ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15 என்று ஒரு புத்தகம் (நாவல்).  குமரி எஸ். நீலகண்டன் எழுதியது. இந்த மாதிரி தலைப்புகள் கொண்ட நாவல்கள் புதிதல்ல. வெகு அபூர்வம் என்று சொல்லவேண்டும். 1984 என்று அறுபது வருடங்களுக்கு முன் ஜியார்ஜ் ஆர்வெல் எழுதியது ஸ்டாலினின் கொடூர யதேச்சாதிகாரமும் கம்யூனிஸ சித்தாந்தமும் உலகை, மனித சமுதாயத்தை எங்கு இட்டுச் செல்கின்றன என்று அவர் 1949- ல் எழுதியது. அது ஒரு anti-utopia என்று வகைப்படுத்தி னாலும், அது நம் மனித துயரைத் துடைக்க வந்த சித்தாந்தம் பேசினாலும், ஒரு யதேச்சாதிகாரரின் கீழ் மனித சமுதாயத்தின் சுதந்திரத்தை பறித்து அழிவுக்கு இட்டுச் செல்லும் ஒரு பயங்கர சொப்பனம், அது சொப்பனமல்ல, நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம் என்பதைச் சித்தரித்தது. அது கையாண்ட பல புதிய சொல்லாக்கங்கள் இன்று எந்த அரசினதும் ஆயுதங்களாகி அன்றாட புழக்கத்தில் வந்துள்ள மொழியாகியுள்ளது. (ஜியார்ஜ் ஆர்வெல்லுக்கும் முன்னால் கி.பி. 2000 என்று 1940களில் எப்போதோ வருங்கால கனவாக ஒரு உடோப்பியாவை போன நூற்றாண்டில் ஐம்பதுக்களிலிருந்து எழுபதுக்கள் வரை பெரிதும் கொண்டாடப்பட்ட மு. வரதராசனார் எழுதியது ஒன்றும் தமிழில் உண்டு. அதற்கும் முன்பாக கோதைத் தீவு என்று வ.ரா. ஒரு உடோப்பியா எழுதியிருக்கிறார்.

august_15__12743_zoomஆனால் ஆகஸ்ட் 15 என்னும் தினம் குமரி நீலகண்டனுக்கு ஒரு சரித்திர நிகழ்வின் தொடக்கம். அடிமைப்பட்டிருந்த ஒரு பழம் சமுதாயத்தின் சுதந்திர விழிப்பு.  ஒரு மனிதனின் பிறப்பு.  பின்வருடங்கள் ஒன்றில் அதே தினத்தில் பிறந்த ஒரு குழந்தை அத்தினத்தின் சரித்திர நீட்சியை ஒரு ஏமாற்றமாக, நம்பிக்கை வீழ்ச்சியாகக் காணும் அவலம். இது கனவல்ல. வாழும் நிஜம்.

ஆகஸ்ட் 15 மகாத்மா காந்தியின் செயலராக அவரது அந்திம காலத்தில் இருந்த கல்யாணம் என்ற வடநாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழரின் பிறந்த தினமுமாகும். 15.8.1922. பத்திரிகைகளில் தெரிந்த விஷயம். கல்யாணம் 1943 லிருந்து மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டது வரை அவரது செயலராகவும் பின் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு கடைசியில் சென்னையில் ஓய்வு பெற வந்ததும் அவருக்கு நீலகண்டன் பரிச்சயமாகிறார். அவருடன் பேசிப் பழகி அறிந்ததும், பத்திரிகைகளில் படித்து அறிந்ததும், தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களும் வரலாற்று மாற்றங்களும் 15 ஆகஸ்டை ஒரு மையப் புள்ளியாக்கி, அப்புள்ளியைச் சுற்றிய மனிதர்கள், கனவுகள், ஏமாற்றங்கள், வாழ்க்கை மதிப்புகளின் மாற்றங்கள் அனைத்தும் அலையோடுகின்றன. கல்யாணமும் மகாத்மாவும் சத்தியங்கள். வாழ்ந்த மனிதர்கள். ஆனால், சத்யா, பின்னர் வரும் ஏமாற்றங்களுக்கு சாட்சியம் ஒரு புனைவு சத்யா ஒரு சிறுமி 2000 ஆண்டு ஆகஸ்ட் 15-ல் பிறந்த கற்பனைப் பாத்திரம். எல்லாமே இருவரதுமான வலைப் பூ பதிவுகளாக எழுதப் பட்டுள்ளன. கல்யாணம்.காம் –ல் காண்பதெல்லாம் நிகழ்ந்தவை. சத்யா.காம் –ல் ஒரு சிறுமியின் பதிவாக தரப்பட்டள்ளவை எல்லாம் பல நிகழ்வுகளும் மனிதர்களும் கற்பனையாக பதிவாகியுள்ளன. சத்யாவின் மாமாவும் அவர் பற்றிய நிகழ்வுகளும் பல உண்மை மனிதர்களின் பல உண்மை நிகழ்வுகளின் கற்பனைத் தொகுப்பு.

இங்கு எனக்கு முக்கியமானதும் சுவாரஸ்யமானதுமாகப் படுபவை கல்யாணமும் அவர் மகாத்மாவோடு கழித்த நாட்கள், அன்றாடம் அவரோடு நெருங்கி இருந்த வாழ்க்கை, சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னருமான பொது வாழ்வு. இவற்றிற்கு ஆதாரமாகவும் மதிப்பு மிக்கதுமான கல்யாணம் தந்துள்ள ஆவணங்கள் – (கடிதங்களும் புகைப்படங்களும்) – அவரது சேர்க்கையும் பத்திரிகைகளில் வந்தவையும். நீலகண்டனின் இப்புத்தகத்தில் விரியும் 500 பக்கங்களில் நாம் காணவிருப்பது ஒரு தனி மனிதன் மகாத்மாவானதும் அவர் மறைவிற்குப் பின் அம்மகாத்மா விழித்தெழ வைத்த நாட்டின் அதள பாதாள வீழ்ச்சியும் தார்மீக சீரழிவும்.

கல்யாணம் தில்லியில் பிரிட்டீஷ் அரசு காலத்தில் ஒரு அரசாங்க அதிகாரியின் பிள்ளையாகப் பிறந்தவர். சிம்லா – தில்லி என மாறி மாறி வாழ்ந்த தமிழ்க் குடும்பம். மத்தியதரத்தில் கொஞ்சம் வசதியில் வாழ்ந்த குடும்பம். ஆங்கில அதிகாரிகளுடன் பணி புரிந்தவர். இந்தியர்கள் சுதந்திரமாக வாழ உரிமை கொண்டவர்கள் என்று நம்பியவர்கள், காந்தியை மதித்தவர்கள் அந்த ஆங்கில அதிகாரிகள். ஒழுங்கும் கட்டுப் பாடும் கொண்டவர்கள். வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் சின்ன மின்சார, குழாய் ரிப்பேர் எல்லாம் தாமே செய்துகொள்பவர்கள். வேலைக்காரர்கள் இருப்பதோ குழந்தைகளையும் ,நாய்களையும் பார்த்துக்கொள்ளத்தான். சனி ஞாயிறுகளில் அவர்களுக்கு கட்டாய ஓய்வு தரப்பட்டது. தெருக்கள் சுத்தமாக இருந்தன. சைக்கிளில் இரண்டு பேர் சவாரி செய்வது கிடையாது. யாரும் தெருவோரத்தில் சிறுநீர் கழிப்பதில்லை. சுவர்களில் காவிக்கறை காணமுடியாது., சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப் பட்டது. கல்யாணத்தின் தந்தையார் 1921-ல் தில்லியில் தமிழர்களுக்கான  பள்ளிகள் தொடங்கியவர் கல்யாணம் படித்ததும் அந்தப்பள்ளிகளில் ஒன்றில் தான். ஹேமமாலினி படித்த, இந்திரா பார்த்தசாரதி கற்பித்த பள்ளி. அண்டை அயலார்கள் பஞ்சாபிகள், குஜராத்திகளோடு ஆங்கிலேயர்களும் தான். அவர்கள் பழகியது அண்டை வீட்டார்களாகத் தான். ஆளும் வர்க்கத்தினராக அல்ல. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

கல்யாணம் 1941-ல் படிப்பு முடிந்ததும் அரசுப் பணியில் சேர்ந்தார். 1942- ஆகஸ்ட் 9 –ல் மகாத்மா தொடங்கிய Quit India இயக்கம் தொடங்கிய போது கல்யாணம் இரவு நேரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் யாரோ கொடுத்த துண்டுப் பிரசுரங்களை வினியோகித்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார். வேலை போயிற்று. அலுவலக தோழர் ஒருவர் கல்யாணத்தை தேவதாஸ் காந்தியிடம் அழைத்துச் செல்ல தேவதாஸ் காந்தி சேவாஸ்ரமத்தில் சேர்த்துக்கொள்ள சிபாரிசு கடிதம் கொடுக்க கல்யாணம் வார்தா புறப்பட்டார். அவருக்கு ஆஸ்ரமும் தெரியாது, காந்தி பற்றியும் ஏதும் அதிகம் தெரியாது. அரசு எழுத்துப்பணியிலிருந்து விலகி,  உடல் உழைப்பு வேண்டும் வேலைக்குச் செல்வதில் மகிழ்ச்சி. அவ்வளவே. வேலை பார்த்த ஆங்கில அதிகாரியிடம் சொல்லிக்கொண்டு தான் போகிறார் “ஓ, நல்லது சேர்ந்து விடு” என்று அவர் சொன்னாராம்.

அக்கால சூழல் எவ்வாறு இருந்தது என்று சொல்லத் தான் இதையெல்லாம் கோடிக்காட்டுகிறேன். இன்று 66 வருட சுதந்திரவாழ்வில் நம் சூழல் முற்றிலும் வேறு தான்.

சேவாஸ்ரமத்தில் அப்போது காந்தி இல்லை. அவர் மும்பையில் கஸ்தூர்பா காந்தியுடன் ஆகாகான் மாளிகையில் சிறையிருக்கிறார். சேவாஸ்ரமம் மின்சாரம் போன்ற நவீன வசதிகள் ஏதுமற்றது. தட்டிகளால் ஆன குடிசைகள்கொண்டது. சாணிமெழுகப்பட்ட மண் தரைகள். தட்டிகளே கதவுகள். நாற்காலிகள் மேஜைகள் ஏதும் கிடையாது. எல்லா வேலைகளையும் அவரவரே செய்து கொள்ள வேண்டும். கழிப்பறைகள் சுத்தம் செய்வது முதல். குடிசைகளில் உள்ள பூச்சிகளைக் கூட கொல்லக் கூடாது. எங்கும் அஹிம்சை. பின்னால் ஒரு இடத்தில், முறைத்துப் பார்ப்பதும் கோபமும் கூட வன்முறை தான் என்று காந்தி சொல்கிறார். யாரும் என்ன வேலை என்று சொல்ல வில்லை. காலையில் உணவருந்த அழைத்து ரொட்டியும் பருப்பும் கொடுக்கிறார்கள். காந்திக்கு வரும் கடிதங்கள், பல மொழிகளில், பல தரப்பட்டவை, அவற்றை ஒழுங்கு படுத்து கிறார் கல்யாணம்.

கஸ்தூர்பாவின்  உடல் நிலை கெடவே காந்தி விடுதலை செய்யப் படுகிறார். அவர் சேவாஸ்ரம் வந்ததும் காந்தி கல்யாணத்தை அழைத்து வரச் செய்து அவரைப் பற்றிய விவரங்களை, அவர் தகுதி, எவ்வளவு சம்பளம்  எதிர்பார்க் கிறார், பெற்றோரைக் காப்பாற்றும் ;பொறுப்பு என்ன என்றெல்லாம் விசாரிக்கிறார். கல்யாணம் காந்தி முன் நிறுத்தப்பட்ட போது, காந்தி அரை உடையில் நிற்க, அவருக்கு இருவர் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தனர். இந்த கிழவர் யாரோ என்று எண்ணியதாக கல்யாணம் சொல்கிறார். அங்கேயே நேர்முகத் தேர்வு நடக்கிறது. காந்தி பேசுவதே மெல்லிய குரலில் என்னவென்றே புரியாது என்கிறார் கல்யாணம். அரசு வேலையில் ரூ 250 பெற்ற அவருக்கு தான் ரூ 60-க்கு மேல்தர இயலாது என்று காந்தி சொல்ல, தனக்கு சம்பளமே வேண்டாம் என்றும் தன் சேமிப்பில் இருந்த ரு 2600-ல் ரூ 2000 ஐ காந்தியிடம் கொடுத்து விட்டு மிகுந்ததை தன் அவசரத் தேவைகளுக்கு வைத்துக் கொள்கிறார். கல்யாணத்துக்கு தட்டச்சு செய்யத் தெரியும் என்று அறிந்து தனது கடிதங்களை தட்டச்சு செய்யும் வேலைக்கு அவரை எடுத்துக்கொள்கிறார். காந்தியின் எழுத்து மிக மோசமானது. படித்து புரிந்து கொள்ள இயலாதது. வேலை நேரம் எது எப்போது என்றெல்லாம் கிடையாது. ரயிலில் பிரயாணம் செய்யும் போது கூட, அந்தக் கூட்டத்தில் ரயில் ஆட்டத்தில், இரைச்சலில், தட்டச்சு செய்து வரச் சொல்வார். தட்டச்சு யந்திரம் கொண்டு வரவில்லையே என்று சொன்னதற்கு, பார்பர் என்றால், கத்தி வைத்திருக்க வேண்டாமா? என்று கேட்பார். பின் அடுத்த பெட்டியில் இருந்த பத்திரிகையாளர்களிடம் சென்று தட்டச்சு செய்து வருகிறார். தவறுகள் இருந்தால் காந்தி தானே திருத்திக் கையெழுத்திட்டுவிடுவார்.

காந்தி காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். காலை பிரார்த்தனையில் ஆசிரமத்தில் உள்ள எல்லோரும் கலந்து கொண்டாக வேண்டும். காந்தியின் பேத்தி ஆபா சிலசமயம் களைத்துப் போய் ஆழ்ந்த உறக்கத்தில்  வராது இருந்துவிட்டால் காந்தி கோபப்படுவார். “பிரார்த்தனைக்கு வரமுடியவில்லை என்றால் இங்கிருக்க வேண்டாம்” என்று கடுமையாகக் கோபித்துக்கொள்வாராம்.  மனு சுரத்தில் இருக்கும் போது காந்திக்கு கொடுக்க மறந்து விட்டோமே என்று காக்ரா சுட்டு எடுத்துச் சென்ற போது ”சுரத்தோடு ஏன் இதையெல்லாம் செய்கிறாய்?” என்று காந்தி மிகவும் கோபித்துக்கொண்டு அதை உண்ண மறுத்தார். மனு மன்னிப்பு கேட்ட பிறகே சாந்தமானாராம். உணவிலும் அவர் மிகக் கட்டுப் பாடு மிகுந்தவர். காபி டீ வகைகள் கிடையாது. அந்த எளிய வித்தியாசமான உணவுக்கு கல்யாணமும் அதற்குப் பழகிக் கொள்கிறார். தில்லியில் இருந்த போது கல்யாணம் தன் வீட்டிலிருந்து காந்திக்கு உப்பு போடாத இட்லி செய்து எடுத்துச் செல்வாராம். அதில் காந்தி சாப்பிடுவது இரண்டே இரண்டு வெறும் இட்லிகள் தான்.  மிகுந்த உப்பில்லாத இட்லிகள் ஆசிரமவாசி களுக்கு.

பிரயாணங்களின் போது காந்திக்கு என்று ஒரு பெட்டி ரிஸர்வ் செய்துவிடும் ரயில் நிர்வாகம். வழியில் ரயில் நிற்கும் நிலையங்களில் எல்லாம் காந்திக்கு நன்கொடை களும் பழங்களும் காய்கறிகளும் வந்து குவியும். அவை மூட்டையாகக் கட்டப்பட்டு அடுத்த ஊரில் காந்தியைச் சந்திக்க வரும் ஹரிஜன சேவா சங்கத்தினரிடம் ஒப்படைக்கப் படும்.

காந்தியுடன் கல்யாணம்
காந்தியுடன் கல்யாணம்

காந்தியின் பேத்திகள் ஆபாவுக்கு மனு மீது காந்திக்கு அதிக பிரியம் என்ற மனத்தாங்கல் உண்டு, காந்திக்கு வரும் ஹிந்தி கடிதங்களை மொழிபெயர்ப்பில் ராஜ்குமாரி அம்ரித் கௌரை விட சுசீலா நய்யாரின் மொழிபெயர்ப்பையே காந்தி அங்கீகரிப்பார். இதிலும் இருவரிடையே மனக்கசப்பு. கஸ்தூர் பா நோய் வாய்ப்பட்டிருக்கும் போது காந்தி ஆங்கில வைத்தியத்தை அனுமதித்தவரில்லை. தன் சிகித்சை முறைகளிலேயே நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் இரவு முழுதும் பக்கத்திலிருந்து கவலையுடன் கவனித்துக் கொள்வார். கஸ்தூர்பாவுக்கு  தென்னாப்பிரிக்கா  விலிருந்த காலத்திலிருந்தே காந்தியின் பிடிவாதங்கள் பழகிப் போன சமாசாரம். மூத்த மகன் ஹரிலால் அடங்காப் பிள்ளை. மது, மாது, புலால் விஷயங்கள். முஸ்லீமாக மதம் மாறியதும் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டதும் மகாத்மாவுக்கு பிடிக்கவில்லை.. ’அவன் எனக்கு மகனே இல்லை” என்று சொல்லிவிட்டார் மகாத்மா. மகாத்மாவுக்கு உலகக் கவலைகள். தன் மகனைக் கவனிக்க நேரமில்லை என்பது ஹரிலாலின் புகார். இரு பக்கங்களிலும் இடிபடுபவர், எல்லாக் குடும்பங்களிலும் காண்பது போல் கஸ்தூர்பா தான்.

பிரிவினையைத் தடுக்க ஜின்னாவே பிரதம மந்திரியாக இருந்துவிட்டுப் போகட்டும் என்பது காந்தியின் ஆலோசனை. காங்கிரஸுக்கும் நேருவுக்கும் இதில் உடன் பாடில்லை. காங்கிரஸில் எல்லோரும் தன்னைப் புறக்கணிப்பதாக காந்தி எண்ணுகிறார். காந்தியின் ஆலோசனைகள் எல்லாம் மிரட்டலுக்குப் பணிந்து போவதாகத்தான் இருக்கிறது என்பது மகாத்மாவுக்குத் தெரிவதில்லை. அவர் பிடிவாதம் அவருக்கு. பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாயைக் கொடுக்க படேலை காந்தி நிர்ப்பந்திக்கிறார். காஷ்மீரில் பாகிஸ்தானின் கலவரத்தை இது ஊக்குவிக்கும். அதை நிறுத்தட்டும் கொடுக்கலாம் என்கிறார் படேல். காந்தி தன் பிடிவாதத்தை விடுவதில்லை. கொடுக்காவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகச் சொல்கிறார். படேல் போகும் போது “கிழவருக்கு பைத்தியம் தான் பிடித்திருக்கிறது” என்று முணுமுணுத்துக் கொண்டே செல்கிறார். காந்தி கஷ்மீருக்குச் சென்ற போது அங்கு தான் எந்தப் பொதுக்கூட்டத்திலும் பேசப்போவதில்லை என்று தீர்மானிக்கிறார். சிறையிலிருந்த ஷேக் அப்துல்லாவை விடுவிக்கச் சொல்ல வேண்டும் என்று மக்கள் கேட்ட போது, தான் அரசியல் பணிக்காக இங்கு வரவில்லை என்று பதில் அளிக்கிறார்.

கல்யாணம் லேடி மௌண்ட்பாட்டனுடன் அகதிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறார். அகதிகள் முகாம்களில் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்ட குடும்பங்கள், பாகிஸ்தானில் முஸ்லீம்களால் கற்பழிக்கப்பட்ட பெண்கள், அவர்களை ஏற்க மறுக்கும் ஹிந்து குடும்பங்கள் “உங்கள் பெண்கள் தானே ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இவர்கள் வேண்ட அதை மறுக்கும் ஹிந்து குடும்பங்கள், முன்னர் காந்திக்கும் இப்போது லேடி மௌண்ட்பாட்டனுக்கும் வரும் இத்தகைய வேதனை நிறைந்த கடிதங்கள் பற்றி கல்யாணம் சொல்கிறார். புத்தகத்தில், அக்கடிதங்கள் சிலவும் தரப்பட்டுள்ளன. மகாத்மா அந்தக் கடிதங்களை சம்பந்தப்பட்ட மந்திரிகளுக்கு அனுப்பி வைப்பார், விசாரணை செய்யச் சொல்லி. மதுரையிலிருந்து ஒரு சிவராமய்யர் மகாத்மாவுக்கு மதுவிலக்கு அமல் படுத்தினால் எப்படிச் செய்யவேண்டும் என்று தமிழில் எழுதிய கடிதம் சுவாரஸ்யமானது.

காங்கிரஸ் கட்சியில் படேலுக்குத் தான் ஆதரவு அதிகம் ஆனால் நேருவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம். காந்தி நேருவின் பக்கம். சுதந்திரம் வந்த பின், காங்கிரஸைக் கலை என்று சொன்ன மகாத்மா, சுதந்திர இந்தியாவின் அரசை சுதந்திரமாக செயல்படவிடவில்லை. தன் விருப்பத்திற்கு அரசு செயல்பட வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பம் எப்போதும் ஒரு பக்கச் சாய்வு கொண்டதாகவே இருந்தது. இல்லையெனில் உண்ணாவிரதம் என்று மிரட்டல். ”பாகிஸ்தான் கேட்கும்  ரூ 55 கோடியைக் கொடுத்துவிடு, எல்லாம் சரியாகி விடும்” என்று அரசை வற்புறுத்தினார். அவர் மிரட்டலுக்கு பணிந்து கொடுத்த பின்னும் அப்படி ஒன்றும் சரியாகி விடவில்லை. இன்று வரை. 66 வருடங்கள் கழிந்த பின்னும்.

பஞ்சாபிலிருந்து வந்த ஹிந்துக்கள் முஸ்லீம்கள் இழைத்த கொடூரச் செயல்களைச் சொன்ன போது படேல், “நீங்கள் என்ன செய்தீர்கள். திருப்பித் தாக்குவதற்கு என்ன?” என்று சீற, மனு காந்தி இதை காந்தியிடம் சொல்ல, காந்தி வருந்தி, “ஹிம்சிப்பவர்களைப் பழி வாங்குவது என்று ஆரம்பித்தால் உலகில் யாரும் உயிருடன் இருக்க முடியாது” என்று காந்தி சொன்னதாக கல்யாணம் சொல்கிறார். பாகிஸ்தானின் முஸ்லீம் லீகின் வன்முறையைச் சுட்டிய போது. உபதேசம் சொல்ல நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் இதற்கு அர்த்தம், ஹிம்சிப்பவன் என்றும்  ஹிம்சித்துக்கொண்டே இருப்பான். உலகில் மனித ஜீவன் பிழைத்திருக்க ஹிம்சையைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஒரு அசோகன் தான் பல நூற்றாண்டுகளுக்குப் பின் தன் உள்நோக்கிய சிந்தனையில் மனமாற்றத்தில் திருந்தினானே ஒழிய, இந்திய வரலாற்றில் புத்தருக்குப் பிந்திய எந்த அன்னிய அரசும் தன் கொலை கொள்ளையை நிறுத்தவில்லை. தன் ஹிம்சையின் பாதிப்புகளைத் தான் விட்டுச் சென்றிருக்கின்றன. கஜினியிலிருந்து ஜின்னா வரை.

துருக்கியில் முஸ்தஃபா கெமால் பாஷா, காலிஃபா வை ஒழித்தபோது துருக்கியர் வரவேற்றனர். ஆனால் காந்திக்கு அது ஏற்கவில்லை. ஏனோ? இவருக்கென்ன கஷ்டம்? அலி சகோதரர்களோடு கிலாபத் இயக்கத்துக்கு துணை போனார். ஆனால் வேடிக்கை. அப்போது காங்கிரஸிலிருந்த ஜின்னா அதற்கு எதிர் அணியில். காந்தியை வன்மையாகக் கண்டித்தார். கல்கத்தாவில்  நிகழ்ந்த ஹிந்து முஸ்லீம் கலவரத்தில், ஒரு ஹிந்துவுக்கு காந்தி உபதேசம் செய்கிறார். அந்த ஹிந்து கொன்ற குடும்பத்தின் அனாதைக் குழந்தையை எடுத்து முஸ்லீமாக வளர்க்கவேண்டும். ”உன் பாபத்துக்கு பிராயச்சித்தம் இதுவே,” என்கிறார். இம்மாதிரி எந்த முஸ்லீமுக்கும் அவர் உபதேசம் செய்ததாகவோ அந்த முஸ்லீம் அதை ஏற்றதாகவோ செய்தி இல்லை.

தன்னிடம் அன்பாலும், உணர்வுகளாலும், கட்டுப்பட்டவர்களிடம் தான் காந்தி தன் அஹிம்சா வாதத்தை உபதேசிக்க முடிந்திருக்கிறது. அது கஸ்தூர்பா விடமிருந்து தொடங்கி, நேரு படேல் என்று பயணித்து, மனு, ஆபா காந்தி என்று முடிகிறது. தன் ஆத்ம சோதனைக்காக மனு, ஆபா, சுசீலா நய்யார் என்று தன்னைச் சுற்றி இருந்த பெண்களையெல்லாம் பயன்படுத்திக் கொண்டது ஒரு குரூரம்.  அவர்கள் மனம் இதை எப்படி எதிர்கொள்ளும் என அவர் நினைத்துப் பார்த்ததில்லை.  தனது 34வது வயதில் ”இனி நான் பிரம்மசாரியாகவே வாழப் போகிறேன்” என்று கஸ்தூர்பாவிடம் சொன்ன மாதிரி தான் மற்றவர்கள் கருத்தை, மனத்தைப் பற்றி அவர் கவலைப் பட்டதில்லை. ஆனால் மகாத்மா இது எதையும் ஒளிவு மறைவாகச் செய்ததில்லை. கஸ்தூர்பாவைத் தவிர மற்ற எவரிடமும் இதை வற்புறுத்தியதில்லை. சுற்றி இருந்தோர் எல்லோரும் அறிந்தது தான். ஆனால் அவர்கள் அது பற்றி சர்ச்சித்தது இல்லை. சமீபத்தில் இந்தியா டுடே வெளியிட்ட மனு காந்தியின் தினசரிக் குறிப்புகள் இதைச் சொல்கின்றன. மகாத்மா எதைச் செய்தாலும், அதை உலகறியச் செய்தார். தன் ஆத்ம பலம், தன் உலகப் புகழ் பெற்ற ஆளுமை அவரது விருப்பத்தை கட்டளையாக வற்புறுத்தலாகத் தான் கொள்ளும் என அவர் எண்ணிப் பார்த்ததில்லை. மனு, ஆபாவின் உணர்வுகளை மகாத்மா ஏன் எண்ணியும் பார்க்கவில்லை என்பது ஒரு புதிர். இதுவும் ஒரு வன்முறை தானே.

partition1

ஹிட்லருக்கு அவர் கடிதம் எழுதுவார்.  ஜப்பானியர்கள் வந்தால் நாங்கள் அதை எதிர்கொள்வோம் என்று சொன்னாரே ஒழிய எப்படி என்பது யாருக்கும் தெரிந்ததில்லை. ஜப்பானிய அரசுக்கு கடிதம் எழுதுவாரா, இல்லை உண்ணாவிரதம் இருப்பாரா என்பது தெளிவில்லை. . அன்பும் அஹிம்சையும் மதிக்கப்படுமிடத்தில் தான் செல்லுபடியாகும். ஒரு தனி மனிதர் மனமாற்றம் பெறலாம். ஆனால் ஒரு பெரும் சமுதாயம், ஒரு அரசு தன் குணத்தை மாற்றிக்கொள்ளாது. அவற்றுக்கு மனம் கிடையாது. திட்டங்கள் தான் உண்டு. திட்டங்கள் யந்திர கதியில் இயங்குபவை. வாதங்களுக்கு வாதங்கள். வன்முறை வாதங்கள் இல்லாத இடத்தில் எழுகிறது. வன்முறைக்கு வன்முறைதான் பதில் தருகிறது. உலகப் போர்களும், பங்களா தேஷ் போரும், கார்கிலும் வாதங்களால் முறியடிக்கப்படவில்லை.

மிக முக்கியமான ஒன்று. இப்புத்தகத்தில் உள்ளது. மகாத்மாவின் கடைசி பேட்டி ஒன்று: காந்தி தன்  அஹிம்சை வாதத்தை ஒரு அபத்த எல்லை வரை எடுத்துச் செல்கிறார். அணுகுண்டுக்கு எதிராக உங்கள் அஹிம்சையை எப்படி பயன்படுத்துவீர்கள் என்று மிஸ் வொய்ட் கேட்கிறார். ”நான் என்ன பதில் சொல்ல இயலும்?” என்று உடன் சொன்ன காந்தி, சற்றுக் கழித்து ”பிரார்த்தனை செய்வேன்” என்கிறார். ”அணுகுண்டை ஏந்தி விமானம் மேலே பறந்து கொண்டிருந்தால் பிரார்த்தனை செய்வீர்களா?” என்று கேட்கிறார் மிஸ் வொய்ட். ’விமானத்தைப் பார்த்ததும் நான் திறந்த வெளிக்கு வருவேன். என்னிடம் தீய எண்ணம் ஏதும் இல்லையென அந்த விமானி அறிந்து கொள்வான்” என்கிறார். இதைத் தொடர்ந்து இதையே இன்னம் விரிவாகச் விளக்குகிறார் காந்தி (ப, 279-80). மிகவும் பரிதாபம் நிறைந்த நிமிடங்கள் அவை. ஹிரோஷிமா, நாகசாகி நகர ஜனங்களுக்கு இந்த தற்காப்பு தெரிந்திருக்கவில்லை. நாதுராம் கோட்சேக்கும் காந்தியிடம் தீய எண்ணம் எதுவும் இல்லை என்று அவர் முகம் பார்த்து தெரிந்திருக்கவில்லை.

இன்னுமொரு வேடிக்கை. முஸ்லீம்களின் சார்பாக, முஸ்லீம் லீக் சார்பாக, ஜின்னாவின் சார்பாக அவர் செயல்கள் இருந்த போதிலும் பாகிஸ்தான் பாடப் புத்தகங்களில், தொலைக்காட்சியில் சர்ச்சைகளில் காந்தி கேலிதான்  செய்யப் படுகிறார். அனேகமாக உலகம் முழுதும் கொண்டாடப்படும், இருபதாம் நூற்றாண்டின் சகாப்த புருஷன் பாகிஸ்தானில் ஒரு கேலிப் பொருள். இவையெல்லாம் ஒரு நான்கைந்து வருடங்கள் கல்யாணம் மகாத்மாவுடன் நெருங்கி வாழ்ந்த அனுபவத்தில் கல்யாணம் தெரிவிப்பவையும் அதைத் தொடர்ந்து சிந்திக்கும் போது நமக்குத் தெரிபவையும். எல்லாம் கல்யாணம் சொன்னவை அல்ல. கல்யாணத்தைப் படிக்கும் போது அதைத் தொடர்ந்து நமக்குத் தோன்றுபவை. மனு காந்தியே 2000 பக்கங்களுக்கு தினசரி குறிப்புகள் எழுதியிருக்கிறார். பக்தி பரவசத்தோடு தான். மனு காந்திக்கு இல்லாத தயக்கம் நமக்கு வேண்டியதில்லை. காந்தியே மறைக்காத ஒன்றை நாம் ஏன் காண மறுக்க வேண்டும்?. நமக்கு காந்தி என்னும் ஒர் பிரம்மாண்ட யுக புருஷனின்  பிம்பத்தை ஆராதனை செய்தே பழக்கம். இக்கேள்விகளால், மகாத்மா வெற்று காந்தி ஆகிவிடுவதில்லை. மகாத்மாதான். ராமன் ஏன் வாலியை மறைந்து நின்று கொன்றான்?. ஒரு வண்ணான் சொன்னதைக் கேட்டு ஏன் சீதையை காட்டுக்கு அனுப்பினான்?. கேள்வி கேட்பதாக பாவனை செய்து ஏதோ சமாதானம்  சொல்லி நகர்ந்து விடுகிறோம். வால்மீகிக்கு இல்லாத  தயக்கம் நமக்கு ஏன்?

மகாத்மாவைப் பற்றி எங்கோ ஃப்ரான்ஸில் இருக்கும் 1921-ல் ரோமா ரோலான் பரவசப்பட்டு போகிறார்.  அதைப் படித்த ஒரு இசை ரசிகை மேடலின் ஸ்லேட் காந்தியிடம் தன் வாழ்நாளைக் கழிக்கிறாள் மீராபென் ஆக. மீரா பென் பற்றி, கான் அப்துல் கஃபார் கான் பற்றி கல்யாணம் சொல்வதெல்லாம் நெஞ்சை நெகிழ்த்துபவை. “ஓநாய்களிடம் எங்களை விட்டு விட்டீர்கள்” என்பது எல்லை காந்தியின் புகார்.  அவர் சொல்வது உண்மை. அவர் பாகிஸ்தான் சிறையில் எத்தனை வருஷங்கள் இருந்து சிறையிலேயே மரணம் அடைந்தார் என்பது தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு அவர் ராஜதுரோகி.

Partition 1947

காந்தியைப் பற்றி ஏதும் அறியாது 21 வயதில் ஒரு வேலை என்று காந்தியை வந்தடைந்த கல்யாணம் காந்தியின் மறைவு வரை அவர் காந்தியின் உலகில் ஐக்கியமாகிவிடுகிறார். அந்நாட்களைப் பற்றி அவர் சொல்வது பெரும் மதிப்புடையது. நாம் அறிந்தவையோடு அறியாதவையும் உண்டு. காந்தி தன் கடைசி  நிமிடங்களில் “ஹே ராம்” என்று சொல்லிக்கொண்டே இறந்தார் என்று உலகம் முழுதும் செய்தி பரப்பப்பட்டது. அப்போது அந்த இடத்தில் இல்லாதவர்களும் இதைச் செய்தார்கள், அது தவறு, என்பதை அப்போது அருகில் இருந்த கல்யாணம் சொல்கிறார். காந்தியின் மீதிருந்த பக்தி மிகுதி இவ்வாறான கதைகளைக் கற்பித்து பரப்பச் செய்கிறது.

கல்யாணம் (முதிய வயதில்)
கல்யாணம் (முதிய வயதில்)

காந்தியுடன் இருந்த அனுபவத்தை, நாம் இதுகாறும் தெரிந்திராதவற்றை கல்யாணத்திடம் கேட்டு வலைப்பூவாக இப்புத்தகம் தருவது இப்புத்தகத்தின் சிறப்பு.

இனி வரும் கல்யானத்தின் அனுபவங்கள் தெரிந்தவையோ தெரியாதவையோ நம் வாழ்வனுபவத்திலிருந்து வேறுபட்டவை அல்ல. கல்யாணத்தின் வாழ்விலும் அதிலும் அவரது சென்னை வாழ்வில் நிகழ்ந்தவை என்பது, காந்தியுடன் வாழ்ந்த பெருமை கொண்டவை, காந்தியிடம் கற்றபடியே வாழ்ந்தவர் என்பதெல்லாம் பின் தொடர்ந்து நிகழும் தார்மீக வீழ்ச்சியும் கல்யாணத்தை பாதிக்கின்றன. அவரையும் இரையாக்குகின்றன.. அவற்றைப் பற்றி அதிகம் எழுத வேண்டியதில்லை. அந்த வீழ்ச்சிக்கெல்லாம் சின்னமாக, காரியகர்த்தராக சத்யா.காமில் காணும் மாமாவே இப்புத்தகத்தில் நிறைந்திருக்கிறார். ஒரு நீண்ட சகாப்தம். கிருத யுகத்திலிருந்து கலியுகத்துக்கான பயணம். காந்தி செல்லும் ரயில் பெட்டியில் பணமும், பொருளும் நனகொடைகளும் மூட்டை மூட்டையாகக் கட்டப்பட்டு அடுத்த ரயில் நிலையத்தில் வரும் சேவா மையத்துக்குத் தரப்படுகின்றன். அவை பத்திரமாக வங்கிக்குப் போகின்றன. இது 1942-ல்.  அங்கிருந்து கல்யாணம் வீடு கட்ட அட்வான்ஸ் கொடுத்து மாதங்கள் செல்ல எதுவுமே நடக்காது ஏமாற்றப்படுகிறார். இது 1966 சென்னை. மறுபடியும் மறுபடியும் அவர் வேறு வேறு மனிதர்களால் ஏமாற்றப்படுகிறார்.

குமரி எஸ் நீலகண்டன்
குமரி எஸ் நீலகண்டன்

காந்தியின் மரணத்திற்குப் பிறகு, லேடி மௌண்ட் பாட்டனுடன், பின் அரசு உத்யோகத்தில் கொஞ்ச காலம் என இருந்து கடைசியில் 1956-ல் சென்னைக்கு குடி பெயர்கிறார் கல்யாணம். இடையில் காந்தியின் நினைவில் அவர் பயன்படுத்திய பொருட்கள், கடிதங்கள் எல்லாவற்றையும் பாதுகாக்க வேண்டியிருந்தது. ”ஒரு கண்காட்சிக்கு நான் ஒழுங்கு படுத்த உதவுகிறேன்,” என்று வந்தவர் ஆவனங்களையும் புகைப்படங்களையும் திருடிச் சென்று வெளிநாட்டில் விற்க முயன்றதும், கிருபானந்த வாரியார் தன் பிரசங்கங்களில் புகழ்கிறாரே என்று ஒரு கட்டிட குத்தகையாளருக்கு பணத்தைக் கொடுத்து அவர் முழுதுமாக ஏமாற்ற முயன்றது, பாவம் குடிசைகளின் அவலத்தில் வாழ்கிறார்களே என்று தான் வேலை கொடுத்து பணமும் கொடுத்து உதவுவதாக அழைத்தும் யாரும் வராதது (இலவச கலாசாரம் தொடங்கியாயிற்று), தன் 90 வது வய்திலும் தனி ஆளாக,  பனியனும் கால்சட்டையுமாக வீட்டு வேலைகள், தோட்டவேலைகள் அத்தனையையும் தானே செய்யும் ஆசிரமத்தில் கற்ற ஒழுங்கு. இன்னமும் பலரிடம் ஏமாந்து கோர்ட்டுக்குப் போய் என்று அது தீர்ப்பு வரும் என்று காத்திருப்பது, ஓர் எளிய குடும்பத்துப் பெண்ணை மணந்தது, இப்படியான பல நிகழ்ச்சிகள், ராஜாஜி திருமணத்துக்கு வந்தது, சி.வி. ராமனுடன், அப்துல் கலாமுடன், இன்னும் கான் அப்துல் கஃபார் கான் ஒருகயிற்றுக் கட்டிலில் அமர்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருக்கும் காட்சி, கஃபார் கான் கல்யாணத்தின் குழந்தைகளுடன், காந்தி கைப்பட திருத்திய குறிப்புகள், இப்படி எத்தனையோ அரிய ஆவணங்கள், புகைப்படங்கள் புத்தகத்தை நிறைக்கின்றன.

கல்யாணத்துடன் ஏற்பட்ட பரிச்சயம் காற்றோடு கலந்து மறைந்த பேச்சாகப் போய்விடாது ஒர் அரிய ஆவணமாக நமக்குத் தந்துள்ளார் நீலகண்டன்.

ஆகஸ்ட் 15  (நாவல்)
ஆசிரியர்: குமரி எஸ் நீலகண்டன்

சாயி சூர்யா, 204/432, D 7, குருபிரசாத் ரெசிடென்ஸியல் காம்ப்ளெக்ஸ், டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை -18. தொலைபேசி: 9444628536

பக்கங்கள்: 502
விலை: ரூ 450

இணையத்தில் வாங்க.

11 Replies to “ஆகஸ்ட் 15”

  1. நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்திட ஆயிரக்கணக்கான தேச பக்தர்கள் பாடுபட்டனர். அஹிம்சையைப் பற்றிய முழுமையான சரியான புரிதல் இல்லாத காரணத்தால் மகாத்மா என்று புகழப்படுகிற காந்திஜியின் கண்ணோட்டம் மற்றும் அணுகுமுறை நமது சமுதாயத்திற்கு வரலாறு காணாத உயிர்சேதத்தையும், பொருட்சேதத்தையும், கண்ணீரையும், அநீதியையும், அவலங்களையும் அள்ளித்தந்தது. உண்மையிலேயே அஹிம்சை என்னும் வார்த்தைக்கு பதஞ்சலி முனிவரின் விளக்கம் இதோ: ‘அஹிம்சையை கடைப்பிடிக்கும் ஒருவரை மனத்தளவிலோ, உடல் ரீதியாகவோ யாரும் துன்புறுத்த துணிய மாட்டார்கள்’. மனத்திண்மையிலும், உடல் வலிமையிலும் பலசாலியான ஒருவருக்கு இது சாத்தியம். தனக்கு இருக்கும் மரியாதையை அஹிம்சையின் பெயரால் தவறாகப் பயன்படுத்திட நினைக்கும் ஒருவருக்கு?

  2. ‘ துருக்கியில் முஸ்தஃபா கெமால் பாஷா, காலிஃபா வை ஒழித்தபோது துருக்கியர் வரவேற்றனர். ஆனால் காந்திக்கு அது ஏற்கவில்லை. ஏனோ? இவருக்கென்ன கஷ்டம்? அலி சகோதரர்களோடு கிலாபத் இயக்கத்துக்கு துணை போனார். ஆனால் வேடிக்கை. அப்போது காங்கிரஸிலிருந்த ஜின்னா அதற்கு எதிர் அணியில். காந்தியை வன்மையாகக் கண்டித்தார். கல்கத்தாவில் நிகழ்ந்த ஹிந்து முஸ்லீம் கலவரத்தில், ஒரு ஹிந்துவுக்கு காந்தி உபதேசம் செய்கிறார். அந்த ஹிந்து கொன்ற குடும்பத்தின் அனாதைக் குழந்தையை எடுத்து முஸ்லீமாக வளர்க்கவேண்டும். ”உன் பாபத்துக்கு பிராயச்சித்தம் இதுவே,” என்கிறார். இம்மாதிரி எந்த முஸ்லீமுக்கும் அவர் உபதேசம் செய்ததாகவோ அந்த முஸ்லீம் அதை ஏற்றதாகவோ செய்தி இல்லை.’-

    காரணம் முஸ்லீம்கள் கொலைகளை செய்துவிட்டு , கவலைப்படாமல் இருந்தனர். காந்தியாரிடம் போய் அறிவுரை கேட்கவில்லை.எனவே காந்தியாரின் உபதேசம் ஏமாந்தவனுக்கு தான். ஏமாந்தவர்கள் தான் அவர் பின்னே போனார்கள்.

  3. Dear Sir,
    Where from this bloody idea of Ahimsa was got by Gandhi. At least it is not a Hindu philosophy. Can you show a Hindu God without weapon on hand? Ahimsa is basically an idea elaborated by Jainism and not fit for any time ( from sathya yuga to kaliyuga). If at all any avathar followed lot of restraint, it
    is Rama avathar. Where as my Krishna never showed any leniency to any of the enemies . He even says that Rama’s time was different. We have to follow only Krishna’s policy towards our enemies. Our country is completely damaged by following this Rama policy towards enemies.
    Krishna

  4. நல்ல ஒரு கட்டுரை…. இப்படியான வெகு அபூர்வ நூல்கள் பிரபலம் அடைய வேண்டும்…

  5. அத்விகா
    I agree with you. Sorry for writing in English. My frank views on Gandhi and I am going get barbs from all directions.
    Gandhi was the obstacle in the freedom movement. Under Tilak and his policies,India would have obtained freedom at least 20 to 30 years earlier if not for him. The freedom Indians won from the British was due to revolt by the Navy following the world war and the British did not have the stomach or men to take on the revolting Indian armed forces. Simple as that. India won freedom IN SPITE OF GANDHI. We have been duped into reading history at school written by the Congress. Example are the now discredited Aryan Invasion theory and sacrifices(!!) by the father (!!) of the nation and Nehru’s family. Gandhi was an ordinary man with warts and all like us mere mortals.More and more facts about him are coming out of the woodwork now and you wonder how this man was ever elevated to the status of a Mahatma. His pandering to the Muslims against Hindu’s interests and the nation in general, his unworkable,cowardly Ahimsa policies,his egoism and his moronic stubbornness is still costing the nation. The best thing that happened to the British rule was this man called Gandhi. They were happy to play along the game of “Gandhi ahimsa” knowing very will that there will not be any mass armed revolution to their rule.
    Another amusing fact.(?) Churchill was bed ridden with chest infection and his physician had put him on liquid diet. Churchill who loves his food was livid and he remarked that Gandhi ( who was once again fasting for some cause) was getting fed better than him. Meaning that glucose and other substances were given to Gandhi by his Doctor at that time of his fasting. (this is from the book ” Churchills secret war by Madusree Mukerjee)

  6. இந்த தளத்தில் முதன் முறையாக மஹாத்மா காந்தியடிகள் பற்றிய பஷபாதமில்லாத ஒரு வ்யாசம் வாசிக்க முடிந்தது. இந்த புஸ்தகத்தை அறிமுகம் செய்த ஸ்ரீ.வெ.சா. மஹாசயருக்கு நன்றி. ஸ்ரீ நீலகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    \\ காந்தி தன் கடைசி நிமிடங்களில் “ஹே ராம்” என்று சொல்லிக்கொண்டே இறந்தார் என்று உலகம் முழுதும் செய்தி பரப்பப்பட்டது. அப்போது அந்த இடத்தில் இல்லாதவர்களும் இதைச் செய்தார்கள், அது தவறு, என்பதை அப்போது அருகில் இருந்த கல்யாணம் சொல்கிறார்.\\

    ம்…….கல்யாணத்தை விடவும் மிக அருகில் இருந்த மனு மற்றும் ஆபா …… இறக்கும் போது காந்தியடிகள் “ஹே ராம்” என்று சொன்னதாகச் சொல்லியுள்ளனர்.

    இந்த விஷயம் சர்ச்சைக்கு உரியது என்று சொல்லுதல் மட்டிலும் பக்ஷபாதமற்ற ஒரு நிலைப்பாடாக இருக்கவியலும்.

    காந்தியடிகளுடைய ராம நாம நிஷ்டை வணக்கத்திற்குறியது. ஆச்ரிதமானது. அவரது எளிமை, ஒழுக்கம் சார்ந்த பிடிவாதம், சிக்கனம் போன்றவை ச்லாக்யமானது. க்றைஸ்தவ மதமாற்றத்திற்கு எதிரான இவரது கருத்துக்கள் மிகவும் நேர்மையானவை.

    ஆனால் ஏன் இஸ்லாமிய பிரிவினை வாதம் மற்றும் வெறி வாதம் போன்றவற்றுக்கு அடிப்பொடியாக இவர் ஆகிப்போனார் என்பது ராமபிரானுக்கே வெளிச்சம்.

    க்றைஸ்தவத்தைப் பற்றியது போல இஸ்லாமைப் பற்றிய இவரது புரிதலும் நேர்மையாக இருந்திருந்தால் ஹிந்துஸ்தானம் இன்று எப்படியோ இருந்திருக்கும்.

    \\\ My frank views on Gandhi and I am going get barbs from all directions.\\\

    ஸ்ரீ இந்தியன், தாங்கள் காந்தியடிகளைப் பற்றி சொல்லியுள்ள எதிர்மறையான கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு.

    காந்தியடிகள் என்ற தனி மனிதரின் வாழ்வு முறைகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உண்டு. சந்தேஹமற புறந்தள்ள வேண்டிய விஷயங்களும் பல உண்டு (ப்ரம்மசர்ய பரிசோதனை இத்யாதி). எந்த ஒரு மனிதரிலும் காணப்படும் நல்ல விஷயங்களை எதற்காகப் புறந்தள்ள வேண்டும்?

    காந்தியடிகள் என்ற அரசியல் வாதியினால் ஹிந்துஸ்தானமும் ஹிந்துஸ்தானியரும் அடைந்த துயரங்களும் நஷ்டங்களும் கணக்கிலடங்காதவை. தேசப்பிரிவினை அவரால் தேசத்திற்கு கொடுக்கப்பட்ட பெரும் கசையடி.

    His pandering to the Muslims against Hindu’s interests

    his unworkable,cowardly Ahimsa policies

    his egoism and his moronic stubbornness is still costing the nation.

    ஹிந்துக்கள் முஸல்மான் கள் இவர்களிடையே புழங்கி வந்த ஹிந்து சான்றோர்களின் வாழ்க்கை சரிதங்களை வாசித்து ……..காந்தியடிகளுடைய வாழ்க்கையில் அஹிம்சை என்ற விஷயத்தை காந்தியடிகள் கையாண்டதையும் பார்க்கையில்…….. காந்தியடிகளின் அஹிம்சையில் விஞ்சுவது சொல்லொணா ஹிம்சை…. மற்றும் இவரது பிடிவாதம்.

    அஹிம்சா பரமோ தர்ம: என்பதைத் தவ ஒழுக்கமாகப் பேணிய ஹிந்து சான்றோர்களின் வாழ்வில்……. இவர்களது அஹிம்சை என்ற தவ ஒழுக்கம் முரட்டு முஸல்மான் களைப் பணிய வைத்தது; அவர்களின் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளச் செய்தது. இந்த சான்றோர்கள் ஹிந்துக்களை மேலும் பண்பட்ட ஹிந்துக்களாக மாற்றினர். முஸல்மான் களையும் மேலும் பண்பட்டவர்களாகவும் ஹிந்துக்களுடன் இணக்கம் கொண்டவர்களாகவும் மாற்றினர். முஸல்மான் களிடம் பரிவு உடைய ஹிந்து சான்றோர்கள் ஹிந்துக்களை எப்போதும் *அல்லா* பஜனை செய்ய பணிப்பித்ததில்லை.

    காந்தியடிகளுடைய அஹிம்சை என்ற பிடிவாதம் ஹிந்துக்களை சொல்லொணா ஹிம்சைக்கு உட்படுத்தி இந்த தேசத்தை இதுவரையிலும் விடாது பீடித்து வருகிறது. அன்றைய அலி சஹோதரர்கள் முதல் இன்றைய ஜிஹாதி சக்திகள் வரை முஸல்மான் களுக்கோ என்றால்…… எந்தளவுக்கு ஹிம்சை செய்தாலும்…… அதைஹிந்துக்கள் அஹிம்சா போராட்டம் என்ற பெயரில் உண்ணாவ்ரதம் தெருக்கூச்சல் இத்யாதிகளுடன் முடங்கிப்போவர் என்ற அஹம்பாவத்தையும் வெறியையும் கொடுத்துள்ளது. ஹிந்துக்களை இன்று வரை *அல்லா* பஜனை செய்யப் பணிப்பிக்கிறது.

    காந்தியடிகள் மற்றும் பாபாசாஹேப் அம்பேத்கர் போன்றோரின் வாழ்வில் உள்ள நிறைகளை மட்டிலும் உரத்துப் பேசும் அறிவுஜீவிகள் இவர்கள் வாழ்வில் குறைகளும் உண்டு என்று “அஸ்வத்தாம ஹத: குஞ்சர:” என்ற படிக்கு சொரத்து இல்லாது மழுப்பி விடுவார்கள். குறைகளைப் பட்டியலிடவும் முனையார் —— யாரேனும் பட்டியலிட முனைந்தால் குறைகள் குறைகளே இல்லை ….. என்ற ரீதியில் இஸ்லாமிய “தக்கியா” முறைகளின் படி பூசி மொழுகவும் செய்வார்கள்.

    உரத்துப் பேச வேண்டியவைகள் மதவாதிகளை பற்றிய குறைபாடுகள். அடக்கி வாசிக்கப்பட வேண்டியவை Holy Cow அரசியல் வாதிகளின் பிடிவாதங்களும் குறைபாடுகளும்.

    Ofcourse I can not but pity the intellectuals. In the hyper internet era, even a sneeze from an intellectual to point out flaws in the life of Gandhi and Ambedkar would almost tarnish their intellectual image. Arun Shorie could be an exception. And Arun ji’s observations were met with taqqiya style defence by intellectuals. And poor Radha Rajan and late Malar Mannan Mahasaya. Forgotten voices on Gandhi ji.

  7. அண்ணல் காந்தி அடிகளைப்பற்றிய ஒரு நல்லக்கட்டுரை. காந்திய அடிகள் குறைகளற்ற ஒரு தலைவர் அல்லர் ஆனால் நிறைகள் பல நிறைந்தவர். தனிமனிதவாழ்விலும் பொதுவாழ்விலும் ஒழுக்கத்தினை அவர் வலியுறுத்தினார். அவர் அவதார புருஷர் அல்லர். அண்ணலின் அடிப்படைக்கருதுக்களான சர்வோதயம், ஸ்வதேசி, பரவலாக்கப்பட்ட அரசியல் பொருளாதார அமைப்புக்கள், கிராமங்களை மையமாகக்கொண்ட அரசியல் பொருளியல் இவையாவும் கனவு போல் இன்று தோன்றினாலும் நம் நாட்டையும் பண்பாட்டையும் காப்பாற்றுவதற்கு அவசியம்.

  8. The trouble is he experimented more with the future of the nation than with truth. However, we must admit it is only after his arrival the freedom movement which was all along sporadic was galvanized into concerted and countrywide action in which all sections of people participated. But again, cowardice found justification in the name of ideology and was made to look like a virtue! An otherwise virile nation was castrated into subjugation with his outlandish principles.

  9. அண்ணல் காந்தியடிகளை முன்னிறுத்தி இன்று அரசியல் செய்யும் சோனியா, ராகுல் ஆகிய புண்ணியவான்கள், உண்மையான தேச பக்தர்களாக இருந்தால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களையும் உயர்த்திப் போற்ற வேண்டும். அண்ணல் காந்தியடிகள் “The Father of the Nation” என்றால் நேதாஜி அவர்கள் “God Father of the Nation” என்று போற்றப்பட வேண்டும். அஹிம்சை என்பது தனி மனிதனுக்கு போதிக்கப் படலாம். ஆனால் அரசாங்கத்திற்கு அல்ல. அரசாங்கம் என்பது வலிமை பொருந்திய, மக்களுக்கு நன்மை தரவல்ல நடவடிக்கைகளை துணிந்து ஆளுமையுடன் செய்யக்கூடிய ஒரு மிகப்பெரிய கட்டுமானமாகும். புத்தர் பாராட்டிய அஹிம்சை சிறந்தது. ஏனெனில் அவர் அரசியல்வாதியாக இல்லாமல் தனி நபராக இருந்து புதிய பாதையை மக்களுக்குக் காட்டினார். ஆனால் காந்தியடிகள் ஒரு அரசியல்வாதியாக இருந்து, ஆன்மீகவாதியாகவும் இருந்து, இரண்டில் ஒன்றையாவது முழுவதுமாய் வெளிப்படுத்த இயலாமல் ஹிந்து மக்களை பீடித்த குழப்பவாதியாகிப் போனார் என்பதே கசப்பான உண்மை. அண்ணலின் அரசியலா, ஆன்மீகமா தடுமாற்றமே, ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயமும் இன்று நாட்டில் நடக்கும் மத மாற்றங்களையும், பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் தெரிந்தும் ஒன்று கூடிப் போராடாமல் இருக்கக் காரணங்களாகும்.

  10. ஜைன சமயத்தில் அஹிம்சை, அஸ்தேயம் எனத் தொடங்கி ஒரு 8 விதிகள் தலையாய ஒன்றாக கருதப்படுகின்றன; ஆனால் சனாதன தர்மத்தில் அவற்றை மிக அடிப்படை நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது. மௌடீகத்திலும், பிடிவாதத்திலும், மூர்க்கத் தனத்திலும் திளைத்திருந்த காந்தி தனி மனிதனுக்குரிய ஒரு கோட்பாட்டை, கொக்குக்கு ஒன்றே மதி என்ற வகையில் பிடித்துக் கொண்டு, தான் நாசமானது மட்டுமல்லாமல், இந்த தேசத்தையே கையாலாகாத பேடி நாடாக அடித்துச் சென்று விட்டது தான் அவரது ஒரே ஒரு சாதனை. அவர் எடுத்த எந்த ஒரு போராட்டத்தையாவது முழுமையாக நிறைவு செய்திருக்கிறாரா அல்லது வெற்றி வரை இட்டுச் சென்றிருக்கிறாரா? ஏதோ ஒரு சாக்கு என்று வந்து விடும், உடனே கோபித்துக் கொண்டு போராட்டத்தை வாபஸ் பெறுவார். மூர்க்கத்தனத்துக்கும் நெஞ்சுரத்துக்கும் வேறுபாடு ஏகமாய் உண்டு, இவரிடம் இருந்தது முன்னது. ஏற்கெனவே பௌத்தனால் போர்க் குணம் முறிந்த நிலையில் இருந்த இந்தியாவுக்கு விமோசனமே இல்லாத அளவுக்கு இன்னும் ஒரு படி நாசப்படுத்தியது இவர் பங்களிப்பு. தனி மனித தர்மத்துக்கும் சமுதாய தர்மத்துக்கும் தேச தர்மத்துக்கும் வித்தியாசம் தெரியாத காந்தி போன்ற போலிகளை இந்த தேசம் மறந்ததில் வியப்பில்லை; ஒரு உபசாரத்துக்காகக் கூட இப்போது காந்தி பெயரையோ, கருத்தையோ யாராவது போற்றுகிறார்களா? கவைக்குதவாத போலித் தனங்கள் தாமே செத்தொழியும். அணுகுண்டு போடும் விமானம் பறக்கும் போது, நான் வெளியே மைதானத்தில் வருவதைப் பார்த்து, ஆஹா என்ன பெரிய மஹான் இவர் என்று மயங்கி விமானி குண்டு போடாமல் போய் விடுவான் என்று பேசும் அளவுக்கு அவர் புத்தி பேதலித்து இருந்திருக்கிறது, தற்புகழ்ச்சியில் தன்னை முழுவதும் இழந்திருந்தார்; அவர் புத்தியின் வளர்ச்சி இந்த அளவுக்குத் தான் இருந்திருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி ஒரே ஒரு நம்பிக்கை, அதை மூட நம்பிக்கை என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் – எத்தனை வகை போலி காந்திகளின் போலிப் படிகள் வந்தாலும், சித்தர்களும், முனிவர்களும் இக்கணமும், எக்கணமும் வாழும் இந்த ஆன்மீக தேசத்தை எந்த தீய சக்தியாலும் சாக அடிக்க முடியாது; இது சரித்திரம் உலகுக்கு உணர்த்தும் பாடம்.

    இது ஒரு பக்கம் இருந்தாலும், தூசி தட்டி எந்த பாரபட்சமும் இல்லாமல், நமது பாடப் புத்தகங்களில் படிக்கும் சரித்திரமாக இல்லாமல், சரித்திரத்தை சரித்திரமாகவே, சுவையாக, உன்னத லட்சியங்களை இலை மறைவு காய் மறைவாக சத்யா மூலமாக நம் மனதில் எழுத்தாளர் குமரியார் புகுத்தியிருக்கிறார். தலைப்பு முதல் கையாண்ட விதம் வரை அனைத்துமே வித்தியாசமாக இருக்கிறது. பாத்திரங்களின் பெயர்கள் வேண்டுமானால் புனைவாக இருக்கலாம், ஆனால் அந்த பாத்திரங்கள் தாங்கி வரும் எண்ணங்களும் சிந்தனைகளும், நிஜமாகவே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லோர் தீயோரின் அப்பட்டமான பிரதிபலிப்பு. அனைத்திற்கும் மேலாக சரித்திரத்தைக் கூட இத்தனை ரஸமாகத் தர முடியுமா என்று வியக்க வைக்கிறது குமரியாரின் முயற்சி. இது பாராட்டப் பட வேண்டிய முயற்சி மட்டுமல்ல, ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட. வாழ்த்துக்கள்!

  11. அன்று மகாத்மா தெரிந்தோ தெரியாமலோ செயல்பட்டதில் ஏற்பட்ட இன்றுவரை தொடரும் தவறுகள் கண்டு நாங்கள் மிகுந்த வருத்தம் அடைகிறோம்; நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நன்மையாக நடக்கட்டும்; வரும் தேர்தலில் மோடி அவர்கள் வெற்றி அடைந்து தவறுகள் நீக்க பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *