பாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1

இன்று (பிப்ரவரி 21) உலகத்தாய்மொழி தினம். தமிழன்னையை வணங்கிப் பணிந்து இத்தொடரை ஆரம்பிக்கிறேன்.

கார வேலர் கல்வெட்டும், தமிழ் மன்னர்களின் விவேக கூட்டணியும்..

என் தேசத்தின் சகல பரிமாணங்களை உணரவும், இதன் கலாச்சார பன் முகத்தன்மையை தரிசிக்கவும், வளமான இந்த ஞான விளை நிலத்தின் விரிவை உள்வாங்குவதற்காக பாரதத்தின் சகல பகுதிகளுக்கும் சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் , கால் நடையாகவும் பயணித்து உணர்ந்த என் அனுபவங்களை இனி வார வாரம் பாரத தரிசனம் என்ற வகையின் கீழ் பதியத் துவங்குகிறேன். கடந்த ஒராண்டில் ஏறத்தாழ 23,500 கிலோமீட்டருக்கும் மேல் பாரதம் முழுக்க என் பயணம் விரிந்தது. இதன் கலாச்சார வளமையும், நாகரீகமும், தொன்மையும், அறிவு செழித்து பல்கி பெருகி விரிந்த இடங்களையும், இயற்கை அன்னையின் பெருங் கருணையையும், பண்பாட்டு உச்சங்களையும், கவின் கலையின் பிரமிப்புகளையும், வரலாற்றுத் தடங்களையும், தருணங்களையும், மட்டுமின்றி பாரதத்தின் ஒருமித்த பேருருவை கண்டடைந்த பெருமித கணங்களை பதியத்துவங்குகிறேன். ”ஒன்று தான் நம்ம நாடு ஒன்று தான் என் பாரத நாடு” என்று மனப்பூர்வமாக உணர்ந்த  நிகழ்வுகளை உங்கள் முன் வைக்கிறேன்.

DSC01409

இந்த தேசத்தின் ஞான கொடைகளான சமணமும், பெளத்தமும் தழைத்தோங்கிய பகுதிகளிலும், அறிவும், ஆன்மீகமும் , ஞானமும் பெருக்கெடுத்து ஓடிய புண்ணிய இடங்களிலும் ஞானம் முகிழ்ந்து மணம் பரப்பிய விகாரங்கள், பல்கலைகள் , குடைவரைகள் மாபெரும் பெளத்த கல்வி நிறுவனங்கள் அருகர்களும், ததாதகரின் வழி வந்தவர்களும் சென்ற வழி தடத்திலும் பயணித்த என் அனுபவங்கள் மறக்க முடியாதவை.

இந்த தேசத்தின் கலாச்சாரத்தை அழித்து பெரும் நாசங்களை விளைவித்த இஸ்லாமிய கொள்ளையடிப்புகள், பேரழிவுகள். மானுட குலத்தின் மகத்தான நுண்கலை சிற்பங்கள், படைப்பின் உச்சகட்ட வெளிப்பாடுகள். இயற்கையின் உன்னதமான காட்சி அனுபவ சாட்சிகள். பழங்குடிகள், பல்வேறு பாரத மண்ணின் மகத்தான மன்னர்களின் கொடைகள். ஆட்சித்திறம், நிகழ்கால மாவோயிஸ்ட் போன்ற கொடுமைகள். கற்பனைக்கு எட்டாத இயற்கையின் சிற்பங்கள், நிலவியல் காட்சிகள். மக்களின் மாண்புகள், பாரத பண்பாட்டின் கூறுகள், தர்மம், பல வகையான உணவு வகைகள் இவைகளைப்பற்றிய ஒரு கலவையான தொகுப்பாக இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இந்த பயணங்களின் போது என்னை வழி நடத்தியும், கற்பித்தும் பார்க்க கற்றுக்கொடுத்துக்கொண்டும் வந்த என் ஆசானும்,ஞான தகப்பனுமாகிய ஜெயமோகன் அவர்களை பணிந்து முன் செல்கிறேன்.

ஹத்திகும்பா கல்வெட்டும், பாண்டிய மன்னர்களின் தீரமும்:

udaya02பாரத தரிசனத்தின் ஒரு பகுதியாக நான் ஒரிஸ்ஸாவின் புவனேஸ்வருக்கு அருகில் இருக்கும் கந்த கிரி, உதய கிரி என்ற இரட்டை மலைகள் உள்ள இடத்திற்கு சென்றேன். நெரிசல் மிகுந்த புவனேஸ்வரின்  நகர்மையத்தில் இருக்கிறது. தமிழகத்தின் மிக மிக முக்கியமான பாரம்பரியத்தை, அரசாட்சியை ,மன்னர்களின் வீரத்தை பறை சாற்றும் சான்றாவணம் இது.  நகரத்தின் பெரிய வளர்ச்சிக்கு நடுவே உறைந்து போன வரலாறாக நிலைத்து இருக்கிறது இது. இந்த இரட்டை மலைகள் குமரி பர்வதம், குமார பர்வதம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கலிங்கம் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் கிடைக்கப்பெற்று அவை ஆவணப் படுத்தப் பட்டுள்ளன.

சேதிபர்கள் என்ற சொல் குறிக்கும் அரச பரம்பரையை சேர்ந்தவராக காரவேலர் இருக்கலாம் என்பது கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் கருத்து . சேதிப குலம் என்பது மகாபாரதத்தில் சிசுபாலன் வம்சம். சேதிப மன்னர்களின் வாரிசுகள் கடையெழு வள்ளல்களில் இடம் பெறும் திருக்கோவிலூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த மலையமான்கள் . நெடுமான் அஞ்சியும், திருமுடிக்காரியும்  நடு நாட்டு அரசர்கள்,சேதிகுலத்தோர். வரலாற்றால் பிந்திய இவர்கள் காரவேலனின் படையெடுப்புக்கு பின்பு தாய் வழியிலோ, தந்தை வழியிலோ தொடர்ந்த அரச வம்சமாக இருக்கலாம். இன்றும் தமிழக சாதிகளில் சேதிராயர் என்ற பட்டம்  நாடார் மரபில் உள்ளது. நாடார்கள் சந்திர குலத்தவர்கள். சிசுபாலன் சந்திர குல மூத்தோன். பாண்டியர்களும் தாங்கள் சந்திர குலத்தை சேர்ந்தவர்கள் என்று பிரகடனம் செய்தவர்கள். மகாபாரதத்தில் பாண்டியர்கள் பற்றிய குறிப்புகள் இவர்களின் சந்திர குல வமிசத் தொடர்புக்கு வலு சேர்ப்பதாக கொள்ளலாம்.

udayagiri01கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட சேதிப அரசர் “மகா மேக வாகன காரவேலர் ” என குறிக்கப்படும் காரவேலர் தன் படையெடுப்பை பற்றியும்,திக் விஜயம் பற்றிய மெய்கீர்த்தியை குமரி பர்வதம், குமார பர்வத (இன்றைய கந்தகிரி- உதய கிரி) குன்றுகளில் உள்ள ஹாத்தி கும்பா பாறைக்குடைவுகளில் பிராகிருத மொழியில் ,பிராமி லிபியில் கல்வெட்டாக பொறித்திருக்கிறார். இது 17 வரிகளைக்கொண்ட ஒரு வரலாற்று மெய்கீர்த்தி ஆகும். இதில் தமிழகம் தொடர்பான 2 முக்கிய குறிப்புகள் உள்ளன. 11 ஆம் வரியில் உள்ள த்ரமிள தேச சங்காதம் என்ற குறிப்பு. எபிகிராஃபிகா இண்டியாவின் தேவநாகரி மொழி வடிவமும், ஆங்கில மொழி பெயர்ப்பும் –

”/11ம் வரி –
कलिंग पुवराज निवेसितं पिथुडं गधवनंगलेन कासयति [।।] जनपद भावनं च तेरसवस
सत कतं भिदति *तमिर देह संघातं* [।।] बारसमे च वसे ….. वितासयति उतरापध
राजनो [ततो]

(L.11) ……………… And the market-town (?) Pithumda
founded by the King of Ava he ploughs down with a plow of asses, and
(he) thoroughly breaks up the Confederacy of the T [r] amira (Dramira)
Countries of one hundred and thirteen years, Which has been a source
of danger to (his) Country (Janapada). And in the twelfth year he
terrifies the kings of the Utarapatha with ………………

’தேரஸவஸ ஸதம்’ என்பது த்ரயோதசவர்ஷ சதம் என்பதிலிருந்து வந்ததாகலாம்.

த்ரயோதச சதம் –> பதின்மூன்று நூறு (1300)
த்ரயோதசம் + சதம் -> 100 + 13
இக்கூட்டணி நீடித்த காலத்தை 1300  ஆண்டுகள், 113 ஆண்டுகள் என
இருவிதமாகக்  கருதுகின்றனர்.”

 

 ins01இதில் தேரஸ வஸ என்பது 113 ஆண்டுகளையே குறிப்பதாக சொல்கிறார் தமிழகத்தின் முக்கியமான மூத்த கல்வெட்டு ஆய்வாளரும்,தமிழ் அறிஞரும், மொழியியல் வல்லுனருமான திரு. எஸ்.ராமச்சந்திரன். 113 ஆண்டுகளாக நீடித்த த்ரமிர தேச மன்னர்களின் கூட்டணி தன் அரசாட்சிக்கும், மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியதாக எண்ணிய காரவேலர் அவர்கள் மீது படையெடுத்து வென்றதாக பதிவு செய்கிறார். இந்த கல்வெட்டின் ஆண்டு பொது ஆண்டுக்கு முன் 172 (கி.மு.172) அதாவது கி.மு.285 முதல் நீடித்து நிற்கும் த்ரமிள தேசத்து மன்னர்களின் கூட்டணி என காரவேலர் சொல்கிறார்.  மொழியின் அடிப்படையில் அமைந்த முதல் வரலாற்று கூட்டணி என இதை கொள்ளலாம். இந்த கூட்டணியைப்பற்றி பாரத தேசமெங்கும் விரவி நிற்கும் அசோகரின் கல்வெட்டுக்களில், “நான் சோடச பாண்ட்ய மன்னர்களை போரால் அல்லாமல் தர்மத்தால் வென்றேன்” என குறிப்பிடுகிறார். இதை நாம் போரினால் அல்லாமல் பெளத்த தம்மத்தை இங்குள்ள மக்களையும், மன்னர்களையும் ஏற்றுக்கொள்ளச்செய்ததன் மூலமாக வென்றதாக கொள்ளலாம். அசோகரோ, மெளரியர்களோ தமிழக மன்னர்களை வென்றதாக எந்த வரலாற்று குறிப்புகளும் இல்லை. சந்திர குப்த மெளரியரின் மகனான பிந்து சாரனோ (கி.மு.298 – 272) பிந்து சாரானின் மகனான அசோகனோ (கி.மு 268-232) வெல்லவே முடியவில்லை என பதிவு செய்கிறார்கள். பிந்து சாரனின் காலமும் தமிழகத்து மன்னர்களின் கூட்டணி அமைந்து வடவர்களை எதிர்த்து போரிட்டு வென்றதாக ஊகிக்கும் காலமும் கன கச்சிதமாக பொருந்தி வருவதை பார்க்கலாம். அப்போதைய மெளரியபேரரசு தமிழகம் தவிர்த்து பாரதம் முழுக்க விரவி இருந்தது (ஆதாரம் : மெளரிய பேரரசு:பிந்து சாரன் https://en.wikipedia.org/wiki/Bindusara). இது தொடர்பாக இலக்கிய சான்றுகள் பற்றிய குறிப்புகளை பார்க்கலாம்.

தமிழகம் தவிர்த்து பாரதம் முழுக்க பரவியிருக்கும் மெளரிய அரசு
தமிழகம் தவிர்த்து பாரதம் முழுக்க பரவியிருக்கும் மெளரிய அரசு

திருவிளையாடல் புராணத்தில் மெய் காட்டிட்ட புராணத்தில், வட புலத்திலிருந்து படையெடுத்து வந்த சேதிபன் என்ற கிராதர் கோமானை (கிராதர் என்று மலைக்குறவர்களை குறிப்பிடுவதுண்டு) கொந்தக வேளாளர் குலத்தை சேர்ந்த பாண்டிய படைத்தலைவன் சுந்தர சாமந்தன் எதிர் கொள்வதாக குறிப்பிடப்படுகிறது. சாமந்தனுக்காக இறைவனே மாயம் நிகழ்த்திய கதை. இது காரவேலனின் படையெடுப்பு தொடர்பானதாக இருக்கலாம் எனச்சொல்லும் ராமச்சந்திரன் சாரின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். மேலும் பி.டி.சீனிவாச அய்யங்காரும் தன் ”History of the Tamils: From the Earliest Times to 600 Ad” நூலில் பாண்டியர்களின் செல்வ வளம் எப்படி அனைத்து மன்னர்களையும் ஈர்த்தது என்பது பற்றி குறிப்பிடுகிறார். பாண்டிய மன்னனின் செல்வ வளத்தையும், தான் பாண்டிய மன்னனிடமிருந்து பெற்று வந்த முத்துக்கள், ரத்தினங்கள்,பரல்கள் பற்றியும் ஹத்தி கும்பா கல்வெட்டில் 13 ஆம் வரியில் காரவேலர் குறிப்பிடுகிறார்.

13 ஆம் வரியில் குறிக்கப்படும் பிராகிருத பிராமியின் ஆங்கில மொழியாக்கம்.

 (L. 13) …………….. (He) builds towers with excellent 
interiors and carved Creates a settlement of a hundred Masons, giving 
Them Exemption from land revenue. And a wonderful and marvelous 
enclosure of stockade for driving in the elephants (he) …… and 
horses, elephants, jewels and rubies as well as Numerous pearls in 
hundreds (he) Causes to Be Brought here from the Pandya King.  

 karavela 01

பாண்டிய அரசனிடமிருந்து பெற்று வந்த யானைகள், குதிரைகள், நகைகள், மாணிக்கங்கள், முத்துப்பரல்கள் இவற்றை கொண்டு மிகச்சிறப்பான உள் தோற்றம் உடைய, பெரிய அரண்மனையை அலங்காரமாக ஏற்படுத்தினான். பணி செய்த சிற்பிகளுக்கும், கட்டுமான பணியாளர்களுக்கும் வரி விலக்கு அளித்தான். இதன் மூலம் கார வேலன் அறுதியிட்டு தெரிவிப்பது என்னவெனில் கி.மு. 285 லிருந்து 113 ஆண்டுகளாக நீடித்து வரும் பலமான தமிழ் தேச மன்னர்களின் கூட்டணியை வெற்றிகரமாக உடைத்து செல்வ வளம் மிக்க பாண்டிய மன்னரிடமிருந்து பெருமளவிலான முத்துக்களையும், ரத்தினம் ,மாணிக்கம் உள்ளிட்ட அரிய கற்களையும், யானை, குதிரை உள்ளிட்ட வளமான பெரும் பரிசில்களையும் பெற்று வந்து தன் சொந்த அரண்மனையை அலங்கரித்தான். இதில் காரவேலன் சொல்ல வருவது முதல் வரியில் நந்த வம்சத்தவர்கள் எடுத்து சென்ற ஆதிநாதரை மீட்டு வந்தது. பெரிய மெளரிய வம்ச சக்ரவர்த்திகளாலேயே வெற்றி கொள்ள முடியாத தீரமிக்க தமிழ் மன்னர்களை திரை செலுத்த வைத்தது ஆகியவை தன்னுடைய மிகப்பெரிய சாதனைகள் என தெரிவிக்கிறார். தான் மெளரிய சக்ரவர்த்திகளை விடவும் முக்கியமான வெற்றிகளை ஈட்டியவன் என்ற பெருமையை கோருகிறார். மேலும் காரவேலன் அவத் (அயோத்தி) பிராந்தியத்துடன் போரிட படையெடுக்கிறான், ஆனால் அதற்கு முன் மகதத்தை ஆக்கிரமிக்க வரும் கிரேக்க டிமிட்ரியஸை எதிர்த்து போரிட்டு அவனை காந்தாரத்துக்கே பின் வாங்க செய்கிறான். (https://en.wikipedia.org/wiki/Kharavela ).ஆனால் தமிழ் தேசம் காரவேலனின் அரசாட்சியில் இல்லை . அதற்கு பதிலாக மிகப்பெரிய செல்வத்தை பரிசிலாக பெற்றுக்கொண்டு பாண்டிய அரசாட்சியையே தொடரச்சொன்னதாக கொள்ளலாம்.
 

காரவேலரின் அரசு (தமிழகம் சுதந்திர அரசாகவே தொடர்கிறது)
காரவேலரின் அரசு ( தமிழகம் சுதந்திர அரசாகவே தொடர்கிறது.)

இப்படி சொல்வதற்கு சங்க இலக்கிய சான்றுகள்,புறச்சான்றுகள், அகச்சான்றுகள், தொல்லியல் சான்றுகள் புராண சான்றுகள் உள்ளனவா? என்று பரிசீலிக்கலாம். கி.மு 172 கால கட்டத்தில் ஆட்சியில் இருந்த பாண்டியன் யார் என்பதை பற்றிய ஊகங்கள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை குறிப்பதாக கொள்ளலாம்.

ஆரியப்படை கடந்த என்ற பட்டப்பெயர் ஆரியப்படையை சமாளித்த, எதோ ஒரு வகையிலான உடன்படிக்கை கொண்டு போரை தவிர்த்த என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளதாக கொள்ளலாம். மேலும் சிலப்பதிகாரத்தில் ”வடவராரியர் கடந்த நெடுஞ்செழியன் காலத்திய காவிய தலைவி தானே கண்ணகி”. சிலம்பு எழுதப்பட்டது பிற்பாடு என்றாலும் அது சுட்டுவது கி.மு.2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த காலகட்டத்தையே எனக்கொள்ளலாம். மேலும் கி.மு.2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மீனாட்சி புரம் தமிழ் கல்வெட்டு குறிப்பிடுவதும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைத்தான். தமிழ் பிராமி கல்வெட்டுக்களில் தெளிவாக ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை பற்றிய குறிப்புகளை கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் விளக்கமாக எழுதி இருக்கிறார்.
 
மேலும் சங்க காலத்திற்கு முன் கோலோச்சிய தமிழ் பாண்டிய மன்னர்களின் வரலாறு மற்றும் அதன் சார்புடைய செய்திகள். கி.மு 4 ஆம் நூற்றாண்டில் இண்டிகா எழுதிய மெகஸ்தனீஸ் பாண்டிய நாட்டில் பெண் ஆட்சி புரிந்ததாக பதிவு செய்கிறார். மெளரியர் காலத்து அர்த்த சாஸ்த்திரத்தில் பாண்டிய கவாட முத்து என்ற சிறப்பு குறிப்பு உள்ளது. “பாண்டிய நாடு முத்துடைத்து“ என்ற குறிப்பை நினைவில் இருத்திக்கொள்ளலாம். கி.மு.3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அசோகர் கல்வெட்டில் தான் வெற்றி பெற முடியாத மன்னர்களின் பெயர்களை குறிப்பிடுகையில் பாண்டிய(பாண்ட்ய), சோழ (சோட), சேர (கேரளபுத்ர),சத்ய புத்ர என குறிக்கிறார். சங்க இலக்கியத்தில் மெளரியரின் படையெடுப்பை பற்றிய குறிப்பு இருக்கிறது. மெளரிய பிந்து சாரனின் படையெடுப்பு மற்றும் சாம்ராஜ்ய விஸ்தீரணத்திற்கு எதிரானதாகவே த்ரமிர தேச தமிழ் மன்னர்களின் கூட்டணி ஏற்பட்டிருக்கும் என ஊகிக்க இடமளிக்கிறது. திணை கோட்பாடு, தமிழ் மொழியின் தோற்றம் வளர்ச்சி பரவல் பற்றி ஆராயும் மானுடவியலாளர்கள், மொழியியல் வல்லுனர்களுக்கு தமிழக கலிங்க உறவுகளும் ஹாத்தி கும்பா கல்வெட்டுகளும் மிகப்பெரிய புதையலாகும்.வரலாற்று தொடர்ச்சியை அறிவதற்கு பாரதத்தின் தொன்மையான பல்வேறு இனக்குழுக்களையும்,மொழிகளையும் அவர்களின் புலப்பெயர்வையும் பரவலையும்  நுணுகி ஆராய்தல் மிக முக்கிய தேவையாகும். 1820 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் ஆய்வாளரான A.STIRLING இந்த கல்வெட்டை கண்டு அறிந்தார்.பின்னர் 1878ல் கன்னிங்ஹாம் இதனை பிராகிருதத்திலும், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பதிப்பித்தார். ஆனால் இன்று வரை தமிழுக்காக உயிரை கொடுப்பேன் என்று முழங்கும் திராவிட கட்சியினர் இது பற்றி அறியாமல் வழமை போல் மூடப்பதராக இருக்கிறார்கள். ஹாத்திகும்பா எனும் யானைக்குகையின் கல்வெட்டுக்கள், பாரத வரலாற்று ஆபரணத்தில் மிளிரும் ஒரு வைரம் என்ற பெருமிதத்தோடு மேலும் அது தொடர்பான குகைகளையும், குடை வரைகளையும் பார்க்க சென்றேன்.

(தொடரும்…,)

மேலதிக விபரங்களுக்கு:

https://blog.mapsofindia.com/2012/04/03/pandyan-dynasty-the-richest-and-the-longest-reigning-indian-empire/

 https://www.jeyamohan.in/?p=34044

https://www.sishri.org/kurinji.html

https://asi.nic.in/asi_publ_epigraphical_indica.asp

https://en.wikipedia.org/wiki/Hathigumpha_inscription

https://www.sdstate.edu/projectsouthasia/upload/HathigumphaInscription.pdf

https://micheldanino.voiceofdharma.com/tamilculture.html

https://books.google.co.in/books?id=ERq-OCn2cloC&pg=PA189&ots=Fp5loyJrzM&dq=musiri+pandyas&sig=aNcEToGTkngMTlXNVQAYgL95TTc&redir_esc=y#v=onepage&q=musiri%20pandyas&f=false

https://en.wikipedia.org/wiki/Early_Pandyan_Kingdom#Epigraphical_sources

https://www.amanushyam.in/2012/10/blog-post_7724.html

https://www.shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_06_u.htm

https://www.dinamalar.com/General_detail.asp?news_id=10459

https://www.tamilvu.org/slet/l1281/l1281pd1.jsp?bookid=28&page=397

 

 

 

 

30 Replies to “பாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1”

 1. அருமையான தொடக்கம் வீரா. வாழ்த்துக்கள்.

  ஜெயமோகனுடன் செய்தபயணத்துடன் கூட, பாரதத்தின் எல்லைப் பகுதிகளிலும் ராணுவ முகாம்களிலும் நீங்கள் செய்த பயண அனுபவங்களையும் இதனுடன் சேர்த்து எழுத வேண்டும்.

  தமிழ் வாசகர்களுக்கு சுவாரஸ்யமான வாசிப்பையும் பல திறப்புகளையும் இத்தொடர் அளிக்கும் என்றூ நம்புகிறேன்.

 2. நன்றி ஜடாயு சார்,
  நிச்சயம் , எல்லைப்புற அனுபவங்களையும் எழுதுகிறேன்,

 3. வீரா: நல்ல தொடக்கம். வாழ்த்துகிறேன்.
  சரவணகுமார்: சிவராத்திரியுடன் பனி முடிந்துவிடும் என்பர். 🙂

 4. இத்தொடரை துவங்கியுள்ள மதிப்பிற்குரிய நண்பருக்கு இறைவனின் நல்லாசி அருள்வானாக.

 5. நல்ல முயற்சி ஜெய் மோ அவர்கள் பயணங்கள் அருமை , பனி தொடர வாழ்த்துக்கள் சார்- சங்கரன் சென்னை ,

 6. ரொம்ப சந்தோசம், நீங்கள் மேலும் எழுத வாழ்த்துக்கள்.

 7. அருமையான கட்டுரை. தொடருங்கள், வீரா.

 8. என் போன்ற இளைநர்களின் உலகம், பாரதத்தின் நிகரற்ற தரிசனத்தை காண, உங்களின் வரலாற்று மழையில் நனைய , செடிகளாய் வளர்ந்து நிற்கிறது .

 9. சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி , கிராமம் அனைத்தும் தவ பூமி.
  சிறுமியர் எல்லாம் தேவியின் வடிவம், சிறுவர் அனைவரும் ராமரே

 10. அருமையான ஆராய்ச்சிக்கட்டுரை ;ஒரு பயணக்கட்டுரை இந்த அளவுக்கு இதற்குமுன் வந்திருக்குமா என்பது சந்தேகமே!சூப்பர்.
  சோமுசார்.

 11. ஸ்ரீமான் வீர ராஜமாணிக்கம், நல்லதொரு ப்ரயாசைக்கு வாழ்த்துக்கள் .

  ஒரு சிறு விக்ஞாபனம்.

  பௌத்த ஜைன க்ஷேத்ரங்கள், குகைகள் சம்பந்தப்பட்ட கல்வெட்டுகளைப் பகிர்வதோடு இந்த க்ஷேத்ரதேவதைகள் சம்பந்தப்பட்ட தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத ஸ்தோத்ரங்கள் / ஸ்துதிகள் ஏதும் இருந்தால் அவற்றையும் பகிரவும்.

 12. இத்தொடரை எழுதி நம்மை பாரத யாத்திரையில் வழிப்படுத்தும், கட்டுரை ஆசிரியருக்கு எம் அன்பு கலந்த வணக்கங்கள்…

  பௌத்தம்’ சார்ந்த சம்ஸ்கிருத இலக்கியங்கள் குறித்தும், அவை இப்போது இணையத்தில் கிடைக்கிறதா..? என்பது குறித்தும் அறியவும் ஆவலாயுள்ளேன்..

 13. நல்ல தொடக்கம் ராஜா சார் வாழ்த்துக்கள் ………

 14. அருமையான வரலாற்று சுவடுகள் தகவல்கள் -வாழ்த்துகள் தொடர வேண்டுகிறோம்

 15. வ்யாசம் சாராது பிற விஷயங்களை அடியேன் ப்ரஸ்தாபிப்பதற்கு முதற்கண் எமது க்ஷமாயாசனங்கள்.

  \\\\பௌத்தம்’ சார்ந்த சம்ஸ்கிருத இலக்கியங்கள் குறித்தும், அவை இப்போது இணையத்தில் கிடைக்கிறதா..? என்பது குறித்தும் அறியவும் ஆவலாயுள்ளேன்..\\\\

  ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயருக்கு நமஸ்காரம்.

  மிகுந்த கால அவகாசத்திற்குப் பின் இதை வாசிக்க நேர்ந்ததால் உடன் உத்தரமெழுத இயலவில்லை. தாமதத்திற்கு க்ஷமிக்கவும்.

  நான் அடிக்கடி வாசிக்கும் இரண்டு தளங்களை தங்களுடன் பகிர்கிறேன்.

  ஒன்று ஸ்ரீ வினோத் ராஜன் மஹாசயரின் தளம்.

  https://www.virtualvinodh.com

  இந்த தளத்தில் பல பௌத்த மற்றும் ஜைன சாஸ்த்ராதிகளை (பதவுரையுடன் கூட) வாசிக்கலாம். சம்ஸ்க்ருத, ப்ராக்ருத ( இதில் ஒன்றான – பாளி பாஷா – பாலி அல்ல பாளி என்றறிகிறேன் இத்தளம் வாயிலாக) மற்றும் தமிழ் மொழியிலான சாஸ்த்ரங்கள் இங்கு கிட்டும். மஹாசயர் அவர்கள் க்ரந்த லிபி கற்பிக்கும் முயற்சியிலும் உள்ளார்கள். சங்கதம் தளத்தில் பௌத்த கலப்பு சம்ஸ்க்ருதம் என்ற வ்யாசம் மஹாசயர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டமை நினைவிலிருக்கலாம்.

  இன்னொரு முக்யமான தளம்.

  http://www.dsbcproject.org

  இந்த தளம் சம்ஸ்க்ருத பாஷையில் எழுதப்பட்ட பௌத்த சாஸ்த்ர மற்றும் ஸ்தோத்ரங்களின் ஒரு களஞ்சியம் என்றால் மிகையாகாது. மிகப்பல மூல நூற்கள் (மட்டிலும் – எனக்குத் தெரிந்து பதவுரை இல்லை) அனைத்தும் தேவநாகர லிபியிலும் ஆங்க்ல லிபியிலும் இக்களஞ்சியத்தில் கிட்டும்.

  இது சம்பந்தமாய் நான் சுவைத்தனுபவித்த சில விஷயங்களை அவகாசம் கிட்டும் போது தமிழ் ஹிந்து வாசகர்களுடன் ஒரு வ்யாசம் வாயிலாக பகிர்கிறேன்.

  பிறிதொரு விஷயம்.

  ஈழத்தில் க்ரந்த லிபி வாயிலாக சம்ஸ்க்ருதம் வாசிக்கிறீர்கள் என நான் அறிகிறேன்.

  மீனாக்ஷியம்பிகை சமேத சுந்தரேஸ்வர ஸ்வாமி அருள்பாலிக்கும் நான்மாடக்கூடலான மதுரையம்பதியில்

  இறையனார் நிகழ்த்திய அறுபத்து நாலு திருவிளையாடல்களை திருவிளையாடற் புராணம் நம் தாய்மொழியாம் தமிழில் சுவை பட மொழிகிறது.

  சம்ஸ்க்ருதத்தில் திருவிளையாடற் புராணம் இரண்டு நூற்களில் பாடப்பட்டது.

  ஹாலாஸ்ய மாஹாத்ம்யம்.

  ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களால் அருளப்பட்ட சிவலீலார்ணவம்.

  ஹாலாஸ்ய மாஹாத்ம்யம் க்ரந்த லிபியில் மற்ற பல நூற்களுடன் கீழ்க்கண்ட சுட்டியில் தங்களுக்குக் கிட்டும். சிவபூஜாதுரந்தரரான தங்களுக்கும் இதில் விருப்பமுள்ள ஏனைய சிவனடியார்கட்கும் உபயோகமாக இருக்கும்.

  https://ambaa.org/pdf/

  மேற்கண்ட இரண்டு நூற்களுக்கும் நாகர லிபி மூலம் தாங்களோ அல்லது இங்கு வாசிக்கும் அன்பர் வேறு யாரேனும் அறிந்தால் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ஐம்பது அறுபது வருஷமுன்னர் ஸ்ரீரங்கம் வாணிவிலாஸ் பதிப்பகத்தினர் சிவலீலார்ணவத்தை பதவுரை சஹிதம் பதிப்பித்ததாக அறிகிறேன். தற்போது பதிப்பில் இல்லை.

 16. மிக அருமையான தொடர். சனாதன தர்மிகளுக்கு மிக மிகத் தேவையானதும் கூட. வாழ்த்துக்கள்.

  சில வேண்டுகோள்கள்:

  1. தொடரின் பகுதிகளை தலைப்பிட்டு ஒரு ஆவணத்தை தேடுவது போல எளிதாக இருக்கும் (உம் – காரவேலர்)

  2. தொடர் ஒரு ஐந்து அல்லது பத்து பதிவுகள் ஆன பிறகு பதிவிறக்கம் செய்வதற்கு ஏற்ப pdf முறையில் வைத்தல் நலம். தொடரை முடிக்கும் போதும் இதை செய்யலாம்

 17. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன், அவருக்குப் பிந்தைய
  ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் – இவருடைய சமகாலத்தவரான, கண்ணகி சிலைக்கு இமயத்தில் கல் எடுத்த, செங்குட்டுவன் அனைவரும் கி,மு. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் ஓரிரு நூற்றாண்டுகள் கழித்து ஆண்ட தமிழ் பெருமன்னர்கள். காரவேலர் கல்வெட்டுகள் குறிப்பிடும் பாண்டியர் வேறாக இருக்கலாம்.

 18. // ஆரியப்படை கடந்த என்ற பட்டப்பெயர் ஆரியப்படையை சமாளித்த, எதோ ஒரு வகையிலான உடன்படிக்கை கொண்டு போரை தவிர்த்த என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளதாக கொள்ளலாம். //

  மேலும், கடந்த என்பதற்கு வென்ற என்றுதான் பொருள் கொள்ளமுடியும்.
  வேங்கை மார்பன் என்ற மன்னரின் காடு சூழ்ந்த வலிமையான கோட்டையை வென்று கைபற்றிய ஒரு சங்க கால பாண்டியருக்கு கானபேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்ற பெயர் இருக்கிறது.

 19. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கி.மு.80 ஐ சேர்ந்ந்தவர் எனவும் சொல்கிறார்கள்.மறவன்புலவு சச்சிதானந்தம் போன்றவர்களும் சொல்கிறார்கள்.83 வது பாண்டிய வம்சம் என்றும் சொல்கிறார்கள். நான் சொல்வது ஒரு கருதுகோள் தான் .பாண்டிய குலத்தோன்றல்களில் 2 ,அல்லது 3 பேரை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று குறிப்பிடுகிறார்கள். நான் கருதுவது காரவேலன் குறிப்பிடும் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆக இருக்கும் அதிக பட்ச சாத்தியக்கூற்றை பற்றிதான்.
  உங்களின் 2 வது கேள்வியில் ஐயூர் மூழங்கிழாரின் புற நானூற்று பாடலில் குறிக்கட்டிருக்கும் வேங்கை மார்பனை வென்ற கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெரு வழுதி பற்றி குறிப்பிட்டு கேட்கிறீர்கள். ஒரு சொல் அனைத்து இடங்களிலும் ஒரு பொருளை கொண்டு மட்டுமே அறியப்பட வேண்டும் என்பது ஒன்றும் விதியல்ல. ஒரே பதம் வேறு பொருள்களில் குறிக்கப்படும் ஏராளமான உதாரணங்கள் உண்டு.கடந்த என்பதற்கு வென்ற என்றும், some how managed to get defeated என்ற பொருளிலும் சொல்லலாம்.கானப்பேரயில் தந்த , என்றும் கானப்பேரெயில் கொண்ட என்றும் உக்கிரப்பெரு வழுதி குறிக்கப்படுகிறார்.இது பற்றி ராமச்சந்திரன் சாரிடமும் கேட்டிருக்கிறேன். அவர் சில புறச்சான்றுகளை தெரிவிக்கிறார். அதை நான் மாலையில் பகிர்கிறேன்.

  நன்றி

 20. அன்புள்ள குமரன் ,
  இன்னுமொரு பாட பேதம் “ இரு நிலம் கடந்த மாயோன்” – 2 அடி வைத்த வாமன பெருமாளை குறிக்கும் .இரு நிலங்களை வென்ற என்ற பொருளில் இது பயன்படுவதில்லை. திவாகர நிகண்டில் 11 ஆம் தொகுதியில் எதிர் நின்று போரிடுதல் என்ற பொருளிலேயே குறிக்கப்பட்டுள்ளது. மேலும் புற நானூறில் 3 இடங்களிலும், கலிப்பாவிலும் இது எதிர் நின்று போரிடுதலையே குறிக்கிறது.எனவே தான் அந்தப்பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளது. தகவல் உதவி : கல்வெட்டு ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் அவர்கள். அவருக்கு என் நன்றி

 21. அன்புள்ள வீர.ராஜமாணிக்கம் அவர்களே,

  கடந்த என்பதற்கு வென்ற என்ற பொருள் கொள்ளும் பாடல் வரிகள் :

  மதுரைக்காஞ்சி : 590-91 :

  “கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓணம் நல் நாள்”

  – திரட்சியைக்கொண்டஅவுணரை வென்ற பொன்னாற்செய்த மாலையினையுடைய மாமையை யுடையோன் பிறந்த ஓணமாகிய நன்னாளில்…..

  சிலப்பதிகரம்-கடலாடு காதை – 50 : – ல்

  ”… நிகர்த்துமுன் நின்ற
  சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடியும்”

  – எதிர்த்து முன் நின்ற சூரனை வென்ற முருகன்..

  – நன்றி : தமிழ்வு தளம்.

  செங்குட்டுவன் இமயம் வரை படையுடன் சென்று கண்ணகி சிலைக்கு கல் எடுத்தார் எனும் போது பாண்டிய நெடுஞ்செழியன் – II, கரிகாலன் போன்ற பெருமன்னர்களுக்கும் இதை சாதிக்க முடிந்திருக்கும்.

  விந்திய மலைக்கு வடக்கேயுள்ள பிரதேசம் ஆரியவர்த்தம் என்றும், தெற்குப் பகுதியில் இருந்தவை திராவிட, தமிழ்ப் பிரதேசங்கள் என்றும் வழங்கப்பட்டு வந்தன; ஆரியமும், திராவிடமும் இனங்களல்ல, நிலங்கள் என்பதுதான் என் புரிதல்.

  காரவேலர் கல்வெட்டு குறிக்கும் பாண்டியர் யார் என்று அறுதியிட்டுக் கூறமுடியாத போது, யூகத்திற்கு வலு சேர்க்க, கடந்த என்பதற்கான பொருளை விவாதத்திற்குள்ளாக்கி ஒரு பெருமன்னரின் புகழை குறைக்கும் தவறை செய்துவிடக் கூடாது என்பதுதான் என் பணிவான கருத்து.

  மற்றபடி, தங்கள் பயண அனுபங்கள் அருமையான பாரத தரிசனத்தை வாசகர்களுக்கும் அளிக்கிறது. நன்றி.

 22. “கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓணம் நல் நாள்”

  – திரட்சியைக்கொண்டஅவுணரை வென்ற பொன்னாற்செய்த மாலையினையுடைய மாமையை யுடையோன் பிறந்த ஓணமாகிய நன்னாளில்…..

  பாடபேதம் 1 : வலிமையான அரக்கர் தலைவனான மகாபலியை ஆட்கொண்ட பொன்மாலை அணிந்த மாயோனுக்கு உரிய ஓணம் நன்னாள்..

  அவுணன் என்று பாடாமல் அவுணர் என்று பன்மையால் பாடப்பட்டிருக்கிறதே என்றால் :

  பாடபேதம் 2 : வலிமையான அரக்கர்களை வென்ற பொன்மாலை அணிந்த மாயோனுக்கு உரிய ஓணம் நன்னாள்..

 23. அன்பார்ந்த ஸ்ரீ வீர ராஜமாணிக்கம் மற்றும் ஸ்ரீ குமரன் உங்களுடைய கருத்துப் பரிமாற்றங்களும் வ்யாசம் போலவே மிகவும் சுவை பொருந்தியதாகவும் ஆழ்ந்த தகவல்கள் அளிப்பதாகவும் உள்ளன.

  மிக முக்யமாக, அபிப்ராய பேதங்களை சாடல்கள் ஏதுமின்றி சான்றாதாரங்கள் சார்ந்து அன்புடன் பகிர்ந்தமைக்கு இந்த தளத்தில் கருத்துப் பரிமாறும் சக வாசகன் என்ற படிக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் பணிவார்ந்த வணக்கங்கள்.

  வளர்க பணிவார்ந்த கருத்துப் பரிமாற்றங்கள்!!!!!!!!

 24. திரு.கிருஷ்ணகுமார் அய்யா அவர்களுக்கு,

  தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

 25. மிக தாமதமாக பதில் அனுப்ப மன்னிக்கவும். இப்போது தான் உங்கள் கட்டுரை என் கண்ணில் பட்டது. தெரியாமல் தான் கேட்கிறேன், சேதிராயர்களைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பது உண்மை தானா? என் தாத்தா புலவர்.சாமிநாத சேதிராயர் என்று தான் அழைக்கப்பட்டதாக ஞாபகம். எங்கள் குடும்பத்தை முதல் கரை சேதிராயர் என்று தான் அழைப்பார்கள். என் தாயின் அன்னை இரண்டாம் கரை சேதிராயர். எங்களை தேவர் இனக்குழுமத்தில் சேர்த்திருப்பது அரசாங்கத்தின் குளறுபடியா?. அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக எங்களுடன் சொந்தம் பாராட்டியவர்கள்? இதில் சாதி வெறியெல்லாம் இல்லை. உண்மையாகவே உள்நோக்கம் இல்லாமல் தன் வரலாறு எழுதுகிறிர்களா?

 26. “Nadars” are not from “Kshatriya” origin. The history is true fact. The word “Nadar” is in usage from very later period onwards. The earlier name of the “Nadars” is known as “Ezhavar” (Tree Climbers), which are found in the valid/authentic copper plates and inscriptions published by the authority.

  The Vellore palayam copper plate of the Pallava King “Nandivarman-III” dates back to 8th century A.D, mentions about the “Ezhavas” and their tree climbing profession. Line 61 & 62 of the copper plate :-

  “Thengum Pannaiyum evargal manamindri Ezhavar eraperadaragavum”.

  “தெங்கும் பனையும் இவர்கள் மனமின்றி ஈழவரெறப்
  பெறாதாராகவும்” (பல்லவர் செப்பேடுகள் முப்பது, உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு).

  Which means, in Brama deiyam lands without the permission of the authority, the tree climbers “Ezhavar” not to climb in the trees of coconut and palmyra.

  Similarly, the 10th & 11th century A.D, copper plates such as “Easalam Copper Plates”, “Thiruvalangadu Copper Plates” pertaining to the Chola King Rajendra Chola-I and the recent discovered, the India’s biggest copper plate “Tiruvindalur Copper Plate” pertaining to the Chola King Rajendra Chola-II speaks about “Ezhavar and their tree climbing profession”.

  The “Enathi Nayanar” one of the 63 Nayanmars hails from the “Nadar community” referred in literature by Nambiandar Nambi as “Ezha Kula Deepan”. The well known 12th century A.D, poet “Sekkizhar” also saya as “Ezha Kula Sandrar”. The “Umapathi Sivachariyar”, one among the “Thillai Bramins” of 14th century A.D, placed him in the “Varnasirama Order” as mentioned below :-

  “திருமறையோர் புராணமவை பதின்மூன்று சிவவே
  தியராணை வழிபட்ட புராண மீரிரண்டு
  குறைகழன்மா மாத்திர ரொன்றறுவர் முடிமன்னர்
  குறுநில மன்ன வரைவர் வணிகர் குலத்தைவர்
  இருமைநெறி வேளாளர் பதின் மூவரிடைய
  ரிருவர் சாலியர் குயவர் தயிலவினையாளர்
  பரதவர் சான்றார் வண்ணார் சிலைமறவர் நீசர்
  பாணரிவரோரொருவராம் பகருங் காலே” (சேக்கிழார் புராணம், உமாபதி சிவாச்சாரியார்)

  The year 1374 A.D. inscription, (South Indian Inscriptions Vol-VIII No.400) refers “Nadar community” name as “Sanar”. Accordingly, the Kanyakumari (Thovalai) inscription refers “Nadar community” name as “Ezhavar/Sanar” (Kanyakumari Inscriptions Vol-5, No.1969/33).

  (Cont’d……)

 27. (Cont’d……)

  The “Thirumuruganpundi copper plate” of 16th century A.D, released by Tamil Nadu Archaeology Department, speaks about “Sanar and their history”. Similarly, the Tamil Nadu Archaeology Department released “Tharangampadi Oolai Avanam” speaks in detail about “Sanar and their tree works”.

  In the hymns of “Kabilar Agaval” Nadars are mentioned as “Kaveripumpattinathil Kalveliangar cheriyil sandrar aganthanil uruvai valarthanal” (காவிரிப் பூம் பட்டினத்தில் கள்விலைஞர் சேரியில் சான்றார் அகந்தனில் உறுவை வளர்ந்தனள்). This hymns refers “Sanar and their toddy works”.

  The Kottaiyam Siriyan Christian Copper Plate-I speaks about “Sanar and Ezhavar” as synonyms. Many inscriptions/copper plates refers about the term “Ezham Punchai” (ஈழம் புஞ்சை), one of the levy collected from the “Sanars”.

  The book ‘Idangai Valangaiyar Varalaru” of 18th century A.D, published by Tamil Nadu Government Oriental Manuscripts, the page 81 & 82 speaks about “Sanar and their tree climbing works”. In that, the title “Nadar” has been given to few people.

  In the “Thattaparai Vanitham Pattaiyam” copper plate of the year 1780 A.D, the “Sana Nadargal” is mentioned. In the “Virudunagar District Inscriptions : Vol-I, published by Tamil Nadu Archaeology Department, from inscriptions No.296/2005 to 302/2005, in the year between 1830 to 1886, the title “Nadar” is mentioned without saying “Sanar”.

  According to Tamil Lexicon “Ezham” means Palm Tree/Toddy”. So, from the above mentioned records from 8th century A.D, onwards, the “Nadar” community people involved in their profession only (Tree Climbers) and not as rulers. History is true fact. The word “Nadar” is of later origin, it means “a country man” but not a ruler.

 28. சேதிபர்கள் என்ற சொல் குறிக்கும் அரச பரம்பரையை சேர்ந்தவராக காரவேலர் இருக்கலாம் என்பது கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் கருத்து . சேதிப குலம் என்பது மகாபாரதத்தில் சிசுபாலன் வம்சம். சேதிப மன்னர்களின் வாரிசுகள் கடையெழு வள்ளல்களில் இடம் பெறும் திருக்கோவிலூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த மலையமான்கள் . நெடுமான் அஞ்சியும், திருமுடிக்காரியும் நடு நாட்டு அரசர்கள்,சேதிகுலத்தோர். வரலாற்றால் பிந்திய இவர்கள் காரவேலனின் படையெடுப்புக்கு பின்பு தாய் வழியிலோ, தந்தை வழியிலோ தொடர்ந்த அரச வம்சமாக இருக்கலாம். இன்றும் தமிழக சாதிகளில் சேதிராயர் என்ற பட்டம் நாடார் மரபில் உள்ளது. நாடார்கள் சந்திர குலத்தவர்கள். சிசுபாலன் சந்திர குல மூத்தோன். பாண்டியர்களும் தாங்கள் சந்திர குலத்தை சேர்ந்தவர்கள் என்று பிரகடனம் செய்தவர்கள். மகாபாரதத்தில் பாண்டியர்கள் பற்றிய குறிப்புகள் இவர்களின் சந்திர குல வமிசத் தொடர்புக்கு வலு சேர்ப்பதாக கொள்ளலாம்./////////////////////////////

  இந்த கருத்தானது சான்றில்லாத கருத்தாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *