காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்

morning_hindutvaகாலரா என்ற சொல் மரண தேவனின் சாசனத்திற்கு இணையானதாக ஒரு 60 ஆண்டுகள் முன்பு வரை கருதப் பட்டது.   கங்கை நதிப் பகுதிகளில் தேங்கிய நீர்க்குட்டைகளின் காரணமாக இந்தத் தொற்று நோய் முதன்முதலில் உருவானதாகக் கருதப் படுகிறது. பின்னர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், சர்வதேச கடல்வழி வர்த்தகத்தின் காரணமாக,  ரஷ்யா, ஐரோப்பா, வட, தென் அமெரிக்கா கண்டங்கள், ஆப்பிரிக்கா என்று உலகம் முழுவதும் பயணித்து கோடிக்கணக்கில் உயிர்களைக் காவு கொண்டது. 18,19,20ம் நூற்றாண்டுகளின் உலக வரலாறு பற்பல நாடுகளில் காலாரா சாவுகளின் நீண்ட பட்டியல்களால் நிரம்பியது.  1900 முதல் 1920 வரையிலான இருபது வருடங்களில் இந்தியாவில் மட்டும் 80 லட்சம் மக்கள் காலராவால் இறந்ததாகக் கணக்கிடப் பட்டுள்ளது. சுகாதார சீர்கேடுகள் மட்டுமின்றி, பிரிட்டிஷ் காலனிய அரசின் பொருளாதார சுரண்டல், பஞ்சங்கள், இந்திய பொதுஜனங்கள் குறித்த மெத்தனப் போக்கு ஆகியவையும் மரணங்கள் அதிகரிக்கக் காரணமாக இருந்தன.

சமீப காலங்களில் வளர்ந்த நாடுகளில் சிறப்பான பொது சுகாதார கட்டமைப்புகளால் காலரா முற்றிலுமாக தடுக்கப் பட்டு விட்டது. இந்தக் கட்டமைப்புகள் சீராக இல்லாத வளரும் நாடுகளில் அவ்வப்போது தொற்று நோயாகப் பரவுகிறது. இந்த 21ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் பல பகுதிகளில், ஒவ்வொரு மழைக் காலத்திலும் காலரா பரவி மக்களைப் பீடிக்கிறது. ஆனால், முன்பு போல, அது ஆட்கொல்லியாக இல்லாமல், சிகிச்சை மூலம் மீளக் கூடிய நோயாக ஆகி விட்டது. நவீன மருத்துவம் இந்த நோயின் காரணிகளை முழுமையாகக் கண்டறிந்து அவற்றுடன் போராடி வெல்லக் கூடிய அளவுக்கு தடுப்பூசிகளையும், மருந்துகளையும் பரவல் தடுப்பு முறைகளையும் உருவாக்கியதே இதற்குக் காரணம்.

Scanning electron microscope image of Vibrio cholerae
Scanning electron microscope image of Vibrio cholerae

1854ல் ஜான் ஸ்னோ என்ற பிரிட்டிஷ் மருத்துவர் குடிநீர் மாசுபட்டு விஷத் தன்மை அடைவது தான் இந்த நோய்க்குக் காரணம் என்று கருதி, அதைத் தடுக்கும் வழிமுறைகளை செயல்படுத்தக் கோரினார். லண்டன் நகரில் இதன் மூலம் நோய்ப் பரவல் தடுக்கப் பட்டது இந்த கோட்பாட்டை உறுதி செய்தது.  1885ல் நவீன நுண்ணுயிரியலின் தந்தை என்று கருதப் படும் ஜெர்மானிய அறிவியலாளர் ராபர்ட் கோச் (Robert Koch)  இந்த நோயை உருவாக்கும் Vibrio cholerae என்ற பாக்டீரியாவை நுண்ணோக்கி மூலம்  கண்டறிந்தார். அடுத்து வந்த பல பத்தாண்டுகளில், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், தனிமைப் படுத்தப் பட்ட கழிவு நீர் வெளியேற்றுக் குழாய்களும் அமைக்கப் பட்டு தொற்று நோய்ப் பரவல் பெருமளவு தடுத்து நிறுத்தப் பட்டது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் காலரா தொடர்கதையாகவே இருந்தது. நோயால் பாதிக்கப் பட்டவர்கள் சிகிச்சை ஏதும் இன்றி உடல் திரவங்கள் அனைத்தும் உலர்ந்து, கிட்னிகள் செயலிழந்து குரூரமாக மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை தான் இருந்தது. உலகளவில் மருத்துவ ஆய்வுகளில் பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. ஆயினும் 1950கள் வரை காலரா நோய்க்கான காரணிகள் முழுவதுமாக அறியப் படவில்லை.

அந்த முக்கியமான அறிதலை அளித்தவர் டாக்டர் சம்பு நாத் டே என்ற இந்திய மருத்துவ அறிவியலாளர்.  காலரா  குறித்த ஆய்வுகளில் 1952 முதலே ஈடுபட்டு வந்த அவர், காலராவை உருவாக்கும் நச்சுக்காரணி (Cholera toxin)  பற்றிய திட்டவட்டமான முடிவுகளை அறிவித்தார்.  1959ம் ஆண்டு இது குறித்து Nature இதழில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை, அதற்குப் பின் வந்த காலங்களில் செல் உடற்கூறியல் (cellular physiology) உயிர்வேதியியல் (biochemistry), தடுப்பு மருத்துவ இயல் (immunology) ஆகிய பல்துறை ஆய்வுகளிலும் மிகுந்த தாக்கம் செலுத்தியது. காலரா தடுப்பூசிகளும், சிகிச்சைக்கான மருந்துகளும் உருவாகக் காரணமாகியது.

எஸ்.என்.டே என்கிற சம்பு நாத் டே கல்கத்தாவில் இருந்து 40 கிமீ தொலைவில் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1915ம் ஆண்டு பிறந்தார். கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் 1939ம் ஆண்டு M.B. எனப்படும் அக்காலத்திய மருத்துவப் பட்டப் படிப்பை முடித்தார். இந்தியாவை அதிகமாகப் பாதிக்கும் நோய்களைப் பற்றி ஆராய்வதற்காக ஏற்படுத்தப் பட்டிருந்த வெப்ப மண்டல மருத்துவம் (Tropical Medicine)  என்ற துறையில் பட்டயம் பெற்றார்.  லண்டன்  பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் 1949ம் ஆண்டு  நோய்க்கூறு அறிவியல் (pathology) துறையில் முனைவர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார்.  லண்டன் பல்கலைக் கழகக் கல்வியும் அனுபவமும் அவரை ஒரு தீவிரமான ஆராய்ச்சியாளராக ஆக்கியிருந்தன. காலராவின் நோய்க்கூறு உருவாக்கம் (pathogenesis)  எவ்வாறு ஏற்படுகிறது என்பதையே தன் ஆய்வுக்கான விஷயமாக அவர் தேர்ந்தெடுத்தார். 1950களில் கல்கத்தாவின் நீல்ரதன் சர்கார் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வந்து சேர்ந்திருந்த காலரா நோயாளிகளை நேரடியாக பரிசோதனை செய்யும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது.

Shambhu_Nath_Deகாலரா நச்சுக்காரணியை அவர் கண்டுபிடித்த விதம் அதுவரை நோய்க்கூறு மருத்துவ இயலில் யாரும் செய்து பார்க்காத புதுமையான பரிசோதனையாகும். சிறுகுடலுக்குள் V. cholerae  நுண்ணியிர் நுழைந்து உருவாக்கும் தொற்று தான் காலராவுக்குக் காரணம் என்பது முன்பே தெரிந்திருந்த விஷயம். ஆனால் நோயின் அறிகுறிகளான வாந்தி, பேதி ஆகியவை ஏற்படும் விதம் புதிராக இருந்தது.  எஸ்.என்.டே தனது பரிசோதனையில் முயல்களின் குடலுக்குள் காலரா நுண்ணுயிர் திசுக்களை (cultures) செலுத்தினார். அந்த முயல்கள் காலரா அறிகுறிகள் ஏதுமின்றி நான்கு நாட்களில் இறந்தன. அவற்றின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது உடலில் தங்கியிருந்த பிசுபிசுப்பான திரவத்தில் இருந்து காலரா நுண்ணியிர்களை மீண்டும் பிரித்தெடுக்கலாம் என்று தெரிந்தது. இதற்குப் பிறகு தொடர்ச்சியாக பல பரிசோதனைகளை டே நிகழ்த்தினார்.  நோய்க்கூறு காரணிகளை புரிந்து கொள்வதற்காக அவர் உருவாக்கிய முறை rabbit loop model  என்று அறியப் படுகிறது. தனது ஆய்வுகளின் இறுதியில், காலராவை உருவாக்கும் நச்சுக் காரணி,  பாக்டீரியாக்கள் சுரக்கும் நஞ்சு (exotoxin) வகையைச் சார்ந்தது என்று அவர் நிரூபித்தார். அதற்கு முன்பு வரை அது பாக்டீரியா செல்களுக்கு உள்ளிருக்கும் நஞ்சு (endotoxin) வகையைச் சார்ந்தது என்றே அறிவியலாளர்கள் கருதி வந்தனர். எஸ்.என்.டேயின் ஆய்வு முடிவுகள் அந்தத் துறையில் மிகப் பெரும் அறிதல் பாய்ச்சலை நிகழ்த்தியவை. ஆனால் எல்லா புதிய சிந்தனைகளையும் போல, ஆரம்பத்தில் அவை எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. 1970களின் தொடக்கத்தில் தான் அவற்றின் முழு வீச்சும் சாத்தியங்களும் மருத்துவ ஆய்வுலகத்தால் புரிந்து கொள்ளப் பட்டன.

கடுமையான மருத்துவக் கல்லூரி ஆசிரியர் பணி மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு இடையே, சொற்பமான உபகரணங்களையும் வசதிகளையும் வைத்துக் கொண்டு தனது ஆய்வுகளை டே நிகழ்த்தினார். ஆய்வுக்கான உதவிகளுக்காக அரசு இயந்திரத்துடனும் அதிகார பீடங்களுடன் முட்டி மோதுவதில் அதிக ஆற்றலை செலவழிப்பதை அவர் தவிர்த்தார். சில நேரங்களில் ஆய்வுக்காக தனது சொந்தப் பணத்தை செலவழிக்கவும் அவர் தயங்கவில்லை.

SN_De_curret_science1973ம் ஆண்டு டே தனது மருத்துவ ஆய்வுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 1978ம் ஆண்டு நோபல் பரிசு அமைப்பு நடத்திய காலரா மற்றும் தொற்று நோய் ஒழிப்பு உலகக் கருத்தரங்குக்கு அவர் அழைக்கப் பட்டார். இந்த ஒரு சிறப்பைத் தவிர்த்து தன் வாழ்நாளில் வேறு எந்த கௌரவத்தையும் அவர் இந்தியாவிலோ, உலக அளவிலோ பெறவில்லை. அது பற்றி அவர் கவலை கொள்ளவும் இல்லை. அவரது கண்டுபிடிப்பின் அடிப்படையில் அமையும் மருந்துகளுக்கான காப்புரிமைகளையோ, அதன் வர்த்தக லாப சாத்தியங்களையோ குறித்து அவர் யோசிக்கவே இல்லை. மானுட நலனை மட்டுமே கருத்தில் கொண்டு எந்த பிரதிபலனும் பாராத ஒரு கர்மயோகியாகவே வாழ்ந்து மறைந்தார்.  அவரது மருத்துவ சாதனைகள் முழுவதும் சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில், இந்திய ஆய்வுக் கழகங்களின் மூலமாகவே நிகழ்த்தப் பட்டவை என்பதும் நமக்குப் பெருமையளிக்கும் விஷயம்.

“எஸ்.என்.டே மீது நமக்கு இருக்கும் மதிப்பு அவரது கண்டுபிடிப்பு எந்த அளவுக்கு மனிதகுலத்திற்கு உதவியுள்ளது என்பதை வைத்து மட்டும் அல்ல.  நிறுவப் பட்ட அறிவுத் தளங்களை கேள்விக்கு உட்படுத்தும் உறுதி,  முன்னுதாரணமான சிந்தனைப் போக்கு, புதிய தேடல்களுக்கான உந்துதலை செயல்படுத்தும் திறன் ஆகியவற்றுக்காகவே அவர் முதன்மையாக மதிக்கப் படுவார்”  – எஸ்.என்.டே குறித்து இத்தகைய உயர்வான மதிப்பீட்டை நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஜோஷுவா லீடர்பெர்க் (Joshua Lederberg) வெளிப்படுத்தியுள்ளார். டே பெயரை நோபல் பரிசுக்காக அவர் பரிந்துரைக்கவும் செய்தார். ஆனால் அது நோபல் கமிட்டியால் ஏற்கப் படவில்லை.  அதனால் என்ன,  மனித உயிர்களை நோயிலிருந்து காப்பதிலும் மீட்பதிலும், மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்ற பல அறிவியலாளர்களையும் விட, சம்பு நாத் டேயின் பங்களிப்பு மிக அதிகமானது, உயர்வானது.

நாம் மறந்து விட்ட இந்தியாவின் மற்றொரு மகத்தான மருத்துவ அறிவியல் மேதை எல்லப்ரகாத சுப்பாராவ். அற்புத மருந்துகளின் வித்தகர் (Wizard of wonder drugs)  என்று புகழப் பட்டவர். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து நவீன மருத்துவத் துறையில் பெரும் சாதனைகள் படைத்தவர். மனித நேயர். அவரைக் குறித்து அரவிந்தன் நீலகண்டன் ஒரு அருமையான கட்டுரையை எழுதியிருக்கிறார்.

1955ல் போலியோ தடுப்பு மருந்தை முதன்முதலில் வெற்றிகரமாக உருவாக்கிய அமரிக்க மருத்துவ அறிவியலாளர் ஜோனஸ் ஸாக் (Jonas Salk)  அதை காப்புரிமை செய்வது குறித்து கேட்ட போது “சூரியனை காப்புரிமை செய்ய முடியுமா என்ன?” என்று பதிலளித்தார். தனது மருத்துவ கண்டுபிடிப்புகளை வணிக நோக்கம் இன்றி உலக மக்களுக்கு அர்ப்பணித்த அவரது செயல் இன்றளவும் மிகவும் விதந்தோதி பாரட்டப் படுகிறது. அது உன்னதமான செயல் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதற்கு சிறிதும் குறையாதவை மிக எளிய குடும்பங்களில் பிறந்து தங்களது அறிவால், உழைப்பால் உயர்ந்த சுப்பா ராவ், எஸ்.என்.டே ஆகியோரது பங்களிப்புகள். அவற்றை அறிந்து உலகுக்கு அறிவிக்க வேண்டிய கடமை இந்தியர்களாகிய நமக்கு உள்ளது.

நாளை மீண்டும் சந்திப்போம்.

இக்கட்டுரை எழுதத் துணைபுரிந்தவை:

[1]  Cholera Tamer Sambhu Nath De,  Science Reporter, November 2013

[2]  Dr Sambhu Nath De: unsung hero, By G. Balakrish Nair and Yoshifumi Takeda. Indian Journal of Medical Research

6 Replies to “காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்”

  1. தற்கால அறிவியலிலும் மருத்துவத்திலும் பாரதத்தின் தவப்புதல்வர்களின் பங்களிப்பை சிறப்பாக எடுத்து கூறும் இது போன்ற ஆயிரக்கணக்கான கட்டுரைகள் வர வேண்டும். பாரத அன்னையின் மணி மகுடத்தில் ஒளி வீசும் வைரமாக இருக்கும் சம்பு நாத் டேவிற்கு வணக்கத்துடன் நன்றிகள்

  2. சம்பு நாத் டேவிற்கு வணக்கத்துடன் நன்றிகள்.பாராட்டுக்கள். தற்கால அறிவியலிலும் மருத்துவத்திலும் இந்தியாவின் சாதனைகளை சிறப்பாக எடுத்து கூறும் இது போன்ற கட்டுரைகள் நிறைய படிக்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளேன். இதுபோன்ற அடுத்தக் கட்டுரை என்று வெளிவரும் ஐயா !

  3. JAI SHAMBUNATH DEY.HIS RESEARCH SAVED MY MOTHER FROM CHOLERA ATTACK WHEN I WAS A SMALL BOY.GOD BLESS HIM AND ALL HIS FAMILY MEMBERS FOR ALL GENERATIONS TO COME.

  4. Indian Government should infuse money for more scientific research in different areas.
    It is sad that our heroes are not remembered even in text books.

  5. நல்ல கட்டுரை . இன்றைய நாகரிக உலகில் எல்லாமே கலப்படம். பெப்சி போன்ற பானங்கள். இவைகள் நட்சுதன்மை என்று தெரிந்தும் அரசு இவைகளை தடுக்கவில்லை.என்ன கொடுமை. வளமான மற்றும் ஆன்மிக வளர்சிக்கு என்ன என்ன ஆகாரம் பற்றிய கட்டுரைகள் காலத்தின் கட்டாயம்.

  6. அருமையான செய்திக்கட்டுரை . மருத்துவர் சம்புநாத் டே -விற்கு நன்றியும் பாராட்டும். மூட நம்பிக்கைகள் நிறைந்த அந்த நாட்களில் துணிவோடு போராடி வெற்றி கண்ட அந்த மா மனிதரின் நல்ல கண்டு பிடிப்பால் இன்று நம்மில் பலர் உயிரோடு இருக்கிறோம் என்பதுதான் உண்மை. காலரா வந்தால் கடவுள் குற்றம் என்றும் ,அம்மை போட்டால் மகமாயி குற்றம் என்றும் முறையான மருத்துவம் இன்றி பல உயிர்கள் மாண்டன. இதை முழு மூச்சுடன் தடுத்து நிறுத்திய அந்த மாமனிதர் தான் மனிதருள் மாணிக்கம். மறவோம் அவர் தம் கடமையை. வாழ்க அவர் புகழ். இந்த நல்ல கட்டுரையை வெளியிட்டமைக்காக நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *