ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்
27.1 சவாலுக்குச் சவால்
மிகவும் கஷ்டப்பட்டு எழுப்பி விடப்பட்டு, போர்க்களத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்ட கும்பகர்ணன் இராமராலேயே அடிபட்டு இறப்பதற்கு வெகுநேரம் ஆகவில்லை. தம்பி கும்பகர்ணன் களத்தில் இறந்துபோனான் என்று கேள்விப்பட்ட உடனே, ராவணனுக்கு போரைத் தொடர்ந்து நடத்த வேண்டுமா என்ற சந்தேகம் கூட சிறிது நேரத்திற்கு வந்துவிட்டது. அப்போது ராவணன் மற்றும் அவனது சகோதரனின் மகன்கள், தாங்களே முன்னின்று போரை நடத்தி கும்பகர்ணன் சாவிற்குக் காரணமானவர்களைப் பழி வாங்குவதாக சூளுரைத்தனர். ராவணன் மகன்களில் பலரும் ஏற்கனவே இறந்து போயிருக்கவே, அதிகயா உட்பட சிலரே எஞ்சியிருந்தார்கள்.
தன் உடன் பிறந்தவர்களின் சாவுக்குப் பழி வாங்க வேண்டும் என்று அதிகயா துடித்துக்கொண்டு இருந்தான். அவன் தேரில் ஏறிப் போர்க்களத்துக்குப் போகும் வழியிலேயே பல வானரர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டே போனான். லக்ஷ்மணன் அவனைத் தடுத்து நிறுத்தித் தன்னுடன் மோதுவதற்குச் சவால் விட்டான். போர் புரிய வக்கில்லாச் சிறுவன் என்று லக்ஷ்மணனை ஒதுக்கிவிட்டு அதிகயா போனான். மேலும் லக்ஷ்மணன் உடலைத் தன்னுடைய அம்புகளால் துளைத்து அவன் நிற்கும் பூமியை ரத்தக் களம் ஆக்குவேன் என்றும் அவன் சொல்லிக்கொண்டே போனான். வெறும் வார்த்தைப் பந்தல்களே அதிகயாவை வீரனாக்கிவிடாது என்று அதற்கு லக்ஷ்மணன் பதிலடி கொடுத்தான்.
न वाक्यमात्रेण भवान् प्रधानो ….. ।। 6.71.58 ।।
वाक्यमात्रेण, வாய்ச்சொல்லால் (மட்டுமே) भवान्, தாங்கள் न प्रधान: பிரதானமானவரில்லை.
வார்த்தை ஜாலங்கள் மட்டுமே உங்களை வீரனாக்கிவிடாது.
ஒரு சண்டையில் எதிரியை வெல்ல ஒருவனுக்கு மோதவும், கொல்லவும் அதற்கான உணர்ச்சிகள் தூண்டிவிடப்பட வேண்டும். அதனால் சவால்கள் விடப்படும் போது எதிரியின் வலிமையைப் பற்றி காரசாரமாகவும், கீழ்த்தரமாகவும் தூற்றிப் பேசுவார்கள். அதுவே அவர்களை ஆக்ரோஷமாக மோதத் தூண்டிவிடும். முன் காலத்தில் நடந்த மாதிரி இப்போதெல்லாம் எவரும் நேருக்கு நேர் மோதாததால், சண்டைக்கு முன் நடந்த நேரடியான சவால் பேச்சுக்கள் எல்லாம் இக்காலத்தில் கேட்கப்படுவதில்லை. அதெல்லாம் இலக்கியத்தில்தான் காணப்படுகின்றன. ஒரு போருக்கு முன் நாம் பத்திரிகைகள், மற்றும் ஊடகங்கள் வாயிலாகக் கேட்கும் மறைமுகத் தாக்குதல்கள் மட்டும் தான் இப்போதெல்லாம் நடக்கின்றன. போர் நடக்கும் போதோ போரின் வழிமுறைகள் தெரிந்து விடக்கூடாதே என்பதால் அவைகள் பொதுவாக இருட்டடிக்கப்படுகின்றன; அல்லது பொய்ச் செய்திகள் திரித்து விடப்படுகின்றன.
27.2 சொல்வதைச் செய்
கூடிய சீக்கிரமே அதிகயா போரில் அடிபட்டு இறந்துபோனான். அவன் இறந்ததைக் கேட்டதுமே ராவணன் மறுபடியும் தன்னம்பிக்கை இழந்து, இலங்கை நகர் வானரர்கள் கையில் சிக்குவதற்கு நாட்கள் அதிகம் இல்லை என்று உணர்ந்தான். அதனால் அவன் தன் காவல் படையிடம் இன்னும் அதிகமாகக் கவனித்துக் கண்காணிக்குமாறு சொன்னான்.
அந்த நிலையில் இந்திரனை வென்ற அவன் மகனான இந்திரஜித் தான் மறுபடி போர்க்களம் செல்வதாகச் சொன்னான். அவனுக்குப் பல ஆயுதங்களை உபயோகிக்கப் பயிற்சி இருந்ததும் அல்லாமல், அவனிடம் எவரும் எதிரே நிற்க முடியாத பிரம்மாஸ்திரம் வேறு இருந்தது. அதைச் செலுத்தி விட்டதும் அதன் முன் வேறெந்த ஆயுதங்களும் பயனும் தராது; அதைத் தடுத்து நிறுத்தவும் முடியாது. அவன் களத்தில் உபயோகித்த மற்ற எந்த ஆயுதங்களும் அவன் வேண்டிய அளவு பயன் தராமல் போகவே, கடைசி முயற்சியாக ராம-லக்ஷ்மணர்களின் மேல் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது அவர்கள் மேல் பட்டதுமே அவர்கள் மூர்ச்சையடைந்து கீழே விழுந்துவிட்டனர். அப்போது அனுமன் தக்க சமயத்தில் அருகே இருந்த மூலிகைகளைக் கொண்டுவராதிருந்தால் அவர்கள் இறந்தும் போயிருக்கலாம். அவ்வளவு சக்தி வாய்ந்த அஸ்திரத்தினாலும் அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கேட்ட ராவணன் தன் நிலைமை மோசமாகிப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்தான்.
அதற்குப் பின் அனுப்பப்பட்ட தளபதிகளும் கொல்லப்படவே, முன்பு ஜனஸ்தானில் கொல்லப்பட்ட காரா என்பவனின் மகனான மகாராக்ஷா என்பவனை ராவணன் அனுப்பினான். தன் தந்தை கொல்லப்பட்டதற்கு ராமனிடம் பழி வாங்கத் துடித்துக்கொண்டிருந்த மகாராக்ஷா களத்திற்கு வந்தவுடனே நேராக இராமரிடம் சென்று சவால் விட்டான். ராமனால் கொல்லப்பட்ட பதினான்காயிரம் அரக்கர்களுடன் சொர்க்கத்தில் சேரப் போகிறாய் என்று அவரிடம் மார் தட்டிக் கொண்டிருந்த அவனிடம் இராமர் வெறும் சொற்களே செயலாகாது; அவன் போரிட்டுக் காட்டி அதை நிரூபிக்க வேண்டும் என்றார்.
.… न रणे शक्यते जेतुं विना युद्धेन वाग्बलात् ।। 6.79.18 ।।
युद्धेन विना, யுத்தமின்றி वाग्बलात्, வாக்கு பலத்தால் (வாய்ச் சவடாலால் மட்டுமே)
रणे, போர்க்களத்தில் जेतुं, ஜயிக்க, न शक्यते, இயலாது.
சொற்களின் வலிமையால் போரில் வெல்ல முடியாது.
இராமரிடம் இருந்து வரும் இந்த அறிவுரையை நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். போர் என்று இங்கு சொல்லப்பட்டிருந்தாலும், எந்தச் செயலுக்கும் இது பொருந்தும். பொதுவாகவே ஒருவர் பேசும் பேச்சுக்கும், செய்யப்படும் செயலுக்கும் காத தூரம் இருக்கும். அந்த இடைவெளியை நன்கு குறைக்க வேண்டும் என்றால், சிறந்ததொரு முயற்சி தேவை. அதற்குத் தேவையான எண்ணம் இருந்தால்தான் அதுவும் நிறைவேறும்.
27.3 இனப் படுகொலை கூடாது
இராமரிடமே சவால் விட்ட மகாராக்ஷாவும் சண்டையில் இறந்துவிடவே, தன் சகோதரனின் மகன் இறந்ததைக் கேட்ட ராவணன் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கினான். இப்போது களத்திற்கு அனுப்புவதற்கு அவனுடைய மகன் இந்திரஜித்தைத் தவிர வேறு யாருமே அவனுக்கு இல்லை. அவன் தருவதுதான் தனது கடைசி நம்பிக்கை என்று சொல்லி இந்திரஜித்தை ராமனிடம் போர் புரிவதற்கு அனுப்பி வைத்தான். ஏற்கனவே அவன் ராம-லட்சுமணர்களிடம் மோதியிருந்ததால் அவனுக்கு அவர்களது வலிமை நன்கு தெரியும். அதனால் அவன் இம்முறை தனக்கு அவர்கள் தெரியும்படியும், ஆனால் தான் தெரியாதவாறு தன்னை புகைத் திரை போட்டு நன்கு மறைத்துக்கொண்டும் அவர்களைத் தாக்கினான். அப்படி நடந்த மறைமுகச் சண்டையில் நூற்றுக்கணக்கான வானரர்கள் கொல்லப்படவே, நேரடியாக நடக்காத இந்தச் சண்டையில் எதிரிப் பக்கம் யார் இருந்தாலென்ன, போனாலென்ன என்று எண்ணி பிரம்மாஸ்திரம் விட்டு இந்திரஜித் உட்பட எல்லோரையும் கூண்டோடு அழிப்பதற்காக லக்ஷ்மணன் இராமரிடம் அனுமதி கேட்டான். ஒரு அரக்கனை அழிக்க எல்லோரையும் கொல்வது கூடாது என்று சொல்லி இராமர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
नैकस्य हेतो रक्षांसि पृथिव्यां हन्तु मर्हसि । …… 6.80.39 ।।
एकस्य, (ஒரே) ஒருவன் (ஒரு ராக்ஷசன்), हेतो, பொருட்டு, पृथिव्यां, பூமியில்,
रक्षांसि, (உள்ள அனைத்து) ராக்ஷசர்களையும், न हन्तुं अर्हसि, கொல்லுதல் தகாது.
ஓர் அரக்கனைக் கொல்ல வேண்டும் என்ற உன் எண்ணத்திற்காக ஓர் இனத்தையே பூண்டோடு அழிப்பது நியாயமல்ல.
இனப் படுகொலை என்பது சரித்திரத்தின் பக்கங்களில் அகற்றமுடியாத ஒரு கறையே. அதைச் செய்பவர்கள் எதிரிகளைத்தான் நாங்கள் குறி வைக்கிறோம், ஆனால் அவர்களோ தங்களைச் சேர்ந்த பாமர மக்களைக் கேடயமாக பயன்படுத்தி தப்பி விடுகிறார்கள் என்று அதற்கு ஒரு சாக்கு சொல்கிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும் இராமரைப் பொருத்தவரை இனப் படுகொலை தவிர்க்கப்பட வேண்டியதே.
27.4 போரில் பின்வாங்காதே
புகைத் திரையினூடே மறைந்துகொண்டு தாக்கும் இந்திரஜித்தை எப்படியும் வெளியேகொண்டு வந்து வீழ்த்துவதில் இராமர் மும்முரமாக இருந்தார். அவரது தீர்மானத்தை உணர்ந்த இந்திரஜித் அதைப் பலவீனப்படுத்தும் முகமாக, தனது மாய சக்தியால் சீதையைப்போல ஒரு பெண்ணை உருவாக்கி அவளைத் தலை மயிரால் பிடித்து இழுத்து வானரர்கள் முன்னே அவர்கள் பார்க்கும்படி கொண்டு நிறுத்தினான். வானரர்களுக்கு அவள் உண்மையான சீதைதான் என்று தோன்றியதால், மூர்க்கமாக அவளைக் கொடுமைப்படுத்துவதைப் பார்க்க சகிக்கவில்லை. எல்லோரும் கேட்கும்படியாக உரத்த குரலில் தான் அவளை அவர்கள் கண் முன்னேயே கொல்லப்போவதாகவும், அவள் சாவோடு வானரர்கள் சண்டை போடும் காரணமும் இல்லாது போய்விடும் என்று அவன் மேலும் சொன்னான். சொன்னதும் அல்லாமல் ஒரு வாளை எடுத்து மாய சீதையை இரண்டு துண்டமாக வெட்டிப்போட்டான். அந்தக் கோரக் காட்சியைக் கண்ட வானரர்கள் மனமொடிந்து போய், தாங்கள் வந்த காரியம் வெற்றி பெறவில்லை என்று நொந்துபோய் போர்க்களத்தை விட்டுப் புறப்பட ஆயத்தமானார்கள்.
அரக்கர்களின் மாயா ஜாலத்தை நன்கு உணர்ந்த அனுமான் இந்திரஜித் செய்ததைப் பார்த்து ஏமாறவில்லை. அங்கிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்த வானரர்களை மீண்டும் ஒன்று திரட்டி, எந்தக் காரணத்திற்காகவும் தைரியமுள்ள வீரர்கள் போரில் புறமுதுகு காட்டிப் பின்வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தினான்.
.… शूरैरभिजनोपेतैरयुक्तं हि निवर्तितुम् ।। 6.82.4 ।।
शूरै अभिजनोपेतै: சான்றோர்களோடு (கூடிய) சூரர்களுக்கு ( அதாவது உனக்கு)
निवर्तितुं, பின் வாங்குதல் अयुक्तं हि, அழகல்ல.
உங்களைச் சார்ந்த உங்கள் குடும்பத்தினர்கள் அவமானப்படுவார்கள்; நீங்கள் போரில் பின்வாங்கக் கூடாது.
போரில் படையினரை ஏமாற்றிப் பின்வாங்கச் செய்ய கண்கட்டு வித்தைகள், வதந்திகள், பொய்ச் செய்திகள் என்று பல வழிகளிலும் முயற்சி செய்வதுண்டு. சண்டையில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு அதைரியம் பரவுமானால், அவர்களுக்கு போர்த் தலைவன் ஊக்கமூட்டி உற்சாகப்படுத்த வேண்டும். இங்கு வீரர்களுக்கு அவர்களின் பின்னடைவால் அவரவர் சுற்றங்களை எப்படி பாதிக்கும், அதனால் இவர்களைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சொல்லி அனுமான் ஊக்கப்படுத்துகிறான்.
27.5 செயல்களும் அதன் விளைவுகளும்
மாய சீதை என்று அறியாமல், சீதைக்கு நேர்ந்த கதியைக் கேட்டதும், அதைத் தாங்க முடியாமல் இராமர் மயங்கிக் கீழே சாய்ந்தார். லக்ஷ்மணனும், வானரர்களும் அவர் முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளித்ததும் அவர் மயக்கம் நீங்கி நினைவுக்கு வந்தார். அப்போது அவன் அவர்கள் இருக்கும் அந்த நிலைக்கு இராமரின் கோட்பாடான தர்ம வழிகளைப் பின்பற்றுவதே காரணம் என்று சொன்னான். அப்படி இருந்ததனால்தான் தந்தையின் கௌரவத்தைக் காப்பாற்ற என்றே அயோத்தியின் அரசுரிமையையும் விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. இப்போது செல்வங்கள் ஏதும் இல்லாது, வனத்தில் வாழவேண்டி வந்து, அரக்கர்களும் அவர்களை நாடோடிகள் என நினைத்து, அதனால் எப்படி வேண்டுமானாலும் துன்புறுத்தலாம் என்ற நிலை வந்திருக்கிறது என்றான். முதலில் அரக்கர்களது தொல்லை, பின்பு சீதை கடத்தப்படுவது, அதனால் அவர்களுடன் போர், இப்போது வானரர்கள் முன்னால் சீதை கொல்லப்பட்டது என்றெல்லாமே அதனால் வந்த அடுக்கடுக்கான துன்பம் என்றான்.
தர்மத்தின்படி வாழ்தல் என்பதற்கு உண்மையான அடிப்படை எதுவும் கிடையாது என்றும், அதைக் கண்ணால் பார்க்கவும் முடியாது, மனத்தால் அறியவும் முடியாது என்றும் சொன்னான். வேதங்களும் அப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதில்லை, வாழ்க்கை முறைகளும் அப்படி இருப்பதுதான் நல்லது என்று காட்டுவதும் இல்லை. அதனால் தர்மத்திற்குப் பதிலாக ‘அர்த்தம்’ எனப்படும் செல்வம், பொருள் என்றவைகளை முக்கியமாகக் கருதி, அதன்படி ஒருவன் வாழ்ந்தால் அவனுக்கு வேண்டிய செல்வங்களும், பதவி, புகழ் மற்றும் பலவிதமான சொத்துகளும் சேர்ந்து அவன் சுகமான வாழ்க்கை வாழ உதவும் என்றான்.
अर्थेभ्यो हि विवृद्धेभ्यः संवृत्तेभ्यस्ततस्ततः ।
क्रियाः सर्वाः प्रवर्तन्ते पर्वतेभ्य इवापगाः ।। 6.83.32 ।।
संवृत्तेभ्य: विवृद्धेभ्य: வளர்ந்துவரும் अर्थेभ्य: हि, பொருள் செல்வத்தால் (செல்வம் காரணமாக) ततस्तत: மேலும் மேலும் पर्वतेभ्य: மலைகளிலிருந்து आपगा:நதிகள் इव, (தோன்றுவது) போல் सर्वा: அனைத்து क्रिया: கர்மங்களும் प्रवर्तन्ते, தோன்றுகின்றன.
மலையிலிருந்து அருவிகள் புறப்படுவதுபோல செல்வத்திலிருந்தே செயல்கள் உருவாகின்றன.
எப்படி நீதியுடனும் நேர்மையுடனும் ஒருவன் வாழ்ந்தால் அவனுக்கு வாழ்வில் எல்லாவித நன்மைகளும் கிடைக்கும் என்று உறுதி கொடுக்க முடியாதோ, அப்படியே அதற்கு நேர் மாறாக ஒருவன் வாழ்ந்து கொண்டிருந்தால் அதற்குரிய தண்டனைகள் அவனுக்குக் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் நல்லவர்கள் வாழ்வில் கஷ்டப்படுவதையும் தீயவர்கள் நன்றாக வாழ்வதையும் நம் கண் முன்னாலேயே பார்க்கிறோம். அதனாலேயே தர்மத்தின்படி வாழச் சொல்லும் அறிவுரையை லக்ஷ்மணன் ஒரு கேள்விக்கு உரியதாக்குகிறான்்.
வாழ்வில் நடக்கும் பல நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு, நாம் இப்படி நல்லதனமாக இருந்ததனால் இந்த நன்மைகள் கிடைத்தன என்றோ, அல்லது இந்தத் தீயச் செயல்களால் இந்தத் தீமைகள் விளைந்தன என்றோ ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தித் திட்டவட்டமாகக் கூறமுடியாது. வாழ்வில் நடப்பன எல்லாம் ஒட்டுமொத்தமாக நடப்பதும், நம் செயல்களின் விளைவுகளும் பூவா தலையா ஆட்டத்தின் முடிவுகள் போல அமைவதுமாக இருப்பதால், நம் செயல்களையும் அதன் விளைவுகளையும் ஒன்றுக்கு வேறாக தாறுமாறாகத் தொடர்புபடுத்திச் சொல்ல முடியும். ஓர் உதாரணத்திற்கு வியாதியை குணப்படுத்தும் என்று நாம் எடுத்துக் கொள்ளும் மருந்து, பொதுவாக அப்படிப் பலருக்குச் செய்திருந்தாலும், நம் வியாதியைக் குணப்படுத்தாமலும் இருக்கலாம், தீவிரமாகவும் ஆக்கலாம். தர்மப்படி வாழ்வதும் அதைப் போன்றதே. செய்யப்படும் செயல்களின் விளைவுகள் இப்படித்தான் என்று அறுதியிட்டுக் கூறப்பட முடியாமல் எப்படியும் இருக்கலாம் என்பதே உண்மை. எப்போது செயலுக்கான விளைவுகள் சரியாகத் தெரியாதோ, அதற்காக தர்மப்படி வாழ்தல் அவசியம் இல்லை என்று கூறுவது சரியல்ல.
எதையும் நிச்சயமாகக் கூறமுடிய வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு மாயை. அதாவது அதை ஒருவனுடைய மனத்தில் உருவானது, அல்லது அவன் எதிர்நோக்குவது என்று கொள்ளலாமே தவிர உண்மையானது என்று கொள்ளமுடியாது. அதனால் செயல்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட விளைவுகளை உலகில் எதிர்பார்ப்பதும் உண்மைக்குப் புறம்பானது. விளைவுகள் எப்படியும் இருக்கலாம் என்று கொள்வதே உண்மை நிலை. அதனால் ஒன்று செய்யும்போது, இவர் அவர் என்றில்லாமல் பலருக்கும் நன்மைகள் விளையவேண்டும், விளையும் என்று எண்ணிச் செய்வதுதான் சரியான ஒரே வழி.
அதற்குத்தான் ஒருவர், ஒரு சிலர் என்றில்லாமல் பலரையும் கலந்து ஆலோசித்து அதன்படி நடப்பது பயன் கொடுக்கும். அதுதான் தர்மத்தின் பாதை. அந்த வழியில் செல்வதா அல்லது அதர்மப் பாதையில் செல்வதா என்பது அவரவர் முடிவு செய்யவேண்டியதே. ஏனென்றால் எந்த வழியில் செல்வார்களோ அதற்குண்டான பலன்களை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். அப்போது செய்ததைப் பற்றிப் பேசுவது எந்தப் பயனையும் தராது. செய்த செயலுக்கு விளைவுகள் தொடர்ந்து கொண்டிருக்கும், அதை மாற்ற இயலாது.
(தொடரும்)
திரு ராமன் அவர்களுக்கு,,அற்புதமாக உள்ளது..தொடர்ந்து எழுதவும்.ஸ்ரீ ராமனின் அருள் பூரணமாக கிடைக்க வாழ்த்துகள். நன்றி. சுரேஷ்.மொசாம்பிக்.
இராமன் என்றாலே பிறன் மனை நோக்கா பெருந்தகையாளன் , தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற மூதுரையின் படி, தான் சூட வேண்டிய மணிமுடிக்காக யாருடனும் போரிடாமல் , பதினாலு வருடங்கள் கானகம் ஏகிய செம்மல். அவருக்கு ஈடு சொல்ல அவர் காலத்தில் யாரும் ஒப்போ , ஈடோ இல்லை. பிற்காலத்தில் எவ்வளவோ மகரிஷிகள் பிறந்த இந்த பூமியில், அவர் காலத்தில் அவருக்கு ஈடாக எந்த ரிஷியும் இருந்ததில்லை. ஒரு ராஜ ரிஷியாக அவர் விளங்கினார்.
இந்த கட்டுரை தொடரை எழுதும் மதிப்பிற்குரிய திரு எஸ் ராமன் அவர்களின் பணி மேலும் மேலும் சிறக்க எல்லாம் வல்ல தந்தைக்கு உபதேசம் செய்தான் திருத்தாளை வணங்குகிறேன்.
ஆங்கிலத்தைப் பார்த்து எழுதியதனால் சில ராட்சசப் பெயர்கள் தவறாக வந்துள்ளன.
//அதிகயா // அதிகாயன்
// காரா // கரன்
// மகாராக்ஷா // மகராக்ஷன்
தமிழ் / ஹிந்தி ராமாயணப் புத்தகங்களை ஒப்பு நோக்கி எழுதினால் இப்பிழைகளைத் தவிர்க்கலாம்.
கம்பனில் கரன் வதைப் படல்ம் (ஆரண்ய காண்டம்), அதிகாயன் வதைப் படலம் & மகரக் கண்ணன் வதைப் படலம் (யுத்த காண்டம்) உண்டு.
தொடரை வரவேற்கும் மற்றும் மறுமொழி கூறும் அன்பர்களுக்கு மிக்க நன்றி. விரைவில் இது புத்தக வடிவில் அச்சேற இருக்கிறது என்பதை அதை முன்பே வரவேற்றவர்களுக்கும் சேர்த்துக் கூறிக்கொள்கிறேன்.
// “ஆங்கிலத்தைப் பார்த்து எழுதியதனால் சில ராட்சசப் பெயர்கள் தவறாக வந்துள்ளன.
//அதிகயா // அதிகாயன் ……..” //
தவறு என்று சொல்ல முடியாது. பெயர்கள் தமிழ்ப்படுத்தப்படவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். “ராம்” என்ற பெயர் என்றுமே ராம் தான், அவன் தமிழ் நாட்டில் பெயரிடப்பட்டால் வேண்டுமானால் ராமன் ஆகலாம் என்பது என் எண்ணம். உண்மைதான், வேறெந்த பதிப்புகளையும் பார்த்து எழுதவில்லை. இத்தொடர் முழுவதும் அமெரிக்காவில் இருந்தபோது எழுதப்பட்டது. பெயர்களுக்காக தொடர்புடைய இணைய தளங்களைப் பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. What is there in a name என்று இருந்துவிட்டேன்.
திரு ஜடாயு அவர்களின் கருத்து ஏற்புடையது.
“தமிழ் / ஹிந்தி ராமாயணப் புத்தகங்களை ஒப்பு நோக்கி எழுதினால் இப்பிழைகளைத் தவிர்க்கலாம்”.
தமிழ் இலக்கணம் சமஸ்கிருதப்பெயர்களை எப்படி தமிழாக்குவது என்று விதிப்பதை பின்பற்றியே கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமாவதாரப் பாத்திரங்களின் பெயர்களையும் வில்லிபுத்தூரார் மஹாபாரதத்தையும் தமிழில் தந்தனர். அந்த தமிழ் மரபை நாம் பின்பற்றிக் காத்தல் வேண்டும்.
ஸ்ரீ ராம் என்பது தமிழில் இராமன் எனப்படுவதுவே முறை அது போலவே அதிகாய் என்பது அதிகாயன் என்றும் கர் என்பது கரன் என்றே தமிழில் வழங்குகிறது. அது தொடரட்டும். ராம் என்ற சொல்லுக்கு பொருளாக எழில் எழிலன் என்றும் க்ருஷ்ண் என்பது கண்ணன் என்று வழங்க்குவதுவும் ஏற்புடையதே.
சிவஸ்ரீ.