பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8

முந்தைய பகுதிகள்:

பொதுவாகப் புகழ்மொழிகள் இருவகைப் படுவனவாகக் கூறுவதுண்டு. பாடல் பெறுபவரது இயல்பான நற்குணங்களோடு நில்லாமல், அவருடைய குணங்களை மிகைப்படுத்தியும் இயல்பிற்கும் அப்பாலான பல உயர் பண்புகளை அவர் மீது ஏற்றிப் பாடுவதும் ஒரு வகை. இது கவிதை நயம் சிறக்கவோ, அல்லது பாடப்படுபவரை மகிழ்வித்துப் பொன்னும் பொருளும் பெறுவது போன்ற வேறு நன்மை கருதியோ செய்யப்படும் வெற்றுப் புகழ்ச்சியே. இதற்கு மாறாக, ஒருவரிடம் இயல்பாகவே உள்ள உயர் குணங்களை உள்ளபடியே மிகைப்படுத்தாமல் பாடுவதும் உண்டு. இத்தகைய மெய்யான புகழ்ச்சியை யதார்த்தம் அல்லது வாஸ்தவம் என்பர். “உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” எனும் கவியின் கூற்றையும் நன்கறிவோம்.

“திருமகள் கேள்வனைக் குறித்து யாம் பாடியிருப்பதெல்லாம் யதார்த்தமே, அவையெல்லாம் வேதத்தாலும், வேதத்தால் உணர்த்தப்படும் தத்துவத்தை நன்கறிந்த ஞானியராலும் அவனுக்கு இயல்பாய் உள்ளனவாகப் பாடப்பட்ட குணங்களே; இவற்றுள் எதுவும் எமது கற்பனைப் புனைவுகளன்று” என்று பல இடங்களில் சங்கப் புலவர் தம் பாடல்களிலேயே என்பதனைப் பின்வரும் சங்க நூல் மேற்கோள்களில் காணலாம். அப்புலவர்களின் இவ்வகைக் கூற்றுகள் வெறும் வாய் வார்த்தை அல்ல என்பதை, அவர்கள் பாடியிருப்பதை வேத, இதிகாச, புராண வாக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தால் அறியலாம்.

“ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
பாடுவார் பாடும் வகை.”

[மண்ணுலகில் வாழும் தேவர்களாகிய அந்தணர்களும், வானுலகத் தேவர்களும் உன்னைப் பரம்பொருளாகப் பலவாறு விரும்பிப் பாடுகின்றனர். எமது பாடலும் அவர்களது வழியைப் பின்பற்றியே வந்தவை

—  பரிபாடல், 3]

vishnu-01

 “மூவே ழுலகமும் உலகினுள் மன்பதும்
மாயோய் நின்வயிற் பரந்தவை யுரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து”

[பிரபஞ்சமும் பிரபஞ்சத்தில் உள்ள அசைவனவும் அசையாதனவும் உன்னிடமிருந்து தோன்றிப் பரந்தவை என்று வேதம் கூறுவதால் நாங்களும் அவ்வாறே கூறினோம். — பரிபாடல், 3]

“சேவலங் கொடியோய்நின் வலவயி னிறுத்து
மேவலுட் பணிந்தமை கூறும்
நாவல் அந்தணர் அருமறைப் பொருளே.”

[கருடக்கொடியை உடையவனே! உயிர்கள் அனைத்தும் உன் அருள் தழுவுதலுள்ளே அமர்ந்து நின்னைப் பணிந்தமையை வேதமானது விரித்துக் கூறும். — பரிபாடல், 1]

vishnu-02

“ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்”    

[‘ஏ…எ…’ என்று இசையமைத்துப் பாடப்படும் சாம வேதம் கூறுவதனாலே நாம் இவற்றை (திருமாலின் சிறப்புகளை) விளங்க அறிந்தோம் — பரிபாடல், 3]

எனும் இடங்களில் இதைக் காணலாம்.

“இறைவன் உள்ளான் என்பதற்கு வேதமொன்றே பிரமாணம் (சாட்சி). பிரபஞ்சத்தின் வியப்பளிக்கும் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, ‘உறுதியாக இது ஒருவனால் படைக்கப்பட்டதேயாகும்’ என்று அனுமானிப்பது சரியல்ல.” என்பது வேதாந்தக் கொள்கை. இது பிரம்ம சூத்திரங்களை இயற்றிய பாதராயணரால் “சா’ஸ்த்ர யோநித்வாத்” (1.1.3) எனும் சூத்திரத்தில் வலியுறுத்தப்பட்டது. சங்கப் புலவர்களும் இதனோடு இசைந்திருன்தனர் என்பது “திருமாலே உலகனைத்தையும் படைத்தளித்து ஆள்பவன் என்பதனை வேதம் கூறுவதாலே அறிந்தோம்” என்று அவர்கள் கூறுவதிலிருந்து தெரிகிறது.

சங்கத் தமிழ்ப் புலவர்கள் அனைவரும் பிறப்பால் அந்தணர்களல்லர் என்பது பெரும்பாலும் அனைவரும் இசைந்த கருத்து.  எனினும், அவர்கள் ஆழ்ந்த மறைப்பொருளை நன்கு அறிந்திருந்தனர் என்பதனைப் பரிபாடல்களில் நாம் காண முடிகிறது. மேலும், தத்துவத்தை நிர்ணயிப்பதில் வேதமானது தனித்து நிற்கும் சாட்சி என்று அக்காலப் புலவர்கள் ஏற்றிருந்தனர் என்பதையும் இங்கு காணலாம். (இதனை ‘ஸ்வத: ப்ராமாண்யம்’ என்பர். ஸ்வத: = எதையும் சார்ந்து நிற்காமல் தானாகவே இயங்குதல், ப்ராமாண்யம் = உண்மைத் தன்மை பெற்றிருத்தல்.)

vishnu-03இனி, வேதத்தில் உலகளந்த உத்தமனுக்குக் கூறப்பட்ட யதார்த்தப் புகழ்மொழிகளையே சங்கப் புலவர்கள் திருமாலுக்குப் பாடியுள்ளனர் என்பதனை, அப்புலவர்கள் மொழிந்தவற்றோடு, வேதமறிந்த ரிஷிகளின் வாக்கியங்களாகிய இதிகாச-புராணங்கள், தமிழ்ப் பிரபந்தங்கள், வேத மார்க்கத்தின் மீட்சிக்குப் பிற்காலத்தில் வழிவகுத்த வேதாந்த விளக்க நூல்கள் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளை ஒப்பிட்டு ஆராய்ந்தால் உணரலாம். இவ்வாராய்ச்சியில் ஒரு சில சான்றுகளைத் தொகுத்துத் தருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புருடோத்தமனின் தனிச்சிறப்புகளாகப் பரவலாகப் பேசப்படுவது அவனுடைய அவதாரச் சிறப்புகள், திருமேனியழகு முதலானவை. சங்க நூல்களில் இவை பற்றிப் பல இடங்களில் வருகின்றன. இவை அனைத்தும் அவனுடைய ‘ரூப-வைபவங்களுள்’ அடங்கும். இவற்றோடு மட்டுமல்லாமல், அவனுடைய இயல்பு, மேன்மை, நீர்மை ஆகியவற்றைக் காட்டும் ‘ஸ்வரூப-குணங்களை’ விவரிக்கும் பகுதிகள் பல சங்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன. பரம்பொருள் இன்னதென்று ரிஷிகளாலும், மும்மத (அத்வைத, துவைத, விசிஷ்டாத்வைத) ஆச்சாரியார்களாலும் கூறப்பட்ட இலக்கணமும், அதற்கு அவர்கள் கையாண்ட உவமை, உருவகம், முதலான அணிகளும் பழந்தமிழ்ப் புலவர்கள் இயற்றிய அவ்வரிகளுடன் ஒத்து வருவது அனுபவித்து இன்புறத்தக்கதொரு உண்மை. இனி, ஒவ்வொன்றாக இச்செய்திகளைக் காண்போம்.

*********

நம்மால் கடைப்பிடிக்கப்பட்டு வரப்படும் வழிபாட்டு முறைகளும், அவ்வழிபாட்டில் பயன்படுத்தப்படும் தூபம், சந்தனம் முதலான திரவியங்களும் நம் இந்து மதத்தின் தனிச்சிறப்பான அடையாளங்களாகும். அன்றாடம் நம் பூஜை அறைகளில் பயன்படுத்தப்படும் திரவியங்களில் முக்கியமானவை மலர்களாகும். விஷ்ணுவால் அதிகம் விரும்பப்படும் மலர்கள் யாவை? எந்தெந்த பூக்களால் பக்தர்களில் உத்தமர்கள் அவனை வழிபடுகின்றனர்? அப் பூக்களை நாம் வெளியில் தேடி விலை கொடுத்து வாங்க வேண்டுமா? இல்லை! அகத்திலேயே அவற்றை நீரூற்றி வளர்க்கலாம் என்பது பெரியோர்களின் கொள்கை. ஏனெனில், “அகிம்சை, புலனடக்கம், அனைத்து உயிர்களிடமும் இரக்கமுடைமை, பொறுமை, ஞானம், தவம், தியானம், வாய்மையில் நிலைநிற்றல் ஆகிய எட்டு வகை புஷ்பங்களும் விஷ்ணுவை உகப்பிப்பவை” என்று பின்வரும் புராண சுலோகம் கூறுகிறது:

vishnu-04“அஹிம்ஸா ப்ரத2மம் புஷ்பம்
புஷ்பம் இந்த்3ரிய நிக்3ரஹ:
ஸர்வபூ4த த3யா புஷ்பம்
க்ஷமா புஷ்பம் விசே’ஷத: |

ஜ்ஞானம் புஷ்பம் தப: புஷ்பம்
த்4யானம் புஷ்பம் ததை2வ ச
ஸத்யம் அஷ்டவித4ம் புஷ்பம்
விஷ்ணோ: ப்ரீதிகரம் ப4வேத் ||”  

[– பாத்ம புராணம்]

 

பெரியாழ்வார் குழந்தைக் கண்ணனுக்குப் பாடிய பூச்சூட்டல் பாசுரவரி ஒன்றும் இங்கு நிலைவில் நிறுத்த வேண்டியது:

“எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்றுஇவை சூட்டவாவென்று” [– பெரியாழ்வார் திருமொழி, 1.7.10]

இவ்வரிகளில் ‘எண் பகர் பூவும்’ என்பதற்கு, மேற்கண்ட புராண சுலோகத்தின் பொருளை நினைவிற்கொண்டு ‘அகிம்சை முதலான எட்டு புஷ்பங்கள்’ என்று உபன்யாசங்களில் சுவைபட விளக்குவதும் வழக்கில் உள்ளது.

vishnu-05மேற்கண்ட கருத்து சங்க நூல்களிலும் உண்டு. சங்கத் தமிழ்ச் சான்றோர்கள் ‘பரமனின் இயல்புகளை ரிஷிகளும் மற்ற ஞானியரும் எப்படி அறிந்து கொண்டனர்?’ என்ற கேள்விக்கு, ‘ஐம்பொறிகளை அடக்கி, நான்கு உயர் பண்புகளை வளர்த்து, மனதை ஒரே இடத்தில் நிலைநிறுத்துவதனால் ஏற்படும் எண்ணக் குவியலாலே அவர்கள் அப்பரமனின் இயல்புகளை விரித்துரைத்தனர்’ என்று கூறினர்:

 “ஐந்திருள் அறநீக்கி நான்கின் உள்துடைத்துத்தம்
ஒன்றாற்றுப் படுத்தநின் ஆர்வலர் தொழுதேத்தி
நின்புகழ் விரித்தனர்”

[செவி முதலிய ஐம்பொறிகளாலே உண்டாகும் மயக்கமாகிய இருளைக் களைந்து, மைத்திரி முதலிய நான்கின் பயிற்சியால்  உள்ளத்தை சுத்தமாக்கி, சமாதி என்னும் ஒரே நெறியின் கண் தம்மைச் செலுத்திய அன்பர்கள் உன்னைத் தொழுது உன் புகழை எமக்கு விரித்தனர். — பரிபாடல், 4]

இவ்வரிகளில் ’நான்கு’ என்று சொல்லப்பட்டதற்குப் பரிமேலழகர் கூறும் விளக்கம்:

(1) மைத்திரி – எவ்வுயிர்க்கும் நன்மையையே விரும்புதல்.
(2) கருணை – எவ்வுயிரிடத்தும் இரக்கமுடையவராய் இருத்தல்.
(3) முதிதை – இன்பதுன்பங்களைச் சமமாகக் கொண்டு எப்போதும் மகிழ்ந்திருத்தல்.
(4) இகழ்ச்சி – ஆன்ம நலனுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய பொருட்களில் பற்றில்லாது அவற்றை இகழ்தல்.

இப் பரிபாடல் வரிகளும் மேற்கண்ட புராணச் சுலோகத்தில் கூறப்பட்ட எட்டு நற்பண்புகளையும் கூறுவது குறிப்பிடத்தக்கது. இவ்வரிகளை, சங்கர பகவத்பாதரின் உரைநூல்களிலிருந்து ஒரு குறிப்புடன் சேர்த்து அனுபவிக்கலாம். விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கவுரையில் அவர் ‘தாமோதரன்’ என்ற பெயருக்குக் கூறும் விளக்கங்கள் மூன்று. இவற்றுள் ஒரு விளக்கம் நாம் அனைவரும் அறிந்தது – யசோதை தாம்புக் கயிற்றால் கண்ணன் உதரத்தோடு (வயிற்றோடு) சேர்த்து உரலில் கட்டியதால் ‘தாம + உதரன் = தாமோதரன்’ என்ற பெயர் அவனுக்கு உண்டாயிற்று. அவர் கூறும் மற்றொரு விளக்கம் தற்பொழுது நாம் கவனித்துக் கொண்டிருக்கும் செய்தியோடு தொடர்புடையது. அதாவது, புலனடக்கம் முதலிய நெறிகளின் பயனால் (‘தமம்’ முதலானவற்றால்) சுத்தீகரிக்கப்பட்ட (‘உதரமாக்கப்பட்ட’) மனதின் மூலம் அறியத்தக்கவன் ஆதலால் ‘தாமோதரன்’ என்பது. மகாபாரத சுலோகமொன்றும் இவ்விளக்கத்தை ஆதரிப்பதாக அவர் காட்டியுள்ளார். பரந்தாமனை அறியாமல் அவன் புகழை விரித்துப்பாடுவது எங்ஙனம்? ஆகையால், “ஐந்திருள் அறநீக்கி … நின் ஆர்வலர் தொழுதேத்தி நின்புகழ் விரித்தனர்” என்ற பரிபாடல் வரிகளுடன் சங்கரர் கூறும் விளக்கம் முழுதும் உடன்படுகிறது.

*********

ஒரு நாட்டின் அரசன் செங்கோலாட்சி புரிவதென்றால் தனது பிரஜைகளில் நல்லோரைக் காப்பதுடன் தீயோரைத் தண்டித்துத் திருத்துவதும் அவசியமாகிறது.

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்”

என்று தெய்வப்புலவராகிய திருவள்ளுவரும் கூறுகிறார். படியளந்த பரமனாகிய திருமாலோ அண்ட கோடிகளுக்கெல்லாம் மன்னாதி மன்னன். அவன் நல்லோரிடம் காட்டும் அருளும் தீயோரிடம் காட்டும் சினமும் அவனது எண்ணற்ற நற்குணங்களில் இரண்டு. இதனை முறையே “சிஷ்ட பரிபாலனம்” என்றும் “துஷ்ட நிக்ரஹம்” என்றும் கூறுவர். இதனை மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது, அவனுக்குச் சிலர் மற்றோரைக் காட்டிலும் அதிகம் வேண்டப்பட்டவர் என்றும், வேறு சிலரைக் கைவிடத்தக்கவராக அவன் உள்ளங்கொண்டதாகவும் சிலர் நினைக்கக் கூடும். இவ்வையத்தை நீக்க,

“ஸமோ(அ)ஹம் ஸர்வ பூ4தேஷு ந மே த்3வேஷ்யோ அஸ்தி ந ப்ரிய:”

[அனைத்துயிர்களுக்கும் எனக்குச் சமமே. எனக்கு வேண்டப்படாதவர் என்றும் வேண்டப்பட்டவர் என்றும் எவரும் இல்லை — பகவத் கீதை, 9.29]

என்று கண்ணபிரானே கீதையில் செப்பினான். இவ்விடத்தில் ஆதி சங்கரர் தமது உரையில் பரந்தாமனை நெருப்புடன் ஒப்பிடுகிறார் — நெருப்பானது தன்னருகிலிருப்போருக்கு குளிரிலிருந்து அடைக்கலம் தருகிறது, தொலைவில் உள்ளவருக்குத் தருவதில்லை. அதற்காக நெருப்பை  ஒருதலைச்சார்பு உடையதாகக் கருத இயலாதது; அருகில் வராதவர்கள் வராமையாலேயே அவதிப்படுகின்றனர். இறைவனின் அருளும் அத்தகையதே. இதனையே தமிழில் சங்கப் புலவர்களும்,

vishnu-07“கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும்
உள்வழி உடையை; இல்வழி இலையே:
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே: ‘நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்’ எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே:”

[நீ கொடுமையுடையாரிடத்தே கொடுமையும் செம்மையுடையார்பால் செம்மையும் வெம்மையுடையாரிடத்து வெம்மையும் தண்மையுடையாரிடத்துத் தண்மையும் உடையை, அவை இல்லாரிடத்தே நீயும் அப் பண்பிலையாவாய். இங்ஙனமன்றி, உனக்குப் பகைவரும் இல்லை; நண்பரும் இல்லை. — பரிபாடல், 4:49-55]

இவ்விடத்தில் பரிமேலழகர், “உயிர்களது இயல்பாலே நினக்குப் பகையும் நட்பும் உள்ளது போலத் தோன்றுகிறதே அன்றி, உனது இயல்பாலே பகையும் நட்பும் நினக்கு இல்லை.” என்று பொருள்பட உரையாற்றினார். “தேவர்களுக்கு முதல்வன் நீ; அசுரர்களுக்கும் நீயே முதல்வன்; அதனால், நினக்குப் பகைவரும் நண்பரும் உளரோ” என்று பின்வரும் பாடலில் மற்றொரு புலவர் கூறுகிறார்

“… அமரர்க்கு முதல்வன் நீ;
… அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?”: [ — பரிபாடல், 3:53-58]

ஆகையால், திருமால் காட்டும் அருளும் சினமும் அந்தந்த ஆன்மா தமக்குத் தாமே தேர்ந்தெடுத்துக்கொண்ட நிலையையே காட்டுவதன்றி ஒருபொழுதும் அவனிடத்து ஒருதலைச் சார்பைக் காட்டாது.

நிற்க. திருவின் மணாளனுக்குச் சினம் வருமெனில்,

“காம ஏஷ க்ரோத4 ஏஷ ரஜோ கு3ண ஸமுத்3ப4வ: |” [காமமும் சினமும் ரஜோ குணத்தால் உண்டாகின்றன — பகவத் கீதை, 3.37]

என்றும்,

“லோப4: ப்ரவருத்திராரம்ப4: கர்மணாமச’ம: ஸ்ப்ருஹா |
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்3தே4 ப4ரதருஷப4 ||”

[அர்ஜுனா! ராஜச குணம் அதிகரிக்கும்பொழுது பிறர் பொருளை அபகரிக்க நினைக்கும் பேராசையும், பல (பயனற்ற) காரியங்களைச் செய்ய வைக்கும் தூண்டுதலும், அமைதியின்மையும், பல பொருட்களின் மீது ஆசையும் பிறக்கிறது — பகவத் கீதை, 14.12]

vishnu-06என்றும் கீதை கூறுவதனால், திருமால் தீயோரிடத்துக் காட்டும் சினம் ராஜச குணத்தால் விளைகிறது என்பது தேறுமா? முக்குணங்களின் தாக்கம் அவனுக்கும் உண்டோ?

இல்லை. பரமனுக்கு ராஜச தாமச குணங்களின் தாக்கம் அறவே இல்லை என்பது அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைத விபாகமற அனைத்து வேதாந்த தரிசனங்களும் ஏற்பது. அவன் ஏற்கும் திவ்ய மூர்த்திகள் அனைத்துமே உயர்ந்த பண்புகளை உடைய சுத்த சத்துவ மய மூர்த்திகளே என்பதை ஆதி சங்கரர் பிரம்ம சூத்திர உரை (2.3.45), சாந்தோக்ய உபநிடத உரை (8.1.5), பகவத் கீதை (15-ஆம் அத்தியாயத்தின்) உரைகளில் கூறியுள்ளார். இதற்குப் பின்னணியாகப் பல வேத, இதிகாச, புராண வாக்கியங்களும் உண்டு. இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்னவெனில், திருமாலுக்குத் தீயோர்கள் மீது ஏற்படும் சினம் ராஜச குணத்தின் வசத்தால் அல்ல, அதுவும் சத்துவ குணத்தின் காரியமே என்பது. கோபமானது நல்லோர்களிடம் ஏற்பட்டாலோ தீயோர்களிடம் ஏற்படாமற் போனாலோ அது மாசு; அதுவே தீயோர்களிடம் ஏற்பட்டு, நல்லோர்களிடம் காட்டாமல் இருந்தால் தேசு. ஆகவே, பரமன் காட்டும் கோபமும் சுத்த சத்துவகுணத்தின் விளைவே.

vishnu-09நாரதமுனியிடம் வான்மிகி முனிவர் இராமனின் கல்யாணகுணங்களைக் கேட்கும்பொழுது,

“ஆத்மவான் கோ ஜித க்ரோதோ4 த்3யுதிமான் க: அநஸூயக: |
கஸ்ய பி3ப்4யதி தே3வா: ச ஜாத ரோச’ஸ்ய ஸம்யுகே3 ||”

[வீரமுள்ளவன் எவன்? சினத்தைக் கட்டுப்படுத்தி வென்றவனும் பிரகாசமானவனும் பொறாமையற்றவனும் தேவர்களும் அஞ்சி ஓடும்படி சினந்து போர் புரிபவனும் எவன்? — ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், 1:1.4]

என்றே வினவினார். இங்கும், “சினத்தை வென்றவன் எவன்” என்று கேட்ட இடத்திலேயே, “தேவர்களும் அஞ்சும்படியான சினத்தைக் கொண்டிருப்பவன் எவன்?” என்று கேட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நாரத முனியும்,

“காலாக்3னி ஸத்3ருச’: க்ரோதே4 க்ஷமயா ப்ருத்2வீ ஸம:”

[சினத்தில் அவன் பிரளய காலத்தில் எழும் கால அக்னியை ஒத்தவன். பொறுமையில் அவன் பூமிக்குச் சமமானவன் — பால காண்டம், 1.18]

என்றல்லவோ விடையளித்தார் !

இவ்வாறே சங்கப் புலவர்களும் “அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;” [– பரிபாடல், 3] முதலான வரிகளின் மூலம் திருமாலின் அருள், சினம் இரண்டையும் உயர்பண்புகளாகப் பாடியுள்ளனர் (மறம் = வீரம், மைந்து = வன்மை).

திருவமர் மார்பன் உயிர்களிடத்துக் காட்டும் பொறுமையை நாரதமுனி பூமியுடன் ஒப்பிடுவதை மேற்கண்ட இராமாயண சுலோகத்தில் கண்டோம். யுத்த காண்டத்தில் நான்முகக் கடவுளும்,

“ஜக3த் ஸர்வம் ச’ரீரம் தே ஸ்தை2ர்யம் தே வஸுதா4தலம் |

அக்3னி: கோப: ப்ரஸாத3ஸ்தே ஸோம: ஸ்ரீவத்ஸலக்ஷண ||”

[திருமரு மார்பனே! உலகனைத்தும் உனக்குச் சரீரம். பூமியானது உனது பொறுமையையும் வழுவாமையையும் கொண்டிருக்கிறது. அக்னியே உனது சினம்; உனதருள் நிலவு. — யுத்த காண்டம், 117.26]

என்று இராமனைத் துதித்தார்.

vishnu-08இதனையே தமிழ்ப்படுத்தியது போல் சங்கப்புலவர்களும்,

“நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள”

[உனது அழிப்புப் பண்பும் தெளிவும் சூரியனிடமும், அருளும் மென்மையும் சந்திரனிடமும், தாங்கும் தன்மையும் பொறுமையும் பூமியிடமும் உள்ளதைக் காண்கிறோம் — பரிபாடல், 4]

என்று திருமாலைப் பாடினர்.

சூரியனின் வெம்மை, சந்திரனின் குளுமை இரண்டும் பூமிக்கு இன்றியமையாதது போல, சர்வேசுவரனாகிய வாசுதேவன் உயிர்களிடத்துக் காட்டும் அன்பு, வன்மை இரண்டுமே உலக நடப்புக்கும் அவ்வுயிர்களின் ஆன்ம வளர்ச்சிக்கும் அவசியம். எனவே,

“விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்
அறனும், ஆர்வலர்க்கு அருளும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;”

(ஆர்வலர் = நல்லோர், மாற்றலர் = அற வழியிலிருந்து தவறியவர்கள், அணங்கு = துன்பம்)

என்று மாயவனைப் பாடிய சங்கப் புலவர்கள் அடுத்தபடியாக,

“அம் கண் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ;” [– பரிபாடல், 1]

என்றனர்.

vishnu-00

நிற்க. முதற் பரிபாடலில் “விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் அறனும்… நீ;” என்பது,

“யே ச வேத3விதோ3 விப்ரா: யே ச அத்4யாத்மவிதோ3 ஜனா: |
தே வத3ந்தி மஹாத்மானம் க்ருஷ்ணம் த4ர்மம் ஸநாதனம் ||”

[வேதத்தை அறிந்த சான்றோர்களும் அத்யாத்ம வித்தையாகிய பிரம்மஞானம் அறிந்த நல்லோர்களும், மகாத்மாவாகிய கண்ணனே அழியாத தருமம் என்றுரைப்பர் — மகாபாரதம், 3.86.22]

எனும் அழகிய மகாபாரத சுலோகத்தின் தமிழாக்கம் போல அமைந்துள்ளது. வேத வேதாந்தங்களின் ஆழ்பொருளை அறிபவர்கள், கண்ணனைச் சரணடைவதையே உயர்ந்த தருமமாகப் பற்றுவர் அன்றோ.

“ராமோ விக்3ரஹவான் த4ர்ம: ஸாது4: ஸத்ய பராக்ரம:” [– ஸ்ரீமத் ராமாயணம், 3.37.13]

என்று தசரத புத்திரனும் தருமத்தின் வடிவாகவே கூறப்பட்டனனன்றோ?

“கண்ணனைத் தவிர வேறொரு பலனை அடைய விரும்புவோர், அப்பலனை அடைவதற்குச் சாதகமாக அக்னிஹோத்திரம், தவம், தானம் முதலானவற்றைக் கடைபிடிப்பர். சிறந்த யோகி என்று சொல்லப்படுபவன் கண்ணனை அடைவதற்குக் கண்ணனிடம் சரணடைவதைத் தவிர வேறு உபாயங்களைக் கைவிடுவன்.”

[– சாங்கர கீதா பாஷ்யம், 7.1]

என்னும் ஆதி சங்கரரின் பகவத் கீதை உரை வரிகளிலிருந்தும் இதை அறிகிறோம்.

கம்பரும்

“ஆதி, அந்தம், அரி என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்பற்று இலார்.”

[அளவில்லாதவையும், அழிவில்லாதனவுமாகிய வேதங்களை ஓதத் தொடங்கும்போதும், ஓதி முடிக்கும்போதும் ‘ஹரி ஓம்’ என்று உச்சரிப்பவர்களான மேலவர்கள், மெய்ந்நெறியின் முடிவாக விளங்கும் அவனுடைய பாதத்தைப் பற்றி நிற்கும் ஒரு பற்றைத் தவிர வேறு எல்லாப் பற்றுகளிலிருந்தும் நீங்கியவர்கள். — கம்பராமாயணம், பாயிரம், 3]

என்று பாடியுள்ளதும் இங்கு நினைவில் நிறுத்தத் தக்கது.

(தொடரும்)

5 Replies to “பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8”

 1. “அகிம்சை, புலனடக்கம், அனைத்து உயிர்களிடமும் இரக்கமுடைமை, பொறுமை, ஞானம், தவம், தியானம், வாய்மையில் நிலைநிற்றல் ஆகிய எட்டு வகை புஷ்பங்களும் விஷ்ணுவை உகப்பிப்பவை” என்று பின்வரும் புராண சுலோகம் கூறுகிறது.

  It is a fact that Gandhi is inspired by this above sloka and took 1st (Ahimsa) and last (Sathyam) flowers to worship his HARI.

 2. அன்பார்ந்த ஸ்ரீ கந்தர்வன் அவர்களுக்கு நமஸ்காரம். மிக மிக நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த பாகம் வெளி வந்துள்ளது.

  உபன்யாசங்களில் பெரியோர் பகவானுடைய கல்யாண குணங்களை விஸ்தாரமாகச்சொல்வது போல பகவத் பக்தர்களுடைய ஆத்ம குணங்களைப்பற்றியும் மிகவும் போற்றிச்சொல்வார்கள்.

  உள்ளபடியே இந்த பாகத்தின் பின் பகுதியில் ‘எல்லா உயிர்களிடமும் சமமான் அன்பு கொண்டிருத்தல்” என்ற பகவத் குணம் பற்றி தாங்கள் அளித்த விளக்கங்களை விட திரும்பத்திரும்பப் படிக்கத்தூண்டியது பக்தர்களுக்கு இருக்க வேண்டியதாகச் சொல்லப்பட்ட குணங்கள்.

  இதைப்படிக்கும்போதே வேதாந்திகள் சாதன சதுஷ்டயத்தில் ஒன்றாகச்சொல்லும் சமதமாதி ஷட்குணசம்பத்தும் நினைவில் வந்தது. இங்கு பக்தர்கள் விஷயத்தில் சொல்லப்பட்ட எண்குணங்களுக்கும் வேதாந்திகளுக்கு சொல்லப்படும் ஆறுகுணங்களுக்கும் அதிகாரி பேதத்தினால் வேற்றுமைகள் உள்ளனவா? அல்லது எண் குணங்களில் சொல்லப்படுபவை ஆறு குணங்களிலும் உள்ளடக்கமாக சூக்ஷ்மமாக உள்ளதா அல்லது ஆறு எட்டில் சூக்ஷ்மமாக உள்ளதா என்று சம்சயம் எழுகிறது.

 3. /“அகிம்சை, புலனடக்கம், அனைத்து உயிர்களிடமும் இரக்கமுடைமை, பொறுமை, ஞானம், தவம், தியானம், வாய்மையில் நிலைநிற்றல் ஆகிய எட்டு வகை புஷ்பங்களும் விஷ்ணுவை உகப்பிப்பவை” / சிவபூசையிலும் அஷ்டபுஷ்பம் சாத்தி வழிபடல் ஓரங்கமாகும். புறப்பூசைக்குமுன், அந்தயாகப் பூசையாக, “நாபௌ குண்டமிதி விபாவ்யா| அஹிம்சா இந்திரிய நிக்ரஹ க்ஷமா தான மாற்சரிய பாவ சிந்தனா, ஞான சமாதியோக புஷ்பாணி சமர்ப்பயாமி|| என்று கூறி அட்டபுஷ்பம் சார்த்தி வழிபடுவதாகப் பாவித்த பின்னர் சிவமூலமந்திரத்தினால் நாபியாகிய் குண்டத்தில் சிவவேள்வி செய்வதாகப் பாவிக்கப்படும் இவ்வெட்டுக் குணங்கள் ஆன்மிக வாழ்வுக்கு அடிப்படை.

 4. தமிழ் ஹிந்து தளத்தை வாசிக்கும் தளத்து வாசகர்கள் அனைவருக்கும் எமதன்பார்ந்த ஆடிப்பதினெட்டாம் பெருக்கு நல்வாழ்த்துக்கள். பல முறை முகப்பில் பதினெட்டாம்பேர் சம்பந்தமான சித்திரம் இல்லையே என்று பார்த்துப் பார்த்து கடேசியில் சாயரக்ஷையில் மனதைக் கொள்ளை கொள்ளும் சித்திரம் பார்க்க நேர்ந்தது.

  தமிழகத்து மக்கள் அனைவருக்கும் அன்னமிடும் காவிரித்தாய் பொங்கிப் ப்ரவஹிக்கும் இன்றைய நாளில் அன்னையை வழிபட்டு எல்லோரும் எல்லா நலங்களும் பெற இறைஞ்சுவோமாக.

  காவிரியில் நன்றாகத் தண்ணீர் வருகிறது என்று கேழ்விப்பட்டேன். மிக்க சந்தோஷமாக இருக்கிறது. மேட்டூர் டேம் இந்த முறை ரொம்பி விடுமாமே?

  பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தை ஸ்துதிக்கும் கீழ்க்கண்ட ச்லோகத்தில் காவேரியும் பெருமை மிக ஸ்துதிக்கப்படுகிறது.

  வாசகர்களின் த்யானத்திற்காக ச்லோகமும் ச்லோகார்த்தமும்

  காவேரீ விரஜாதோயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
  ரங்கநாதோ வாஸுதேவ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்

  ஸ்ரீ ரங்கமே வைகுந்தமாகச் சேவிக்கப்படுகிறது அல்லவா?

  திருநாட்டில் (வைகுந்தத்தில்) ஒழுகும் நதி விரஜா நதி என்று போற்றப்படுகிறது. ஸ்ரீ ரங்கத்தின் இரு புறமும் காவேரியன்னை பெருமாளின் பாதம் பணிந்து செல்வதால் பூலோக வைகுண்டமான ஸ்ரீ ரங்க நகரத்தின் காவேரி, திருநாட்டில் ஒழுகும் விரஜா நதியையொத்து ஸ்துதிக்கப்படுகிறது.

  திருவரங்கநாதனின் திருக்கோவிலே திருவைகுண்டமாக ஸ்துதிக்கப்படுகிறது.

  திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் திருவரங்கப்பெருமானே வைகுண்டத்தில் வாசம் செய்யும் பரவாசுதேவனாகச் சேவிக்கப்படுகிறான்.

  பரமபதம் அப்ரத்யக்ஷம். அதாவாது நம் ஊனக்கண்களால் பார்க்க இயலாதது. ஆனால் அளவிலாப் பெருங்கருணை உடைய அரங்கத்தெம்மான் அர்ச்சாவதாரமாய் எழுந்தருளியுள்ள பூலோக வைகுண்டம் நம் ஊனக்கண்களுக்கு ப்ரத்யக்ஷம்.

  கண்குளிர திருவரங்கநாதன் நமக்கு தர்சனம் தருகிறான்.
  நாலாயிரமும் சேவிக்கும் வைஷ்ணவ ச்ரேஷ்டர்களுடையே பேருபகாரத்தால் தமிழ் மறைகளை செவி குளிரக்கேழ்க்க முடிகிறது.

  அதனால் தான் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே என்று ஆழ்வார் பாடுகிறார் போலும்.

  குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே
  தமஹம் சிரஸா வந்தே ராஜானம் குலசேகரம்

  எந்த அரசனுடைய பட்டணத்தில் ஸ்ரீ ரங்கத்திற்குப்போவோம் வாருங்கள் என்று தினந்தோறும் பறைசாற்றப்படுகிறதோ அந்த குலசேகர மன்னனைத் தலையால் வணங்குகிறேன்.

  ஆராதவருளமுதம் பொதிந்த கோவில்
  அம்புயத்தோன் அயோத்திமன்னர்க்கீந்த கோவில்
  தோளாத தனிவீரன் தொழுத கோவில்
  துணையான வீடணர்க்குத் துணையாங்கோயில்
  சேராத பயனையெல்லாம் சேர்க்கும் கோயில்
  செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
  தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
  திருவரங்கமெனத் திகழும் கோயில்தானே.

 5. கந்தர்வனே ஆணவ மிகுதியால் சங்கரனைப் பழித்துப்பேசுவதும் அவர் அருளிய ஆகமங்களைப் பழிப்பதும் மோகன சாத்திரம் என்பதும் அவருடைய புராணங்களை தாமத நூல்கள் என்பதும் விபூதி உருத்திராக்கத்தை மாட்டுச் சாம்பல் என்றும் இலந்தைக் கொட்டை என்று நிந்திப்பதும் நந்திதேவரை அவமதித்து கங்க எருது என்பதும் இன்னம் பலவாறாய நிந்தனைகள் செய்யும் இராமானுச வழிவந்தோர் கூற்றை நாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *