவல் துறையினருக்கு நன்றாகவே தெரியும். அரசின் உத்தரவின் பேரில் வெளியிடப்படவில்லை. கலவரம் நடந்த்தசுவடு மாருவதற்குள்ளேயே ராஜபாளையத்தில் 750 பேருடன் ஆர்.எஸ்.எஸ். முகாம் 20 நாள் எந்த பிரச்சினையும் இல்லாமல் நடந்தது. இது எப்படி முடிந்தது.? காரணம் அந்த முகாமில் பங்கு பெற்றவர்கள் ஜாதியைப் பற்றி கவலைப் படவில்லை.

  சமீபத்திய கலவரத்தில் பங்கு பெற்ற இரண்டு ஜாதியினரிலும் ‘ ஜாதி பேதமில்லாத சமுதாயம் உருவாக்குவோம்’ என்று மேடைகளில் முழங்கி மக்களை ஏமாற்றி வந்த எல்லா கட்சியினரும் இருக்கிறார்கள். என்ன கேவலம் இது? ஹிந்து சமுதாய ஒற்றுமைப் பணி செய்யும் அமைப்பினர் மக்களுக்கு உணர்த்தவேண்டிய தருணம் இது. இந்த வலை தளத்தில் பின்னூட்டம் இடுபவர்கள் இத்துடன் தங்களது பனி முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். மக்களை சந்திக்கும் பணியில் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்ற வரவேண்டும். எல்லோரும் சேர்ந்து பணயாற்றினால் மாற்றம் கொண்டு வர முடியும்.

 31. இது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் தவறே. இது போன்று பிரச்சனைகள் நடக்கும் என்று தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுவும் தவிர இது போன்ற ஒரு சம்பவம் நடக்க போகிறது என்று காவல்துறைக்கு முன்பே தெரிந்து இருக்க வாய்ப்பு உண்டு. அமெரிக்க துதரகம் பாதிக்கப்பட்ட பொழுதும் காவல் துறை இதை தான் செய்து இருக்கிறது. காவல் துறை ஏவல் துறையாகி போனது வேதனை தரும் விஷயம்.

  இது இரண்டு பக்கம் சேர்ந்து செய்த ஒரு திட்டமிட்ட காட்டுமிராண்டி தனம்.

 32. inku ulla ethanai pear thankal pen kulanthaikalukku dhalithai kalyaanam seithu vaikka thayaar.avarkal kaathalithaal naankal thadukkamaattom entru koori thappikka ninaikka kootaathu.thaankalaakavea munvanthu kalyaanam seithu vaikka thayaara.inku ullavarkal vanniyar mattum saathi veriyarkal entru solkiraarkal.athu thavaru.

 33. ” நல்ல கட்டுரைதான். இருந்தாலும் ஏன் நம் வெகுஜனப் பத்திரிகைகள் போல தமிழ் ஹிந்துவும் ஆதிக்க ஜாதி என்ற சொல்லைப் பயன் படுத்துகிறது? நேரடியாக வன்னியர்கள் என்ற ஜாதிப் பெயரைப் பயன் படுத்துவதே முறையானதாக இருக்கும். ஆகவே ஆதிக்க ஜாதி என்ற ஜல்லியை எடுத்து விட்டு உண்மையான ஜாதிப் பெயரைப் நேரடியாகப் பயன் படுத்தவும்.- ”

  விஸ்வாமித்ரா அவர்களின் இந்த கருத்து சரியானதே ஆகும்.

 34. ராம்கி

  ///எந்தெந்த சாதி எந்தெந்த காலக் கட்டத்தில் ஆதிக்கத்தில் இருந்தது; அவ்வப்போது இவ்வடுக்கு எப்படி மாறியது அல்லது மாறவில்லை? இதையெல்லாம் விளக்க முடியுமா?///

  நிச்சயம் முடியும், குறைந்த பட்சம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்க்குச் செய்யப் பட வேண்டிய அந்த ஆராய்ச்சிக்கான நேரம் எனக்கு இப்போது இல்லை. எது எப்படி ஆனாலும், மையக் கருத்து தலித்துகள் குறைந்த பட்சம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாகவேனும் ஒடுக்கப் பட்டு உள்ளனர் என்பதே. சமநிலை அடைய வெறும் அறுபது ஆண்டுகள் போதாது என்பதே. நெடுங்காலமாக ஒடுக்கப் பட்டவர்கள் ஆதலின் சமூக பிரச்சினைகளையும் இந்து மதத்தையும் கூட, தலித்துகளின் பார்வையில் நோக்காவிட்டால், அணுகா விட்டால் அது சரியான தீர்வை அளிக்காது என்பதே.

 35. சபாஷ் அஞ்சன்குமார்
  //நிச்சயம் முடியும், குறைந்த பட்சம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்க்குச் செய்யப் பட வேண்டிய அந்த ஆராய்ச்சிக்கான நேரம் எனக்கு இப்போது இல்லை//
  எந்த ஆய்வும் இல்லாமல் முடித்துவிட்டீர்களா?
  தலித்துகளுக்கெதிரான வன்முறையை கண்டிப்பதோடு இப்படி அள்ளிவிடுவதைத் தவிர்க்கவும்! இது விவாதத்தைத் திசை திருப்பும். இவ்வாசிரியர் குழுவின் முயற்சிகளை நீர்த்து போகக் செய்யும். (இது இன்னும் கூறாக வேண்டும் என்பது என் வேண்டுகோள்). மேலும் நீங்கள் இந்த அள்ளிவிடுதலை வேறு ஒரு துவக்கபுள்ளியாக்குவீர்கள்.

 36. அனைவருக்கும் வணக்கம்,

  நாம் பிரச்சினைக்கான தீர்வைப்பற்றி யோசிக்காமல் ஒருவர்மீது ஒருவர் குறைகூறுவதில் மூழ்கிவிட்டோம் என்று நினைக்கிறேன், நமதுநாட்டையும் தர்மத்தையும் குலைக்க விரும்பும் சுயநலவாத உள்நாட்டு, வெளிநாட்டு சத்திகளின் விருப்பப்படி ஆடும் பொம்மைகளாக நாம் மாறிவிட்டோம் போல் தெரிகிறது.

  ஆசிரியர் பயன்படுத்திய “ஆதிக்கசாதி” எனும் வார்த்தையும் “தலித்”கள் ஹிந்துகள் அல்லாதவர்கள் போன்று தோற்றம் காட்டும் போக்கும் மிகவும் தவறானவை. வரலாற்றை ஆழ்ந்துநோக்கினால் ஒவ்வொருசாதியுமே மற்ற சாதியைப்பொருத்தவரை ஆதிக்கசாதியாகத்தான் தெரியும்.

  ஒருசிலகாலகட்டங்களில் நடந்த செயல்களுக்க்காக ஒட்டுமொத்தமாக (தலித் அல்லது தலித் அல்லாத) ஒருசாதியைச்சேர்ந்த அனைவரையும் குறைகூறுவது தவறு. பேச்சுகளும் காரசாரமான விமர்சனங்களும்மட்டுமே அனைத்தையும் சாதித்துவிடாது, நாம் அனைவரும் களத்தில் இறங்கிப் பாடுபடவேண்டும்.

  சாதிப்பிரச்சினைகளுக்குக் காரணம் திருமா,மருத்துவர்,கலைஞர் மற்றும் கம்யூனிஸ்டுகள் போன்ற அரசியல் வியாதிகள்தான் அவர்கள் அனைவரும் அவர்களுக்குள் அடித்துக்கொள்வதுபோல் காட்டிக்கொண்டாலும் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய சுயநல மட்டைகள்தான். சிறுசிறு பிரச்சினைகளையும் ஊதிப் பெரிதாக்கி பிளவை உண்டாக்கி குளிர்காயும் இவர்கள் உண்மையில் துரியோதணனை அடுத்துக்கெடுத்த சகுனியைப்போல் தத்தமது இனத்தை கெடுத்துப்பிழைப்பவர்களாவர்.

  நாம் செய்யவேண்டியது நமது மக்களை இந்த சாதி வெறியர்களின் மாயவலையிலிருந்து மீட்கவேண்டும். அதை இந்து இயக்கங்கள்தான் செய்யவேண்டும் என்று எண்ணாமல் நாம் அனைவருமே முழுமனதோடு செய்தால்தான் நாடு உருப்படும்,

 37. வணக்கம்,
  நான் வேலைசெய்துகொண்டுள்ளேன் என்பதையும் இங்கு வெளியிட விரும்புகிறேன்
  நன்றி

 38. ” சாதிப்பிரச்சினைகளுக்குக் காரணம் திருமா,மருத்துவர்,கலைஞர் மற்றும் கம்யூனிஸ்டுகள் போன்ற அரசியல் வியாதிகள்தான் அவர்கள் அனைவரும் அவர்களுக்குள் அடித்துக்கொள்வதுபோல் காட்டிக்கொண்டாலும் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய சுயநல மட்டைகள்தான். சிறுசிறு பிரச்சினைகளையும் ஊதிப் பெரிதாக்கி பிளவை உண்டாக்கி குளிர்காயும் இவர்கள் உண்மையில் துரியோதணனை அடுத்துக்கெடுத்த சகுனியைப்போல் தத்தமது இனத்தை கெடுத்துப் பிழைப்பவர்களாவர். “:- தீரனின் இந்த வரிகள் மிக அற்புதம். மிக சரியாக சொல்லிவிட்டார். அவருக்கு நம் வாழ்த்துக்கள்.

 39. நடந்தது என்ன?

  பெண் வீட்டினர் என்ன சொல்லுகிறார்கள்?

  சட்ட விரோத திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. பள்ளியில் உள்ள வயது சான்றின் படி , அவருக்கு வயது 21 -க்கும் குறைவே. எனவே, இது சட்டரீதியாக செல்லாத ஒன்று. அந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் , சட்ட முரணான இந்த திருமணத்துக்கு உடன்பட்ட தம்பதிகளுக்கு போலிசு பாதுகாப்பு செய்து கொடுத்தது குற்றம். எனவே, கடமையில் தவறிய காவல் துறையை சேர்ந்த கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தலித்துக்கள் வாழும் சில பகுதிகளில் , சுவற்றில் சில விஷமிகள் விளம்பரங்கள் எழுதி, உயர் சாதிப்பெண்கள் வயிற்றில் தான் உங்கள் கரு வளரவேண்டும் என்று தெரிவித்து உள்ளதாகவும், இதுபோன்ற விஷம பிரச்சாரங்கள் காரணமாகத்தான் , திராவிட இயக்கங்களால் வளர்க்கப்பட்ட சாதிவெறி மேலும் நெய்யூற்றி வளர்க்கப்பட்டு, வன்முறை சம்பவங்களாக மலர்கிறது என்றும் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். மேலும் தலித்துக்கள் வாழும் பகுதிக்குள் உயர்சாதி பெண்கள் செல்லும் போது , தேவை இல்லாமல் கேலி கிண்டல் செய்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. சாதிகளை சான்றிதழ்களின் மூலம் மட்டுமே வாழவைத்து, சாதி ஒழிப்பு என்று பொய் பிரச்சாரம் செய்து வாழ்பவை திராவிட இயக்கங்கள் மட்டுமே. சாதி அரக்கன் ஒழிந்தால், திராவிட மோசடி இயக்கங்கள் அடுத்த நாளே மண்டையை போட்டுவிடும். தமிழகம் உருப்பட வேண்டும் என்றால் , திராவிட மோசடி இயக்கங்கள் அழிந்து, தேசீய இயக்கங்கள் வலுப்பெற வேண்டும்.

  திராவிட மோசடி இயக்கங்களின் ஆட்சியில், தமிழ் புதைகுழிக்கு போய்விட்டது. எங்கு பார்த்தாலும் புற்றீசல் போல, ஆங்கில வழிக்கல்வி நிறுவனங்கள் , பணம் பண்ணுகின்றன. இன்னும் இருபது ஆண்டுகளில் தமிழ் நாட்டில், தமிழ் எழுத , படிக்க தெரியாத தமிழினம் தான் இறுக்கும். இந்நிலை ஏற்பட , திருட்டு திராவிட இயக்கங்களே காரணம். தமிழையும், தமிழனையும் காக்க, திராவிட இயக்கங்களை ஒழிப்போம். தேசீய இயக்கங்களை வளர்ப்போம்.

 40. Dear Ramki,

  you are only correctly point out issue. Dailts is not community.It is group of so called oppressed groups.But,among in these groups, parayars dominating sakkiliyars. whether parayars allow sakkilyars to marry their girls. no.not possible. At least , sakkillyars and kuravars are honest.they never marry other caste girls.In Maharastra, mahar community of Ambedkar dominated other dailt communites. Ambedkar gave lame excuse that his caste learnt from so called upper castes
  Even pallars said oppression was started only 500 years. How , 1500 years comes.
  In off the record, we heard that many dailts systematically try to lure other community girls.

  Next reservation.Reservation must be given to dalits because they oppressed for past 200 to 500 years.But,this concession revoke from those are Government employees and earn income above 5 Lakhs.Because,the same logic applied to other people in dailits. Also,poor people in all castes.Mind it.

 41. ” சட்ட விரோத திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. பள்ளியில் உள்ள வயது சான்றின் படி , அவருக்கு வயது 21 -க்கும் குறைவே. எனவே, இது சட்டரீதியாக செல்லாத ஒன்று. ‘- ( அத்விகா on November 21, 2012 at 7:52 am )

  மேற்கண்ட என் கடிதத்தில் பெண்ணுக்கு என்பதனை ஆணுக்கு என்று திருத்தி படித்துக்கொள்ள வேண்டுகிறேன். தட்டச்சு பிழை ஏற்பட்டுள்ளது.

 42. புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவற்றில் பதினொரு குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டு உள்ளன. அடிக்கடி கட்டை பஞ்சாயத்து நடத்தி, சட்டவிரோத நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு உடன்படாத எட்டு குடும்பங்கள் மற்றும் கலப்பு திருமணம் செய்துகொண்டுள்ள மூன்று குடும்பங்கள் ஆக மொத்தம் பதினொரு குடும்பங்கள் ஊர் புறக்கணிப்புக்கு ஆளாகி உள்ளன. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஒவ்வொரு ஏரியாவிலும் , கட்டை பஞ்சாயத்து செய்து பிழைக்கும் மனிதர்கள், ஒவ்வொரு வகுப்பினர் ஆக உள்ளனர். இவர்கள் அனைவருமே காதல் மற்றும் கலப்பு திருமணங்களை எதிர்க்கின்றனர். பிற சாதியினரை மட்டும் குற்றம் சாட்டி பொய்யான அறிக்கைகளை வழங்குகின்றனர்.

  தமிழகத்தில் இந்த அக்கிரமங்களுக்கு காரணம் திக, திமுக போன்ற திருட்டு இயக்கங்களே. கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு, சாதி இல்லை என்று தான் சான்றிதழ் வழங்கவேண்டும். அவ்வாறு செய்யாது, தாய் அல்லது தந்தை இருவரில் யாராவது ஒருவரின் சாதியை சேர்ந்தவர் என்று பொய்யாக தமிழக அரசே பல ஆண்டுகளாக சான்றிதழ் வழங்கி வருகிறது. கலப்பு திருமண வாரிசுகளுக்கு தனி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும் போது, ஜாதியற்றவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு , ஐந்து வருடத்துக்கு ஒருமுறை இந்த இட ஒதுக்கீடு கூட்டப்பட வேண்டும். இதனை செய்தால் , எல்லா ஜாதிகளும் இன்னும் இருபது வருடத்தில் செத்து , ஜாதி கட்சிகளும் மறையும். அதன் பின்னரே தமிழகத்தில் உண்மையான சமதர்மம் நிலவும். திராவிட திருட்டு இயக்கங்கள் ஒழிந்தால் தான் , தமிழகத்துக்கு நல்லது.

 43. மேற்சொன்ன செய்தி இன்றைய 4 -12 -2012 செவ்வாய் நாளிதழ்களில் வந்துள்ளது.

 44. அன்பான என் இந்து மக்களே ! ஏன் நமது இந்து மதத்தில் இப்படி சாதிக்கொடுமை , நாம் அதை வேரோடு அழித்து இந்துமதத்தை ஏனைய மத வைரஸ்கள் தொற்றாமல் பார்த்துக்கொள்வோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *