எழுமின் விழிமின் – 27

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

சைதன்யரின் ‘தெய்வீக அன்பு’ எப்படி உருக்குலைந்துவிட்டது!

  • Extract from “Conversation and Dialogues’ (the Complete works, Vol. V)

ஸ்ரீ சைதன்யர் முற்றும் துறந்த பற்றற்ற பெரும் துறவி. பெண்கள் சிற்றின்பப் பசி இவற்றைச் சிறிதும் அறியாதவர். ஆனால் பிற்காலத்தில் அவரது சீடர்கள் தமது சமயத்தில் பெண்களையும் சேர அனுமதித்தார்கள் அவரது பெயரை வைத்துக் கொண்டு, பாகுபாடு இல்லாமல் அவர்களுடன் கலந்து பழகினார்கள். அதன் விளைவாக எல்லாமே பயங்கரக் குளறுபடியாகி விட்டது. பகவான் தனது வாழ்விலே விளக்கிக் காட்டிய அன்பு மார்க்கம் முற்றிலும் சுயநலமற்றது. காமக்கலப்பு சிறிதும் அற்றது. அத்தகைய காம உணர்ச்சியற்ற அன்பு பாமர மக்களின் உடைமையாக ஒருநாளும் ஆக முடியாது.

பிற்காலத்தில் வந்த வைஷ்ணவ ஆச்சாரியார்கள், பகவானுடைய வாழ்விலிருந்த துறவுநிலையை வற்புறுத்திப் போதிப்பதை விடுத்து அவருடைய மதுர பாவக் கொள்கையைச் சாதாரண மக்களிடையே போதிப்பதில் தங்களது ஆர்வம் முழுவதையும் செலுத்தினார்கள். அந்த உயர்ந்த கொள்கையை, அந்தத் தெய்வீக அன்பின் மகத்துவத்தை, சாதாரண மக்கள் புரிந்து கொண்டு ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள சாமானிய சிற்றின்ப உறவாக அதனை நினைத்து இழிவடைந்தார்கள்.

அத்தகைய முயற்சியினால் என்ன விளையும் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமாயின் நம்முடைய தேசத்தின் இன்றைய நிலையைப் பாருங்கள். மதுரபாவ அன்பு மார்க்கத்தைப் பரவலாகப் போதித்ததால் நமது மக்கள் ஆண்மையை இழந்து பெண்தன்மை பீடித்த இனத்தவராகி விட்டார்கள். ஒரிஸ்ஸா மாகாணம் முழுவதும் வீரியமற்ற கோழைகள் வாழும் நாடாக மாறிவிட்டது. ராதா பிரேமையைக் கடந்த நானூறு ஆண்டுகளாகப் பரப்பி வந்ததால், அதன் பின்னால் ஓடிச்சென்று வங்காளம் தனது ஆண்மைத் தன்மையை அநேகமாக முற்றிலும் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது. அழுவதிலும் ஓலமிடுவதிலும் தான் மக்கள் திறமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதுவே அவர்களது தேசிய சுபாவமாகி விட்டது. நாட்டு மக்களின் கொள்கைகளுக்கும் கருத்துகளுக்கும் நிச்சயமான அறிகுறியான அவர்களது இலக்கியத்தைப் பாருங்கள். சென்ற நானூறு ஆண்டுகளில் வங்கமொழிக் கவிதைகளில் அழுகையும் ஓலமுமே மையக் கருத்தாக அமைந்துள்ளன. உண்மையான வீர உணர்ச்சியைத் தூண்டுகிற பாடல்களை அவை வழங்கவில்லை.

மனதிலே எள்ளளவாவது காம விருப்பம் இருக்கிற வரையில் உண்மையான பிரேமைக்கு அங்கே இடமில்லை. மகத்தான துறவுணர்வு பூண்டவர்களாகவும், மனிதர்களுக்குள்ளே மகா வீரர்களாகவும் உள்ள ஆண் மக்களே அந்தத் தெய்வீக மார்க்கத்துக்கு உரியவர்களாவார்கள். மிக உன்னதமான கொள்கையாகிற மதுர பாவனையை சாதாரண மக்கள் கடைப்பிடிக்க நினைப்பார்களாயின், அது அவர்களுடைய இதயத்திலே தனது உலக நிழலாகிய காம விருப்பத்தையே எழுப்பும். தன்னை ஆண்டவனுடைய நாயகியாகப் பாவனை பண்ணுகிறவன், தூய உள்ளமற்றவனாயின் அங்ஙனம் தியானிக்கும் பொழுது தன மனைவியையே நினைத்துக் கொண்டிருப்பான். இதனால் ஏற்படும் பயன் எப்படிப் பட்டதாக இருக்கும் என்பது வெளிப்படை.

***

கிறிஸ்தவப் பாதிரிகளே! கிறிஸ்துவின் பெயரால் ஹிந்து சமயத்தைத் தூற்றுவதை நிறுத்துங்கள்!

  • Extract from “Reply to Madras Address’ (the Complete works, Vol. IV)

ஏதோ சில மதங்களுக்கு நான் விரோதி என்பது உண்மையல்ல. பாரதத்திலுள்ள கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு நான் எதிரி என்பதும் பொய் தான். ஆனால், அமெரிக்காவில் அவர்கள் பணம் திரட்டுவதற்காகக் கையாளும் முறைகளை நான் எதிர்த்து ஆட்சேபிக்கிறேன். ஹிந்துத் தாயானவள் தனது குழந்தைகளை கங்கையில் எறிவதாக ஒரு படம் சித்தரிக்கப்பட்டு, குழந்தைகளின் பள்ளிப் பாடப் புத்தகத்திலே வெளியாகி உள்ளது. இதன் அர்த்தம் என்ன? அதிகமான இரக்கவுணர்ச்சியை எழுப்பி அதிகமாகப் பணம் பெற வேண்டி, தாய் கருப்பு நிறமாகவும் குழந்தைகள் வெள்ளை நிறமாகவும் காட்டப் பட்டிருக்கின்றனர். வேறு சில படங்களில் ஒரு மனிதன் தனது மனைவியைச் சிதையில் வைத்துக் கொளுத்துவதாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. ஏனெனில் கொளுத்தப்பட்ட அந்த மனைவி பிசாசாக மாறி, அம்மனிதனின் எதிரியைத் துன்புறுத்துவதற்காக அப்படி செய்வதாகக் காட்டப்பட்டுள்ளதே, இதன் அர்த்தம் என்ன?

பெரிய ரதங்கள் மனிதர்களை நசுக்கிக் கொள்வதாக படம் போட்டிருக்கிறார்களே, அதன் பொருள் என்ன? சில நாட்களுக்கு முன் குழந்தைகளுக்காக ஒரு புத்தகம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இந்த கனவான்களில் (பாதிரிகளில்) ஒருவர் தமது கல்கத்தா விஜயத்தைப் பற்றிக் கதையாகச் சொல்லுகிறார். மதவெறி பிடித்த மக்கள் மீது ஏறிக் கல்கத்தா வீதிகளில் ஒரு ரதம் ஓடியதைத் தாம் கண்டதாக இவர் கூறுகிறார். மெம்பிஸ் என்ற ஊரில் இந்தக் கனவான்களில் ஒருவரின் பிரசங்கத்தைக் கேட்டேன். பாரத நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் சிசுக்களின் எலும்புகளால் நிறைந்த குளங்கள் இருப்பதாக அவர் கூறினார்.

கிறிஸ்துவின் சிஷ்யர்களாகிய இவர்களுக்கு ஹிந்துக்கள் என்ன செய்து விட்டார்கள்? ஒவ்வொரு கிறிஸ்துவக் குழந்தைக்கும் ஹிந்துக்களை ”தீயவர்கள், கொடியவர்கள் உலகிலுள்ள பயங்கரமான பிசாசுகள்” என்று அழைக்கக் கற்றுக் கொடுக்கிறார்களே, ஏன்? கிறிஸ்துவரல்லாத அனைவரையும், குறிப்பாக ஹிந்துக்களை வெறுப்பதற்குக் கற்பிக்கிறார்கள். இந்நாட்டில் குழந்தைகளுடைய ஞாயிற்றுக் கிழமை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இப்படிக் கற்பிப்பது ஓர் அம்சமாகும். ஏனெனில் குழந்தைகள் தமது சில்லறைக் காசுகளை அப்பொழுது தானே தருவார்கள்?

click to enlarge

சத்தியத்திற்காக இல்லாமல் போனாலும், தமது சொந்தக் குழந்தைகளின் நீதிநெறி உணர்ச்சி பாழாகாமல் இருப்பதற்காகவாவது கிறிஸ்தவப் பாதிரிகள் இது போன்ற காரியங்களை நடக்கவிடக் கூடாது. அப்படிக் கற்பிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது ஈவிரக்கமற்ற, கொடிய மனம் படைத்த ஆண், பெண்களாக ஆவதில் என்ன ஆச்சரியம்? முடிவில்லாத நரகத்தில் நடக்கும் சித்திரவதைகள், அங்கே எரிகிற நெருப்பு, எரிகிற கந்தகம், இவை பற்றி எவரால் மிகப் பயங்கரமாக வர்ணனை பண்ண முடியுமோ அவருக்கு ஆசாரமுள்ள கிறிஸ்தவர்களிடையே உயர்ந்த மதிப்பு!

இந்த நாட்டில், ‘புத்துயிரூட்டும் பிரசாரம்’ என்று செய்கிறார்களே, அதைக் கேட்கப் போய் வந்த எனது நண்பருடைய வீட்டிலிருந்த வேலைக்காரப் பெண் அதன் விளைவாக பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட வேண்டிய கதிக்கு வந்து விட்டாள். நரகத் தீயும் கந்தகமும் பற்றிய வர்ணனை அவளால் தாள முடியாத அளவுக்குப் போய் விட்டது. ஹிந்து சமயத்துக்கு விரோதமாக சென்னையிலிருந்து வெளியாகும் புத்தகங்களையும் தான் பாருங்களேன் கிறிஸ்துவ சமயத்துக்கு விரோதமாக ஒரு ஹிந்து இதுபோல ஒரு வரியேனும் எழுதினால் பாதிரிகள் அபாயக் குரல் எழுப்பி பழிவாங்கத் துடிப்பார்கள்.

எனது நாட்டுச் சகோதரர்களே! ஓர் ஆண்டுக்கு அதிகமாக நான் இந்த நாட்டில் இருந்திருக்கிறேன். அநேகமாக இந்தச் சமூகத்தின் எல்லா மூலை முடுக்குகளையும் நான் பார்த்துவிட்டேன். இதன் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், பாதிரிகள் உலகத்தோரிடம் கூறுவது போல நாம் பிசாசுகளும் அல்ல; அதுபோலவே இந்தப் பாதிரிகள் உரிமை கொண்டாடுவது போல, அவர்கள் தேவதூதர்களுமல்ல. ஒழுக்கமின்மை, குழந்தைக் கொலை, ஹிந்துத் திருமண முறைகளிலுள்ள தீமைகள் இவை பற்றி இந்தப் பாதிரிகள் எவ்வளவு குறைவாகப் பேசுகிறார்களோ அவ்வளவுக்கும் அவர்களுக்கு நன்மை. சில நாடுகளில் உண்மையாக நடக்கிற சம்பவங்களைப் பார்த்தால், ஹிந்து சமுதாயத்தைப் பற்றி பாதிரிகள் தீட்டுகிற கற்பனைச் சித்திரம் ஒன்றுமே இல்லையெனத் தோன்றும்; பிறரைத் தூஷிப்பதற்காக கூலி வாங்குகிற மனிதனாக ஆவது என் வாழ்க்கை நோக்கமல்ல.

ஹிந்து சமுதாயம் குறைகளற்றது என்று நான் உரிமை கொண்டாட மாட்டேன். பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட துரதிருஷ்டங்களின் விளைவாக ஏற்பட்டுள்ள குறைகள், முளைத்துள்ள தீமைகள் இவை பற்றி என்னைவிட அதிகமாகத் தெரிந்தவர்கள் யாருமிரார். அந்நிய நாட்டு நண்பர்களே! நீங்கள் உண்மையாக அனுதாபத்துடன், அழிப்பதற்காக வராமல் உதவுவதற்காக வருவீர்களானால், இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

ஆனால், தாழ்ந்து வீழ்ந்து கிடக்கும் மக்களினத்தைக் காரணமில்லாமலும் காரணத்துடனும் இடைவிடாமல் நீங்கள் தூஷிக்கிறீர்கள், தூற்றுகிறீர்கள். இதனாலெல்லாம் உங்கள் சொந்த நாடு தான் ஒழுக்கத் தரத்தில் உயர்ந்தது என்பதை வெற்றிகரமாக ஊர்ஜிதப் படுத்துவதாக நீங்கள் நினைத்தால், பச்சையாக நான் உங்களுக்கு சொல்கிறேன் – ஓரளவுக்காவது நியாயத்துடன் இரண்டையும் ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்ப்பீர்களாயின், ஹிந்து இனம், உலகிலுள்ள மற்றெல்லா இனங்களையும் விட ஒழுக்கத் தரத்தில் தலைதூக்கி உயர்ந்த நிலையில் உள்ளது உங்களுக்குத் தெரிய வரும்.

***

மனிதனுக்கும் பணத் தெய்வத்துக்கும் நீங்கள் ஒருங்கே தொண்டாற்ற முடியாது.

  • Extract from “A lecture delivered at Detroit’ (Complete works- Vol. VII)

உங்களுக்கு ஒரு விஷயம் சொல்வேன். அன்புணர்வற்ற குற்றச்சாட்டாக நான் அதைக் கூறுவதில்லை. நீங்கள் சில மனிதர்களுக்குப் பயிற்சி கொடுத்து, கல்வி கற்பித்து, உடையளித்து, சம்பளம் கொடுத்து வருகிறீர்கள். எதற்காக? என்னுடைய நாட்டுக்கு வந்து, என்னுடைய முன்னோர்களையும் என்னுடைய சமயத்தையும், மற்ற அனைத்தையும் சபிப்பதற்கும், தூஷிப்பதற்கும் தானா? எங்கள் கோவிலுக்கருகே சென்று, ‘நீங்கள் கல்லைக் கும்பிடுகிறீர்களே, நீங்கள் நரகத்துக்குத் தான் போவீர்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால், முகம்மதியர்களிடம் போய் அப்படிச் சொல்ல அவர்களுக்கு துணிவில்லை; ஏனெனில் வாள் வந்துவிடும். ஆனால், ஹிந்துவோ மிக மிகச் சாது. அவன் சிரித்துக்கொண்டே சென்று விடுவான். ”முட்டாள்கள் பேசிவிட்டுப் போகட்டுமே” என்று கூறுவான். அதுதான் அவனுடைய போக்கு.

மக்களைத் தூஷிப்பதற்கும், குற்றஞ்சாட்டுவதற்கும் பயிற்சி தந்து வருகிற நீங்கள், நான் அன்பான நோக்கத்துடன் மிகச் சிறிய கண்டனம் தெரிவித்தாலும் உடனே கூசிக் குறுகிச் சொல்கிறீர்கள்: ”எங்களைத் தீண்டாதே. நாங்கள் அமெரிக்கர்கள். நாங்கள் உலகத்திலுள்ள மக்கள் அனைவரையும் குற்றம் சாட்டிக் கண்டித்து, சபித்து, தூஷித்து, எதை வேண்டுமானாலும் சொல்வோம்; அனால் எங்களை மட்டும் தொடக் கூடாது.  நாங்கள் தொட்டாச் சிணுங்கிகள்” என்று கூறுகிறீர்கள். நீங்கள் உங்களிஷ்டம் போலச் செய்யலாம். அதே நேரத்தில் நானும் ஒன்று சொல்வேன். நாங்கள் இப்பொழுது உள்ளபடியே வாழ்வதில் எங்களுக்குத் திருப்தி தான். அத்துடன் ஒரு விஷயத்தில் நாங்கள் உங்களைவிட மேலானவர்கள். பயங்கரமான பொய்க் கற்பனைகளை அப்படியே நம்பும்படி நாங்கள் எங்கள் குழநதைகளுக்கு ஒருபோதும் கற்பிப்பதில்லை.

உங்களுக்கு எங்காவது ஏதாவது லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைகிறீர்கள். ஆனால் அங்குள்ள மனிதன் மட்டும் உங்களுக்குக் கொடியவன். உங்களுடைய மத குருமார்கள் எங்களைக் குறை கூறித் திட்டும்போது, ஒரு விஷயம் அவர்களுக்கு நினைவிருக்கட்டும்: பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று ஹிந்து மகா சமுத்திரத்துக்கு அடியிலுள்ள எல்லா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும் கூட, நீங்கள் இன்று எங்கள் மீது வீசுகிற அளவில் தினையளவு கூட பதிலுக்குப் பதில் செய்ததாக ஆகாது.

எதற்காக இப்படிச் செய்கிறீர்கள்? உலகில் யாரையாவது மதம் மாற்றுவதற்காக ஒரு பாதிரியையாவது நாங்கள் வெளியில் அனுப்பி வைத்தோமா? ”உங்களுடைய மதத்தை வரவேற்கிறோம். ஆனால், எங்களுடைய சமயத்தைப் பின்பற்ற எங்களை விட்டு விடுங்கள்” என்று உங்களிடம் கூறுகிறோம். எங்களுடைய சமயம் ‘ஆக்கிரமிப்பு சமயம்’ என்று சொல்லாதீர்கள்.

நீங்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தும் கூட எவ்வளவு பேரைச் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? உலக ஜனத்தொகையில் ஆறு பேர்களில் ஒருவன் சீனப் பிரஜை; பௌத்த மதத்தவன் ஆவான். பிறகு ஜப்பான், திபெத், ரஷிய, சைபீரியா, பர்மா, சயாம் (தாய்லாந்து) முதலிய நாடுகள் எல்லாம் உள்ளன. இந்த கிறிஸ்தவ ஒழுக்க நெறி உணர்வு, கத்தோலிக்க சர்ச்சு இவை எல்லாமே அந்த நாடுகளிடமிருந்து நீங்கள் இரவல் பெற்றது தான் என்று நான் கூறினால் அது உங்களுக்கு கசப்பான உண்மையாகத் தோன்றும்; பிடிக்காது.

அது இருக்கட்டும். உங்களுடைய மதமாற்றமெல்லாம் எப்படி நடந்தது? ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமலா? நீங்கள் தற்பெருமை பேசி ஜம்பம் அடிக்கிறீர்களே, உங்கள் கிறிஸ்தவ சமயம் வாளை உபயோகிக்காமல் எங்காவது வெற்றி கண்டிருக்கிறதா? நீங்கள் அப்படிச் செய்யாமலிருந்த ஏதாவது ஒரு நாட்டையாவது உலகத்தில் காட்டுங்கள். ஒன்றே ஒன்று காட்டுங்கள். கிறிஸ்தவ சமய வரலாறு முழுவதிலும் ஓர் உதாரணமாவது காட்டுங்கள். இரண்டு கேட்கவில்லை- ஒன்றே ஒன்று! உங்கள் மூதாதையர்கள் எவ்வாறு மதம் மாற்றப்பட்டார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் ஒன்று கொல்லப்பட்டார்கள்; அல்லது மதம் மாறினார்கள். அவ்வளவு தான். நீங்கள் எவ்வளவுதான் தற்பெருமை பேசினாலும், முகம்மதிய மதத்தை விட நீங்கள் நல்லதாக எதையாவது செய்து விட்டீர்களா?

“நாங்கள் ஒருவரே தான் உயர்ந்தவர்கள்” என்கிறீர்களே, ஏன்? ஏனெனில், ”எங்களால் பிறரைக் கொல்ல முடியும்” என்கிறீர்கள். அரேபியர்களும் அப்படித்தான் கூறினார்கள், வீண் ஜம்பமடித்துக் கொண்டார்கள். இப்பொழுது அந்த அரேபியன் எங்கே? பாலைவனத்தில் நாடோடியாகத் திரிகிறான். ரோம் நாட்டினரும் தற்பெருமை பேசிக்கொண்டு அப்படித்தான் கூறினார்கள். இப்பொழுது எங்கே அவர்கள்? ”சமாதானம் பண்ணி வைப்பவர்கள் ஆசி பெற்றவர்களாவார்; உலக சுகங்களை அவர்கள் அனுபவிப்பார்கள்”. ஆக்கிரமிப்பு விஷயங்களெல்லாம் தரைமட்டமாகி விடுகின்றன. அவை மணல் மீது கட்டப்பட்ட கட்டடம். அவை நீண்ட நாட்கள் நிலைத்திருக்க முடியாது.

சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டு, போட்டா போட்டி உணர்ச்சியை வலது கையாகவும் சுக போகங்களை அனுபவிப்பதை லட்சியமாகவும் கொண்ட ஒரு கொள்கை, இன்றோ நாளையோ, மடிந்தே தீரும். அத்தகைய காரியங்கள் சாகத் தான் வேண்டும். சகோதரர்களே, நீங்கள் உயிர் வாழ விரும்பினால், உங்களது தேசம் வாழ வேண்டுமென்று உண்மையிலேயே நீங்கள் விரும்பினால், கிறிஸ்துவிடம் திரும்பிப் போங்கள் என்று கூறுகிறேன். நீங்கள் கிறிஸ்தவர்களே அல்ல. நீங்கள் நாடு என்ற ரீதியில் கிறிஸ்தவ தேசம் அல்ல. கிறிஸ்துவிடம் திரும்பிச் செல்லுங்கள். தலை சாய்த்துப் படுக்க சொந்தமான ஓர் இடம் வைத்துக்கொள்ளாத (சுயநலமற்ற) அவரிடம் செல்லுங்கள். ”பறவைகளுக்கு கூடு உண்டு, மிருகங்களுக்குத் தங்குமிடம் உண்டு. மனித குமாரனுக்கு தலை சாய்க்க இடமில்லை” என்றார் கிறிஸ்து. ஆனால், சுகபோகங்களின் பேரால் நீங்கள் சமயப் பிரசாரம் செய்கிறீர்கள். விதியின் விளையாட்டுத் தான் என்னே!

நீங்கள் உயிர் வாழ விரும்பினால், இந்த நிலையை தலைகீழாகத் திருப்பி மாற்றுங்கள். இந்த நாட்டில் நான் கேட்ட விஷயங்களெல்லாம் வெறும் வெளிவேஷக் கருத்துக்கள் தான். இந்தத் தேசம் உயிர் வாழப் போகிறது என்றால் எல்லாம் அவரிடம் திரும்பிச் செல்லட்டும். கடவுளுக்கும் காசு தெய்வத்துக்கும் நீங்கள் ஒரே சமயத்தில் வழிபாடு நடத்த முடியாது.

இந்த சுகபோக வஸ்துகளெல்லாம் கிறிஸ்துவிடமிருந்தா வந்தன? இதுபோன்ற ஆக்கிரமிப்பான, பொய் ஆசாரங்களை எல்லாம் கிறிஸ்து ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். காசுக் கடவுளை வழிபடுவதால் வருகிற செல்வ வளமெல்லாம் நீர்க்குமிழி போல, ஒரு கண நேரத்துக்குத் தான் இருக்கும். உண்மையான நிரந்தரத் தன்மை இறைவனிடமே உள்ளது.

கிறிஸ்துவின் லட்சியத்துடன் இன்றுள்ள ஆச்சரிய கரமான வளக் கொழிப்பை இணைக்க முடிந்தால் நல்லது தான். உங்களால் முடியாது என்றால், இந்தப் போகங்களைக் கைவிட்டு அவரிடம் திரும்புவதே நல்லது. கிறிஸ்து இல்லாமல் மாட மாளிகைகளில் வாழ்வதைக் காட்டிலும், கந்தை அணிந்தாலும் அவருடன் வாழ ஆயத்தமாவது மிக உயர்ந்தது.

***

முகம்மது நபி ஒருவர் மட்டுமே உண்மையான தேவதூதர் என்பது இஸ்லாம் சமயத்துக்கே முரணான பேச்சாகும்.

  • Extract from “A lecture delivered at Pasadena, California’ (Complete works- Vol. IV)

ஒவ்வொரு மனிதனும் எழுந்து நின்று ”என்னுடைய தேவதூதர் ஒருவர் மட்டுமே உண்மையானவர்” என்று கூறினால் அது சரியல்ல. அவனுக்கு சமயத்தைப் பற்றி ஓர் அட்சரம் கூடத் தெரியாது. சமயம் என்பது பேச்சோ, தத்துவமோ, அறிவுப்பூர்வமாக ஏற்பதோ அல்ல. நாம் மனப்பூர்வமாக அனுபவித்து உணருவது தான் சமயம்; சமயம் என்றாலே கடவுளைத் தொட்டு உணருவது.

”உலகெங்கும் வியாபித்துள்ள பரமாத்மாவுடனும், அதனுடைய மகத்தான வெளித் தோற்றங்களுடனும் தொடர்பு கொண்ட ஆத்மா நான்” என்பதை உணர்ந்து அனுபவித்துத் தெளிதல் வேண்டும். தந்தையின் வீட்டுக்குளே நீ நுழைந்தால், அவருடைய குழந்தைகளைப் பார்த்த பிறகும் உன்னால் ஏன் அவர்களை தெரிந்துகொள்ள முடியவில்லை? அவர்களை உன்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை என்றால், நீ தந்தையாரின் வீட்டுக்குள் நுழையவில்லை என்பது தான் பொருள்.

தாயானவள் தன குழந்தை எப்படி உடை உடுத்தி இருந்தாலும் எப்படி வேஷம் போட்டிருந்தாலும் கண்டுபிடித்து விடுகிறாள். எல்லா யுகங்களிலும் எல்லா நாடுகளிலும் உள்ள உயர்வான, ஆத்ம ஞானிகளான ஆண்களையும் பெண்களையும் மதித்துப் போற்ற வேண்டும். அவர்களிடையே உண்மையில் வேறுபாடு இல்லை என்பதை பார்க்க வேண்டும். எங்கெல்லாம் சரியான , உண்மையான சமயம் இருக்கிறதோ, தெய்வீக சக்தி எங்கு உள்ளதோ, மனிதனை ஆன்மா நேரிடையாக புலன்கள் மூலமாகவே தெய்வீக சக்தியுடன் எங்கே தொடர்பு கொள்கிறதோ, அங்கே எப்பொழுதுமே மனம் விரிவடைந்து எல்லா இடங்களிலும் தெய்வ ஒளியைக் காணத் துணை புரிகிறது.

முகம்மதியர்கள் இந்த விஷயத்தில் முற்றிலும் பன்படாதவர்கள்; மதச் சார்பு உள்ளவர்கள் அவர்களது குறிச்சொல் ”கடவுள் ஒருவரே; முகம்மதுவே அவரது தேவதூதன்” என்பதாகும். அதைத் தவிர மற்றவை எல்லாம் கெட்டவை என்பது மட்டுமல்ல உடனடியாக அழித்தே தீரப்பட வேண்டியவை ஆகும். ஒரே கணம் எச்சரிப்பார்கள். அதை உள்ளபடியே நம்பாத ஒவ்வோர் ஆணும் பெண்ணும் கொல்லப் பட்டே தீர வேண்டும். இந்த வழிபாட்டு முறையைச் சாராத எல்லாம் உடனடியாக உடைத்தெறியப்பட வேண்டும். இதைத் தவிர வேறு எதையாவது கற்பிக்கிற புத்தகம் தீக்கிரையாக்கப்பட வேண்டும். பசிபிக் சமுத்திரம் முதல் அட்லாண்டிக் சமுத்திரம் வரை ஐந்நூறு ஆண்டுகளுக்கு உலகமெங்கும் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. அது தான் முகம்மதிய மதம்.

***

தன்னைத் தானே கட்டிப் போட்டிருக்கும் இனம்:

  • Extract from “A lecture delivered in London’ (Complete works- Vol. II)

ஒரு மனிதன் எவ்வளவு தூரம் சுயநலம் உள்ளவனாக இருக்கிறானோ அவ்வளவுக்கு அவன் நேர்மை ஒழுக்கம் இல்லாதிருப்பான். ஒரு மக்கள் இனமும் அப்படித் தான் இருக்கும். தனக்குத் தானே அடிமையாக இருக்கும் ஓர் இனம் உலகத்திலேயே மிக மோசமான கொடூரம் வாய்ந்ததாகவும் கொடிய இயல்புள்ளதாகவும் இருக்கும். அரேபிய நாட்டு தேவதூதர் நிறுவிய மதத்தைப் போல, இந்தக் கொள்கைகளை தீவிரமாக இறுகக் கடைப்பிடித்து வருகிற மதம் உலகில் வேறெதுவும் இல்லை. இவ்வளவு ஏராளமாக ரத்தத்தைச் சிந்தி பிறரைக் கொடூரமாக நடத்திய மதம் வேறெதுவும் இல்லை.

குர்-ஆனின் உபதேசங்களின் படி நடக்காதவனைக் கொன்று விட வேண்டும் என்று அந்த நூலில் ஒரு தத்துவம் உள்ளது. அவனைக் கொல்வது அவனிடம் தயவு காட்டுவதாகும். சொர்க்கத்துக்குப் போவதற்கு நிச்சயமான பாதையாம் அது! அங்கே சொர்க்கத்தில் தேவ கன்னிகைகளையும் புலன்வழி சுகங்களையும் அனுபவிக்கலாம். ஆகவே முகம்மதிய மதத்தை நம்பாதவர்களை கொலை செய்தால் அதெல்லாம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள் இப்படிப்பட்ட நம்பிக்கைகளின் விளைவாகவெல்லாம் ரத்த ஆறு ஓடி இருப்பதை நினைத்துப் பாருங்கள்.

( தொடரும்….)

அடுத்த பகுதி >>

2 Replies to “எழுமின் விழிமின் – 27”

  1. காலணி ஆதிக்கத்தாலும் மதமாற்ற செயல்களாலும் நம் ஆண்மா வெகுவாகவே பாதிக்கப் பட்டுள்ளது என்பதை விவேகானந்தர் தொடங்கி காந்தி அரவிந்தர் பாரதி வரை பலரும் அதன் பக்க விளைவுகளைப் பற்றி பல எச்சரிக்கைகள் செய்துவந்த போதிலும் நேரு போன்ற மெக்காலே சிந்தனையாளர்களைத் தான் நாம் இன்றுவரை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பது ஒரு சாபகேடா? உயர் பதவியில் இருக்கும் படித்தவர்கள் கூட ஹிந்துகளுக்கு எதிராக பேசிவருவது மிகவும் வேதனை அளிக்கின்றது. சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி திரு.மகேந்திர கட்ஜூ அவர்கள் இஸ்லாமியருக்கு பரிந்துகொண்டு ஒரு நீண்ட கட்டுரை எழுதுகிறார். அப்பாவி இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று முத்திரைகுத்தி காவலில் வைப்பது. 1857 ஆண்டு முன் சில நூற்றாண்டுகள் வரையில் இஸ்லாமிய அரசர்கள் ஹிந்துகளுக்கு சாதகமாவே இருந்தார்கள் என்றும் அவர்களும் சுதந்திர போரில் உண்மையாகவே ஈடுபட்டார்க்ள என்றும் கூறுகிறார். சமீபத்தில் தி்ரு.ஜெத்மாலினி ராமரை தேசத்தின் உதாரண புருஷராக நாம் பாவித்தது தவறு என்கின்றார். நமது அரசாங்கம் இங்கு தங்குதடையின்றி மதமாற்றம் செய்ய ”மிஷினரி” விசா என்ற ஒன்றை அனுமதித்துள்ளது. சமீபத்தில் நாகபுரி நீதிமன்றத்தில் ஒரு ஹிந்து இயக்கத்திற்கு 80ஜி யின் கீழ் வரிவிலக்கு அளிக்கமுடியாது ஏன் என்றால் ஹிந்து என்ற ஒரு மதமே கிடையாது என்று பல வினோதமான விளக்கங்களை அளித்துள்ளது. ஏன் என்றால் இதை தோற்றுவித்தவர் இவர்தான் என்றோ இதுதான் புனித நூல் என்றோ இதுதான் ஒரே கடவுள் என்றோ சிறுபான்மை மதங்களை போல் இருப்பவை அல்ல என்று கூறுகிறார்.

  2. நீதிபதியின் பெயரை மார்கணடேய கடஜூ என்றும் நாகபுரி நீதிமன்றம் அல்ல அது நாகபுரி இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் என்று படிக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *