ஆதி சங்கரரின் ஆன்ம போதம் -6.

6. (தொடர்ச்சி)

Spiritual-Enlightenment
நமது விருப்பு வெறுப்பு முதலான குணங்களால் மாறுபட்டுக் காண்கின்ற இந்த சம்சாரத்தில் நாம் காணுவதெல்லாம் நம் கனவுக்கு நிகரானது. கனவு காணும்போது அவை எல்லாமே மெய்போலத் தோன்றினாலும் அவை எல்லாமே பொய் என்பதை நாம் பின்பு உணர்கிற மாதிரி, அறியாமை அகன்று ஆன்மாவைப் பற்றி நாம் அறிந்ததும் சம்சாரத்தில் காணுவதைப் பொய் என்பதையும் உணர்வோம்.

விருப்பு-வெறுப்புகளை நீக்குவது பெரும் பாடாக இருக்குமே என்று கவலைப்பட வேண்டாம். அது ஒரு பெரிய விஷயமே இல்லை. நாம் தினந்தோறும் அனுபவித்துக்கொண்டும் ஆனால் அதைப் பற்றி அறியாமலும் இருக்கிறோம் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா? தினம் தினம் அனுபவிக்கும் அந்த ஆனந்த நிலையைச் சற்று விவரமாக அணுகினால் நம் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு இருக்கிறது.

உலகம் என்று நாம் காண்பது நம் உடலில் உள்ள கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் என்ற ஐந்து கர்ம இந்திரியங்கள் மூலமாகவும், அவை வழியே பெறப்படும் தகவல்களின் மேல் நாம் வளர்க்கும் எண்ணங்கள் மூலமாகவும் நம் மனதில் பதிந்துள்ள ஓர் உருவகம்தான். இந்திரியங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எப்படி இருந்தாலும், இறுதியில் அவைகளைப் பற்றிய நமது எண்ணங்கள் முன்னதைவிட வலிமை வாய்ந்தனவாக இருக்கின்றன. தற்போது வரும் தகவல்களுடன், முன்பு அவை தொடர்பான வந்த தகவல்களும் அவை பற்றிய எண்ணங்களும் சேர்ந்து ஒரு தொகுப்பாக மனதில் பதிவதுதான் அந்த வலிமைக்குக் காரணம். அதாவது உள்ளதைவிட நாம் பார்க்கும் பார்வையின் கோணமும் (அஹங்காரம்) இதில் சேர்ந்திருக்கிறது. இவை எல்லாமே நமது விழிப்பு (ஜாக்ரத்) நிலையில் நடக்கின்றன. அதனால் அதை “ஜாக்ரத அஹங்காரம்” என்று சொல்வார்கள்.

perception_vase

ஆனால் விழிப்பு நிலை மட்டும்தான் நமது நிலை அல்ல. அது தவிர கிட்டத்தட்ட அதே போன்ற காட்சிகளும், எண்ணங்களும், மனமும் நாம் உறங்கும்போதும் நம் கனவில் (ஸ்வப்னம்) வருகின்றன. அப்போது நாம் உறங்கிக் கொண்டிருந்தாலும் நம்மைப் போலவே ஒருவரை நாம் கனவில் உருவாக்கி, அவருக்கும் ஒரு கனவு மனம் இருப்பதாகவும், இன்ன பிற அனுபவங்களும் இருப்பதாகவும் நாம் உணர்கிறோம். அப்போது நாம் காண்பது தனியான ஒரு கனவு உலகமே. அந்தக் கனவு நீடிக்கும்வரை நாம்தான் கனவு காண்கிறோம் என்ற உணர்வும் வராது. அந்த உணர்வு ஒரு வேளை கனவு கலையும் சமயம் வரலாம். நம் கனவின் அனுபவங்கள் பல மாதங்களோ, வருடங்களோ போன்ற நீண்ட காலம் சம்பந்தப்பட்டதாய் இருந்தாலும் உண்மையில் அவை சில நொடிப் பொழுதே நீடிக்கிறது. ஆனாலும் அந்தக் குறுகிய கால அளவை, நாம் கனவு காணும்போது உணர்வதில்லை. விழிப்பு நிலை அனுபவங்கள் தொடர்பாக சில கனவு அனுபவங்கள் இருக்கலாம். ஆனால் அதற்கும் மேலாக, சிறிதும் சம்பந்தமே இல்லாமல் பல காட்சிகள் அமையும். விழிப்பு நிலை அனுபவங்களைப் போலவே கனவு அனுபவங்களும் நாம் உருவாக்கியுள்ள நம் கனவு உருவத்தைச் சுற்றி அமைவதால் அதை “ஸ்வப்ன அஹங்காரம்” என்று சொல்வார்கள்.

நமது மூன்றாவதான ஆழ்ந்த உறக்க (சுஷுப்தி) நிலையில் நமக்கு ஒன்றும் தெரிவதில்லை. நமக்கு உடல் இருக்கிறது என்றோ, அல்லது உலகம் இருக்கிறது என்றோ எதுவும் தெரிவதில்லை. ஆனாலும் ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின் நாம் நிம்மதியாக நன்கு தூங்கியதாகச் சொல்வோம். ஒரு அமைதியான நிலையை அனுபவித்திருப்போம். உடல், உலக அனுபவங்கள் இல்லாத போதும் நாம் ஓர் அமைதியை, நிம்மதியை அனுபவித்தோம் என்றால் அனுபவிப்பவன் என்று ஒருவன் இருந்திருக்கிறான் என்றுதானே அர்த்தம்? இல்லையென்றால் விழித்த பின் அப்படி நம்மால் சொல்லியிருக்க முடியாது அல்லவா? மேலே சொன்ன இரண்டு அகங்காரங்களும் அப்போது இல்லாது, அனுபவம் என்று ஒன்று இருந்தால் நம் உடலையும், உலகையும் அறியாத ஒன்று இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

அந்த ஒன்றைப் பற்றிய உணர்வு இல்லாதபோதும் நாம் ஆனந்தமாக உறங்கியிருக்கிறோம். அந்த ஒன்று நமக்கு வெளியிலிருந்து வந்திருக்க முடியாது. மற்ற அனுபவங்களைப் போலவே இதுவும் நம் உள்ளிருந்து வந்ததுதான். ஏனென்றால் அந்த உறக்க அனுபவத்தை நம்மால் மட்டும்தான் உணர முடிகிறது. நம்மைப் போலவே மற்றவரும் உணரும்போது, அது மற்றவர் மட்டும் உணர்வதுதான். ஆகையால் அந்த நிலையில் நாம் எப்போதும் இருக்க முடிந்தால் நாம் எப்போதும் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருப்போம் என்று சொல்லலாம் அல்லவா? அங்கு “நான்” என்ற நினைப்பாகிய அஹங்காரம் ஏதும் இல்லாது, அனுபவம் ஒன்றே இருப்பதால் அந்த நிலையை “சுஷுப்தி அனுபவம்” என்று சொல்வார்கள்.

தூலாமாகவோ நுண்ணியதாகவோ உடல் மற்றும் உலக அனுபவங்கள் இருக்கும்போது அதற்கேற்ப அகங்காரங்கள் வருகின்றன. அத்தகைய அகங்காரம் இல்லாதபோதும், உடலும் உலகமும் தெரியாதபோதும், ஓர் ஆனந்த நிலையை நாம் அனுபவிக்கிறோம். நாம் அனுபவிக்கும் கனவு நிலையே நமது மூன்றாவதான உறக்க நிலையில்தான் வருகின்றன. அதாவது உறக்கம் இல்லையென்றால் கனவும் இல்லை என்றாகிறது.

விழிப்பு நிலையிலும், கனவு நிலையிலும் நமது அனுபவங்கள் ஒரே மாதிரி இருக்கின்றன. ஆனாலும் கனவு கலைந்து விழிப்பு நிலை வந்ததும் கனவு அனுபவங்கள் உண்மையல்ல என்று உணரப்படுகிறது. “சொப்பன அகங்காரத்தில்” விளைந்த அனுபவங்கள் பொய் என்று கனவு காணும் போது தோன்றாதது போல, “ஜாக்ரத அகங்காரத்தில்” விளையும் அனுபவங்கள் பொய் என்று விழிப்பு நிலையிலும் தோன்ற வாய்ப்பு இல்லை. நமது “சுஷுப்தி அனுபவத்தில்” விளைந்த அறியாமையுடன் கூடிய ஆனந்த அனுபவம் எப்போது நமக்கு அறிவுடன் கூடி நமது நாலாவது (“துரியம்”) நிலையில் உணரப்படுகிறதோ, அப்போது நமது விழிப்பு நிலை அனுபவங்களும் கனவு நிலை அனுபவங்களைப் போலவே பொய் என்று உணரப்படும்.
தூங்காமல் தூங்கி ஆனந்தத்தை அனுபவிப்பதால் இந்த நான்காவது நிலையை நனவுத் துயில் என்றும் சொல்லலாம். மற்ற மூன்று நிலைகளும் வந்து போகும் நிலைகளாக இருக்கும் பொய்யான நிலைகள். ஆதலால் அதைப் போன்றே இந்த நாலாவது நிலையும் பொய்யானது என்று கருதப்போகிறார்களே என்பதால் இதை மூன்றுக்கும் அப்பாலாக (அதீதமாக) இருக்கும் “துரியாதீத” நிலை என்றும் சிலர் சொல்வார்கள். ஆனால் இருப்பது ஒன்றே ஆதலால் இந்த நாலாவது நிலை ஒன்றே உண்மையாய் உள்ளது. அதனால் துரியமும் துரியாதீதமும் ஒரே நிலைதான் என்று ரமணர் சொல்வார். (பார்க்க “அறியும் அறிவே அறிவு -12 ” பகுதி)

இந்த வாதத்தில் நாம் காணவேண்டிய அம்சங்கள் பல உள்ளன. ஒவ்வொருவருக்குமே இருக்கும் துரிய நிலை அவரவர் அனுபவம் என்றாலும், அங்கு “நான்” என்ற அகங்காரமும் “எனது” என்ற மமகாரமும் இல்லை, உலகமும் இல்லை, ஆனந்த அனுபவம் ஒன்றே உள்ளது. அது அனைவரிடமும் உள்ளதால் எந்த வித பேதமும் எவரிடத்தும் இல்லை. எப்போது பேதங்கள் காணப்படுகின்றனவோ, அப்போது நாம் அந்த நிலையில் இல்லை என்பதும், உலகம் தெரிகிறது என்றும், அந்த நிலைக்கு ஏற்ப நமது செயல்கள் அமைய வேண்டும் என்பதும் தெளிவாகிறது. அத்தகைய செயல்கள் நம்மை அகங்கார மமகாரங்கள் இல்லாத அந்த ஆனந்த நிலைக்கு எடுத்துச் செல்லுமாறும் அமைய வேண்டும். ஏனென்றால் அது ஒன்றே உண்மையான நிலை.

இரண்டாவதாக, முன்பே நாம் பார்த்தமாதிரி பிறந்தது எதுவும் இறக்கவேண்டும். அதனால் முன்பு இல்லாதிருந்து இப்போது புதிதாக வருவது எதுவும் ஒரு காலத்தில் இல்லாது போகும். இதன் காரணமாக ஆனந்தத்தை நாம் அறிவோடு உணரும் நமது துரிய நிலையும் எப்போதும் இருந்தாக வேண்டும். இப்போது அதை நாம் அறியாது ஆனால் அவ்வப்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிப்பது போலவே, விழிப்பு நிலையிலும் அதைப் பல சமயம் அனுபவிக்கிறோம். உதாரணத்திற்கு தீவிரமாகவும் ஆசையுடனும் நாம் எடுத்த ஒரு வேலையை முடித்த அந்த நொடியே, அல்லது நாம் ஆசைப்பட்ட பொருள் கிடைத்த அந்த நொடியே, அந்த இடத்தை அடுத்த ஆசையோ எண்ணமோ நிரப்புவதற்கு முன்பாக நமக்கு ஒரு மகிழ்ச்சியும் அமைதியும் வருகிறதே, அதுவும் நமது துரிய நிலை அனுபவம்தான். அந்தப் பொழுதை நீட்டிக்க செய்ய முன்றாலும், நாம் நமது உள்ள நிலையை இடைவிடாது உணர்வோம்.

live-your-dreams-my-dream-is-23986887-1600-1200
மூன்றாவதாக, துரிய நிலை எப்போதும் உள்ளதே; அதை நமது முந்தைய செயல்களின் விளைவாக வளர்ந்துள்ள திரைகள்தான் நம் அறியாமையாகி அந்த நிலையை உணர முடியாமல் செய்கின்றன. ஏனென்றால் துரிய நிலைதான் நமது இயல்பான நிலை என்றால் நாம் அறியாவிட்டாலும் அது எப்போதும் இருந்தாக வேண்டும். அப்படிப் பார்த்தால் அதை உணராதவர்களும் அந்த நிலையில்தான் எப்போதுமே இருக்கிறார்கள். அதை அறியாததால் தான் வேறு வேறு நிலைகளில் இருப்பதாக நினைக்கிறார்கள். அதனால்தான் ஒரு சாதகன் செய்யும் முயற்சிகள் எதுவுமே திரைகளை விலக்கவே அன்றி புதிதான ஒரு நிலையை அடைவதற்கல்ல. ஏனென்றால் இப்போது இல்லாத ஒன்று புதிதாக வரவேண்டியது என்றால், அது ஒரு நாள் போகவும் செய்யும். அது எப்படி என்றும் உள்ளதாக இருக்க முடியும்? அதனால் ஒவ்வொருவரும் ஆன்ம சொரூபமே. ஞானிகள் அதை அறிந்திருக்கிறார்கள், மற்றவர்கள் அதை அறியவில்லை என்பதே சரியான நிலை. இதனாலேயே ஞானிகள் ஆன்ம சொரூபம் ஒன்றையே பார்ப்பதால் அவர்களுக்கு எல்லோரும் ஞானிகளாகவே தெரிவார்கள், ஆன்மாவைப் பார்க்காது மற்ற லக்ஷணங்களைப் பார்ப்பவர்களுக்குத்தான் பேதங்கள் தெரியும். அவை மறைவதற்குத்தான் நமது வாழ்க்கையின் செயல்களும், எண்ணங்களும் பரிபூரணமாக அமையவேண்டும்.

இந்த நமது மூன்று நிலைகளைப் பற்றி முன்பு எழுதியிருந்ததைப் படித்த வாசகர் ஒருவர், இவை தவிர ஒருவனுக்கு மயக்கத்தினாலோ, கோமாவினாலோ (coma) கூட தன்னை அறியாத ஆனால் அமைதி நிலை வருகிறதே அதை எப்படிப் புரிந்துகொள்வது என்று கேட்டிருந்தார். கோமாவும், மயக்கமும் நமது இயல்பான நிலைகள் அல்ல. நரம்பு மண்டலத்தில் உள்ள பிசகினாலோ, வேறு ஏதேனும் தடைகளினாலோ (blockers) ரத்த ஓட்டம் தடைபட்டு இந்த நிலைகள் செயற்கையாக வருகின்றன. தடைகள் நீங்கியதும் அவர்கள் சாதாரண நிலைக்கு வருகிறார்கள். அப்படிப் பார்த்தாலும் அறியாமையைப் பொருத்தவரை இந்த இரு நிலைகளுக்கும் உறக்க நிலைக்கும் வித்தியாசமில்லை.

அறிவுடன் கூடிய ஆழ்ந்த அமைதி முக்தி நிலையில் உண்டு என்றால், அதை அடைவதற்கு உணர்வு பரிபூரணமாய் இருக்கும் நிலையில் விசாரம் செய்யாமல் மூலிகைகள் உதவியினாலும், மருந்து உட்கொள்ளுவதாலும் ஒருவன் பரவச நிலை அடைந்து விடலாம் என்று நினைப்பது ஓர் ஏமாற்று வேலையே. அதனால் உடலும் கெட்டுவிடும், மனமும் தறிகெட்டு ஓடும். உடலைக் கருவியாக வைத்துக்கொண்டு, மனத்தின் தன்மையை விசாரிக்க வேண்டியவன் அவைகள் தன் வசம் இல்லாதபோது என்னதான் சாதிக்க முடியும்?

7. तावत्सत्यं जगद्भाति शुक्तिकारजतं यथा |
यावन्न ज्ञायते ब्रह्म सर्वाधिष्ठानमद्वयं ||
தாவத்சத்யம் ஜகத்பாதி ஷுக்திகாரஜதம் யதா |
யாவத்ன க்ஞாயதே ப்ரஹ்ம சர்வாதிஷ்டானமத்வயம் ||

எவ்வளவு காலம் எவைக்கும் அதிட்டானமாம்
அவ்வியயமாம் பிரமம் ஆய்ந்து அறிதல் – ஒவ்விடாது
அத்துணைக் காலம் அகிலமும் மெய்யாய்த் தோன்றும்
சுத்தி வெள்ளி போலத் துணி

எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் உள்ள அழிவற்ற பிரம்மத்தை எத்தனை காலம் ஒருவன் விசாரித்து அறிந்து கொள்ளவில்லையோ, அத்தனை காலத்திற்கும் கிளிஞ்சலில் தோன்றும் வெள்ளியைப்போல உலகங்கள் எல்லாமும் உண்மையாகவே உள்ளதுபோலத் தெரியும் என்பது நிச்சயம்.

முந்தைய செய்யுளில் நமது விழிப்பு நிலை அனுபவங்களும் கனவில் வருவதைப் போலவே பொய்யானது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் நாம் உலகில் விதவிதமாகக் காண்பது என்ன? கனவில் நாம் அப்போது காண்பதோடு சரி; அவை அப்புறம் வருவதில்லை. ஆனால் நனவில் அவையெல்லாம் வேண்டாம் என்றாலும் நம் கண் முன்னே அவை தெரிவது மட்டும் அல்லாது, நின்று நிதானமாக எப்போதும் இருக்கின்றன, அது தவிர அவைகளை மற்ற புலன்களைக் கொண்டும் அறிகின்றோமே. அதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று எவருக்குமே கேட்கத் தோன்றினால் அது நியாயம் தானே? அதனால் பொய்த் தோற்றம் என்று சொல்வதோடு நிற்காமல், மேலும் அப்படிக் காணப்படுவது என்ன என்பதைப் பற்றி விளக்கமாக இந்தச் செய்யுளில் சொல்கிறார்.

முன்பு சொல்லப்பட்ட உண்மையை ஓர் உபமானத்தால் இங்கு விளக்குகிறார். தூரத்தே இருந்து பார்க்கும் ஒருவனுக்கு பளபள என்று வெள்ளிச் சாமான் போல ஒரு பொருள் தெரிகிறது. பக்கத்தில் சென்று பார்க்கும்போது அது ஒரு கிளிஞ்சல்தான் வெள்ளியல்ல, அதன் மேல் சூரிய ஒளி பட்டதால் வெள்ளி போலத் தெரிந்தது என்று அவன் உணர்கிறான்.
அப்படியென்றால் அவன் பார்த்தது வெள்ளியா, கிளிஞ்சலா? வெள்ளி என்று சொன்னால் இல்லையே கிளிஞ்சல்தானே இருக்கிறது என்றும், கிளிஞ்சல் என்று சொன்னால் இல்லையே வெள்ளியைத்தானே பார்த்தோம் என்றும் சொல்லலாம். இதற்கு அவனது பதில் எப்படி இருக்கும்? “இல்லை, தூரத்திலிருந்து பார்த்ததும் முதலில் வெள்ளி என்று நினைத்தேன், ஆனால் பக்கத்தில் சென்றதும் கிளிஞ்சல் என்று தெரிந்துகொண்டேன்” என்றுதானே சொல்வான். அதாவது இருப்பது ஒரே பொருளான கிளிஞ்சல்தான், காணப்பட்டதோ தூரத்திலிருந்து வெள்ளியாகவும், அருகிலிருந்து கிளிஞ்சலாகவும் தெரிந்தது என்றுதானே அதற்கு அர்த்தம். ஆக இருந்த ஒரே பொருள் இரண்டாகக் காணப்பட்டது பார்த்தவன் கோணத்தில் இருந்துதான். உண்மையில் இருந்தது ஒன்றே.

இதில் அந்தக் கிளிஞ்சலின் மேல் பட்ட சூரிய ஒளி வேறு கோணத்திலிருந்து வந்திருந்தால், அது வெள்ளியாகத் தெரியாமல் போயிருக்கலாம் என்பதும் உண்மை. வெள்ளியாக அவனுக்குத் தெரிந்துகொண்டு இருந்தவரை அது வெள்ளியாகத்தான் இருந்தது, கிளிஞ்சல் தெரியவில்லை என்பதும் உண்மை. உள்ள உண்மையை அவன் தெரிந்துகொள்ள, ஒன்று ஒளி வேறு கோணத்திலிருந்து வந்திருக்கவேண்டும், அல்லது அவன் செய்ததுபோல முயற்சி எடுத்து அருகில் வந்து அது என்ன என்று பார்க்கவேண்டும். முன்னதை நாம் விதி என்றும், பின்னதை மதி என்றும் சொல்லலாம். எடுத்த முயற்சியை மதி என்று சொன்னாலும், பார்க்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியதை விதி என்றுதானே சொல்லமுடியும்? இந்த விதி-மதி விவாதம் இருக்கட்டும். நாம் அங்கு நடந்ததை மேலும் அலசலாம்.

“அத்வயம்” என்றால் இரண்டற்ற ஒன்று என்றும், “சர்வ அதிஷ்டானம்” என்றால் எல்லாவற்றுக்குமே ஆதாரமாக இருப்பது என்றும், இந்த ஸ்லோகத்தில் வந்துள்ள இரண்டு சொற்களுமே பிரம்மத்தின் தன்மையைக் குறிக்கின்றன. ஏன் இரண்டு சொற்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று பார்ப்போம். வீடு கட்டும் முன்பாக அதற்கு ஆதாரமாக அடிக்கல் நாட்டி, அடித்தளம் போடுவார்கள். வீடு கட்டியதும் அடித்தளம் தெரியாது வீடு மட்டுமே தெரிந்தாலும், அவை இரண்டும் இரண்டு பொருட்களாக இருக்கின்றன. கிளிஞ்சல் என்னும் ஆதாரத்தில் (அதிஷ்டானத்தில்) வெள்ளியானது கற்பனையாக (ஆரோபிதமாக) தெரிந்தாலும், இறுதியில் கிளிஞ்சல் என்றும், அந்த இடத்தில் இல்லாவிட்டாலும் வெள்ளி என்றும் இரண்டு பொருட்கள் உலகில் இருக்கின்றன. ஆனால் பிரம்மம் சர்வ அதிஷ்டானம் என்று சொல்லப்படுவதால் அது ஒன்றே இருப்பது, மற்றதாகத் தெரிவது எல்லாமே கற்பனைதான் என்று அறிய வேண்டும். இங்கு இரண்டாவது என்று சொல்வதற்கு வேறு என்று எதுவும் கிடையாது.

எப்படி ஒன்றேயான கிளிஞ்சல் தூரத்திலிருந்தும், அருகிலிருந்தும் வெவ்வேறாகத் தெரிந்ததோ அதே போன்று எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் இருக்கும் ஒன்றேயான பிரம்மமே காண்பவன் பார்வையில் பலவித பொருட்களாகி வெவ்வேறாகத் தெரிகின்றன. அது ஏன் அப்படித் தெரிகின்றன என்று கேட்டால், கிளிஞ்சல் எப்படி வெள்ளியாகத் தோன்றியதோ அப்படி என்றுதான் சொல்ல முடியும். காண்பவன் தன் பார்வையை சரி செய்தால் உள்ளதை உள்ளபடி பார்க்க முடியும் என்பதால் அதைச் செய்யவேண்டும்.

ஒன்று விதி மூலம் அவனது பார்வை சரி செய்யப்படலாம், இல்லையேல் இந்த உண்மைகளை விவரமாக அறிந்துகொண்ட அவன் ஞானத்தைத் தேடி தான் செய்யும் விசாரம் என்ற பயிற்சியின் மூலம் உள்ள உண்மையை உணர வேண்டும். அதைச் செய்யாத வரை பொய் எனச் சொல்லப்பட்ட இந்த உலகத்தை, அதற்கு ஆதாரமான பிரம்மத்தை உணராததால், உண்மை என்று நம்பிக் கொண்டிருத்தல் ஒன்றே முடியும். பிரம்மத்தைப் பற்றிய அறிவு பிறந்தவுடன், அறியாமையால் தான் காணும் உலகின் தன்மையை உள்ளபடி உணரமுடியும். அறியாமையிலிருந்து அறிவுக்கு வருவது கனவிலிருந்து நனவுக்கு வருவது போன்றது.

இன்னுமொரு உவமானத்தாலும் இந்த நிலைமையை விளக்க முடியும். ஒரு திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுடைய நிலைகளை கவனியுங்கள். படத்தில் வரும் காட்சிகளில் மூழ்கி அங்கு நடப்பதை உண்மை என நம்புபவன், காட்சிகளுக்கு ஏற்ப வரும் இன்ப-துன்ப உணர்வுகளில் பங்கு கொள்வான். அப்போது அவனுக்குத் திரையில் நடப்பதெல்லாம் உண்மைக் காட்சிகளே. படம் முடிந்த பின்புதான் அவன் தன் உண்மை நிலையை உணர முடியும். ஆனால் ஆரம்பத்திலிருந்தே படத்தை ஒரு பொழுதுபோக்காகப் பார்க்கும் மனநிலையில் உள்ளவன், வெறும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருப்பானே தவிர காட்சியில் வரும் நிகழ்ச்சிகளோடு ஒண்டிக்கொள்ள மாட்டான். அதேபோல பிரம்மம் இல்லையேல் எதுவும் இல்லை என்று உணர்பவனுக்கு, உலகக் காட்சிகள் எதுவும் உண்மையல்ல.

10 Replies to “ஆதி சங்கரரின் ஆன்ம போதம் -6.”

  1. ” தூரத்தே இருந்து பார்க்கும் ஒருவனுக்கு பளபள என்று வெள்ளிச் சாமான் போல ஒரு பொருள் தெரிகிறது. பக்கத்தில் சென்று பார்க்கும்போது அது ஒரு கிளிஞ்சல்தான் வெள்ளியல்ல, அதன் மேல் சூரிய ஒளி பட்டதால் வெள்ளி போலத் தெரிந்தது என்று அவன் உணர்கிறான்.
    அப்படியென்றால் அவன் பார்த்தது வெள்ளியா, கிளிஞ்சலா? வெள்ளி என்று சொன்னால் இல்லையே கிளிஞ்சல்தானே இருக்கிறது என்றும், கிளிஞ்சல் என்று சொன்னால் இல்லையே வெள்ளியைத்தானே பார்த்தோம் என்றும் சொல்லலாம். இதற்கு அவனது பதில் எப்படி இருக்கும்? “இல்லை, தூரத்திலிருந்து பார்த்ததும் முதலில் வெள்ளி என்று நினைத்தேன், ஆனால் பக்கத்தில் சென்றதும் கிளிஞ்சல் என்று தெரிந்துகொண்டேன்” என்றுதானே சொல்வான். அதாவது இருப்பது ஒரே பொருளான கிளிஞ்சல்தான், காணப்பட்டதோ தூரத்திலிருந்து வெள்ளியாகவும், அருகிலிருந்து கிளிஞ்சலாகவும் தெரிந்தது என்றுதானே அதற்கு அர்த்தம். ஆக இருந்த ஒரே பொருள் இரண்டாகக் காணப்பட்டது பார்த்தவன் கோணத்தில் இருந்துதான். உண்மையில் இருந்தது ஒன்றே. ”

    ” வீடு கட்டும் முன்பாக அதற்கு ஆதாரமாக அடிக்கல் நாட்டி, அடித்தளம் போடுவார்கள். வீடு கட்டியதும் அடித்தளம் தெரியாது வீடு மட்டுமே தெரிந்தாலும், அவை இரண்டும் இரண்டு பொருட்களாக இருக்கின்றன. கிளிஞ்சல் என்னும் ஆதாரத்தில் (அதிஷ்டானத்தில்) வெள்ளியானது கற்பனையாக (ஆரோபிதமாக) தெரிந்தாலும், இறுதியில் கிளிஞ்சல் என்றும், அந்த இடத்தில் இல்லாவிட்டாலும் வெள்ளி என்றும் இரண்டு பொருட்கள் உலகில் இருக்கின்றன. ஆனால் பிரம்மம் சர்வ அதிஷ்டானம் என்று சொல்லப்படுவதால் அது ஒன்றே இருப்பது, மற்றதாகத் தெரிவது எல்லாமே கற்பனைதான் என்று அறிய வேண்டும். இங்கு இரண்டாவது என்று சொல்வதற்கு வேறு என்று எதுவும் கிடையாது. ” –

    இந்த கருத்துக்கள் நன்றாகத்தான் உள்ளன. ஆனால், பிரபஞ்சத்தில் ஏனிந்த தேவை இல்லாத விளையாட்டு ? இது அந்த சூப்பர் சக்தியின் லீலா வினோதம் என்று சொல்கிறோம். அந்த சூப்பர் சக்தியின் லீலாவிநோதத்துக்கு நாமல்லவா அவஸ்தைப்பட வேண்டியிருக்கிறது. அந்த இறைவன் தான் நம் உருவில் இருந்து அவஸ்தையும் படுகிறான் என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான்.

  2. /கனவு காணும்போது அவை எல்லாமே மெய்போலத் தோன்றினாலும் அவை எல்லாமே பொய்/
    கனவு அனைத்துமே பொய்யா? நம் சமய சாத்திரங்கல் கூறுவதை அறிந்தோர் விளக்க வேண்டுகின்றேன். ஆண்டாள் அம்மையார் தன்னை மதுசூதனன் கைத்தலம் பற்றக் கனாக் கண்டது பொய்யோ? பொய்யையோ நாம் திருமணங்களிலும் போற்றிப் பாடிக் கொண்டாடுகின்றோம்? திரிசடை கண்ட கனவை, மீண்டும் உறங்கி முழுமையாகக் கண்டு கூறும்படி சீதாபிராட்டி வேண்டினாளே பொய்யனுபவத்தையோ வேண்டினாள்?சிலப்பதிகாரம் கனாத்திறம் உரைத்த காதை கவிஞனின் மனவோட்டமா? இன்னும் நம் சமயச் சான்றோர் வரலாறுகளில் பரமன் கனவில் வந்து அருள் செய்த வரலாறுகளும் இன்ன தலத்துக்கு வருக, இன்ன் செயலைச் செய்க என்று பணித்த செய்திகளும், அவற்றால் அவர்கள் பலன் பெற்ற வரலாறுகளும் உளவே. கனவு பொய்யெனும் கருத்துடன் இவை முரண்படுகின்றனவே. அறிந்த அன்பர்கள் விள்க்கம் அளிக்க வேண்டுகின்றேன். பாரமார்த்திகம், வியவகாரிகம் இரண்டும் தம்முள் வேறுபடுவன்வா? இரண்டிலும் அனுபவிப்பது எது? உயிர் தானே? இதனைக் குறித்தும் அன்பர்கள் அறிந்த விளக்க வேண்டும்.

  3. வாசகர் வெள்ளைவாரணன் சொல்வதற்கு ரமணர் என்ன பதில் அளிக்கிறார் என்று முதலில் பார்ப்போம்:
    “விதம் விதமாம் நிலைகள் எல்லாம் விசாரம் செய்து மிச்சை அறு பரம பதம் யாதொன்று உண்டோ, அதனையே திடமாக அகத்தால் பற்றி அனவரதமும் உலகில் விளையாடுவீரா”. உண்மைதான் சார், ரமணரும் உங்களைப் போலவே இதை விளையாட்டு என்றுதான் சொல்கிறார். இந்தச் செய்யுளின் முழு விவரங்களையும் இதே இணைய தளத்தில் வெளிவந்த “அறியும் அறிவே அறிவு” தொடரில் பார்க்கவும்.

    அதனால்தானே “குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று” என்று சொன்னார்கள். குழந்தைபோல நாமும் உலகியல் வாழ்வை விளையாட்டாக எடுத்துக் கொண்டால் அனைத்தும் புரியும். ஆனால் நாமோ “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” போல் அல்லவா உலகில் வளைய வருகிறோம். விளையாட்டு என்று எடுத்துக் கொண்டாலும் அதை ஆரம்பித்து வைத்தவர்கள் நாமாக இருக்க இறைவனையோ, இயற்கையையோ ஏன் நொந்துகொள்ள வேண்டும்?

    ஆரம்பித்ததை முடிக்க வேண்டியது நமது கடமை அல்லவா? அதை முடிக்கும் போதுதான் விளையாட்டு என்றுமே இருந்ததில்லை, நாம்தான் இருக்கிறோம் என்று புரியும். சாதாரணமான விளையாட்டுப் போட்டிகளில் கூட “Play for play’s sake” (விளையாட்டு விளையாடுவதற்கே) என்றுதானே சொல்கிறார்கள். அதுவும் இது அகில உலக மகா ஜகப் புரட்டு விளையாட்டு என்றால் சும்மாகவா இருக்க முடியும்? முடிந்தால் சும்மாத்தான் இருந்து பாருங்களேன்.

  4. வாசகர் முத்துக் குமாரசாமி அவர்களின் மற்ற கேள்விகளுக்கு வேறெவராவது பதில் அளித்தபின், எனது பதிலையும் அளிக்கிறேன். இப்போதைக்கு அவரது கீழ்கண்ட வரியை மட்டும் எதிர்மொழிக்கு எடுத்துக் கொள்கிறேன்:
    / “….இன்ன தலத்துக்கு வருக, இன்ன செயலைச் செய்க என்று பணித்த செய்திகளும்…/

    நான் கண்டது அனைத்துக்கும் ரமணரது படைப்புகளே வாயிலாக அமைந்தது என்பதால், இங்கும் அவரைத் துணைக்கு அழைக்கிறேன். அவர் “காணும் தனை விட்டுக் கடவுளைக் காணல், காணும் மனோமயமாம் காட்சி…” என்பார். ஆக எந்தத் திருத்தலம் சென்றாலும், சென்றவனும் அங்கு காண்பவனும் எவன் என்று பார்க்கும் மனநிலையை வளர்த்துக் கொண்டால் எல்லாம் புரியவரும். அதுவரை கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பதன் காரணம், எதையும் நாம் அறிவார்த்தமாகவே பார்த்துவிட்டு அத்துடன் நிறுத்திக் கொள்ளும் நமது பழக்கம்தான்.

    ரமணர் சொல்வது போல ஒவ்வொரு திருத்தலமும் ஒருவன் செல்வதால் அப்படிச் சென்றவன் பொருட்டு அத்தலம் பெருமை அடைகிறது என்பதுவே உண்மை. ஏனென்றால் அங்கு அவன் பார்ப்பது எவன் என்று அவன் தன்னைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று வாய்த்திருக்கிறது என்பதால். ஆனால் எத்தனை பேர் அதைப் பயன் படுத்துகிறார்கள்? பார்ப்பவனை விட்டுவிட்டு பார்த்ததைப் பறை சாற்றும் பழக்கம் என்று நம்மை விட்டு விலகுமோ அதுவே நன்னாள். எல்லா சாத்திரங்களும் சொல்வது: “திரைகளை விலக்கு, இருப்பது தெரியும்; புதிதாக அடைவது என்று ஒன்றுமில்லை”. ஆக நமது மனோமயக் காட்சிகளை சாட்சியாகப் பார்க்க ஆரம்பியுங்கள். மேலும் வர வேண்டியது வரும்.

  5. முறையான வேதாந்த பாடம் கேட்டு ஒரு மாமாங்கத்திற்கும் மேலாகிறது. நூல் பிடித்தது போல் ஒரு குருவை அணுகி பாடம் கேட்பது அலாதி தான். அதற்கு வாய்ப்பில்லாத போது அதோகதி தானா என்ற வினாவிற்கு இல்லை; பொறுமையான தனித்த வாசிப்பும் கூட பலன் நல்கும் என்பதை தங்களது மிக எளிமையான விளக்கங்கள் உணர்த்துகின்றன. இரண்டு மூன்று பாகங்களாக வாசித்து வருகிறேன். தங்களது முந்தைய பிற வ்யாசங்களையும் வாசிக்க அவை தூண்டுகின்றன.

    \\\\\கனவு அனைத்துமே பொய்யா? \\\\\

    அன்பார்ந்த முத்துக்குமார ஸ்வாமி மஹாசய, நான் புரிந்து கொண்டதைப் புரிந்த படிக்குப் பகிர்ந்து கொள்கிறேன்.

    ஸ்ரீ ராமன் மஹாசயர் அவர்கள் விளக்கியமை அவஸ்தா த்ரயம் எனப்படும் ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்ன (கனவு) ஸுஷுப்தி ( ஆழ் உறக்கம்) என்ற நிலைகளும் மற்றும் இவையெல்லாம் கடந்த துரியாதீத நிலையும் (நனவுத் துயில் – அழகானதும் ஆழ்ந்து புரிய வைப்பதுமான சொற் ப்ரயோகம் – மிக்க நன்றி).

    ஆன்மாவுக்கு ஸ்வாபாவிகமான நிலை துரியாதீத நிலை தான். அந்நிலையில் மற்றெந்த நிலைகளும் வாஸ்தவிகமானவையன்று.

    \\\\\\\\\\\“சொப்பன அகங்காரத்தில்” விளைந்த அனுபவங்கள் பொய் என்று கனவு காணும் போது தோன்றாதது போல, “ஜாக்ரத அகங்காரத்தில்” விளையும் அனுபவங்கள் பொய் என்று விழிப்பு நிலையிலும் தோன்ற வாய்ப்பு இல்லை. \\\\\\\\

    சொப்பனமாகட்டும் அல்லது ஜாக்ரதவஸ்தையாகட்டும் ஆங்கே அகங்காரத்தில் விளைந்த அனுபவங்கள் -அதாவது காணும் தான் தன்னால் காணப்படும் விஷயங்களான வேறானவை என்ற த்வந்த்வாதீதங்கள் – இருக்கும் வரை – பொய்யென்று தோன்ற வாய்ப்பு இல்லை.

    நான் மனதில் புரிந்து கொண்ட படிக்கு. தவறு இருக்குமாயின் துலக்கவும்.

  6. /சொப்பனமாகட்டும் அல்லது ஜாக்ரதவஸ்தையாகட்டும் ஆங்கே அகங்காரத்தில் விளைந்த அனுபவங்கள் -அதாவது காணும் தான் தன்னால் காணப்படும் விஷயங்களான வேறானவை என்ற த்வந்த்வாதீதங்கள் – இருக்கும் வரை – பொய்யென்று தோன்ற வாய்ப்பு இல்லை./

    “கனவின் பயனும் நனவின் பயனும் -வினையின் பயனவை பொய்யென வேண்டா” எனச் சங்கற்ப நிராகரனத்துள் கூறப்பட்டுள்ளது. எனவே எல்லாக் கனவும் பொய்யாகாது.கனவுகள் பல காரணங்களால் தோன்றுகின்றன.அவற்றிற்கேற்பவே அவை பொய்யெனவோ மெய்யெனவோ கொள்ளப்படும். “தஸ்யவா ஏதஸ்ய புருஷஸ்ய த்வேஏவஸ்தாWஏபவத இதஞ்ச பரலோக ஸ்தாநஞ்ச சத்யம்” என்னும் ப்ருஹதாரணகோபநிஷத் 6ஆம் அத். 3ஆம் பிரமாணம் இந்த நிலையை விளக்குகின்றது என்பர். பெரியவர் கிருஷ்ணகுமார் இச்சுலோகத்தை நூலிற் கண்டு பொருள் விளக்க வேண்டுகின்றேன்.

  7. அன்பர்களே வணக்கம்,

    உண்மையான நேர்மையான இளைஞர்கல் 100 பேர் இருந்தால் நமது இந்திய தேசம் உருப்படும் இலையேல் ஊழலில் தலை சிறந்த நாடக இன்னும் 10 வருடத்தில் வளர்ந்து விடும். எனவே துடிப்புள்ள இளைஞர்கலே ஒன்று சேருங்கள் இணையத்தின் வாயிலாக போராடுவோம் இந்தியாவை மீடெடுப்பொம்.

    அரசியல் சாக்கடையை சுத்தம் வாருங்கள்.

    1 ஒருமுறை மலை ஆனவருக்கு அடுத்த முறை ஒதுக்கணும், அவர் அரசியல் ஆலோசகராக இருக்கட்டும்.
    2. ஜாதி அரசியலை ஒழிப்போம்,
    3. பண முதலைகளுக்கு அரசியலில் இடமில்லை.
    4. படித்த அறிவாளி, திறமைசாலி, ஜாதி மற்றும் சமயம் பார்க்காத இளைஜர்களுக்கு MLA சீட் கொடுப்போம்.

    5. IAS & IPS அதிகாரிகல் பணியில் எந்த விதத்திலும் குறுக்கீடு கூடாது.

    இப்படி எத்தனையோ உள்ளது நம் யூத் மனதில் ஆனால் அவர்கள் எல்லாம் 1 சேர வேண்டும்.

    இந்திய முன்னேறும் என்ற ஏகங்களுடன்

    முருகானந்தம்
    திருச்சி
    தமிழ்நாடு
    இந்தியா.

  8. அன்பார்ந்த ஸ்ரீ முத்துக்குமாரஸ்வாமி மஹாசய,

    எனக்கு வேதாந்த பாடம் துவக்கு முகமாக ப்ரகரண க்ரந்தமான விவேக சூடாமணியும் நான் தங்களிடம் யத்ருச்சையாக நினைவில் வந்து பகிர்ந்துகொண்ட தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரமும் சொல்லிக்கொடுக்கப்பட்டது. பாடம் நிறைவு பெறவில்லை.

    ப்ராசீன பத்ததியில் பாடம் நடத்திய ஆசிரியர் வேதாந்தக் கருத்துக்களை நன் கு உள்வாங்க மீமாம்சை (பூர்வ) மற்றும் ந்யாயம் (தர்க்கம்) இவையிரண்டும் வாசிப்பதும் அவசியம் என சொல்லியுள்ளார். ப்ரகரண க்ரந்தங்களை வாசித்து அதன் பின் ப்ரஸ்தான த்ரய பாஷ்யம் வாசிப்பது கோட்பாடுகளை உள்வாங்க ஏதுவாக இருக்கும் என்பது எனக்கு பதியப்பட்ட கருத்து.

    நான் பாடம் கேட்டு உள்வாங்கியது கேவலாத்வைதம். ஆகவே அதன் அடிப்படையில் இருக்கும் வேதாந்தக் கருத்துக்கள் வாசிக்கையில் தொடர்ச்சியை உணர்கிறேன். புரிதலில் குழப்பம் இல்லாமல் இருக்கிறது.

    தாங்கள் ப்ருஹதாரண்யக உபநிஷத்தை வாசிக்குமாறு பரிந்துரை செய்தீர்கள் ஐயா. ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகத்தையும் அதன் பொருளையும் வாசிக்கும் தகுதி தான் நான் இது வரை கற்ற படிக்கு இன்று எனக்குள்ளது. அப்படியே வாசித்தாலும் பொருள் மட்டும் உணர இயலலாம். கோட்பாட்டை உணர இயலுமா என்பது சம்சயமே.

    கோட்பாடுகளை உணர நூலிழை பிசகாது ஒரு பாதையில் பயணிப்பது அவசியம் எனப்படுகிறது.

    ஜகத் மித்யை என்ற விஷயத்தை வ்யாவஹாரிக சத்யம் என்றும் சொல்லியுள்ளமையை நோக்குகையில்,

    \\\\\\ஆன்மாவுக்கு ஸ்வாபாவிகமான நிலை துரியாதீத நிலை தான். அந்நிலையில் மற்றெந்த நிலைகளும் வாஸ்தவிகமானவையன்று.\\\\

    என்பது துரியாதீத நிலையில் சரியானாலும் வ்யவஹாரத்தில் உழலும் ஒருவன் ஜகத் மித்யை என்று சொல்வது ப்ரௌடி வாதமாகுமோ என்ற சம்சயமும் எனக்கு உள்ளது.

  9. ஆன்மபோதம் என்னும் இந்நூலைக் கற்பதற்குரிய அதிகாரி யார்? வியவகாரநிலையில் உள்ளவரா? பாரமார்த்திகத்தை அறிந்தவரா? சொப்பனநிலை, துரிய நிலை, துரியாதீதம் இந்த அவத்தை நிலைகளையும் விளக்க வேண்டும்.

    \\ஆன்மாவுக்கு ஸ்வாபாவிகமான நிலை துரியாதீத நிலை தான். அந்நிலையில் மற்றெந்த நிலைகளும் வாஸ்தவிகமானவையன்று.\\

    இந்தச் சுவாபாவிகமான ஆன்மாவுக்கு மயக்க அறிவைக் கொடுக்கும் ஞானேந்திரியங்கள் என்ன் வந்தன? இவை கூடுவதற்கு முன் உயிர் அல்லது ஆன்மா அறிவோடு இருந்ததா? அறியாமையில் இருந்ததா? இவை பற்றிய விளக்கம் முந்திய கட்டுரைகளில் இருந்தால் அன்பு கூந்து அதனை எனக்குச் சுட்டிக் காட்ட வேண்டுகின்றேன்.

  10. இதற்கு மேல் வேறெவரும் திரு. முத்துக்குமார ஸ்வாமிக்குப் பதில் கொடுப்பார்கள் என்று தோன்றவில்லை. அதனால் நான் அறிந்ததைச் சொல்லி முடித்து வைக்கிறேன்:

    //ஆன்மபோதம் என்னும் இந்நூலைக் கற்பதற்குரிய அதிகாரி யார்?//
    இதற்கு முதல் செய்யுளே பதிலளிக்கிறது. மற்ற கேள்விகளுக்கும் எல்லாப் பகுதிகளையும் படித்தால் விளக்கங்கள் கிடைக்கலாம்.

    //வியவகாரநிலையில் உள்ளவரா? பாரமார்த்திகத்தை அறிந்தவரா? //
    ஏன் இந்தப் பிரிவுகள்? வியவகார நிலையில் உள்ளவர் பாரமார்த்திகத்தை அறிந்திருக்கக் கூடாதா? வெறும் அறிவு மட்டும் இருந்தால் அவன் இன்னும் சாதகனே. அனுபவமும் அப்போது கூடினால் அவன் ஜீவன் முக்தன்.

    //சொப்பன நிலை…….நிலைகளையும் விளக்க வேண்டும்.//
    எல்லாம் விளக்கியாகி விட்டது. மீண்டும் படிக்க: மூன்று நிலைகளும் நிலையாதது என்று சொல்லி, நான்காவதையும் கூட்டி, அதற்கும் அப்பால் துரியாதீதம் என்று சொல்வது ரமணர் கூறுவது போல் “வேட்போர்க்கு விளம்பும் சொல்லாம்”. மற்றது நிலையாதது என்பதால் நான்கென்ன, ஐந்தென்ன? நிலைப்பது ஒன்றேயானால் துரியாதீதமும், துரியமும் ஒன்றே என்றும், இருப்பதும் அது மட்டுமே என்பார். ரமணருடைய “உள்ளது நாற்பது” படியுங்கள். இத்தளத்தில் “அறியும் அறிவே அறிவு” தொடரும் அதைச் சொல்கிறது.

    //இந்தச் சுவாபாவிகமான ஆன்மாவுக்கு மயக்க அறிவைக் கொடுக்கும் ஞானேந்திரியங்கள் என்ன் வந்தன? இவை கூடுவதற்கு முன் உயிர் அல்லது ஆன்மா அறிவோடு இருந்ததா? அறியாமையில் இருந்ததா? //
    எப்போதும் இருப்பது அறிவு ஒன்றே. அது ஒளியைப் போல. ஆனால் அது தன்னை அறியும் வரை இருப்பதாகத் தெரிவது அறியாமை. ஒளியைக் கொண்டு வரலாம். இருளை எப்படிக் கொண்டு வருவது? ஒளியை மறைத்துத்தானே?
    இருப்பது ஒன்றே என்றால், அதைப் பார்ப்பதை விட்டு மற்றவைகளைப் பற்றிக் கேள்விகள் கேட்கும் வரை எல்லாம் குழப்பமாகத்தான் இருக்கும். கேள்விகள் இல்லாமல் நீங்கள் இருக்க முடியும் அல்லவா? அந்த “நான்” எது என்னும் ஒரே ஒரு கேள்வியைத் தவிர மற்றவைகளை சற்றுத் தள்ளி வைத்து விட்டுப் பாருங்கள். இந்தக் கேள்விக்கும் இப்போதுள்ள அறிவின் துணையை நாடினால், மறுபடியும் குழப்பம்தான் வரும். ஏனென்றால் இந்தக் கேள்வியும் இல்லாமல் “நான்” இருக்க முடியும் அல்லவா?

    ஆக வியாவகாரிகமான உலகம் தெரிகிற வரை, ஆன்மா புரியாது. அதற்கு ஒரு உதாரணமாக “பூமி இங்கேதான் இருக்கிறது. எங்கே சுற்றுகிறது?” என்று கேள்வி கேட்பது போலத்தான். அதைப் புரிந்து கொள்ள நாம் பூமியை விட்டுவிட்டு ஆகாயத்தில் உள்ளவைகளைப் பார்ப்பது போல, நம்மைப் போன்றவர்களை விட்டுவிட்டு ரமணர், ராமகிருஷ்ணர் போன்ற நம் காலத்திய மகான்களையாவது பார்க்க வேண்டும். அதனால் உலகம் தெரிகிறவரை, அந்த உலகத்தில் ஈடுபட்டு, அடிபட்டுத்தான் ஆன்மாவைப் புரிந்துகொள்ள முடியும். அதுவரை கேள்விகளும் இருக்கும். கேள்விகள் கேட்பது யார் என்று தன்னையே பார்க்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வது முதல் படி.

    வாசகரின் முந்தைய கேள்விகளுக்கும் பதில் இங்கேயே இருக்கிறது என்று சொல்லி இத்துடன் நிறைவு செய்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *