இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

25.1 மாற்றான் வலி தூக்கான்

ராவணனால் அனுப்பப்பட்டு வானரர்களின் ஊடே புகுந்த அவனது ஒற்றர்களை விபீஷணன் அடையாளம் கண்டுகொண்டதால், அவர்களைப் பிடித்த வானரர்கள் உடனே கொன்றுவிட வேண்டும் என்று விரும்பினர். இராமர் மட்டும் அவர்கள் மேல் கருணை கொண்டு தடுத்திருக்காவிட்டால், அவர்களின் கதை அப்போதே முடிந்திருக்கும். உயிருடன் திரும்பிய அவர்கள் வானரர் அணியில் தாங்கள் பார்த்தது அனைத்தையும் ராவணனிடம் சொன்னார்கள். அவர்கள் தப்புவிக்க இராமர் உதவி செய்தபோது, உடனே சீதையை சகல மரியாதைகளுடன் திருப்பி அனுப்பவில்லை என்றால் போரில் அவனுக்குச் சாவும், இலங்கைக்கு அழிவும் நிச்சயம் என்று ராவணனுக்கு அவர்கள் மூலம் சொல்லச் சொன்னதையும் சொன்னார்கள். தனக்கு போர் என்றால் பயமும் கிடையாது; சீதையையும் அனுப்ப முடியாது என்று அவர்களிடம் ராவணன் மார் தட்டினான். வெளிக்கு அப்படி வீரப் பேச்சு பேசினாலும், உள்ளுக்குள் அவன் நடுங்கிக்கொண்டுதான் இருந்தான்.

ராவணன் தனது தளபதிகளைக் கூப்பிட்டு அரக்கர் படை வீரர்களை உடனே அணிவகுக்கச் சொன்னான். அப்படிச் சொல்லும்போது, வீரர்களுக்கு எதற்காக என்ற காரணத்தைச் சொல்லாமல் அவர்களை ராணுவ முகாம்களுக்கு வரச் சொல்லிவிட்டு, போருக்குத் தயாராக இருக்கும்படியும் சொல்லச் சொன்னான். அப்படி போர்த் தளபதிகளிடம் ஆணை கொடுத்துவிட்டு, சீதையின் மனத்தை மாற்ற அவளிடம் ஒரு விளையாட்டை ஆடுவதற்கும் தயார் ஆனான். உண்மையான உடல் போன்ற பொம்மைகளைத் தயாரிக்கும் கலைஞனான வித்யுத்ஜீவா என்றவனைக் கூப்பிட்டு, சமீபத்தில் தலை சீவப்பட்டு ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும் ராமனது தலை போன்ற பொம்மையைத் தயாரிக்கச் சொன்னான். அவன் அதைக் கொண்டு வந்ததும், தான் ராமனுடன் நடந்த போரில் அவனைக் கொன்று வெற்றி வாகை சூடி விட்டதாகவும், சீதை நம்பமாட்டாள் என்று நினைத்ததால் அவனது தலையையே அங்கு கொண்டு வந்திருப்பதாகவும் சொல்லி பொம்மையைக் காட்டினான். இனி ராமனால் அவளைக் காப்பாற்ற வரமுடியாது என்றும், அவனது மனைவியாகி இலங்கையின் ராணி ஆவது ஒன்றே அவளுக்கு இருக்கும் ஒரே வழி என்றும் சொன்னான். சீதைக்குத் தாங்க முடியாத துக்கம் வந்து, தன்னையும் ராவணனே கொன்று போட்டால் நல்லது என்றே நினைத்தாள்.

தெய்வாதீனமாக அப்போது ஒரு சேவகன் வந்து, பிரஹச்தா மற்றும் இதர தளபதிகளும் அவனது மற்றைய ஆணைகளைக் கேட்க அவைக்கு வந்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று சொன்னதும், ராவணன் அவசரம் அவசரமாகப் புறப்பட்டுச் சென்றான். அதனால் அவனது மேலும் தொடர்ந்திருக்கக்கூடிய துன்புறுத்தல்களில் இருந்து சீதை தப்பினாள். சீதையின் காவலாளி அரக்கிகளிலும் நல்லவள் ஒருவளான சுராமா என்பவள் ராவணனை நம்பவேண்டாம் என்றும், அவன் காட்டிச் சென்றது ஒரு பொம்மையே என்றும் சீதைக்கு சரியான சமயத்தில் சொன்னாள். மேலும் அவள் இராமர் வானரர் சேனையுடன் கடல் தாண்டி இலங்கைக்கு அருகே வந்துவிட்டதாகவும், இனிமேல்தான் போர் மூளும் அபாயமே இருக்கிறது என்றும் சீதையிடம் சொல்லி, வேண்டுமானால் போருக்கு ஆயத்தம் ஆவதற்குண்டான போர் முரசும் கொட்டிக்கொண்டிருப்பதை அவளையே காது கொடுத்துக் கேட்கச் சொன்னாள். இராமர் உயிருடன் பத்திரமாக இருப்பதாகவும், மனம் கலங்க வேண்டாம் என்றும் அவள் சீதைக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் விவரங்களைச் சொன்னாள்.

அவையில் காத்துக்கொண்டிருந்த போர்க் குழுவிடம் பேசி, வந்திருக்கும் அபாயத்தை எப்படிப் போக்குவது என்று திட்டமிட ராவணன் அங்கு வந்து சேர்ந்தான். அங்கு கூடியிருந்தவர்களில் ராவணனின் பாட்டனான மால்யவான் என்பவரும் ஒருவர். பலமில்லாத போது அமைதியாய் இருப்பதும், பலம் நன்கு இருக்கும்போது மட்டும் தேவையானால் போருக்குச் செல்வது என்பது ஒரு பழம் பெரும் வழக்குச் சொல் என்றும், தற்போது இராமருக்கே பலம் அதிகமாய் இருக்கிறது என்பது தனது கணிப்பு என்பதால், ராவணனை அவர் சமாதானப் பேச்சு நடத்தச் சொன்னார்.

ஹீயமானேன கர்தவ்யோ ராஜ்ஞா ஸந்தி⁴​: ஸமேன ச |
ந ஸ²த்ருமவமன்யேத ஜ்யாயான் குர்வீத விக்³ரஹம் || 6.35.9 ||

ஹீயமானேன – (தன்) பலம் குறைவுறும் போதும்
ஸமேன ச – (எதிரிக்குச்) சமமாய் இருக்கும்போதும்
ராஜ்ஞா – (ஒரு) அரசனால்,
ஸந்தி⁴: – சமாதானம்,
கர்தவ்ய: – செய்து கொள்ளப்பட வேண்டும்
ஸ²த்ரு: – எதிரியை
ந அவமன்யேத – குறைவாக
ஜ்யாயான் குர்வீத – எடை போடக் கூடாது
விக்³ரஹம் – மேலானவனாகக் காண்பித்துக்கொண்டு.

தன் படை பலம் குறைவாகவோ அல்லது சரி சமமாகவோ இருந்தால், ஓர் அரசன் அமைதி வழி நாட வேண்டும்; தன் பலம் அதிகமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, எப்போதும் எதிரிகளின் பலத்தை குறைத்தே மதிப்பிடக்கூடாது.
சில சமயம் அபாயம் சூழ்ந்திருக்கும் சமயம், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிமான அடிப்படை அம்சங்களையும் கவனிக்காது, ஆட்சியாளர்கள் சற்றே உணர்ச்சி வசப்பட்டு எப்போது சமாதானம் பேசுவது, எப்போது மார் தட்டுவது என்று தெரியாது இருந்துவிடுகின்றனர். அந்த விஷயத்தில் வயதிலும், அனுபவத்திலும் முதிர்ச்சி மிக்க அறிஞர்கள் ராவணனுடன் இருந்தது அவனது பாக்கியமே. அவர்களும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறும், நல்லதுமான அறிவுரைகளை அவனுக்குக் கொடுத்தனர். ஆனாலும் ராவணன் தனது அகம்பாவத்தாலும், அறிவு மழுங்கி சரியாக சிந்திக்காததாலும் தன் துயர முடிவைத் தானே வரவழைத்துக் கொண்டான். பெரியவர் மால்யவான் மூலம் ஒரு நாட்டின் போர்-அமைதிக் கொள்கைக்கான அடிப்படை உண்மைகளை வால்மீகி எடுத்துச் சொல்கிறார்.

25.2 நல்லாள் இல்லாக் குடி

முன்பு விபீஷணின் வேண்டுகோளையும், அறிவுரையையும் ஒதுக்கித் தள்ளியது போலவே, பாட்டன் மால்யவானின் அறிவுரையையும் ராவணன் ஏற்காது தள்ளினான். ராமனை மனிதன் என்றும் அரக்கர்களுக்கு ஒப்பான பலமில்லாதவன் என்றும் வெறுப்போடு சொல்லி, அவனுடன் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ராவணன் தெளிவாக அறிவித்தான். பின்பு இலங்கையைக் காப்பாற்ற எந்த தளபதிகள் என்ன செய்யவேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் பொறுப்புகளை வகுத்துக் கொடுத்தான்.

எதிர் தரப்பிலும், இலங்கையின் அருகில் இருந்த சுவேலா என்னும் மலை மீதேறி நின்று இலங்கை மாநகரை இராமர் பார்த்து, அவரும் வானரர் சேனாதிபதிகளும் ராவணனுடைய தற்காப்பு ஏற்பாடுகளைக் கணித்து, அதற்கு ஏற்ப இலங்கையைத் தாக்க தங்கள் வியூகங்களை வகுத்துக் கொண்டனர். அப்படி அவர் பார்க்கும்போது அந்த நகரில் சீதை ராவணனால் அபகரிக்கப்பட்டு அங்கு அரண்மனை வனத்தில் இருப்பதும் நினைவுக்கு வந்து அவரைத் துயரத்தில் ஆழ்த்தவே, எப்போதுமில்லாத உரத்த குரலில் ராவணனன் செய்த பழிச் செயலுக்கு நிச்சயம் அவனுக்குத் தண்டனை கிடைக்கும் என்று சொன்னார். அவனுடைய செயலுக்குத் துணை போகியிருக்கும் அவனது சுற்றமும், உற்றமும் அவனுடன் சேர்ந்து அழிவார்கள் என்றும் சொன்னார். ராவணன் மட்டுமே தனியாக இந்த அடாத செயலைச் செய்திருந்தாலும், அவனுடன் இருக்கும் அப்பாவிகளான அரக்கர்களுக்கும் உரிய தண்டனை உண்டு என்றும் சூளுரைத்தார்.

ஏகோ ஹி குருதே பாபம்ʼ காலபாஸ²வஸ²ம்ʼ க³த​: |
நீசேனாத்மாபசாரேண குலம்ʼ தேன வினஸ்²யதி || 6.38.7 ||

காலபாஸ²வஸ²ம்ʼ க³த​: — காலத்தின் பாச வசப்பட்டு
ஏகோ ஹி – (ஒரே) ஒருவன்
பாபம்ʼ – பாவம்
குருதே – செய்கிறான்
தேன – அந்த
நீசேனாத்ம – கீழோன் ஒருவனது
அபசாரேண – அபசாரத்தால்
குலம்ʼ – குலமே
வினஸ்²யதி – அழிகிறது.

ஒருவன் தனியனாகக் குற்றம் புரிந்தாலும், அவனது மொத்தக் குடும்பமே அவனது செயலால் துயரப்படுவார்கள்.
போர் வந்துவிட்டால் மொத்த தேசமே அவதிப்படும். சில பேர் செய்யும் சதியால் ஒரு போர் வரும் வாய்ப்பு வந்துவிட்டால், அதன் விளைவுகளில் இருந்து மீள ஒரு தேசத்திற்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. எவர்களால் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்களோ அவர்களைப் பிடித்து, அந்தச் செயலால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்தி அடையும் அளவு குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்குவது ஒரு வழி. இல்லையென்றால் குற்றம் செய்தவர்களை ஏதேனும் காரணத்தினால் அரவணைத்துப் போக நேரிட்டால், அதனால் வரும் போரையும் சந்தித்து அதன் விளைவுகளையும் பொறுத்துக் கொள்வதே இரண்டாவது வழி.

இராமாயணக் காலத்தில் இருந்த அதே நிலைதான் இன்றும் உள்ளது; என்றும் இருக்கும். ஒருவர் செய்த தவறினால் அதில் சம்பந்தப்படாத அப்பாவிகள் பலரும் அவதிக்கு உள்ளாகின்றனர். அதாவது ஒரு குடும்பத்திலோ அல்லது தேசத்திலோ எங்காவது தப்பு நடக்கிறது என்றால், அதைப் பார்த்துக்கொண்டு தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையே என்று சும்மா இருப்பது தவறு; நடப்பது பெரியதாகி சமூகத்தையே தாக்கும் அளவு வளரும்போது குற்றம் செய்தவரைத் தவிர அனைவரையும் அது பதம் பார்த்துவிடும் என்று வால்மீகி இங்கு நமக்குச் சொல்ல வருகிறார். உண்மைதானே? வள்ளுவரும் அன்றே இப்படிச் சொன்னதுதானே?
“இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி” (1030)

25.3 தலை காப்பான் தலைவன்

லக்ஷ்மணன், சுக்ரீவன், விபீஷணன் மற்றத் தலைவர்கள் புடை சூழ இராமர் இலங்கை நகரின் அமைப்புகளையும், அரக்கர்கள் படையின் தாக்குதலுக்கான ஏற்பாடுகளையும் பார்த்துக் கொண்டிருந்த அதே சமயம், இலங்கையில் இருந்த ஓர் உயர்ந்த அடுக்கு மாளிகையின் மேற்தளத்திலிருந்து ராவணனும் அருகே வந்துள்ள வானரர் சேனைகளைப் பார்த்தான். தூரத்தே ராவணனைக் கண்டதுமே சுக்ரீவனுக்கு ஆத்திரத்தில் ரத்தம் கொதித்தது. யாரும் எதிர்பார்க்காமல் இருக்கும்போது, சிறிதும் யோசிக்காமல் அவன் சுவேலா மலை உச்சியிலிருந்து ராவணன் இருந்த மாளிகைத் தளத்திற்கு ஒரு தாவுத் தாவி அவன் முன்னால் போய் நின்றான்.

தன்னைச் சுக்ரீவன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் அவன் கழுத்தை நெருக்கிக் கொல்வதற்காக வந்திருப்பதாகச் சொன்னான். உடனே இருவருக்கும் கைகலப்புச் சண்டை நடக்கவே, அதில் ஒருவரையொருவர் மிஞ்சும்படி இருவரும் கட்டிப் புரண்டனர். ஒருவரின் கைப்பிடியை இன்னொருவர் தளர்த்துவதும், இவரின் மாற்றுப் பிடியை அவர் திமிறிக்கொண்டு வெளியே வருவதுமாக இருவரும் தங்கள் திறனைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இருவருக்குமே தோள்வலிமை மிக்க இருந்ததால், ஒருவருக்கொருவர் சளைக்காமல் சண்டை போட்டுக்கொண்டிருக்க, போட்டியோ வெகுநேரம் நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தன்னைவிட சுக்ரீவன் வலிமையும், திறனும் மிக்கவன் என்றுணர்ந்த ராவணன், அந்த இக்கட்டிலிருந்து விடுபட அரக்கர்களுக்கே உரித்தான மாய லீலைகளைக் காட்ட ஆரம்பித்தான். அதன்படி சுக்ரீவனைக் குழப்புவதற்காக தன்னைப் போலவே பல ராவணன்களை உருவாக்கினான். (இதைத்தான் சக்கை போடு போட்ட ஆங்கிலப் படமான Matrix படத்தில் தழுவினார்களோ?)

அது அரக்கனின் மாய விளையாட்டு என்பதாலும், அதற்கு மேல் அங்கு ஒருவனுக்கொருவன் எனும் நேர்மையான சண்டையைத் தொடர முடியாததால், சுக்ரீவன் அங்கிருந்து ஒரே தாவாகத் தாவி சுவேலா மலையுச்சிக்குத் திரும்பினான். அதுவரை அவனைக் காணாது தேடிக்கொண்டிருந்த இராமரிடம், அதுவரை தான் ராவணனுடன் போட்ட சண்டையைச் சொன்னான். பத்திரமாகத் திரும்பி வந்த சுக்ரீவனைப் பார்த்து கவலை நீங்கிய இராமர், அவன் சொன்னதைக் கேட்டுவிட்டு ஒரு அரசனும் தலைவனுமான அவன் அப்படிப் போயிருக்கக் கூடாதென்றும், அவனது உயிருக்கு ஆபத்து வந்திருக்கக் கூடிய ஒன்றுக்கொன்று என்ற அளவில் ராவணனோடு சண்டை போட்டிருக்கக்கூடாது என்றும் சொன்னார். ஒரு அரசன் மற்றும் அவனது தளபதிகளைப் பொருத்து ஒரு போரின் தன்மை மாறக்கூடியதால், அபாயம் மிகுந்த செயல்கள் எதையும் அவர்கள் செய்யக்கூடாது என்று அப்போது அவனுக்குச் சொன்னார்.

… ஏவம்ʼ ஸாஹஸகர்மாணி ந குர்வந்தி ஜனேஸ்²வரா​: || 6.41.2 ||
ஏவம்ʼ, இப்படி
ஸாஹஸகர்மாணி – சாஹசச் செயல்களை
ஜனேஸ்²வரா​: – அரசர்கள்
ந குர்வந்தி – செய்யமாட்டார்கள்.
( தேவையற்ற மற்றும் அபாயகரமான சூழ்நிலைகளில் )
ஒரு அரசன் மற்றும் மக்களின் தலைவர்கள் தோன்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

நடுக்கடலில் மூழ்கும் கப்பல் ஒன்றில் அதன் பொறுப்பான தலைவன் மற்ற எல்லோரையும் காப்பாற்ற முயற்சி செய்துவிட்டு, தான் அந்தக் கப்பலிலேயே நின்று அதனுடன் மூழ்குவது வழக்கம். அதாவது தலைவன் போய்விட்டால் அனைத்தும் போய்விட்டது என்று அர்த்தம். அதனால் ஒரு அரசனோ, அல்லது அவன் தளபதிகளோ முன் நின்று நடத்தும் போரில் அவர்கள் போர்க்களத்தில் இல்லாவிட்டாலும், அவர்கள் வீழ்ந்தால் அந்தப் போரின் தன்மையே மாறிவிடும். அவர்கள் இறந்தாலோ, சரணாகதி அடைந்தாலோ போரில் தோல்வி என்பதே முடிவு. அதனால் அவர்களுக்கு போர்க்களத்திற்கு நேரே வந்து அங்கு கலந்துகொள்ள ஆசை இருந்தாலும், அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் நிலைமையே மாறிவிடும் என்பதால் அவர்கள் அப்படி அங்கு போகக் கூடாது. அதனால் அவர்கள் தேவையற்ற, ஆபத்தான இடங்களுக்குச் செல்வதற்கு முன் மிகவும் யோசித்துச் செயல்பட வேண்டும்.


25.4 இறுதிவரை போரைத் தவிர்

வானரர்கள் இலங்கை மாநகரைத் தாக்குவதற்குத் தயாராக முதலில் அதைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களின் தளபதிகள் மேலிடத்தில் இருந்து வரவேண்டிய ஆணைக்குக் காத்திருக்க, போர் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிந்தன. அப்போதும் இராமர், ஒரு வேளை மனம் மாறி தனக்கும் தன் வீரர்களுக்கும் போரினால் வரக்கூடிய அழிவுகளைத் தவிர்ப்பதற்காகவே, ராவணன் திருந்துவானா என்று கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சிறிது காத்திருந்தார். முன்பு அனுமன் அமைதியாகவும், கௌரவத்துடனும் கொடுத்த அறிவுரைக்குப் பலன் ஏதும் இல்லாது போயிற்று. அப்படி இருந்தும் இப்போது இன்னும் ஒருமுறை அங்கதன் மூலம் தூது அனுப்ப முடிவு செய்து, இம்முறை அந்த எச்சரிக்கையில் சற்றே கடும் சொற்களையும் சொல்லி, இறுதியாக சீதையை சகல மரியாதைகளுடன் திருப்பி அனுப்பவில்லை என்றால், ராவணன் போரில் கொல்லப்பட்டு விபீஷணன் அரசனாக அரியணை ஏற்றப்படுவான் என்று இராமர் சொல்லி அனுப்பினார்.

… நிஷ்பத்ய ப்ரதியுத்³த்⁴யஸ்வ ந்ருʼஸ²ம்ʼஸ புருஷோ ப⁴வ || 6.41.77 ||
ந்ருʼஸ²ம்ʼஸ – கொடூரமானவனே!,
புருஷோ ப⁴வ – (பயந்தாங்கொள்ளியாய் இல்லாமல்) ஆண்மையுள்ளவனாய் இரு,
நிஷ்பத்ய – கீழிறங்கி,
ப்ரதியுத்³த்⁴யஸ்வ – எதிர்த்துப் போரிடு.

கோட்டையில் ஒளிந்து கொள்ளாமல் ஓர் ஆண்மகனாக வெளியே வந்து நேருக்கு நேர் போரிடு.
அனாவசியமான போர்ச் சேதங்களையும், கொலைகளையும் தடுப்பதற்காக அந்நாளில் எதிரிகளுக்கு நிறைய கால அவகாசம் கொடுத்த பின்பே போர்கள் தொடுக்கப்படும். இங்கு அங்கதன் மூலம் இராமர் அனுப்பிய செய்தியும் அந்தப் பண்டைய வழக்கத்தை ஒட்டியதுதான். எதிரிக்கு அவகாசம் ஏதும் கொடுக்காமல் திடீரென்றும், இலை மறைவு காய் மறைவு ஏற்பாடுகளுடன் இரவோடு இரவாகவும் சரித்திரத்திலும், சமீப காலத்திலும் காணப்படும் சில போர்களில் இருந்து இது வித்தியாசமானவை.

(தொடரும்)

7 Replies to “இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25”

 1. ராமன் ஒரு மனிதகுல விளக்கு என்ற தலைப்பே மிகவும் அற்புதமானது. ஆங்கில மூலத்தை தமிழாக்கம் செய்வது என்பது மிக கடினமான காரியம். நம் தமிழகத்தில், விஷமிகள் கழகம் என்ற பெயரில் ஆட்சிப்பொறுப்பில் ஏறிய பின்னர் புற்றீசல் போல, ஆங்கில வழிகல்வி கூடங்கள் பெருகிப்போய், நம் மக்களுக்கு தமிழில் பேச மட்டுமே முடிகிறது. தமிழில் எழுதவோ, படிக்கவோ, எழுபது சதவீத மக்களுக்கு தெரியாது என்ற நிலை உருவாகி விட்டது. அதிலும் மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்தபின்னர் , கருத்துக்களை சுருக்கி அழகாக தருவது இரண்டும் மேலும் சிரமமான காரியங்கள். இந்த கடினமான பணியை, இவ்வளவு சிறப்பாக செய்துவரும் திரு எஸ் இராமன் அவர்களுக்கு நமது நன்றிகள் என்றும் நிலைத்திருக்கும். அய்யா, நீவிர் பல்லாண்டு வாழ்ந்து , இறை அருளால் இதுபோன்ற மேலும் பல தெய்வீக பணிகளை செய்ய இறைவன் பாதங்களை பணிகிறோம்.

 2. மேற்கண்ட பதவுரை சரியானதாக இல்லையோ என ஸந்தேஹிக்கிறேன்.
  ஜ்யாயாந் சத்ரும் ந அவமந்யேத – பலமிக்க எதிரியைக் குறைத்து மதிப்பிடாதே.
  ந விக்ரஹம் குர்வீத – பிரிவை உண்டாக்காதே என இருக்கலாம்.

 3. ஜனேஸ்²வரா​: – அரசர்கள் என்பது ஜனேஸ்²வரா​:ஹா/ ஜனேஸ்²வரா: – அரசர்கள் என்றிருந்தால் நன்றாக இருக்கும்.
  நிஷ்பத்ய – கீழிறங்கி என்றுகொள்வதற்குப் பதிலாக வெளிப்பட்டு என்றே கொள்ளவும் இடமுண்டு.
  அருமையான முயற்சி, பணி. தொடரட்டும், சிறக்கட்டும்.

 4. சுவாமி நிஷ்டானந்த சரஸ்வதி அவர்கள் அனுப்பிய மாற்று மொழி பெயர்ப்பை எனக்கு மொழி பெயர்ப்பு செய்து எனக்கு உதவிய சம்ஸ்க்ருதம் அறிந்த என் நண்பனுக்கு அனுப்பினேன். 1. “ஜநேஸ்வரா:” என்ற பதம் ஒருவேளை வெவ்வேறு பதிப்புகளில் வேறு மாதிரி இருக்கிறதோ என்று தெரியவில்லை. நான் எடுத்த பதிப்பில் இருந்ததை அனுப்பியதற்கு நண்பன் மொழியாக்கம் செய்து அனுப்பியுள்ளான் என்பதை தெரியப்படுத்துகிறேன். 2. சுவாமி கொடுத்த மாற்று மொழி பெயர்ப்புகளுக்கு என் நண்பன் நன்றி தெரிவிக்கிறான்.

 5. //raman on December 24, 2012 at 6:59 pm
  சுவாமி நிஷ்டானந்த சரஸ்வதி // என் பெயர் வேதநிஷ்டாந/னந்த. எதோ ஒரு கிற்ஸ்தவ அன்பர் வேதம் அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதாக நினைத்துக்கொண்டு என்பெயரை நிஷ்டானந்தா என்று திரித்திருந்தார். தங்களுக்கு அவ்வித நெருக்குதல் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
  //1. “ஜநேஸ்வரா:” என்ற பதம் ஒருவேளை வெவ்வேறு பதிப்புகளில் வேறு மாதிரி இருக்கிறதோ என்று தெரியவில்லை. // அதில் பாடபேதத்துக்கான வாய்ப்பில்லை. அரசர்கள் என்று பன்மையில் வர ஸம்ஸ்க்ருத பதம் ஜநேஸ்வரா:/ ஜனேஸ்வராஹா. அவ்வளவே. இது நூல் வடிவில் வரும்போழ்து சிறப்பாக வருவதற்காகக் கூறினேன். எழுத்துப் பிழை பெரிய பிழை அல்லவே.
  //2. சுவாமி கொடுத்த மாற்று மொழி பெயர்ப்புகளுக்கு என் நண்பன் நன்றி தெரிவிக்கிறான்.// நான் என்னுடைய கருத்தைச் சொன்னேன். பெரியவர்களிடம் கலந்து உசிதமானதைச் செய்யவும்.

 6. “जनेश्वस्वरा:” – என்ற ஸம்ஸ்க்ருத பதத்திற்கு “ஜநேஸ்வரா:” அல்லது “ஜநேஸ்வராஹா”
  என்று தமிழாக்கம் செய்யலாம் ஆயினும், முதலாவதே நலம். ஸம்ஸ்க்ருத பதத்தில் விஸர்கம், (” : ” ), இருப்பின் அதையே தமிழாகாத்தில் கொள்ளுவதே நலம் என்பதை
  விளக்க கீழ் வழரும் உதாரணம்:
  விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் (1) काम:, कामहा (२) वीर:, वीरहा – எனும் நாமங்கள் வருகின்றன. ஹ-காரமும், விஸர்க-பிரயோகமும் வெவ்வேறு பொருளை (அதாவது அர்த்தத்தை) கொடுக்கின்றன.
  ஆக, “ஜநேஸ்வரா:” என்பதே சாலச் சிறந்த மொழியாக்கம்.
  பெ சு ப நாதன்

 7. இராமயணத்தை அழகான முறையில் தருகிறீர்கள்.

  பலரும் படித்துப் பயன்பெற வேண்டிய பதிவுத் தொகுப்பு இது.

  பாராட்டுகள்.

  நான் சமீபத்தில் பார்த்த ஒரு வலைப்பூவில் பெரியாரின் ராமாயண விமர்சனத்தைக் குறிப்பிட்டு அறுவெறுக்கத்தக்க பதிவு ஒன்றைக் கண்டேன். இப்படிப் பதிவுகளுக்கு என்ன பதில் சொல்வது? பதில் சொன்னாலும் வசைமாறி பொழிகிறார்கள் (அந்த குறிப்பிட்ட பதிவுக்கு அல்ல).

  அந்தப் பதிவின் முகவரி இது https://thamizhoviya.blogspot.in/2013/01/blog-post_9.html

  அதே விமர்சனத்தை கீற்று வலைத்தளத்திலும் வெளியிட்டிருக்கிறார்கள். அதன் முகவரி https://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22582:2013-01-09-00-51-16&catid=42:periyar&Itemid=127

  அவர்கள் சொல்லும் மற்றொரு இராமாயணம் எது? எந்த இராமாயணத்திலிருந்து அப்படிச் சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *