பக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1

offering_flowersஇந்தத் தொடரைப் படிக்கும் அன்பர்களுக்கு முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். இதில் நானாக எதையும் சொல்லவில்லை. என் அப்பா எனக்கு சொன்ன சில கருத்துகள், நான் படித்த சில புத்தங்கள், கேட்ட சில சொற்பொழிவுகள் என்று எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறேன்.

தற்போது மதம், ஆன்மிகம் இரண்டு வார்த்தைகளும் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கின்றன. தெளிவு இல்லாமல் பற்பல சாமியார்களிடத்தும், பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆண்டவனைத் தேடுவது ஆன்மிகம் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்து மதம் பிற மதங்களை வெறுப்பதில்லை. சொல்லப் போனால் பல மதங்களைத் தன்னோடு அரவணைத்துக்கொண்டு செல்லுகிறது. சகிப்புத் தன்மை இந்துமத்தின் மற்றோர் அம்சம். மதம் என்றால் அதற்கு நம்பிக்கை, சிந்தனை போன்ற அர்த்தங்கள் உள்ளன. ஆனால் இன்று மதம் என்றால் அதற்கு அர்த்தமே வேறு.

நம்மை நாமே பரிசோதனை செய்துகொண்டு கடவுளைக் கண்டுபிடிப்பதுதான் ஆன்மிகம். ஆன்மிக வெளிச்சத்தில் சின்ன கீற்றாவது எனக்கும் உங்களுக்கும் இந்தத் தொடரில் தெரிகிறதா என்று பார்க்கலாம்.

பக்தி- தமிழ் வார்த்தை கிடையாது; சமஸ்கிருத வார்த்தை. ஆழ்வார் பாடல்கள், சங்கப் பாடல்களில் பக்தி என்ற வார்த்தை கிடையாது. திருமங்கையாழ்வார் ‘பத்திமை’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். (பெரிய திருமொழி, 10.9.10, 1941). பத்திமை – அன்பு, காதல்! உண்மையான பக்தி.

1925-ல் பிரசுரரமான் ஒரு தமிழ் அகராதியில் பக்தி=பத்தி என்று போட்டிருக்கிறது,

பக்தி என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘மிஸ்டிஸிசம்’ (Mysticism) என்று சொல்லுவார்கள். (பக்தர்கள் – Mystics).

மிஸ்டிஸிசம் என்பதற்கு ஆங்கில அகராதியில் விளக்கம் இப்படி இருக்கிறது “One who seeks by contemplation or self-surrender to obtain union with or absorption into the Diety, or who beleives in spritual apprenhension of truths beyond the understanding”.

தமிழில் “இறைப் பொருளினிடம் தம்மையே அடைக்கலமாகத் தந்து பக்தி அல்லது தியானமூலம் இறையனுபவத்தைப் பெறுபவர் என்றும் சாதாரண அறிவிற்கு அப்பாற்பட்டதாகிய ஆன்மிக உண்மைகளை உணரமுற்படுபர்” என்று விளக்கம் சொல்லலாம். ( நன்றி: அ.ச.ஞானசம்பந்தன் )

நிச்சயம் மேலே சொன்ன ஆங்கிலம், தமிழ் இரண்டு விளக்கமும், இரண்டு மூன்று முறை படித்தால்தான் புரியும். ஆனால் பக்தி அவ்வளவு கஷ்டம் இல்லை. மேலே சொன்ன இந்த அகராதி விளக்கம் ஏன் கஷ்டமாக இருக்கிறது? நாம் அதைப் படிக்கிறோம். படித்தவுடன் அதை நம் அறிவு புரிந்துக்கொள்ள முயல்கிறது. ஆனால் பக்திக்கு அறிவு தேவையில்லை. வேறு என்னதான் தேவை என்று கேட்கலாம்; உணர்வு. உணர்வு மட்டும்தான் தேவை. உணர்வு வர நமக்குத் தேவை நம்பிக்கை. கேள்வி கேட்காத நம்பிக்கை.

மெதுவாக இது என்ன என்று பார்க்கலாம்.

முதலில் அறிவு வேறு; உணர்வு வேறு என்பதை நன்றாகப் புரிந்துக்கொள்ள வேண்டும். அறிவில் மலர்வது தத்துவம். தத்துவம் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். பலர் நிறைய படித்துவிட்டு வறட்டுத் தத்துவங்களைச் சொல்லுவார்கள். பக்தி கலக்காத தத்துவங்கள் வெறும் வேதாந்தங்கள். ஒன்றுக்கும் பயன்படாது. ரொம்பப் படித்துவிட்டால் “கடவுள் இருக்கிறாரா?” என்றுகூட கேட்கத் தோன்றும். உணர்வில் மலர்வது பக்தி. பக்தியைப் புரிந்துகொள்ள அறிவு தேவை, ஆனால் பக்திக்கு அறிவு தேவை இல்லை.

பக்தியே கடவுளைக் காண வழி. முற்றிய பக்தியே ஞானம் என்பது ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிப்படைக் கொள்கை. பக்திக்கு முதல்படி கேள்வி கேட்காத நம்பிக்கை என்பதைப் பார்த்தோம்.

கடவுளால் எதுவும் முடியாதது கிடையாது என்ற நம்பிக்கை வேண்டும். கேள்வி கேட்காத நம்பிக்கை பற்றி என் அப்பா ஒரு கதை சொல்லுவார்.

பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார் அவருக்கு ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார். விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள். அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

naradaநாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.

இது வெறும் கதை. ஆனால் இதில் நாம் புரிந்துக்கொள்ள வேண்டிய தத்துவம் என்ன? பக்திக்கு, கேள்வி கேட்காத நம்பிக்கை அவசியம். அவன் உயர்வானவன் என்று நம்பிக்கை வேண்டும். இதுவே முதல் படி!

இந்த, கேள்வி கேட்காத நம்பிக்கை உருவாக, என்ன செய்ய வேண்டும்? ஒரே வழி தான் இருக்கிறது. நாம் அவனிடம் பக்திகொள்ள வேண்டும். அதற்கு அவன் அருள் வேண்டும். அவன் அருளின்றி அவனுக்கு பக்தி செலுத்தக் கூட நம்மால் முடியாது.

குழப்பமாக இருக்கிறதா ? முதல் பந்தில் சிக்சர் அடிப்பது மாதிரி, நம்மாழ்வார் திருவாய் மொழி ஆரம்பத்தில் அருமையாகச் சொல்லியிக்கிறார்.

“உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வு அற மதி – நலம் அருளினன் எவன்? அவன்
அவர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயர் அறு சுடர்-அடி தொழுது எழு என் மனனே!”

இதில் இரண்டாவது வரியைப் பாருங்கள் “மயர்வு அற மதி-நலம் அருளினன் எவன்? அவன்” என்கிறார். அதாவது அவன் அருளினால் தான் பக்தி கிடைக்கும் என்கிறார்.

திட நம்பிக்கை என்பது பத்தியில் மிக முக்கியமானது. இந்த திட நம்பிக்கையை சிலர் குருட்டு நம்பிக்கை சொல்லுவார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே. சின்ன குழந்தைக்கு பெருமாள் பிரசாதம் சாப்பிட்ட கதையை சொல்லும் போது கவனித்துப்பாருங்கள். அதை கேள்வி கேட்காமல் அப்படியே நம்பும். அதுவே அதுக்கு கொஞ்சம் வயசான பிறகு கம்ப்யூட்டர் மௌஸ் உபயோகப்படுத்தும் போது சொல்லிப்பாருங்கள். குழந்தை பிரசாதம் கொடுத்ததை பெருமாள் சாப்பிட்டாரா? என்ற சின்ன சந்தேகம் வந்து, கேள்வி கேட்ட ஆரம்பிக்கும். இதனால் தான் இந்த மாதிரி கதைகள் எல்லாம் குழந்தைகளுக்கான பக்திக் கதைகள் என்று முடிவு செய்துவிடுகிறோம் என்று நினைக்கிறேன்!

இன்று கடவுள்களின் அவதாரமாகச் சொல்லிக்கொள்ளும் சாமியார்கள் கால்களில், நம்மில் பலர் விழக் காரணம், நமக்கு கடவுளிடம் திட பக்தி இல்லாததுதான்.

ஒருத்தர் தூங்கிக்கொண்டு இருந்தார். அவர் கனவில் கடவுள் தோன்றி, “நாளையிலிருந்து நீ தான் எனக்குத் தூதர். மக்களிடம் போய் என் அருமை பெருமைகளை நீதான் சிறப்பாகச் சொல்ல வேண்டும்” என்றார். கனவிலிருந்து எழுந்தவருக்கு பெருமை தாங்க முடியவில்லை. பெரிய அங்கி, புதுவிதமாக தனித்துவமாகத் தெரியும் முடி அலங்காரம் என்று தன்னை மாற்றி அமைத்துக்கொண்டார். ஒரு பிராண்ட் இமேஜ் வேண்டாமா? புதிய கெட்-அப்புடன் அவர் தன் வாசலுக்கு வந்து சாலையைக் கடந்தார். அப்போது வந்த ஒரு மாடு முட்டியதால் இறந்து போனார். கடவுளிடம் சென்றவுடன் “இறைவா, என்னை ஏன் சாகடித்துவிட்டாய்? நீ செய்தது சரியா?” என்று கோபமாகக் கேட்டார்.

கடவுள் அவனை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், “அடப் பாமே, அவனா நீ? புது கெட்-அப்பில் உன்னை எனக்கு அடையாளம் தெரியவில்லை. அடடா…” என்றார். ஒருசில சாமியார்கள் இன்று இப்படித்தான் இருக்கிறார்கள்.

(தொடரும்)

சுஜாதா தேசிகன் பெங்களூர்வாசி, கணினி மென்பொருளாளர். நல்ல சிறுகதைகளும், பல்சுவைப் பதிவுகளும் தொடர்ந்து எழுதி வருபவர். அமரர் சுஜாதாவின் படைப்புகள் அனைத்தையும் பற்றிய நடமாடும் களஞ்சியமாக அறியப் படுபவர். “தேசிகன் என் கதைகளில் ஒரு ‘அத்தாரிட்டி’ என்று கூட சொல்லலாம்” என்று சுஜாதாவால் பாராட்டப் பட்டவர்.  தேசிகன்.காம் என்ற வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார்.

5 Replies to “பக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1”

 1. கேள்வி கேட்கக்கூடாத பக்தி தேவையில்லை என்பது என் கருத்து. கேள்வியே நல்ல பதிலை தரும்.

  இறைவன் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பது முதல் கேள்வி, அதற்கு விளக்கம் அளித்தாகிவிட்டது.

  செல்வவந்தரின் எப்படி முடியும் என்பதற்கு விளக்கம் தரப்படவில்லை, ஆனால், தொழிலாளிக்கு விளக்கம் தாராமலேயே எப்படி முடியும் என தெரிந்து இருக்கிறது. இது பக்குவம் என்ற குணம், இதை கேள்வி கேட்பதோடே குழப்பி கொள வேண்டியதில்லை.

  மயர்வு அற மதி – நலம் அருளினன் எவன்? அவன். அவன் தொழிலாளிக்கு தந்திருக்கிறான், மேற்ச்சொன்ன செல்வந்தருக்கு இன்னமும் தரவில்லை. அவ்வளவே.

  மேற்படி

  குருட்டு நம்பிக்கை என்பது வேறு, மூட நம்பிக்கை என்பது வேறு. மூட நம்பிக்கை குருடாக்கும் நம்பிக்கை. அது அஸூர்யா நாமதே லோகா இத்தியாதிகளால் விளக்கப்பட்டு இருக்கிறது.

 2. தேசிகன் அவர்களே

  நீங்களே பக்திக்கு தமிழ் வார்த்தை மதின்நலம் என்று சொல்லிவிட்டீர்களே – மதிக்கு எது நலமோ அதுவே பக்தி – பக்தியும் அறிவு சார்ந்ததே

 3. மேலும்

  கிருஷ்ண பக்தி என்றே அழைக்கப்படும் ஆழ்வாரும்
  கேள்வி கேட்டு, பதிலும் சொல்லியே தான் தொடங்குகிறார் அதுவும் ஏக முகமாக யவன் என்று? கேட்டு அவன் அன்று பதில் சொல்லி, அவன் அடி தொழு என்கிறார் – எல்லார் அடியையும் தொழு என்றல்ல – யவன் இப்படிபட்டவனோ அவனை தொழு மனமே என்கிறார்

  இப்படி வர சற்றே மாற்றி அன்வயம் கொள்ளலாம்

  “உயர்வு அற உயர் நலம் உடையவன்
  எவன்?
  அவன் மயர்வு அற மதி – நலம் அருளினன்

  எவன்?
  அவன் அவர்வு அறும் அமரர்கள் அதிபதி

  எவன்?
  அவன் துயர் அறு சுடர்-அடி தொழுது எழு என் மனனே!”

 4. ‘பக்தி’ என்னும் சொல் தமிழன்று என்று தேசிகன் கருதுகிறார். இது ‘பஜ்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது என்று கூறுவர். வடமொழி அறிந்தோர் விளக்கலாம்.இருக்கலாம்.
  ‘பத்தி’ என்பது தமிழ்ச்சொல். திருமங்கை மன்னன் இச்சொல்லைப் பயன்படுத்தியதுபோல் திருமுறை ஆசிரியர்களும் ‘பத்தி’ என்னும் இச்சொல்லையே பயன்படுத்தியுள்ளனர். ‘பத்திமையும் அடிமையையும்’ என்பது நம்பி ஆரூரர் திருமுறை.’அன்பு, பத்தி, காதல், என்பன இச்சை மீதூர்தற் பொருள’ என்பது சிவனானமாபாடியத் தொடர். ‘மறவாது பத்தியால் ஏத்தல்’ என்ற சிவஞான போதத் தொடர்.

  தமிழ்ல் றகர இரட்டை தகர இரைட்டையாகத் திரிந்து ஒலித்தல் மொழி இயக்க இயல்பு. தாளம் என்றபொருளில் வரும் ‘ஒற்று’ எனும் சொல், ‘ஒத்து என்று வழங்கும். உலோகங்களைப் பற்ருவைத்து அணிகலன் செய்ப்வர் பற்றர். பற்றர் என்னும் சொல் பத்தர் என வழங்கும். அவ்வாறே இறைவன் மீது பற்ரு வைப்பவர் பற்றாளர், பற்றர். பற்றர் என்னும் சொல் பத்தர் என வழங்குகின்றது. மாணிக்கவாசகர், “பற்றுடையீர்” என்னும் சொல்லைப் ‘பத்துடையீர் ஈசன் வழவடியீர்” எனத் திருவெம்பாவையில் வழங்குகின்றர். நிலத்தில் கொம்பு முத்லியவற்றைப் பதிப்பது பதியன். பகுப்பது பாத்தி. பதிப்பது பத்தி. ஈறைவன் திருவடிகளை நெஞ்சத்தடத்தில் பதிப்பது பத்தி. அப்படிப் பதிப்பதால் பெருகுவது அன்பு. ஈசன்மேல் வைக்கும் அன்பே பற்று. >பத்தி.
  பக்தி என்ற வடசொல்லின் அடிப்படை வேறு. பத்தி என்ற தமிழ்ச் சொல்லின் அடிப்படை வேறு.

 5. நண்பர் தேசிகன்,
  நல்ல துவக்கம். அடுத்தடுத்த பதிவுகளை எதிர்நோக்குகிறேன்.
  நம்மாழ்வார் பாசுரம் பதம் பிரித்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி!
  அன்பன்,
  ஸ்ரீநிவாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *