ஆங்கில மூலம்: பேராசிரியர் T. P. ராமச்சந்திரன்
தமிழாக்கம்: எஸ். ராமன்
முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.
தொடர்ச்சி..
அனுமன் பறந்து சென்றுகொண்டிருந்த அன்று சூரிய கிரகணமாதளால் அவனைப் போலவே ராகுவும் சூரியனைப் பிடிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தான். சூரியனின் அருகே அனுமனைப் பார்த்த ராகு அங்கிருந்து நழுவிப்போய் இந்திரனிடம் முறையிட்டான். அதற்கு ஒரு தீர்வு காண இந்திரன் ராகுவையும் அழைத்துக்கொண்டு அனுமன் இருந்த இடத்திற்குச் சென்றான். ராகுவைப் பார்த்த அனுமன் அவனையும் ஒரு பழம் என்று நினைத்துக்கொண்டு அவன் பக்கம் செல்லும்போது, இந்திரனின் யானையான ஐராவதத்தைப் பார்த்து அதுவும் ஒரு பெரிய பழமே என்று நினைத்துக்கொண்டு அவன் பக்கமும் பாய்ந்தான். அவனைத் தடுப்பதற்காக இந்திரன் தனது இடி போன்ற வஜ்ராயுதத்தால் அனுமனின் தலையில் ஓங்கி அடித்தான். அதனால் அனுமனின் தாடை பிளக்கப்பட்டு அவன் ஒரு மலையின் மேல் விழுந்தான். (“ஹனு” என்பது தாடையைக் குறிப்பதால் பின்னர்தான் அவனுக்கு ஹனுமன் என்ற பெயரே வந்தது.)
இந்திரனின் வஜ்ராயுதத்தால் அடி வாங்கிக் கீழே விழுந்த அனுமனைப் பார்த்ததும் வாயு பகவானிற்குக் கோபம் வந்துவிட்டது. அப்படி விழுந்த அனுமனைத் தூக்கிக்கொண்டு வாயு ஒரு குகையினுள் புகுந்துகொண்டு, தனது இயல்பான ஓட்டத்தை நிறுத்திவிட்டான். அதனால் இறைவர்கள், தேவர்கள் உட்பட அனைவரும் மூச்சு விடுவதற்குக்கூட காற்றோட்டம் இல்லாது அவதிப்பட்டனர். அவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் சென்று வாயுவைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று கோரி முறையிட்டார்கள். அடிபட்டிருந்த குழந்தையை பிரம்மன் மெதுவாகத் தடவிக் கொடுத்ததும் அனுமனிற்கு மீண்டும் நினைவு திரும்பியது. அதைக் கண்ட வாயுவும் நிறுத்தி வைத்த தனது ஓட்டத்தை மீட்கவே அனைத்து சீவராசிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள்.
அனுமனுக்கு மீண்டும் நினைவு வந்ததும், அவனுக்கு வேண்டிய எல்லா வரங்களையும் இறைவர்கள் கொடுத்து அருளவேண்டும் என்று பிரம்மன் அவர்களிடம் வேண்டிக்கொண்டார். அந்த வரங்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்ட அனுமன் அவைகளைக்கொண்டு ராவணனை வெல்லும் கடமையில் ராமருக்கு மிகவும் உதவி புரிவான் என்று அப்போது பிரமன் அவர்களுக்கு உறுதி அளித்தார். அதைக் கேட்ட அவர்கள் சிரஞ்சீவித் தன்மை, வெல்ல முடியாமை, இனிய பேச்சு, சாஸ்திர அறிவு, சோர்வின்மை, அஞ்சாமை, நிரந்தர ஆனந்தம், பெருந்தன்மை போன்ற பல அரிய குணங்களை அனுமனுக்கு அள்ளி வழங்கினார்கள். அதற்கும் மேலாக பிரம்மன் அனுமனுக்கு இரண்டு சிறப்பு வரங்களை வழங்கினார். அந்தணர்களது சாபமோ, கோபமோ அனுமனைப் பாதிக்காது என்பதும், மற்றும் எப்போது தேவையோ அப்போது தன் விருப்பப்படி தன்னைப் பெருக்கிக் கொள்ளவோ அல்லது குறுக்கிக் கொள்ளவோ, அது போல எந்த வேகத்தில் பறக்கவோ முடியும் என்பதும் அப்படி அனுமனுக்குக் கூடுதலாகக் கிடைத்த பலன்கள். இவை எல்லாவற்றையும் அனுமன் அடைந்ததும் வாயு பகவான் மிகவும் மகிழ்ச்சியுற்று அவனை அன்னை அஞ்சனையிடம் கொண்டு சேர்ப்பித்தார்.
ஆனாலும் குழந்தையான அனுமன் அப்பாவித்தனமாக முனிவர்களின் வேள்விக் காரியங்களுக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தான். எந்தவித சாபங்களும் அனுமனைத் தீண்டாது என்று முனிவர்களுக்குத் தெரியும் என்பதால் தனக்கு இருக்கும் சக்தி எதனையும் வெகுகாலத்திற்கு அனுமன் தெரிந்துகொள்ளக் கூடாது என்று அவர்கள் முடிவெடுத்தனர். அதனால்தான் வாலியிடம் சுக்ரீவன் பெரிதும் அவதிப்பட்ட காலத்தில் அனுமன் அவனிடம் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தாலும், தனது சக்தியின் மகிமையை அறியாதிருந்தபடியால், சுக்ரீவனுக்கு எந்த விதத்திலும் உதவி செய்ய அனுமனுக்குத் தெரியவில்லை. ராமரைத் தரிசித்த பின்புதான் அனுமனுக்குத் தனது வலிமை தெரியத் துவங்கியது. ஆனாலும் அவன் தினமும் சூரியனைத் துதித்து வந்தபடியால் அனுமனுக்கு சாஸ்திரங்களில் பாண்டித்தியமும், இலக்கணத்தில் வல்லமையும் பெருகியது.
2. ராமரும், சீதையும்
(ராமாயணத்தின் பல சருக்கங்களில்)
ராமர் பிறந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடைய மனைவியாக அவதரித்து அவருக்கு உதவுவதற்காக மகாலக்ஷ்மி மனித வடிவில் சீதையாக மிதிலையில் பிறந்தாள். வாரிசு ஏதுமின்றி இருந்த ஜனக மஹாராஜா ஒருமுறை தனது புனித பூமியை உழுதுகொண்டிருக்கும்போது, அந்த நிலத்தில் குழந்தை வடிவில் சீதை ஒரு தெய்வீகப் பிரசாதம் போல அவருக்குக் கிடைத்தாள். இராமாயண நிகழ்வுகளைப் பொருத்தவரை ராமரது அவதாரம் போலவே சீதையின் அவதாரமும் மிக முக்கியமானதாகும். ஏனென்றால் ராவணனை அழிக்கும் ராமரது திட்டத்தில் சீதையின் பங்கு மிக அத்தியாவசியமானதொன்று அல்லவா? அதனால் ராமாயணமே சீதையின் மகத்தான சரித்திரம் என்று இவ்வாறு வால்மீகி முனிவரால் போற்றப்படுகிறது:
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம்
சீதாயாஹ் சரிதம் மஹத் (I, 4. 7)
பல பெண்களிடம் காமுகனாக இருந்ததே ராவணனின் கீழ்மைத்தனங்களில் முதன்மையானது. அந்த ஈனச் செயலே ராவணனின் முடிவை எட்டுவதற்குக் காரணமாகும் வகையில் சீதை உதவி செய்கிறாள்.
தங்களது குறிக்கோளுக்காக மனிதர்களாக அவதரித்து இவ்வுலகில் கடும் துன்பங்களை இருவருமே அனுபவித்திருந்தாலும், அதில் ராமரைவிட சீதையின் பங்கே மிக அதிகமாக இருந்தது. அவர்கள் பட்ட கஷ்டங்களைப் படிக்கும்போது நமது கண்களில் கண்ணீர் தானே துளிர்க்கும். அப்படியென்றால் விஷ்ணுவும் அவரது பத்தினியும் அவ்வளவு துன்பப்பட்டார்களா என்று கேட்டால், “இல்லையே! தெய்வ நியதிப்படி தெய்வங்கள் எப்படி கஷ்டங்களுக்கு உள்ளாகும்?” என்பதுதான் பதிலாக இருக்கும். அப்படியானால் “அவர்கள் என்ன துன்பப்பட்டதுபோல நடித்தார்களா?” என்பதுதான் நமது அடுத்த கேள்வியாக இருக்கும். அலசிப் பார்த்தால் அப்படி நினைப்பதும் சரியில்லை. ஏனென்றால் அவ்வாறான கேள்வியே ராமரையும், சீதையையும் ஏதோ நடிகர்கள் போலவும், ராமாயணத்தையே ஒரு கதையைப் போலவும் ஆக்கி, அவர்களது மகத்துவத்தைக் குறைத்தது போல ஆகிவிடும். ஆனாலும் நடிப்பு என்ற கருத்தை அதனுடைய வேறொரு பரிமாணத்தில் இங்கு ஒத்துக்கொள்ளலாம். எப்படி என்றால் எவ்வாறு ஒரு நடிகன் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் இன்பதுன்பத்தால், தான் எள்ளளவும் பாதிக்கப்படுவதில்லை என்பதை உணர்கிறானோ, அவ்வாறே இறைவனும் தான் அவதரித்து வந்துள்ள வேடத்தின் தன்மையால், தான் சிறிதும் மாறுவதில்லை என்பதை உணர்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆகையால் காணும் நாம்தான் இறைவனை நம் பொருட்டு அவதரிக்கும் சக்தி கொண்ட இறைவனாகவும், அந்த இறைத்தன்மையினால் இறைவன் நமக்காக அவதரித்து வந்துள்ள உருவை அந்த குறிப்பிட்ட உருவாகவும் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தை நமது அனுபவத்தைக் கொண்டு விளக்க வேண்டும் என்றால், எவ்வாறு உலகியல்படி நாம் நம்மை உடல் என்றும் அதே சமயம் ஆன்மீகப்படி நாம் உண்மையில் ஆன்மாதான் என்றும் புரிந்துகொள்ளக் கற்றிருக்கிறோமோ அதே போல இறைவன்-அவதாரம் என்பதையும் பார்க்கவேண்டும்.
வேதாந்தக் கருத்துப்படி மனம்-புத்தி-அகங்காரத்துடன் கூடிய உடல் என்னும் கருவியே பிறப்பு, வளர்ச்சி, இளமை, முதுமை, இறப்பு மற்றும் உலகியல் இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கிறது. ஆனால் நம்முள் உறைந்து நம்மை நாமாக உணர வைக்கும் ஆன்மாவிற்கோ இந்த மாற்றங்கள் எதுவும் கிடையாது. உண்மையில் நாம் ஆன்மாவே என்பதை உணராது, நமது இருப்பை நமது உடலுடன் சம்பந்தப்படுத்திக்கொள்வதால் இந்த மாற்றங்கள் எல்லாம் நமக்கும் வருவது போல நமக்குத் தோன்றுகிறது. தன்னிருப்பைத் துல்லியமாக உணர்ந்த ஞானிகள் இந்தப் பொய்த் தோற்றத்தில் மயங்காததால் உலக வாழ்க்கை அனுபவங்களால் ஆட்கொள்ளப்படாது இருக்கின்றார்கள். இந்த ரகசியத்தை உணராத பாமரர்கள் அத்தகைய ஞானிகளுக்கும் மற்றவர்களைப் போன்ற உலக அனுபவங்கள் உண்டு என்று நினைக்கின்றனர். அதே போல அவதாரத்திற்கும் இருவகை நியாயங்கள் உண்டு. அவதரித்துள்ள இறைவனை அந்த அவதாரத்தில் வரும் இன்ப-துன்பங்கள் ஏதும் கட்டுப்படுத்தாது. ஆனாலும் அவதார புருஷனுக்கு அவைகள் அனைத்தும் இருப்பது போல நமக்குத் தோன்றுகிறது.
3. தெய்வீகத்தின் சாயல்கள்
(ராமாயணத்தின் பல சருக்கங்களில்)
அவர்கள் என்னதான் மனிதர்களாக வெளியுலகுக்குத் தெரிந்தபோதும், சில செயல்பாடுகள் மூலம் தாங்கள் தெய்வங்கள் என்பதை ராமரும் சீதையும் அவ்வப்போது காட்டிக்கொண்டிருந்தனர். மனிதர்கள் என்பதை விட இங்கங்கு தெரியவரும் அவர்களது இந்தத் தெய்வீகச் சாயல்கள், நடக்கும் நிகழ்வுகளுக்கு இன்னுமொரு புதிய பரிமாணத்தைத் தந்தன. அவர்களது பக்தர்களுக்கு இவ்வாறாகவும் அவர்களுடைய அருளாசிகள் கிடைத்தன என்றும் சொல்லலாம். அவ்வாறு நடந்த சில நிகழ்வுகளை ராமாயணத்தின் வெவ்வேறு காண்டங்களில் விவரித்திருப்பதை இப்போது பார்ப்போம்.
ராமருக்கு அப்போது வாலிப பருவம்தான் என்றாலும், ராமராக வந்திருப்பவர் மகாவிஷ்ணுதான் என்று தான் உளமார அறிந்திருக்கவில்லை என்றால் ராமரைத் தனது நன்மைக்காகத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு விசுவாமித்திரர் தசரதரைத் துணிவுடன் கேட்டிருக்கமாட்டார். வசிஷ்ட மகாமுனிக்கும் அந்த தெய்வ ரகசியம் நன்கு தெரிந்திருந்ததாலேயே தயக்கம் ஏதும் இல்லாமல், அவர் விசுவாமித்திரரின் உதவிக்கு ராமரைக் காட்டுக்கு அனுப்பிவைக்குமாறு பரிந்துரை செய்தார். காட்டுக்குச் சென்ற ராமர் விசுவாமித்திரருடைய வழிகாட்டுதலின்படி அரக்கர் கூட்டத்தில் முதலில் தாடகையையும், பின்பு மாரீச்சன் மற்றும் சுபாஹுவையையும் அழித்தோ, விரட்டியோ அவர்களுடைய கொட்டத்தை அடக்கினார். கௌதம மகரிஷியின் சாபத்தால் வெகுகாலமாக ஒரு கல்லாய் சமைந்திருந்த அகல்யை, ராமரது பாதம் அதன்மேல் பட்டதும் உடனே தனது சுய உருக்கொண்டு எழுந்தாள். ஜனகரது அரசவையில் இருந்த சிவ தனுஸைப் பல மன்னர்கள் சிரமப்பட்டுத் தூக்க முடிந்தாலும் அதற்கு நாணேற்ற முடியாதபோது, அவர்களை வெட்கமுறச் செய்யும் வகையில் ராமர் அதை லாவகமாகத் தூக்கியதும் அல்லாமல், நாணேற்றும் முயற்சியில் அந்த வில்லை இரண்டாகவே முறித்து விட்டார். பரசுராமரின் குருவான சிவனுடைய வில்லை ராமர் முறித்ததால் அவரது கோபத்திற்கு ஆளாகிய ராமர், க்ஷத்திரியர்களின் பரம எதிரியாகவே கருதப்பட்ட பரசுராமரை, சீதையை மணம் முடித்து மிதிலையில் இருந்து அயோத்திக்குத் திரும்பி வரும் வழியில் எதிர்க்கவேண்டி இருந்தது. அம்சாவதாரமான பரசுராமர் பூர்ணாவதாரமான ராமரிடம் தனது சக்தியை இழக்கவே, ராமர் மஹாவிஷ்ணுவே என்று கூறி அவரது மேன்மையை ஒத்துக்கொண்டார் (பால காண்டம்).
இராமரை இளவரசராகப் பட்டம் சூட்டுவதற்காகத் தசரதர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார். ஆனால் தெய்வ நியதிப்படி அன்று நடந்த நிகழ்வுகளில் மாபெரும் திருப்பம் ஒன்று ஏற்பட்டு, அதன் இறுதியில் ராமர் வனவாசம் செல்வதற்கான ஆணையே பிறந்தது. அது போன்றதோர் அசாதாரண சூழ்நிலையை ராமர் பெரிதாக எதுவுமே நடக்காதது போல எதிர்கொண்ட விதமே, சாதாரணமாக இளவரசனாகப் போகும் மனிதனாகப் பிறந்த ஒருவனிடம் எதிர்பார்க்கக் கூடியதை விட, மிகவும் வேறுபட்டு இருந்தது. மறைந்திருக்கும் வேறு ஒரு காரணத்திற்காக, ராமரே திட்டமிட்டு நிகழ்வுகளை இவ்வாறு திசை திருப்பியதாகக் கூட அது தென்பட்டது. வனவாசம் செல்லப்போகும் தன் கணவருடன் தானும் செல்லவேண்டும் என்ற சீதையின் பிடிவாதம், ராமருக்கு இனி இருக்கும் பணியில் அவளுக்கும் பங்கு உண்டு என்பதைக் காட்டுவது போலத்தான் இருந்தது. சீதை ஒரு வித்தியாசமான மருமகள்தான் என்றாலும், உண்மையிலேயே மகாவிஷ்ணுவைத் தொடர வேண்டிய மஹாலக்ஷ்மியைத் தவிர அவள் வேறு யார்? (அயோத்தியா காண்டம்)
காட்டில் ராமர் வசித்தபோது அவர் சந்தித்த பல முனிவர்களும் எப்போது ராமர் வருவார், தங்கள் உடலைத் துறக்கும் முன்பாக அவரது தரிசனம் தங்களுக்கு எப்போது கிடைத்து, அதனால் தமக்கு என்றுதான் மோட்சம் கிடைக்கும் என்று ஏங்கிக்கொண்டிருந்த அந்த இறுதி நிலையில்தான் இருந்தார்கள். அவர்களையும் தவிர அரக்கனாகிய கபந்தன், மற்றும் பறவையாகிய ஜடாயு போன்றவர்களுக்கும் ராமர் அவ்வாறே மோட்சம் கொடுத்து அருளினார். சுக்ரீவன் தனது அறியாமையால் ராமரது வல்லமையைச் சோதிக்க விரும்பியதால், வாலியுடன் அவன் நடத்திய முதல் நாள் சண்டையில் பலமாக அடி வாங்கி வந்தான். அவர்களுடைய இரண்டாவது சண்டைக்கு வாலி புறப்படும் முன்பாக அவனுடைய மனைவியான தாரா ராமரது தெய்வீக பலத்தை உணர்ந்து, அதனை அவனுக்கு எடுத்துச்சொல்லி மோதலைத் தவிர்க்கப் பார்க்கிறாள். இறுதியில் ராமர் மேல் மிகுந்த கோபம் கொண்டிருந்தாலும், தன்னுடைய முடிவு தவிர்க்கப்பட முடியாத ஒன்று என்பதை உணர்ந்த வாலி ராமரிடம் மன்னிப்பைக் கோருகிறான். எப்போதெல்லாம் ஹனுமன் தனது பலத்தை மறந்து போகிறாரோ அப்போதெல்லாம் ராம நாம ஜபம் அவரது பலத்தை அவருக்கு நினைவூட்டிக் கொண்டிருந்தது மட்டும் அல்லாமல் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாவற்றிலும் அவரைத் தீவிரமாக ஈடுபாடு கொள்ள வைத்தது (கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த காண்டங்கள்).
போர் மூளப்போகிற சமயம் தனது அணியைத் துறந்து எதிரி பக்கம் சாய்கிற எவரையும் எளிதில் நம்பி தன் பக்கம் சாதாரணமாக எவரும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்றாலும், ராமரோ விபீஷணன் அவ்வாறு வந்தபோது அவனை ஏற்றுக்கொண்டார். ஆனால் விபீஷணனைப் பொருத்தவரை அவனுக்கு ராமர் எப்போதுமே இறைவனாகத்தான் தெரிந்தார். அலை கடல்களின் அரசன் முதலில் ராமரின் வேண்டுகோளை மறுத்து ஒதுக்கினாலும், ராமர் தனது வல்லமையைச் சிறிது காட்டவே அவனும் ராமர் இறைவனே என்று ஒத்துக்கொண்டான். நளனும் ராமருடைய உதவி இல்லாமல் கடலின் மேல் மிதக்கும் கல்லால் ஆன பாலத்தைக் கட்டியிருக்க முடியாது.
போர் முடியப்போகும் தருணம், வலிமை மிக்க எதிரியான ராவணன் எல்லாவற்றையும் இழந்து போர்க்களத்தின் மத்தியில் நிலைகுலைந்து நின்றுகொண்டிருந்தபோது, வேறெந்த சாதாரண மனிதனும் அவனை “இன்று போய் நாளை வா” என்று கூறியிருக்க முடியாது. ராவணனின் இறுதி மூச்சு அடங்கப் போகும் சில நொடிகளுக்கு முன்னால் அவனுக்கும் ராமரின் நாராயண சொரூப தரிசனம் கிட்டுகிறது. ராவணன் இறந்த செய்தியைக் கேட்டுக் கதறிய மனைவி மண்டோதரியின் புலம்பலிலும் ராமரின் தெய்வீகத் தன்மை அவளுக்குத் தெரிந்திருந்தது என்பது நன்கு புலப்படுகிறது. அதுதான் தெய்வத்தின் வழி என்று நன்கு தெரிந்திருந்தால் ஒழிய, எந்த அரசனும் மக்களைத் திருப்தி செய்யும் நோக்கத்திற்காகத் தன் மனைவி அப்பாவி என்று தெரிந்திருந்தபோதும் அவளைக் கைகழுவும் செயலைச் செய்திருக்க மாட்டான்; அதே போல எந்த மனைவியும் பூமி தன்னை விழுங்கட்டும் என்று கூறி அவ்வாறே சென்றிருக்கவும் மாட்டாள் (யுத்த, உத்தர காண்டங்கள்).
(தொடரும்)
திரு இராமன் அவர்களுக்கு நமது பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக.
ஸ்ரீ ராம் ஜெயா ராம் சீதா ராம் ! அற்புதமான கட்டுரை ! யுக புருஷன் ஸ்ரீ ராமனின் மகிமையை யார் அறிவார் ?