தில்லி சம்பவம்: போராட்டங்களும் அடக்குமுறைகளும்

சில நாட்களுக்கு முன்பு தில்லி வீதிகளில் ஓடிக்கொண்டேயிருந்த ஒரு பேருந்தில் ஒரு மருத்துவ மாணவியைச் சிலர் கற்பழித்த செய்தி இந்திய நாட்டு மக்கள் அனைவரின் மனச்சாட்சியையும் உலுக்கியது. இந்த நிகழ்ச்சி உண்டாக்கிய காயமும், அது விளைவித்த சமூக கோபமும் காட்டுத்தீ போல எங்கும் பரவி புது டெல்லியில் மாணவர்களும், இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் தினசரி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களது போராட்டம் உணர்ச்சி பூர்வமானது என்பதில் எந்த ஐயப்பாடும் கிடையாது. தொலைக்காட்சியில் காணுகின்ற காட்சிகளில் அந்த இளம் மாணவ மாணவியர், குறிப்பாக மாணவிகள் உயிரைக் கொடுத்து குரலெழுப்பித் தங்கள் கோபத்தை, ஆத்திரத்தை வெளிப்படுத்துகின்றனர்.

நாட்டில் இதுவரை இதுபோன்ற கொடுமைகளும் ஏராளமாக நடந்திருக்கின்றன. ஆங்காங்கே வெளிவராமல் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை வெளிக் கொணராமல் உள்ளுக்குள் வைத்துப் புழுங்கிச் சாகும் பெண்களும் உண்டு. இப்போது டெல்லியில் நடக்கும் போராட்டம் இந்த உள்ளுணர்வின் உச்சகட்டமாகப் பொங்கி வெடித்திருக்கிறது.

போராளிகளின் கோரிக்கை பெண்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது. நாட்டின் பெரிய வி.ஐ.பிக்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு சாதாரண மக்களுக்கும் கொடுப்பது; கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது; அதற்கான சட்ட முன்வடிவை உடனடியாக நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றுவது ஆகியவைகளாகும். டில்லி போலீஸ் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறது, டில்லி போலீஸ் கமிஷனர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளையும் முன்வைத்து மாணவ சமுதாயம் போராடிக் கொண்டிருக்கிறது.

delhi-policemen-attack-protesters

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சில சமூக ஆர்வலர்களின் அமைப்புக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்படி கலந்து கொண்ட ஆர்வலர்களின் பின்னணி, அவர்களின் நோக்கம் இவற்றின் மீது ஐயப்பாடு கொண்ட ஆளும் காங்கிரசும், அரசாங்கமும் இந்த போராட்டத்தையே சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் துவங்கியதன் இயற்கையான முடிவுதான், போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீச்சியடித்தல், கண்ணீர் புகை குண்டுகள் வீசுதல், தடியடி இவைகள் நடந்தேறின.

நாட்டு மக்களுக்கு நடக்கும் நிகழ்ச்சிகளிலிருந்து தெரிந்து கொள்ள முடியாத மர்ம முடிச்சு என்னவென்றால், அமைதியாக மெழுகுவத்தியேந்தி இந்தியா கேட் முன்பாகப் போராடத் துவங்கிய மாணவர்கள் பொறுமை இழந்து வன்முறையில் ஈடுபட்டார்களா, அல்லது காவல்துறையின் மிருக வெறி காரணமாக இந்த இளைஞர்கள் அடியும் வேதனையும் பட்டதன் விளைவாக வன்முறையில் ஈடுபட்டார்களா என்பதுதான். நாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்தவரை (ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் சில பழைய தொகுப்பிலிருந்து இதுபோன்ற கலவரங்களின் காட்சிகளை ஒளிபரப்பி மக்களை குழப்புவது உண்டு) இந்த போராட்டக் காட்சிகள் அனைத்தும் நேரடியாக போராட்டக் களத்தில் எடுக்கப்பட்டவை போலத்தான் தோன்றுகின்றன.

இந்தக் காட்சிகளைப் பார்க்கும் போது நமக்கு இயற்கையாக எழுகின்ற சந்தேகம், இந்தியா ஒரு ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா. இந்திய அரசியல் சட்டம் அமைதியான வழியில் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட அனுமதிக்கிறதா இல்லையா. இந்தியாவின் சில பகுதிகள் ஜனநாயக மரபுகளுக்கு விலக்களிக்கப்பட்டு, இங்கெல்லாம் போராட்டம் கூடாது, எதிர்ப்பு கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் அரசியல் அமைப்பு கூறுகிறதா, அல்லது அதிகார வர்க்கம் சில இடங்களில் போராட்டம் நடந்தால் அது அந்த ஆளும் வர்க்கத்துக்கு எதிரான கருத்தை உருவாக்கிவிடும், ஆளும் கூட்டத்திலுள்ள சிலரது பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று காவல்துறை சில பகுதிகளை சிவப்புப் பகுதிகளாகக் கருதுகின்றனவா என்பதெல்லாம் ஏற்படுகிற சந்தேகம்.

இப்படியொரு சந்தேகம் வரக் காரணம் நாட்டின் பெருமைக்குச் சான்றாக குடியரசு தின அணிவகுப்பு நடக்கும் அதே சாலையில் இந்தியாவின் குறிப்பாக புது டில்லியின் வரலாற்று பீடமாக நிற்கும் இந்தியா கேட் பகுதி போராட்டத்திற்கு அனுமதி யில்லாத இடமா தெரியவில்லை. பிரதமர் இல்லம், ஆளும் கூட்டணித் தலைவரின் இல்லம், அவர்தம் வாரிசு வாழுமிடம், குடியரசுத் தலைவர் வாழும் மாளிகை, நாடாளுமன்ற வளாகம் இவைகளுக்கருகில் மக்களின் மனக் குமுறல்களை வெளிப்படுத்தக் கூடாது என்ற எழுதப்படாத அவசரச் சட்டத்தை டெல்லி போலீஸ் அறிவித்திருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

இது குறித்து ஒரு செய்தி. தமிழ்நாட்டில் காமராஜ் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர் காருக்கு முன்பாக போலீசாரின் கார் சங்கு ஊதிக்கொண்டு சென்றது. காமராஜ் கேட்டார் இது என்ன சத்தம் என்று. போலீஸ் அதிகாரி சொன்னார், உங்கள் பாதுகாப்புக்காக போலீஸ் ஜீப் இப்படி ஒலி எழுப்புக் கொண்டு போகிறது என்று. காமராஜ் அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. “நான் உயிரோடு இருக்கும்போது எனக்கு எதுக்கு சங்கு ஊதறீங்கன்னேன்! எனக்கு இதெல்லாம் வேண்டாம், போகச்சொல்லுங்க” என்றார். அவர் மனிதர்!

ஒருவரோ, இருவரோ சேர்ந்திருந்தால் அது அமைதியான கூட்டம். அதுவே எண்ணிக்கையில் அதிகமாகி ஆயிரமாயிரமாக அதிகரிக்கும்போது அந்தக் கூட்டம் அமைதியாகத்தான் இருக்குமென்று யாருமே உத்தரவாதம் கொடுக்க முடியாது. அமைதியாக நடந்தால் மட்டும் பாராட்டவா போகிறார்கள். அப்படி அமைதியாக நடந்த போராட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அநாதைகளாகப் போன நிகழ்ச்சிகள் ஏராளம். ஓரிடத்தில் வன்முறையைத் தூண்டிவிட திட்டமிட்ட ஓரிருவர் மட்டும் போதாதா என்ன? எங்கிருந்தோ ஒரு கல்லை யாரோ ஒருவன் எறிந்து விட்டால் உடனே காவல்துறை ஒட்டுமொத்த கூட்டத்தையும் ‘கண் மண்’ தெரியாமல் அடித்து விளாசும் காட்சிகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

அடித்துத் துவைத்துப் போட்டபின் மத்திய உள்துறை துணை அமைச்சர் சொல்லுகிறார், நாங்கள் அவரிடம் பேசினோம், இவரிடம் பேசினோம், கூட்டத்தினரின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டோம் அப்போதும் அவர்கள் போராடுகிறார்கள். 99 சதவீதம் அமைதியாகப் போராடும் கூட்டத்தில் ஒரு சதவீதம் பேர் வன்முறையாளர்கள் புகுந்து விட்டார்கள். அதனால்தான் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க நேர்ந்தது, அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார்.

தொலைக்காட்சிகளில் பார்த்தவரையில் ஒரு சில காட்சிகள், பார்த்துக் கொண்டிருப்பவர்களையே ஆத்திரமூட்டும் விதமாக இருக்கிறது. அந்த ஊடகங்களின் வழக்கப்படி இதுபோன்ற கொடுமையான காட்சிகளை அவர்கள் திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளில் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமாக அடிக்கத்தான் கமிஷணர் உத்தரவு வழங்கினாரா, அல்லது காவல்துறையின் வழக்கப்படி கூட்டத்தைக் கலைக்க சில வழிகாட்டுதல்கள் இருக்கின்றன, அவற்றைப் பின்பற்றினார்களா என்று ஒரு ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை.

குறிப்பாக ஒரு ஆண், அவர் தலையில் முடியை பெண்கள் கூந்தலைப் போல முடிந்திருந்தார். அவர் கையில் இருந்த உபகரணங்களைப் பார்க்கையில் அவர் ஒரு பத்திரிகையாளர் போலத் தெரிகிறார். கூட்டமே இல்லாத ஓரிடத்தில் அமைதியாக நின்றிருக்கும் அவரைப் போய் ஒரு போலீஸ்காரர் அடிக்கிறார். அவர் நகரவில்லை. திரும்பத் திரும்ப போலீஸ்காரர் கை வலிக்கும் வரை அடித்து ஓய்கிறார். அந்த மனிதரும் அசையவில்லை. வேறொரு போலீஸ்காரர் வந்து அவரிடம் இணக்கமாக ஏதோ சொல்லி அனுப்பி வைக்கிறார். அடித்த போலீஸ்காரர் வேறொருவரை அடிக்க ஓடிக் கொண்டிருக்கிறார். என்ன கொடுமை இது? பார்ப்பவர்கள் மகாகவி பாரதி பாஞ்சாலி சபதத்தில் சொல்லுகின்றபடி, இதுபோன்ற கொடுமைகளைக் கண்டு ‘ஐயோ, என்ன கொடுமை இது என்று நெட்டை மரங்களென நின்று புலம்புவதைத்” தவிர வேறு என்ன செய்ய முடியும்?

இன்னொரு காட்சி, ஒரு இளம் மாணவியை ஒரு போலீஸ்காரர் குப்பையை வீசுவது போல தெருவில் வீசித் தள்ளுகிறார். அந்தப் பெண் எழுந்து வந்து அந்த போலீஸ்காரரின் சட்டையை இழுத்துப் பிடித்து முகத்தைத் திருப்ப முயலும்போது யாரோ வந்து அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தி விடுகிறார். அந்தப் பெண் போன வேகத்தில் அந்த ஆளை ஒரு கை பார்த்திருப்பார். படம் தொடந்து காட்டப்படவில்லை.அந்தப் போலீஸ்காரர் தன்னுடைய தாயையோ, சகோதரியையோ, மனைவியையோ அப்படி அடிப்பாரா, அல்லது வீசி எறிவாரா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். காரணங்களைக் குறித்து அலசுவதை விட, நடந்துவிட்ட காரியங்களிலுள்ள நியாய அநியாயத்தைக் குறித்துத்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

delhi-policemen-attack-protester-2

மற்றுமொரு காட்சி, கூட்டம் கலைந்து ஓடுகையில் ஒரு நடுத்தர வயதுப் பெண், தன்னுடன் நிற்கும் இரு நபர்களோடு நின்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் கூட்டமோ, கலவரமோ இல்லை. அப்போது அங்கு வந்த ஒரு போலீஸ்காரர் இடது கையிலிருந்த நீண்ட கைத்தடியால் திரும்பத் திரும்ப காலில் தொடங்கி தலைவரை கை ஓய்ந்து போகும் வரை அடிக்கிறார். தலை உடைந்து ரத்தம் சிந்தியபடி அந்தப் பெண்ணை அருகிலிருந்தவர்கள் கைத்தாங்கலாக அழைத்துப் போகின்றனர். அந்த போலீஸ்காரர் தனது சாகசத்தை எண்ணி மகிழ்ந்தவாறு மற்ற போலீஸ்காரர்களுடன் மற்றவர்களை அடித்து துவம்சம் செய்ய ஓடிக் கொண்டிருக்கிறார்.

இந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்கும்போது, 1919இல் ஜாலியன்வாலாபாக்கில் கையிலிருக்கும் குண்டுகள் தீரும்வரை அப்பவி மக்களைச் சுட்டுத் தீர்த்த அந்த கொடியவன் ஜெனரல் டயர் செய்த செயல் சாதாரணமாகத்தான் தெரிகிறது. காரணம் அவன் இந்திய மக்களை, சுதேசிகளை துச்சமாக மதித்தான். இந்திய உயிர்கள் அவனுக்குப் பெரிதல்ல. ஆனால், இந்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்திய போலீசார் ஒன்றுமறியாத அப்பாவி மாணவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துத் துவைக்க என்ன வெறி காரணம். இவர்களை இந்த வேலைக்கு எப்படித் தேர்ந்தெடுத்தார்கள். கூட்டத்தைத் தடியடி செய்து கலைக்கத்தான் உத்தரவு கொடுத்தார்களே தவிர, தனிப்பட்ட மனிதர்களை கை ஓயும்வரை அடித்து நொறுக்கவா உத்தரவு பிறப்பித்தார்கள். கூட்டத்தைக் கலைக்க அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தப் பயிற்சியில் அவர்கள் சுழற்றும் தடி வேகமாக சுற்றிவரும் அளவுக்கு மனிதர்கள் மேல் அதிகம் படாமலும், அடிப்பது போல தரையில் அடித்து அச்சுறுத்தவும்தான் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி அடித்தாலும் தலையில் அடிக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அந்த கமிஷனர் விளக்கம் அளித்திட வேண்டும்.

டெல்லி மருத்துவ மாணவியின் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் தன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். குற்றவாளிகள் செய்த கொடூர பாதகச் செயலுக்குத் தக்க தண்டனையை உடனடியாக அவசரகால நீதிமன்றத்தில் தினந்தினம் விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்களுக்கு டில்லியில் மட்டுமல்ல, நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். போதுமான அளவுக்குக் காவலர்கள் (காட்டுமிராண்டிகளை அல்ல) நல்ல மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். கிழக்கிந்திய கம்பெனி தங்கள் ஆதிக்கம் இந்தியாவில் நிலைத்திட அவர்களிலிருந்து மோசமான ஆசாமிகளை (ராபர்ட் கிளைவ் போல) தேர்ந்தெடுத்து இந்தியாவுக்கு அனுப்பினார்களாம். அதுபோல குற்றம் செய்வது என்றால் அல்வா சாப்பிடுவதைப் போல, அடி என்றால், கொன்றுவிடத் துடிக்கும் ஆட்களை தேர்ந்தெடுக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். போலீஸ் உங்கள் நண்பன் என்று தமிழ்நாட்டு காவல்துறையில் பணியாற்றிய திரு பரமகுரு காலத்தில் புதிய உறவை ஏற்படுத்தியதைப் போல வடக்கே ஒரு பரமகுரு இல்லாததுகூட காரணமாக இருக்கலாம்.

புதிய இந்தியா இளைஞர்கள் கையில். காலம் கழிந்துபோன கிழபாடுகள் இன்னமும் இந்தியாவை அவர்கள் வாழ்ந்த காலத்து அறியாமை இருளில் இருக்கும் கல்வியறிவில்லாத மக்களாக நினைத்துக் கொண்டு ஆடு மாடுகளைப் போல நடத்த முயலாமல், அவரவர் உயர் கல்வியும், நாகரிகமும், நேர்மையும், சட்டத்தின் மதிப்பையும், அனைத்துக்கும் மேலாக இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் இளைஞர்கள் கூட்டத்தோடு மோதாமல் நல்லாட்சி நடத்திட முயல வேண்டும். அரசியலில் எத்தனையெத்தனை ஊழல்கள் உண்டோ அத்தனையையும் செய்துவிட்டு, கடப்பாறையை முழுங்கியவர்கள் போல எதுவுமே நடக்கவில்லை என்று சாதித்த காலம் மலையேறிவிட்டது. கற்றறிந்த இளைஞர் கூட்டம் கேள்வி கேட்கத் துவங்கி விட்டது. நிலைமையைப் புரிந்து கொண்டு ஆள்வோர் நேர்மையைக் கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். இவர்களே மீண்டுமொரு முறை ஜாலியன்வாலாபாக்கை நிகழ்த்திக் காட்ட முயலக்கூடாது. மெக்சிகோ புரட்சிக்காரன் ‘விவா சபாட்டா” குறித்த ஒரு ஹாலிவுட் படம், மார்லன் பிராண்டோ நடித்து வெளிவந்தது. அந்தக்கதையை நினைவு படுத்துகிறது டில்லி ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள்.

வாழ்க ஜனநாயகம்! வாழ்க மக்களின் பேச்சு, எழுத்துரிமை!

7 Replies to “தில்லி சம்பவம்: போராட்டங்களும் அடக்குமுறைகளும்”

 1. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
  பின்னணியையும் அதன் சம்பவக் கோர்வைகளையும், நீங்கள் தொகுத்து சரியான புரிந்து கொள்ளும் வகைக்கு உதவி இருப்பது, போற்றத்தக்கது.
  எப்பொழுதும் போல விரவிப் பரவி இருக்கும் ஒரு அடிப்படை அமைதியும் விவேகமும், உங்களின் இந்த கட்டுரையிலும் மிளிர்கிறது.
  இந்த டெல்லி சம்பவங்கள், உலகம் முழுதும் பலரும் கவனித்து வருகிறார்கள். நான்
  கிறிஸ்துமஸ் அன்று சந்தித்த ஒரு எண்பது வயது ஹங்கேரி மாதரசி மிகவும் உணர்ச்சி ததும்ப தமது வருத்தத்தை தெரிவித்து, நொந்து கொண்டார்.
  ஒரு கொதிநிலையிலே, நமது நாடு இருந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.
  ஓர் தகுந்த கொதிநிலையிலே ஒரு தேவையான ரசாயன மாற்றம், வரும் என்று எதிர்பார்க்கலாம். இருக்கிற அயோக்கியர்களுக்கு சம்பவங்களின் விளைவுகள் அறம் சார்ந்து சங்கு ஊதினாலும், பிறகு வரப்போகிற கயவர் கூட்டத்தினருக்கு கட்டுப்பாடுகளை விதைத்து ஒழுங்குபடுத்த நம்மிடையே கைவசம் தகுந்த வியூகம் வேண்டும். குருடும் குருடும் குருட்டாட்டமாடி குருடும் குருடும் குழி விழுமாறு வீழும் அற்பப்பதர்கள் காலம் போனபின்னாலாவது, நல்லவர்கள் + வல்லவர்கள் முன்னணிக்கு வந்து , யோக்யமான மக்கள் பெரும்பான்மை என்றாகும் அந்த நல்லகாலம் பிறக்க வேண்டும்.
  நல்லகாலம் பிறக்க வேண்டும்.
  அதற்கு பராசக்தி துணை அருள வேண்டும்.
  நன்றி.
  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்.

 2. \\\\\ தெரிந்து கொள்ள முடியாத மர்ம முடிச்சு என்னவென்றால், அமைதியாக மெழுகுவத்தியேந்தி இந்தியா கேட் முன்பாகப் போராடத் துவங்கிய மாணவர்கள் பொறுமை இழந்து வன்முறையில் ஈடுபட்டார்களா, அல்லது காவல்துறையின் மிருக வெறி காரணமாக இந்த இளைஞர்கள் அடியும் வேதனையும் பட்டதன் விளைவாக வன்முறையில் ஈடுபட்டார்களா \\\

  மூன்றாவது கோணமும் இருக்க வாய்ப்புண்டு. ஸ்வாமி ராம்தேவ் அவர்களது (ராம்லீலா மைதான) போராட்டமாக இருக்கட்டும் இப்போது தில்லியில் நிகழும் போராட்டமாகவும் இருக்கட்டும் — குண்டர்களை அனுப்பி (அல்லது சம்பந்தப்பட்ட கட்சி அல்லது இயக்கங்களில் ஊடுருவச்செய்து) வன்முறையில் ஈடுபடச்செய்து அதையே 24 மணி நேரமும் விலைபோகும் தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பச்செய்து போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று பொய்ச்செய்தியை பரப்பச்செய்தல் கோடிகளில் புரளும் அரசியல் வாதிகளுக்கு ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை.

  \\\\கூட்டமே இல்லாத ஓரிடத்தில் அமைதியாக நின்றிருக்கும் அவரைப் போய் ஒரு போலீஸ்காரர் அடிக்கிறார். அவர் நகரவில்லை. திரும்பத் திரும்ப போலீஸ்காரர் கை வலிக்கும் வரை அடித்து ஓய்கிறார். அந்த மனிதரும் அசையவில்லை. வேறொரு போலீஸ்காரர் வந்து அவரிடம் இணக்கமாக ஏதோ சொல்லி அனுப்பி வைக்கிறார்.\\\\

  போலீஸார் யாரும் ஆகாசத்திலிருந்து குதிப்பதில்லையே. நமது சமூஹத்தில் நம்மிலிருந்து தானே வருகிறார்கள். நீங்கள் சொன்ன உதாரணத்திலேயே ஒருவர் கெட்டவர். ஒருவர் நல்லவர்.

  இதே போராட்டத்தின் போது தான் ஸ்ரீ சுபாஷ் தோமர் என்ற போலீஸ்காரர் சில குண்டர்களால் வெறித்தனமாகத் தாக்கப்பட்டு உயிர் துறந்தார். (தற்பொழுது இந்த சம்பவம் விசாரணையில் உள்ளது ஆம் ஆத்மி கட்சியைச்சார்ந்த ஒரு நபரும் இதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஸ்ரீ அர்விந்த் கேஜ்ரிவால் அவர்கள் யார் தப்பு செய்திருந்தாலும் தண்டிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

  வெறித்தனமாக அடிப்பதில் ஈடுபடும் போலீஸாரை இது வரை எந்தப் போராட்டத்திற்குப் பின்னும் எந்த அரசாவது தண்டித்ததுண்டு? அப்படி தண்டித்தால் இது போன்ற வெறியாளர்களுக்கு படிப்பினை கிட்ட வாய்ப்புண்டு. அதனை இது வரை போராடும் எந்தக் குழுக்களும் யோஜனை கூட செய்ததில்லை.

  போலீஸார் அரசாங்கத்தின் கைப்பாவையாக ஆக்கப்பட்டு வெறித்தனத்தில் இறங்குவது கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல. வெறித்தனத்தில் ஈடுபடும் போலீஸார் தண்டிக்கவும் படவேண்டும் தான். ஆனால் ஒட்டு மொத்த போலீஸ்துறையும் அதற்காக பழி சுமக்க எந்த அவசியமும் இல்லை.

  கீழ்மட்ட போலீஸார் ஒரு நாளுக்கு தில்லி போன்ற நகரங்களில் தினம் எத்தனை மணி நேரம் உழைக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். இந்த போலீஸ்காரர்கள் செங்கொடி ஏந்தி போராட்டமெல்லாம் நிகழ்த்த முடியாதே. டிவியில் 9 மணிக்கு ப்ரசங்கம் செய்பவர்களுக்கும் அரசாங்க உத்யோகத்திலிருப்பவர்களுக்கும் இத்தனை மணிக்கு ஆரம்பித்து இத்தனை மணியில் முடியும் வேலை. என்ன வேண்டுமானால் ப்ரசங்கம் செய்யலாம். போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் தினமும் உறங்கும் நேரம் தவிர்த்து விழித்திருக்கும் நேரத்தில் மிக மிக அதிகமாக தங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
  அதிலும் கிட்டத்தட்ட 25 சதமானப் போலீஸார் மாண்புமிகுக்களுக்கு பாதுகாப்பு என்று போய்விடுகையில் மீதி இருப்பவர் பாடு திண்டாட்டம் தான்.

  இந்த மீதி இருக்கும் போலீஸார் / துணை ராணுவத்தினர் மனிதர்கள் ஆயிற்றே என்று எந்த சர்க்காராவது நினைத்தால் இவர்கள் மிருகம் போல் போராட்டங்களில் செயல்பட அவசியமே இருக்காது. போலீஸாரின் மிருகத்தனம் தண்டிக்கப்பட வேண்டும் தான். ஆனால் அவர்கள் சாவி கொடுத்தால் இருபத்துநாலு மணிநேரமும் இயங்கத்தகுந்த யந்த்ரங்கள் என்ற மனோநிலை மாறி இத்தனை பொதுஜனங்கள் உள்ள ஒரு இடம் அல்லது கூட்டத்திற்கு இத்தனை போலீஸார் என்று உலக அலகீடுகளுக்கு சற்றேறக்குறைய நமது அலகீடுகளையும் பரிசீலனை செய்து போலீஸ் துறையில் சரியான அளவில் போலீஸ் எண்ணிக்கையை வைத்தாலேயே மிருகத்தனம் பெருமளவில் குறையும்.

 3. போலிசாரின் மோசமான நடத்தைக்கு அவர்களுடைய வேலை பளுவும் ஒரு காரணம் என்பதைப் புரிந்து கொள்கிறேன், ஆனால் அடிப்படையில் போலிஸ் என்றால் கண்மண் தெரியாமல் அடிப்பது எனும் கொள்கையை அவர்கள் பின்பற்றுவது பிரிட்டிஷ் காலத்திலிருந்து இருந்து வருகிறது. இந்த கட்டுரையை எழுதியவரும் போலிஸ் இலாகாவில் பணிபுரிந்தவர்தான். மனிதாபிமானமும் அன்பும் மிக்க காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த ஐ.பி.எஸ். அதிகாரியான எம்.எஸ்.பரூக்கி அவர்களிடமும் கே.வி.சுப்பிரமணியம் அவர்களிடமும் பணிராற்றியவர். முன்பு லால்பகதூர் சாஸ்திரி ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில் அரியலூரில் நடந்த ரயில் விபத்தின்போது திரு பரூக்கி அவர்களுடன் பயணம் செய்த ரயில்வே போலிஸ் குழுவில் நானும் சென்றிருந்தேன் தனி ரயில் திருச்சியில் புறப்பட்டு அரியலூர் அருகில் விபத்து நடந்த பகுதிக்குச் சென்றதும் எஸ்.பி. ரயிலில் இருந்து இறங்கி அருகிலிருந்த சவுக்குத் தொப்பருகில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிணங்களைப் பார்த்ததும் தோப்புக்குள் சென்று, அவர் எப்போதும் கையில் வைத்திருக்கும் பட்டுத் துணியை விரித்து மண்டியிட்டு சில நிமிடங்கள் இறந்த உயிர்களுக்காக தொழுகை புரிந்தபின் கடமையாற்றினார் நொடிப்பொழுதில் நிவாரணப் பணிகளுக்கு உத்தரவிட்டார். அழுது அரற்றும் மக்களை ஆறுதல் படுத்தினார் இத்தனையும் அவர் அணிந்த காக்கிச் சட்டையுடன் செய்தார் அவன் மனிதர். காவல்துறை அப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பொன்.பரமகுரு முனைப்பு காட்டினார் அதைத்தான் சுதந்திரம் அடைந்த நமது நாட்டில் போலிஸ் கடைபிடிக்க வேண்டும், அன்பினால் ஆகாதது எதுவும் இல்லை. பிரிட்டிஷ் போலிஸ் மனோபாவம் தேவையில்லை என்பதுதான் என் கட்டுரையின் நோக்கம். அன்பர்கள் அதனைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் இல்லை போலீஸ் செய்தது அக்கிரமம் என்பது உறுதி.

  .

 4. போலீஸ் இலாகாவிலிருந்து ஓய்வு பெற்ற மதிப்பிற்குறிய ஸ்ரீ தஞ்சை வெ.கோபாலன் அவர்களுக்கு வணக்கம்

  \\\\பிரிட்டிஷ் போலிஸ் மனோபாவம் தேவையில்லை என்பதுதான் என் கட்டுரையின் நோக்கம்.\\\\\ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் இல்லை போலீஸ் செய்தது அக்கிரமம் என்பது உறுதி.\\\\\

  மேற்கண்ட கருத்துக்களில் அபிப்ராய பேதம் எனக்கு லவலேசமும் இல்லை. நிராயுதபாணிகளாக மக்கள் ஈடுபடும் போராட்டங்களில் வெறித்தனத்தில் ஈடுபடும் போலீஸ்காரர்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபமும் இருக்கவியலாது.

  கல்லெறிதல் போன்ற ஆயுதபாணிகளாய் மக்கள் இறங்கும் போராட்டங்களிலும் மற்றும் நக்சல்பயங்கரவாதப் போராட்டங்களிலும் லாட்டிக்கும் துப்பாக்கிக்கும் ஆயுதபூஜை செய்து போலீஸ்காரர் சத்யக்ரஹ வழியில் இந்தப் போராளிகளை எதிர் கொள்ள வேண்டும் என்ற கருத்தைத் தாங்கள் சொல்லவில்லை தான். ஆனால் டிவியில் 9 மணிக்கு இப்படியெல்லாமும் புத்திஜீவிகள் ப்ரசங்கம் செய்ததைக் கேட்டதுண்டு. ஏனென்றால் எனக்கு போலீஸ் அதிகாரிகள் என்றதும் மதிப்புக்குறிய ஃபாரூக்கி அவர்களைத் தவிரவும் மதிப்பிற்குறிய ஜூலியஸ் ஃப்ரான்சிஸ் ரிபெய்ரோ மற்றும் கன்வர் பால் சிங்க் கில் போன்று இரும்புக்கரத்தால் பஞ்சாபில் ஆயுதபாணிப் போராட்டங்களை களையெடுத்த அதிகாரிகளும் நினைவில் வருகிறார்கள்.

  மும்பை மாநகரக்காவல் துறையில் 2002ல் மற்றும் 2010 ல் மாண்புமிகுக்களுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 பங்கு அதிகரித்ததாக் times now தொலைக்காட்சி சொல்கிறது. ஆனால் ஒட்டுமொத்த போலீஸ்காரர் வேலை சேர்ப்பு எந்த அளவு அதிகரித்துள்ளது? வருஷா வருஷம் பாதுகாப்புப் பணிக்கு செல்லும் போலீஸ்காரர்கள் அதிகரிக்க அதிகரிக்க மிஞ்சியுள்ள போலீஸ்காரர்களின் செயல்திறன் குறைந்து கொண்டே செல்லும் என்பதை போலீஸ் இலாகாவில் பணி செய்த தாங்கள் வேறு யாரையும் விட நன் கு அறிவீர்கள். ஹிந்துஸ்தானத்தின் பல மாகாணங்களில் அதிகரித்துக்கொண்டு வரும் இந்த நிலையைப்பற்றியும் தாங்கள் எழுத வேண்டும் என்று விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  அராஜகம் செய்யும் போலீஸ்காரர்களின் செய்கை மிருகத்தனம் என்றால் வருஷா வருஷம் மிக அதிகமான அளவில் அவர்களை மாண்புமிகுக்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடச்செய்து எஞ்சிய போலீஸ்காரர்களை யந்த்ரம் போல் வேலை வாங்கும் மாண்புமிகுக்களை என்னவென்று சொல்வது?

  போலீஸ் அராஜகம் என்ற விஷயத்துடன் அதற்குக் காரணமான இந்த விஷயத்தை பேசாது விடல் எரியும் நெருப்பில் தண்ணீர் விட்டு அணைப்பதற்குப் பதில் அந்த நெருப்பை ஒரு திரையைப் போட்டு மறைப்பதைப் போலத்தான். திரை கொஞ்ச நேரம் நெருப்பை மறைக்கலாம் தான். ஆனால் சிறிது நேரத்தில் அந்தத் திரையும் நெருப்பில் பொசுங்கி விடும் என்பது மறைக்கவியலா உண்மை.

 5. சத்யாக்ரஹம், ஜூலியோ ஃப்ரான்சிஸ் ரிபெய்ரோ – தட்டச்சுப்பிழைக்கு க்ஷமிக்கவும்.

 6. காவல் துறையை குறை சொல்வது வீணே.
  சிதம்பரமும், ஷிண்டேயும் மேலே உட்கார்ந்து கொண்டு ஆட்டுவித்தால் கமிஷனர்தான் என்ன செய்வார், போலிசு தான் என்ன செய்யும் ?
  குள்ளநரிக் காங்கிரஸ்காரன், குறுக்கு புத்தி காங்கிரஸ் காரன் செய்வதெல்லாம் சூழ்ச்சிதான்.
  நடுவில் மாட்டிக் கொள்வதும், ஏமாறுவதும் காவல் துறை உள்ளிட்ட மக்களே .
  இரா.ஸ்ரீதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *