நரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும் – புதிய புத்தகம்

Namo_Sp_chokkalingam_book

குஜராத் என்றால் காந்தி நினைவுக்கு வந்தது ஒரு காலம். இன்று மோடியும் சேர்ந்தே வருகிறார். சமகால அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கும் மோடியின் வாழ்க்கையை குஜராத்தின் அரசியலோடு இணைத்து விவரிக்கிறது எஸ்.பி.சொக்கலிங்கம் எழுதியிருக்கும் புத்தகம்.

நரேந்திர மோடியின் விரிவான அரசியல் வாழ்க்கை வரலாறு, கடந்த 12 ஆண்டுகளில் அவரது தலைமையில் குஜராத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் & சாதனைகள் என்று இரு பகுதிகளாக இந்த நூல் அமைந்துள்ளது. 2002 குஜராத் கலவரத்தின் பின்னணி, அது தொடர்பான பல்வேறு விசாரணை கமிஷன்கள், நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் நூல் விலாவாரியான செய்திகளைத் தருகிறது. தொடர்ந்து மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் குஜராத்தில் மோடியின் தலைமையில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றதற்குக் காரணம் மாநில அரசின் செயல் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று தீண்டியிப்பதால் தான் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுகிறது. மோடியின் தினசரி அலுவல் பணிகள், ஆர்வங்கள், தனிநபர் வாழ்க்கை குறித்த சுவாரஸ்யமான செய்திகளும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

நூலாசிரியர் எஸ்.பி.சொக்கலிங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். காப்புரிமை – அறிவுசார் சொத்துரிமை (தமிழக அரசால் 2010ன் சிறந்த புத்தகமாக தேர்ந்தெடுக்கப் பட்டது), மதுரை சுல்தான்கள் (வரலாறு), பிரபல கொலை வழக்குகள் (இந்தியாவில் 20ம் நூற்றாண்டில் நடந்த பிரபல கொலை வழக்குகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் பற்றியது) ஆகிய மூன்று நூல்களை எழுதியுள்ளார். இது இவரது நான்காவது நூல். தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் எழுதி வருகிறார்.

நரேந்திர மோடி
ஆசிரியர்: எஸ்.பி.சொக்கலிங்கம்

பக்கங்கள்: 205, விலை: ரூ. 125
வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிஷர்ஸ், தி.நகர், சென்னை – 17. தொலைபேசி: 7200050073, 044-24342771.
2014 சென்னை புத்தகக் கண்காட்சியில் கடை எண் 693ல் கிடைக்கும்.

நூலிலிருந்து..

“மற்ற அரசியல்வாதிகள் போல் இல்லை இவர் வீடு. யாரும் இவர் வீட்டிற்கு வரமாட்டார்கள். இவரும் குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர வேறு யாரையும் தன் வீட்டிற்கு அனுமதிப்பதில்லை. அரசாங்கம் இவருக்கு கொடுத்த பங்களாவில் ஒரு சமையல்காரர், இரண்டு சிப்பந்திகள் அவ்வளவுதான். ஒரு அரசாங்க பிரதிநிதியின் வீடு அது என்றால் அனைவரும் ஆச்சர்யப்படுவார்கள். சமையல்காரர் வரவில்லை என்றால் சிப்பந்தி ஒருவரே சமையல் வேலையை பார்த்துக்கொள்வார். திருமணம் செய்துகொள்ளவில்லை (பால்ய விவாகம் நடந்ததாக எதிர் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்). குடும்பத்தினரையும் கூட சேர்த்துக்கொள்ளவில்லை. 95 வயதான தாய் தன்னுடைய மூத்த சகோதரரின் வீட்டில் தங்கியிருக்கிறார். மூத்த சகோதரர் அரசு சுகாதாரத் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இரண்டாவது சகோதரர் நகரத்தின் ஒரு பகுதியில் நியாயவிலைக் கடை வைத்திருக்கிறார். மூன்றாவது சகோதரர் அரசாங்க பணியில் குமாஸ்தாவாக பணிபுரிகிறார். பலபேருக்கு இந்த குமாஸ்தாவின் அண்ணன்தான் மாநிலத்தின் முதல்வர் என்று தெரியாது. முதல் அமைச்சருடன் அவருடைய மூன்று சகோதர்களையோ அல்லது இரண்டு சகோதரிகளையோ யாரும் பார்த்ததில்லை.

தினமும் காலையில் சுமார் 4:30 மணிக்கு எழுந்துவிடுவார். ஒரு மணி நேரம் யோகா செய்வதற்கு ஒதுக்கிவிடுவார். பின்னர் ஈமெயில்களை பார்வையிட்டு அலசத் தொடங்கிவிடுவார். இணையத்தில் குறிப்பாக கூகுள் அலர்ட்ஸை பார்வையிடுவார். அன்றைய தினசரிகள் அனைத்தும் முதல்வரின் வீட்டிற்கு காலையில் வந்துவிடும்.

காலை சுமார் 7:30 மணிக்கு முதல்வர் தன்னுடைய அலுவல் பணிகளை ஆரம்பித்துவிடுவார். இவருக்கு கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மீது அலாதி ஈடுபாடு. அரசுப் பணியை மேம்படுத்துவதற்காக அனைத்து துறைகளிலும் தகவல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. பம்பரம் போல் வேலை செய்வார். 15 நிமிடங்களுக்கு அதிகமாக நான் ஓய்வெடுத்ததில்லை என்று அவரே ஒரு கூட்டத்தில் உரையாடும் போது தெரிவித்திருக்கிறார். அபார நியாபக சக்தி. எந்த வேலையை யாரிடம் கொடுத்தால் வேலை வெற்றிகரமாக முடியும் என்று நன்கு அறிந்தவர். ஒரு பிரச்சனையின் முழு பரிமாணத்தை தெரிந்துகொள்ளாமல் அதற்கு பதில் தேடமாட்டார். ஒரு பிரச்சனையை நன்கு புரிந்து கொண்டாலே அதை பாதி சரி செய்தமாதிரி என்று அடிக்கடி கூறுவார். தற்காலிகமான தீர்வெல்லாம் அவருக்கு பிடிக்காது. முழு தீர்வுதான் அவரைப் பொருத்தவரை சரியான தீர்வு. ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை எப்பேற்பட்டாவது முடிக்காமல் ஓயமாட்டார். பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்தாயிற்றே, இனிமேல் நமக்கென்ன என்று சும்மா இருந்துவிடமாட்டார். பொறுப்பை ஒப்படைத்தவரிடம் விசாரிப்பார். மேற்பார்வை இடுவார். யாரிடமிருந்து நல்ல யோசனை வந்தாலும் அதை எடுத்துக்கொள்வார். மற்றவர்களின் யோசனைகளை காது கொடுத்து கேட்பார்.

மேலாண்மை நிர்வாகத்தில் புதிய யுக்திகளை கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஐஐஎம்-ல் பாட வகுப்புக்குச் செல்வார். கூடவே தன்னுடைய மந்திரிகளையும் கூட்டிச் செல்வார். அவருக்கு எதிலும் தாமதம் பிடிக்காது. வேலையை செய்வது மட்டுமல்லாது அதை சரியாக செய்தாகவேண்டும். தான் இட்ட பணி சரியாக நடைபெறவில்லை என்றால் பொறுமை இழந்துவிடுவார். தன்னுடைய அலுவல் முடிந்து தூங்கச்செல்லும்போது நள்ளிரவாகிவிடும். அவர் சுமார் நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவார். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை நிருபர் இவரை பேட்டி எடுக்க மூன்று நாட்கள் இவருடன் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களில் இவருடைய வேலை பளுவை பார்த்த அந்த நிருபர் அசந்தே போய்விட்டார். இப்படி வேலை செய்ய தங்களால் எப்படி முடிகிறது? என்று அந்த நிருபர் கேட்க, அதற்கு அவர் “சரணாகதி. நான் செய்யும் பணிக்கு என்னை முழுமையாக அர்பணித்துவிட்டேன் அதனால் அந்த பணி எனக்கு பளுவாகத் தெரியவில்லை’ என்று பதிலளித்தார்… “

“மோடியை நீங்கள் சந்திக்கச் சென்றீர்களானால் அவர் கவனம் முழுவதும் உங்களிடம் மட்டுமே தான் இருக்கும். உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது எந்தவித இடையூறுக்கும் ஆட்பட மாட்டார். மோடி, தான் சொல்ல வந்தக் கருத்தை நிதானமாகவும், தெளிவாகவும், ரத்தின சுருக்கமாகவும் சொல்வார். தான் இந்த இந்த சாதனைகளைச் செய்தேன் என்று பெருமை அடித்துக்கொள்ள மாட்டார். மற்றவர்களைக் கவர வேண்டும் என்ற வகையிலும் பேசமாட்டார். மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வார். மற்றவர்களை விட தான் தான் உயர்ந்தவன் என்று ஒருபோதும் காட்டிக்கொள்ள மாட்டார். மோடியுடன் உரையாடுவது ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போன்றது. எந்தக் கேள்வியைக் கேட்டும் அவரை மடக்க முடியாது. அவருக்கு அபார நியாபக சக்தி. எத்தனை நாட்கள் ஆனாலும் நடந்த விவரங்களை தத்ரூபமாக அப்படியே வெளிப்படுத்துவார். மோடிக்கு குஜராத்தி, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் பரிச்சயம்”.

5 Replies to “நரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும் – புதிய புத்தகம்”

 1. தனி மனித ஸ்துதி பிஜேபி > காங்கிரஸ் (இந்திரா )

 2. வணக்கம்
  லாகவ கௌரவ நியாயம் என்று ஒன்று உண்டு. பெரியதில் சிறியது அடங்கும் என்பதே அதன் விளக்கம். அந்த நியாயத்தின் படி குஜராத் என்றதும் மோடி தான் நினைவுக்கு வருகிறார்.
  அன்புடன்
  நந்திதா

 3. மதம்மாற கட்டாயப்படுத்துகிறார்கள் :
  நறிக்குறவர்கள் மறியல் nakkheeran.in/Users/frmNews.aspx?N=115011

 4. I will definitely pray that Modi become a Prime minister to regulate, re-generate our Great Country.
  If Modi cannot bring Ramarajya atkest he will liberate us from Ravavana Rajya from the Asura family.
  rajan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *